இணையவழிக் குற்றங்கள் நடந்த பிறகு அவற்றிற்குப் பதில் அளிப்பதைக் காட்டிலும், வலிமையான கட்டமைப்பு வசதிகள் மூலம் அக்குற்றங்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுக்கும் முறைக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest) மோசடிகளை முழுமையாகத் தடுக்க மேம்பட்ட தொழில்நுட்பம், கடுமையான விதிமுறைகள் மற்றும் பொதுமக்களின் அதிகப்படியான நம்பிக்கை ஆகியவை அவசியமாகும். டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மேலும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்?
சமீப நாட்களில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest) மோசடியில் 70 வயது மூதாட்டி ஒருவர் ₹6.9 கோடி ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ஒரு முதிய தம்பதியினரிடம் இதேபோன்ற மோசடி மூலம் சுமார் ₹14.85 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்தத் திருடப்பட்ட பணத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று முக்கிய வங்கிக் கணக்குகளை டெல்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும், இது தொடர்பாகக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் மட்டும், பதிவு செய்யப்பட்ட 1,23,672 புகார்களின் அடிப்படையில், சுமார் ₹22,842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ₹7,465.18 கோடி இழப்பை விட 206% அதிகம் ஆகும். மேலும், 2022-ஆம் ஆண்டில் இந்த இழப்பு ₹2,306 கோடிக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடி செய்பவர்கள் தங்களை மத்திய புலனாய்வு அமைப்பு (Central Bureau of Investigation), அமலாக்கத்துறை (Enforcement Directorate (ED)) அல்லது காவல்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, காணொளி அழைப்பின் (Video Call) மூலமாக பொது மக்களைத் தொடர்புகொள்கிறார்கள். பின்னர், போதைப்பொருள் கடத்தல், கள்ளப்பணப் பரிமாற்றம் (Money Laundering) அல்லது பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்களில் அவர்கள் ஈடுப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் விவரங்கள், வங்கி கணக்குகள் அல்லது கூரியர் பார்சல்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று கூறி, மோசடியாளர்கள் அவர்களை மணிக்கணக்காக அல்லது பல நாட்களுக்கு காணொளி அழைப்பில் (Video Call) வைத்திருந்து, "டிஜிட்டல் கைது" (Digital Custody) என்ற போலிச் சிறையில் அடைக்கிறார்கள். கைது செய்யப்படுவீர்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுவீர்கள் என்று மிரட்டி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகையைத் திருடுகிறார்கள். இந்த மோசடிகள் பார்ப்பதற்கு அப்படியே உண்மையான அரசு நடைமுறைகள் போலவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் போலி அடையாள அட்டைகள், வழக்கு எண்கள், ஆணைகள், மாற்றப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்களைப் பயன்படுத்துகின்றனர். வேலைக்குச் செல்வோர், ஓய்வு பெற்றவர்கள், மாணவர்கள் எனப் பலரையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் அவர்கள் குறிவைக்கின்றனர்.
"டிஜிட்டல் கைது" என்பதன் வரையறையில் உள்ள தெளிவின்மை
‘டிஜிட்டல் கைது’ (Digital arrest) என்பது எந்தவொரு சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆன்லைன் மோசடிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act) 2000-ன் கீழும், திட்டமிடப்பட்ட குற்றங்கள் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) 2023-ன் கீழும் கொண்டு வரப்பட்டாலும், இந்த இரண்டு சட்டங்களுமே ‘இணையவழி குற்றம்’ (cybercrime) என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. இது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.
பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), 2023-ன் பிரிவு 63-ன்கீழ், நீதிமன்ற அழைப்பாணைகளை மின்னணு முறையில் அனுப்ப முடியும். ஆனால், அவை குறியாக்கம் செய்யப்பட்டிருக்க (Encrypted) வேண்டும் மற்றும் நீதிமன்றத்தின் முத்திரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறைகளை விரைவுபடுத்தினாலும், கைது நடவடிக்கைகளின்போது குற்றம்சாட்டபட்ட நபர் நேரில் காவலில் எடுக்கப்பட வேண்டும் என்றும், கைது செய்யும் அதிகாரி முறையான அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட அந்த நேரத்திலேயே 'கைது குறிப்பாணை' (Arrest Memo) தயார் செய்யப்பட வேண்டும் என்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிவு 35(3)-ன்படி, பிரிவு 35(1)-ன்கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, காவல்துறை அந்த நபரை உடனடியாகக் கைது செய்வதற்குப் பதிலாக, விசாரணைக்கு வருமாறு ஒரு அறிவிப்பை (Notice) வழங்கலாம். இது ஒரு புலன் விசாரணைக்கு உட்பட்ட குற்றத்தில் (Cognisable offence) தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், 'டிஜிட்டல் கைது' மோசடிகளை கையாள்வதற்கு இந்திய சட்டம் அமலாக்க முகமைகளுக்குப் பல வழிகளை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), அனுமதியின்றி ஒருவரின் தகவல்களை அணுகுவது, அடையாளத் திருட்டு மற்றும் ஆன்லைன் மோசடிகளை குற்றமாக அறிவிக்கிறது. ஏமாற்றுதல், மிரட்டல், பணம் பறித்தல், ஆள்மாறாட்டம் மற்றும் குற்றச்சதி தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்துடன் சேர்த்து பயன்படுத்த வழிவகை செய்கிறது.
2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், தனிநபர் தரவைப் பயன்படுத்துவதற்கு முன் சம்பந்தப்பட்டவரின் அனுமதியைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது. மேலும், தேவைக்கு அதிகமான தரவுகளைச் சேகரிப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தரவு பாதுகாப்பை (Data Privacy) இந்தச் சட்டம் பலப்படுத்துகிறது. இதற்கான நடைமுறை அமைப்புகள் இன்னும் முழுமையாக உருவாக்கப்பட்டு வரும் நிலையிலும், தனிநபர் தரவைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது தகவல்கள் கசிவதோ தெளிவான சட்ட மீறலாக வரையறுக்கப்படுகிறது.
இணையவழி மோசடிகளை எதிர்கொள்ள இந்தியா ஒரு பல அடுக்கு அமைப்பை (multi-layered system) உருவாக்கியுள்ளது. இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)), மாநில இணைய காவல் நிலையங்கள், தேசிய இணையவழி குற்றப் புகாரளிப்பு தளம், 1930 உதவி எண் மற்றும் குடிமக்கள் நிதி இணையவழி மோசடி புகாரளிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகியவை இணைந்து, மோசடிகளை விரைவாகக் கண்டறிந்து பணத்தை முடக்க ஒரு தேசிய அளவிலான பொறிமுறையாகச் செயல்படுகின்றன.
எனவே, டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம் வலுவான சட்டங்கள் இல்லாதது அல்ல; மாறாக, செயல்படும் திறன், ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்பின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளே ஆகும். குடிமக்களிடையே டிஜிட்டல் விழிப்புணர்வு சீராக இல்லாதது, மாநிலங்களுக்கு இடையே காவல்துறைத் திறனில் உள்ள வேறுபாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கும் அமலாக்க அமைப்புகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது போன்ற காரணங்களே இந்தப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன.
பல அடுக்கு பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குதல்
இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு அலுவலகமாகும். இது நாடு முழுவதும் பதிவாகும் இணையக் குற்றப் புகார்களுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்கிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும், 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) மோசடிகளுடன் தொடர்புடைய 1,700-க்கும் மேற்பட்ட ஸ்கைப் (Skype) அழைப்பெண்கள், 59,000 வாட்ஸ்அப் கணக்குகள், 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் சர்வதேச கைபேசி சாதன அடையாள எண்களை (International Mobile Equipment Identity (IMEI)) எண்களை இந்த மையம் முடக்கியுள்ளது.
இந்திய மொபைல் எண்களைக் காட்டி ஏமாற்றும் சர்வதேச அழைப்புகளை (Spoofed calls) கண்டறிந்து முடக்குவதற்கான அமைப்புகளை மத்திய அரசும், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஏற்படுத்தியுள்ளன. குடிமக்கள் நிதி சார்ந்த சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting and Management System) இதுவரை ₹3,431 கோடிக்கும் அதிகமான மோசடிகளைத் தடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் செய்தித்தாள் விளம்பரங்கள், டெல்லி மெட்ரோ அறிவிப்புகள், சமூக ஊடகப் பிரபலங்கள் (influencers), பிரசார் பாரதி நிகழ்ச்சிகள், அகில இந்திய வானொலி ஒலிபரப்புகள் மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள டிஜிட்டல் திரைகள் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. டிஜிட்டல் கைதுக்கு (digital arrest) வழிவகுக்கும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்குப் பதிலளிப்பதற்கு முன், மக்கள் "நிறுத்துங்கள், சிந்தியுங்கள், பிறகு செயல்படுங்கள்" (Stop, Think, and Act) என்று அறிவுறுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "மன் கி பாத்" (Mann ki Baat) நிகழ்ச்சியைப் பயன்படுத்தியுள்ளார்.
கூடுதலாக, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்திகள் (SMS) மூலம் வரும் ஒரு முறை பயன்படும் கடவுச்சொல் (OTP) முறையைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதற்கு மாற்றான அங்கீகார முறைகளைப் பரிந்துரைக்கும் ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. மேலும், அதன் கண்டுபிடிப்பு மையம் (Innovation Hub), பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து போலி கணக்குகளைக் கண்டறிய MuleHunter.AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் கைது மோசடி பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கிறது
இந்தியாவின் வேகமான டிஜிட்டல் மயமாக்கல், லட்சக்கணக்கான மக்கள், பல்வேறு சேவைகளை எளிதாகப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. இருப்பினும், இது எதிர்பாராதவிதமாக "இணையவழி மோசடி பெரும்பரவல்" (cyber fraud epidemic) என்று அழைக்கப்படும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது டிஜிட்டல் அமைப்புகளின்மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. குறிப்பாக, "டிஜிட்டல் கைது" (Digital Arrest) போன்ற மோசடிகள் உடனடி பண இழப்பை ஏற்படுத்துவதோடு, காலப்போக்கில் இந்தியாவின் டிஜிட்டல் சூழல் மீதான நம்பிக்கையையும் சிதைக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கடுமையான நிதி இழப்புகளைச் சந்திக்கின்றனர். இது சில நேரங்களில் அவர்களது குடும்பங்களைக் கடன் சுமைக்குள் தள்ளுகிறது. மேலும், பலர் பயம், அவமானம் மற்றும் குழப்பம் போன்ற நீண்டகால மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சில பாதிக்கப்பட்டவர்கள் இக்குற்றத்தைப் புகாரளிக்கத் தயங்குவதாலோ அல்லது தவிர்ப்பதாலோ, மோசடி செய்பவர்கள் திருடப்பட்டப் பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மிக விரைவாக மாற்றிவிடுவதாகக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மோசடிகள், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் டிஜிட்டல் அறிவுப் பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன. வேகமான டிஜிட்டல் மாற்றங்களுக்கு நமது சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பதையே இந்த மோசடிகள் காட்டுகின்றன. மேலும், உண்மையான அரசு உத்தரவுகளுக்கும் போலியான அறிவிப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படிக் கண்டறிவது என்பதில், முதியவர்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத மக்களிடையே இந்தச் சம்பவங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் போலி முத்திரைகளுடன் கூடிய தவறான நீதிமன்ற உத்தரவுகள் பரப்பப்பட்டது குறித்து நீதிமன்றம் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளது. அதாவது, இத்தகைய டிஜிட்டல் கைது மோசடிகள், நீதித்துறை அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடித்தளத்தையே சிதைக்கின்றன' என்று நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முறையில் நடக்கும் போலி கைதுகள் பற்றி உச்சநீதிமன்றம் கவனித்துள்ளது
உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம், சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளைக் கண்டறியவும், குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை முடக்கவும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) அல்லது இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்று கண்டறிய உதவுமாறு கேட்டுக்கொண்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) தொடர்பான விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அவசர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு முதலில் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மோசடிகளில் போலி வங்கிக் கணக்குகள் (mule accounts) முக்கியப் பங்கு வகிப்பதால், குறிப்பாக டிஜிட்டல் கைது மோசடிகளுக்காக வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்போது, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு (CBI) சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வரி ஏய்ப்பு மையங்களில் (offshore tax havens) இருந்து செயல்படும் இணைய குற்றவாளிகளைக் கண்டறிய, பன்னாட்டு காவல்துறை (Interpol) உதவியை நாடுமாறு உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. முறையான சோதனைகள் இன்றி ஒரே நபருக்குப் பல சிம்கார்டுகளை வழங்குவதை நிறுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு விதிமுறைகளை வலுப்படுத்துமாறு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கும், இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை விரைவாக உருவாக்குவதற்கும் மாநிலங்களே நேரடிப் பொறுப்பேற்கும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க இந்த முறை உதவுகிறது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டவை என்பதோடு, காவல்துறை வெறும் புகார்களுக்குப் பதிலளிப்பதைத் தாண்டி, குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இருப்பினும், இத்தகைய மோசடிகளை முழுமையாக ஒழிக்கத் தொழில்நுட்பம், நெறிமுறைகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 'டிஜிட்டல் கைது' மோசடிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்-ஆளுமை (e-governance) மீதான குடிமக்களின் நம்பிக்கையை அச்சுறுத்துகின்றன. இந்தச் இணையவழிக் குற்றங்களுக்கு எதிரானப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தால், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுவான சட்ட அடித்தளங்களுடன் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய திட்டங்களின் மூலம் கிடைத்த பாடங்கள்
இணையவழி குற்றங்கள் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த வலுவான மற்றும் தீவிரமான உலகளாவிய ஒத்துழைப்பு அவசியமாகும். 2001-ஆம் ஆண்டின் ஐரோப்பியக் கூட்டமைப்பின் புடாபெஸ்ட் ஒப்பந்தம் (Budapest Convention) இதற்கான முக்கிய சர்வதேச சட்டக் கட்டமைப்பாக உள்ளது. அதேபோல், இணைய குற்றங்களை எதிர்கொள்வதற்கான முக்கியமான உலகளாவிய முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தமும் (UN Convention) விளங்குகிறது.
பன்னாட்டுக் காவல்துறை (INTERPOL) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை (Europol) போன்ற நீண்டகாலமாகச் செயல்படும் அமைப்புகள், கூட்டு விசாரணைகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக, ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் செரெங்கெட்டி' (Operation Serengeti) மற்றும் இங்கிலாந்து நாட்டில் 'லேப்-ஹோஸ்ட்' (LabHost) முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU), டிஜிட்டல் சேவைகள் சட்டம் (Digital Services Act) பெரிய ஆன்லைன் நிறுவனங்களுக்கு சில முக்கியக் கடமைகளை விதித்துள்ளது. இதன்படி, அந்த நிறுவனங்கள் சட்டவிரோதமான பதிவுகளைப் புகாரளிக்க வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும், வரக்கூடிய அபாயங்களைக் கணித்துச் செயல்பட வேண்டும் மற்றும் தணிக்கைகளுக்கு (Audits) உட்பட வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை, இணையதளங்களை ஒரு பொறுப்புள்ள அமைப்பாகக் கருதுகிறது. குறிப்பாக, ஏமாற்றும் விளம்பரங்கள், டீப்ஃபேக் (Deepfake) அழைப்புகள் மற்றும் மோசடி செயலிகள் போன்ற அதிக ஆபத்துள்ள விஷயங்களில் இந்த நிறுவனங்களுக்கு அதிகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் பணப்பரிமாற்றச் சேவை சீர்திருத்தங்கள், இப்போது வங்கிகள் மற்றும் இடைத்தரகர்கள்மீது கூடுதல் பொறுப்பை சுமத்துகின்றன. சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களை அவர்கள் முடக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடையும்போது நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது, தவறுகளுக்குப் பயனாளர்களைக் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, சேவை வழங்கும் நிறுவனங்களையே பொறுப்பாக்கும் ஒரு நியாயமான மாற்றத்தைக் குறிக்கிறது. டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியாவும் இத்தகைய மாற்றங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.