பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (ZERO FIR) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், குற்றச் சம்பவம் எங்கு நடந்தாலும் யார் வேண்டுமானாலும் எந்த காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கையை (First Information Report) பதிவு செய்யலாம். இது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க உதவும்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) 2023, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita) 2023, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம், 2023 (Bharatiya Sakshya Adhiniyam) ஆகிய சட்டங்கள் திங்கள்கிழமை, ஜூலை-1 இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டங்கள் பிரிட்டிஷ் கால இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது. முக்கிய சிறப்பம்சங்கள், பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (Zero FIR), இணையவழி காவல்நிலையப் புகார் பதிவு, மின்னணு வழிமுறைகள் மூலம் அழைப்பாணைகள் மற்றும் அனைத்து கடுமையான குற்றங்களுக்கும் குற்றக் காட்சிகளின் கட்டாய காணொளிப்பதிவு ஆகியவை அடங்கும்.
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒருவர் எவ்வாறு முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) பதிவு செய்வார்?
புதிய சட்டங்களின்படி, காவல்நிலையத்திற்குச் நேரில் செல்வதற்குப் பதிலாக மின்னணுத் தொடர்புகளைப் பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் பற்றி புகாரளிக்கலாம். இது புகாரளிப்பதை எளிதாகவும் வேகமாகவும் செய்கிறது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் பெரிதும் உதவுகிறது. பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது சட்ட நடவடிக்கையைத் தொடங்குவதில் தாமதத்தைத் தவிர்க்கிறது மற்றும் குற்றம் நடந்ததைப் பற்றி உடனடியாகப் புகாரளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன?
தாங்கள் விரும்பும் நபருக்கு அவர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி தெரிவிக்க, தனிநபர்களுக்கு இப்போது உரிமை உள்ளது. இது அவர்களுக்கு உடனடி ஆதரவையும் உதவியையும் பெறுவதை உறுதி செய்கிறது. காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் கைது விவரங்கள் முக்கியமாகக் காட்டப்படும். இதன்மூலம் கைது செய்யப்பட்ட நபரைப் பற்றிய முக்கியத் தகவல்களை குடும்பத்தினரும் நண்பர்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
குற்றம் நடந்த காட்சியை காணொளிப் பதிவு செய்யவேண்டும்
தடயவியல் நிபுணர்கள் (forensic experts) இப்போது கடுமையான குற்றங்கள் நடந்த இடங்களுக்குச் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். கூடுதலாக, குற்றச் செயல்கள் நடந்த இடங்களில் சாட்சியங்களை சேகரிப்பது, குற்றங்களை மறைப்பதை தடுக்க காணொளிப் பதிவு செய்ய வேண்டும். இந்த இரட்டை அணுகுமுறை விசாரணைகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், நியாயமான நீதிக்கு வழிவகுக்கிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகள் பற்றி என்ன?
புதிய சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, தகவல்களைப் பதிவு செய்த இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் 90 நாட்களுக்குள் அவர்களின் வழக்கு முன்னேற்றம் குறித்த வழக்கமான அறிவிப்புகளைப் பெற உரிமை உண்டு. இது இந்த புதிய சட்டங்கள் சட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது.
புதிய சட்டங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதியளிக்கிறது. இது அத்தியாவசிய பராமரிப்புக்கான உடனடித் சேவை வழங்குவதை உறுதி செய்கிறது. கடினமான காலங்களில், பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
அழைப்பாணைகளை (Summons) மின்னணு முறையில் வழங்கப்படலாம்
அழைப்பாணைகள் இப்போது மின்னணு முறையில் வழங்கப்படலாம். இந்த செயல்முறைகளை சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்தலாம். ஆவணங்கள் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம் மற்றும் திறமையான தகவல்தொடர்புகள் பெறுவதை உறுதி செய்யலாம்.
சரியான நீதி வழங்கல்
நீதிமன்றங்கள் இப்போது இரண்டு ஒத்திவைப்புகளை (Courts adjournment) மட்டுமே அனுமதிக்கின்றன. இது வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தடுக்கிறது. சரியான நேரத்தில் நீதி வழங்குவதை உறுதி செய்கிறது.
சாட்சி பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme)
சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும், சட்ட நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சாட்சி பாதுகாப்புத் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் என்று புதிய சட்டங்கள் கோருகின்றன. பலாத்கார வழக்குகளில், கூடுதல் பாதுகாப்பை வழங்கவும், விசாரணையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் வீடியோ மூலம் காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும்.
காவல் நிலையங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் யார்?
பெண்கள், 15-வயதுக்குட்பட்டவர்கள், 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அல்லது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காவல் நிலையங்களுக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபடியே காவல்துறையினரின் உதவியைப் பெறலாம்.
குற்றங்களுக்கு அபராதம்
புதிய சட்டங்கள் சில குற்றங்களின் தீவிரத்தன்மையுடன் பொருந்தக்கூடிய அபராதங்களை சரிசெய்கிறது. இது நியாயமான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்கிறது. எதிர்கால குற்றங்களைத் தடுக்கிறது மற்றும் சட்டத்தின்மீது பொது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது.