இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏன் மேற்கு ஆசியாவில் மோதல்களை அதிகரிக்க வழிவகுக்கிறது? இது மற்ற முன்னேற்றங்களை எவ்வாறு சிக்கலாக்குகிறது மற்றும் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை எவ்வாறு பாதிக்கிறது?
கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்தது. இது பாலஸ்தீன விவகாரத்தில் அனைவரின் கவனத்தியும் ஈர்த்தது. இது போன்ற மோதல்கள், போர் பதற்றத்தை மீண்டும் தீவிரப்படுத்தியது மற்றும் மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுடனான அரபு இயல்புநிலை போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலும் சிக்கலாக்கியது.
ஏமன் மோதல் மற்றொரு எடுத்துக்காட்டு. நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர், பத்தாண்டுக்கு மேலாக நீடித்து வரும் மோதலைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக மாறியது. நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் சிக்கிக் கொண்டு பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் செங்கடலில் கப்பல் தாக்குதலைத் தொடங்கியதால் அமைதிக்கான பேச்சுவார்த்தை மேலும் சிக்கலாக்கப்பட்டது.
நடைமுறையில் உள்ள சூழ்நிலையை ஆராய்வதற்கு முன், ஏமன் மோதலுக்கான காரணத்தைக் பார்க்கலாம்: இந்த மோதல் 2011 அரபு வசந்த எழுச்சியுடன் (Arab Spring) தொடங்கியது, அங்கு பல மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேற்கு ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் 2011 இல் ஏமனில் மோதல் தொடங்கியது. இப்பகுதியில் உள்ள மற்றவர்களைப் போலவே ஏமனியர்களும் சிறந்த வேலைகள், நியாயமான அரசாங்கம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்தப் போராட்டங்களில் இணைந்தனர்.
துனிசியா அல்லது எகிப்து போல இல்லாமல், எதிர்ப்புக்கள் அதிகரித்தவுடன் ஆட்சி கவிழ்ந்தது. ஏமனியர்கள் அப்துல்லா சலேவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு கடுமையாக போராட வேண்டியிருந்தது. வளைகுடா ஒத்துழைப்பு சபை (Gulf Cooperation Council) தலைமையிலான மாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2012-ல் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகினார். அதனை தொடர்ந்து துணை அதிபராக இருந்த அப்தோ ரப்பு மன்சூர் ஹாடி, போட்டியின்றி தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபரானார். தேசிய உரையாடல், அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய தேர்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு வருட மாற்ற காலத்தை மேற்பார்வையிட ஹாடி தேர்வு செய்யப்பட்டார். எவ்வாறாயினும், செப்டம்பர் 2014-ல் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிபர் ஹாடியின் அரசாங்கத்தைக் கவிழ்த்தனர் இதன் காரணமாக பல்வேறு முன்னேற்றங்கள் தடைபட்டது. இந்த நிகழ்வுகள் ஏமனில் நீண்ட கால மோதல்களுக்கு வழிவகுத்தது.
நடந்து கொண்டிருக்கும் மோதல்
ஏமனில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சூடான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 10 நாடுகளின் கூட்டணியை சவுதி அரேபியா தலைமையில் இராணுவ ரீதியாக அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
கூட்டணி மார்ச் 2015-ல் ”தீர்க்கமான புயல் செயல்முறை” (Operation Decisive Storm) என்ற குறியீட்டு பெயரில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. பின்னர் ஏப்ரல் 2015-ல் நம்பிக்கையை மீட்டெடுக்கும் செயல்பாடு (Operation Restoring Hope) என மறுபெயரிடப்பட்டது. முக்கியமான துறைமுக நகரமான ஏடன் உட்பட தெற்கு யேமனில் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை வெளியேற்றுவதே அவர்களின் இலக்காக இருந்தது.
அரேபிய கடலுக்கும் செங்கடலுக்கும் இடையிலான ஒரு முக்கிய பாதையான பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை (Bab al-Mandeb strait ) கட்டுப்படுத்துவதால் ஏடன் முக்கியமானது. இதன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு தினமும் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் அனுப்பப்படுகிறது.
இருப்பினும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை (internationally recognised government (IRG)) மீட்டெடுக்கவோ அல்லது தலைநகரான சனாவிலிருந்து கிளர்ச்சியாளர்களை வெளியேற்றவோ கூட்டணியால் முடியவில்லை. வரும் ஆண்டுகளில், இந்த மோதல் அரபு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றை அழிக்கும். 30 மில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் உலகளவில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை விவரித்தது.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் படி, உணவுப் பற்றாக்குறை, சுகாதாரப் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்பு போன்ற மறைமுக காரணங்களால் 131,000 பேர் உட்பட, மோதலில் சுமார் 233,000 பேர் இறந்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, 18.2 மில்லியன் ஏமன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. 17.6 மில்லியன் மக்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். மேலும், 4.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையில், வடக்கு யேமன் மற்றும் தெற்கு இயக்கத்தில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் அல்லது அல்-ஹிராக் அல்-ஜானூபி, நிலவும் நிச்சயமற்ற சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
ஈரானின் ஆதரவுடன் ஹவுதிகள் வடக்கு ஏமனில் தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்தினர். இதற்கிடையில், தெற்குப் படைகள், குறிப்பாக 2017-ல் உருவாக்கப்பட்ட தெற்கு இடைக்கால கவுன்சில் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன், தெற்கு யேமனின் சுதந்திரத்திற்காக வாதிடுகின்றனர். இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் இன்னும் விரும்பிய முடிவுகளை அடையவில்லை.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ஏமன் நெருக்கடி
2016-ஆம் ஆண்டு முதல் சில சுற்று முடிவில்லாத அமைதிப் பேச்சுக்களைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை 2022 ஏப்ரலில் ஒரு போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அக்டோபர் 2022-ல் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களும், வடக்கே ஏமனை எல்லையாகக் கொண்ட சவுதி அரேபியாவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. மார்ச் 2023-ல், சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த சீனா உதவியது. இது ஏமனுடனான மோதலைத் தீர்க்க உதவும் என்று சில பார்வையாளர்கள் நம்பினர்.
இருப்பினும், அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக "அல்-அக்ஸா செயல்முறை" (Operation Al-Aqsa Storm) பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இஸ்ரேல் "வாள்கள் இரும்பு செயல்முறை" (Operation Swords of Iron) மூலம் எதிர் தாக்குதல் நடத்தியது மற்றும் காசாவில் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள தற்போது நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்து, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர். ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் பதில் தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் அதன் போரின் காரணமாக ஏற்படும் கடுமையான விளைவுகளின் நிமித்தம் ஹூதிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாக ஏமனில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பு மேலும் சிக்கலாகியது.
இந்தியா பற்றிய கவலைகள்
மேற்கு ஆசியாவின் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. நிச்சயமற்ற பாதுகாப்பு சூழ்நிலையில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பே இந்தியாவின் முதன்மையான நோக்கமாகும்.
எனவே, ஏமனில் நிலைமை வன்முறையாக மாறியதால், இந்தியா தனது 4,741 இந்தியர்களையும், 41 நாடுகளைச் சேர்ந்த 1,947 வெளிநாட்டினரையும் ஏப்ரல் 2015-ல் ஆபரேஷன் ரஹத் (Operation Rahat) திட்டத்தின் ஏமனில் இருந்து வெளியேற்றியது. இதையடுத்து, அது தனது தூதரகத்தை ஜிபூட்டிக்கு (Djibouti) மாற்றியது.
ஏமனில் ஐக்கிய நாடுகள் சபையின் போர்நிறுத்த முயற்சிகளுக்கு இந்திய தனது ஆதரவை வழங்கியது. ஏமன் உடனான வரலாற்று மற்றும் நட்புறவு காரணமாக, இந்தியா ஏமன் நாட்டிற்கு உதவ ஏமன் நண்பர்கள் குழுவில் (Friends of Yemen Group) இணைந்தது. கூடுதலாக, இந்தியா ஆகஸ்ட் 2012 மற்றும் மார்ச் 2013-ல் தலா $2 மில்லியன் மதிப்புள்ள அரிசி மற்றும் கோதுமையை மனிதாபிமான அடிப்படையில் வழங்கியது.
ஏப்ரல் 2015-ல் மருத்துவ உதவியை வழங்கியது மற்றும் ஏமன் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 2017-டிசம்பரில் இந்தியா$1 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உதவியை வழங்கியது. மார்ச் 2021-ல், COVAX திட்டத்தின் கீழ் இந்தியா 360,000 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏமனுக்கு இந்தியா வழங்கியது. இருப்பினும், நடந்து கொண்டு இருக்கும் போரின் காரணமாக இந்தியா-ஏமன் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2010-11-ல் $2,258.00 மில்லியன்களாக இருந்த வர்த்தக அளவு 2017-18-ல் $716.52 மில்லியனாக குறைந்துள்ளது.
ஏமனில் இருந்து இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி குறைந்துள்ளது. வளைகுடாவில் இருந்து இந்தியாவின் மொத்த எரிசக்தி இறக்குமதியில் ஏமனின் பங்கு சிறியதாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த மதிப்பிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. 2009-10-ல் வளைகுடாவில் இருந்து இந்தியாவின் மொத்த எரிசக்தி இறக்குமதியில் 2.80 சதவீதமாக இருந்த இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியில் ஏமனின் பங்கு 2015-16ல் பூஜ்யமாகக் குறைக்கப்பட்டது.
கூடுதலாக, தற்போதைய பிராந்திய மோதல்கள் இந்தியாவின் நலன்களை கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அதன் ஆற்றல் தேவைகளை பெரிதும் சார்ந்துள்ளது. வளைகுடா நாடுகள் இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவைகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வழங்குகின்றன.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம் மற்றும் சாபஹர் துறைமுகம் போன்ற முன்முயற்சிகள் மூலம் பிராந்திய இணைப்பு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சி, பிராந்தியத்தில் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள தீவிரம் மற்றும் எண்ணற்ற உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு ஆகியவை பிராந்தியத்திற்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் வல்லரசுகளுக்கும் மிகவும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
original link:
https://indianexpress.com/article/upsc-current-affairs/upsc-essentials/conflicts-in-west-asia-israel-hamas-war-yemen-conflict-upsc-9430046/