இந்தியாவில் வாக்காளர் பங்கேற்பு (Electoral participation) விகிதம் சீராக அதிகரித்து வருவது குறித்து . . . -சஞ்சய் குமார், அரிந்தம் கபீர்

பல பத்தாண்டுகளாக மாநிலங்கள் முழுவதும் வாக்காளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இது திடீரென நிகழ்ந்த ஒரு நிகழ்வு அல்ல.


மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சமீபகாலத்தில் காணப்படும் நிலைமைகளைவிட, இந்தியாவின் தேர்தல் பங்கேற்பு விகிதம் மாநிலங்கள் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது கடந்த பத்தாண்டுகளில், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் வாக்காளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. இது, தேர்தல் ஈடுபாடு திடீரென அதிகரித்திருப்பதை விடவும், அது காலப்போக்கில் சீராக வலுவடைந்து வருவதையே உணர்த்துகிறது.


இந்தத் தரவுகளிலிருந்து கிடைக்கும் மிகத் தெளிவான செய்தி என்னவென்றால், அதிக அளவிலான வாக்காளர் பங்கேற்பு என்பது ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலுக்கோ மட்டும் உரியதல்ல. குஜராத்தில், வாக்காளர் பங்கேற்பு 2007-ல் 59.77%-லிருந்து 2022-ல் 64.84%-ஆக உயர்ந்தது. அதேகாலகட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் இது 45.96%-லிருந்து 61.08%-ஆக அதிகரித்துள்ளது. கோவாவில் வாக்காளர் பங்கேற்பு 70.51 சதவீதத்திலிருந்து 81.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மணிப்பூரில் அது 86.73 சதவீதத்திலிருந்து 90.28 சதவீதமாக அதிகரித்தது எனபதை அட்டவணை-1-ல் குறிப்பிட்டுள்ளது. புவியியல் அமைப்பு, அரசியல் போட்டி, சமூகக் கட்டமைப்பு மற்றும் கடந்தகால வாக்களிப்பு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், இம்மாநிலங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்டவையாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே பரந்த போக்கையே வெளிப்படுத்துகின்றன. அதாவது, அதிகமான மக்கள் தேர்தல்களில் பங்கேற்று, தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.


கர்நாடகாவின் வாக்குப்பதிவு 64.84%-லிருந்து 73.84% ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் வாக்குப்பதிவு 69.63%-லிருந்து 77.74% ஆகவும், இராஜஸ்தானின் வாக்குப்பதிவு 66.49%-லிருந்து 75.33% ஆகவும், சத்தீஸ்கரின் வாக்குப்பதிவு 70.66%-லிருந்து 76.75% ஆகவும் அதிகரித்துள்ளது என்று அட்டவணை-2 குறிப்பிட்டுள்ளது.


இந்த உயர்வுக்குரிய விதிவிலக்குகள்


ஒட்டுமொத்தமாக வாக்காளர் பதிவு விகிதம் மேல்நோக்கியதாக இருந்தாலும், அது எல்லா இடங்களிலும் காணப்படவில்லை. பஞ்சாப் 2007-ல் 76.04%-லிருந்து 2022-ல் 72.15%-ஆகக் குறைந்தது. அதேசமயம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை காலப்போக்கில் சரிவையோ அல்லது ஏறக்குறைய நிலையான தன்மையையோ காட்டுகின்றன. ஹரியானா மற்றொரு முக்கியமான விதிவிலக்காகும். அதன் பதிவு விகிதம் 2009-ல் 72.37%-லிருந்து 2024-ல் 67.89%-ஆக உயர்கிறது என்று அட்டவணை-3 காட்டுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் முக்கியமானவை. ஏனெனில், வாக்காளர் பதிவு விகிதம் தானாகவே உயர்ந்துவிடுவதில்லை என்பதையும், அது உள்ளூர் அரசியல் சூழல்கள், அரசியல் போட்டியின் தீவிரம் மற்றும் நிர்வாகரீதியான காரணிகள் ஆகியவை வாக்காளர் பதிவைச் செல்வாக்குக்கு உட்படுத்தக்கூடும்.


அதேநேரத்தில், ஏற்கனவே அதிக அளவிலான வாக்காளர் பதிவு விகிதத்தைக் கொண்டிருந்த பல மாநிலங்கள், தொடர்ந்து வலுவான பங்கேற்பைப் பதிவு செய்துள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் வாக்காளர் எண்ணிக்கை 2009-ல் 79.45%-லிருந்து 2024-ல் 86.89%-ஆக உயர்ந்துள்ளது என்பதை அட்டவணை-3 காட்டுகிறது. புதுச்சேரியின் பதிவு விகிதம் 2011-ல் 86.19%-லிருந்து 2026-ல் 89.85%-ஆக உயர்ந்துள்ளது என்பதை அட்டவணை-5 காட்டுகிறது. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் வாக்காளர் பதிவு விகிதம் அதிகமாகக் காணப்படுகின்றன. கேரளாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 75.26%-லிருந்து 78.27%-ஆகவும், தமிழ்நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை 78.29%-லிருந்து 85.15%-ஆகவும், மேற்கு வங்கத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 84.72%-லிருந்து 92.47%-ஆகவும் அதிகரித்துள்ளது என்று அட்டவணை-5 குறிப்பிட்டுள்ளது. இதில், மேற்கு வங்கம் சிறப்புக் கவனத்திற்குரியது. ஏனெனில் அரசியல்ரீதியாகத் தீவிரமான மற்றும் மிகுந்த போட்டி நிறைந்த ஒரு மாநிலத்தில்கூட வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. இம்மாநிலம் நீண்டகாலமாகவே, இந்தியாவில் மிக உயர்ந்த வாக்காளர் பங்கேற்பு விகிதங்களில் ஒன்றைக் கொண்டிருந்தாலும், வாக்குப்பதிவு விகிதம் 2011-ல் 84.72%-லிருந்து 2026-ல் 92.47%-ஆக உயர்ந்துள்ளது.


தேர்தல் அணிதிரட்டல் குறித்த விவாதங்களில் மேற்கு வங்கம் பெரும்பாலும் ஒரு விதிவிலக்கான நிகழ்வாகக் கருதப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த வாக்குப்பதிவு உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், ஏற்கனவே அதிக வாக்குப்பதிவு இருந்த மாநிலங்களிலும் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. எனவே, வாக்காளர் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயர்வு ஒரு திடீர் அல்லது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இதற்கு மாறாக அது ஒரு பரந்த மற்றும் நீண்டகாலப் போக்கின் ஒரு பகுதி என்ற முக்கிய வாதத்தை மேற்கு வங்கம் வலுப்படுத்துகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் அதிக வாக்குப்பதிவைக் கொண்டிருந்த மாநிலங்களில்கூட இந்த அதிகரிப்பு தெளிவாகத் தெரிகிறது. இது வாக்காளர் பங்கேற்பு ஆதாயங்கள் குறைந்த வாக்குப்பதிவு உள்ள மாநிலங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.




பல்வேறு தேர்தல் சுழற்சிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள், வாக்காளர் பங்கேற்பு விகிதம் காலப்போக்கில் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. ஆந்திரப் பிரதேசம் தனது வாக்காளர் பங்கேற்பை 2009-ல் 72.72%-லிருந்து 2024-ல் 81.79% ஆகவும், ஒடிசா 65.35%-லிருந்து 74.79% ஆகவும், ஜார்க்கண்ட் 57.03%-லிருந்து 67.66% ஆகவும் அதிகரித்துள்ளன என்பதை அட்டவணை-3 காட்டுகிறது. இதேபோல், பீகார் தனது வாக்காளர் பங்கேற்பு விகிதத்தை 2010-ல் 52.73%-லிருந்து 2025-ல் 67.67% ஆக அதிகரித்துள்ளது என்பதை அட்டவணை-4 காட்டுகிறது. பொதுவாகப் பார்க்கும்போது, ​​இந்த எண்ணிக்கைகள் இந்தியாவின் தேர்தல்களத்தில் வாக்காளர் பங்கேற்பு விகிதம் திடீரென அதிகரித்ததைக் காட்டிலும், சீராக விரிவடைந்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன.

இது முக்கியமானதாகும். ஏனெனில், இது வாக்காளர் பங்கேற்பில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இந் அதிகரிப்பை, ஒரு நீண்ட காலகட்டத்தில் நிலைநிறுத்துகிறது. இந்த பங்கேற்பு உயர்வை, சிறப்புத் தீவிர திருத்தக் காலத்திற்கு (SIR) மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு திடீர் நிகழ்வாகக் கருதுவதைவிட, மாநிலங்கள் முழுவதும் சீரற்ற விளைவுகளைக் கொண்ட ஒரு பத்தாண்டு காலப் போக்காகவே சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.


பெரிய தாக்கம் இல்லை


மாநில அளவிலான வாக்காளர்களின் எண்ணிக்கை சிறிதளவு மட்டுமே மாறினாலும், பகுதிவாரியான எண்ணிக்கைகளை மாற்றுவதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வாக்காளர் வருகையை மேலும் அதிகரித்திருக்கலாம். அதாவது, அதன் விளைவு அடிப்படையானதாகக் கருதப்படாமல், கூடுதல் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். இன்னும் அடிப்படையான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற எந்த நடவடிக்கைகளுக்கும் முன்பே பல மாநிலங்களில் வாக்காளர் வருகை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. இதன் எண்ணிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு இந்த வேறுபாடு முக்கியமானது. தகுதியுள்ள வாக்காளர் தளத்தை மறுசீரமைப்பதன் மூலம், வாக்காளர்களின் வருகை அதிகரித்து, இது இறுதிகட்ட சதவீதத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், பல மாநிலங்களில் வாக்காளர் வருகை ஏற்கனவே அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஒரு புதிய போக்கைத் தொடங்குவதைவிட, ஏற்கனவே இருந்த ஒரு போக்கின் மீதுதான் செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது.


வாக்காளர் வருகையில் ஏற்பட்டுள்ள பரவலான அதிகரிப்பு, மக்களிடையே வலுவான அரசியல் ஈடுபாட்டையும், அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களும் அதிக செயல்திறன் மிக்கவையாக மாறியுள்ளன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது வாக்காளர்களின் மாறிவரும் மனப்பான்மை, மேம்பட்ட விழிப்புணர்வு அல்லது தேர்தல்கள் முக்கியமானவை என்ற பரந்த உணர்வையும் பிரதிபலிக்கக்கூடும். இதற்கான காரணங்களின் ஒருங்கிணைப்பு எதுவாக இருந்தாலும், மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் தேர்தல் பங்கேற்பு மேலும் விரிவடைந்துள்ளது என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


அதே நேரத்தில், பங்கேற்பு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை இந்த விதிவிலக்குகள் நமக்கு நினைவூட்டுகின்றன. சில மாநிலங்களில் வாக்காளர் வருகையில் சரிவுப் போக்கும் காணப்படுகிறது. மேலும், இந்த வேறுபாடுகளை ஒரே தேசியக் கண்ணோட்டமாகச் சுருக்கிவிடாமல், அவற்றுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், ஒட்டுமொத்தப் போக்கு தெளிவாக உள்ளது. இந்தியா முழுவதும், வாக்காளர் வருகை பொதுவாக அதிகரித்துள்ளது. மேலும், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற சமீபத்திய காரணிகள், ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த இந்த உயர்வுக்குப் பங்களித்திருக்கலாம்.










Original Link: Electoral participation has been on a steady rise in India.


Share:

மேற்குவங்க சிறப்புத் தீவிர திருத்த விவகாரம்: வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமையை எவ்வாறு பாதிக்கிறது? -அமால் ஷேக்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


திங்கள்கிழமை ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த  (Special Intensive Revision (SIR)) நடவடிக்கைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக, இது தொடர்பான மேல்முறையீடுகள் இன்னும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளதால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த மனுதாரர்களால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமை என்பது "தேசியப்பற்று மற்றும் தேசபக்தியின் மிகப்பெரிய வெளிப்பாடு" என்று நீதிமன்றம் விவரித்துள்ளது.


தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது இந்த மனுதாரர்களை வாக்களிக்க அனுமதித்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் மற்றவர்களும் இதே போன்ற சலுகையை கேட்க வழிவகுக்கும் என்று கூறியது. தலைமை நீதிபதி கேள்வி எழுப்புகையில், சலுகை அடிப்படையில் வாக்களிக்க அனுமதித்தால் வாக்களிப்பதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டவர்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.


வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


கடந்த வாரம், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தனது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிகழ்வு ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தெளிவுபடுத்துகிறது. இந்த மனு மிகத் தாமதமாக முன்வைக்கப்பட்டது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை


வாக்களிக்கும் உரிமைக்கும், தேர்தலில் போட்டியிடும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ராம் சந்திர சௌத்ரி vs ரூப் நகர் துக்த் உத்பாதக் சககாரி சமிதி லிமிடெட் (Ram Chandra Choudhary vs Roop Nagar Dugdh Utpadak Sahakari Samiti Ltd) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், இந்த இரண்டு உரிமைகளுமே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.


வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு உறுப்பினர் சட்டத்தின்படி தனது வாக்கைச் செலுத்த அனுமதிப்பதாகும்; ஆனால், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது அதிலிருந்து வேறுபட்ட ஒரு கூடுதல் உரிமையாகும். இந்தப் போட்டியிடும் உரிமைக்குத் தகுதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் தகுதியிழப்புகள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தேர்தல் உரிமைகளை இந்தத் தீர்ப்பு தெளிவாக விளக்குகிறது. 


தகுதி என்பது தேர்தல் நடைமுறையில் ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தேவையாகும். ஒருவருக்குத் தேவையான தகுதிகள் இல்லையென்றால், அது தண்டனையோ அல்லது அவமானமோ கிடையாது; அந்த நபர் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை தேர்தலில் போட்டியிடும் உரிமையை வெறும் காலதாமதம் மட்டுமே செய்கிறது என்று  தகுதி மற்றும் தகுதியின்மை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியுள்ளது.


கூட்டுறவு சங்கத் தேர்தல்களின்போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட பெயர் நீக்கங்களால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது என்பது சட்டப்பூர்வமான தகுதியிழப்பு கிடையாது என்றாலும், அதன் பிறகு அவர்கள் வாக்காளர்களாகக் கருதப்படமாட்டார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act), ஒரு வேட்பாளர் தான் போட்டியிட விரும்பும் அதே தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த மாநிலத்தின் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


இது ஒன்றும் புதிய கருத்து அல்ல என்றும் ஜோதி பாசு vs தேபி கோஷல் (1982) (Jyoti Basu v. Debi Ghosal (1982)) என்ற வழக்கில், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது முற்றிலும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், கே. கிருஷ்ணமூர்த்தி vs இந்திய ஒன்றியம் (2010) (K. Krishna Murthy v. Union of India (2010) என்ற வழக்கிலும், அரசியலில் பங்கேற்கும் உரிமைகள் வரம்பற்றவை அல்ல; அவை சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.


இருப்பினும், இதில் ஒரு புதிய விஷயம் என்னவென்றால், ஒரு மிகப்பெரிய நிர்வாக நடைமுறையின் மூலமாகப் பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இது சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே நடந்துள்ளது.


இரண்டு வழக்குகள்


தமிழ்நாட்டைச் சேர்ந்த மனுதாரரான சி. கீதா, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அதற்கான வைப்புத் தொகையையும் செலுத்தினார். ஒரு சுயேச்சை வேட்பாளராகத் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும், அவருடைய வீட்டை மட்டும் கவனிக்காமல் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.


இது ஒரு சாதாரண எழுத்துப் பிழை அல்ல என்றும் மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் அவர் தனது மனுவில் குறிபிட்டார். அவர் பெயர் விடுபட்ட சூழல் இந்த வாதத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால், இந்தப் புகார் மிகவும் தாமதமாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டதாலும், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாலும், வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாக அவரது பெயரைச் சேர்க்க வழி ஏதுமில்லை என்றும் தேர்தல் ஆணையம் (ECI) நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.


தேர்தல் சட்டத்தின்படி, இந்த நிலையில் ஒரு பெயரினை துணைப் பட்டியலில் (Supplementary list) மட்டுமே சேர்க்க முடியும். அவ்வாறு சேர்ப்பதற்கு, ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  அந்த நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவரது பெயரை பட்டியலில் சேர்க்குமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கருத்தை ஏற்றுக்கொண்டு, ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தது.


1960-ஆம் ஆண்டின் தேர்தல் பதிவு விதிகளின் (Registration of Electoral Rules, 1960), விதி 23(5)-ன்படி, ஒரு வாக்காளரின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேர்தல் பதிவு அதிகாரி உடனடியாக வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், இந்த விதி தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டின்மீது இறுதி முடிவை எடுத்திருந்தால் மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.


உதாரணமாக, மேற்குவங்கத்தின் ஃபக்கா (Fakka) தொகுதிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக மோதாப் ஷேக் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.


பல்வேறு ஆவணங்களில் அவருடைய பெயர் வெவ்வேறு விதமாக இருந்ததால், வாக்காளர் பட்டியலிலிருந்து அவருடைய பெயர் நீக்கப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவருடைய ஆதார் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்து, அவை அனைத்தும் ஒரே நபருக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணிக்குள் அவருடைய பெயரைத் துணைப் பட்டியலில் சேர்க்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவருடைய மேல்முறையீடு வெற்றியடைந்தது என்கின்றனர்.


கடந்த திங்கட்கிழமை நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள், ஏன் ஒரு பொதுவான தீர்வை வழங்குவதில் நீதிமன்றங்கள் சிரமப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules), விதிகள் 19 மற்றும் 20-ன்கீழ் உள்ள வழக்கமான நடைமுறையிலிருந்து மேல்முறையீட்டுச் செயல்முறை வேறுபட்டுள்ளது. பொதுவாக, இந்த விதிகளின்படி ஒருவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்னால், அவர்களுக்கு அதுகுறித்த முன்னறிவிப்பை  வழங்கி, அவர்களின் விளக்கத்தைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்றனர்.


மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு பெயரைத் தற்காலிகமாக மீண்டும் சேர்க்க 'விதி 23(3)' அனுமதிக்காது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நீக்கப்பட்ட ஒரு வாக்காளர் அல்லது வேட்பாளர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொண்டாலும், தேர்தல் நடைமுறை நடந்துகொண்டிருக்கும்போது அவரது பெயரை அவ்வளவு எளிதாக மீண்டும் பட்டியலில் சேர்த்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.



Original link:

West Bengal SIR row: How the right to vote affects the right to contest.


Share:

இந்திய வரலாற்றில் 5 முக்கிய ஏப்ரல் மாத நிகழ்வுகள் -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி


இந்திய வரலாற்றை வடிவமைத்த பல வரலாற்று நிகழ்வுகள் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்துள்ளன. பீம்ராவ் அம்பேத்கரின் பிறப்பு முதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை வரை, இந்த மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


  1. தண்டி யாத்திரை


மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தண்டி யாத்திரை, ஏப்ரல் 5, 1930 அன்று நிறைவடைந்தது. 24 நாட்கள் நீடித்த இந்த யாத்திரை, ஆங்கிலேயரின் உப்பு ஏகபோகத்திற்கு எதிரான ஒரு வரி எதிர்ப்புப் பிரச்சாரமாக அமைந்தது. ஏப்ரல் 6 அன்று உப்புச் சட்டத்தை மீறியதன் மூலம் இந்த யாத்திரை முழுமையாகத் தொடங்கியது.


காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த இந்தப் பேரணி, சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

1882-ஆம் ஆண்டின் உப்புச் சட்டம், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆங்கிலேயர்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கியது. இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் உப்பு அதிகமாகக் கிடைத்தபோதிலும், இந்தியர்கள் அதை  ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏதேனும் ஒரு பொருள் இருக்குமானால், அது உப்புதான் என்று காந்தி முடிவு செய்தார்.


காந்தி ஏப்ரல் 5 அன்று தண்டி சென்றடைந்தார். ஏப்ரல் 6 அதிகாலையில், அவர் மற்ற யாத்திரிகர்களுடன் இணைந்து கடலை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சிறிய குழியில் கிடந்த இயற்கையான உப்புக்கட்டிகளை அவர் கையில் எடுத்தார். இந்தச்செயல் ஒரு குறியீட்டுச் செயலாக அமைந்தபோதிலும், பத்திரிகைகளால் மிக விரிவாகப் பேசப்பட்டது. மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பிற சட்டமறுப்புப் போராட்டங்களுக்கும் இந்த யாத்திரையே தொடக்கமாகவும் அமைந்தது.


உதாரணமாக, வங்கத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா தலைமையிலான தன்னார்வலர்கள், உப்பு தயாரிப்பதற்காக சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு நடந்து சென்றனர். பம்பாயில் கே.எஃப். நாரிமன் மற்றொரு குழுவினரை ஹாஜி அலி முனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் அருகிலுள்ள ஒரு பூங்காவில் உப்பு தயாரித்தனர். ரயத்வாடி பகுதிகளில், வாடகை செலுத்தாததுடன், கிராமக் காவல்துறை எதிர்ப்பு (anti-chowkidari) வரியும் பின்பற்றப்பட்டது.


வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (North-West Frontier Province (NWFP)), 'எல்லைப்புற காந்தி' (Frontier Gandhi) எனப் பிரபலமாக அறியப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், வன்முறையற்ற தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். இந்தக் குழு இறைவனுக்காக சேவைசெய்யும் சிவப்பு சட்டையணிந்த தன்னார்வலர்கள் (Red Shirts) குழு என்று அழைக்கப்பட்டது. மேலும், அவர்கள் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


  1. மகாத்மா ஜோதிராவ் பூலே


இந்திய அரசு, மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 2026 முதல் ஏப்ரல் 2027 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.


ஃபுலே 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பிறந்தார். அவர் தோட்டக்காரர்கள் மற்றும் காய்கறி உழவர்களான மாலி சாதியைச் சேர்ந்தவர். அவருக்கு 1888-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி மகாராஷ்டிர சமூக ஆர்வலர் விதல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் என்பவரால் மகாத்மா பட்டம் வழங்கப்பட்டது.


மகாராஷ்டிராவில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சமமான சமூக மற்றும் பொருளாதார நலன்களைப் பெற்றுத் தரும் நோக்கில், பூலே தனது மனைவி சாவித்ரிபாய் பூலே மற்றும் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உண்மை தேடுவோர் சங்கம் (Satyashodhak Samaj) என்ற அமைப்பை உருவாக்கினார்.



ஃபுலே 1873-ஆம் ஆண்டு “குலாம்கிரி” (Gulamgiri) என்ற நூலை எழுதினார். இதில் இந்தியாவில் ‘தீண்டத்தகாதவர்கள்’ எதிர்கொள்ளும் அவல நிலையை விளக்கியுள்ளார். சாதி எதிர்ப்பு இயக்கங்களின் சொற்களில் ‘தலித்’ (‘தீண்டத்தகாதோர்’ அல்லது ‘தனித்து துண்டிக்கப்பட்ட மக்கள்’) எனும் சொல்லை அவர் பயன்படுத்தியதுடன், ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு குறித்த தனது சொந்த விளக்கத்தையும் பரப்பினார்.


ஃபுலேவின் பிற முக்கியமான படைப்புகள்: “ஷேத்கார்யாச்சா அஸூத்” (1883), “சர்வஜனீக் சத்யதர்ம புஸ்தக்” மற்றும் “பிரம்னாஞ்சே கசாப்” ஆகியவையாகும்.


3. ஜாலியன்வாலா பாக் படுகொலை


பல வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஜாலியன்வாலா படுகொலையானது, இந்தியா தனது ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்த உறவில் ஒரு திருப்புமுனையாகவும், அதன் விளைவாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டப் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாகவும் அமைந்தது.


1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். சுதந்திரத்திற்காகப் போராடிய இரண்டு தலைவர்களான சத்ய பால் மற்றும் சைஃபுதீன் கிட்ச்லேவ் ஆகியோரின் சிறைவாசம் மற்றும் ரௌலட் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும், அது குறித்து விவாதிப்பதற்காகவும் அந்தக் கூட்டம் நடைபெற்றது.


ரௌலட் சட்டம் (Rowlatt Act


ஆங்கிலேய எதிர்ப்புச் சதித்திட்டங்கள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேய அரசாங்கம் 1919-ஆம் ஆண்டின் 'அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டத்தை' (Anarchical and Revolutionary Crimes Act) இயற்றியது. இது பொதுவாக 'ரௌலட் சட்டம்' என்றழைக்கப்படுகிறது. சர் சிட்னி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட 'அரசத்துரோகக் குழுவின்' (Sedition Committee) பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்தச்சட்டம், மக்கள் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதையும், இந்தியர்கள்மீது கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.


இந்தச் சட்டம், தீவிரவாதம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே, எந்த இந்திய குடிமகனையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை கைது செய்து சிறையில் வைக்க ஆங்கிலேய அரசுக்கு அதிகாரம் வழங்கியது. இந்தச் சட்டம்  இந்திய முழுவதும் பரவலான எதிர்ப்பை சந்தித்தது.


நோபல் பரிசு பெற்றவரும் உலகப் பிரமுகருமான ரவீந்திரநாத் தாகூர், தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தனக்கு வழங்கப்பட்ட 'நைட்' (knighthood) பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார். வைசராய் Chelmsford அவர்களை நோக்கி ரவீந்திரநாத் தாகூர், “என் நாட்டு மக்களில், தங்களது பெயரற்ற தன்மை காரணமாக மனிதர்களுக்கு உகந்ததல்லாத அவமானத்தை அனுபவிக்கும் நிலையில் உள்ளவர்களுடன், அனைத்துச் சிறப்புப் பட்டங்களும் நீக்கப்பட்ட நிலையில், நானும் நின்று கொள்ள விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.


சில மாதங்களுக்குள் மகாத்மா காந்தி, இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் அகில இந்திய இயக்கமான ஒத்துழையாமை இயக்கமான கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ஒரு தலையங்கத்தில் அவர், “எனது நாட்டு மக்களின் சுதந்திரத்தை மதிக்காத எந்த அரசும் மரியாதைக்குரியது அல்ல” என்று ஒரு ‘A Punjab Victim”, Young India, 1919’  கட்டுரையில் குறிப்பிட்டார்.

4. அம்பேத்கர் ஜெயந்தி


பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 1891-ல் மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் கடுமையான சாதிப் பாகுபாட்டை (caste discrimination) அனுபவித்தார்.


டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகப் பாகுபாட்டை ஒழித்து, அதன் மூலம் இந்தியாவின் அனைத்து  மக்களுக்கும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் (Equality Day) என்ற கோட்பாட்டை நிலைநாட்டியதால், இந்த நாள் சமத்துவ தினம் என்றும் அழைக்கப்படுகிறது.


1927-ஆம் ஆண்டின் மகத் சத்தியாகிரகம், அம்பேத்கர் தலைமையில் தலித்துகள் நடத்திய முதல் பெரிய கூட்டுப் போராட்டமாகும். இது தலித் இயக்கத்தின் “அடித்தள நிகழ்வாக” (foundational event) கருதப்படுகிறது. சாதி அமைப்பை நிராகரித்து, தங்களின் மனித உரிமைகளை நிலைநாட்டும் உறுதியை அந்தச் சமூகம் கூட்டாக வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.


அம்பேத்கர், அதிகாரமளித்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகக் கல்வியை முன்னிறுத்தினார். மேலும், விளிம்புநிலை சமூகத்தினரிடையே கல்வியைப் பரப்புவதற்காக 1923-ல் பகிஷ்கிரித் ஹிதகர்னி சபாவை (Bahishkrit Hitkarini Sabha) நிறுவினார்.


சாதி அமைப்பை விமர்சித்து, அதை முழுமையாக ஒழிக்க அழைப்பு விடுத்த 'சாதி ஒழிப்பு' (Annihilation of Caste) என்ற நூல், சமூக சமத்துவம் குறித்த அம்பேத்கரின் மிகவும் செல்வாக்கு மிக்க நூல்களில் ஒன்றாகும். அவருடைய மற்ற படைப்புகளில், ‘The Untouchables’ (தீண்டத்தகாதவர்கள்), ‘Who Were the Shudras’ (சூத்திரர்கள் யார்), ‘States and Minorities’ (அரசுகளும் சிறுபான்மையினரும்) மற்றும் ‘Buddha and His Dhamma’ (புத்தரும் அவரது தம்மமும்) ஆகியவை அடங்கும்.


மேலும், ‘Administration and Finance of the East India Company’ (கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்), ‘The Evolution of Provincial Finance in British India’ (ஆங்கிலேய இந்தியாவில் மாகாண நிதியியலின் பரிணாம வளர்ச்சி) மற்றும் ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ (ரூபாயின் பிரச்சினை: அதன் தோற்றமும் தீர்வும்) போன்ற பொருளாதார நூல்களையும்  எழுதியுள்ளார்.


5. பானிபட் முதல் போர்


ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட், இந்திய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்கள் நடந்த இடமாகும். முதல் பானிபட் போர், 1526-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோதிக்கும் தைமூரியப் படைத்தளபதி ஜஹீருதீன் பாபருக்கும் இடையே நடைபெற்றது.

இது, பானிபட்டின் முதல் ஆட்சியாளரான பாபருக்குப் பிறகு இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு அடித்தளமாக இருந்ததுடன், லோடி வம்சத்தின் தலைமையிலான டெல்லி சுல்தானியத்தின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

லோதி தோட்டம் (Lodhi Garden)


1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, சையத் மற்றும் லோதி வம்சப் பிரபுக்கள் பல நூற்றாண்டுகளாகப் புதைக்கப்பட்டிருந்த பண்டைய டெல்லியின் ஒரு பகுதி, லேடி வில்லிங்டன் பூங்கா (Lady Willingdon Park) என்ற பெயரில் முறைப்படி பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது லோதி தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.


தலைநகரின் மையப்பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம், முகமது ஷாவின் கல்லறை, படா கும்பாத், ஷிஷ் கும்பாத் மற்றும் சிக்கந்தர் ஷாவின் கல்லறை ஆகிய நான்கு இடைக்கால நினைவுச்சின்னங்களையும், அத்துடன் ஒரு மூங்கில் தோப்பு, ஒரு போன்சாய் பூங்கா, மூன்று குளங்கள் மற்றும் 210 இனங்களைச் சேர்ந்த 5,400-க்கும் மேற்பட்ட மரங்களையும் கொண்டுள்ளது.


NCERT, இந்தப் போரில் துப்பாக்கி மண் (gunpowder), வெளிப்புற துப்பாக்கி பீரங்கிகள் (field artillery) மற்றும் தீக்குச்சித் துப்பாக்கி (matchlock) துப்பாக்கிகள் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இவை சமீபத்தில் இந்தியப் போர்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும்.

1556-ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் பானிபட் போரில், ஹேமு ‘விக்ரமாதித்ய’ (Vikramaditya’) மன்னரிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அக்பர் முறியடித்தபோது, ​​முகலாய ஆட்சி வலுப்பெற்றது.


மூன்றாம் பானிபட் போர் 1761-ல் மராத்தா படைகளுக்கும், படையெடுத்து வந்த ஆப்கானிய தளபதி அகமது ஷா அப்தாலியின் படைகளுக்கும் இடையே நடைபெற்றது.  இந்தப்போரில் மராத்தாக்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களின் 40,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே, சமயம் அப்தாலியின் படையில் 20,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.


லோதி தோட்டம்: 90-ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரம் பெற்றதிலிருந்து லோதி தோட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் தோட்டம், அமைதியான காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு புகலிடமாக மாறியுள்ளது.  



மகாவீர் – ஜைன மதத் தத்துவம் (Mahavir – Jainism philosophy)


1. மார்ச் மாதத்தின் கடைசி நாளில் (மார்ச் 30-31, 2026), ஜைன மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பகவான் மகாவீரரின் பிறப்பைக் குறிக்கும் ‘மகாவீர் ஜெயந்தி’ அல்லது ‘மகாவீர ஜன்ம கல்யாணக்’ கொண்டாடப்பட்டது. வர்தமானர் (Vardhamana) என்றும் அழைக்கப்படும் பகவான் மகாவீரர், ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிறுவினார். அவை இன்றும் மில்லியன் கணக்கான பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன.


2. பகவான் மகாவீரர், கி.மு. 599-ல் பீகாரில் உள்ள குண்டலகிராமத்தில், மன்னர் சித்தார்த்தருக்கும் ராணி திரிசாலைக்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாயாரான திரிசாலை, லிச்சாவித் தலைவரான சேதகரின் சகோதரி ஆவார். அவர் தனது 30-வது வயதில் அரச பதவியைத் துறந்து, அனைத்து விதமான உலக வாழக்கை முறைகளிலிருந்தும் விலகி 12 ஆண்டுகள் துறவ வாழக்கையைக் கழித்தார்.


3. மகாவீரர், பிற்காலத்தில் ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளாக மாறிய தனது அகிம்சை (non-violence), சத்யம் (truth), அஸ்தேயம் (non-stealing), பிரம்மச்சரியம் (chastity), மற்றும் அபரிகிரகம் (non-attachment) ஆகிய தத்துவங்களைப் போதிப்பதற்காக, 30 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.


4. ஜைன மதத்தின் உண்மையின் பன்முகத் தன்மை (anekantavada)  மற்றும் சார்பியல் உண்மை கோட்பாடு (syadavada) ஆகியவை, உண்மை என்பது சிக்கலானதும் பல அம்சங்களைக் கொண்டதுமாக இருப்பதால், அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்று வலியுறுத்துகின்றன. இருக்கும் அனைத்திற்கும் மூன்று அம்சங்கள் உள்ளன. அவை பொருள் (dravya), குணம் (guna) மற்றும் காலம் (paryaya) ஆகும்.

5. ஜைன மதத்தின் மூன்று முக்கிய கேட்பாடுகள்: முக்தியின் பாதை, என்பது சரியான நம்பிக்கை ((samyag-darshana)), சரியான அறிவு ((samyag-jnana)) மற்றும் சரியான நடத்தை (samyag-charitra) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Original link:

5 crucial April events in Indian history

Share:

அணுசக்தித் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனை

கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல முன்னேற்றங்களில், இந்தியா இறுதியாகத் தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உணர்த்தும் செய்திகளில் கல்பாக்கத்திலிருந்து வரும் செய்தியும் ஒன்றாகும்.


தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி வேகப் பெருக்க அணு உலையானது (Fast Breeder Reactor), அணுக்கரு இணைதிறனை அடைந்திருப்பது, இந்தியாவின் அணுசக்திப் பயன்பாட்டில் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மைல்கல்லாகும். இது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை நிறுவியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையின் முதுகெலும்பாக விளங்கும் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுடன் (Pressurised Heavy Water Reactors) ஒப்பிடுகையில், வேகப் பெருக்க அணு உலைகளை (Fast Breeder Reactor) வடிவமைப்பதும், உருவாக்குவதும், இயக்குவதும் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் சவாலானவையாக உள்ளது. ஆனால், இந்தத் தொழில்நுட்பச் சாதனையைவிட, இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கமானது, வரும் பத்தாண்டுகளில் நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தையும் இராஜதந்திரத் தன்னாட்சியையும் உறுதிசெய்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


நீண்ட காலமாக சந்தேகத்துடனும், ஒரு பாதுகாப்பு அபாயமாகவும் பார்க்கப்பட்ட அணுசக்தியானது, தற்போது தூய்மையான மற்றும் ஏராளமாகக் கிடைக்கும் எரிசக்தியின் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், படிப்படியாக அகற்றவும் நிர்பந்திக்கப்படும் உலகில், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது இன்றியமையாததாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இது இன்னும் மிக முக்கியமானதாகும். ஏனெனில், வெளிப்புறத் தக்கங்களுக்கு நாட்டை எளிதில் பாதிக்கக்கூடியதாக மாற்றும் எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பதை இது விடுவிக்கவோ அல்லது குறைந்தபட்சம் கணிசமாகக் குறைக்கவோ முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையும் மற்ற நாடுகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில், அதன் முக்கிய எரிபொருளான யுரேனியம் நாட்டில் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஹோமி பாபா மற்றும் அவரது தலைமுறை இந்திய அணு விஞ்ஞானிகள், மூன்று கட்டப் பாதையை வகுத்தவர்கள் ஆவர். அதன் மூன்றாவது கட்டம், இந்தியாவில் ஏராளமாகக் காணப்படும் தோரியத்தை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்துவதாகும்.


இந்த மூன்று கட்டப் பாதையில் பயணிப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப்போவதில்லை. முதல் சோதனை வேகப் பெருக்க உலை (fast breeder reactor) 2000-களின் முற்பகுதியில்தான் கட்ட முடிந்தது. இந்தப் பயணத்தின்போது பலமுறை, இந்தியா தனது கவனத்தை இழந்துவிட்டது போல் தோன்றியது. கல்பாக்கத்தில் அணு உலையின் நிலைப்புத்தன்மை எட்டப்படுவது, இந்த மாற்றத்தை மீண்டும் வேகப்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்தியா தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்காக இறுதியாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை கல்பாக்கத்திலிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன. அணுசக்தி இயக்கத்தை அமைத்தல், சாந்தி (SHANTI) சட்டத்தை இயற்றுதல், சிறிய மட்டு அணு உலைகளின் (Small Modular Reactors (SMR)) வளர்ச்சியை முன்னெடுத்தல் மற்றும் அணுசக்தித் துறையைத் தனியார் பங்கேற்பிற்காகத் திறந்துவிடுதல் ஆகிய பல நடவடிக்கைகள், இந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.


Original link:

On nuclear energy, an Indian milestone.


Share:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், FASTag-களுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களைச் சரிபார்த்து வருவதன் காரணம் - தீரஜ் மிஸ்ரா

இந்த மாற்றம் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow (MLFF)) எனப்படும்  சுங்க கட்டண வசூல் முறையை முன்னேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக  இருந்து வருகிறது. இந்த முறையில், வாகனங்கள் சுங்க  சாவடிகளில் நிற்காமல், வேகமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. 


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)), தான் வழங்கிய FASTag-களுடன் துல்லியமான வாகனப் பதிவு எண்கள் (Vehicle Registration Numbers (VRNs)) அல்லது வாகனப் பலகை எண்களை உடனடியாகச் சரிபார்க்குமாறு, FASTag-களை வழங்கும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


ஃபாஸ்டேக் வருடிகளால் (Scanner) கண்டறியப்பட்ட வாகனப் பதிவு எண்கள், வாகன உரிமத் தகடுகளில் காட்டப்படும் எண்ணுடன் பொருந்தவில்லை என்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறான அல்லது செல்லாத வாகனப் பதிவு எண்களுடன் இணைக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட FASTag-குகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு வங்கிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உத்தரவிட்டுள்ளது.


சுங்கச்சாவடிகளில் நிற்காமலோ அல்லது வேகம் குறைக்காமலோ, வாகனங்கள் அதிக வேகத்தில் சுங்க சாவடிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கும் ஒரு மேம்பட்ட வசதியான, பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) சுங்கக் கட்டண முறைக்கான முன்னெடுப்பின்  ஒரு பகுதியில் இருந்து வருகிறது. பலவழி தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண முறைக்கு FASTag உடனான துல்லியமான வாகன வழித்தட (VRN) வரைபடம் மிகவும்  முக்கியமானது.


பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்தின் (Multi-Lane Free Flow (MLFF)) நன்மைகள் என்னென்ன?


தற்போதைய மின்னணு சுங்கக் கட்டண முறையின்கீழ், பயனர் கட்டணத்தைச் செலுத்துவதற்காக வாகனங்கள் சுங்கச் சாவடியில் நிற்க வேண்டும். ஏதேனும், முரண்பாடு ஏற்பட்டால், சுங்கச் சாவடி ஊழியர் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே, வாகனங்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அமைப்பானது, பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இந்த செயல்முறையை சீராக மாற்றும். குறிப்பாக, அதிக நெரிசல் உள்ள சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இருப்பினும், பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அல்லது தடையற்ற சுங்கக் கட்டண அமைப்பில் தடுப்புத் ஏதும் இல்லை. உயர் செயல்திறன் கொண்ட ரேடியோ அதிர்வெண் அடையாளக் கருவிகள் மற்றும் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரக் கேமராக்கள் FASTag மற்றும் துல்லியமான வாகனப் பதிவு எண்களைப் சரி பார்த்த பிறகு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தச்  முரயில் மனிதத் தலையீடு இல்லாத நிலையில், FASTag உடன் இணைக்கப்பட்ட துல்லியமான வாகனப் பதிவு எண்ணில் ஏற்படும் பொருத்தமின்மையால் பயணிகள் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல நேரிடலாம்.


பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow (MLFF)) கட்டமைப்பின் கீழ், பயனர் கட்டணத்தைச் செலுத்தாத வாகனங்களுக்கு மின்னணு அறிவிப்புகளை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள், துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட வாகன அடையாளத் தரவுகளை அதிகம் சார்ந்துள்ளன. 


FASTag வழங்கும் முறையானது வாகன (தேசிய வாகனப் பதிவகம்) தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட FASTagக-களில், இதுபோன்ற எண்ணிக்கையிலான பொருத்தமின்மைகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில், சரிபார்ப்பு வழிமுறைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. பெரும்பாலும்  எழுத்து சார்ந்த செயல்முறைகளையே சார்ந்திருந்தன. இது வாகன அடையாளப் பதிவுகளில் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority (NHAI)) கூறியது.

பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து  தொடர்பாக வேறு என்ன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?


பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அமைப்பு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும் (Ministry of Road Transport and Highways (MoRTH)), குறிப்பாகப் பயனர் கட்டணம் தொடர்பான முறைகேடுகளைத் தடுப்பதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


கடந்த மாதம், சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை (MoRTH) புதிய தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின்படி, சுங்க கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால், பயணிகள் அந்த சுங்கச் சாவடிக்கு ஏற்ப இரண்டு மடங்கு கட்டண தொகையை செலுத்த வேண்டும். ஆனால், 72 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்தப்பட்டால், அசல் கட்டணமே வசூலிக்கப்படும்.


இங்கும், வாகன விவரங்கள், வாகனம் சென்ற தேதி மற்றும் இடம், செலுத்த வேண்டிய சுங்க கட்டணம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு மின்னணு அறிவிப்பு (e-notice) வெளியிடப்படும். இந்த மின்னணு அறிவிப்பால் அதிருப்தியடையும் வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுநர், 72 மணிநேரத்திற்குள் அதனை எதிர்த்து முறையிடக்கூடிய ஒரு குறைதீர்க்கும் வழிமுறையையும் இந்தவிதிகள் வழங்குகின்றன. அவ்வாறு செய்யப்பட்ட முறையீட்டை, சுங்கக் கட்டண வசூல் முகமை ஐந்து நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படவிட்டால், செலுத்தப்படாத சுங்கக் கட்டணத்திற்கான கோரிக்கை காலாவதியாகிவிடும்.


இந்தியாவில் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (MLFF) எப்போது, ​​எங்கு செயல்பாட்டுக்கு வரும்?


தடையற்ற சுங்கக் கட்டண முறையைச் செயல்படுத்துவதற்காக, 16 சுங்கச்சாவடிகளுக்கான ஒப்பந்தத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பதன் மூலம் நெரிசலைக் குறைப்பது, பயண நேரத்தைக் குறைப்பது, எரிபொருள் சிக்கனத்தையும் சுங்க வருவாயை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகவும்.


இந்த சுங்கச்சாவடிகள் ஹரியானாவில் NH-44-ல் உள்ள கரௌண்டா, குஜராத்தில் NH-48-ல் உள்ள சோரியாசி மற்றும் போரியாச்; ராஜஸ்தானில் NH-48-ல் உள்ள தௌலத்புரா, மனோகர்புரா மற்றும் ஷாஜஹான்பூர்; டெல்லியில் UER-II-ல் உள்ள முண்டகா; தமிழ்நாட்டில் NH-48-ல் உள்ள நேமிலி மற்றும் செனசமுத்திரம் மற்றும் NH-45-ல் உள்ள பரனூர்; ஆந்திரப் பிரதேசத்தில் NH-44-ல் உள்ள கசேபள்ளி, அமகத்தாடு மற்றும் மரூர், மகாராஷ்டிராவில் NH-50-ல் உள்ள சாலக்வாடி மற்றும் ஹிவர்காவ்ன் பாவ்ஸா, மற்றும் ஹரியானாவில் NH-19-ல் உள்ள படர்பூர் ஃபரிதாபாத் ஆகியவை ஆகும். மேலும், இந்தியாவில் பல வழித்தடத் தடையற்ற  போக்குவரத்து முறையை செயல்படுத்துவதற்காக கூடுதலாக 36 கட்டணச் சாவடிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.


குஜராத்தில் உள்ள சோரியாசி  சுங்கச் சாவடி, இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச் சாவடியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


சாலைப் போக்குவரத்து அமைச்சகம், 2025-26 நிதியாண்டில் (டிசம்பர் 2025 வரை), தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் FASTag-கள் மூலம் தினசரி சராசரி வசூல் சுமார் ரூ. 186 கோடியாகவும், தினசரி சராசரி மின்னணு சுங்கக் கட்டணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.05 கோடியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 Original link:

NHAI is verifying vehicle registration numbers linked with FASTags. Here is why


Share:

ககன்யான் விண்வெளி வீரர்கள் பூமிக்கு எப்படிப் பாதுகாப்பாகத் திரும்புவார்கள்? -உன்னிகிருஷ்ணன் நாயர் எஸ்.

 பாரசூட்டுகள் (Parachutes) மட்டுமே பாதுகாப்பான தரையிறக்கத்தை ஏன் உறுதி செய்ய முடியாது? ககன்யான் விண்கலம் தனது அபரிமிதமான வேகத்தை எப்படிக் குறைக்கிறது?


விண்வெளி வீரர்கள் தங்கும் 'குழு தொகுதி' (Crew Module), வினாடிக்கு சுமார் 7,800 மீட்டர் என்ற வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இது பூமிக்குத் திரும்பி வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, அந்த வேகத்தைக் குறைக்க வேண்டியது அவசியம். காற்றினால் ஏற்படும் உராய்வு ஒரு தடையைப் போலச் செயல்பட்டு, 'Aerobraking' மூலம் அதன் ஆற்றலைத் தணித்து வேகத்தைக் குறைக்கிறது. பிறகு, பாதுகாப்பாகத் தரை இறங்குவதற்காக 12 கிலோமீட்டர் உயரத்திற்குக் கீழே வரும்போது, பல நிலைகளைக் கொண்ட ஒரு பாரசூட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.


Aerobraking - காற்றின் இழுவைச் சக்தியை (atmospheric drag) பயன்படுத்தி அதன் வேகத்தை படிப்படியாகக் குறைக்கும் நுட்பமாகும்.


ஒரு பொதுவான மீட்பு அமைப்பு என்பது, விண்கலத்தின் தரைப்பகுதியைச் சுற்றியுள்ள காற்றுடன் உரசி வேகம் குறையும் ‘Aerobraking’ நிகழ்வுக்குப் பிறகு, அந்த விண்கலத் தொகுதியை நிலத்திலோ அல்லது கடலிலோ பாதுகாப்பாக இறக்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டது. இதில் பாரசூட்டுகள், விண்கலம் எங்குத் தரை இறங்கியுள்ளது என்பதைக் கண்டறியும் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் கடலில் இறங்கும்போது விண்கலம் கவிழ்ந்துவிடாமல் நிலையாக இருக்கச் செய்யும் அமைப்பு (Upright system) ஆகியவையும் அடங்கும். அமெரிக்காவின் SpaceX Dragon மற்றும் இந்தியாவின் ‘Gaganyaan’ மற்றும் நாசாவின் ‘Orion’ போன்ற மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலங்கள் கடலில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


தரைப்பகுதிகளில் தரை இறங்குவதற்கு, இந்த அமைப்பு பாரசூட்களுடன் சேர்த்து, தரை இறங்குவதற்கு முன்பாக வேகத்தைக் குறைக்க பிரேக்கிங் மோட்டார்களை (braking motors) பயன்படுத்துகிறது. சில விண்கலங்கள், வேகத்தைக் குறைக்க மோட்டார்களுக்குப் பதிலாக அதிர்ச்சியைத் தாங்கும் காற்றுப் பைகளை (airbags) பயன்படுத்துகின்றன. ரஷ்யாவின் ‘Soyuz’ மற்றும் சீனாவின் ‘Shenzhou’ விண்கலங்கள், தரையில் இறங்கும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகத் தரை இறங்குவதை உறுதிசெய்ய ரெட்ரோ-ராக்கெட்டுகளை (retro-rockets) பயன்படுத்துகின்றன.



Retro-rockets என்பவை விண்வெளி விண்கலங்களில் பயன்படுத்தப்படும் சிறிய ராக்கெட் இயந்திரங்கள் ஆகும். இவை, விண்கலத்தின் பயண திசைக்கு எதிர்திசையில் தீப்பொறி வீசி, விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவுகின்றன.


தரையிறங்குவதற்கு பாரசூட்டுகள் மட்டும் ஏன் போதுமானதாக இல்லை?


தரைப்பகுதி மிகவும் கடினமாக இருப்பதால், விண்கலம் தரையிறங்கும்போது அதன் வேகம் மிகக் குறைவாக, அதாவது நொடிக்கு 1 முதல் 2 மீட்டர் (1-2 m/s) என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், கடல் பகுதியில் தரையிறங்கும்போது வேகம் சற்று அதிகமாக, அதாவது நொடிக்கு 7 முதல் 9 மீட்டர் (7-9 m/s) வரை இருக்கலாம். ஏனெனில், தண்ணீர் இயற்கையாகவே அதிர்வுகளைத் தாங்கி ஆற்றலை உறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளது.


ஒரு விண்கலத்தின் வேகத்தை வெறும் பாரசூட்டுகளை மட்டும் பயன்படுத்தி வினாடிக்கு 2 மீட்டருக்கும் (2m/s) கீழாகக் குறைப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஏனெனில், வேகத்தை இன்னும் குறைக்க வேண்டுமானால் மிக அதிக அளவிலான காற்றெதிர்ப்புத் திறன் தேவைப்படும். உதாரணமாக, வேகத்தை வினாடிக்கு 7 மீட்டரிலிருந்து 1 மீட்டராகக் குறைக்க வேண்டுமானால், பாரசூட்டின் அளவு சுமார் 49 மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய பாரசூட் அதிக எடையுடனும், கொண்டுசெல்ல கடினமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, அவ்வளவு பிரம்மாண்டமான பாரசூட்டைச் சிக்கலில்லாமல் விரிப்பதும் மிகவும் கடினமான ஒன்றாகும்.

தரையிறங்கும் பகுதி ஏன் நீள்வட்ட வடிவத்தில் உள்ளது?


விண்வெளியில் இருந்து ஒரு விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, அது ஒரு குறிப்பிட்ட புள்ளியை இலக்காகக் கொள்ளாமல், ஒரு பெரிய நீள்வட்டப் பகுதியை இலக்காகக் கொண்டே தரையிறங்கும். இதற்குக் காரணம், அதன் பெரும்பாலான இயக்க ஆற்றல் (Kinetic energy) அதன் பயணப் பாதையிலேயே அமைந்திருப்பதுதான். மிக அதிக வேகத்தில் வரும்போது, வளிமண்டலச் சூழலில் ஏற்படும் சிறு மாற்றங்களோ அல்லது விண்கலத்தின் வேகமோ அதனைத் திட்டமிட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் முன்னரோ அல்லது பின்னரோ தரையிறங்கச் செய்யலாம். ஆனால், பக்கவாட்டில் நகர்வதற்கு விண்கலத்திடம் மிகக் குறைந்த ஆற்றலே இருப்பதால், இடது அல்லது வலது பக்க நகர்வுகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இதன் விளைவாக, விண்கலம் தரையிறங்கும் பகுதி பயணத்தின் திசையிலேயே நீண்டதொரு நீள்வட்டமாக அமைகிறது.


கடலில் தரையிறங்குவதா அல்லது நிலத்தில் தரையிறங்குவதா என்பதைத் தீர்மானிப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?


தரைப்பகுதியில் இறங்குவதா அல்லது கடலில் இறங்குவதா என்ற முடிவு, அந்த நாட்டின் புவியியல் அமைப்பு, பாதுகாப்பு மற்றும் தளவாட வசதிகளைப் பொறுத்தது என்கின்றனர். தரைப்பகுதியில் தரையிறங்குவதற்கு மக்கள் நடமாட்டம் இல்லாத, கட்டிடங்கள் இல்லாத மிகப்பெரிய இடங்கள் தேவைப்படுகின்றன.  ஆனால், இது விண்வெளி வீரர்களை மீட்பதை எளிதாக்குகிறது மற்றும் விண்கலத்தின் பாகங்களை விரைவாகப் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. பரந்த பாலைவனங்களோ அல்லது சமவெளிகளோ இல்லாத நாடுகள் கடல்வழி தரையிறக்கத்தையே விரும்புகின்றன. இருப்பினும், இதற்கு மீட்புக் கப்பல்கள், விண்கலம் மிதப்பதற்கான பைகள் மற்றும் சீரற்ற கடல் அலைகளில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான சிறப்பு உபகரணங்கள் என அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும் என்கின்றனர்.




மீட்புப் பணிகளுக்காகக் குழுவினருக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது?


விண்வெளி வீரர்களுக்கான இந்தப் பயிற்சி, சாதாரண தரையிறக்கங்கள் மற்றும் அவசரக்கால வெளியேற்றங்கள் என இரண்டையுமே உள்ளடக்கியது. தீ விபத்து அல்லது கசிவு போன்ற அதிக மன அழுத்தம் நிறைந்த சூழல்களில், விண்கலத்திலிருந்து எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதற்கு அவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். இந்தப் பயிற்சியில், அழுத்த உடைகளைக் களைவது, நீர்ப்புகா உடைகளை அணிவது மற்றும் உயிர்காக்கும் படகுகளை பயன்படுத்துவது போன்றவை அடங்கும். ஒருவேளை விண்கலம் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி ஆள் நடமாட்டமில்லாத தொலைதூரப் பகுதிகளில் தரைிறங்கினால், அங்கு 48 மணிநேரம் உயிர்வாழத் தேவையான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு வழங்கப்படும். மிக மோசமான சூழல்களில், தங்குவதற்கு கூடாரமாகப் பயன்படுத்த அவர்கள் பாரசூட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம். ‘Soyuz’ போன்ற சில விண்கலப் பயணங்களில், வனவிலங்குகள் போன்ற இயற்கை அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள துப்பாக்கி எடுத்துச் செல்லவும் விண்வெளி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 


நிலையாக இருக்கச் செய்யும் அமைப்பின் செயல்பாடு என்ன?


கடலில் ஒரு விண்கலம் தரையிறங்கும்போது, அதனுள் இருக்கும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக சுவாசிப்பதற்கும், மீட்புக் குழுவினர் அவர்களை மீட்பதற்கும் அது நேராக மிதக்க வேண்டியது அவசியம். இதற்காக அந்தப் பகுதி 'Monostable' தன்மையுடன் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, ஒரு தஞ்சாவூர் பொம்மை எப்பொழுதும் கீழே விழாமல் தானாகவே நிமிர்ந்து நிற்கும், அதேபோல் இந்த விண்கலப் பகுதியும் தலைகீழாக விழுந்தாலும் தானாகவே நேராகத் திரும்பிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் கனமான பாகங்களை ஈர்ப்பு மையம் அதன் அடிப்பகுதியில் அமைப்பதன் மூலம் இந்த நிலைத்தன்மை பெறப்படுகிறது.


இருப்பினும், சில விண்கலங்கள் நிலைத்தன்மையற்றதாக இருப்பதால், அவை தண்ணீரில் இறங்கும்போது தலைகீழாகவோ அல்லது பக்கவாட்டிலோ மிதக்கக்கூடும். இதனைச் சரிசெய்ய, அதன் மேற்பகுதியில் 'நிமிர்த்தும் மிதவைகள்' (Up-righting floats) பொருத்தப்பட்டுள்ளன. விண்கலம் தரையிறங்கிய பிறகு, இந்த மிதவைகள் காற்றால் நிரப்பப்பட்டு, அந்தப் பகுதியைச் சரியான நேர்நிலைக்குத் தள்ளுகின்றன.


கடலில் மிதக்கும் ஒரு விண்கலத்தை எவ்வாறு கண்டறிவது?


பரந்த கடலில் அலைகள் மற்றும் நீரோட்டங்கள் காரணமாக மிதக்கும் ஒரு தொகுதியைக் கண்டுபிடிப்பது கடினம் ஆகும். எனவே, மீட்புக் குழுக்கள் அதன் இருப்பிடத்தைக் கண்டறிய, முன்கூட்டியே கணிக்கப்பட்ட கண்காணிப்பு முறை, மின்னணு சமிக்ஞை மற்றும் நேரடிப் பார்வையில் தெரியக்கூடிய அடையாளங்கள் எனப் பல வழிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தொகுதி தனது உலகளாவிய இடம் கண்டறியும் அமைப்பின் (Global Positioning System (GPS)) மூலம் இருப்பிடத்தையும், குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்பப்படும் சமிக்ஞைகளையும் (Homing signals) ரேடியோ வழிகாட்டி சமிக்ஞைகள் வழியாகச் செயற்கைக்கோள்கள் மற்றும் விமானங்களுக்கு அனுப்புகிறது. அத்துடன், வான்வழியாக எளிதில் அடையாளம் காண்பதற்காக, அது கடலில் ஒரு பிரகாசமான பச்சை நிற ஒளிரும் சாயத்தை (Fluorescent dye) வெளியிடுகிறது. ஒருவேளை இது இரவிலோ அல்லது தெளிவற்ற வானிலை சூழலிலோ கடலில் விழுந்தால், அதிலிருந்து வெளிப்படும் ஒளிர்ந்து அணையும் விளக்குகளின் (Strobe lights) ஒளி மூலம் அதன் இருப்பிடம் கண்டறியப்படும். ஆழ்ந்த நீலநிறக் கடல் நீரில் அந்த விண்கலத் தொகுதி தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக, அந்தத் தொகுதிக்கும் அதன் மிதக்கும் பைகளுக்கும் சர்வதேச அளவில் கடல்சார் அடையாளங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிறம் (International Orange) பூசப்பட்டிருக்கும்.


ககன்யான் விண்கலத் தொகுதி எவ்வாறு மீட்கப்படுகிறது?


ககன்யான் விண்கலத் தொகுதியை மீட்டெடுக்கும் பணியை, இந்தியக் கடற்படை மற்றும் பிற முக்கிய அமைப்புகள் இணைந்து வழிநடத்துகின்றன. பாரசூட்டுகள் மூலம் வேகம் குறைக்கப்பட்டபிறகு, அந்த விண்கலத் தொகுதி வங்காள விரிகுடா கடலில் தரையிறங்கும். கடலில் விழுந்தவுடன், விண்கலம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பாரசூட்கள் விடுவிக்கப்படும்; அதே நேரத்தில், விண்கலம் கடலில் நேராக மிதப்பதை உறுதிசெய்ய அதன் காற்றுப்பைகள் தானாகவே விரிவடையும்.


விண்கலத் தொகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிய, அந்தத் தொகுதி உலகளாவிய இடம் கண்டறியும் அமைப்பு (GPS) மற்றும் சமிக்ஞை விளக்குகள் (Beacon signals) ஆகியவற்றை வெளியிடுகிறது. மேலும், வானிலிருந்து எளிதாக அடையாளம் காண்பதற்காக பிரகாசமான அடையாளச் சாயத்தை கடலில் பரப்புகிறது. விண்கலத் தொகுதி இருக்கும் இடம் தெரிந்தவுடன், கடற்படை வீரர்கள் ஒரு மிதக்கும் வளையத்தைக் (Flotation collar) கொண்டு அதைப் பாதுகாப்பாக இணைத்து, இழுத்துச் செல்லும் கருவிகளுடன் இணைப்பார்கள். ஒரு சாதாரணப் பணியின்போது, அதில் உள்ள குழுவினரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அந்தத் தொகுதி கப்பலின் தளத்திற்கு உயர்த்திக் கொண்டு வரப்படும்.


உன்னிகிருஷ்ணன் நாயர் எஸ்., விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார். இவர் மனித விண்வெளிப் பயண மையத்தின் நிறுவன இயக்குநர் மற்றும் ஏவுகணை அமைப்புகள், புவி சுற்றுப்பாதையில் மீண்டும் நுழைதல் மற்றும் மனித விண்வெளிப் பயணத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது, இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Original link:

How will Gaganyaan astronauts return safely to earth?



Share: