நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை "அவமதித்த" (insulting) சர்ச்சை தொடர்ந்த நிலையில், பாபாசாகேப்பை காங்கிரஸ் "மதிக்கவில்லை" (did not respect) என்று பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பலமுறை கூறி வருகின்றனர். மேலும், தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசுகளால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்பதே இவர்களின் வாதமாக உள்ளது.
பாரத ரத்னா விருது எப்படி வழங்கப்படுகிறது?, இதுவரை எத்தனை அரசியல்வாதிகள் அதை பெற்றுள்ளனர்?, எந்த அரசாங்கத்தின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது? என்பதை கீழே குறிப்பிட்டுள்ளது
பாரத ரத்னா விருதுகள் என்றால் என்ன?
பாரத ரத்னா என்பது 1954-ம் ஆண்டு நிறுவப்பட்ட நாட்டின் உயரிய சிவிலியன் விருதாகும். எந்தவொரு துறையிலும் விதிவிலக்காக சிறப்பாக சேவை அல்லது செயல்திறனுக்காக வழங்கப்படுகிறது. இதை, குடியரசுத் தலைவருக்கு பாரத ரத்னா விருதுக்கு தனிநபர்களை பிரதமர் பரிந்துரை செய்கிறார்.
இந்த விருதுக்கு முறையான பரிந்துரைகள் தேவையில்லை. பிரதம அமைச்சர் தான் தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை பெறும் சுதந்திரமானவராக இருக்கிறார். இருப்பினும், நடைமுறையின்படி, உள்துறை அமைச்சகம் (MHA) பல பரிந்துரைகளைப் பெறுகிறது. அவை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகின்றன. இந்த விருதுகளை கையாள்வதற்கான முக்கிய அமைச்சகம் உள்துறை அமைச்சகம் ஆகும்.
பாரத ரத்னா விருதுகளின் எண்ணிக்கை பொதுவாக ஒரு வருடத்தில் அதிகபட்சம் மூன்று மட்டுமே. பெறுநர், அல்லது அவர்கள் சார்பாக யாராவது (அவர்கள் மரணத்திற்குப் பிறகு பெறுபவர்கள் என்றால்), குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழையும் ஒரு பதக்கத்தையும் பெறுவார்கள். இது எந்தவொரு பண மானியத்தையும் கொண்டிருக்கவில்லை.
இதுவரை யாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது?
இதுவரை 53 பேர் விருது பெற்றுள்ளனர். இதில் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிரதமர்களும் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி) அடங்குவர். ராஜீவ் காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களின் பட்டியலில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் ஆதிக்கம் பெற்றுள்ளனர். இவர்களில், முன்னாள் கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராஜ்கோபாலாச்சாரி (1954-ம் ஆண்டில் அவர் சென்னையின் முதலமைச்சராக இருந்தபோது, பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி சுதந்திரா கட்சியை நிறுவினார்), முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ் ராதாகிருஷ்ணன் (குடியரசுத் துணைத்தலைவராக இருந்தபோது வழங்கப்பட்டது), நேரு (அவர் பிரதமராக இருந்தபோது), உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கோவிந்த் பல்லப் பந்த் (அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது), பிசி ராய் (அவர் மேற்கு வங்க முதல்வராக இருந்தபோது), புருஷோத்தம் தாஸ் டாண்டன் (முன்னாள் உத்திர பிரதேச சபாநாயகர், அரசியலில் தீவிரமாக இல்லாத போது வழங்கப்பட்டது), டாக்டர் ராஜேந்திர பிரசாத் (அவரது குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்ததும்), முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் (இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவராக இருக்கும் போது வழங்கப்பட்டது), இந்திரா காந்தி (அவர் பிரதமராக இருந்தபோது), முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி (குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்ததும்) விருதைப் பெற்றவர்கள் ஆவர்.
பாரத ரத்னா மரணத்திற்குப் பின் வழங்கப்படுகிறதா?
பொதுவாக ஒருவரின் மரணத்திற்குப் பிறகு விருது வழங்கப்படுவதில்லை. இருப்பினும், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், இது இதுவரை 18 பேருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
கட்சி பிளவுக்குப் பிறகு Congress-O (இந்திரா காந்தி அல்லாத பிரிவு) என்ற பிரிவில் சேர்ந்த ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ், அவர்கள் 1976-ம் ஆண்டு அவசரநிலையின் போது மரணத்திற்குப் பின் விருதைப் பெற்றார். இது, 1988-ம் ஆண்டில், ராஜீவ் காந்தி அரசாங்கத்தால், மரணத்திற்குப் பின் எம்.ஜி. ராமச்சந்திரன் (அதிமுக நிறுவனர்) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், பி.வி. நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், கர்பூரி தாக்கூர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்ற பிற அரசியல்வாதிகளுக்கு மரணத்திற்குப் பின் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அம்பேத்கருக்கு பாரத ரத்னா எப்போது கிடைத்தது?
டாக்டர் அம்பேத்கர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து அரசியல் பிரிவுகளுக்கும் ஏன் முக்கியத்துவம் பெற்றார் என்பது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது.
இதில், 1984-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி (Bahujan Samaj Party (BSP)) நிறுவப்பட்டது. இது, 1983-ம் ஆண்டில் தலித் ஷோசித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி (Dalit Shosit Samaj Sangharsh Samiti(DS-4)) மற்றும் 1982-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கன்ஷி ராம் அவர்களின் ’Chamcha Yug’ (கைப்பாவைகளின் காலகட்டம்) என்ற புத்தகம், டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவாக நிலைமையை மாற்றத் தொடங்கின. பகுஜன் சமாஜ் கட்சி மகாத்மா காந்தியை விமர்சிக்கத் தொடங்கியது மற்றும் அம்பேத்கரை பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உண்மையான ஹீரோவாகக் காட்டத் தொடங்கியது. பகுஜன் சமாஜ் கட்சி படிப்படியாக தான் போட்டியிட்ட பல இடங்களில் ஏறக்குறைய 10 சதவீத வாக்குகளைப் பெறத் தொடங்கியது. இது பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களின் வாக்காளர்கள் புதிய கட்சியை உறுதியாக ஆதரிப்பதாக ஒரு தெளிவான குறியீடாக அனுப்பியது. இந்த அணுகுமுறை, பிற நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளை கவலையடையச் செய்தது. பின்னர் அவர்கள் SC/ST வாக்குகளைப் பெற அம்பேத்கரை அதிகமாகக் கொண்டாடத் தொடங்கினர்.
1989 டிசம்பரில் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள அரசு அமைந்தபோது, ராம்விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் பங்கு வகித்தனர். 1990-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கருக்கு அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கியது. செப்டம்பர் 24, 1990 அன்று பாஜக தலைவர் எல்.கே. அத்வானி சமஸ்திபூரில் (பீகார்) கைது செய்யப்படும் வரை பாஜக இந்த அரசாங்கத்தை வெளியில் இருந்து ஆதரித்தது.
காங்கிரஸில் இருந்து விலகி 1977-ம் ஆண்டில் பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு, 1991-ம் ஆண்டில் சந்திரசேகர் தலைமையிலான அப்போதைய ஜனதா தளம் அரசால் வழங்கப்பட்டது. குல்சாரிலால் நந்தாவிற்கு ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1997-ம் ஆண்டில் விருதை வழங்கியது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆகிய இரு முக்கிய காங்கிரஸ்காரர்களுக்கு நரேந்திர மோடி அரசால் பாரத ரத்னா வழங்கப்பட்டது. மோடி அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் 10 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கியுள்ளது. 2015-ம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மதன் மோகன் மாளவியா மற்றும் 2019-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர்களில் நானாஜி தேஷ்முக் ஆகியோர் விருது பெற்றவர்களில் சிலர் அடங்குவர்.
கடந்த ஆண்டு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பா.ஜ.க, தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், சோசலிஸ்ட் தலைவர் கர்பூர் தாக்கூர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் பத்ம விருதுகளை அறிவிக்கிறார். இவை மூன்று வகைகளில் வழங்கப்படுகின்றன. ஒன்று, பத்ம விபூஷன் (விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக), இரண்டு பத்ம பூஷன் (உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவை) மற்றும் மூன்று பத்மஸ்ரீ (சிறந்த சேவைக்காக) போன்ற மூன்று அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவை வழங்கப்படுகின்றன.
உண்மையில், இந்திய அரசாங்கம் 1954-ம் ஆண்டில் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் ஆகிய இரண்டு சிவிலியன் விருதுகளை நிறுவியது. அதற்கு அடுத்தாற்போல், பஹேலா வர்க் (Pahela Var), துஸ்ரா வர்க் (Dusra Varg) மற்றும் திஸ்ரா வர்க் (Tisra Varg) என மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. இவை பின்னர் 1955-ம் ஆண்டில் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மறுபெயரிடப்பட்டன.
இப்போது, இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் திறக்கப்படும் பிரத்யேக இணையதளம் உள்ளது.
விருது பெற்றவர்கள் விருதுகளை முன்னொட்டு/பின்னொட்டாகப் பயன்படுத்தலாமா?
இல்லை. அரசியலமைப்பின் பிரிவு 18 (1) இன் படி, விருதை பெறுபவர்கள் அவர்களின் பெயரில் முன்னொட்டாகவோ (prefix) அல்லது பின்னொட்டாகவோ (suffix) பயன்படுத்த முடியாது என்றும், "இராணுவ அல்லது கல்வி வேறுபாடாக இல்லாத எந்த தலைப்பும் அரசால் வழங்கப்படாது" என்று அரசியலமைப்புப் பிரிவு குறிப்பிடுகிறது.
இருப்பினும், விருது பெறுபவர், உள்துறை அமைச்சகத்தின் (MHA) கூற்றுப்படி, "குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட பாரத ரத்னா" அல்லது "பாரத ரத்னா விருது பெற்றுக்கொள்பவர்" என்று அவர்களின் பயோடேட்டா (biodata) அல்லது லெட்டர்ஹெட்டில் (letterhead) எழுதலாம். மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்றவர்களை உள்துறை அமைச்சகத்தின் படி முன்னுரிமைக்கான அட்டவணையில் குறிப்பிடுகிறது. இதில் அவர்களின் சொந்த மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், முன்னாள் பிரதமர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் உள்ளனர்.