விவசாயம் பலவீனமாக உள்ள நிலையில், விவசாயிகள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கான கொள்கைகளை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டானது, 1850 க்குப் பிறகு வெப்பமான ஆண்டு என்று உறுதிப்படுத்தப்பட்டது. தொழில்புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட வெப்பநிலை 1.18 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. மேலும் பல விஞ்ஞானிகள் 2024 இன்னும் வெப்பமாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.
2047 ஆம் ஆண்டுக்குள் வளமான இந்தியாவை (Viksit Bharat 2047) உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி நம்புவதால், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் நமது விவசாயத்தால் வளர்ந்து வரும் மக்கள் தொகையைத் தக்கவைக்க முடியுமா என்பது இந்தியாவுக்கு ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.
2047 ஆம் ஆண்டிற்கான துல்லியமான கணிப்புகளைச் செய்வது கடினம் என்றாலும், 1991 ஆம் ஆண்டில் சீர்திருத்தங்கள் தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த போக்குகளைப் பார்க்கலாம் மற்றும் மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளை மன்மோகன் சிங் அரசாங்கத்தின் கீழ் முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடலாம். தற்போதைய அரசாங்கம் அடுத்த தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இந்த நம்பிக்கையின் காரணமாக, கடந்த 10 வருடங்களாக பின்பற்றிய அதன் கொள்கைகளை அது தொடர்ந்து பின்பற்றும். மேலும், இந்தக் கொள்கைகளை விரைவுபடுத்தவும் கூடும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை அடைவதே அவர்களின் நோக்கமாகக் கூறுகிறார்கள்.
ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் விவசாயம் உள்நாட்டு உற்பத்தி (2011-12 அடிப்படை, திருத்தப்பட்ட தொடர்) ஆகியவற்றிற்கான சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதங்களை (average annual growth rates (AAGR)) 1991-92 முதல் 2023-24 வரை (இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு), ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% ஆகவும், விவசாய உள்நாட்டு உற்பத்தி 3.3% ஆகவும் வளர்ந்தது. மோடி அரசாங்கத்தின் கடந்த 10 ஆண்டுகளில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5.9% (மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் 6.8% உடன் ஒப்பிடும்போது) வளர்ச்சியடைந்துள்ளது. மோடியின் ஆட்சிக் காலத்தில் விவசாய வளர்ச்சி 3.6% ஆக இருந்தது (மன்மோகன் சிங் காலத்தில் 3.5% ஆக இருந்தது) இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் உள்நாட்டு வேளாண்மை வளர்ச்சி வேறுபாடு குறைவாக உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.6% ஒரு நேர்மறையான தொடக்கமாகக் காணப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) தரவுகளின்படி, உழைக்கும் மக்களில் சுமார் 45% பேரைப் பயன்படுத்துவதால் இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா ஒரு முழுமையான வளர்ந்த தேசமாக மாற, அதன் விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை. உற்பத்தித்திறனை அதிகரித்தல், நீர் பயன்பாட்டைக் குறைத்தல், நிலத்தடி நீரை மறுசுழற்சி செய்தல், மண் சீரழிவைத் தடுத்தல் மற்றும் விவசாயத்திலிருந்து பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும். தற்போதைய கொள்கைகளைத் தொடர்ந்தால் 2047 க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவது கடினம்.
இன்று, விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மற்றும் 45% விவசாயம் சார்ந்த தொழிலார்கள் உள்ளனர். ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இருந்ததைப் போலவே தொடர்ந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 2047 க்குள் 7-8% ஆக குறையும். இருப்பினும், இது இன்னும் 30% க்கும் அதிகமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடும். சிறந்த திறன்கள் தேவைப்படும் விவசாயத்திலிருந்து அதிக உற்பத்தி வேலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, வேகமாக நகரமயமாகும் இந்தியாவுக்கு கிராமப்புற மக்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியம். இந்த மாற்றம் இல்லாமல் எட்டப்படும் வளர்ச்சி மக்கள்தொகையில் முதல் 25% பேருக்கு மட்டுமே பயனளிக்கும். மீதமுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்
நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி நம்பிக்கையுடன் உள்ளன. இந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எண்கள் ஆரம்ப கணிப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நம்பிக்கையை பல பொருளாதார வல்லுநர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள், அத்தகைய வளர்ச்சியை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முடியும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டிற்கான விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைந்த 0.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது பெரும்பான்மையினரின் பொருளாதார முன்னேற்றம் குறித்த கவலைகளை எழுப்புகிறது, அவர்கள் 1% க்கும் குறைவான வளர்ச்சியைக் காணலாம். அதே நேரத்தில் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6% ஆக வளரும்.
விவசாய வளர்ச்சி விகிதம் 0.7% ஆக வீழ்ச்சியடைந்ததற்கு, முக்கியமாக கடந்த காரீப் பருவத்தில் பருவம் தவறிய மழை காரணமாகும். உண்மையில், புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் பின்தங்கியிருப்பதால் தீவிர வானிலை நிகழ்வுகளின் ஆபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியா, குறிப்பாக விவசாயத் துறை இந்த சவால்களுக்கு முழுமையாக தயாராக இல்லை.
இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டுமானால், அதன் விவசாயம் பாதிக்கப்படக் கூடாது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வறட்சி ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான முன்னேற்றத்தை பலவீனப்படுத்தக்கூடும். ரிசர்வ் வங்கி ஏற்கனவே உணவு பணவீக்கத்தை நிர்வகிக்க ஆண்டின் பெரும்பகுதியை செலவிட்டுள்ளது. ஒன்றிய அரசு பல்வேறு அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தல், வர்த்தகர்களுக்கு இருப்பு வரம்புகளை அமைத்தல், பல விவசாய பொருட்களின் எதிர்கால வர்த்தகத்தை நிறுத்துதல் மற்றும் கோதுமை மற்றும் அரிசியை சந்தை விலையை விட குறைவாக வெளியிடுதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் 1960 களில் இருந்து அவசரகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றன, அந்த நேரத்தில் இந்தியா உயிர்வாழ்வதற்கு உணவு இறக்குமதியை நம்பியிருந்தது.
வளர்ந்த இந்தியாவில் விவசாயம் வெற்றி பெற வேண்டுமானால், பல முக்கிய மாற்றங்கள் அவசியம். முதலாவதாக, உணவு மற்றும் உர மானியங்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த மறுமதிப்பீட்டிலிருந்து சேமிக்கப்பட்ட பணம் விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research & Development), கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்க சேவைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும். இந்த முதலீடு மண் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காக தடுப்பணைகள் மற்றும் நீர்ப்பாசனங்களை நிர்மாணிப்பதை ஆதரிக்கும். அத்துடன், சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பான்கள், உரப்பாசனம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி போன்ற நீரை சேமிக்கும் விவசாய நுட்பங்களை ஊக்குவிக்கும். மேலும், கோழி, மீன்வளம், பால் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உயர் மதிப்பு பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கி இந்திய விவசாயம் மாற வேண்டும். இந்த அணுகுமுறை நுகர்வோரின் தட்டில் இருந்து மீண்டும் பண்ணைக்கு செல்லும் ஒரு மதிப்பு சங்கிலியை உருவாக்குவதை உள்ளடக்குகிறது, இது தேவை உந்துதல் அமைப்பை உருவாக்குகிறது.
இதை அடைவதற்கு, விவசாயிகள் நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் கூட சந்தைகளை எளிதாக அணுக அனுமதிக்கும் கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவுக்குத் தேவை. இது கூட்டுறவுகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (farmer producer organisations (FPOs)), தேசிய வேளாண் சந்தை (National Agriculture Market (E-NAM)) மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு (Open Network for Digital Commerce (ONDC)) போன்ற டிஜிட்டல் வர்த்தக தளங்கள் அல்லது உணவு செயலிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பந்த விவசாயம் மூலம் இருக்கலாம். கூடுதலாக, எதிர்கால வர்த்தகத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதும் முக்கியமானது.
குலாட்டி, ICRIER இல் பேராசிரியராக உள்ளார்.