இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென்னீர் அணு உலைகளை (LWR) அணுசக்தித் துறையின் முன்னுரிமையாகக் கருதுவது ஏன்? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி :


இந்தியா அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கத் தொடங்கி, உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மென்னீர் அணு  உலை (Light Water Reactor (LWR)) ஒன்றை விரைவாக உருவாக்குவது முக்கியமானதாக இருக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அறிந்துள்ளது. அணுசக்தித் துறை 900 மெகாவாட் மின்சக்தி உற்பத்தித் திறன் கொண்ட மென்னீர் அணு உலை திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துவதில் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான வடிவமைப்புப் பணிகள் 2015-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன.


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட, இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சட்டம், 2025-க்கும் இதுவே முக்கியக் காரணியாக அமைகிறது. கூடங்குளத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட ஆலைகளைப் போலவே, இறக்குமதி செய்யப்பட்ட மென்னீர் அணு உலை (LWR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா மேலும் பல அணுமின் திட்டங்களை அமைப்பதை இந்தச் சட்டம் சாத்தியமாக்குகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. உலகளாவிய அணுசக்தி திட்டத்தின் முக்கிய அங்கமாக மென்னீர் அணு உலைகள் அமைகின்றன. இவை இலகுவான நீர், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், எளிமையான வடிவமைப்பு, குறைந்த கட்டுமான செலவு, அளவிலான சிக்கனங்கள் மற்றும் அதிக வெப்ப திறன் போன்றவற்றைக் கொண்டுள்ளன.


2. தற்போது உலகின் சிவில் அணு உலை திறனில் 85%-க்கும் மேற்பட்டவை மென்னீர் அணு உலைகள் ஆகும். இந்தப் போக்குக்கு குறைந்தது மூன்று காரணங்கள் உள்ளன:


(i) மென்னீர் அணு உலைகள் (LWRs) கனநீர் உலைகளைவிட எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அவை குளிரூட்டலுக்கும் வினையைக் கட்டுப்படுத்துவதற்கும் சாதாரண நீரைப் பயன்படுத்துகின்றன. இது அவற்றின் தொழில்நுட்பத்தை, வழக்கமான நீர் அமைப்புகளைச் சார்ந்து இயங்கும் பொதுவான நிலக்கரி அல்லது எரிவாயு மின் நிலையங்களின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.


(ii) நிறுவப்பட்ட அணுசக்தித் திறனில் பெரும்பாலானவை மென்னீர் அணு உலைகள் வகையைச் சேர்ந்த உலைகளாக இருப்பதாலும் அவற்றின் உற்பத்திச் சிக்கனத்தின் காரணமாகக் குறைந்த கட்டுமானச் செலவுகளைக் கொண்டுள்ளன. இந்த உலைகள் அதிக வெப்பத் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.


(iii) மென்னீர் அணு உலைகள் சாதாரண நீரைப் பயன்படுத்தினாலும், அவற்றுக்கு எரிபொருளாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் (enriched uranium) தேவைப்படுகிறது. மேற்கத்திய உலகின் பெரும்பகுதியில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறுவது ஒரு தடையாக இல்லாததால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மென்னீர் அணு உலைகளை (LWRs) பரவலாகப் பயன்படுத்துகின்றன. அவை இப்போது பெரும்பாலான சர்வதேச உலைத் தொகுப்புகளின் (international reactor fleets) முதுகெலும்பாக விளங்குகின்றன.


மென்னீர் அணு உலை (light water reactor) ஏன் முக்கியமானது?


1. ஏற்கனவே உள்ள அழுத்தப்பட்ட கனநீர் (pressurised heavy water reactors (PHWR)) உலைகளுடன், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மென்னீர் அணு உலையையும் உருவாக்குவது, அணுசக்தி தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும்போது வெளிநாட்டு விநியோகஸ்தர்களுடன் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியாவுக்கு உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


2. முக்கியமாக, சர்வதேச உலை சந்தையில் மென்னீர் அணு உலைகளே அதிக அளவில் உள்ளன. இந்திய நிறுவனங்களை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சேர்க்கப்படாமல், அணுசக்தி தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதில் வெற்றி பெறுவது கடினமானதாக இருக்கும்.


3. மற்ற உலை வகைகளில் இந்தியா தனது முக்கிய பலங்களைத் தக்க வைத்துக் கொண்டாலும், ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய மென்னீர் அணு உலை சூழலமைப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சாந்தி சட்டத்தால் கொண்டுவரப்பட்ட சட்ட மாற்றங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.


4. குறிப்பாக, இந்தியாவின் சிவில் அணுசக்தித் திட்டம், 220 மெகாவாட் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் முதல் புதிய 700 மெகாவாட் அலகுகள் வரை கனநீர் உலைகளைத் தயாரிப்பதில் அதிக நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)) கனநீர் மற்றும் இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், இவற்றை உருவாக்குவதில் இந்தியா அதிக நிபுணத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், அவை இப்போது உலக அணுசக்தி சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மென்னீர் அணு உலைகளால் (light water reactors (LWRs)) படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம்


1. இந்தியாவின் அணுசக்திப் பயணம், சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே, 1948-ஆம் ஆண்டில் அணுசக்தி ஆணையம் உருவாக்கப்பட்டதன் மூலம் தொடங்கியது. 1956-ஆம் ஆண்டில், ஆசியாவின் முதல் ஆராய்ச்சி உலை, அப்சரா, த்ரோம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre (BARC)) உருவாக்கப்பட்டது.


2. ஜப்பானுக்குப் பிறகு, சீனாவுக்கு அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு முன்பே, 1969-ல் தாராப்பூரில் அணுமின் நிலையத்தை அமைத்த 2-வது ஆசிய நாடு இந்தியா ஆகும். மேலும், 1950 மற்றும் 1960களில் தனது மேற்கத்திய நட்பு நாடுகளின் உதவியுடன் ஒரு ஈர்க்கக்கூடிய அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் இந்தியா உருவாக்கியது.


3. எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணுசக்தியின் மூன்று கட்டத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு, இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜே பாபா மற்றும் வேக ஈனுலைகளின் (fast breeder reactors (FBRs)) தேவையை உணர்ந்த டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்கு இந்தியா கடன்பட்டுள்ளது. ஏனெனில், இந்த உலைகள் வளமான isotope-களைப் பிளவுபடக்கூடிய பொருட்களாக மாற்றுவதன் மூலம், அவை பயன்படுத்துவதைவிட அதிக அணு எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.


நிலை கட்டம்: அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)) மின்சாரம் தயாரிக்க இயற்கை யுரேனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், அவை பிளவுபடக்கூடிய புளூட்டோனியத்தையும் (Pu239) உற்பத்தி செய்கின்றன. இது பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிரித்தெடுக்கப்படலாம். இது கனநீரை (டியூட்டீரியம் ஆக்சைடு) குளிரூட்டியாகவும் வினைப்படுத்தியாகவும் பயன்படுத்துகிறது. இந்தத் திட்டம், இறக்குமதி செய்யப்பட்ட மென்னீர் அணு உலைகளின் கட்டுமானத்தால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Knowledge Nugget: India flags the Indigenous Light Water Reactor (LWR) as nuclear priority. But why?

நிலை 2: இது கல்பாக்கத்தில் உள்ளதைப் போன்ற வேக ஈனுலைகளை (Fast Breeder Reactors (FBRs)) நிறுவுவதையும், புளூட்டோனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்தி அணுசக்தித் திறனை அதிகரிப்பதையும், வளமான தோரியத்தை பிளவுபடக்கூடிய யுரேனியம் (U233) ஆக மாற்றுவதையும் நோக்ககமாக கொண்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வது, புளூட்டோனியம் இருப்பை திறமையாகப் பயன்படுத்துவதற்கு மிகவும் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.


நிலை 3: மூன்றாவது கட்டம் தோரியம்-யுரேனியம்-233 சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது கட்டத்தில் உருவாக்கப்படும் யுரேனியம்-233, மூன்றாவது கட்டத்தில் உள்ள மேம்பட்ட உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்பட்டு, இந்தியாவின் நீண்டகால எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். இதற்காக மேம்பட்ட கனநீர் உலை (Advanced Heavy Water Reactor (AHWR)) முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, ​​உருகிய உப்பு உலைகளைப் பயன்படுத்துவதும் ஒரு  வழியாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


2025ஆம் ஆண்டு  சாந்தி சட்டம் (SHANTI ACT) என்றால் என்ன?


1. டிசம்பர் மாத தொடக்கத்தில், நாடாளுமன்றம் இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI) Act) சட்டம், 2025-ஐ நிறைவேற்றியது. இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் அணுசக்தித் துறை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதில் ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டியது.


2. இந்தச் சட்டம் உலகளாவிய அணுசக்தி வர்த்தக விதிமுறைகளுக்கு ஏற்ற ஒரு முயற்சியாகும். இது 1962-ஆம் ஆண்டின் அணுசக்திச் (Atomic Energy Act) சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் (Civil Liability for Nuclear Damage Act) சட்டம் ஆகியவற்றை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவருகிறது.


3. புதிய சட்டம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் அணுமின் நிலையங்களைக் கட்டவும், அணு எரிபொருள், தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் கனிமப் பொருட்களைக் கொண்டு செல்வது, சேமிப்பது, இறக்குமதி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது போன்ற பணிகளைக் மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இதுவரை, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு (public sector) மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


\Original Article : India flags the Indigenous Light Water Reactor (LWR) as nuclear priority. But why? -Roshni Yadav

Share: