பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக பெண் மீது வழக்குப்பதிவு: இந்தியாவில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவது குற்றமா? -அபூர்வா விஸ்வநாத்

 அரசியல் தலைவர்களை விமர்சிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து விவாதங்கள் நடந்துவரும் நிலையில், ஆபாசம், பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு போன்ற வழக்குகளைச் சட்டம் எவ்வாறு அணுகுகிறது? மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள் தொடர்பான சமீபத்திய வழக்கு என்ன?


டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசிய கருத்துகளுக்காக, நொய்டா காவல்துறையினர் 25 வயதான ருச்சிகா சிங் என்ற பெண் மீது கடந்த புதன்கிழமை ஜூலை மாதம் 29-ஆம் தேதி "பூஜ்ஜிய  முதல் தகவல் அறிக்கை" (Zero FIR) பதிவு செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கை பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 352 (இழிவுபடுத்துதல்), 353(1) (பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தல்) மற்றும் 356(1) (அவதூறு) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜீரோ எஃப்.ஐ.ஆர். என்பது இந்தியாவில் ஒரு சிறப்பு வகை காவல் புகார் ஆகும். இதை குற்றம் நடைபெற்ற இடத்தைப் பொருட்படுத்தாமல் எந்த காவல்  நிலையத்திலும் பதிவு செய்யலாம். இதற்கு ‘0’ என்ற வரிசை எண் ஒதுக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் அதிகாரமுள்ள சரியான காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.


இந்த வழக்கு பொதுமக்களிடையே ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நாகரீகமற்ற வார்த்தைகள் குறித்த ஒழுக்க நெறிமுறைகள் சார்ந்த கருத்துகளாக மாறியுள்ளது. இந்தியாவில் நாகரீகமற்ற மொழியைப் பேசுவது குற்றமா?


ஆபாசம் ஒரு குற்றமாக


இத்தகைய மோதல்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) பிரிவு-296 ஆகும் (முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு-294). இப்பிரிவின்படி, மற்றவர்களுக்கு வெறுப்பூட்டும் வகையில், (அ) எந்தவொரு பொது இடத்திலும் ஏதேனும் ஆபாசமான செயலைச் செய்பவர், அல்லது (ஆ) பொது இடத்தில் அல்லது அதற்கு அருகில் ஆபாசமான பாடல், கவிதை அல்லது வார்த்தைகளைப் பயன்படுத்துபவர், வாசிப்பவர் அல்லது பேசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.


பொது இடங்களில் சத்தமாகவும், நாகரிகமின்றியும் ஒருவர் நடந்துகொள்ளும்போது பொதுவாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு இதுவாகும். ஆனால், "ஆபாசம்" (Obscene) என்பதற்குச் சட்டப்பூர்வமாகத் துல்லியமான விளக்கம் உள்ளது. அதை நீதிமன்றங்கள் மிகக்குறுகிய வரம்பிற்குள்ளேயே விளக்கியுள்ளன.


ஆபாசத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்


டி.எச். லாரன்ஸ் எழுதிய 'Lady Chatterley’s Lover' என்ற கடைசி நாவல் இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது, 'ஆபாசம்' என்பதற்கான சட்டரீதியான வரைவிலக்கணம் சோதனைக்கு உள்ளானது. 1865-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சித் டி. உதேசி எதிர் மகாராஷ்டிர அரசு (Ranjit D. Udeshi vs State of Maharashtra) வழக்கில், உச்சநீதிமன்றம் இந்தத் தடையை உறுதி செய்ததுடன், ஆபாசப் புத்தகங்களை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு-292 செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பளித்தது.


இவ்வாறு தீர்ப்பளித்தபோது, ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க 1868-ஆம் ஆண்டின் ஆங்கிலேய சட்ட விதியான 'ஹிக்லின் சோதனையை' (Hicklin test) நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்தச் சோதனையின்படி, ஒரு புத்தகத்தின் தனிப்பட்ட ஒரு பகுதி மட்டுமே ஆபாசமாக இருந்தாலும், அது மனதளவில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாசகர்களைச் சீரழிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தால், அந்த முழுப் படைப்பும் ஆபாசமானது என்றே கருதப்படும். இதன் அடிப்படையில், 'Lady Chatterley’s Lover' நாவல் ஆபாசமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Hicklin Test (ஹிக்லின் சோதனை): 19-ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயச் சட்ட விதி. இதன்படி, ஒரு புத்தகத்தில் உள்ள ஒரே ஒரு வரி அல்லது காட்சி ஆபாசமாக இருந்தாலும், முழுப் புத்தகமும் ஆபாசமானது எனக் கருதப்படும்.


ஆங்கிலேயச் சட்டம் காலப்போக்கில் இந்த பழைய அணுகுமுறையைக் கைவிட்டபோதிலும், இந்திய நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக ஹிக்லின் சோதனை முறையையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. ஆனால், 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற தூர்தர்ஷன் எதிர். ஆனந்த் பட்வர்தன் (Doordarshan vs Anand Patwardhan) வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டது. ஆனந்த் பட்வர்தனின் ‘Father, Son and Holy War’ என்ற ஆவணப் படத்திற்கு 'A' சான்றிதழ் (Adults only) வழங்கப்பட்டிருந்த காரணத்தால், அதைத் திரையிட தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் மறுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப அனுமதித்தது. மேலும், ஒரு படைப்பைத் தனித்தனி காட்சிகளாகப் பிரித்துப் பார்க்காமல், அதை முழுமையாகவும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலும் பார்த்து மட்டுமே அது ஆபாசமானதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.


2014-ஆம் ஆண்டு அவிக் சர்க்கார் எதிர் மேற்கு வங்க அரசு (Aveek Sarkar vs State of West Bengal) வழக்கில் இந்தச் சட்டம் மேலும் மாற்றம் கண்டது. டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் மற்றும் அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவியின் நிர்வாணப் புகைப்படம் ஆபாசமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், பழைய 'ஹிக்லின் சோதனை' முறையை அதிகாரப்பூர்வமாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'சமூக நெறிமுறைகள் சோதனை' (Community Standards Test) என்ற முறையைக் கொண்டுவந்தது. இந்தப் புதிய சோதனையின்படி, ஒரு சாமானிய மனிதன் இன்றைய காலத்தின் சமூகநெறிமுறைகளின் அடிப்படையில் அணுகும்போது, ஒரு விஷயம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருந்தால் மட்டுமே அது ஆபாசமானதாகக் கருதப்படும்.


பாலின உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் அமைந்த பாலின தொடர்பான விஷயங்கள் மட்டுமே 'ஆபாசமானது' (Obscene) எனக் கருதப்பட முடியும். இருப்பினும், ஒரு விஷயம் ஆபாசமானதா இல்லையா என்பது, இன்றைய சமுதாயத்தின் பொதுவான தரநிலைகளின் அடிப்படையில், ஒரு சராசரி மனிதனின் பார்வையிலிருந்தே மதிப்பிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 


சட்ட அறிஞர் கௌதம் பாட்டியா, 1957-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராத் எதிர். அமெரிக்கா (Roth vs United States) வழக்கிலிருந்து எடுக்கப்பட்ட சமூக நெறிமுறைகள் (Community standards) என்ற வார்த்தையில் உள்ள ஒரு சிக்கலைச் சுட்டிக்காட்டினார். ராத் தீர்ப்பில் சமூக நெறிமுறைகள், அப்பொருள் தெளிவாகப் புண்படுத்தும் வகையில் உள்ளதா, மற்றும் அது சமூக மதிப்பு அற்றதா என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட சோதனைமுறை பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் உச்சநீதிமன்றம் இதில் முதல் பகுதியை மட்டுமே ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கினார். பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுவது மட்டும் ஏன் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் விளக்காததால் இது சட்டத்தை மிகவும் தெளிவற்றதாக மாற்றுகிறது என்று வாதிட்ட அவர், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் எது ஒழுக்கமானது என்பதை பெரும்பான்மையினரின் கருத்துக்கள் மட்டுமே தீர்மானிக்க இது வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.


தகாத அல்லது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குற்றமா? 


2024-ஆம் ஆண்டில், ‘TVF’ நிறுவனத்தின் 'College Romance' என்ற வலைத்தொடரின் ஒரு பகுதியில் அதிகளவில் அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் (IT Act) சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஆபாசமாக உள்ளது எனக் கூறி, அதைத் தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. தகாத அல்லது அநாகரிகமான வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றை ஆபாசமானது (Obscene) என்று கூறிவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சில வார்த்தைகளுக்குப் பாலினரீதியான அர்த்தங்கள் இருந்தாலும், அவை வழக்கமாக மக்களின் அன்றாடப் பேச்சில் கோபம், ஏமாற்றம், துக்கம், ஆத்திரம் அல்லது உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, பாலியல் எண்ணத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எனவே, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மட்டுமே ஒரு விஷயத்தை ஆபாசமானதாக மாற்றிவிடாது.


இதே கொள்கையை 2026-ஆம் ஆண்டில் மேலும் இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பின்பற்றியது. ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிவகுமார் எதிர் மாநில அரசு (Sivakumar v State) வழக்கில், தகராறின் போது ஒருவரை "bastard" என்று திட்டியதற்காகப் பிரிவு-294-ன்கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விடுவித்தது. அதேபோல, ஜூலை மாதம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற மணி எதிர் மாநில அரசு (Mani vs State) வழக்கில், ஆபாசம் என்பது நாகரிகமற்ற அல்லது தரக்குறைவான வார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தகாத வார்த்தைகளையோ அல்லது புண்படுத்தும் மொழியையோ பயன்படுத்துவது மரியாதையற்றதாகவோ அல்லது கேட்பதற்குச் சங்கடமாகவோ இருந்தாலும், அதை உடனடியாக ஆபாசக் குற்றம் என்று கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியது.


ஒரு பேச்சு "ஆபாசமானது" (Obscene) எனத் தீர்மானிக்கப்பட வேண்டுமென்றால், அது பாலின உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதாவது, அது தீவிரமான மற்றும் தகாத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலோ அல்லது தூண்டும் வகையிலோ இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அளவுகோலுக்குள் வரவில்லை என்றால், அது பொதுவாகக் குற்றவியல் சட்டத்தின்கீழ் ஆபாசமான ஒன்றாகக் கருதப்படாது.


நொய்டா வழக்கு


பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையில் (Zero FIR) பயன்படுத்தப்பட்டுள்ள பிரிவுகள் (இழிவுபடுத்துதல், பொதுமக்களுக்குக் கெடுதல் விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல்) பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்டவை ஆகும். மேலும், இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட சட்டப்பூர்வ சோதனைகள் உள்ளன. பிரிவு-352-ன்கீழ், குற்றம்சாட்டப்பட்டவர் செய்த இழிவுபடுத்தல் செயல், யாரோ ஒருவரின் மனதைப் புண்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அது உண்மையிலேயே பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடனோ அல்லது அமைதியைக் கெடுக்கக்கூடும் என்ற நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.


பிரிவு-253 (பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல்) என்பது ஆயுதப்படைகளில் கிளர்ச்சியைத் தூண்டுவது, அரசுக்கு எதிராகக் குற்றங்கள் செய்ய வழிவகுக்கும் அச்சத்தை உருவாக்குவது அல்லது சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவது போன்ற கடுமையான குற்றங்களைத் தூண்டும் செயல்களைக் கையாளுவதாகும். இதற்கு ஒரு அரசியல் தலைவரைப் பற்றி வெறுமனே கடுமையான கருத்துக்களைத் தெரிவிப்பதைவிட, மிக உயர்ந்த அளவிலான தவறான செயல்பாடு தேவைப்படுகிறது. அதேபோல, அவதூறு சட்டத்திலும் சில விலக்குகள் உள்ளன. ஒரு பொதுப் பதவியில் இருக்கும் நபரின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளைப் பற்றி நல்லெண்ணத்துடன் செய்யப்படும் விமர்சனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.


2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், சமூக வலைதளங்களில் ஓர் அரசியல் கட்சியை "சாபக்கேடு" (Scourge) என்றோ அல்லது "தொல்லை/பூச்சி" (Pest) என்றோ விமர்சிப்பது கடுமையானதாகவோ அல்லது புண்படுத்துவதாகவோ இருக்கலாம்.  ஆனால், அது பொது அமைதிக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வரை, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 352 அல்லது 353-ன்கீழ் குற்றமாகாது என்று அறிவித்தது. மேலும், இதுபோன்ற கருத்துக்கள் அதிகபட்சமாக அவதூறுச் சட்டத்தின்கீழ் மட்டுமே வரக்கூடும் என்றும், அரசியல் பேச்சு சுதந்திரத்திற்கான அரசியல் அமைப்புச் சட்டப் பாதுகாப்பிற்குட்பட்டது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.               


Original Link : FIR against woman over comments on PM Modi: Is crude language a crime in India? -Apurva Vishwanath

Share:

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அதன் வருவாய் அதற்கேற்ப ஏன் அதிகரிக்கவில்லை? -அருண் ஜனார்தன்

 தமிழ்நாடு அரசு வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் வருவாய்க்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிவதே இக்குழுவின் முக்கிய சவாலாகும்.

நீண்டகாலமாக, தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது மோட்டார் வாகனங்கள் (Automobiles) மற்றும் மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கிறது, ஜவுளிகளை ஏற்றுமதி செய்கிறது, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கிறது, நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகளை உருவாக்குகிறது, மேலும் சேவைத் துறையையும் சீராக விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பாலான வழக்கமான அளவுகோல்களின்படி, மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.


இருப்பினும், மாநில நிதிநிலை குறித்து அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய வெள்ளையறிக்கை (White Paper), பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரம் வளர்ந்த போதிலும், அரசின் நிதிநிலைமை பலவீனமடைந்துள்ளதைக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு இணையான வேகத்தில் அரசின் வருவாய் உயரவில்லை. மாறாக, கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் நிதிச் சுதந்திரம் குறைந்துள்ளது.


இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் 'வருவாய் பெருக்குதல் குழுவை' (Revenue Augmentation Committee) அமைத்துள்ளது.


எழுத்துப்பூர்வமாக, இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தெளிவானது. வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல், வரி ஏய்ப்புகளைக் கட்டுப்படுத்துதல், புதிய வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைக் கண்டறிதல், அத்துடன் கலால், பதிவுத் துறை, சுரங்கம், வணிக வரிகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தல். மேலும், தொழில்நுட்பத்தைப் பலப்படுத்துதல் மற்றும் மதுபானம், பொதுச் சொத்துக்கள் மூலம் வரும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளை ஆலோசித்தல்.


ஆனால், வெள்ளை அறிக்கையின் வழியே நோக்கும்போது, இக்குழுவிடம் உண்மையில் மிகப்பரிய ஒரு கேள்விக்கே விடை கேட்கப்படுகிறது. மாநிலத்தின் சொந்தப் பொருளாதார வளர்ச்சியை, அதன் வருவாய் ஏன் பிரதிபலிக்காமல் நின்றுவிட்டது?

வளர்ச்சியும் வருவாயும்: முரண்பாடு


பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் பொருளாதாரம் வளரும்போது, அரசின் வருவாயும் அதிகரிக்க வேண்டும். தொழிற்சாலைகள் அதிகரித்தால் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் அதிகரிக்கும். நில விற்பனை அதிகமானால் பதிவுத் துறை வருவாய் உயரும். வாகனங்களின் எண்ணிக்கை பெருகினால் மோட்டார் வாகன வரிகள் அதிகளவில் கிடைக்கும். மக்களின் வருமானம் உயரும்போது அவர்களின் செலவினங்களும், அதைத் தொடர்ந்து வரி வசூலும் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியையும் அரசின் வருவாய் வளர்ச்சியையும் இணைக்கும் இந்தத் தொடர்பைப் பொருளாதார நிபுணர்கள் 'வருவாய் மிதப்புத்தன்மை' (Revenue Buoyancy) என்று அழைக்கிறார்கள்.


இருப்பினும், கொரோனா பாதிப்பிலிருந்து மாநிலப் பொருளாதாரம் மீண்டு வந்த பிறகும்கூட, தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் (மாநிலத்தால் நேரடியாக வசூலிக்கப்படும் வரிகள்) பலவீனமடைந்துள்ளதை இந்த 'வெள்ளை அறிக்கை' சுட்டிக்காட்டுகிறது.


மாநிலத்தின் சொந்த வரி வருவாய், அதன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) வகிக்கும் பங்கு 2021–22-ஆம் நிதியாண்டில் 5.93 சதவீதமாக இருந்து, 2025–26-ஆம் ஆண்டில் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வந்தபோதிலும், ஆய்வு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் பதிவான மிகக் குறைந்த அளவு இதுவாகும். இந்த வீழ்ச்சியானது ஒரு தற்காலிகப் பிரச்சனை அல்ல, மாறாக இது அமைப்பியல் சார்ந்த ஒரு தீவிரப் பிரச்சனை என்று வெள்ளை அறிக்கையின் மூலம் கண்டறியப்படுகிறது.

இது இக்குழுவின் பங்களிப்பை மாற்றி அமைக்கிறது. இதன் வெற்றி என்பது, அடுத்த மூன்று மாதங்களில் இது எந்த அளவிற்குக் கூடுதல் வருவாயைக் கண்டறிகிறது என்பதில் மட்டும் இல்லை. அதைவிட முக்கியமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் வருவாய்க்கும் இடையே உள்ள நீண்டகாலத் தொடர்பை இக்குழு மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.


'இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அதற்கேற்ப அரசின் வருவாயும் இயற்கையாகவே உயருமானால், இக்குழு மாநிலத்தின் அமைப்பியல் சார்ந்த பிரச்சனையை தீர்த்துவிட்டது என்று அர்த்தம். ஆனால், இந்த இடைவெளி தொடர்ந்து நீடித்தால், குறுகியகாலத்தில் கிடைக்கும் எந்தவொரு வருவாய் உயர்வும் ஒரு தற்காலிக நிதிச் சரிசெய்தலாக மட்டுமே இருக்கும்' என்று மாநில நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


வரி அமைப்பில் உள்ள குறைகளைத் தேடுதல்


நிர்வாகக் குறைபாடுகள், நிதி இழப்புகள் மற்றும் ஊழல் ஆகியவையே வருவாய் இழப்பிற்கு முக்கியக் காரணங்கள் என வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்தக் கசிவுகளைக் கண்டறிவது இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.


“மாறிவரும் பொருளாதாரத்திற்கு ஏற்ப மாநிலத்தின் வருவாய் அமைப்பு நடைமுறையில் உள்ளதா என்பதே உண்மையான கேள்வி” என்று மாநில நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குத் தெரிவித்தார்.


"வேகமாக வளர்ந்துவரும் சில துறைகள் வருவாய்க் கணக்கீட்டில் சரியாகச் சேர்க்கப்படாமல் போகலாம். சில வர்த்தகங்களின் பொருளாதார மதிப்பிற்கு இணையான வரிகள் விதிக்கப்படாமல் குறைவாக இருக்கக்கூடும். வேறு சில துறைகளில் வரிகள் சட்டப்பூர்வமாக இருந்தாலும், அவற்றை வசூலிக்கும் நடைமுறை பலவீனமாக இருக்கலாம். நிர்வாகச் சீர்கேடு, வரி ஏய்ப்பு மற்றும் வரி விலக்குகள் ஆகியவை இணைந்து, நாட்டின் பொருளாதாரம் ஈட்டும் வருவாயை அரசு முறையாகப் பெறுவதைத் தடுக்கின்றன. அதனால்தான், வெறும் புதிய வரிகளைப் பரிந்துரைப்பதுடன் நிறுத்திவிடாமல், வரி இணக்கம், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை பல்வேறு துறைகளில் ஆராயும் அதிகாரம் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது," என்றும் தெரிவித்துள்ளார்.


இதன் முக்கிய நோக்கம் என்பது வெறும் புதிய வரிகளை விதிப்பது மட்டும் அல்ல. மாநில அரசு எங்கு வருவாயை இழக்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதே ஆகும்.


வருவாய் என்பது நிதிப் பதிவேட்டின் ஒரு பக்கம் மட்டுமே


இந்தக் குழுவின் தலைப்பு 'வருவாயைப் பெருக்குவது' குறித்து கவனம் செலுத்தினாலும், வெள்ளை அறிக்கை மற்றும் அதன் பின்னணியில் உள்ள கொள்கை சிந்தனைகள் இரண்டும் அதற்கு சமமான மற்றொரு முக்கியமான கேள்வியைச் சுட்டிக்காட்டுகின்றன. "பொதுமக்களின் பணம் எவ்வளவு திறமையாகச் செலவிடப்படுகிறது?"


"அரசு நிதித்துறை என்பது அதிக வரியைச் சேகரிப்பதன் மூலம் மட்டுமே முன்னேறிவிடாது. செலவினப் பக்கத்தில் உள்ள கையாடல் மற்றும் வீண் செலவுகளைக் குறைக்கும்போதும் மேம்படுகிறது. முறையற்ற முறையில் செலவழிக்கப்படும் ஒரு ரூபாய் என்பது, அரசிடம் சேராமலேயே போன ஒரு ரூபாய்க்கு இணையான நிதிப் பாதிப்பையே ஏற்படுத்தும்" என்று மாநில நிதி மற்றும் செலவினப் பிரிவுகளுடன் தொடர்புடைய மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.


இது, இக்குழுவின் சிக்கலை வெறும் வரித் துறைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல் மேலும் விரிவுபடுத்துகிறது. "கொள்முதல் அமைப்புகள், திட்டங்களைச் செயல்படுத்துதல், மானியங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் விநியோக முறைகள் ஆகிய அனைத்துமே நிதித் திறனைப் பாதுகாப்பது பற்றிய உரையாடலின் ஒரு பகுதியாக மாறுகின்றன. ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகள் ஆகியவற்றுக்காக மாநிலத்தின் வருவாயில் பெரும் பகுதி செலவிடப்படுகின்றன என்றும்; இதனால் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மூலதன முதலீடுகளுக்கான நிதிப் பங்கீடு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றும் இந்த வெள்ளை அறிக்கையே குறிப்பிடுகிறது" என்றும் கூறினார்.


எனவே, செலவினங்களின் திறனை மேம்படுத்துவது என்பது வரி செலுத்துவோர்மீது கூடுதல் சுமையைச் சுமத்தாமல், அரசின் பொது ஆதாரங்களைப் பெருக்குவதற்கான மற்றொரு சிறந்த வழியாக அமைகிறது.


வரி அல்லாத வருவாயைச் சீரமைத்தல் 


பொதுத்துறை நிறுவனங்களின் ஈவுத்தொகைகள், நிலங்களை பணமாக்குதல், சேவைக்கட்டணங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் உள்ளிட்ட வரி அல்லாத வருவாய்களை ஆய்வு செய்யுமாறு அக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இது குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவை பற்றிய ஒரு பரந்த புரிதலைப் பிரதிபலிக்கிறது. அரசாங்கம் நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கு வரிகள் மட்டுமே ஒரே வழி கிடையாது.


அரசு வழங்கும் பொதுச்சேவைகளின் தரமே, மக்கள் சேவைக்கட்டணங்கள் மற்றும் கட்டண விகிதங்களை விரும்பிச் செலுத்துவதை தீர்மானிக்கிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குடிநீர் விநியோகம், போக்குவரத்து, பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் அரசுச் சேவைகள் போன்றவை, பயனாளிகள் தாங்கள் பெறும் சேவைக்கு ஏற்ற மதிப்பு இருப்பதாக உணரும்போது மட்டுமே நிதிரீதியாகத் தற்சார்பு அடைகின்றன. எனவே, நிதிச் சீர்திருத்தம் என்பது நிர்வாகச் சீர்திருத்தத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொதுச்சேவைகளின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் ஒரே நேரத்தில் உயர்த்தாமல், அரசால் வரி அல்லாத வருவாயை நிலையான முறையில் உயர்த்த முடியாது. 


இந்தக் குழுவின் குறிப்பு விதிகளில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. டிஜிட்டல் அமைப்புகள் சட்ட நடைமுறைகளை எளிதாக்கவும், தனிநபர் தன்னிச்சையான முடிவுகளைக் குறைக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும் உதவும். இருப்பினும், பல்வேறு துறைகளின் அனுபவத்தைப் பார்க்கும்போது, தொழில்நுட்பம் மட்டுமே ஊழலை முழுமையாக ஒழித்துவிடாது என்பதைக் காட்டுகிறது.


"சாலைப் போக்குவரத்துத் துறை உட்பட பல துறைகள் ஏற்கனவே கணிசமான அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏதுவாக நிறுவனங்களே தங்களை மெதுவாக மாற்றியமைத்துக் கொள்வதால், ஊழல்களும் நீடிக்கின்றன. எனவே, சவால் என்பது வெறும் டிஜிட்டல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் மட்டும் இல்லை. மாறாக, ஆட்சியை வலுப்படுத்துவதில்தான் உள்ளது. ஊக்கத்தொகைகளைச் சீரமைத்தல், பொறுப்புணர்வை அதிகரித்தல், கண்காணிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை நிறுவனங்கள் புதிய வழிகளில் கடந்து செல்ல முடியாதவாறு உறுதி செய்தல் ஆகியவை அவசியமாகும்" என்று மாநில நிதித் துறையுடன் இணைந்து பல அரசுத் திட்டங்களுக்குச் ஆலோசகராக இருக்கும் நிபுணர் கூறினார். தொழில்நுட்பம் நிர்வாகத் திறனை மேம்படுத்துமே தவிர, அது நிர்வாகத்திற்கு மாற்றாக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


கடினமான முடிவுகள், கட்டமைப்புச் சார்ந்த சவால்கள்


வரி இணக்கத்தை (Tax compliance) மேம்படுத்துவது அரசியல்ரீதியாக எளிய காரியமாகத் தோன்றினாலும், குழுவின் பிற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பெரும் விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வழிவகுக்கலாம். பயனர் கட்டணங்கள், மதுபானக் கொள்கை, அரசுச் சொத்துக்களைப் பணமாக்குதல் மற்றும் பிற வரிசாரா வருவாய்கள் (Non-tax revenues) குறித்து ஆய்வு செய்ய இந்தக் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.


இவை ஒவ்வொன்றிலும் சாதக-பாதகங்கள் உள்ளன. சொத்துப்பதிவுத் தொகையை உயர்த்துவது வணிகநிலச் சந்தையைப் பாதிக்கக்கூடும். குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியச் சேவைக்கான கட்டணங்களை மாற்றுவது மக்களின் வாங்கு திறனைப் பாதிக்கலாம். மதுபானக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வது வெறும் அரசு வருவாயைத் தாண்டிப் பல கேள்விகளுக்கு வழிவகுக்கும். மதுபானங்களை அரசே சில்லறை விற்பனை செய்வது போன்ற வணிகச் செயல்பாடுகளில் அரசின் பங்கு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



மேலும், இந்த புதிய குழு அமைக்கப்பட்டதையும் அதன் நோக்கத்தையும் அறிந்த பல வல்லுநர்கள் கூறுவதாவது, செலவினச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது, ஒவ்வொரு திட்டமும் அதற்காகச் செலவழிக்கப்படும் அரசுப் பணத்திற்கு ஏற்பத் தகுந்த பலன்களைத் தருகிறதா என்பதைச் சில கடுமையான கேள்விகள் கேட்டு ஆய்வு செய்ய வேண்டியிருக்கலாம் என்கின்றனர். 


எனவே, இந்தக் குழுவின் முன் உள்ள சிக்கல் அரசியல்ரீதியானதும்கூட. ஒவ்வொரு சீர்திருத்தமும் சிலருக்குப் நன்மைகளையும், அதேவேளையில் சிலருக்கு ஏற்கனவே கிடைத்துவரும் பலன்களையும் இழப்பதற்கான சூழலையும் உருவாக்குகிறது.


மிகவும் கடினமான சவால் நிர்வாகத்திற்குள்ளேயே அடங்கியுள்ளது. ஏனெனில், வருவாய் இழப்புகள் என்பது ஏதோ ஒரு தனிநபரின் ஊழலால் மட்டும் உருவாவதில்லை. மாறாக, பலதரப்பட்ட நபர்கள் இணைந்து செயல்படும் ஆழமாக வேரூன்றிய ஒரு தவறான அமைப்பினாலேயே ஏற்படுகின்றன. குறிப்பாகச் சுரங்கம், இயற்கை வளங்கள், ஒப்பந்தங்கள், ஒழுங்குமுறை மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற துறைகளில் நடக்கும் தவறுகள், தனிப்பட்ட நபர்களின் தோல்வியாக இல்லாமல், ஒரு வலையமைப்பாகவே பிணைக்கப்பட்டு இயங்குகின்றன.


இத்தகைய சட்டவிரோத நிதி இழப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஊழல் தொடர்ந்து நிலைத்திருக்க வழிவகுக்கும் நிறுவன அமைப்புகளின் ஊக்கத் திட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும். சிறந்த வரிவடிவமைப்புக் கொள்கைகளை (Tax policy) உருவாக்குவதைவிட, இந்த நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவருவது இறுதியில் மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.


அரசு தனது செயல்பாடுகளைத் தானே சுயபரிசோதனை செய்ய வலியுறுத்தும் ஒரு குழு


இந்தக் குழுவிற்கு வழக்கத்திற்கு மாறாக மிக விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளுக்கு அழைப்பாணை (Summon) அனுப்பவும், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆவணங்களைக் கோரவும், தனித்தனி வருவாய்ப் பிரிவுகளுக்குச் சிறப்பு பணிக்குழுக்களை உருவாக்கவும், அரசுக்கு வெளியேயுள்ள வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறவும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் உண்டு. இதனால், பல வழிகளில் இது ஒரு நிறுவனரீதியான சுயபரிசோதனை நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.


தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீர்குலைந்ததற்கான அறிகுறிகளை 'வெள்ளை அறிக்கை' (White Paper) சுட்டிக்காட்டியது. ஆனால், அந்த அறிகுறிகளுக்கான உண்மையான காரணங்கள் மற்றும் வழிமுறைகளைக் கண்டறியும் பொறுப்பு இப்போது இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கக் கட்டத்தில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு, இது அரசு நிதி நிர்வாகத்தையும் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.


Original Link : Tamil Nadu is growing rapidly. Why are its revenues not keeping pace? -Arun Janardhanan

Share:

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2026 : இந்தியாவின் தரவரிசை எதை உணர்த்துகிறது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பருவநிலை அறிக்கைகள் எவை? -ரோஷ்னி யாதவ்

 2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (Environmental Performance Index (EPI)) வெளியிடப்பட்டுள்ளது. 47 குறியீடுகளின் அடிப்படையில் 177 நாடுகளை மதிப்பிடும் இந்தக்குறியீடு, 12 முக்கியப்பிரிவுகளில் சுற்றுச்சூழல் செயல்திறனைக் கண்காணிக்கிறது. அந்தப்பிரிவுகள் யாவை? தரவரிசையில் எந்த நாடு முதலிடம் பிடித்தது? இந்தியா எந்த இடத்தில் உள்ளது?


தற்போதைய செய்தி 


சில நாட்களுக்கு முன்னர், 2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (Environmental Performance Index (EPI)) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஒரு குறியீடாகும். இது நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறனைத் தரவரிசைப்படுத்தும் ஒரு மதிப்பெண் அட்டையாகும். தரவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, 2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு உலகளாவிய நிலைத்தன்மை குறித்த ஒரு விரிவான மதிப்பீட்டை வழங்குகிறது. எனவே, 2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு மற்றும் காலநிலை தொடர்பான சில பிற குறியீடுகளைப்பற்றி அறிந்துகொள்வது முக்கியமானதாகிறது.





முக்கிய அம்சங்கள்:


1. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு என்பது, மெக்கால் மெக்பெயின் அறக்கட்டளையின் ஆதரவுடன், யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச புவி அறிவியல் தகவல் வலையமைப்பு மையம் (Columbia University’s Center for International Earth Science Information Network (CIESIN)) மற்றும் யேல் பல்கலைக்கழகத்தின் புவிசார் தீர்வுகள் மையம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய அளவுகோலாகும்.


2. 47 குறிப்பிட்ட அளவீடுகளின் அடிப்படையில் 177 நாடுகளை மதிப்பீடு செய்யும் 2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன்  குறியீடானது, மூன்று கொள்கை நோக்கங்களின்கீழ். உள்ள 12 முக்கியப் பிரச்சினைப் பிரிவுகளை மதிப்பிடுகிறது.


3. காற்று மற்றும் நீரின் தரம், பல்லுயிர் பெருக்கம், நிலையான வன மேலாண்மை மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றக் குறைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய குறியீடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், இது வகுப்பாளர்களுக்கு ஒரு புறநிலை மதிப்பீட்டு அளவுகோலை வழங்குகிறது. இது நிலைத்தன்மைக்கான முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை அடையாளம் காணவும், சுற்றுச்சூழல் கொள்கைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.


4. இறுதியாக, , ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் நோக்கங்கள் போன்ற உலகளாவிய நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்கு நாடுகள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன உள்ளன என்பதை அளவிடுவதற்கான ஒரு முக்கிய பகுப்பாய்வுக் கருவியாக சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (Environmental Performance Index (EPI)) விளங்குகிறது.


5. சுவாரஸ்யமாக, 2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில்   உள்ள மதிப்பெண்கள் நாட்டின் செல்வத்துடன் அதிகத் தொடர்பு கொண்டுள்ளன (r= 0.69) காணப்படுகிறது. இருப்பினும், ஒரே வருமான நிலையில் உள்ள நாடுகளுக்குள்ளேயே, சில நாடுகள் மற்ற நாடுகளைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன.  அதே, சமயம் சில நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன.


6. 2026-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில், ஐந்து ஐரோப்பிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன. எஸ்டோனியா 74.79 என்ற ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து, லக்சம்பர்க், ஐக்கிய இராச்சியம் மற்றும் பின்லாந்து முறையே 2, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்தன. அதே, நேரத்தில் நெதர்லாந்து 5-ஆம் இடத்தைப் பிடித்தது. லாவோஸ் 21.78 மதிப்பெண்ணுடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்தது.




2026-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (Environmental Performance Index (EPI)) இந்தியாவின் தரவரிசை என்ன?


7. மதிப்பீடு செய்யப்பட்ட 177 நாடுகளில் இந்தியா 176-வது இடத்தைப் பிடித்து. கடைசிக்கு முந்தைய நிலையில் இருந்தது. பிராந்திய சராசரி மதிப்பெண்ணான 31.81 உடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு மதிப்பெண் 22.46-ஆக இருந்தது. மேலும், முக்கிய பல்லுயிர் பெருக்கப்பகுதிகளில் மரங்கள் அழிப்பு (tree cover loss) தொடர்பான குறியீட்டில் -3.92 என்ற மதிப்பெண் பதிவானது.


8. 2022-ல், இந்தியா 180 நாடுகளில் 180-வது இடத்தைப் பிடித்தபோது, ​​இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இந்தக்குறியீடு ஆதாரமற்ற அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட பல குறியீடுகளைக் கொண்டுள்ளது என்றும், செயல்திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சில குறியீடுகள் ஊகங்கள் மற்றும் அறிவியல் பூர்வமற்ற முறைகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டவை என்றும் அது தெரிவித்தது.


2026-ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (Climate Change Performance Index (CCPI)) 


1. பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு என்பது 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை தணிப்புச்செயல்திறனைக் கண்காணிக்கும் ஒரு சுயாதீனமான கண்காணிப்புக் கருவியாகும். CCPI அறிக்கையானது ஜெர்மன்வாட்ச், நியூ கிளைமேட் இன்ஸ்டிடியூட் மற்றும் காலநிலை நடவடிக்கை வலையமைப்பு (Climate Action Network (CAN)) இன்டர்நேஷனல் ஆகியவற்றால் ஒன்றாக இணைந்து வெளியிடப்படுகிறது.


2. CCPI ஒவ்வொரு நாட்டின் செயல்திறனையும் நான்கு பிரிவுகளில் மதிப்பிடுகிறது:


(i) பசுமை இல்ல வாயு வெளியேற்றம் (ஒட்டுமொத்த தரவரிசையில் 40%)


(ii) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (20%)


(iii) ஆற்றல் பயன்பாடு (20%)

(iv) காலநிலை கொள்கை (20%).


3. ஐ.நா. COP30 காலநிலை உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட, 2026-ஆம் ஆண்டு  பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டு அறிக்கையின்படி, எந்த நாடும் ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பீட்டைப் பெறாததால், முதல் மூன்று இடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளன.


4. 2026-ஆம் ஆண்டு  பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு அறிக்கையில் டென்மார்க் 80.52 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. முதலிடம் வகிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.


5. சவூதி அரேபியா, 11.9 புள்ளிகளுடன் 67-வது இடத்தில், குறியீட்டின் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 14.33 புள்ளிகளுடன் ஈரான் உள்ளது.


6. 2026-ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (Climate Change Performance Index (CCPI))  தரவரிசையில் இந்தியா, 61.31 புள்ளிகளுடன், முன்னர் இருந்த 10-வது இடத்திலிருந்து 13 இடங்கள் சரிந்து 23-வது இடத்தில் உள்ளது.


காலநிலை இடர் குறியீட்டு (Climate Risk Index (CRI) report) அறிக்கை


1. COP30 காலநிலை மாநாட்டின்போது, ​​பான் நகரைத் தளமாகக்கொண்ட அரசு அல்லாத அமைப்பான ஜெர்மன்வாட்ச், காலநிலை இடர் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டது.


2. 2006-ஆம் ஆண்டு முதல் முதல் வெளியிடப்பட்டு வரும் காலநிலை இடர் குறியீட்டு அறிக்கை, காலநிலை தொடர்பான தீவிர வானிலை நிகழ்வுகளால் நாடுகளில் ஏற்படும் பின்விளைவுகளை அளவிடுகிறது. இது நாடுகளை அவற்றின் பொருளாதார மற்றும் மனித தாக்கங்களின் (உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையின்) அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது. இதில் அதிக பாதிப்புக்குள்ளான நாடு பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்று இருக்கும்.


3. கடந்த 30 ஆண்டுகளில் பருவநிலை மாற்றங்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடைசியாக 2023-ல் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, ​​இந்தியா 8-வது இடத்தில் இருந்தது.


Original Link : Environmental Performance Index 2026: What does India’s ranking reveal? Which climate reports should you know? -Roshni Yadav

Share:

ஆயுஷ் மருத்துவர்கள் குறித்து, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் (NCISM) சமீபத்திய உத்தரவு என்ன குறிப்பிடுகிறது? -பிந்து ஷாஜன் பேரப்படன்

 


ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிக்பா மருத்துவர்களை “போலி மருத்துவர்கள்” (Quacks) என்று அழைக்கக்கூடாது என இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) ஏன் கூறுகிறது?.


தற்போதைய நிகழ்வு : இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் தகுதிபெற்ற மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை சட்டப்படி "போலி மருத்துவர்கள்" (Quacks) என்றோ அல்லது "கள்ள மருத்துவர்கள்" (bogus doctors) என்றோ கருத முடியாது என்று இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் (National Commission for Indian System of Medicine (NCISM)) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. பல மருத்துவர்கள் துன்புறுத்தலுக்கும் அவதூறான பொதுப் பிரச்சாரங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக இந்த ஒழுங்குமுறை ஆணையம் கூறியதைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.


அந்தச் சுற்றறிக்கையில் என்ன சொல்கிறது?


ஜூலை 29, 2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Ayurvedic Medicine and Surgery(BAMS)), இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Unani Medicine and Surgery(BUMS)), இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Siddha Medicine and Surgery(BSMS)) அல்லது இளங்கலை சோவா-ரிக்பா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Sowa-Rigpa Medicine and Surgery(BSRMS)) போன்ற அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைப் பெற்று, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம்-2020 விதிகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் ஆவர். அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்கள் இந்திய மருத்துவ முறையைச் (Indian System of Medicine (ISM)) சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை "போலி மருத்துவர்கள்" அல்லது "கள்ள மருத்துவர்கள்" என்று அழைப்பதற்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது.


இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) ஏன் இந்த விளக்கத்தை வெளியிட்டது?


பதிவுசெய்யப்பட்ட இந்திய மருத்துவ முறைப் பயிற்சியாளர்கள் “போலி மருத்துவர்கள்” அல்லது “கள்ள மருத்துவர்கள்” என முத்திரை குத்தப்படுவதாகவும், பொது அறிவிப்புகள் மூலம் இத்தகைய மருத்துவர்கள் குறிவைக்கப்படுவதாகவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விமர்சிக்கப்படுவதாகவும், சமூக ஊடகங்களில் தாக்கப்படுவதாகவும், மேலும் சில பொது இடங்களிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாக இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அவர்களின் சட்டப்பூர்வ நிலையைத் தெளிவுபடுத்துவதையும், இதுபோன்ற சித்தரிப்புகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதன் பொருள் இந்திய மருத்துவ முறை (ISM) மருத்துவர்கள் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்குச் சமமானவர்களா?


இல்லை. இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் (NCISM) சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், தத்தமது மருத்துவ முறைகளுக்குள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் என்பதை இந்தச் சுற்றறிக்கை ஏற்றுக்கொள்கிறது. இது வெவ்வேறு மருத்துவக் கல்வி முறைகளுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்குவதோ அல்லது எல்லாச் சூழ்நிலைகளிலும் நவீன மருத்துவத்தைப் பயிற்சி செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை மருத்துவர்களுக்குத் தானாகவே வழங்குவதோ இல்லை.


ஒரு ஆயுர்வேத, யுனானி, சித்தா அல்லது சோவா-ரிக்பா மருத்துவர் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாமா அல்லது நவீன மருத்துவத்தைப் பயிற்சி செய்யலாமா என்பது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டங்கள், குறிப்பிட்ட சட்ட விதிகள், அரசாங்க அறிவிப்புகள் மற்றும் அந்த அதிகார வரம்பில் பொருந்தக்கூடிய நீதிமன்றத் தீர்ப்புகளைப் பொறுத்தது.


சட்டப்படி “போலி மருத்துவர்” (quack) என்பதன் பொருள் என்ன?


பொதுப் பயன்பாட்டில், "போலி மருத்துவர்" (quack) என்பது பொதுவாக, மருத்துவத் தகுதி பெற்றவர் என்று பொய்யாகக் கூறிக்கொள்பவர் அல்லது தேவையான தகுதிகள் அல்லது சட்டப்பூர்வப் பதிவு இல்லாமல் மருத்துவம் செய்பவரைக் குறிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறை (ISM) பட்டங்களைப் பெற்று, சட்டத்தின்கீழ் முறையாகப் பதிவுசெய்துள்ள மருத்துவர்களுக்கு இந்தப் பட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பதே இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் (NCISM) நிலைப்பாடாகும். ஏனெனில், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் ஆவர்.


இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


இந்த விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இது இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் (NCISM) சட்டத்தின்கீழ் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிக்பா பயிற்சியாளர்களின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்களை அவதூறான அல்லது தவறான பொது சித்தரிப்புகளிலிருந்து பாதுகாக்க முயல்கிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறைகளின் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கும், மருத்துவம் செய்வதாகப் பொய்யாகக் கூறும் தகுதியற்ற நபர்களுக்கும் இடையே வேறுபடுத்திக் காட்டுகிறது.


இதற்கிடையில், இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) என்பது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிக்பா ஆகியவற்றில் மருத்துவக் கல்வி, தொழில்முறைத் தரநிலைகள் மற்றும் பயிற்சியாளர்களின் பதிவை மேற்பார்வையிடுவதற்காக, 2020-ம் ஆண்டின் இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய மருத்துவத்தின் மத்திய மன்றத்திற்கு (Central Council of Indian Medicine (CCIM)) மாற்றாக அமைக்கப்பட்டதுடன், இந்த மருத்துவ முறைகளின் கல்வித் தரங்களைப் பராமரித்தல், தகுதிகளை அங்கீகரித்தல் மற்றும் தொழில்முறைப் பயிற்சியை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகும்.


Original Link : What does NSCIM’s latest order say about AYUSH doctors? -Bindu Shajan Perappadan

Share:

வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் பல்வேறு கட்டணங்கள் யாவை? -டி.சி.ஏ. ஷரத் ராகவன்

 வங்கிகள் பற்று அட்டை பராமரிப்புக் கட்டணம் (debit card maintenance fees), ஏடிஎம் கட்டணங்கள் (ATM charges) மற்றும் கணக்கு பராமரிப்புக் கட்டணங்களை (account maintenance charges) வசூலிக்கின்றன.


தற்போதைய நிகழ்வு : பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இரண்டும், பற்று அட்டைகளின் பயன்பாடு (use of debit cards), ஏடிஎம் வசதிகள் (ATM facilities) மற்றும் கணக்குப் பராமரிப்புக் கட்டணங்கள் (account maintenance) போன்றவை வங்கிகள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்தக் கட்டணங்களில் சில, குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளால் (PSBs) தற்போது திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், மற்ற சில கட்டணங்கள் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.


பற்று அட்டை கட்டணம் (debit card charge) என்றால் என்ன?


மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, ​​நிதி அமைச்சகம், பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் பல்வேறு கட்டணங்கள் குறித்த தரவுகளை நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருந்தது. இவற்றில் மிகப்பெரியது ‘பற்று அட்டை கட்டணம்’ (debit card charge) ஆகும். பற்று அட்டை கட்டணங்கள் என்பவை “பற்று அட்டைகளுக்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள்” ஆகும்.


வங்கிகள் இந்தக் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கின்றன. பற்று அட்டை சேவைகள் மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட இது பயன்படுத்தப்படுகிறது. பற்று அட்டைகளை வழங்குதல், அட்டை சேவைகளை நிர்வகித்தல், சேதமடைந்த அல்லது தொலைந்த அட்டைகளை மாற்றுதல், பின்தள அமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவை வழங்குதல் போன்ற செலவுகளை வங்கிகள் ஈடுசெய்ய இந்தக் கட்டணம் உதவுகிறது.


மேலும், பாதுகாப்பான பற்று அட்டைப் பரிவர்த்தனைகளை (safe debit card transactions) உறுதி செய்வதற்கும் மோசடியைக் கண்காணிப்பதற்குமான பாதுகாப்பு அமைப்புகள், பற்று அட்டைகளைப் பயன்படுத்தி இணையவழிப் பணம் செலுத்துதலை எளிதாக்கும் அமைப்புகள், விற்பனை முனையங்கள் (point-of-sale (POS) terminals), மற்றும் காலாவதியான அட்டைகளைப் புதுப்பித்தல், அட்டைச் சேவைகளைப் பராமரித்தல் போன்ற அட்டை மேலாண்மைச் சேவைகள் ஆகியவற்றின் செலவுகளை ஈடுசெய்வதிலும் இந்தக் கட்டணங்கள் ஓரளவிற்கு உதவுகின்றன.

"இந்த பெயரளவிலான கட்டணம், நீங்கள் தடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கிச் சேவையைத் தொடர்ந்து அனுபவிப்பதை உறுதி செய்கிறது," என பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


நிதி அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 12 பொதுத்துறை வங்கிகள் 2021-22 ஆம் ஆண்டில் பற்று அட்டை கட்டணமாக ₹3,905.5 கோடி வசூலித்துள்ளன. இந்தத் தொகை 2021-22-ஆம் ஆண்டை விட 93.7% வளர்ச்சி பெற்று, 2025-26-ஆம் ஆண்டில் ₹7,563.8 கோடியாக அதிகரித்துள்ளது.


ஒரு அட்டைக்கான (per-card) அடிப்படையில் பார்க்கும்போது, இது 2021-22ல் ஒரு பற்று அட்டைக்கு சுமார் ₹61 ஆக இருந்தது. இது 2025-26க்குள் ஒரு அட்டைக்கு ₹115.1 ஆக உயர்ந்துள்ளது. இது 88.8% அதிகரிப்பு ஆகும்.


வங்கிகள் விதிக்கும் பிற கட்டணங்கள் யாவை?


மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், வங்கிகளால் விதிக்கப்படும் மற்ற இரண்டு கட்டணங்களான ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கணக்கு பராமரிப்புக் கட்டணங்கள் குறித்த தரவுகளை வழங்குகிறது.


ஏடிஎம் கட்டணங்கள் என்பவை, வாடிக்கையாளர்களிடமிருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் பிற வங்கிகளிடமிருந்து பெறும் பரிமாற்றக் கட்டணங்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு வங்கி ஈட்டும் வருமானமாகும்.


அடிப்படையில், ஒரு வங்கியால் வழங்கப்பட்ட அட்டையை மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் பயன்படுத்தும்போது, ​​அந்த வங்கி மற்ற வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணமே பரிமாற்றக் கட்டணம் (interchange fee) ஆகும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பற்று அட்டையை பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம்மில் பயன்படுத்தும்போது, ​​ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ஒரு பரிமாற்றக் கட்டணத்தைச் (interchange fees) செலுத்த வேண்டும்.


இந்த ஏடிஎம் கட்டணங்கள் மூலம் ஒரு வங்கி ஆண்டுதோறும் ஈட்டும் தொகை என்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் பிற வங்கிகளிடமிருந்து அது பெறும் வருமானத்திலிருந்து, மற்ற வங்கிகளுக்கு அது செலுத்த வேண்டிய தொகையைக் கழித்த நிகரத் தொகையாகும். தரவுகளின்படி, பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த எண்ணிக்கை எதிர்மறையாக உள்ளது.


இதன் பொருள் என்னவென்றால், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், தங்களின் சொந்த ஏடிஎம்கள் மூலம் ஈட்டும் வருவாயை விட, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்காக அவற்றுக்கு அதிகமாகச் செலுத்துகின்றன. இது நியாயமானதே. ஏனெனில், நாட்டிலேயே மிகப்பெரிய ஏடிஎம் வலையமைப்பை எஸ்பிஐ கொண்டுள்ளது. அதேவேளையில், ஏடிஎம் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறும் நகர்ப்புறங்களிலும் தனியார் வங்கிகள் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன.


வங்கிகள் வசூலிக்கும் இரண்டாவது கட்டணம் கணக்கு பராமரிப்புக் கட்டணம் (account maintenance fee) ஆகும். இருப்பினும், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் இந்தக் கட்டணத்தை நிறுத்திவிட்டன. தற்போது எஸ்பிஐ வங்கி மட்டுமே இந்தக் கட்டணத்தை வசூலிக்கிறது. அதுவும் பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் நடப்புக் கணக்குகளிலிருந்து மட்டுமே வசூலிக்கிறது.


வங்கிகள் ஏன் குறைந்த இருப்புக்கான அபராதத்தை (low-balance penalties) விதிக்கின்றன?


ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள சராசரி இருப்பு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை விடக் குறைவாக இருக்கும்போது, ​​குறைந்த இருப்புக்கான அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் இருப்பு அந்த வரம்பிற்குக் கீழே ஒருமுறை மட்டும் குறைந்து, பின்னர் விரைவில் ஒரு உயர் நிலைக்கு மீண்டால், இந்த அபராதம் விதிக்கப்படாது.




செயல்பாட்டுச் செலவுகளை (operational costs) ஈடுகட்டவும், கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும், ஒட்டுமொத்த பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. அதாவது, இவை வங்கிகளுக்கு மற்றுமொரு வருமான ஆதாரமாக அமைகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கிகள் தங்கள் நிர்வாகக் குழுவால் (Board) அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணங்க, குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்காததற்காகக் கட்டணங்களை விதிக்கலாம். ஆனால், அத்தகைய கட்டணங்கள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், சேவைகளை வழங்குவதற்கான செலவுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.


நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த பதிலின்படி, 12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள், சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்காததற்கான அபராதக் கட்டணங்களை நிறுத்தியுள்ளன. மீதமுள்ள இரண்டு வங்கிகள் அத்தகைய கட்டணங்களை முறைப்படுத்தியுள்ளன.


2025-26 ஆம் ஆண்டிலும் 12 வங்கிகளும் இந்தக் கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்துள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றுள் 11 வங்கிகள் முந்தைய ஆண்டை விடக் குறைந்த தொகையையே வசூலித்துள்ளன. எஸ்பிஐ வங்கியில் மட்டும் கட்டணம் அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகள் இதுபோன்ற கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்து வருகின்றன.


கடந்த நான்கு நிதியாண்டுகளில் 12 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்த இருப்புத் தொகைக் கட்டணமாக ₹10,230.75 கோடியை வசூலித்த நிலையில், அதே காலகட்டத்தில் 21 தனியார் வங்கிகள் ₹15,939.62 கோடியை வசூலித்துள்ளன.


Original Link : What are the various charges banks collect from customers? -T.C.A. Sharad Raghavan

Share:

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) அதிகரித்து வரும் எபோலா நோய்ப் (Ebola) பரவலைக் கட்டுப்படுத்துவது ஏன் கடினமாக உள்ளது? -அபிநயா கே

 நோய்த்தொற்று எப்போது தொடங்கியது? தடுப்பூசி தொடர்பான முன்னேற்றம் என்ன?


தற்போதைய நிகழ்வு : காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்திய எபோலா நோய்த்தொற்று தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில், இந்நோயால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஜூலை 28, 2026 நிலவரப்படி, காங்கோவில் 3,442 நோய்த்தொற்றுகளும் 1,521 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நெருக்கடியில் சிக்கியுள்ள காங்கோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போராடிவரும் நிலையில், கிட்டத்தட்ட 797 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


எபோலா (Ebola) என்றால் என்ன?


எபோலா, ஒரு கொடிய நோயாகும். இது ஆர்த்தோ எபோலா வைரஸ்கள் (orthoebola viruses) எனப்படும் ஒரு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த நோய் முதன்முதலில் 1976-ல் தெற்கு சூடான் மற்றும் காங்கோவில் ஏற்பட்டது. விலங்குகள் இந்த வைரஸின் இயற்கையான விருந்தோம்பிகளாகக் (natural hosts) கருதப்பட்டாலும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் திரவங்களையும் சுரப்புகளையும் மனிதர்கள் உட்கொள்ளும்போதோ அல்லது அவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போதோ இது அவர்களுக்குப் பரவக்கூடும். இந்த வைரஸுக்கான காப்புக் காலம் (incubation period) இரண்டு முதல் 21 நாட்கள் வரை இருக்கும். இந்த நோயால், காய்ச்சல், சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியுடன் கூடிய தோல் தடிப்பு ஆகியவை இதன் சில அறிகுறிகளாகும்.


இந்த நோய் காற்றில் பரவுவதில்லை. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த ஒருவரின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடனோ, அல்லது பாதிக்கப்பட்ட நபரின் திரவங்களால் அசுத்தமான மேற்பரப்புகளுடனோ தொடர்பு கொள்ளும்போது மட்டுமே இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. ஒருவருக்கு நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னரே, அவர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் திறன் கொண்டவராகிறார்.


இந்த நோய்ப்பரவலுக்குக் காரணமான வைரஸ் வகை எது?


காங்கோவில் தற்போது பரவிவரும் இந்த நோய், மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் நான்கு வகையான ஆர்த்தோஎபோலா வைரஸ்களில் (orthoebolaviruses) மிகவும் அரிதான ஒன்றான புண்டிபுக்யோவால் (Bundibugyo) ஏற்படுகிறது. இதற்கு முன்னர் 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் காங்கோவில் பதிவாகியுள்ள இந்த வகை வைரஸுக்கு, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ இல்லை. மிகவும் பொதுவான எபோலா வைரஸ் வகைக்கு மட்டுமே இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டதால், அப்பகுதியில் இந்த நோய் கட்டுப்பாடின்றி பரவியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


நோய்ப்பரவல் எப்போது தொடங்கியது, அதைக் கட்டுப்படுத்துவது ஏன் கடினமாக உள்ளது?


ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Africa Centres for Disease Control and Prevention (Africa CDC)), மே 15, 2026 அன்று எபோலா நோய் பரவல் ஏற்பட்டதாக அறிவித்தன. இருப்பினும், காங்கோ நாட்டின் தகவலின்படி, முதல் எபோலா மரணம் அதற்கு முன்னதாகவே, ஏப்ரல் 24, 2026 அன்று புனியா (Bunia) பகுதியில் நிகழ்ந்துள்ளது. தவறான எதிர்மறைப் பரிசோதனை முடிவுகள் (false-negative results) மற்றும் பிற தாமதங்களால் உறுதிப்படுத்தல் தடைபட்டதாகவும் கூறியுள்ளது. இறந்தவரின் உடல் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. நாட்டின் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, இதுவே நோய் பரவல் தீவிரமடையக் காரணமாக அமைந்தது.


இட்டூரி மாகாணத்தின் (Ituri Province) தலைநகரான புனியா, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளுடன் இந்த நோய்ப் பரவலின் மையப்புள்ளியாக விளங்குகிறது. வடக்கு கிவு (North Kivu), தெற்கு கிவு (South Kivu), ஹவுட்-உலே (Haut-Uele) மற்றும் ஷோபோ (Tshopo) ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


தடுப்பூசி இல்லாதது ஒருபுறம் இருக்க, கிளர்ச்சியாளர்களின் மோதலால் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, சாலைகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட மோசமான உள்கட்டமைப்பு ஆகியவை துயரங்களை மேலும் அதிகரித்துள்ளன. சமூகத்தில் அவநம்பிக்கை அதிகமாக இருப்பதுடன், பாதுகாப்பற்ற அடக்க முறைகள் மற்றும் தாமதமாகத் தகவல் தெரிவித்தல் ஆகியவையும் மக்களைச் சென்றடையும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளன.


உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் விகிதம் (contact tracing rate) 78.3% மட்டுமே உள்ளது. இது, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் 90–95% என்ற கண்டறியும் விகிதத்தைவிட இது மிகவும் குறைவானதாகும்.


தற்போதைய நோய்ப் பரவலின் வேகம் கவலையளிப்பதாக உள்ளதுடன், இது மிகப்பெரிய நோய்ப் பரவலாக உருவெடுக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கணிப்பின்படி, தற்போதைய நோய்ப் பரவலானது, தலையீடுகள் ஏதுமின்றி 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 11,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான 2014-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கப் பெருந்தொற்றின் அளவை மிஞ்சும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


"இந்த நோய் பரவல் வேகமாகப் பரவி வருகிறது. நாம் இன்னும் அதைப் பின்தொடரவே முயன்று கொண்டிருக்கிறோம்," என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், விரைவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?


எபோலா பாதிப்புகளைக் கண்டறிந்து கண்காணிக்க காங்கோ தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. அந்நாடு கூடுதல் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் மக்கள் கூடும் கூட்டங்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. இந்த நோய்ப் பரவல், சர்வதேச சுகாதார விதிமுறைகளின்கீழ் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான "சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை" (Public Health Emergency of International Concern (PHEIC)) என்று உலக சுகாதார அமைப்பு மே 17, 2026 அன்று அறிவித்தது. எபோலாவை எதிர்த்துப் போராடுவதற்காக 518 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆறு மாத கால கூட்டுத் திட்டத்தையும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிவித்தார். இந்த நோய்ப் பரவலுக்காக 107 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் தெரிவித்துள்ளன. இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்தியா அவசர மருந்துப் பொருட்களை அனுப்பியுள்ளது.



அண்டை நாடுகளில் நிலைமை என்ன?


காங்கோவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உகாண்டா, கடைசி நோயாளி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 28, 2026 அன்று தங்கள் நாடு எபோலா பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டதாக அறிவித்தது. உகாண்டாவில் மொத்தம் 20 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இருவர் உயிரிழந்தனர். ருவாண்டா, கென்யா, தான்சானியா, அங்கோலா, புருண்டி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, தெற்கு சூடான் மற்றும் சாம்பியா ஆகிய பிற அபாய நிலையில் உள்ள நாடுகளைப் போலவே, உகாண்டாவும் தொடர்ந்து எச்சரிக்கை நிலையில் உள்ளது.


தடுப்பூசி தொடர்பான முன்னேற்றம் என்ன?


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ChAdOx1 BDBV என்ற தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் தன்னார்வலருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இது மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளது. வேறு பல எபோலா தடுப்பூசிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவற்றில் எதுவும் இன்னும் மனிதர்களுக்கான பரிசோதனை நிலையை எட்டவில்லை.


Original Link :Why is it difficult to contain the growing Ebola outbreak in DRC? -Abhinaya K

Share:

தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தால், கட்டுப்படுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா? -ரிஸ்மி லியா எம்.

 தற்போதைய செய்தி: அரசியலமைப்பின் 338-வது பிரிவின் கீழ்,தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு (NCSC) நீதிமன்றங்களை போல் அதிகாரங்கள் இல்லை என்றும், பணி தொடர்பான பிரச்சனைகளில், ஆணையத்தால் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று தெளிவுபடுத்தியது. விசாரணையின் போது சாட்சிகளை அழைத்தல், ஆவணங்களைக் சமர்ப்பிக்கக் கோரிக்கை விடுத்தல் மற்றும் சாட்சியங்களைப் பெறுதல் போன்ற உரிமையியல் நீதிமன்றத்திற்கு (civil court) இணையான அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்கள் விசாரணைகளை எளிதாக்குவதற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மும்பை துறைமுக ஆணையத்தின் ஊழியர் ஒருவர் கோரிய பதவி உயர்வுச் சலுகைகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இது போன்ற ஒரு தீர்ப்பை  வழங்கியுள்ளது.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


இந்த வழக்கு, மும்பை துறைமுக ஆணையத்தில் பணியாற்றிய ஒரு ஸ்டெனோகிராபரின் பணி தொடர்பான சிக்கலினால் உருவானது. அவர் 1997-ஆம் ஆண்டு மும்பை துறைமுக ஆணையத்தில் பணியில் சேர்ந்தார். 2002-ஆம் ஆண்டின் அலுவலக நினைவுக் குறிப்பின் (Office Memorandum) அடிப்படையில், பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஊழியர்களுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையின்கீழ் வழங்கப்பட்ட தொடர்ச்சியான பணிமூப்பு காரணமாக (consequential seniority) அவர் ஸ்டெனோகிராபர் நிலை–II-லிருந்து ஸ்டெனோகிராபர் நிலை–I-க்கு பதவி உயர்வு பெற்றார்.


இருப்பினும், 2006-ஆம் ஆண்டு M. நாகராஜ் vs இந்திய யூனியன் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த அரசாங்க அறிவுறுத்தல்களுக்குப் பிறகு, அதன் விளைவாகக் கிடைத்த பணிமூப்புப்பலன் திரும்பப் பெறப்பட்டதால், அவர் ஒரு கீழ்நிலைப் பதவிக்கு மாற்றப்பட்டார். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அவரது மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த பிறகு, அவர் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தை (National Commission for Scheduled Castes (NCSC)) அணுகினார்.


அவரது பதவி உயர்வை மீண்டும் வழங்கவும், அதனுடைய அனைத்து பணப் பலன்களையும் (consequential monetary benefits) அளிக்கவும் ஆணையம் துறைமுக ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆணையத்தின் உத்தரவில் தலையிட பம்பாய் உயர் நீதிமன்றம் மறுத்ததால், துறைமுக ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?


அரசியலமைப்பின் 338-வது பிரிவு, தேசிய பட்டியல் சாதிகள்    ஆணையத்திற்கு,  நீதிமன்றங்களை போல் அதிகாரங்களை (adjudicatory powers) வழங்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் வரம்பிற்கு உட்பட்டவை. அரசியலமைப்பின் 338, 338-A மற்றும் 338-B கட்டுரைகளின்கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆணையங்கள் சமூக நலன்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டவைகளாக இருந்தாலும் அவற்றின் பங்கு, பரிந்துரை மற்றும் ஆலோசனை வழங்குவதாக மட்டுமே நாடாளுமன்றத்தால்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் அமைப்புகளை போல இந்த ஆணையங்கள் இல்லை. நீதித்துறை அல்லது நீதிமன்றதிற்கு இணையான அதிகாரம் கொண்ட (quasi-judicial) அமைப்புகளாக இந்த ஆணையங்கள் உருவாக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது.


நீதிமன்றம், அரசியலமைப்பின் 338(5)-வது உட்பிரிவை ஆய்வு செய்தது. இதில், அரசியலமைப்புச் சட்டப்பாதுகாப்புகளை விசாரித்தல், புகார்களை ஆய்வு செய்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளனவா என்பதை கண்காணித்தல், அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் குடியரசுத்தலைவருக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற பணிகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 338(8)-வது உட்பிரிவின்கீழ், சாட்சிகளை ஆஜராக அழைத்தல், சாட்சியங்களைப் பெறுதல், ஆவணங்களை கோருதல் போன்ற உரிமையியல்  நீதிமன்றத்தின் சில அதிகாரங்கள் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஆனால், நாடாளுமன்றம் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்கியுள்ள உரிமையியல் நீதிமன்ற அதிகாரங்களை மிகவும் தெளிவாகவும் வரையறுக்கப்பட்ட வகையிலும் குறிப்பிட்டுள்ளது. பெயரளவில் (‘Namely’) என்ற சொல்லைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புக்குட்பட்ட தன்மையைக் காட்டுகிறது. எனவே, ஆவணங்களை கோருவதற்கும் (requisition), சாட்சியங்களைப் பெறுவதற்கும் அதற்கு அதிகாரம் இருந்தாலும், அந்த சாட்சியங்களின் அடிப்படையில் கட்டாய உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் உண்மை நிலைகளை (factual findings) பதிவு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மத்திய அல்லது மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்க மட்டுமே வழங்க முடியும்" என்று நீதிமன்றம்   தெரிவித்தது.


நீதிமன்றம், 338(5)-வது உட்பிரிவின் (a) மற்றும் (d) துணைப்பிரிவுகளையும் ஆய்வு செய்தது. (a) துணைப்பிரிவு, பட்டியல் சாதியினருக்காக அரசியலமைப்பிலோ அல்லது பிற சட்டங்களிலோ வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை விசாரித்து கண்காணிக்கும் அதிகாரத்தை தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்குகிறது. பாதுகாப்புகளை உருவாக்குவது சட்டத்தின் பணியாகும். அவை நடைமுறையில் சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதே பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் பணி என்று நீதிமன்றம் கூறியது.


அதேபோல், (d) துணைப்பிரிவின்படி, பட்டியல் சாதியினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆண்டுதோறும் அல்லது தேவையான பிற நேரங்களில் குடியரசுத்தலைவருக்கு அறிக்கைகளை தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம், ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் ஒரு பகுதியாகும்  என்றும் நீதிமன்றம் விளக்கியது.


மேலும், 1996-ஆம் ஆண்டு அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின பணியாளர்கள் நல சங்கம் vs  யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் 2011-ஆம் ஆண்டு கலெக்டர் vs அஜித் ஜோகி உள்ளிட்ட முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய பட்டியல் சாதிகள்  ஆணையத்தின் (NCSC) பணி பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதாக மட்டுமே உள்ளது.  நீதிமன்றங்களை போல தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் சுட்டிக்காட்டியது.


இதன் அடிப்படையில், பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், 30 நாட்களுக்குள் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதற்கு சட்டப்பூர்வமான பலன் (Legal Effect) இல்லை என்றும் அறிவித்தது.


இந்தத் தீர்ப்பு, அரசியலமைப்பின் 338, 338A மற்றும் 338B பிரிவுகளின் கீழ், உள்ள அரசியலமைப்பு ஆணையங்களின் அதிகார வரம்புகளை தெளிவாக வரையறுத்து, அவை நீதித்துறை அல்லது நீதிமன்றதிற்கு இணையான அதிகாரம் கொண்ட (quasi-judicial) அமைப்புகளின் அதிகார வரம்பில் தலையிடுவதைத் தடுப்பதால், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.


Original Link :Can the National Commission for Scheduled Castes issue binding directions? -Rizmi Lia M.

Share: