நேட்டோ அமைப்பு நிலைகுலைகிறது
இத்தகைய நடவடிக்கையினால் முதலில் பாதிக்கப்படக்கூடிய முக்கிய அமைப்பு வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) (North Atlantic Treaty Organisation (NATO)) ஆகும். பனிப்போரின் போது சோவியத் ஒன்றியத்திடமிருந்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, 1949-ஆம் ஆண்டில் 12 நாடுகளால் நேட்டோ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் முக்கிய கொள்கை என்னவென்றால், இதில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இது நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5-ல் (Article 5) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பின் பிரிவு 5-ஆனது (உறுப்பு நாடுகளுக்கான பாதுகாப்பு விதி) இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க இந்த விதியானது பயன்படுத்தப்பட்டது. கிரீன்லாந்தை நிர்வகிக்கும் நாடான டென்மார்க், இந்த விதியைப் பயன்படுத்த முதன்முதலில் முன்வந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து டென்மார்க் வீரர்கள் போரிட்டனர். அங்கு அந்த நாட்டு வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். நேட்டோ உறுப்பு நாடுகளுடன் ஒப்பிடுகையில், மக்கள்தொகை அடிப்படையில் பார்க்கும் இது மிகப்பெரிய உயிரிழப்பாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா கிரீன்லாந்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், அது நேட்டோ (NATO) அமைப்பையே அழித்துவிடும் என்கின்றனர். நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 (Article 5), அந்த அமைப்பிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு நாடு, மற்றொரு உறுப்பு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் ஒரு சூழலை அந்த நாடுகள் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால், தாங்கள் 'பிரிவு 5'-ஐப் பயன்படுத்துவோம் என்று டென்மார்க் அரசு கூறியுள்ளது. ஆனால், அதற்குப் பிறகான விளைவுகள் குறித்து பலரும் எச்சரிக்கின்றனர்.
இதில் மற்றொரு முரண்பாடு என்னவென்றால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் அமெரிக்காவின் எதிரிகளான ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் சாதகமாக அமைகின்றன. சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே நேட்டோ (NATO) அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பிற்குள் தற்போது ஏற்படும் உட்பூசல்கள், ரஷ்யாவிற்கும், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுக்கும் மட்டுமே சாதகமாக அமையும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நேட்டோ (NATO) அமைப்பை பலவீனப்படுத்தும் அல்லது உக்ரைன் போரில் நேட்டோ நாடுகளின் ஆதிக்கத்தை திசைதிருப்பும் எந்தவொரு செயலையும் புதின் ஆதரிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவே கிரீன்லாந்து திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரஷ்யாவைத் தடுக்க மிகச்சிறந்த வழி உக்ரைன் போரில் புதினைத் தோற்கடிப்பதுதான் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இப்போது கிரீன்லாந்து விவகாரத்தில் கவனம் செலுத்துவது அர்த்தமற்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.
நேட்டோ (NATO) அமைப்பின் பலம் என்பது அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்கும் அளிக்கப்படும் மரியாதையைப் பொறுத்தே அமைகிறது என்று அமெரிக்க செனட் வெளியுறவு உறவுக் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜீன் ஷாஹீன் (Jeanne Shaheen) கூறினார். ஜனவரி மாதம் 13-ஆம் தேதி ஜீன் ஷாஹீனும் லிசா முர்கோவ்ஸ்கியும் (Lisa Murkowski) இணைந்து 'நேட்டோ ஒற்றுமைப் பாதுகாப்புச் சட்டத்தை' (NATO Unity Protection Act) அறிமுகப்படுத்தியபோது இந்த அறிக்கையை வெளியிட்டனர். நேட்டோ உறுப்பு நாடுகளின் பகுதிகளை முற்றுகையிடவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது இணைத்துக்கொள்ளவோ அமெரிக்க பாதுகாப்புத் துறை அல்லது வெளியுறவுத் துறை நிதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
மூன்றாவதாக, 1951-ஆம் ஆண்டில் கிரீன்லாந்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் உட்பட, அமெரிக்காவிற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே அமெரிக்கா வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா ஒரு காலகட்டத்தில் கிரீன்லாந்தில் 17 ராணுவத் தளங்களை இயக்கி வந்தது. ஆனால், பின்னர் 16 தளங்கள் இனி தேவையில்லை என்று அமெரிக்கா அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால், தற்போதும் கூட அமெரிக்க அரசாங்கம் விரும்பினால், இந்தத் தளங்களை உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.
நேட்டோ (NATO) அமைப்பின் கடற்படை வலிமையை எதிர்கொள்வதற்காக, ஆர்க்டிக் பகுதியில் சீனாவும் ரஷ்யாவும் தங்களது ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றன என்று டிரம்ப் கூறுவது ஏற்கத்தக்கது என்றாலும் அந்தப் பகுதிகள் குறித்த அவரது கணிப்பு தவறு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களின் கவனம் கிரீன்லாந்து பகுதிகளின் மீது இல்லை என்றும் மாறாக அலாஸ்காவை (Alaska) சுற்றியுள்ள கடல் பகுதிகளில்தான் அந்நாடுகளின் கவனம் உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆர்க்டிக் கடற்பகுதியில் சீனாவும் ரஷ்யாவும் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக, பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் கேத்லீன் ஹிக்ஸ் ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில் தெரிவித்தார். ரஷ்யாவின் ஆர்க்டிக் எரிசக்தி திட்டங்களுக்கு சீனா பெருமளவில் நிதியுதவி அளிக்கிறது என்றும் அலாஸ்கா கடற்கரை பகுதிகளில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது உட்பட இரு நாடுகளும் தங்களது ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
பனிப்போர் காலத்தின் போது ஆர்க்டிக் பகுதியில் அமைக்கப்பட்ட அமெரிக்காவின் பெரும்பாலான உள்கட்டமைப்புகள், தற்போது உறைந்த நிலப்பரப்புகள் உருகுவதாலும் கடற்கரை அரிப்பினாலும் சிதைந்து வருவதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் (Pentagon) வெளியிட்ட (2024 Arctic Strategy) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கும், அலாஸ்காவைச் சுற்றியுள்ள பகுதிகளே அதிக பாதிப்புக்கு உள்ளவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆதரவாளர்கள்
கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப்பின் திட்டம் என்ன? இராணுவரீதியாக அதைக் கைப்பற்றும் வாய்ப்பு நிராகரிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது குறித்து ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இருப்பினும், கிரீன்லாந்தை விற்பதற்கு விருப்பமில்லை என்பதை டென்மார்க் அரசு தெளிவாகத் தெரிவித்துவிட்டது. இந்தப் பிரச்சனை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் பகுதியிலும் (Copenhagen), கிரீன்லாந்து தலைநகர் நூக் (Nuuk) பகுதியிலும் மிகுந்த அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து தொடர்பான வணிக ரீதியான ஒப்பந்தத்தை டென்மார்க் அரசு பரிசீலித்தால்கூட, அந்நாட்டு அரசாங்கத்தின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிரம்பிற்கு நெருக்கமான பல்வேறு குழுக்களிடமிருந்து கிரீன்லாந்து பகுதியைக் கைப்பற்றுவதற்கான அழுத்தம் வருவதாகத் தெரிகிறது. பேபால் (PayPal) மற்றும் பாலந்திர் (Palantir) நிறுவனங்களின் நிறுவனரும், டிரம்பின் நண்பருமான பீட்டர் தியல், கிரீன்லாந்து போன்ற ஒரு இடத்தில் நாடுகளுக்கு அப்பாற்பட்ட, கட்டுப்பாடுகளற்ற ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்குவது பற்றி விவாதித்துள்ளார். எலான் மஸ்க், கிரீன்லாந்தின் பனிக்கட்டிகளுக்கு அடியில் இருக்கும் அரிய மண் தாதுக்கள் (rare earth minerals) மீது ஆர்வம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எஸ்டீ லாடர் (Estée Lauder) நிறுவனத்தின் தலைவரும், டிரம்பின் நம்பிக்கைக்குரியவருமான அமெரிக்கப் பணக்காரர் ரொனால்ட் லாடர், கிரீன்லாந்து குறித்த யோசனையை டிரம்பிடம் முதலில் கூறியவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். டிரம்ப் இந்த விவகாரத்தை ஒரு வணிகநில மேம்பாட்டுத் திட்டமாகக் கருதுகிறார் என்றும் இது அவரின் வழக்கமான நடைமுறை என்றும் கூறுகின்றனர்.
கிரீன்லாந்து பகுதியானது வேறொரு நாட்டினால் ஆக்கிரமிக்கப்படுகிற சூழலில் அதிகம் பதிப்படையும் நாடு கனடாவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், வட அமெரிக்க நாடான கனடா அனைத்து பக்கங்களிலிருந்தும் மற்ற நாடுகளால் சூழப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கனடா நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அணு ஆயுதங்கள் அவசியமா என்பது குறித்த விவாதம் அந்நாட்டில் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
மாறிவரும் இந்தச் சூழ்நிலையில், அணு ஆயுதங்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம் என்று கனடா நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் கூறியுள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்து கனடா நாட்டு மக்கள் கேள்விகளை கேட்கத் தொடங்க வேண்டும் என்று ராயல் டேனிஷ் பாதுகாப்பு கல்லூரியின் (Royal Danish Defence College) இராணுவ செயல்பாட்டு உதவிப் பேராசிரியரான ஜீன்-பிரான்சுவா பெலஞ்சர் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து இப்போது கனடாவில் அதிக ஆதரவைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
நேட்டோ (NATO) அமைப்பின் கூட்டமைப்பு நாடுகள் மீதான எந்த ஒரு நடவடிக்கைகளும், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் பெரிய அளவிலான அணு ஆயுத தயாரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அதைத் தொடர்ந்து தென் கொரியாவும் ஜப்பானும் அதே நடவடிக்கைகளை பின்பற்றலாம் என்றும் எச்சரிக்கின்றனர். இது அனைத்து நாடுகளுக்கிடையேயான அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
Original Article : What America’s Greenland claim could mean for NATO, Russia, and Canada?