ஒரு கூட்டு, துறைவாரியான அணுகுமுறை தொழிலாளர் சட்டங்களை ஒரு முழுமையாக வளர்ந்த கட்டமைப்பாக உறுதி செய்கிறது.
இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள் 29 சட்டங்களை நான்கு கட்டமைப்புகளாக ஒருங்கிணைக்கின்றன, சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துகின்றன. மேலும், உற்பத்தி மற்றும் உலகளாவிய போட்டித்திறனை அதிகரிக்க இணக்கத்தை எளிதாக்குகின்றன. டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தெளிவான விதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கின்றன. ஆனால், பெரிய இடைவெளிகள் இன்னும் நீடிக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்துப் பொருட்கள் (nutraceuticals) மற்றும் மேம்பட்ட உற்பத்தியில் – அங்கு சிக்கலான விநியோகச் சங்கிலிகள் மற்றும் துல்லியமான செயல்பாடுகள் இன்னும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
இன்னும் கவனிக்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் இங்கே உள்ளன
துணை ஒப்பந்தம்: தொழிலாளர் குறியீடுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முதன்மை ஒப்பந்தக்காரர்கள்மீது கடுமையான கடமைகளை விதிக்கின்றன, ஆனால் மூலப்பொருள் கொள்முதல், மூன்றாம் தரப்பு பேக்கேஜிங் மற்றும் ஆதரவு செயல்முறைகளைக் கையாளும் வணிகங்களில் பொதுவான, பல அடுக்கு துணை ஒப்பந்தத்தை (multi-level subcontracting) தெளிவாகக் குறிப்பிடவில்லை. அரசாங்கம் ஒப்பந்தக்காரர் பதிவு மற்றும் உரிமங்களை வழங்கினாலும், ஒப்பந்தக்காரர் சங்கிலியில் உள்ள துணை நிலைகள் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தணிக்கைகளுக்கு (audits) பெரும்பாலும் வெளியே உள்ளன. இந்த “சங்கிலிக் கசிவு” (chain leakage) என்பது அரசாங்க சுற்றறிக்கைகள் அல்லது தொழில்துறை ஆய்வுகளால் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
உயர்திறன் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள்: இந்தச் சட்டங்கள் ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு மற்றும் நிரந்தர ஊழியர்களுடன் சமத்துவத்தில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், அறிவியல் துறைகளில் குறுகியகால கண்டுபிடிப்பு சுழற்சிகளின் தனித்துவமான தன்மையைக் கவனிக்கவில்லை. ஊட்டச்சத்து மருந்து (Nutraceutical) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பெரும்பாலும் 6 முதல் 9 மாத திட்டங்களை உள்ளடக்கியது, இதில் சிறப்பு வாய்ந்த நிபுணர்கள், புள்ளியியல் வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பு கலவை விஞ்ஞானிகள் ஈடுபடுவர். இந்தப் பணிகளுக்கு நிலையான வேலைவாய்ப்பு விதிகள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்துவது கூட்டுழைப்பைக் (collaboration) குறைக்கலாம் மற்றும் செயல்பாட்டு உணவுகள் மற்றும் ஆரோக்கிய ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றத்தை மெதுவாக்கலாம். ஒரு தனித்துவமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இணக்கக் கட்டமைப்பு அவசரமாகத் தேவை என்கின்றனர்.
கடுமையான வேலைநேர விதிகள்: அரசாங்க வழிகாட்டுதல்கள் கட்டுப்படுத்தப்பட்ட கூடுதல் நேரத்துடன் (overtime) 8 மணிநேர நாள் மற்றும் 48 மணிநேர வாராந்திர வரம்பை வலியுறுத்துகின்றன. ஆனால், தூய்மை அறைகள், நொதித்தல் பிரிவுகள், தெளிப்பு உலர்த்தும் அலகுகள் மற்றும் சில கட்டுப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து உற்பத்தி செயல்முறைகளை திடீரென நிறுத்த முடியாது. இவை தொடர்ச்சியாக இயங்க வேண்டும், அடிக்கடி பணியாளர்களை மாற்ற முடியாது, மேலும் ஓய்வு இல்லாமல் சுழற்சி முறையில் நடக்க வேண்டியவை. புதிய சட்டங்கள் கட்டாயமாக கடுமையான பணிமாற்ற நேரத்தைக் கொண்டுவந்தால், உற்பத்தியின் துல்லியம் பாதிக்கப்படலாம் அல்லது மாசு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
தரவுப் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு: தொழிலாளர் தரவுகளைப் பாதுகாக்க தேசிய அளவில் குறியீடு (encryption), அணுகல் கட்டுப்பாடு, தரவு சேமிப்புக் கால எல்லை, நோக்க வரம்பு போன்ற தெளிவான விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ தெளிவாக இல்லை என்கின்றனர். டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்ட இணக்கம் பற்றி பொதுவாகச் சொல்லப்பட்டிருந்தாலும், அரசு மற்றும் தொழில் ஆவணங்களில் ஊழியர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவு (உடல்நலம், பின்னணி சோதனை, செயல்திறன் கண்காணிப்பு போன்றவை) எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான நடைமுறைத் தரங்கள் இல்லை. இந்தக் குறைபாடு மிகவும் பெரிய பிரச்சினையாக உள்ளது.
சில தீர்வுகள்
* பிளாக்செயின் மூலம் துணை ஒப்பந்தக்காரர்களின் இணக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் தொழிலாளர் விநியோகச் சங்கிலியை முழுவதும் பார்க்க முடியும். இந்தியாவில் பொருட்களைக் கண்காணிக்க பிளாக்செயின் பயன்பட்டாலும், தொழிலாளர்களுக்காக இது இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவேடு, ஊதியம், சான்றிதழ், பாதுகாப்பு அனுமதி போன்றவற்றை மாற்ற முடியாமல் பதிவு செய்து, எல்லா நிலைகளிலும் தெளிவான வெளிப்படைத்தன்மையைத் தரும் என்கின்றனர்.
* அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட "புதுமைத் திட்டம்" என்ற வேலைவாய்ப்பு வகையின் மூலம், ஊட்டச்சத்து மருந்து (Nutraceutical) மற்றும் மருந்து நிறுவனங்கள் நிரந்தரப் பதவிகளை உருவாக்காமல், குறுகியகால விஞ்ஞான நிபுணர்களைப் பணியமர்த்தலாம். கடுமையான வெளிப்பாடு மற்றும் தணிக்கைகளுடன், இந்த வகை வேலைவாய்ப்பு, தெளிவான வெளியீடுகள் மற்றும் காலக்கெடுவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது தொழில்நுட்ப திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும்.
* உலகின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பணிச்சுழற்சி அபாய மதிப்பீட்டுக் கருவிகள், கடுமையான வேலை நேர வரம்புகளை நுண்ணுயிரி அற்ற அல்லது உயர் ஆபத்து உள்ள இடங்களின் தேவைகளுடன் சமன்படுத்த முடியும் என்கின்றனர். இந்தக் கருவிகள் தொழிலாளிகளின் சோர்வு, ஆபத்து வெளிப்பாடு மற்றும் தொடர்ச்சியான பணி தேவைகளை ஆராய்ந்து, சிறந்த இடைவேளைகளையும் தொழிலாளர் மாற்று அட்டவணையையும் பரிந்துரைக்கின்றன.
* தொழிலாளர் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரு உலகத் தரம் வாய்ந்த தரவுப்பாதுகாப்பு முறை மிகவும் அவசியமாகிறது. அதில் குறியீடாக்கப்பட்ட சேமிப்பு (encryption), தேவைக்கு மட்டுமே அனுமதி (purpose-limited access), தெளிவான சம்மதம் ஆகியவை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதை தேசிய தொழிலாளர் தரவுத்தளத்துடன் இணைப்பதன் மூலம், ஊழியர்களின் தனியுரிமையைக் காக்கும் அதே நேரம் செயல்திறனையும் பெருக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் முன்னோக்குச் சிந்தனை கொண்டது, ஆனால் அதற்கு நுணுக்கமும் நெகிழ்வுத்தன்மையும் தேவை. இவை இல்லாமல், சிக்கலான மேற்பார்வை அது வழங்க விரும்பும் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், தொழில்துறை ஆகியவை இணைந்து, துறைக்கேற்ற விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி செய்தால் மட்டுமே தொழிலாளர் சட்டங்களை நவீனமாக, நடைமுறைக்கு ஏற்றதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
எழுத்தாளர், ஆம்னிஆக்டிவ் ஹெல்த் டெக்னாலஜிஸின் (OmniActive Health Technologies) நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
Original article : Labour Codes can revive workforce and industry, but gaps remain -Sanjaya Mariwala