பணம் மற்றும் பொருள் வழங்கும் திட்டங்கள் நலத்திட்ட-முதலீட்டு முரண்பாட்டை (welfare-investment dilemma) உருவாக்குகின்றனவா? -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

 பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு ஒரே நேரத்தில் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. பெண்கள் இறுதியாக நலத்திட்ட கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர். மேலும், நிதி நெருக்கடியில் இருக்கும்போதுகூட மாநிலங்கள் அவற்றை தருவதாக உறுதியளிக்கின்றன. இருப்பினும், அத்தகைய உறுதிமொழிகள் விரிவடையும் போது, ​​ஒரு கேள்வி எழுகிறது. எதிர்கால முதலீடுகளுக்குத் தேவையான நிதியைப் பயன்படுத்தாமல் நலத்திட்டங்கள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கமுடியுமா?


மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஆளும் கட்சியின் மூன்று கூட்டணிக் கட்சிகளான பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை அரசாங்கத்தின் பிரபலமான முதன்மைத் திட்டமான முதலமைச்சரின் மஜ்ஹி லட்கி பஹின் யோஜனாவுக்குப் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) பெருமை தேடி கொள்கின்றனர்.


பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 சதவீத வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு மாநிலத்தில், அவர்களைக் கவரும் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முறை ஒரு பெரிய நடைமுறைப் போக்கின் ஒரு பகுதியாகும், இது சமீபத்தில் பீகாரில் காணப்பட்டது. அங்கு முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் மகிளா ரோஜ்கர் யோஜனா (Mukhyamantri Mahila Rojgar Yojana (MMRY)) திட்டத்தை அறிவித்தார்.


பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் அதிகரிப்பு இரண்டு உண்மைகளை வெளிக்காட்டுகிறது: பெண்கள் நலக் கொள்கைகளின் முக்கிய நபர்களாக மாறிவிட்டனர். மேலும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் மாநிலங்கள் தேவையான நிதியை அளிப்பதாக உறுதியளிக்கின்றன. அதே நேரத்தில், இத்தகைய நலத்திட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நேரடி பரிமாற்றங்கள், பெரும்பாலும் நிதி சார்ந்த சிக்கலைக் குறைத்து, நீண்டகால வளர்ச்சியில் முதலீடு செய்யும் திறனை நீட்டிக்கின்றன.


இந்த உறுதிமொழிகள் விரிவடையும்போது, ​​ஒரு கேள்வி எழுகிறது: நாளைய முதலீடுகளுக்குத் தேவையான நிதி இடத்தைக் கட்டுப்படுத்தாமல் நலத்திட்டங்கள் தொடர்ந்து வளர முடியுமா? ஆராய்வோம்.


இந்தியா எவ்வாறு ஒரு கலப்பின நலத்திட்ட அரசை உருவாக்கியது


கடந்த பத்தாண்டுகளில், நியாய விலைக் கடைகள் மற்றும் பொதுப்பணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நலத்திட்ட அமைப்பிலிருந்து, டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட வருமான ஆதரவு மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு இந்தியா நகர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, பல மாநிலங்கள் முன்பைவிட மிகப் பெரிய அளவில் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பத் தொடங்கியபோது, ​​இந்த மாற்றம் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியது.


இதனால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் நலத்திட்ட அமைப்பு நீண்ட தூரம் வந்துவிட்டது. அப்போது, ​​அரசாங்கம் பட்டினியை (hunger) எதிர்த்துப் போராடுவதிலும் அடிப்படை பொருளாதார பாதுகாப்பை (economic security) வழங்குவதிலும் கவனம் செலுத்தியது. அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (Directive Principles) - சமத்துவமின்மையைக் குறைத்தல் பிரிவு 38 மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் பிரிவு 41 - உணவு விநியோகம், பொதுப்பணிகள் மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நலத்திட்ட மாதிரியை வடிவமைத்தன. பற்றாக்குறை மற்றும் பலவீனமான சந்தைகளை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், பொது விநியோக முறை (Public Distribution System (PDS)), நில சீர்திருத்தங்கள் மற்றும் ஆரம்பகால வேலைவாய்ப்பு திட்டங்கள் முக்கியக் கருவிகளாக மாறின.


காலப்போக்கில், பொதுநலத் திட்டங்கள் இரண்டு முக்கிய வழிகளில் வளர்ந்தது. முதலில், அத்தியாவசியப் பொருட்களைப் பொருள் பரிமாற்றங்கள் வழங்கின: அவை பொது விநியோக முறை மூலம் மானிய விலையில் தானியங்கள், பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)) திட்டத்தின் கீழ் சமைத்த உணவு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY)) மூலம் வீட்டுவசதி மற்றும் பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து கருவிகள் ஆகும். வீட்டு வருமானம் குறைந்தபோது, ​​இந்தத் திட்டங்கள் குடும்பங்களுக்கு அடிப்படை ஆதரவை வழங்கின.


பின்னர் பணப் பரிமாற்றங்கள் வந்தன. ஆதார், ஜன்-தன் மற்றும் நேரடி பணப் பரிமாற்றத்தால் சாத்தியமானது. இந்தத் திட்டங்கள் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்புகின்றன, அவர்கள் தேவைக்கேற்ப

அதைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. உதாரணமாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது; முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியங்கள் நேரடி வங்கி பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலமாக  வழங்கப்படுகின்றன.


இந்த இரண்டு வடிவங்களும் – நிதி மற்றும் பொருள் உதவி – சேர்ந்து ஒரு கலப்பு நல அரசை (Hybrid Welfare State) உருவாக்கியுள்ளன. இது நேரடியாக ஒவ்வொரு குடும்பத்தோடும் இணைக்கப்பட்டுள்ளது. சில நிதி மற்றும் பொருள் சார்ந்த திட்டங்களை ஆராய்வோம்.


ஒதுக்கீடு, விநியோகம், நிலைப்படுத்தல்


ஒவ்வொரு நலத்திட்ட அமைப்பின் மையக் கருத்தும் எளிமையானது: அனைவரும் கண்ணியத்துடன் வாழ சமூகம் அதன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பொருளாதார நிபுணர் Richard A Musgrave’s-ன் பொது நிதிக் கோட்பாடு, அவரது “Theory of Public Finance” (1959) என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது அரசின் மூன்று அடிப்படைக் கடமைகள் மூலம் இதை விளக்குகிறது: அவை,



ஒதுக்கீடு (Allocation) – அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல்.


விநியோகம் (Distribution) – உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவையான ஆதரவு அளித்தல்.


நிலைப்படுத்துதல் (Stabilisation) – கடினமான காலங்களில் வாழ்க்கையை நிலையாக வைத்திருத்தல் போன்றவையாகும்.


இந்தக் கடமைகள் இந்தியாவின் பொதுநலத் திட்டங்களில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன, அவை:


பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY))

கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. மிகக் கடினமான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது.


பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மாண் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN))


2021-ல் மதிய உணவுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பால்வகுப்பு (pre-primary) முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவு வழங்குகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


சக்ஷம் ஆங்கன்வாடி மற்றும் போஷன் (Saksham Anganwadi and POSHAN) 2.0

குழந்தைகள், பருவ வயது பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டக்குறைபாட்டைப் போக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டமாக செயல்பட்டு வருகிறது.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமீன் & நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Gramin and Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-G/U))


“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்துடன், ஊரக மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சொந்த வீடு கிடைக்கச் செய்யும் திட்டமாகும்.


தீன்தயாள் அந்த்யோதய யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission (DAY-NRLM)

ஏழைக் குடும்பங்கள் சுயதொழில் அல்லது திறமையான வேலைகள் மூலம் வாழ்க்கையை நடத்த உதவும் ஒரு திட்டமாக இந்தத்திட்டம் உள்ளது. ஏழை குடும்பங்களை சுய உதவிக் குழுக்களாக (Self Help Groups (SHGs)) ஒருங்கிணைத்து, கற்றல்-சம்பாதித்தல்-சேமித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY))


இது புகை சூழ்ந்த சமையலறைகளில் வேலை செய்வதிலிருந்தும், விறகு சேகரிக்க நீண்டதூரம் நடந்து செல்வதிலிருந்தும் பெண்களைக் காப்பாற்றுகிறது.


இந்த திட்டங்கள் அனைத்திற்கும் 3.4 லட்சம் கோடி ரூபாயைக் கடக்கின்றன. இது மத்திய பட்ஜெட்டில் 7 சதவீதமாகும். மேலும், மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.


பணப் பரிமாற்றத்தின் (Cash Transfer) தாக்கம்: எண்ணிக்கை மட்டுமே முழுக் கதையைச் சொல்லுமா?


நலத்திட்டங்களில் பணப் பரிமாற்றங்கள் கூடுதல் ஆதரவை வழங்குகின்றன. பணப் பரிமாற்றத் திட்டங்களின் சில எடுத்துக்காட்டுகள்:


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi scheme (PM-KISAN)) என்பது விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாயச் செலவுகளை ஈடுகட்ட பணத்தை வழங்கும் ஒன்றிய அரசால் நிதியளிக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இது விவசாயிகள் கடனில் இருந்து விடுபட்டு, அவர்களின் நிலத்தை உற்பத்தித் திறன் மிக்கதாக வைத்திருக்க உதவுகிறது.


தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme (NSAP))


இது முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இது அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளுக்கு ஒரு சிறிய ஆனால் நிலையான வருமானத்தை அளிக்கிறது.

73,000 கோடி மதிப்புடைய இந்தப் பணத் திட்டங்கள் பட்ஜெட்டில் 1.5 சதவீதமாகும். மொத்தத்தில், இந்த ஒன்றிய அரசின் பணமும், நலத்திட்டங்களுக்கான பொருட்களும் 3.85 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளன, இது அரசாங்க செலவினங்களில் ஏறக்குறைய 8.5 சதவீதமாகும்.


அவற்றின் உண்மையான தாக்கம் எண்ணிக்கையில் அல்ல, மாறாக அன்றாட தருணங்களில் உணரப்படுகிறது: நன்றாக சாப்பிடும் குழந்தை, சுத்தமான காற்றை சுவாசிக்கும் தாய், கடனைத் தவிர்க்கும் விவசாயி, பாதுகாப்பாக உணரும் குடும்பம் - இது Musgrave’s-ன் கருத்தின் எளிய உண்மையைக் காட்டுகிறது: பொது நிதி என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, மக்களுக்கு பாதுகாப்பு, தேர்வுகள் மற்றும் நம்பிக்கையை வழங்குவது பற்றியதாகும்.


பெண்களை மையமாகக் கொண்ட பணப் பரிமாற்றங்களின் புதிய அலை


இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு ஒரு குடும்பத்தையே மாற்றி அமைக்கும் என்பதை உணர்ந்த பிறகு, மாநில அரசுகள் பெண்களுக்கான மிகவும் நேரடியான உதவிகளை சோதனை முயற்சியாகத் தொடங்கின. பெண்களுக்கான புதிய அலை பணப் பரிமாற்றத் திட்டங்கள் 2020-ல் தொடங்கின. அசாம் மாநிலம் “ஒருனோடோய்'” (Orunodoi) என்ற முதல் பெரிய அளவிலான, அனைவரையும் உள்ளடக்கிய (universal-style) பெண்களுக்கான பண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2021-ல் மேற்கு வங்கம் “லக்ஷ்மீர் பண்டார்” (Lakshmir Bhandar) திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​அந்த யோசனை பரவலாகப் பரவி மிகவும் பிரபலமடைந்தது.


இன்று, 13 மாநிலங்கள் பெண்களின் கைகளில் நேரடியாக பணத்தை வழங்கும் பணப் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பீகார் ஒரு முறை 10,000 உதவியை வழங்கும் அதே வேளையில், மீதமுள்ள 12 மாநிலங்கள் மாதமாதம் பணத்தை வழங்குகின்றன. இந்த உறுதிமொழிகள் அனைத்தும் சேர்ந்து 2025-26ஆம் ஆண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 0.5 சதவீதமாகும். இது இனி ஒரு சிறிய நலத்திட்டம் மட்டுமல்ல; மாநிலங்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை எவ்வாறு திட்டமிடுகின்றன என்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.


எண்ணிக்கைகள் தெளிவாகப் பேசுகின்றன. மகாராஷ்டிரா (36,000 கோடி), கர்நாடகா (28,608 கோடி), மேற்கு வங்கம் (26,700 கோடி) மற்றும் மத்தியப் பிரதேசம் (18,669 கோடி) ஆகியவை இப்போது நீர்ப்பாசனம், ஊரக சாலைகள் அல்லது முக்கிய பொது சுகாதார அமைப்புகளைவிட பெண்களின் இடமாற்றங்களுக்கு அதிகமாக செலவிடுகின்றன. ஜார்க்கண்ட் 13,363 கோடி, தமிழ்நாடு 13,807 கோடி, ஒடிசா 10,145 கோடி மற்றும் பீகார் 7,500 கோடியை அதன் ஒரு முறை மானியத்தின்மூலம் செலவிடுகிறது. பொது நலத்திட்டங்கள் அத்தகைய அளவை அடையும்போது, ​​அது மாநிலக் கொள்கையின் வரையறுக்கும் அம்சமாக மாறும்.


ஆனால், அளவும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் சேர்க்கப்பட்டவுடன் இந்த 13 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மாநிலக் கடன் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27.5 சதவீதத்தை நெருங்கி வருவதால், இந்த மாதாந்திர பணபரிமாற்றங்கள் மற்ற முதலீடுகளுக்கான நிதியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் நீண்டகால வளர்ச்சியை கடினமாக்குகின்றன.


அரசியல் பொருளாதாரப் பொறியா?


நலத்திட்டச் செலவுகள் ஒரு வரவு-செலவுத் திட்டத்துடன் முடிவடைவதில்லை. உணவுப் பாதுகாப்பு, ஓய்வூதியம், ஊட்டச்சத்து மற்றும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான பண ஆதரவு போன்ற உறுதிமொழிகள் ஒவ்வொரு ஆண்டும் திரும்ப வருகின்றன. அவை வளரும்போது, ​​முதலீடுகள் நாளை கட்டமைக்கத் தேவையான இடத்தில் படிப்படியாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4%-ஆக வைத்திருக்க, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிக வருவாயைச் சேகரிக்க, அதிக கடன் வாங்க அல்லது முதலீடுகளைக் குறைக்க முடிவு செய்ய வேண்டும். இந்தத் தேர்வுகள் எதுவும் செலவுகள் இல்லாமல் வருவதில்லை.


ஆனால் இந்த பதற்றம் வெறும் எண்கணிதம் மட்டுமல்ல. இது அரசியல் சார்ந்ததும் கூட. நலத்திட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நேரடி பணப்பரிமாற்றங்கள், உடனடி மற்றும் வெளிப்படையான ஆதாயங்களை உருவாக்குகின்றன. அவற்றின் பலன்கள் விரைவாக வந்து சேரும். மேலும், மக்களால் நேரடியாக உணரப்படுகின்றன. இது அவர்களை தேர்தல்ரீதியாக பிரபலமாக்குகிறது.


இதற்கு நேர்மாறாக, நீர்ப்பாசன அமைப்புகள், மருத்துவமனைகள் அல்லது டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற மூலதனத் திட்டங்கள் பலனைத் தர பல ஆண்டுகள் ஆகும். அவற்றின் பலன்கள் நீண்டகால அடிப்படையில் அமைந்திருக்கும், பெரும்பாலும் உடனடியாகத் தெரிவதில்லை. இதன் காரணமாக, வரவு-செலவுத் திட்டமிடல் குறைவாக இருந்தாலும், அரசியல்வாதிகள் நலத்திட்டங்களை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். அதே, நேரத்தில் முக்கியமான நீண்டகால முதலீடுகள் பெரும்பாலும் தாமதமாகின்றன.


இது பொருளாதார வல்லுநர்கள் அரசியல் பொருளாதார பொறி (political economy trap) என்று அழைப்பதை உருவாக்குகிறது: பொதுநலத் திட்டங்களுக்கான செலவினங்கள் ஒட்டும் தன்மையுடையதாகவும், குறைக்க கடினமாகவும் மாறும், முதலீடு நெகிழ்வானதாகவும், குறைக்க எளிதானதாகவும் மாறும், மேலும் பற்றாக்குறைகளை நிர்வகிப்பது படிப்படியாக கடினமாகிவிடும். பொதுநலத் திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைப்பது உடனடி பொதுமக்களின் எதிர்வினைக்கு வழிவகுக்கும் என்ற உண்மையால் இந்தப் பொறி வலுப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மூலதனச் செலவினங்களைக் குறைப்பது குறைவாகவே தெரியும் மற்றும் அரசியல் ரீதியாக பாதுகாப்பானது. இருப்பினும், தற்போதைய நலத்திட்டங்களுக்கு அதிகமாகச் செலவிடுவது, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முதலீடு செய்யும் அரசாங்கத்தின் திறனைப் பலவீனப்படுத்தும்.


இந்த பதற்றத்தை நிர்வகிப்பதற்கு வரவு-செலவுத் திட்ட கணக்கீட்டுத் தாள்கள்/விரிதாள்களைவிட (sheets/spreadsheets) அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு வெளிப்படையான கணக்கியல், நம்பகமான நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை நெறிமுறை மற்றும் குறுகிய கால அழுத்தங்கள் அதிகரிக்கும் போதும் மூலதன முதலீட்டைப் பாதுகாப்பதற்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. பொது  நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு இடையே தேர்வு செய்வது சவாலாக இல்லை. மாறாக இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பது தான்- நாளையை பொழுதை சார்ந்திருக்கும் நிதி மற்றும் பொருளாதாரத் திறனை பலவீனப்படுத்தாமல் இன்றைய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


பொது  நலத்திட்டங்கள்-முதலீட்டு சிக்கலை எவ்வாறு தீர்க்க முடியும்?


மக்களை நிகழ்காலத்தில் பாதுகாப்பது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சூழ்நிலையில் முதலீடு செய்வது ஆகிய இரண்டு பொறுப்புகளை மாநிலங்கள் ஒரே நேரத்தில் கையாளும்போது, ​​பொது  நலத்திட்டங்கள்-முதலீட்டு குழப்பம் சமாளிக்க கூடியதாக மாறுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவினங்களைப் பாதுகாத்தால், ஒரு மாநிலம் வலுவான நலத்திட்டங்களையும் அதே நேரத்தில் வலுவான முதலீடுகளையும் கொண்டிருக்க முடியும் என்பதை தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது.


தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் தொழில்துறை மூலம் உறுதியான வளர்ச்சி அடித்தளத்தை உருவாக்குவது, பொதுநலத் திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்றுகிறது என்பதை கர்நாடகா அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், இது போன்ற செயல்முறைகள் அதிகரித்து வரும் நிதி அழுத்தத்தைக் குறைக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSME)) ஒன்றிய அரசால் முதலீட்டு இயந்திரம் வேகமாக செயல்படும், அடிப்படை வரி விரிவடைகிறது மற்றும் நலத்திட்டங்களுக்கு குறைவாக இருப்பதற்குப் பதிலாக அதிக பணம் கிடைக்கிறது என்பதை குஜராத் மாநிலம் நமக்கு நினைவூட்டுகிறது.


மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, படிப்பினை தெளிவாக உள்ளது: சமநிலையைக் கண்டறிவதுதான் முன்னேற ஒரே வழியாகும். பொதுநலத்திட்டங்கள் இப்போது மக்களை ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் முதலீடுகள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றன. ஆனால், பல மாநிலங்கள் தங்கள் நலத்திட்டச் செலவுகள் ஒன்றிய அரசிடமிருந்து பெறும் நிதியைவிட வேகமாக வளர்ந்து வருவதால் சிரமப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.


ஒன்றிய அரசு நீண்டகால முதலீடுகளைப் பாதுகாக்க வேண்டும். மாநிலங்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய பரிமாற்றங்களை உறுதி செய்யவும், சரக்கு மற்றும் சேவை வரி  வருவாயை வலுப்படுத்தவும், நீண்டகால வளர்ச்சியின் செலவில் பொதுநலத்திட்டங்களின் விரிவாக்கம் வராமல் பார்த்துக் கொள்ளவும் ஒன்றிய அரசு தேவை என்று வாதிடலாம். நிதி ரீதியாக வலுவாக உள்ள ஒன்றிய அரசு மாநிலங்கள் தங்கள் வரவு-செலவுத் திட்டங்களை பொறுப்புடன் நிர்வகிக்க உதவுகிறது. இந்தியாவின் பொதுநலத்திட்டங்களின் எதிர்காலம், கவனமாக திட்டமிடுவதோடு பராமரிப்பையும் சமநிலைப்படுத்துவதையும், வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் பாதுகாப்பை வழங்குவதையும் சார்ந்துள்ளது.  


Original link:

Do cash and kind transfer schemes create welfare-investment dilemma?




Share:

பிரதமர் “விவாதத்தில் வலுவான வாதங்களை முன்வையுங்கள்” என்று கூறுவதுபோல், எதிர்க்கட்சிகள் எந்தெந்த நாடாளுமன்ற உத்திகளைப் பயன்படுத்தலாம்? -ரோஷ்ணி யாதவ்

 தற்போதைய செய்தி:


18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம் நாடகம் உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், வேலைகளைச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். குளிர்காலக் கூட்டத்தொடர் தோல்விக்குப் பிறகு விரக்தியையோ அல்லது வெற்றிக்குப் பிறகு ஆணவத்தையோ காட்டும் இடமாக மாற்றிவிட கூடாது என்று கூறினார். அதன்பிறகு, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் குழப்பத்துடன் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் அல்லது முறைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.


முக்கிய அம்சங்கள்:


ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், அரசாங்கம் அதன் செயல்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அரசாங்கத்தின் பணிகளைக் கேள்வி கேட்கவும் சரிபார்க்கவும் பல வழிகள் உள்ளன. அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தக்கூடிய சில முக்கிய வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:


1. கேள்வி நேரம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே கேள்விகளைக் கேள்வி கேட்பதன் மூலம் அரசாங்கத்தை அதன் செயல்களுக்கு பொறுப்பேற்க  வைக்கமுடியும். மக்களவை வழக்கமாக கேள்வி நேரத்துடன் அன்றைய நடவடிக்கைகளைத் தொடங்குகிறது. இந்த ஒரு மணிநேரத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பி, அவர்களின் அமைச்சகங்களின் செயல்பாட்டிற்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வார்கள்.


— இந்த நேரத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு அமைச்சரிடம் தங்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவது தொடர்பான எந்த கேள்வியையும் கேட்கலாம். மூன்று வெவ்வேறு வகையான கேள்விகள் உள்ளன: அவை நட்சத்திரக் குறியிடப்பட்டவை (Starred Question), நட்சத்திரக் குறியிடப்படாதவை (Unstarred) மற்றும் குறுகிய அறிவிப்பு கேள்விகள்  (Short Notice Questions) ஆகும்.


(i) நட்சத்திரக் குறியிட்ட கேள்வி (விதி 33): இந்தக் கேள்விகளுக்குப் பொறுப்பு அமைச்சர் வாய்மொழியாகப் பதிலளிப்பார். கூடுதல் கேள்விகள் (supplementary questions) எனப்படும் தொடர் கேள்விகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கலாம்.


(ii) நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி (விதி 33): இந்தக் கேள்விகளுக்கு அமைச்சகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ பதில் கிடைக்கும். நட்சத்திரக் குறியிட்ட மற்றும் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விகளைச் சமர்ப்பிக்கப் பயன்படுத்தப்படும் படிவம் ஒன்றுதான், ஆனால் நட்சத்திரக் கேள்விகள் ஒரு நட்சத்திரக் குறியால் வேறுபடுகின்றன.


(iii) குறுகிய அறிவிப்பு கேள்விகள் (விதி 54) :இந்த கேள்விகள், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அரசாங்கத்திடம் கேள்விகேட்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கின்றன. இவற்றுக்கு வழக்கமான 15 நாட்கள் அறிவிப்புக் காலம் அதிகமாக இருக்கும் என்பதால், அதைத் தவிர்த்து குறுகிய அறிவிப்பில் கேட்கப்படுகின்றன. நட்சத்திரமிடப்பட்ட கேள்விகளைப் போலவே, குறுகிய அறிவிப்பு கேள்விகளுக்கும் வாய்மொழியாகவே பதில் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் கூடுதல் கேள்விகள் (Supplementary Questions) கேட்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

சபை கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு நடைமுறை விதிகள் எனப்படும் சிறப்பு விதிகளைப் பின்பற்றுகிறது. இந்த விதிகளின்படி, உறுப்பினர்கள் கேள்விகள் கேட்க, பிரச்சினைகளை எழுப்ப அல்லது விவாதங்களில் சேர விரும்பினால், செயலகம் அல்லது சபாநாயகருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இது "அறிவிப்பு வழங்குதல்" (giving notice) என்று அழைக்கப்படுகிறது. வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு அளவு முன்கூட்டியே அறிவிப்பு தேவை. இந்த அறிவிப்பை உறுப்பினர் மின்-தளத்தைப் (e-portal) பயன்படுத்தி கைசெயல்முறையாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ சமர்ப்பிக்கலாம்.


2. பூஜ்ஜிய நேரம் (Zero Hour): கேள்வி நேரத்திற்கு அடுத்த மணிநேரம் பூஜ்ஜிய நேரம் என்று அழைக்கப்படுகிறது. கேள்வி நேரம் கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. ஆனால், பூஜ்ஜிய நேரம் என்பது இந்திய நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உரியது. "பூஜ்ஜிய நேரம்" என்ற சொல் நடைமுறை விதிகளில்  (rules of procedure) அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை.


— இந்திய நாடாளுமன்றத்தின் முதல் பத்து ஆண்டுகளில், முக்கியமான தொகுதி மற்றும் தேசிய பிரச்சினைகளை எழுப்பவேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்தபோது, ​​பூஜ்ஜிய நேரம் என்ற கருத்து இயல்பாகவே தொடங்கியது. இந்த நேரம் பொதுவாக அவசரமான மற்றும் பிற நடைமுறைகளின்கீழ் தேவைப்படும் அறிவிப்பு காலத்திற்கு காத்திருக்க முடியாத விவகாரங்களை எழுப்பப் பயன்படுத்தப்படுகிறது.


— இந்த நேரத்தில் செய்யப்படும் சமர்ப்பிப்புகள் ஒரு விதியின்கீழ் குறிப்பாக பட்டியலிடப்படவில்லை. ஆனால், நடவடிக்கைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களாகக் காட்டப்படும்.

அரை மணி நேர கலந்துரையாடல் (Half-an-Hour Discussion): நட்சத்திரக் குறியிட்ட அல்லது நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கான பதிலுக்கு கூடுதல் விளக்கம் தேவை என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உணர்ந்தால், அவர் அரை மணி நேர விவாதத்தை எழுப்பலாம். இந்த முறையின்கீழ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் ஒரு சிறிய அறிக்கையை வெளியிட முடியும்.

வணிக ஆலோசனைக் குழு (Business Advisory Committee (BAC))

சபையின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை சபை அலுவல் ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது. இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.


கவனத்தை ஈர்க்கும் தீர்மானம்  (விதி 197): எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு முக்கியமான அவசரப் பிரச்சினையை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். அதை முறையாக அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். பின்னர் அமைச்சர் அந்த கேள்விக்குப் பதில் அளிப்பார். அமைச்சரின் பதிலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தும் கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.


5. குறுகிய கால விவாதம் (விதி 193): ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரத்தில் விதி 193-ன் கீழ் கேள்வி எழுப்பலாம். தலைப்பு மற்றும் கால அளவு வணிக ஆலோசனைக் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது.


6. விதி 377-ன்கீழ் உள்ள விவகாரங்கள்: கேள்விகள், குறுகிய அறிவிப்பு கேள்விகள், கவனத்தை ஈர்த்தல் போன்ற விதிகளின்கீழ் எழுப்ப முடியாத விவகாரங்களை விதி 377-ன் கீழ் எழுப்பலாம்.


7. ஒத்திவைப்பு தீர்மானம்: ஒத்திவைப்பு தீர்மானம் (Adjournment Motion) என்பது, சபாநாயகரின் ஒப்புதலுடன் கொண்டு வரக்கூடிய, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்காக, சபையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான நடைமுறையாகும்.


— ஒத்திவைப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்காக சபையின் வழக்கமான அலுவல்களை ஒதுக்கி வைப்பதற்கு வழிவகுக்கும்.


8. நம்பிக்கையில்லாத் தீர்மானம் (No-Confidence Motion): மக்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 198, அமைச்சரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழிவதற்கான நடைமுறையை விளக்குகிறது. அத்தகைய தீர்மானத்தின் வழக்கமான வடிவம், இந்த சபை அமைச்சரவையின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது என்பதாகும்.


— நம்பிக்கையில்லா தீர்மானம் எந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்பதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. காரணங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அல்லது அவையில் வாசிக்கப்பட்டாலும், அவை அதிகாரப்பூர்வ நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படாது.

கண்டனத் தீர்மானம் (Censure Motion)

ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது ஒரு அமைச்சர் அல்லது அமைச்சர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான மறுப்பைக் காட்ட ஒரு கண்டனத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது.


9. ஒழுங்குமுறைப் புள்ளி (Point of Order): இது சபையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் அல்லது அவையின் அலுவல்களை ஒழுங்குபடுத்தும் அரசியலமைப்பின் அத்தகைய பிரிவுகளின் விளக்கம் அல்லது அமலாக்கத்துடன்

தொடர்புடையது மற்றும் சபாநாயகரின்கீழ் உள்ள அதிகாரத்தின் உள்ள ஒரு கேள்வியை எழுப்புகிறது.


— ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று கேள்வி எழுப்பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பலாம். அது செல்லுபடியாகுமா என்பதை சபாநாயகர் முடிவு செய்து இறுதித் தீர்ப்பை வழங்குவார்.


உரிமை மீறல்  (Privilege Motion)


நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை திறம்படச் செய்ய அவர்களுக்கு உள்ள சிறப்பு உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் ஆகும். இந்த உரிமைகள் மீறப்பட்டால், அது உரிமை மீறல் என்று அழைக்கப்படுகிறது. மேலும், அது நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரியது. உரிமை மீறல் எனப்படும் விதிகள் அல்லது உரிமைகளை மீறியதாக நம்பப்படும் நபர்களுக்கு எதிராக, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் உள்ள எந்தவொரு உறுப்பினரும் ஒரு தீர்மானத்தின் வடிவில் ஒரு அறிவிப்பை முன்மொழியலாம்.


- ஒவ்வொரு அவையும், எந்தவொரு குறிப்பிட்ட சலுகையையும் மீறாவிட்டாலும், அவையின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் புண்படுத்தும் செயல்களை அவமதிப்பு என்று கருதி தண்டிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.

இந்த குளிர்கால கூட்டத்தொடர் ஏன் முக்கியமானது?


1. அரசாங்கம் புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அறிமுகப்படுத்த அல்லது பரிசீலனைக்காக 14 மசோதாக்களை பட்டியலிடுகிறது. அவற்றில் முக்கியமானவை அணுசக்தி மசோதா (Atomic Energy Bill), 2025 அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்தல் மற்றும் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா (Higher Education Commission of India Bill), 2025ஆம் ஆண்டு உயர்கல்வியில் ஒழுங்குமுறைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டது.


2. மணிப்பூரில் நொடிப்புநிலை மற்றும் திவால் சட்டம், ஜன் விஸ்வாஸ் சட்டம், தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் உள்ளிட்ட பிற முக்கியமான மசோதாக்கள் உள்ளன. 15 அமர்வுகளுக்குப் பிறகு டிசம்பர் 19 அன்று கூட்டத்தொடர் முடிவடையும்.

Original link: As PM says to ‘raise strong points in debates’, what Parliamentary devices can Opposition use?




Share:

அரசாங்கம் எந்தெந்த குறைபாடுகளை மட்டும் கவனத்தில் கொள்கிறது? உரிமைகள் இல்லாத அங்கீகாரத்தின் விசித்திரமான நிலை. -நிபுன் மல்ஹோத்ரா மற்றும் ஹர்ஷிதா குமாரி

 

ஹீமோபிலியா (Haemophilia), தாலசீமியா (thalassaemia), மற்றும் அரிவாள் செல் (sickle cell) நோய் ஆகியவை ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தில் (Rights of Persons with Disabilities Act (RPwD)) குறிப்பிடப்பட்டுள்ள 21 குறைபாடுகளுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய வெளிப்படையான சட்டபூர்வமான அங்கீகாரம் இருந்தபோதிலும், அரிய இரத்தக் கோளாறுகள் உள்ளவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர் — இந்த இடைவெளி இப்போது ஹீமோபிலியா தொடர்பான வழக்குகளின் மூலம் நேரடியாக எதிர்க்கப்படுகிறது.


ஹீமோபிலியா (அரிய இரத்தக் கசிவு நோய்) உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (RPwD Act 2016)-ல் சேர்க்க வேண்டும் என்ற மனு மீது உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஹீமோபிலியா நோயாளிகள் கடுமையான உடல் கட்டுப்பாடுகள், தொடர் மருத்துவ சார்பு, அடிக்கடி மருத்துவமனை அனுமதி ஆகியவற்றால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், ஆனால் இப்போது அவர்களுக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவி, நலத்திட்ட பலன்கள் போன்றவை மறுக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். “மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் நோக்கம் விலக்குவது அல்ல, அனைவரையும் சேர்த்துக் கொள்வதே (inclusion)” என்று நீதிமன்றம் கூறி, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் சமூகநீதி மற்றும் சமத்துவ அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இது குழப்பமாகத் தோன்றலாம் — ஹீமோபிலியா, தலசீமியா மற்றும் அரிவாள் செல் நோய் ஆகியவை ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் (RPwD) பட்டியலிடப்பட்டுள்ள 21 குறைபாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடர்ச்சியான விலக்கு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. சட்ட அங்கீகாரம் இருந்தபோதிலும் என்ன நடைமுறைப்படுத்தல் இடைவெளிகள் நீடிக்கின்றன? மேலும் சேர்க்கப்படுவதற்கான முயற்சி ஏன்?  போன்ற கேள்விகள் எழுகின்றன.


இந்தச் சவால்களை எதிர்கொள்ள, இந்தச் சட்டத்தின் சட்டமன்ற ரீதியான பரிணாம வளர்ச்சி, அதன் நோக்கம், மற்றும் இது முந்தைய 1995-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை கூர்ந்து ஆராய்வது அவசியமாகிறது.


மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995,-ஆனது இந்தியா "ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழுப் பங்கேற்பு மற்றும் சமத்துவம் குறித்த பிரகடனத்தில்" கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இயற்றப்பட்டது. இது, பின்னர், 2007-ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சாசனத்தை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) இந்தியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.


2016-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட சட்டம் மூன்று முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது: குறைபாட்டை வரையறுப்பதில் மருத்துவக் கோணத்தில் இருந்து “சமூகத் தடைகளாலும் ஏற்படும் பாதிப்பை” அங்கீகரிக்கும் சமூக-மருத்துவ மாதிரிக்கு மாறியது. 1995-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த 7 குறைபாடுகளில் இருந்து 21 வகையான குறைபாடுகளுக்கு பாதுகாப்பை விரிவாக்கியது. ஐ.நா. குறைபாடுடையோர் உரிமைகள் சாசனத்திற்கு (UNCRPD) ஏற்ப நலன் சார்ந்த சொற்களை நீக்கிவிட்டு, சமத்துவம், கண்ணியம், முழுப் பங்கேற்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் உரிமை அடிப்படையிலான உத்தரவாதங்களை கொண்டு வந்தது.


இந்த விரிவான உரிமைகளை நடைமுறைப்படுத்த, சட்டம் இப்போது பலவகையான குறைபாடுகளை அங்கீகரிக்கிறது. அவை, புலன் மற்றும் உடல் குறைபாடுகள் (பார்வையற்றோர், குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, இயக்கக் குறைபாடு, தொழுநோய் குணமடைந்தோர், குள்ளத்தன்மை, மூளை வாதம், பேச்சுக் குறைபாடு, அமிலத் தாக்குதல் பாதிப்பு போன்றவை) அறிவுசார் மற்றும் மனநலக் குறைபாடுகள் (அறிவுசார் குறைபாடு, மனநோய், ஆட்டிசம், கற்றல் குறைபாடுகள்) நரம்பியல் குறைபாடுகள் (தசைச்சிதைவு, நாள்பட்ட நரம்பியல் நோய்கள், பல்வகை திசு இறுக்கம் (multiple sclerosis), பார்கின்சன் (Parkinson’s disease) போன்றவை) இரத்தக் கோளாறுகள் மற்றும் பல்வேறு குறைபாடுகள் (தாலசீமியா, ஹீமோபிலியா, சிக்கில் செல் அனீமியா, காது கேளாமை-பார்வையின்மை உள்ளிட்ட பல குறைபாடுகள்) இவை அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் இருந்தாலும், அரிய இரத்தக் கோளாறுகள் உள்ளவர்கள் இன்னும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தற்போது ஹீமோபிலியா தொடர்பான ஒரு வழக்கு மூலம் இந்தப் பிரச்சினை வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்தச் சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவம், பாகுபாடு இல்லாமை, சமூகத்தில் வாழும் உரிமை, வன்முறையிலிருந்து பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, அணுகக்கூடிய வாக்களிப்பு மற்றும் நீதி உள்ளிட்ட பல உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனால், இவை அனைத்தும் குறைந்தது 40 சதவீதம் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே முழுமையாகப் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. அவர்களுக்கு மட்டுமேஉயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலையில் 4 சதவீதஇடஒதுக்கீடு, 6-18 வயது வரை இலவசக் கல்வி போன்ற சலுகைகள் தரப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தச் சட்டம் பெரிய அளவில் நன்மை தரவில்லை என்பதே உண்மை என்கின்றனர். 


பார்வைக் குறைபாடு மற்றும் குறைந்த பார்வை; காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு; மூளை வாதம், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், குள்ளத்தன்மை, அமிலத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மற்றும் தசைச்சிதைவு உட்பட உடல் அசைவின்மை குறைபாடு; ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன நோய்; மற்றும் மேற்கூறிய பிரிவுகளில் இருந்து எழும் செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உட்பட பலவகை குறைபாடுகள் போன்ற குறைபாடுகளுக்கு மட்டுமே அரசு வேலைகளில் உள்ள 4 சதவீத இடஒதுக்கீடு பொருந்தும் என்று கூறப்படுகிறது. 


சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு முறை, இந்திய ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) போன்ற முக்கிய அரசுப் பணியாளர் தேர்வுகளிலும் பின்பற்றப்படுவதால், தகுதியான (அளவுகோலை பூர்த்தி செய்யும்) பல மாற்றுத்திறனாளிகள்கூட நேர்மறை நடவடிக்கையான இடஒதுக்கீட்டு  வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கின்றனர். 


இடஒதுக்கீட்டிற்கு யார் தகுதி பெறுகிறார்கள் என்பதை உற்று நோக்கினால் மூன்று முக்கிய சிக்கல்கள் வெளிப்படுகின்றன. முதலாவதாக, புறப்பார்வைக்குத் தெரியும் அல்லது பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்ட குறைபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், ஹெமோபிலியா (haemophilia), சிக்கில் செல் நோய்கள் (sickle cell disease), மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (multiple sclerosis), மற்றும் வலிப்பு நோய் (epilepsy) போன்ற புறப்பார்வைக்குத் தெரியாத ஆனால் தீவிரமான நிலைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இரண்டாவதாக, 2016-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் பரந்த நோக்கங்கள் இருந்தபோதிலும், இடஒதுக்கீடு அமைப்பு இன்றும் 1995-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் இருந்து வந்த ஏழு குறைபாடு வகைகளையே பின்பற்றுகிறது. மூன்றாவதாக, இது இரண்டு மடங்கு பாதகத்தையே உருவாக்குகிறது. இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் வேலைகளுக்கு “மருத்துவ ரீதியாகத் தகுதியற்றவர்கள்” எனக் கருதப்படுகிறார்கள். இதனால், அவர்களுக்கு திறந்தநிலை போட்டியில் (open competition) அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் வாய்ப்புகள் இல்லாமல் போகிறது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


இந்த வழக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல; இது சட்டத்தில் உள்ள ஒரு பெரிய குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு “அங்கீகாரம்” கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குத் தகுந்த உரிமைகளும், நடைமுறை செயல்பாடுகளும் (வேலை, கல்வி, சமூக பாதுகாப்பு போன்றவை) இன்னும் உருவாக்கப்படவில்லை. ஹீமோபிலியா நோயாளிகளை மையப்படுத்திய இந்த வழக்கு வெற்றி பெற்றால், இரத்தக் கோளாறு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, சட்டத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உண்மையான, செயல்படுத்தக்கூடிய உரிமைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அதாவது, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் சொல்லும் “கண்ணியமும் சம வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், குறைபாடு எந்த அளவிற்கு வெளிப்படையாகத் ‘தெரிகிறது’ என்பதைப் பொருத்து அதை நிபந்தனை விதிக்கக் கூடாது” என்ற கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்த வழக்கை ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதுகின்றனர்.


மல்ஹோத்ரா, Nipman Foundation அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் The Quantum Hub-ன் இயக்குநர் ஆவார். குமாரி, The Quantum Hub-ன் ஆய்வாளர் ஆவார்.


Original link:

Which disabilities does the government see? The strange case of recognition without rights

Share:

இந்தியாவிற்கு உயிரியல் மறுசீரமைப்பு ஏன் தேவைப்படுகிறது? -சாம்பவி நாயக்

உயிரியல் மறுசீரமைப்பின் இரண்டு வெவ்வேறு வகைகள் யாவை? பாரம்பரிய நுண்ணுயிரியல் எவ்வாறு அதிநவீன உயிரித்தொழில்நுட்பத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது? உயிரியல் மறுசீரமைப்புத் திட்டங்களை மேலும் முன்னெடுப்பதற்காக அரசாங்கம் திட்டங்களைத் தொடங்கியுள்ளதா? இத்தகைய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் யாவை?


மனிதக் கழிவுகளால் காற்று, நீர், மண் எல்லாம் அசுத்தமாகி, தூய்மையான உலகம் இனி இல்லாத நிலைக்குச் செல்கிறோம். இனி கழிவுகளை உண்டாக்குவதை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள கழிவுகளைச் சுத்தம் செய்யவேண்டும் ஆகியன இதற்கான தீர்வுகளாகக் கூறப்படுகின்றன.


உயிரியல் மறுசீரமைப்பு என்றால் என்ன?


உயிரியல் மறுசீரமைப்பு என்பது, 'உயிரியல் மூலம் வாழ்க்கையை மீட்டெடுப்பது' என்று பொருள். எண்ணெய், பூச்சிக்கொல்லிகள், நெகிழிகள், அல்லது கன உலோகங்கள் போன்ற நச்சுப் பொருட்களைப் பிரித்தெடுக்கவோ அல்லது

மாற்றியமைக்கவோ (transform) இது பாக்டீரியா, பூஞ்சை, பாசி மற்றும் தாவரங்கள் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறது.


இந்த உயிரினங்கள் மாசுபாட்டுப் பொருட்களை உணவாக உட்கொண்டு, அவற்றை நீர், கார்பன்-டை-ஆக்சைடு அல்லது கரிம அமிலங்கள் போன்ற பாதிப்பில்லாத பொருட்களாக மாற்றி உடைத்துவிடும் என்கின்றனர். சில சமயங்களில், நச்சு உலோகங்களையும் மண்ணிலோ நிலத்தடி நீரிலோ பரவாமல் தடுக்கும் வகையில், குறைந்த ஆபத்து உடைய வடிவங்களாக மாற்றிவிடும் என்றும் கூறப்படுகிறது. 


இரண்டு வகைகள் உள்ளன


மாசுபட்ட இடத்திலேயே நேரடியாக உயிரித்தீர்வு, (In situ bioremediation): மாசுபட்ட இடத்தை அகற்றாமல், அதே இடத்தில் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மாசை நீக்குவது. உதாரணமாக, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் மேலேயே எண்ணெயை உண்ணும் பாக்டீரியாக்களைத் தெளித்து சுத்தம் செய்யும் முறை ஆகும்.


வெளிப்புற உயிரியல் சீரமைப்பு (Ex situ bioremediation): மாசுபட்ட மண் அல்லது நீர் அகற்றப்பட்டு, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டவுடன் திரும்ப அனுப்பப்படுவது ஆகும். 


நவீன உயிரி மறுசீரமைப்பு பாரம்பரிய நுண்ணுயிரியலை அதிநவீன உயிரித் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. முதலாவதாக, புதிய உயிரித்தொழில்நுட்பங்கள் மனிதர்கள் உயிரியல் பற்றிய முன்எப்போதும் இல்லாத நுண்ணறிவைப் பெற உதவுகின்றன. இது பயனுள்ள குணாதிசயங்களைக் கொண்ட உயிரி மூலக்கூறுகளை அடையாளம் காண உதவுகிறது. இரண்டாவதாக, இந்த தொழில்நுட்பங்கள் மூலம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அல்லது வேளாண் நிலங்கள் போன்ற இடங்களில் இயற்கையாக நடக்கும் உயிரியல் செயல்முறைகளை (உயிரி மூலக்கூறுகள் செய்யும் வேலையை) மனிதர்கள் துல்லியமாகப் பிரதிபலித்து செய்ய முடியும் என்று தெரிவிக்கின்றனர்.


எடுத்துக்காட்டாக, மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் (genetically modified (GM microbes)) நெகிழி அல்லது எண்ணெய்க் கசிவு போன்ற கடினமான இரசாயனங்களை இயற்கையான உயிரினங்கள் சிதைக்க முடியாதவற்றை எளிதாகச் சிதைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. செயற்கை உயிரியல் மாசுக்களைக் கண்டறியும் “உயிரி உணரிகளையும்” (biosensors) உருவாக்க உதவுகிறது. அதாவது, நச்சுப் பொருள்கள் இருந்தால் நிறம் மாற்றும் அல்லது ஒளிரும் உயிரினங்கள் மூலம் மாசு ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கை அளிக்கும் என்று கூறப்படுகிறது. 


இந்தியாவிற்கு உயிரியல் மறுசீரமைப்பு ஏன் தேவைப்படுகிறது?


இந்தியாவின் வேகமான தொழிற்சாலை வளர்ச்சி சுற்றுச்சூழலை பெரிதும் பாதித்துள்ளது. மாசுபாடு சற்று குறைந்தாலும், கங்கை, யமுனை போன்ற ஆறுகளில் தினமும் சுத்தம் செய்யப்படாத கழிவுநீரும் தொழிற்சாலை கழிவுகளும் கலக்கின்றன. எண்ணெய் கசிவு, பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள் ஆகியவை இயற்கைக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.


பாரம்பரிய மாசு நீக்கும் முறைகள் விலை அதிகம், மின்சாரம்/ஆற்றல் அதிகம் தேவைப்படும், பெரும்பாலும் புதிய மாசையும் உருவாக்கும். உயிரி மறுசீரமைப்பு  அதைவிடவும் விலை குறைவானது, எளிதில் பெரிய அளவில் பயனளிக்கப் கூடியது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான தீர்வு. குறிப்பாக நிலமும் நீரும் பரவலாக மாசடைந்து, பணமும் வளமும் குறைவாக உள்ள நாடுகளுக்கு இது மிகவும் பொருத்தமான மாற்று முறையாகக் கருதப்படுகிறது.

 

மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பல்லுயிர் பெருக்கம் ஒரு மிகப்பெரிய நன்மையாகும். இங்குள்ள உள்ளூர் நுண்ணுயிரிகள், அதிக வெப்பம், உப்பு, அமிலம் போன்ற கடுமையான சூழல்களுக்கு ஏற்கெனவே பழகியவை. அதனால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நுண்ணுயிரிகளைவிட சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா இப்போது எந்த நிலையில் உள்ளது?


உயிரியல் மறுசீரமைப்பு என்பது இந்தியாவில் படிப்படியாக கவனம் பெற்று வருகிறது. ஆனால், இது இன்னும் பெரும்பாலும் சோதனை நிலையில்தான் உள்ளது. உயிரித் தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology (DBT)) தன் “தூய்மைத் தொழில்நுட்பத் திட்டம்” மூலம் பல திட்டங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது மற்றும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (Council of Scientific and Industrial Research (CSIR))-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவவனத்திற்கு (National Environmental Engineering Research Institute (NEERI)) உயிரியல் மறுசீரமைப்பு தொடர்பான  திட்டங்களைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் அதிகாரம் உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழக (IIT) ஆராய்ச்சியாளர்கள் பருத்தியிலிருந்து தயாரித்த நானோ கலவைப் பொருளை உருவாக்கியுள்ளனர். இது கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவை எளிதாக அகற்ற உதவும் என்று கூறப்படுகிறது. மற்ற சில ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் உள்ள நச்சுப்பொருட்களை “சாப்பிட்டு” சுத்தம் செய்யும் பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய தொழில் நிறுவனங்களும் (Startups) இந்தத் துறையில் பங்களிப்பை வழங்குகின்றன. உயிரித் தொழில்நுட்ப கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (Biotechnology Consortium India Limited (BCIL)) மற்றும் Econirmal உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மண் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக நுண்ணுயிர் உருவாக்கங்களை (microbial formulations) வழங்குகின்றன.

ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு பல சவால்களை எதிர்கொள்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கேற்ற தன்மை இல்லாமல் இருப்பது, மாசுபடுத்திகளின் சிக்கலான தன்மை தொழில்நுட்ப சவால்களாக வரையறுக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான உயிரியல் சீர்திருத்த தரநிலைகள் இல்லாதது போன்றவை ஒழுங்குமுறை சவால்களாக வரையறுக்கப்படுகின்றன.


மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?


பல வளர்ந்த நாடுகளில், உயிரியல் மறுசீரமைப்பு என்பது சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் முக்கியமான பகுதியாகும். உதாரணமாக, ஜப்பான், நகரக் கழிவுகளைச் சுத்தம் செய்ய நுண்ணுயிரிகளையும் தாவரங்களையும் ஒன்றாகப் பயன்படுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் எண்ணெய்க் கசிவுகளையும் பழைய சுரங்க இடங்களையும் சுத்தம்செய்ய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு நிதிஉதவி அளிக்கிறது. சீனா, மண் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் உயிரியல் சுத்திகரிப்பை முக்கியமாக்கியுள்ளது. தொழிற்சாலை தரிசு நிலங்களை மீட்டெடுக்க மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாக்களைப் பயன்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. 


வாய்ப்புகளும் அபாயங்களும்


இந்தியாவுக்கான வாய்ப்புகள் மிக ஏராளமாக உள்ளன. உயிரியல் மறுசீரமைப்பு மூலம் ஆறுகளையும் நிலத்தையும் தூய்மையாக்கலாம், மாசடைந்த தொழிற்சாலை நிலங்களை மீட்டெடுக்கலாம். அதே நேரத்தில் உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆலோசனை, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இதை அரசின் தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission), கங்கையை வணங்குகிறோம் (Namami Gange) மற்றும் பிற பசுமைத் திட்டங்களுடன் எளிதாக இணைத்துச் செயல்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆனால், இன்னும் சில ஆபத்துகள் உள்ளன. மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை (GMO)  திறந்த சூழலில் விடுவதை மிகத்தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், போதிய சோதனை இல்லாவிட்டாலோ, கட்டுப்பாடு மோசமாக இருந்தாலோ, பழைய பிரச்சனைகளைத் தீர்க்கும்போது புதிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது என்று எச்சரிக்கின்றனர். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளவும், தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்களின் பங்கேற்பும் அவசியமாகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த, இந்தியாவுக்கு புதிய உயிரியல் பாதுகாப்பு விதிகள், சான்றிதழ் முறைகள் மற்றும் பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது. 

முன்னோக்கி செல்லும் வழி


உயிரியல் மறுசீரமைப்பின் முழுத் திறனை இந்தியா அடைய வேண்டுமானால், மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உயிரியல் மறுசீரமைப்பு முறைகளுக்கும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவதற்கும் தெளிவான தேசிய விதிமுறைகளையும் தரநிலைகளையும் உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பிராந்திய உயிரியல் மறுசீரமைப்பு மையங்களை (bioremediation hubs) அமைக்க வேண்டும். இவை, உள்ளூர் மாசுபாட்டுப் பிரச்சினைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தொழில்நுட்பங்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இதை உயிரித் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவிக் கழகம் (Department of Biotechnology (DBT)-(Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) போன்ற அமைப்புகளின் சுற்றுச்சூழல் திட்டங்கள் மூலம் புதிய தொழில் நிறுவனங்களுக்கும் (startups) சமூகத் திட்டங்களுக்கும் நிதி மற்றும் ஆதரவு அளித்து செயல்படுத்தலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நுண்ணுயிரிகள் ஆபத்தானவை அல்ல என்றும் மாறாக அவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நண்பர்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த மூன்று நடவடிக்கைகளால் இந்தியாவில் உயிரியல் மறுசீரமைப்பு தொழில்நுட்பம் வேகமாகவும் பயனுள்ள வகையிலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சம்பவி நாயக்,  தக்ஷஷிலா நிறுவனத்தின் (Takshashila Institution) உடல்நலம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கொள்கையின் (Health & Life Sciences Policy) தலைவராகவும், CloudKrate நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்  உள்ளார்.


Original link: 

Why does India need bioremediation?


Share: