லடாக் போராட்டம் ; ஒரு நீதிக்கான பசி -கவிதா உபாத்யாய்

 மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் எல்ஏபி-கேடிஏ (LAB-KDA) பிரதிநிதிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? லடாக்கில் உள்ள உள்ளூர் வளங்களில், குறிப்பாக நீர் மற்றும் நிலத்தில் உள்ள முக்கிய அழுத்தங்கள் என்ன? லடாக்கில் வள நெருக்கடிக்கு சுற்றுலா வளர்ச்சி எவ்வாறு பங்களிக்கிறது? 


மார்ச் 6 ஆம் தேதி, லடாக்கில் நன்கு அறியப்பட்ட கல்வியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் (Sonam Wangchuk), லடாக்கில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லே நகரத்தில் "காலநிலை விரதம்" (climate fast) என்று அழைக்கப்படும் 21 நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரிக்கை மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.   இது, லடாக் குடியிருப்பாளர்களுக்கு தற்போது இல்லாத நிலம் மற்றும் நீர் போன்ற வளங்களின் மீதான கட்டுப்பாட்டை வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ராஜதந்திரிகளைப் போல செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 26 அன்று திரு வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். லேவில் உள்ள பெண்கள் இப்போது போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இளைஞர்கள், துறவிகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பல்வேறு  கட்டங்களாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.


யூனியன் பிரதேசங்களின் உருவாக்கம் லடாக்கின் முடிவெடுக்கும் அதிகாரங்களை எவ்வாறு பாதித்துள்ளது?


ஆகஸ்ட் 2019 இல், ஜம்மு-காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மாற்றம் மக்களுக்கான நிலம் மற்றும் வேலைவாய்ப்புக்கான சிறப்பு உரிமைகளை நீக்கியது.


ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 (Jammu and Kashmir Reorganisation Act, 2019) இன் படி, லடாக் அதன் சொந்த சட்டமன்றம் இல்லாமல் யூனியன் பிரதேசமாக மாறியது.


லே அபெக்ஸ் அமைப்பைச் (Leh Apex Body (LAB)) சேர்ந்த ஜிக்மத் பல்ஜோர் (Jigmat Paljor), "எங்கள் யூனியன் பிரதேசம் லடாக்கைச் சேராத ஒரு லெப்டினன்ட் கவர்னரால் நிர்வகிக்கப்படுகிறது, அவர் எங்கள் எதிர்காலத்திற்கான முடிவுகளை எடுக்கிறார்" என்றார்.


கார்கில் ஜனநாயக கூட்டணியைச் (Kargil Democratic Alliance (KDA)) சேர்ந்த சஜ்ஜாத் கார்கிலி, லடாக்கிற்கான முடிவுகளை எடுக்கும் பல செல்வாக்கு மிக்க அதிகாரத்துவத்தினர் இப்பகுதியில் வசிப்பவர்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.


கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) என்பது கார்கிலில் இருந்து பல்வேறு அரசியல், சமூக, மத மற்றும் மாணவர் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு குழுவாகும். 


லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு, லே மற்றும் கார்கிலில் உள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்கள் (Ladakh Autonomous Hill Development Councils (LAHDCs)) தங்கள் அதிகாரத்தை இழந்தன.


லடாக் தொழில்துறை நில ஒதுக்கீட்டுக் கொள்கை, 2023 வரைவு (draft Ladakh Industrial Land Allotment Policy, 2023) ஓர் உதாரணம். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிகளுக்கு (LAHDC) நில பயன்பாட்டில் அதிகாரம் இருந்தாலும், முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட வரைவுக் கொள்கை, நில ஒதுக்கீடு முடிவுகளிலிருந்து அவற்றை விலக்குகிறது.


லடாக்கின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திரு. பல்ஜோர் எடுத்துரைத்தார். இக்கிராம மக்கள் தமது மேய்ச்சல் நிலங்களை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இழப்பு இரண்டு மூலங்களிலிருந்து வருகிறது: சீனாவின் அத்துமீறல் மற்றும் தொழிற்சாலைகளால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுவுதல். நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நிலம் பற்றிய முடிவுகளில் தலையிட அதிகாரம் இல்லை.


மேய்ச்சல், விவசாயம் மற்றும் வீட்டுவசதி போன்ற குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கு நிலப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை உருவாக்க பிராந்திய மற்றும் மாவட்ட சபைகளை அனுமதிப்பதன் மூலம் ஆறாவது அட்டவணை இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று  LAB-KDA பரிந்துரைக்கின்றன.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லடாக்கின் மக்கள் தொகையில் 97% க்கும் அதிகமானோர், அதாவது, 2.74 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள், பழங்குடியின மக்கள். 2019 ஆம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Tribes) லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் கொண்டு வர பரிந்துரைத்தது.


2019 மக்களவை மற்றும் 2020 லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC elections) தேர்தல்களுக்கு முன்பு, லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் கொண்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சி உறுதியளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. 


லடாக்கில் ஆறாவது அட்டவணை கோரிக்கையை அமல்படுத்த பாஜக அரசாங்கத்தை சமாதானப்படுத்த 2020 முதல் இந்த ஆண்டு மார்ச் 4 வரை குறைந்தது 10 முறை (LAB-KDA) பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல்வேறு அமைச்சர்களை சந்தித்துள்ளனர்.


இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கார்கிலி, 2021 முதல், எல்ஏபி-கேடிஏவின் கோரிக்கைகளில் ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாப்புகள், லடாக்கின் மாநில அந்தஸ்து அல்லது சட்டமன்றம், தனி பொது சேவை ஆணையம் மற்றும் கார்கில் மற்றும் லேவுக்கு தனி நாடாளுமன்ற இடங்கள் கொண்ட யூனியன் பிரதேசமாக மாற்றுவது ஆகியவை அடங்கும் என்று கூறினார். ஆனால், இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை.


தற்போதைய உண்ணாவிரதப் போராட்டம் மத்திய அரசுடன் நடத்திய பல பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் விளைவு என்று கார்கிலி விளக்கினார்.


உள்ளூர் வளங்கள் மீதான அழுத்தங்கள் என்ன?


சுற்றுலா அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகள், லடாக்கிற்க்கு அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை வருவதைக் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்தனர். லடாக்கின் மிகப்பெரிய நகரமான லேவில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் 50000 மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.2 லட்சமாக உயர்ந்துள்ளது. 1969 ஆம் ஆண்டில் 36 ஹெக்டேராக இருந்த நகரப் பகுதி 2017 ஆம் ஆண்டில் 196 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று 2019 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.


நகரமயமாக்கல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விரைவான அதிகரிப்பு லடாக்கில் உள்ள வளங்களில், குறிப்பாக தண்ணீரில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


பிரேமன் வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சங்கம் ((Bremen Overseas Research and Development Association), தெற்காசியா (BORDA-SA)) மற்றும் லடாக் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு (Ladakh Ecological Development) ஆகியவற்றால் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லேவில் நீர் பிரச்சினைகள் குறித்த அறிக்கையில், லேவில் சுற்றுலாப் பயணிகள் கோடையில் ஒரு நாளைக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீரையும், குளிர்காலத்தில் 60 லிட்டர் தண்ணீரையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏழைமக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 25-35 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த காரணங்களினால், நிலத்தடி நீரை நம்பியிருப்பது அதிகரித்துள்ளது. 


பிரேமன் வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சங்கம் தெற்காசியாவின் (BORDA-SA) முன்னாள் பிராந்திய இயக்குநரும் அறிக்கையின் இணை ஆசிரியருமான ஸ்டான்சின் செபெல் (Stanzin Tsephel), லடாக்கின் முக்கியப் பிரச்சினை நீர் வளங்களை நிர்வகிப்பதே தவிர, தண்ணீர் கிடைப்பது அல்ல என்று சுட்டிக்காட்டினார்.


அனைத்து லடாக் சுற்றுலா நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் டெலெக்ஸ் நம்கியாலின் (Deleks Namgyal) கருத்துப்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சுமார் 70% சுற்றுலாப் பயணிகள் லடாக்கிற்கு வருகை தரும் உச்ச சுற்றுலா பருவத்தில் வளங்கள் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும்.


இருப்பினும், நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் சுற்றுலா குறித்த எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கக்கூடும் என்று திரு நம்கியால் கவலை தெரிவித்தார். லடாக்கின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், ஆனால் நிலையான சுற்றுலா நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.


காலநிலை மாற்றம் இப்பகுதியை எவ்வாறு அச்சுறுத்துகிறது?


கடந்த இருபது ஆண்டுகளில், லடாக் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் கனமழையை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் 2010இல், லேவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் விளைவாக சுமார் 255 பேர் இறந்தனர். ஆகஸ்ட் 2014இல் கியா கிராமத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை சேதப்படுத்தியது. இதேபோல், ஆகஸ்ட் 2021இல், ரம்பக் கிராமத்திற்கு அருகிலுள்ள பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (glacial lake outburst flood (GLOF)) சாலைகள் மற்றும் பாலத்தை சேதப்படுத்தியது.


2020ஆம் ஆண்டின் ஆய்வில், லடாக்கில் 192 பனிப்பாறை ஏரிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக, இமயமலையில் உள்ள இந்த ஏரிகளின் எண்ணிக்கையும் அவற்றின் அளவும் அதிகரித்துள்ளது பனிப்பாறைகள் உருகுகின்றன. இது லடாக்கில் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பனிப்பாறை விளிம்புகளில் உருவாகும் முன்பனிப்பாறை ஏரிகளிலிருந்து வெள்ளம் ஏற்படும்  என்று இப்பகுதியில் ஆராய்ச்சி நடத்தும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் இர்பான் ரஷீத் கூறுகிறார்.


அதிகரித்து வரும் வெப்பநிலை லடாக்கில் நிரந்தர உறைபனி சீரழிவு மற்றும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கிறது என்றும் டாக்டர் ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.


லேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி சோனம் லோட்டஸின் கூற்றுப்படி, லடாக்கில் குறைந்தபட்ச வெப்பநிலை சமீபத்திய ஆண்டுகளில் சற்று அதிகரித்துள்ளது.


கடந்த 2011-ம் ஆண்டு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 23.6 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இருப்பினும், 2023, 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், இது முறையே மைனஸ் 16.8 டிகிரி செல்சியஸ், மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் மற்றும் மைனஸ் 16 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.


காலநிலை மாற்றத்தின் சவால்கள் இருந்தபோதிலும், சுரங்க மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்கள் லடாக்கில் ஆர்வம் காட்டுகின்றன. மேலும், சுற்றுலா வளர்ந்து வருகிறது.


அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால், வாகனங்களில் இருந்து வரும் மாசுபாடுகள், கருப்பு கார்பன் போன்றவை, பனி மற்றும் பனிக்கட்டியில் படிந்து, உருகும் வேகத்தை அதிகரிக்கும்.


இந்தூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த முகமது ஃபரூக் ஆசாம், லடாக்கில் உள்ள பனிப்பாறைகள் குறித்து ஆய்வு செய்தார். சுரங்க நடவடிக்கைகள் சரிவுகளை நிலையற்றதாக மாற்றும், மேலும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் கண்டறிந்தார். மேலும், சுரங்கத்திலிருந்து வரும் தூசுகள் பனிப்பாறைகளின் மீது படிவதால் அவற்றின் உருகலை துரிதப்படுத்தலாம்.


கவிதா உபாத்யாய் ஒரு நிறுவனம் சாரா பத்திரிகையாளர் மற்றும் இந்திய இமயமலைப் பகுதியில் சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து எழுதும் ஆராய்ச்சியாளர் ஆவார்.




Original article:

Share: