மாநிலங்களை நகராட்சிகளாகக் குறைத்தல் -ப.சிதம்பரம்

 நிகர வரி வருவாயில் 41 சதவீதத்தில் மாநிலங்களின் பங்கு சுமார் 31 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.        


இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற மறுக்க முடியாத உண்மையுடன் இந்தக் கட்டுரை தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீர் தவிர இந்த மாநிலங்கள் இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி செய்த மாகாணங்களும், சமஸ்தானங்களும் தன்னிச்சையாக முடிவெடுத்த முடிவின் அடிப்படையில்தான் கூட்டாட்சி முறை அமைகிறது. இந்தியாவில் மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டன. ஏனென்றால், ஒரு மாநிலம் என்பது ஒரு நிர்வாக அலகு மட்டுமல்ல. அது,  தனது சொந்த மொழியியல், கலாச்சார, வரலாற்று மற்றும் அரசியல் அடையாளங்களைக் கொண்டுள்ளது.


சந்தேகத்திற்கு இடமின்றி, கூட்டாட்சி


'இந்தியா எப்படி கூட்டாட்சி நாடு' (how federal are we) என்ற கேள்வி விவாதத்திற்குரியது. இந்திய அரசியலமைப்பு அதன் கூட்டாட்சி தன்மையை மேம்படுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக தெளிவாகக் கருதியது. இந்த கருத்துக்கு ஆதரவாக, அரசியலமைப்பின் பிரிவு 368 (2) ஐப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தால் அரசியலமைப்பில் செய்யப்பட்ட சில திருத்தங்களுக்கு, மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு குறைந்தது பாதி மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் அவசியம் என்று இந்த பிரிவு கோருகிறது.


அரசியலமைப்பை திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரம் சர்ச்சைக்குரியது. கேசவானந்த பாரதி வழக்கு (1973) மற்றும் மினர்வா மில்ஸ் வழக்கு (1980) ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு அல்லது அம்சங்களை மாற்ற முடியாது என்று தீர்ப்பளித்தது. எஸ்.ஆர்.பொம்மை மற்றும் பலர் உட்பட இந்த வழக்குகளில், 'கூட்டாட்சி' என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் (‘federalism’ is a basic feature of the Constitution) என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இது கூட்டாட்சித் தத்துவத்தின் குறிப்பிடத்தக்க உறுதிப்படுத்தலாகும்.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இருந்தபோதிலும், மத்திய அரசு கூட்டாட்சியை பலவீனப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளது. ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் நிர்வாகம், சட்டமியற்றுதல் மற்றும் நிதி அதிகாரங்கள். பாஜக அரசு இந்த அதிகாரங்களை எப்படி அழித்துள்ளது என்பதை ஆராய்வோம். 


நிர்வாகம் 


அரசியலமைப்பின் 154 மற்றும் 162 வது பிரிவுகளின் கீழ், மாநில அரசுகளுக்கு நிறைவேற்று அதிகாரங்கள் (State has the executive power) உள்ளன. இந்த அதிகாரங்கள் மாநில சட்டமன்றம் சட்டங்களை இயற்றக்கூடிய அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, காவல்துறை என்பது ஒரு மாநிலப் பொருள், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான காவல்துறை இயக்குநர் ஜெனரல் (Director General of Police (DGP)) மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். ஆனால், மத்திய அரசு இங்கு ஓரளவு கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. அதன்படி, தகுதியான இந்திய காவல் சேவைகள் (Indian Police Service (IPS)) அதிகாரிகளின் பெயர்களை மாநிலங்கள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு (Union Public Service Commission (UPSC)) அனுப்ப வேண்டும். யு.பி.எஸ்.சி.யால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று அதிகாரிகளுக்கு மட்டுமே மாநிலத்தின் தேர்வு வரையறுக்கப்பட்டுள்ளது.


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) அறிமுகம் மற்றொரு உதாரணம். மத்திய அரசின் இந்த முயற்சியால், அகில இந்திய அளவில் தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும். இது மாநில அரசால் நிறுவப்பட்டு முழுமையாக நிதியளிக்கப்படும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.


மத்திய அரசால் ஓரளவு நிதியளிக்கப்படும் திட்டங்களில், மாநில அரசுகளுக்கு நிதி மறுக்கப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. அதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் பெரும்பாலும் சிறியவை, அதாவது திட்டத்தின் பெயருக்கு முன் இணைப்பு அல்லது பின் இணைப்பை சேர்ப்பது போன்றவை. அல்லது, செலவின தணிக்கை சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் தாமதம். உதாரணமாக, கேரளாவில் புதிய பள்ளிகள் திறக்கப்படாததால் நிதி மறுக்கப்பட்டது. இது குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் குறைவான குழந்தைகள் காரணமாக இருப்பதாக அரசு வாதிட்டது. ஆனால், இந்த காரணம் நிராகரிக்கப்பட்டது. இதுபோன்ற அளவுகோல்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது. 

அரசியலமைப்பில் கூட்டுப் பட்டியலில் 47+4 உள்ளீடுகள் உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இரண்டும் இந்த விஷயங்களில் சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு பல விஷயங்களில் சட்டங்களை இயற்றியுள்ளது. இந்த பொருள்களில், சிவில் நடைமுறை, காடுகள், மருந்துகள், ஏகபோகங்கள், தொழிற்சங்கங்கள், சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், கல்வி மற்றும் பல அடங்கும். இந்த அணுகுமுறை மாநிலங்களின் சட்டமன்ற அதிகாரங்களை சுரண்டுதல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. 


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 254 (2), பொது பட்டியலில் (concurrent list subject) உள்ள ஒரு பொருளின் மீது, மாநில சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், முந்தைய மத்திய சட்டத்தை மீறுவதற்கு, மாநிலச் சட்டத்தை அது அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், பல்வேறு விஷயங்களில் சீரான தன்மையை வலியுறுத்துவதால், பாஜக அரசாங்கம் உண்மையில் ஒரு மாநில அரசாங்கத்தை இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.  


மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை இயற்ற அனுமதிக்கும் பொது  பட்டியல், ஒன்றிய பட்டியல் (Union List) போலவே உள்ளது. ஏனென்றால், நாடாளுமன்றம் பெரும்பாலும் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் பொது பட்டியல் விஷயங்களில் சட்டங்களை இயற்றுகிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் இதற்கு சிறந்த உதாரணம். 'குற்றவியல் சட்டம்' (criminal law’) மற்றும் 'குற்றவியல் நடைமுறை' (criminal procedure) ஆகியவை பொது பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசு மாநில அரசுகளை முற்றிலுமாக புறக்கணித்தது. கலந்தாலோசிப்பது என்ற பாசாங்கு கூட இல்லை. மசோதாக்கள் ஒரு நியமனக் குழுவால் தயாரிக்கப்பட்டன. மேலும், இந்த மசோதாக்களின் சில விதிகள் மாநிலப் பட்டியல் பொருள்களான 'பொது ஒழுங்கு' (Public order) மற்றும் 'காவல்துறை'  (Police) ஆகியவற்றை மீறுகின்றன. 


கூட்டாட்சி முறையின் சீர்கேடு பிஜேபி அரசாங்கத்தின் நிதி அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. வரி வருவாயில் மாநிலங்களின் பங்கைக் குறைக்க 14வது நிதி ஆணையத்தில் பிரதமர் செல்வாக்கு செலுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.  நிகர வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 41% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு பகிர முடியாத மேல்வரிகள் (Non-shareable cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. கூடுதலாக, மாநிலங்களின் கடன் வரம்புகள் கேள்விக்குரிய முறைகள் மூலம் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax(GST)) சட்டங்களை அமல்படுத்துவது மாநில நிதிகளை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு இடையே உதவி மானியங்கள் மற்றும் பேரழிவு நிவாரணங்களை விநியோகிப்பதிலும் வெளிப்படையான பாகுபாடு உள்ளது.   


பாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் மத்திய அரசிடம் நிதி கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பிஜேபி மாநில நிதி அமைச்சர்களே கூட வெளிப்படையாக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால், மாநிலங்களை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றிவிடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா நகராட்சிகளின் ஒன்றியமாக மாறக்கூடும், அல்லது இன்னும் குறைவான தன்னாட்சி கொண்ட நாடாக மாறக்கூடும்.




Original article:

Share: