அமெரிக்க வரி உயர்வுகளால் இந்தியா மோசமாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வேளையில், ஏப்ரல் 2-ஆம் தேதி, "பெரிய மற்றும் தொடர்ச்சியான அமெரிக்க பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறைகளுக்கு வழிவகுக்கும் வர்த்தக நடைமுறைகளை சரிசெய்ய பரஸ்பர வரியுடன் இறக்குமதிகளை ஒழுங்குபடுத்துதல்" என்ற நிர்வாக ஆணையை அவர் வெளியிட்டார்.
இந்த ஆணையில், ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்து, அமெரிக்க உற்பத்திக் களம் வீழ்ச்சியடைந்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்து, ஒரு வணிகவாத அணுகுமுறையுடன், இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரிய மற்றும் தொடர்ச்சியான வர்த்தகப் பற்றாக்குறைகளில் கவனம் செலுத்தியது. வர்த்தக உறவுகளில் நியாயமின்மையின் விளைவாக இந்தப் பற்றாக்குறைகள் காணப்பட்டன. மேலும், அது தொடர்ந்து குறிப்பிடுவதாவது,
"இந்த நிலைமை வேறுபட்ட வரிவிதிப்பு விகிதங்கள் மற்றும் வரி அல்லாத தடைகளால் நிரூபிக்கப்படுகிறது. இது அமெரிக்க உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதை கடினமாக்கும். முக்கிய அமெரிக்க வர்த்தகக் கூட்டணி நாடுகளுடன் பொருளாதாரக் கொள்கைகள் உள்நாட்டு ஊதியங்கள் மற்றும் நுகர்வைக் குறைக்கின்றன. அதன் மூலம் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான தேவையைக் குறைத்து, உலகளாவிய சந்தைகளில் தங்கள் பொருட்களை அதிக போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகின்றன. இந்த நிலைமைகள் இந்த ஆணைகளை சரிசெய்யும் நோக்கில் தேசிய அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன.
இது பன்முகத்தன்மை மற்றும் அதன் மிகவும் சாதகமான நாடு (Most Favoured Nation (MFN)) கொள்கையின் முடிவா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளையும் சமமாக நடத்துவதற்கான கொள்கையா?
இந்த "பரஸ்பர வரிவிதிப்பு" கூட்டணி நாடுகளால் வசூலிக்கப்படும் வரிவிதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படவில்லை. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (Office of the US Trade Representative (USTR)) குறிப்பிடுவது போல், "அமெரிக்காவிற்கும், ஒவ்வொரு வர்த்தகக் கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையை சமநிலைப்படுத்த தேவையான பரஸ்பர வரிகள் கணக்கிடப்படுகிறது.
மேலும், விதிக்கப்பட்ட சரிசெய்யப்பட்ட பரஸ்பர வரிவிதிப்பின் பகுப்பாய்வு பல சுவாரஸ்யமான வடிவங்களை வெளிப்படுத்துகிறது (வரைபடத்தைப் பார்க்கவும்). முதலாவதாக, முதல் 41-50 சதவீத வரம்பில், இலங்கை, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற ஆசிய நாடுகள் முக்கியமாக உள்ளன.
இரண்டாவதாக, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, சுவிட்சர்லாந்து, தைவான், சீனா, வங்காளதேசம், தாய்லாந்து அல்லது மொரீஷியஸ் போன்ற நாடுகள் 31-40 சதவீத வரம்பின் கீழ் வரி விதிக்கின்றன. மூன்றாவதாக, ஜப்பான், மலேசியா, தென்கொரியா அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியா 21-30 சதவீத வரம்பில் தோன்றுகிறது. இறுதியாக, நைஜீரியா, வெனிசுலா, நார்வே, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள்/குழுக்கள் மிகக் குறைந்த 10-20 சதவீத வரம்பின் கீழ் வருகின்றன.
மெக்சிகோ மற்றும் கனடா இந்த பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அமெரிக்கா எதிர்கொள்ளும் ஃபெண்டானில் (fentanyl) மற்றும் இடம்பெயர்வு பிரச்சினைகளில் (migration issues) அவற்றின் பங்கு காரணமாக அவை 25 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.
இந்தப் பட்டியலில் சீனாவிற்கு 34 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20 சதவீத வரிக்கு மேல் இருக்கும். இதனால், அமெரிக்காவிற்கு சீன இறக்குமதிகள் மீதான வரி 54 சதவீதமாகிறது. மற்ற அனைத்து நாடுகளும் 10 சதவீதம் என்ற அடிப்படை வரியை எதிர்கொள்கின்றன.
இந்தியா மீதான தாக்கம்
ஏப்ரல் 2 அறிவிப்பிலிருந்து, இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. 11-20 சதவீதம் வரி உயர்வைக் கொண்ட 16 நாடுகளில், ஒன்பது நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை, இரண்டு நாடுகள் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவை. நார்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இந்தக் குழுவில் உள்ளன.
இருப்பினும், இந்த நாடுகள் அதிக ஊதியத்தைக் கொண்டுள்ளன. மேலும், இந்தியா அமெரிக்க சந்தையில் அவர்களுடன் நேரடியாகப் போட்டியிட வாய்ப்பில்லை. ஆசியாவிலிருந்து சிறந்த அணுகுமுறையைப் பெற்ற ஒரே வளரும் நாடு பிலிப்பைன்ஸ் மட்டுமே ஆகும்.
21-30 சதவீத வரியில், இந்தியா ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் இந்தியாவை விட 1-3 சதவீத வரி நன்மையைக் கொண்டுள்ளன. எனவே, அமெரிக்க சந்தையில் அதன் பிற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒப்பீட்டு நிலை மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
மேலும், சில பொருட்களுக்கு இந்த பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தாமிரம், மருந்துகள், குறைக்கடத்திகள் மற்றும் மரப் பொருட்கள் ஆகியவை அடங்கும். மருந்துகள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருளாக இருப்பதால் இது இந்தியாவிற்கு முக்கியமானதாகும்.
பொதுவாக வரியானது, உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்க வரிகள் விதிக்கப்படுகின்றன. மேலும் இறக்குமதியை அதிக விலைக்குக் கொண்டு வருவதன் மூலம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை டிரம்பும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
எனவே, அமெரிக்காவிற்கான மற்ற ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியா மோசமாக இல்லாவிட்டாலும், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகப் போட்டியை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், அமெரிக்கா மிக அதிக ஊதியம் பெறும் நாடாக இருப்பதால், அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் குறைந்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திப் பொருளுக்கான விலையில் போட்டியிடுவது கடினமாக இருக்கும்.
டாலர் மதிப்பு உயர்வு (Dollar appreciation)
மேலும், கடந்த ஆண்டு அமெரிக்க டாலர் கணிசமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிக வரி விதிப்புகளின் சில நன்மைகளைக் குறைத்துள்ளது. இருப்பினும், இந்த வரி விதிப்புகள் அமெரிக்காவில் இந்திய ஏற்றுமதிகளின் விலையை அதிகரிக்கும். டிரம்ப் வரிவிதிப்பின் இரண்டாவது குறிக்கோள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தியை அமைக்க ஊக்குவிப்பதாகும். அதிக வரி விதிப்புகளை விதிப்பதன் மூலம், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் இந்த கட்டணங்களைத் தவிர்க்க வெளிநாட்டு நேரடி முதலீட்டை (foreign direct investment (FDI)) பயன்படுத்த விரும்புகிறார்கள்.
இந்த புதிய வரி விதிப்புக் கொள்கைக்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) ஆண்டு அறிக்கை இந்தியாவுக்கான மூன்று முக்கிய கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.
முதலாவதாக, விவசாயம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு வகையான தயாரிப்புகளில் இந்தியா மிக அதிக வரி விகிதங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, பல தயாரிப்புகளுக்கான இந்தியாவின் கட்டுப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வரி விகிதங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி, பொருட்களின் மீதான வரி விகிதங்களை அதிகரிக்க இந்தியாவுக்கு அனுமதிக்கிறது. இறுதியாக, 2014 முதல், இந்திய அரசாங்கம் இந்த நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தி வரிவிதிப்பு விகிதங்களை அதிகரித்துள்ளது.
இந்தியா அமெரிக்காவுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரிகள் மற்ற நாடுகளை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படலாம் என்பதால், இங்கு கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியா இந்த செயல்முறையைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், வரிக் கொள்கைகளை உருவாக்கும் போது அது வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற அதன் உள்நாட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டும். இது விவசாயப் பொருட்களுக்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு பெரிய மானியங்களை வழங்குகிறது. இது அவர்களின் தயாரிப்புகளை மிகக் குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்கிறது.
இருப்பினும், இந்தியா தனது பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவை அதிகமாகச் சார்ந்திருப்பதால், இந்தியா கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் (வணிகம் மற்றும் சேவைகள்) கிட்டத்தட்ட 20 சதவீதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது. இரண்டாவதாக, அமெரிக்கா இந்தியாவின் மீது "தள்ளுபடி பரஸ்பர வரியை" (discounted reciprocal tariff) விதித்துள்ளது. அதாவது, இந்தியா செயல்படத் தவறினால் வரிகள் அதிகரிக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவின் தீவிரமான கொள்கை மாற்றம் பரவலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒத்துழைப்பு முதல் மோதல் வரை பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பதில்களை ஈர்க்கக்கூடும்.
ஒரு முழுமையான வர்த்தகப் போரை நிராகரிக்க முடியாது. நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளை மீண்டும் மேம்படுத்த முயற்சிப்பதால் பெரியளவிலான விநியோக அதிர்ச்சிகள் இருக்கும். மேலும், இது உலகளாவிய முதலீட்டு ஓட்டங்களை பாதிக்கும். அதன் பரந்த தாக்கம் வர்த்தகக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் பணவீக்கம், பணவியல் கொள்கைகள் மற்றும் மாற்று விகிதங்களையும் பாதிக்கும்.
பால் ஐஐஎம் கல்கத்தா, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். ரே என்ஐபிஎம், புனேவைச் சேர்ந்தவர்.