உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய மற்றும் முக்கியமான மனித உரிமைகள் பிரச்சினை. மற்ற வகையான வன்முறைகளைப் போலல்லாமல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை (Violence against Women and Girls (VAWG)) ஆணாதிக்க விதிமுறைகள், பாலின சமத்துவமின்மை மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமமற்ற அதிகார உறவுகளிலிருந்து உருவாகிறது.
உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான அத்துமீறல் போன்ற பல்வேறு வடிவங்களில் பெண்கள் பொது வாழ்வு மற்றும் தனிப்பட்ட வாழ்வு இரண்டிலும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய வன்முறைச் செயல்கள் பெண்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது மற்றும் அவர்களின் வளர்ச்சி மற்றும் விருப்பங்களைத் தடுக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கு எதிரான வன்முறையை, "பாலின அடிப்படையிலான வன்முறையானது, பெண்களுக்கு உடல், பாலியல், அல்லது மனரீதியான தீங்கு அல்லது துன்பத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய எந்தவொரு செயலையும், அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல் அல்லது தன்னிச்சையான இழப்பு உட்பட. சுதந்திரம், பொது அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்பவை என வரையறுக்கிறது.
VAWG-க்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 25-யை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக (International Day for the Elimination of Violence Against Women ) 1999-ஆம் ஆண்டில் அறிவித்தது. கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக விளங்கிய டொமினிகன் குடியரசின் மிராபால் சகோதரிகளை கௌரவிப்பதற்காக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது..
1950-ஆம் ஆண்டுகளில், மூன்று சகோதரிகள், பாட்ரியா, மினெர்வா மற்றும் மரியா தெரசா மிராபால் (லாஸ் மரிபோசாஸ் அல்லது பட்டாம்பூச்சிகள் என்றும் அழைக்கப்படுவார்கள்). டொமினிகன் குடியரசில் ரஃபேல் ட்ருஜிலோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்றார்கள். நவம்பர் 25, 1960-ஆம் ஆண்டு, ட்ருஜிலோவின் உத்தரவின் பேரில் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் படுகொலை, கண்டங்கள் முழுவதும் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான இயக்கங்களை வலுப்படுத்தியது.
1980-ஆம் ஆண்டுகளின் போது, பல பெண்ணிய இயக்கங்கள் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாளைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. இது டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினத்தில் (Human Rights Day) முடிவடைகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் இந்த பிரச்சாரம் முயல்கிறது.
மிராபால் சகோதரிகளின் தைரியம் வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கூட்டு நிலைப்பாட்டின் அவசியத்தை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயம் மற்றும் தீங்கு இல்லாமல் வாழக்கூடிய உலகத்தை உருவாக்குவதற்கான அவசரத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
VAWG ஒரு அழுத்தமான பிரச்சினை மற்றும் இது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அவை ஆணாதிக்க சமூகங்களில், உடல் ரீதியான தீங்கு, பாலியல், உணர்ச்சி, உளவியல் மற்றும் நிதி துஷ்பிரயோகம் மற்றும் தொழில்நுட்பம் ரீதியில் நடைபெறும் வன்முறை ஆகியவை இதில் அடங்கும். பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பொது மற்றும் தனியார் துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமற்ற அதிகார உறவுகளின் வெளிப்பாடாகும்.
எனவே, பலவிதமான வன்முறை வடிவங்களையும் அவற்றின் பின்னணியில் உள்ள ஆழமான காரணங்களையும் புரிந்துகொள்வது என்பது முக்கியமானது.
நெருங்கிய நபர்கள் மூலம் நடைபெறும் வன்முறை மற்றும் குடும்ப வன்முறை:
இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இதில் தற்போதைய அல்லது முன்னாள் நெருங்கிய நபர்கள் (பொதுவாக கணவர்) அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலம் நடைபெறும் வன்முறை இதில் அடங்கும். மேலும், இது உடல், பாலியல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் ரீதியிலான தாக்குதல்கள், வற்புறுத்தல், உளவியல் ரீதியான அத்துமீறல் மற்றும் செயல்களை கட்டுப்படுத்துதல் போன்ற செயல்கள் இந்த வகையின் கீழ் வருகின்றன.
2023-ஆம் ஆண்டில், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நபரால் வேண்டுமென்றே ஒரு பெண் கொல்லப்படுகிறாள் அல்லது காயப்படுத்தப்படுகிறாள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த வகையான வன்முறை பெரும்பாலும் ஆணவக் கொலை (Honour killing) என்று குறிப்பிடப்படுகிறது. இது நெருங்கிய நபர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளை வேண்டுமென்றே கொலை செய்வதை உள்ளடக்கியது. ஆணவக் கொலை (குடும்பக் கௌரவத்தை "மீட்டெடுக்க" உறவினர்களால் பெண்கள் கொல்லப்படும்போது) அதற்கு ஒரு உதாரணம். துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறை உட்பட நீண்டகால துஷ்பிரயோகத்திற்குப் பிறகு இதுபோன்ற பல மரணங்கள் நிகழ்கின்றன.
பாலியல் வன்முறை: இது ஒருவரின் அனுமதியின்றி ஒருவர் மீது சுமத்தப்படும் தேவையற்ற பாலியல் செயலாகும். பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்முறையின் விகிதாசார இலக்குகளாக உள்ளனர். இதில் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் மற்றும் கட்டாய பாலியல் துன்புறுத்தல் ஆகியவை அடங்கும். பாலியல் வன்முறை பெரும்பாலும் தனியார் மற்றும் பொதுத் துறைகளில், குறிப்பாக மோதல்கள், கலவரங்கள் மற்றும் பொது அமைதியின்மை ஆகியவற்றின் போது பெண்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் அடிபணியச் செய்யும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு தினசரி சராசரியாக 87 வழக்குகள் என, 2022-ஆம் ஆண்டில் 31,000க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
உளவியல் அத்துமீறல் : இது மன ரீதியான அத்துமீறல் மற்றும் உளவியல் வன்முறை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தோற்றம், சைகைகள் அல்லது கூச்சலிடுதல், அவமானப்படுத்துதல், ஆபாசமான மற்றும் இழிவான கருத்துக்கள் மற்றும் பொது ஏளனம் ஆகியவை அடங்கும். மேலும், உணர்ச்சி ரீதியான வன்முறை பெரும்பாலும் செயல்களை கட்டுப்படுத்துதல் அல்லது ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றுடன் இருக்கும். நிதிக் கட்டுப்பாடு, பொதுவாக பெண்களின் தேவை அல்லது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் சம்பாதித்த பணம் உட்பட பணத்தை செலவழிக்கும் உரிமையை மறுப்பது போன்றவை இதன் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பெண்களின் உரிமைகளை மீறும் மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளும் உளவியல் வன்முறையில் அடங்கும். இதற்கான உதாரணங்களில் பெண் பிறப்புறுப்பு சிதைவு, சூனியக்காரி-முத்திரை, குழந்தை திருமணம், கட்டாய திருமணம், ஆணவக் கொலைகள் மற்றும் விதவை சடங்குகள் ஆகியவை அடங்கும். மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற நடைமுறைகள் தெற்காசிய நாடுகளில் முதன்மையாக நடைபெறும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட வன்முறை: தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையை மாற்றியிருந்தாலும், பெண்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட வன்முறை என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப பயன்பாடு பெண்களுக்கு எதிரான தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இணைய அவதூறு, துன்புறுத்தல், பின்தொடர்தல், சைபர் மிரட்டல், படங்களை உருமாற்றுதல் (மார்பிங்) மற்றும் காணொளிகள் மற்றும் டாக்ஸிங் (ஒரு பெண்ணின் தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கமாக வெளியிடுதல்) ஆகியவை அடங்கும். குறிப்பாக பொது வாழ்வில் உள்ள பெண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். இவை அவர்களின் பாதுகாப்பிற்கான வலுவான டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தாக்கத்தின் பகுப்பாய்வு
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையின் விளைவுகள் தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல், சமூகத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. உடல் காயங்கள் மற்றும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் போன்றைவை பெண்களுக்கு எதிரான வன்முறையின் சில வெளிப்படையான விளைவுகளாகும். அதே நேரத்தில் உளவியல் ரீதியிலான பாதிப்பு குறைவாக விவாதிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிர் பிழைத்தவர்கள் அடிக்கடி மன அழுத்த சூழ்நிலைகளில் சிக்கி, படிப்படியாக கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் முக்கியமான சமூக ஆதரவு இணைப்புகளை இழக்கின்றனர்.
பெண்ணிய எழுத்தாளர் கெர்டா லெர்னரின் கூற்றுப்படி, பாலின சமத்துவமின்மை பெரும்பாலும் ஆண் சக்தி அல்லது ஆதிக்கத்தை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொள்வதன் மூலம் செயல்படுகிறது. இது துஷ்பிரயோகத்தை இயல்பாக்குவதற்கு வழிவகுத்தது. இது பெரும்பாலும் நடைமுறையில் உள்ள கலாச்சார அல்லது சமூக விதிமுறைகளின் ஒரு பகுதியாக நியாயப்படுத்தப்படுகிறது. இது பெண்கள் மருத்துவ அல்லது சட்ட உதவியை நாடுவதை ஊக்கப்படுத்துகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களின் நல்வாழ்வுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அது அவர்களின் நம்பிக்கையை சிதைத்து, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சமூகத்தில் முழுமையாக பங்கேற்கும் திறன்களை சமரசம் செய்துவிடும். ஐ.நா குறிப்பிடப்பட்டுள்ளபடி, "பெண்கள் துஷ்பிரயோகத்தின் உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளின் சுமையாக இருந்தால், அவர்களின் உழைப்பு அல்லது ஆக்கபூர்வமான யோசனைகளை முழுமையாக வழங்க முடியாது" என குறிப்பிட்டுள்ளது.
VAWG-ன் பொருளாதார விளைவுகளும் அதிகமாக உள்ளன. பெண்கள் உலகளாவிய தொழிலாளர் தொகுப்பில் கணிசமான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஆனால், VAWG பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான அவர்களின் திறனைத் தடுக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை உலகப் பொருளாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் மற்றும் ஆண்டுக்கு சுமார் $1.5 டிரில்லியன் என உலக வங்கி மதிப்பிடுகிறது. இந்தியாவில், பெண்கள் 25.1 சதவிகிதம் மட்டுமே பணிபுரிகின்றனர். 2022-ஆம் ஆண்டில் உலக வங்கியின் படி, வன்முறை அவர்களின் பொருளாதார அதிகாரத்திற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது என கண்டறிந்துள்ளது.
நடவடிக்கைக்கான அழைப்பு
இந்தியாவில், சில வன்முறைச் சம்பவங்கள் சீற்றத்தைத் தூண்டி, சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக இருக்கின்றன. எனவே, VAWG-ஐ அகற்றுவதற்கான முயற்சிகள் அதன் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். பாலின சமத்துவமின்மை, கல்வியின்மை மற்றும் போதுமான சட்ட கட்டமைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.
VAWG அணுகுவதற்கு அதன் ஒன்றோடொன்று இணைந்த வடிவங்கள், மூல காரணங்கள் மற்றும் அவற்றை விரிவுபடுத்தும் தற்போதைய அமைப்பு பற்றிய விரிவான புரிதலில் இருந்து உருவாகும் முறையான மாற்றம் தேவைப்படுகிறது. இந்த வன்முறைச் சுழற்சியை உடைக்க, தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான விதிமுறைகளை அகற்றுவதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய பயனுள்ள தலையீடுகள் தேவை.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கங்கள், சமூகம் மற்றும் தனிநபர்களின் கூட்டு முயற்சியை நினைவூட்டுகிறது. கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை இல்லாத எதிர்காலத்தை உருவாக்கலாம். இந்த இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ஒரு நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கு அவசியமாக உள்ளது.
Original article: