தேர்தல்களின் போது, இந்திய அரசியலமைப்பில் இடஒதுக்கீடு குறித்து விவாதம் ஏற்படுகிறது. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்க முடியுமா? SC, ST, OBCக்கான இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்கள் எப்போதாவது இடஒதுக்கீடு பெற்றிருக்கிறார்களா? SCகளுக்கான இடஒதுக்கீட்டை குறிப்பிட்ட மதக் குழுக்களுக்குள் கட்டுப்படுத்துவது மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அர்த்தமா?
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து இந்திய அரசியலமைப்பு என்ன சொல்கிறது
இந்திய அரசியலமைப்பு அதன் கவனத்தை அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது என்ற சமத்துவத்தில் இருந்து மாற்றியது, இது பங்கீட்டில் கவனம் செலுத்துகிறது மற்றும் சில குழுக்களுக்கு வேறுபட்ட ஒதுக்கீட்டை உள்ளடக்கியது. சமத்துவம் என்பது பல்வேறு அம்சங்கள் மற்றும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு மாறும் கருத்து என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாரம்பரிய மற்றும் குறுகிய பார்வைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று 1973 இல் ஈ பி ராயப்பா vs தமிழ்நாடு மாநிலம் (E P Royappa vs State Of Tamil Nadu) வழக்கில் கூறப்பட்டது.
முறையான சமத்துவம், விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை சில சமயங்களில் வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். உறுதியான செயல் இந்த கணிசமான சமத்துவத்தின் கருத்தை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு ஆரம்பத்தில் 'சிறுபான்மையினர்' (minorities) என்ற சொல்லை அரசியலமைப்பில் 296 வது பிரிவில் இருந்து நீக்கி பிரிவு 335-ல் சேர்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் பிரிவு 16(4) அடங்கும். போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு சேவைகளில் இடஒதுக்கீடுகளை உருவாக்க இந்தக் பிரிவு அனுமதிக்கிறது.
கூடுதலாக, முதல் அரசியலமைப்பு திருத்தம் பிரிவு 15-ல் 4-ஐச் சேர்த்தது. இந்த சட்டப்பிரிவு, சமூகரீதியில் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது.
பிரிவு 15, மதம், சாதி, பாலினம், இனம், மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களுக்கு எதிராக அரசு பாகுபாடு காட்டுவதைத் தடுக்கிறது. 1975ல் கேரள மாநிலம் vs என்.எம்.தாமஸ் (State of Kerala vs N M Thomas) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, இடஒதுக்கீடு என்பது 15(1) மற்றும் 16(1) ஆகியவற்றில் உள்ள சமத்துவம்/பாகுபாடு அல்லாத பிரிவுகளுக்கு விதிவிலக்காக அல்ல, மாறாக சமத்துவத்தின் நீட்டிப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.
சட்டப்பிரிவு 15 மற்றும் 16-ல், முக்கிய வார்த்தை "மட்டும்" (only). இதன் பொருள் ஒரு மதம், இனம் அல்லது சாதிக் குழுவை 46வது பிரிவின் கீழ் "பலவீனமான பிரிவாக" (weaker section) அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அடையாளப்படுத்தினால், அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பு ஒதுக்கீடைப் பெறலாம்.
சில முஸ்லீம் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக அல்ல, ஆனால் இந்த வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் வருவதால். OBCகளுக்குள் ஒரு துணை ஒதுக்கீட்டை உருவாக்கி, பட்டியல் வகுப்பினர் (SCs), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) ஆகியோருக்கான ஒதுக்கீட்டைக் குறைக்காமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பல மாநிலங்களில் நடைமுறைகளைப் பின்பற்றி, மண்டல் கமிஷன் பல முஸ்லிம் வகுப்பினரை ஓபிசி பட்டியலில் சேர்த்தது. 1992-ல் இந்திரா சாவ்னி (Indra Sawhney) வழக்கில் உச்சநீதிமன்றம், எந்தவொரு சமூகக் குழுவும், அதன் அடையாளக் குறியைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களைப் போன்ற அதே தரத்தின்படி பிற்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படுவதற்கு உரிமை உண்டு என்று கூறியது.
1936ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்-கொச்சி அரசு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. 1952 வாக்கில் இது வகுப்புவாரி இடஒதுக்கீடாக பரிணமித்தது. மக்கள்தொகையில் 22% ஆக இருந்த முஸ்லிம்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்க்கப்பட்டனர்.
1956ஆம் ஆண்டில் கேரளா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, அனைத்து முஸ்லிம்களும் எட்டு துணை ஒதுக்கீட்டு வகைகளில் ஒன்றில் வைக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கான ஒரு குறிப்பிட்ட துணை ஒதுக்கீடு 10% ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது பின்னர் 12% ஆக உயர்த்தப்பட்டது.
மண்டல் கமிஷனின் அறிக்கை, இந்து முறைகளுடன் ஒப்பிடுவதன் அடிப்படையில், முஸ்லிம்களில் 52% மட்டுமே ஓபிசிக்கள் என்று தவறாகக் கூறியது. இருப்பினும், கேரளா மற்றும் கர்நாடகாவில், இந்து மகாராஜாக்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து, முஸ்லீம்கள் முக்கியமாக "தீண்டத்தகாத" மற்றும் பிற "தாழ்ந்த" சாதிகளில் இருந்து வந்தவர்களாக பார்க்கப்பட்டனர். இதன் விளைவாக, அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்க்கப்பட்டனர்.
கர்நாடகா: மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசின் முடிவு
1990ஆம் ஆண்டில், நீதிபதி ஓ சின்னப்பா ரெட்டி (Justice O Chinnappa Reddy) தலைமையிலான கர்நாடகாவின் மூன்றாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையம், மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் போலவே முஸ்லிம்களும் பின்தங்கியவர்களாக வகைப்படுத்தப்படுவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தது. பின்னர், 1995 ஆம் ஆண்டில், இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர் எச்.டி.தேவகவுடாவின் ஆட்சிக் காலத்தில், ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இந்த இடஒதுக்கீட்டில் மத்திய ஓபிசி பட்டியலில் பட்டியலிடப்பட்ட முப்பத்தாறு முஸ்லிம் சாதிகளும் அடங்கும்.
2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான பசவராஜ் பொம்மையின் அரசாங்கத்தின் முடிவை தேவகவுடா விரும்பவில்லை. பின்னர், பொம்மையின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தமிழகம்: பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்
2007-ல் கருணாநிதி தலைமையிலான அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. 1985-ல் ஜே.ஏ.அம்பாசங்கர் (J A Ambasankar (1985)) தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓபிசி 30% இடஒதுக்கீட்டிற்குள் ஒரு துணை வகையை சேர்க்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த துணைப் பிரிவு குறிப்பாக முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியது, ஆனால் இது உயர் சாதி முஸ்லிம்களை உள்ளடக்கவில்லை. ஆரம்பத்தில், சில கிறிஸ்தவ சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டையும் சட்டம் உள்ளடக்கியது. இருப்பினும், கிறிஸ்தவர்களே தங்களுக்கு இந்த இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கூறினர் அதனால் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்பட்டது.
ஆந்திரா & தெலுங்கானா
1994ஆம் ஆண்டில், 112 பிற சமூகங்கள் / சாதிகளுடன் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான கேள்வி ஆந்திர பிரதேச பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டில், சிறுபான்மையினர் நல ஆணையரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி பின்தங்கிய நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதி அரசாங்கம் அவர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கான ஆந்திர ஆணையத்தை அரசு கலந்தாலோசிக்காததால் இந்த ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சிறுபான்மையினர் நல அறிக்கை குறைபாடுடையது என்று நீதிமன்றம் கண்டறிந்தது, ஏனெனில் அது பின்தங்கிய நிலையை தீர்மானிப்பதற்கான அளவுகோல்களை ஏற்படுத்தவில்லை. இந்த தீர்ப்பு 2004 இல் டி முரளிதர் ராவ் vs ஆந்திர மாநில வழக்கில் (T Muralidhar Rao vs State of AP) வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அல்லது அவர்களில் சில குழுக்களுக்கு சிறப்பு சலுகை அளிப்பது அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மை என்ற யோசனைக்கு எதிரானது அல்ல என்று நீதிமன்றம் கூறியது. எம்.ஆர்.பாலாஜி vs மைசூர் அரசு (M R Balaji vs State of Mysore) 1962 என்ற முந்தைய வழக்கை அவர்கள் குறிப்பிட்டனர், அங்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும் 15 (4) அல்லது 16 (4) பிரிவுகளிலிருந்து பயனடையலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
எம்.ஆர்.பாலாஜி வழக்கில், சில மாநிலங்களில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது சமணர்கள் மத்தியில் சமூக ரீதியாக பின்தங்கிய குழுக்கள் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. எனவே, இந்துக்களுக்கு சாதி முக்கியமானதாக இருந்தாலும், மற்ற குழுக்களுக்கான சமூகப் பின்தங்கிய நிலையை தீர்மானிக்க அது மட்டுமே காரணியாக இருக்க முடியாது.
கர்நாடகா, கேரளா போன்ற சில மாநிலங்களில் முஸ்லிம்கள் சமூக ரீதியாக பின்தங்கியவர்களாக கருதப்படலாம் என்று 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் கூறியது.
2004-ம் ஆண்டில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, ஆந்திர அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை இந்த விஷயத்தை ஆராயுமாறு கேட்டுக்கொண்டது. 2005-ம் ஆண்டில், ஆணையத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பின்தங்கிய அந்தஸ்தையும் 5% இடஒதுக்கீட்டையும் வழங்கும் ஒரு சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
பி.அர்ச்சனா ரெட்டி vs ஆந்திர அரசு (B Archana Reddy vs State of AP) 2005 என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் அவசர சட்டத்தை ரத்து செய்தது. காரணம், எந்த முஸ்லிம்கள் சமூக ரீதியில் பின்தங்கியவர்கள் என்பதை அடையாளம் காணாமல் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது.
உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சமூகப் பின்தங்கிய நிலைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யும் முஸ்லிம்களை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக வகைப்படுத்துவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று கூறியது. முஸ்லீம் சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மையை ஆணைக்குழு அங்கீகரிக்கத் தவறியதால், அதன் அறிக்கை மற்றும் அதன் அடிப்படையிலான கட்டளை நிராகரிக்கப்பட்டது.
பின்னர் இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் மாநில அரசு திருப்பி அனுப்பியது. அதன் அறிக்கைகளின் அடிப்படையில், துணி துவைப்பவர்கள் (washermen), கசாப்புக் கடைக்காரர்கள் (butchers), தச்சர்கள் (carpenters), தோட்டக்காரர்கள் (gardeners) மற்றும் முடி திருத்துபவர்கள் (barbers) போன்ற குறிப்பிட்ட தொழில்களைக் கொண்ட 14 முஸ்லிம் சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2007-ல் நிறைவேற்றப்பட்டது. இந்துக்களிடையே உள்ள இந்த தொழில் குழுக்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சயீத் (Saiyed), முஷைக் (Mushaik), முகலாயர் (Mughal), பதான் (Pathan), இரானி (Irani), அரேபியர் (Arab), போரா (Bhora), கோஜா (Khoja), குட்ச்சி-மேமன் (Cutchi-Memon) போன்ற 10 'உயர்ந்த' முஸ்லீம் சாதிகளை இடஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து சட்டம் விலக்கியுள்ளது.
ஆனால் இந்த சட்டமும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அதன் அரசியலமைப்புத்தன்மை குறித்த இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறது
2014-ல் ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு, தெலுங்கானாவில் உள்ள டிஆர்எஸ் அரசு 2017-ல் ஒரு சட்டத்தை இயற்றியது. இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 12% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. ஜி.சுதிர் கமிஷன் (G Sudhir Commission), பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலை மற்றும் நில உரிமை ஆகியவற்றில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் இந்துக்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதை சுதிர் கமிஷன் கண்டறிந்தது. இந்த முன்மொழிவு 1992-ம் ஆண்டு இந்திரா சஹானி (Indra Sawhney judgment) தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50% இட ஒதுக்கீட்டு வரம்பைத் தாண்டியது. எனவே, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
சச்சார், மிஸ்ரா பேனல்கள்
2006-ம் ஆண்டில் நீதிபதி ராஜீந்தர் சச்சார் கமிட்டி (Justice Rajinder Sachar Committee), முஸ்லிம் சமூகம் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரைப் போலவே பின்தங்கியதாகவும், முஸ்லிம் அல்லாத ஓபிசிக்களை விட மிகவும் பின்தங்கியதாகவும் கண்டறிந்தது. 2007 ஆம் ஆண்டில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு (Justice Ranganath Misra Committee) முஸ்லிம்களுக்கு 10% உட்பட சிறுபான்மையினருக்கு 15% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில், 2012ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தது. தற்போதுள்ள ஓபிசி ஒதுக்கீட்டான 27%-க்குள் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிறுபான்மையினருக்கும் 4.5% இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்தக் கூடாது என்று அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. பின்னர், ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது, உயர் நீதிமன்றத்தின் முடிவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
`அரசியல் சாசனத்தின் 341-வது பிரிவும், 1950-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவும் இந்துக்களை மட்டுமே தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியும் என்று குறிப்பிடுகின்றன. 1956-ம் ஆண்டில், சீக்கியர்கள் எஸ்.சி.களில் சேர்க்கப்பட்டனர். 1990-ல் பௌத்தர்களும் சேர்க்கப்பட்டனர். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதை மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் ஒரு வடிவமாகப் பார்க்கலாம்.
பேராசிரியர் பைசான் முஸ்தபா, துணைவேந்தர், சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பாட்னா
Original article: