விக்ரம்-1 முதல் திருஷ்டி செயற்கைக்கோள் வரை: இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை எவ்வாறு மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது? -ரோஷ்னி யாதவ்

 விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட்டை எது இவ்வளவு சிறப்பானதாக்குகிறது? திருஷ்டி (Drishti) செயற்கைக்கோள் எவ்வாறு அதன் வகையிலேயே முதன்முதலான ஒரு கண்டுபிடிப்பாக விளங்குகிறது? இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பின்வருமாறு:


தற்போதைய நிகழ்வு என்ன?


இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-1, 'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) திட்டத்தின்கீழ் தனது முதல் சோதனைப் பயணத்திற்குத் தயாராக உள்ளது. ஜூலை மாதம் 2-ஆம் தேதி, ‘Skyroot’ நிறுவனம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ஜூலை மாதம் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விக்ரம்-1 செயற்கைகோளை விண்வெளிக்கு ஏவப்போவதாக அறிவித்தது. இந்தச் சூழலில், விக்ரம்-1 லேண்டர் என்றால் என்ன என்பதையும், சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்றுள்ள ‘GalaxEye’ நிறுவனத்தின் திருஷ்டி செயற்கைக்கோள் குறித்தும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'விக்ரம் 1' (Vikram 1) ராக்கெட், முற்றிலும் கார்பன் கலவையாலான கட்டமைப்பைக் கொண்டது. இது திட எரிபொருள் பூஸ்டர்கள் (Solid fuel boosters) மற்றும் 3D முறையில் அச்சிடப்பட்ட திரவ எரிபொருள் இயந்திரத்தையும் கொண்டுள்ளது. முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், புவியின் கீழ்வட்டப்பாதை (Low Earth orbit (LEO)) வரை 350 கிலோ எடையையும், சூரிய ஒத்திசைவு வட்டப்பாதை (Sun-synchronous orbit (SSO)) வரை 260 கிலோ எடையையும் சுமந்து செல்லும் திறன்கொண்டது. சூரிய ஒத்திசைவு வட்டப்பாதை (SSO) என்பது பூமியின் துருவங்களுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு வட்டப்பாதையாகும். இங்கு சுற்றும் செயற்கைக்கோள், பூமியின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் அதே துல்லியமான உள்ளூர் நேரத்தின்போது கடந்து செல்லும்.


2. ‘Skyroot’ நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள விளக்கத்தின்படி, விக்ரம்-1 என்பது “சிறிய செயற்கைக்கோள்களை விரைவாகவும், துல்லியமாகவும், தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய வகையிலும் நிலைநிறுத்துவதற்கான ஒரு ஏவுகலன் ஆகும்.


3. விக்ரம் 1 ராக்கெட் உருவாக்கப்பட்டதன் பயணம் அவர்களின் ‘YouTube’ மற்றும் ‘Instagram’ பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பதிவுகளில், இந்த ராக்கெட்டிற்கு விமானியோ அல்லது ஜாய்ஸ்டிக்கோ (Joystick) கிடையாது; இது தன் கணினியில் உள்ள சுய நுண்ணறிவை வைத்தே விண்வெளிப் பாதையைச் சென்றடைகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.



4. இதன் வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, 'ராமானுஜன்' (Ramanujan) என்று பெயரிடப்பட்ட அதன் முதன்மை கணினியால் வழிநடத்தப்படும் விமானப் பயண மென்பொருளுடன் இணைந்து செயல்படுகிறது. இது ராக்கெட் விண்வெளியில் பயணிக்கும்போது தானாகவே முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.


‘விக்ரம்-எஸ்’ (மிஷன் பிரரம்ப்) என்றால் என்ன?


1. 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ‘Skyroot’ நிறுவனம் இஸ்ரோவின் ஏவுதளங்களிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோளான விக்ரம்-எஸ் (Vikram-S)  செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.




2. ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) என்ற ஒரு சிறிய ரீதியிலான சோதனை ராக்கெட், இந்தியாவின் முதல் வெற்றிகரமான தனியார் துணை-சுற்றுப்பாதை பயணத்தைக் குறித்தது. ‘திட்டம் பிராரம்ப’ (Mission Prarambh) என்று பெயரிடப்பட்ட இது, பூமியைச் சுற்றி மட்டுமே வந்தது, மேலும் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்காக இது உருவாக்கப்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ‘Skyroot Aerospace’ நிறுவனம், விண்வெளியில் ராக்கெட்டை ஏவுவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவின் முதல் விண்வெளி புத்தொழில் நிறுவனம் (start-up) ஆகும்.


‘GalaxEye’ நிறுவனத்தின் திருஷ்டி (Drishti) செயற்கைக்கோள் என்றால் என்ன?


1. இந்திய புத்தொழில் நிறுவனமான ‘GalaxEye’ உருவாக்கிய, தனது வகையான முதல் செயற்கைக்கோளான திருஷ்டி (Drishti), CAS500-2 திட்டத்தின் 45 செயற்கை கோள்கள் ஒன்றாக, ‘SpaceX’ நிறுவனத்தின் ‘Falcon 9’ ராக்கெட் மூலம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி ஏவப்பட்டது.


2. பொதுவாக, படமெடுக்கும் செயற்கைக்கோள்கள் பொதுவாக பல்நிறமாலை அல்லது மீநிறமாலை (ஒளியியல்) படங்களை எடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும், அல்லது அவை செயற்கைத் துளை ரேடாரை (synthetic Aperture Radar (SAR)) பயன்படுத்துகின்றன. இவ்விரு வகையான செயற்கைக்கோள் தரவுகளும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


3. இருப்பினும், இந்த இரண்டு படப்பிடிப்பு முறைகளிலும் சில குறைபாடுகள் உள்ளன. பலவண்ண படங்கள் பார்ப்பதற்குத் தெளிவாகவும், எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும்; ஆனால், மேகமூட்டமான வானிலை அல்லது இரவு நேரங்களில் இவற்றால் படங்களை எடுக்க முடியாது. மற்றொரு புறம், செயற்கை துளை ரேடார் (Synthetic Aperture Radar (SAR)) அலைகள் மேகங்களை ஊடுருவிச் சென்று, இரவும் பகலும் தொடர்ச்சியாகப் படங்களை எடுக்கும் திறன் கொண்டவை; ஆனால், அவை சாதாரணக் கண்களுக்கு எளிதில் புரியாது. எக்ஸ்-ரே (X-ray) படங்களைப் போல, அதிலிருந்து தகவல்களைப் புரிந்துகொள்வதற்குக் கூடுதல் நிபுணர்கள் தேவைப்படுவர்.


4. செயற்கைத் துளை ரேடார் (SAR) மற்றும் ஒளியியல் உணர்விகள் வெவ்வேறு வழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை பூமியை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன. எனவே, உதாரணமாக, அவை அருகருகே வைக்கப்பட்டால், ஒளியியல் உணர்வி பெங்களூரைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், செயற்கைத் துளை ரேடார் (SAR) அந்த கணத்தில் துபாயைப் படம் பிடித்துக் கொண்டிருக்கலாம். மேலும், படமெடுக்கும் நேரங்களில் ஏற்படும் வேறுபாடுகள் அல்லது கால இடைவெளிகள் எனும் சிக்கலும் உள்ளது. இத்தகைய இடைவெளிகள் முக்கியமான பணிகளில் சிரமங்களை உருவாக்குகின்றன.


5. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், விண்வெளியிலிருந்து தெளிவான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய படங்களைப் பெறுவதற்கும், இந்திய புத்தொழில் நிறுவனமான ‘GalaxEye’, திருஷ்டி செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதில் இரண்டு படமெடுக்கும் உணர்விகளும் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு, ஒரே இடத்தை ஒரே நேரத்தில் படமெடுப்பதற்காக ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதனால், பயனர்கள் இரண்டு வெவ்வேறு செயற்கைக்கோள்களிலிருந்து வரும் தரவுத் தொகுப்புகளைக் கைமுறையாகச் சீரமைக்க வேண்டிய தேவை நீக்கப்படுகிறது.


6. திருஷ்டி (Drishti) செயற்கைக்கோள், 'ஒளியியல் படமாக்கலின்' (Optical Imaging) தெளிவையும், செயற்கைத் துளை ரேடாரின் (SAR) அனைத்து காலநிலைகளிலும் செயல்படும் நம்பகத்தன்மையையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, பகுப்பாய்வுக்கு ஏற்கெனவே தயாராக உள்ள, உள்ளுணர்வு சார்ந்த, நம்பகமான, அனைத்து காலநிலைகளிலும் ஏற்ற புவிப் படங்களை வழங்குகிறது. இந்தக் காரணத்திற்காக, அந்நிறுவனம் தனது கண்டுபிடிப்பை ஆப்டோ-செயற்கைத் துளை ரேடார் (SAR) தொழில்நுட்பம் என்று விவரிக்கிறது.





IN-SPACe என்பது என்ன?


2020-ம் ஆண்டில், விண்வெளித் துறையில் தனியார் தொழில்துறையின் அதிகப்படியான பங்களிப்பை எளிதாக்கும் நோக்கத்தில், அரசாங்கம் IN-SPACe (இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம்) அமைப்பை உருவாக்கி, இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ஐ (Indian Space Policy 2023) வகுத்தது.

இது விண்வெளித் துறையின்கீழ் ((Department of Space(DoS)) ஒரு தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும், ஒற்றைச் சாளர அடிப்படையிலான, சுதந்திரமான, முக்கிய முகமையாகும்.


இந்த அமைப்பு ஒரு ஊக்குவிப்பாளராகவும் அதே நேரத்தில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகவும் செயல்படுகிறது. இது இஸ்ரோவிற்கும் (ISRO) தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்படுவதோடு, இந்தியாவின் விண்வெளி ஆதாரங்களை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது மற்றும் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும் மதிப்பீடு செய்கிறது.


Pathfinder என்றால் என்ன?


1. விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமான பிக்சல் (Pixxel), இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை தரவு மைய செயற்கைக்கோளான 'பாத்ஃபைண்டரை' (Pathfinder) உருவாக்கி கட்டமைப்பதற்காக, பெரிய மொழி மாதிரி (LLM) வழங்குநரான ‘Sarvam AI’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கடந்த மே மாதம் 4-ஆம் தேதி அறிவித்தது.


2. 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்வெளிப் பாதையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த 200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள், வரைகலை செயலாக்க அலகு (Graphics Processing Unit (GPUs)) எனப்படும் அதிநவீனச் செயலிகளைக் கொண்டிருக்கும். இவை 'சர்வம்' (Sarvam) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிக்கான பயிற்சியளித்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும்.

3. செயல்திறனைவிட விண்வெளியில் நீண்டகாலம் தாக்குப் பிடிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட குறைந்த திறன் கொண்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி, தரவுகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்யும் நுண்செயலிகள் (Low-power edge processors) பயன்படுத்தும் வழக்கமான செயற்கைக்கோள் கணினி முறையைப் போலல்லாமல், இந்த 'பாத்ஃபைண்டர்' (Pathfinder) செயற்கைக்கோள் முற்றிலும் மாறுபட்டது. பூமியில் உள்ள தரவு மையங்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகளை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அதே தலைமுறையைச் சேர்ந்த நவீன வன்பொருள்களை இந்தச் செயற்கைக்கோள் கொண்டிருக்கும்.


Original article: From Vikram-1 to Drishti: How India’s private space sector is taking off. -Roshni Yadav

Share:

இந்தியாவின் போக்குவரத்துத் துறை மாற்றத்திற்கு எத்தனால் பயன்பாடு ஏன் மிக முக்கியமானது? -சந்தீப் சிங்

 இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து முறைக்கான மாற்றத்திற்கு மின்சார வாகனங்கள் (EVs), ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் எத்தனால் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த பயன்பாடும் அவசியம் என்று டொயோட்டாவின் விக்ரம் குலாட்டி கூறுகிறார். மேலும், ஹைப்ரிட் வாகனங்களுக்குக் கூடுதல் கொள்கைரீதியான ஆதரவு தேவை என்றும் குறிப்பிடுகிறார்.


பல்வேறு வகையான எரிசக்தி உந்து அமைப்புகள் (powertrains) மற்றும் பெட்ரோலில் அதிக அளவில் எத்தனால் கலப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் வாகனப் போக்குவரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அனைத்து தூய்மையான தொழில்நுட்பங்களுக்கும் ஆதரவளிக்கப்பட வேண்டும் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸின் இந்தியத் தலைவரும் செயல் துணைத் தலைவருமான விக்ரம் குலாட்டி, சந்தீப் சிங்கிடம் தெரிவித்தார்.


எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிப்பது எரிபொருள் சிக்கனத்தைக் (fuel efficiency) குறைக்கக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், E10-லிருந்து E20-க்கு மாறுவதால் ஏற்படும் பொருள்சார் தாக்கம் மிகக் குறைவு என்றும், எரிபொருள் செயல்திறன் மீதான தாக்கம் சுமார் 3-5% வரம்பில் உள்ளது என்றும் ஆய்வுகள் காட்டுவதாக அவர் கூறினார். இருப்பினும், E25-க்கு மாறுவதற்கு முன்பு, புதிய மற்றும் பழைய வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.





பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் பயன்பாட்டை விரைவாகக் குறைப்பதற்காக, ஹைப்ரிட் வாகனங்களுக்குக் கொள்கை ரீதியான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


நாட்டின் போக்குவரத்து மாற்றத்தில் மின்சார வாகனங்கள்(EVs),, ஹைப்ரிட் வாகனங்கள், எத்தனால் அடிப்படையிலான கலப்பு எரிபொருட்கள் (flex-fuel) ஆகியவை எங்கு பொருந்தும் எனக் கருதுகிறீர்கள்?


இந்தியாவின் முன்னுரிமைகளை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், அதன் நோக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. இந்தியா புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், மாசுபாட்டைக் குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் விரும்புகிறது.


இந்தச் சூழலில், அனைத்து தூய்மையான தொழில்நுட்பங்களையும் ஆதரிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் ஹைப்ரிட் (hybrid) வாகனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தேர்வாக இருக்கக்கூடாது. இந்தியாவிற்கு இவ்விரு வகை வாகனங்களும் தேவைப்படுகின்றன. அதனுடன், கலப்பு எரிபொருட்கள் (flex fuels) சிஎன்ஜி (CNG), அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (compressed biogas), ஹைட்ரஜன் மற்றும் பிற தூய்மையான எரிசக்தித் தீர்வுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்கொள்ள வேண்டிய சவால் மிகப் பெரியது, இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மேம்பட்டாலும் கூட, ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். மேலும் புதைபடிவ எரிபொருட்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து நீடிக்கும்.


மின்சார வாகனம் (EV) வாங்க விரும்பும் எவரும் அதையே வாங்குவார்கள். ஒரு ஹைப்ரிட் வாகனம் அந்த வாடிக்கையாளரின் கவனத்தைத் திசை திருப்பாது. ஆனால், பெட்ரோல் அல்லது டீசல் வாகனம் வாங்க நினைப்பவர், ஒரு ஹைப்ரிட் வாகனம் தங்களுக்கு ஒட்டுமொத்தப் பராமரிப்புச் செலவைத் தருகிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கக்கூடும். எனவே, விற்கப்படும் ஒவ்வொரு ஹைப்ரிட் வாகனமும் உண்மையில் ஒரு பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்திற்கு மாற்றாக அமைகிறது. இது நாட்டிற்கும், நகரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறது. வாடிக்கையாளர் இத்தகைய தூய்மையான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக, அவர் மீது தவறுதலாக கூடுதல் வரி விதிக்கப்படாமல் இருப்பதை அரசு கொள்கைகள் உறுதி செய்ய வேண்டும்.


மறுபுறம், எத்தனால் (Ethanol) இந்தியாவிற்கு மிகவும் ஏற்றது. ஏனெனில் இது நமது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஒரு எரிபொருள் ஆதாரம், இது வேளாண் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது, நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலின் அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் சாலைப் போக்குவரத்தில் கார்பன் அளவை மிக வேகமாகவும் மலிவாகவும் குறைப்பதற்கான வழியாகவும் இருக்கிறது.


இந்தியாவின் எரிசக்தி சவால் மிகவும் பெரியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, வரும் ஆண்டுகளில் உலகளாவிய பெட்ரோல், டீசல் தேவையின் பெரும்பகுதி இந்தியாவில் இருந்துதான் வரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.                                                 இதை எதிர்கொள்வதற்கான ஒரே வழி, வாகனங்களின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதும், மின்சாரம் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டின் மூலமும் எரிபொருள் மாற்றத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.


இந்தியா எத்தனால் கலப்புத் திட்டத்தை (Ethanol blending) மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. எத்தனால் திட்டத்தை வேகப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறீர்களா?


நிச்சயமாக. எத்தனால் தொழில்துறைக்கு ஏற்கனவே கணிசமான உற்பத்தித் திறன் உள்ளது. பல எத்தானால் ஆலைகள் அவற்றின் முழுத் திறனுக்குக் குறைவாகவே இயங்குகின்றன என்றும், எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான வாய்ப்புகள் உள்ளன என்றும் இந்தத் தொழில்துறை சுட்டிக்காட்டி வருகிறது. இது, இந்தியா தனது பெட்ரோல் பயன்பாட்டையும் புதைபடிவ எரிபொருள் சார்பையும் குறைக்க உதவும். எனவே, அந்த திசையை நோக்கி பயணிப்பதற்கு இதுதான் சரியான நேரம் ஆகும். 




பிரேசில் நாட்டின் அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தை வழங்குகிறது. கச்சா எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகு, பிரேசில் ஆரம்பத்தில் எத்தனாலில் மட்டுமே இயங்கும் வாகனங்களை ஊக்குவித்தது. இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் வெவ்வேறு எரிபொருட்களைப் பயன்படுத்தும் நெகிழ்வுத்தன்மையை விரும்பியதால், அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. கலப்பு-எரிபொருள் வாகனங்கள் (flex-fuel vehicles (FFVs)) அறிமுகப்படுத்தப்பட்டபோதுதான் பெரிய மாற்றம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் கொள்கைகள் மூலம் அரசாங்கம் கலப்பு-எரிபொருள் வாகனங்களை (FFV) ஊக்குவித்தது. கிடைக்கும் தன்மை மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்து வெவ்வேறு எத்தனால் கலவைகளைப் பயன்படுத்தும் திறன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தவுடன், எத்தனால் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. பிரேசிலில் இருந்து கிடைக்கும் முக்கியப் பாடம் தெளிவாக உள்ளது. கலப்பு-எரிபொருள் வாகனங்கள் (FFV) தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவும், வாங்குவதற்கும் இயக்குவதற்கும் மாற்ற வேண்டும் என்பதுதான்.


இந்தப் பாதையைப் பின்பற்றுவதற்கு இந்தியாவிற்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. கலப்பு எரிபொருள் வாகனங்களை (flex-fuel vehicles) வாங்கும்போதும், எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தும்போதும் வாடிக்கையாளர்களுக்குப் பொருளாதார மதிப்பை உருவாக்கும் கொள்கைகளைக் கொண்டிருந்தால், அதன் பயன்பாடு மிக விரைவாக வளரக்கூடும். உற்பத்தியாளர்களுக்கும், உற்பத்தி அளவு முக்கியமானது. உற்பத்தி அளவு அதிகரித்தால், கலப்பு எரிபொருள் தொழில்நுட்பத்திற்கான இயந்திர விநியோகச் சங்கிலிகளைப் பெரிய அளவில் உருவாக்க முடியும், இது உற்பத்திச் செலவுகளைக் குறைக்க உதவும்.


மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றம் முறையான திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட வேண்டும் மற்றும் வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம், அரசாங்கக் கொள்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், மேலும் நுகர்வோருக்கு இதில் ஒரு மதிப்பு கிடைக்க வேண்டும்.





அதிக எத்தனால் கலப்பு மற்றும் வாகனங்களின் எரிபொருள் செயல்திறன், இயந்திரங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


வெவ்வேறு எத்தனால் கலவைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். E85 என்பது, அதிக எத்தனால் உள்ளடக்கத்தை கலவையாகப் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலப்பு எரிபொருள் வாகனங்களுக்கு (flex-fuel vehicles) மட்டுமேயானது. தற்போதுள்ள வாகனங்களை E20-லிருந்து, உதாரணமாக E25-க்கு மாற்றுவது குறித்தும் சில விவாதங்கள் நடந்தன. அதற்கு கவனமான மதிப்பீடு தேவைப்படுகிறது. இதைச் செய்யவே முடியாது என்பதல்ல பிரச்சனை; மாறாக, முன்பு E20-க்குச் செய்யப்பட்டது போல, போதுமான சோதனைகளை முடித்து மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.


இந்தியா E10-லிருந்து E20-க்கு மாறியபோது, ​​ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. வெவ்வேறு உற்பத்தியாளர்களின் பழைய வாகனங்கள் சோதிக்கப்பட்டன. பொருட்களின் இணக்கத்தன்மை, உதிரி பாகங்களின் சிதைவு மற்றும் எரிபொருள் செயல்திறன் மீதான தாக்கம் ஆகியவை மதிப்பிடப்பட்டன. பொருட்களின் மீதான தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது என்பதே அதன் முடிவாகும். எரிபொருள் செயல்திறன் மீதான தாக்கம் மிகக் குறைவாக, சுமார் 3-5% வரம்பில் மதிப்பிடப்பட்டது. எனவே, சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வெளியாகும் கவலைகள் அறிவியல் பூர்வமான உண்மைகளின் அடிப்படையிலோ அல்லது முறையான தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையிலோ அமைந்தவை அல்ல.


ஆனால், E25 கலவையைப் பொறுத்தவரை, இது போன்ற விரிவான சோதனைகள் இன்னும் நடக்கவில்லை. இந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன் புதிய வாகனங்களையும், பழைய வாகனங்களையும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த சோதனைகளே இதற்கான விடையைத் தரும். இருப்பினும், கலப்பு எரிபொருள் வாகனங்களே (FFV) தற்போதைய சூழ்நிலைக்குப் நெகிழ்வுத்தன்மை கொண்ட, மிகச் சிறந்த மற்றும் சரியான வழியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.



மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?


மின்சார வாகனங்கள் (EVs) எதிர்காலத்திற்கு முற்றிலும் அவசியமான மற்றும் ஒரு சிறந்த தொழில்நுட்பம் ஆகும். மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், குறைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சலுகை மற்றும் மின்னேற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவை நுகர்வோர் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், மின்சார வாகனங்கள் தங்களுக்குப் பொருளாதார ரீதியாக நியாயமான மற்றும் வசதியான தேர்வாக மாறும்போது மட்டுமே நுகர்வோர் அவற்றை வாங்குவார்கள். மின்சார வாகனங்களில் உள்ள மிகப்பெரிய சவால், மதிப்புக் கூட்டலை உள்நாட்டிலேயே உருவாக்குவதும், மூலப்பொருட்கள் மீதான சார்பைக் குறைப்பதும் ஆகும். இந்த மின்சார வாகன மாற்றத்தை நீண்டகாலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், இந்தச் சவாலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.


கடந்த ஒரு வருடமாக ஹைப்ரிட் வாகனங்களுக்கான (Hybrid vehicles) தேவை அதிகரித்துள்ளது. இதில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? 


இப்போது நுகர்வோர் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாட்டையும் அதன் முக்கியத்துவத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால், இந்தத் தொழில்நுட்பத்தை அவர்கள் மிக நன்றாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. சமீபத்தில், உலக சுற்றுச்சூழல் தின விவாதத்தின் போது, மின்சார வாகனங்கள் (EVs), கலப்பு எரிபொருள்கள் (Flex fuels), ஐசோபியூட்டனால் (isobutanol) சோதனைகள், ஹைட்ரஜன் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் ஒரு முக்கியமான புள்ளியும் விவாதிக்கப்பட்டது — அது, எரிபொருள் சிக்கனத்தை கணிசமாக அதிரடியாக உயர்த்திக் கொடுக்கக்கூடிய வாகனங்களின் தேவை என்பதாகும். அங்குதான் ஹைப்ரிட் வாகனங்கள் மிக முக்கியமானதாக மாறுகின்றன. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பலனளிக்கும் ஒரு தொழில்நுட்பமாக இது இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விரைவாக மாற்றுவதற்கு அரசாங்கக் கொள்கைரீதியாகவும் இதற்கு ஆதரவு தேவைப்படுகிறது.


ஹைப்ரிட் வாகனங்களுக்கு கூடுதல் கொள்கை ஆதரவு தேவை என்று கூறுகிறீர்களா?


ஆம், அவற்றுக்கு இன்னும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும். சான்றளிக்கப்பட்ட தரவுகளின்படி, ஹைப்ரிட் வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்தை 40-50% வரை மேம்படுத்தித் தரும். டெல்லி போன்ற போக்குவரத்து நெரிசலும், குறைந்த வேகத்தில் மட்டுமே ஓட்டக்கூடிய சூழலும் உள்ள ஒரு நகரத்திற்கு ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் பொருத்தமானவை. ஏனெனில், நகரங்களில் வாகனங்களை ஓட்டும்போது, வழக்கமான பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள் இயந்திரம் இயங்கு நிலையில் நிற்கும்போதும் (Idling) மெதுவாக நகரும்போதும்தான் (Crawling) அதிக எரிபொருளை வீணடிக்கும். ஆனால், இந்தச் சமயங்களில் ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் திறம்படச் செயல்படுகின்றன. ஏனெனில், அவை மின்சார வாகன (EV) பயன்முறையில் இயங்கும். ஒரு ஹைப்ரிட் வாகனம் நடைமுறையில் இயந்திரம் அணைக்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 60% நேரத்தை மின்சார வாகன பயன்முறையிலேயே இயங்க வைக்க முடியும். இதற்கு வெளியிலிருந்து சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பு எதுவும் தேவையில்லை. மேலும், மின்சார வாகனங்களுடன் (EVs) ஒப்பிடும்போது, இது மிகச் சிறிய மின்கலனை (சுமார் 1-2 kWh) மட்டுமே பயன்படுத்துகிறது. இருப்பினும் நாம் எதிர்பார்க்கும் சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்ற அனைத்து முக்கிய நன்மைகளையும் இது சிறப்பாக வழங்குகிறது.


Original article: Why ethanol is crucial for India’s mobility transition? -Sandeep Singh

Share:

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


— மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஜூன் மாதம் 26-ஆம் தேதி ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டு, ஜூலை மாதம் 2-ஆம் தேதி அதை பொதுவெளியில் வெளியிட்டது. JSW Steel, Tata, SAIL (Steel Authority of India) மற்றும் ArcelorMittal Nippon Steel போன்ற இத்துறையின் முன்னணி நிறுவனங்கள் உட்பட 255 தொழில் நிறுவனங்களுக்கு இது கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை நிர்ணயித்துள்ளது.


— முன்னதாக, இரும்பு மற்றும் எஃகு துறைக்கான உமிழ்வு குறைப்பு இலக்குகளின் வரைவை, இரண்டாம் நிலை அலுமினியம் (secondary aluminium), பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோகெமிக்கல் மற்றும் ஜவுளித் துறைகளுக்கும் சேர்த்து ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. மற்ற துறைகளுக்கான இறுதி இலக்குகள் ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சகம் இரும்பு மற்றும் எஃகு துறைக்கான இலக்குகளில் சிறிய மாற்றங்களுடன் திருத்தப்பட்ட வரைவை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தப் புதிய வரைவுக்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.



— இந்த வரைவுக்கான அறிவிப்பு, 2023-24-ஆம் ஆண்டை அடிப்படை உற்பத்தி அளவு மற்றும் அடிப்படை உமிழ்வு தீவிரத்திற்கான (baseline emission intensity) ஆண்டாகவும், 2026-27-ஆம் ஆண்டை தனிப்பட்ட எஃகு ஆலைகள், ஸ்பாஞ்ச் இரும்பு (sponge iron) அலகுகள் மற்றும் ஃபெரோ-அலாய் (ferro-alloy) உற்பத்தியாளர்களுக்கான விதிமுறைக்கு இணங்கும் ஆண்டாகவும் நிர்ணயிக்கிறது. இந்த வரைவு குறித்த ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


— இந்த வரைவு அறிக்கையானது, புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் திறனின் அடிப்படையில், வெறும் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) மட்டுமன்றி மற்ற அனைத்து பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தையும் அளவிடப் பயன்படும் 'டன் கார்பன் டை ஆக்சைடு நிகர மதிப்பு' (Tonnes of carbon dioxide equivalent (tCO2e))  என்ற அலகின் அடிப்படையில் இலக்குகளை வரையறுத்துள்ளது. மேலும், இந்த வரைவில் 2026-27-ஆம் ஆண்டிற்கான சுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (Greenhouse Gas Emission Intensity (GEI)) இலக்குகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டிற்கான பகுதி விடப்பட்டுள்ளது.


— பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் (GEI) என்பது உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு அலகு பொருளுக்கும் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் (GHGs) அளவைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு அலகு சிமெண்ட்டை உற்பத்தி செய்யும்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இது அளவிடுகிறது. சந்தை சார்ந்த செயல்முறை மூலம் கார்பன் உமிழ்வு குறைப்பை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் காலநிலை நடவடிக்கை இலக்குகளை அடைவதற்கு உதவுவதற்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS) 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


— அலுமினியம், சிமெண்ட், குளோரோ-ஆல்கலி (chlor-alkali), கூழ் மற்றும் காகிதம், இரண்டாம் நிலை அலுமினியம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஜவுளி ஆகிய எட்டு துறைகளுக்கான உமிழ்வு குறைப்பு இலக்குகளை ஒன்றிய அரசு ஏற்கனவே இறுதி செய்துள்ளது.



— 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS), இந்திய கார்பன் சந்தைக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்கியது. அதிகப்படியான மாசுபடுத்திகளை வெளியிடும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது சவாலான செயல்பாடுகளைக் கொண்ட துறைகளிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) அளவைக் கணிசமாகக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


— ஒவ்வொரு கடமைப்பட்ட தொழிற்சாலைக்கும், அவற்றின் உற்பத்தி அளவிற்கேற்ப வெளியேற்றப்படும் கார்பன் உமிழ்வின் அடிப்படையில் ஒரு 'ஜி.இ.ஐ' பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் (GEI) இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தங்களுடைய இலக்கைச் சரியாக எட்டும் அல்லது இலக்கைவிடக் குறைவான உமிழ்வைக் காட்டும் தொழிற்சாலைகளுக்கு 'கார்பன் கிரெடிட் சான்றிதழ்கள்' (Carbon credit certificates) வழங்கப்படும். இந்தச் சான்றிதழ்களை, தங்களது இலக்கை எட்ட முடியாமல் பின்தங்கியுள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு அவர்கள் விற்றுக் கொள்ள முடியும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் இழப்பீடு செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகையானது, சந்தையில் விற்கப்படும் சராசரி கார்பன் கிரெடிட் விலையைப் போல இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


உங்களுக்குத் தெரியுமா? :


— மார்ச் மாதம் 25-ஆம் தேதி, இந்தியா 2035-ஆம் ஆண்டிற்கான தனது காலநிலை இலக்குகளை வெளியிட்டது. இதில் பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்துதல் மற்றும் காடுகள் மூலம் கார்பன் உறிஞ்சும் அமைப்புகளை (carbon sinks) உருவாக்குதல் ஆகியவற்றில் கூடுதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.


— 2035-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தித் திறனில் குறைந்தது 60% புதைபடிவமற்ற எரிபொருள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் என்று இந்தியா கூறியுள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட 50% இலக்கைவிட அதிகமாகும்.


— 2005-ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடும்போது, உமிழ்வுத் தீவிர (Emissions intensity) விகிதத்தைக் குறைந்தது 47% குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்கான தற்போதைய 45% இலக்கைவிட இரண்டு சதவீதம் அதிகம் ஆகும்.


— 2005-ஆம் ஆண்டில் இருந்ததைவிட, குறைந்தது 3.5 முதல் 4 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு (CO2) இணையான வாயுக்களை உறிஞ்சக்கூடிய கூடுதல் காடுகள் மற்றும் மரங்களை (Carbon sink) உருவாக்கவும் இந்தியா உறுதியளித்துள்ளது.


— இந்தப் புதிய இலக்குகள் ஒவ்வொன்றும், 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் (2015 Paris Agreement) கட்டாயத் தேவையாக உள்ள 2030-ஆம் ஆண்டிற்கான தற்போதைய வாக்குறுதிகளைவிட அடுத்தகட்ட முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.


— குறிப்பாக, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு உதவும் வகையில் சில காலநிலை நடவடிக்கைகளைத் தாங்களாகவே முடிவு செய்து செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவை 'தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்' (Nationally-Determined Contributions (NDCs)) என்று அழைக்கப்படுகின்றன.


Original article: What is the labour force participation rate (LFPR)? -Roshni Yadav

Share:

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில், திட்டமிடல் பணிகளில் கிராம உள்ளாட்சி அமைப்புகளும் பங்களிக்க வேண்டும் -நிகிதா, பார்கபி கோஷ்

 உள்ளூர் பிரதிநிதிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்போது, ​​தீர்வுகள் விரைவாகச் சென்றடைகின்றன.


காற்றின் தரக் குறியீடு (AQI) (AQI.in) என்கிற இணையதளம் தொகுத்த தரவுகளின்படி, மே மாதத்தில் உலகின் மிக வெப்பமான 100 நகரங்களின் பட்டியலில் 97 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பந்தேல்கண்டில் உள்ள பண்டா, ஒடிசாவில் உள்ள பாலங்கீர், பீகாரில் உள்ள சசாரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய இடங்களில் சுமார் 47℃ முதல் 48℃-ஆக வெப்பநிலை பதிவானது. சில வாரங்களுக்கு முன்பு, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் (Paris Agreement) இந்தியாவின் திருத்தப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவின் மூலம் தனது கார்பன் உறிஞ்சும் திறனை (carbon sink) விரிவுபடுத்தவும், புதைபடிவமற்ற மின்உற்பத்தித் திறனை 60 சதவீதமாக அதிகரிக்கவும், 2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கார்பன் உமிழ்வு அடர்த்தியை 2005-ஆம் ஆண்டு அளவிலிருந்து 47 சதவீதம் குறைக்கவும் இந்தியா உறுதியளித்தது. காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இந்தியா ஒரு வலுவான சாதனையைப் படைத்துள்ளது. இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை, மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களை நேரடியாகக் கையாளும் நிறுவனங்களான உள்ளாட்சி அமைப்புகள், காலநிலை திட்டமிடல் சார்ந்த பணிகளில் இருந்து இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையிலயே உள்ளன.


இந்தியக் கிராமப்புறங்கள் முழுவதும், காலநிலை மாற்றம் மக்களின் அன்றாட வாழ்க்கையையே மாற்றி அமைத்து வருகிறது. முற்காலத்தில் கணிக்கக்கூடிய வகையில் பெய்த பருவமழையை நம்பித் தங்களது விதைப்பு காலத்தைத் திட்டமிட்ட வேளாண் தொழிலாளர்கள், இப்போது மழை எப்போது வரும், அது பயிர்களைக் காப்பாற்றும் அளவுக்கு நீடிக்குமா என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். பல இடங்களில் கோடைக்காலம் முடிவதற்கு முன்பே கிணறுகள் வறண்டு போவதால், குடும்பங்கள் தாங்கள் பயிரிடும் முறையையும், உண்ணும் உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொண்டுள்ளன. இந்தியாவில் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வரும் (Rural-to-urban migration) தற்போதைய சூழலில், இந்த மாற்றம் மிகவும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


இன்று இந்தியாவின் காலநிலை சார்ந்த சிக்கல்களில்  முக்கியமாக விளங்கும் நீர் மேலாண்மை, விவசாயம், சமூகக் காடுகள் வளர்ப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட 29 துறைகளின் அதிகாரங்களை கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு (Gram panchayats) வழங்குவதற்காக, 73-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 6-வது நிதி ஆணையம், முதன்முறையாக, தனது அதிகாரப் பகிர்வு பரிந்துரைகளில் காலநிலை காரணிகளை ஒருங்கிணைத்தது. ஆனால், உள்ளாட்சி முன்னேற்றக் குறியீடு-2.0 (Panchayat Advancement Index (PAI)) மற்றும் உள்ளாட்சி அதிகாரப் பகிர்வுக் குறியீடு (Panchayat Devolution Index) ஆகிய இரண்டும், அதே காலகட்டத்தில் செயல்பாட்டு அதிகாரப் பகிர்வு குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. பயனுள்ள நிதிப் பரிமாற்றங்கள், அர்த்தமுள்ள நடைமுறை அதிகாரம் மற்றும் உண்மையான திட்டமிடல் அதிகாரம் இல்லாமல், கிராம உள்ளாட்சி நிர்வாகத்தால் காலநிலை மாற்றத்தின் சிக்கல்களைச் சரியாக எதிர்கொள்ள முடிவதில்லை.


கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையான ஆதரவு கிடைக்கும்போது என்னென்ன மாற்றங்களைச் சாதிக்க முடியும் என்பதற்குக் கள அளவில் நிரூபிக்கப்பட்ட பல உள்ளூர் மாதிரிகள் சான்றாக உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள ஹிவாரே பஜார் (Hiware Bazar), அருகிலுள்ள ரலேகன் சித்தியிடமிருந்து (Ralegan Siddhi) கற்றுக்கொண்ட அனுபவங்களின் உதவியுடன், நீர்ப்பிடிப்பு மேலாண்மை மூலம் வறட்சி பாதிப்புக்குள்ளான நிலப்பரப்பை மாற்றியமைத்தது. மகாராஷ்டிராவின் பேலாவில் உள்ள ஒரு நீர் பாதுகாப்பு மாதிரி, கார்வாலில் (Garhwal) வறட்சியை எதிர்கொள்ளும் ஒரு கிராம உள்ளாட்சி நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது. பொக்காரோவில் (Bokaro) உள்ள ஒரு கிராம உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை (District Mineral Foundation) நிதியைப் பயன்படுத்திய விதம், சத்தீஸ்கரில் இதே போன்ற முயற்சிகளுக்கு ஒரு செயல் மாதிரியை வழங்குகிறது. கேரளாவின் கடலோர கிராம உள்ளாட்சி அமைப்புகளின் வானிலை இடர் மேலாண்மை நடைமுறைகள், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு வழிகாட்ட முடியும். ஐந்து மாநிலங்களில் 1,100-க்கும் மேற்பட்ட கிராம உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தியுள்ள 'உள்ளாட்சி அமைப்புகளின் மாநாடு' (Conference of Panchayats) என்ற முன்முயற்சியானது, உள்ளூர் பிரதிநிதிகளுக்கு எது பலனளிக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்போது, ​​தீர்வுகள் வேகமாகச் சென்றடையும் என்பதைக் காட்டியுள்ளது.


மூன்று நடவடிக்கைகள் இந்தியாவின் காலநிலை இலக்குகளுக்கு வலுவான உள்ளூர் அடித்தளத்தை வழங்க முடியும். முதலாவதாக, தேசிய காலநிலை மாற்றக் குழுவும் (National Action Plan on Climate Change (NAPCC)) மாநில செயல் திட்டங்களும், வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்களுடன் கிராம உள்ளாட்சி அமைப்புகளை திட்டமிடல் பயணிகளில் முக்கியப் பங்களிப்பாளர்களாக முறையாகச் சேர்க்கப்பட வேண்டும். இரண்டாவதாக, உள்ளாட்சி முன்னேற்றக் குறியீட்டின் (PAI) ஒன்பது கருப்பொருள் பகுதிகள், ஒரே பிராந்தியத்தில் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளைப் பின்தங்கியவற்றுடன் இணைக்க வேண்டும். இது, மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறைகள் வழியாக மட்டுமல்லாமல், ஊராட்சிகளுக்கு இடையே வெற்றிகரமான யோசனைகளை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளவும் உதவும். மூன்றாவதாக, 16-வது நிதி ஆணையத்தின் காலநிலை தொடர்பான அதிகாரப் பகிர்வுடன், கிராம உள்ளாட்சி அமைப்புகள் செலவு செய்வதற்கு மட்டுமல்லாமல், திட்டமிடுவதற்கும் தேவையான நடைமுறை அதிகாரமும் இணைக்கப்பட வேண்டும்.


நிகிதா, பொதுக் கொள்கை ஆலோசனை பிரிவில் ஆலோசகராக உள்ளார். கோஷ், கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆலோசனைக் குழுவின் ராஜதந்திர தொடர்புகள் மற்றும் பொதுக் கொள்கை ஆலோசனை பிரிவில் இணை இயக்குநராக உள்ளார்.


Original article: In climate fight, panchayat must partner in planning. -Nikita, Bhargabi Ghosh

Share:

சூதாட்டம் அதிர்ஷ்டத்தைச் சார்ந்த விளையாட்டா அல்லது திறமையைச் சார்ந்ததா என்பது முக்கியமல்ல; சூதாடுவதற்கான அடிப்படை உரிமை எதுவும் இல்லை. - குமார் கார்த்திகேயா

 புதிய தொழில்நுட்ப முன்னெடுப்புகள் அல்லது தெளிவான சட்ட விளக்கங்கள் மூலம் அரசியலமைப்பு உரிமைகளை உருவாக்கிவிட முடியாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


இணையவழி விளையாட்டுகள் (Online gaming) குறித்த விவாதங்கள், பெரும்பாலும் அந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சொற்களான, 'புதிய கண்டுபிடிப்புகள்', 'தொழில்நுட்பம்', 'தொழில்முனைவோர்' மற்றும் 'டிஜிட்டல் சந்தை' ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளன. மிகவும் எளிமையான ஒரு கேள்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்தச் சொற்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன: ஒரு நபர், உறுதியற்ற ஒரு முடிவின் மீது, பண லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணத்தைப் பந்தயம் கட்டும்போது, அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்புப் பெற்ற ஒரு செயலா? பணம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் சட்டங்கள் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட தீர்ப்பு, இந்தக் கேள்விக்கு மிகத் தெளிவான பதிலை வழங்கியுள்ளது.



இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம் இணையவழி விளையாட்டுத் துறையின் மீதான அதன் தாக்கத்தில் மட்டுமல்ல. மாறாக, வரலாற்று ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட வரம்பிற்கு வெளியே இருந்து வந்த ஒரு செயலுக்காக, அரசியலமைப்பு உரிமைகள் என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொள்ள நீதிமன்றம் மறுத்ததில்தான் உள்ளது. அரசியலமைப்புச் சார்ந்த நீதிமன்றத் தீர்ப்புகள், பெரும்பாலும் உரிமைகளைப் பாதுகாப்பது போலவே, அவற்றிற்கான வரம்புகளை வரையறுப்பதையும் உள்ளடக்கியதாகவே அமைகின்றன. ஒரு புதிய அடிப்படை உரிமை சேர்க்கப்படும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட செயல்பாட்டை நாடாளுமன்றத் தலையீட்டிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதா என்பதை நீதிமன்றங்கள் ஆராய வேண்டியது அவசியமாகிறது. பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான விவகாரங்களில், இதற்கான விடை தொடர்ந்து எதிர்மறையாகவே இருந்து வந்துள்ளது.


இணையவழி விளையாட்டுத் துறையின் முக்கிய வாதம் திறன் விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையேயான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த வாதத்தின்படி, ஒரு விளையாட்டு கணிசமான அளவிலான திறமையை உள்ளடக்கியதாகக் கண்டறியப்பட்டவுடன், செயல்பாடு சட்டப்பூர்வ வணிகமாக 19(1)(g)-ன்கீழ் அரசியலமைப்புப் பாதுகாப்பைப் பெறுகிறது. இந்த வாதத்தின் வரம்புகளை உச்சநீதிமன்றம் சரியான முறையில் சுட்டிக்காட்டியுள்ளது; ஒரு பந்தய விளையாட்டில் அல்லது சூதாட்டம் என்ற அம்சம் நுழைந்துவிட்டால், அந்த விளையாட்டு திறன் அடிப்படையிலானதா அல்லது அதிர்ஷ்ட அடிப்படையிலானதா என்பது முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் கருத்தே இந்தச் சர்ச்சையின் முக்கியமான பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டரீதியான உண்மையான கேள்வி, ஒருவர் ரம்மி, போக்கர் அல்லது ஃபேன்டஸி விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதற்கு திறமை தேவைப்படுகிறதா என்பது அல்ல. மாறாக, ஒரு செயல்பாட்டில் ஓரளவு திறமை தேவைப்படுகிறது என்ற காரணத்தால் மட்டுமே, உறுதியற்ற முடிவுகளை எதிர்பார்த்து அடிக்கடி பணத்தை பந்தயம் கட்டும் செயலை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? என்பதுதான் உண்மையான சட்ட மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த சிக்கலாகும்.



இந்த வித்தியாசம் ஏன் முக்கியம் என்றால், சமூகப் பாதிப்புகள் ஏற்படுவது ஒருவரின் திறமையால் அல்ல, மாறாக அவர் கட்டும் பந்தயத்தால்தான். திறமையுள்ள ஒரு சூதாடியும், திறமையற்ற ஒருவரைப் போலவே தனது சேமிப்பை எளிதில் இழக்க நேரிடும். அடிமையாதல் என்பது அதிர்ஷ்ட விளையாட்டையா அல்லது திறமை விளையாட்டையா என்று பார்த்து வருவதில்லை. பந்தயம் கட்டுவதற்கு முன்னால் ஒரு நபர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினார் என்பதற்காக, அதனால் ஏற்படும் நிதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்தின்படி முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக மாறிவிடாது. லாபத்தை நோக்கமாகக் கொண்டு ஒருமுறை பணம் பந்தயம் கட்டப்பட்டுவிட்டால், அந்தச் செயல் வரலாற்று ரீதியாகவே அரசாங்கம் தலையிட்டுக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விவகாரமாக மாறிவிடுகிறது. திறமை மட்டுமே பந்தயத்தை அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட ஒரு சுதந்திரமாக மாற்றிவிடும் என்று கூறுவது, முதன்முதலில் சூதாட்டச் சட்டங்கள் ஏன் கொண்டுவரப்பட்டன என்ற நோக்கத்தையே புறக்கணிப்பதாகும்.


நீதிமன்றம், 'வணிகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விவகாரம் (a thing outside commerce) என்ற கோட்பாட்டைச் சார்ந்திருப்பது ஒரு மிக முக்கியமான புரிதலை அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், சில செயல்பாடுகள் வருவாயை ஈட்டுகின்றன என்பதற்காக மட்டுமே அரசியலமைப்புப் பாதுகாப்பிற்குத் தகுதியானவையாக ஒருபோதும் கருதப்படவில்லை. இலாபகரமான ஒவ்வொரு தொழிலையும் செய்வதற்கான உரிமையை அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை. பிரிவு 19(1)(g)-ஆல் அளிக்கப்பட்ட சுதந்திரம், சட்டப்பூர்வமான தொழில்களையும் வணிகங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இலாபம் மட்டுமே அளவுகோலாக மாறினால், சாதாரண வணிகத்திற்கும், சட்டமன்றங்கள் வரலாற்று ரீதியாக சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதிய செயல்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பதற்கு கொள்கைரீதியான அடிப்படை குறைவாகவே இருக்கும். பொருளாதார நடவடிக்கையும் அரசியலமைப்பு சட்டம் ரீதியான உரிமையும் (constitutional entitlement) ஒன்றல்ல.


தொழில்துறையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதன் விளைவுகள் இணையவழி விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். திறமை சார்ந்த விளையாட்டுகளில் பந்தயம் கட்டுவது ஒரு அடிப்படை உரிமையாக கருதப்பட்டால், சூதாட்டத்தின் மீதான சட்டமன்ற அதிகாரம் கணிசமாகக் குறைந்துவிடும். ஒவ்வொரு ஒழுங்குமுறை நடவடிக்கையும் (regulatory measure) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்ற ஆய்வுக்கு (constitutional scrutiny) உட்படுத்தப்படும். ஆனால், அது தனிநபரின் சுதந்திரம் உண்மையாகவே அச்சுறுத்தப்படுவதால் பெறப்படுவதில்லை. மாறாக, வணிக நிறுவனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பை நாடுவதாலேயே போன்ற ஒரு நிலை ஏற்படும். இதன் விளைவாக, சட்டப்பிரிவு 19(1)(g) பொருளாதார சுதந்திரத்திற்கான உத்தரவாதத்திலிருந்து ஜனநாயக ஒழுங்குமுறைக்கு எதிரான ஒரு கருவியாக படிப்படியாக மாறும். அடிப்படை உரிமைகள் குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சந்தைகளைப் பாதுகாப்பதற்கான கருவிகளாக மாறிவிடும்.


பொது சுகாதாரம் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான கவலைகளை நீதிமன்றம் அங்கீகரித்தது மிகவும் முக்கியமானது. இணையவழி பணப் பரிமாற்ற விளையாட்டுகளுடன் தொடர்புடைய அடிமைத்தனம், அதிகரித்துவரும் நிதி இழப்புகள் மற்றும் தற்கொலைகள் குறித்த தரவுகளை மாநிலங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன. இந்தக் கவலைகளை வெறும் அதீத பயம் என்று எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. நவீன இணையவழி விளையாட்டுத் தளங்களின் வடிவமைப்பு, பாரம்பரிய சூதாட்ட வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. டிஜிட்டல் தளங்கள் அனைத்து நேரங்களிலும் கிடைக்கக்கூடியவை, உடனடி பணப் பரிவர்த்தனைகளை அனுமதிப்பவை மற்றும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பயனர்களைச் சென்றடையும் திறன் கொண்டவை. தொடர்ச்சியான அணுகல் மற்றும் பண ஊக்கத்தொகை ஆகியவற்றின் இந்த கலவையானது, சட்டமன்றங்கள் நியாயமான முறையில் புறக்கணிக்க முடியாத ஆபத்துகளை உருவாக்குகிறது. இது போன்ற யதார்த்தங்களுக்கு மாநிலங்கள் பதிலளிப்பதைத் தடுக்கும் ஒரு அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு, தொழில்நுட்ப மாற்றத்தின் முன்னால் ஒழுங்குமுறை அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்குச் சமமாகும்.


இறுதியாக இங்கு ஆபத்தில் இருப்பது என்னவென்றால், ஒரு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் உரிமைகளுக்கும் பொறுப்புக்கும் இடையே உள்ள உறவுதான். உரிமைகள் என்பவை மனித கண்ணியம், தன்னாட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றோடு கொண்டுள்ள தொடர்பின் மூலமே தங்களின் சட்டபூர்வமான தன்மையைப் பெறுகின்றன. பந்தயம் கட்டுவதும் சூதாட்டமும் முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதற்கான அரசியலமைப்பு உரிமைகோரல் என்பது எந்தவொரு அர்த்தமுள்ள சுதந்திரத்தின் அடிப்படையிலும் இல்லை, மாறாக பந்தயச் செயல்பாடுகள் மூலம் லாபம் ஈட்டுபவர்களின் வணிக நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பொது நலனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடமையைவிட, இத்தகைய வணிக நலன்களை உயர்வாகக் கருதுவது அரசியலமைப்பின் நோக்கம் அல்ல.


தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அல்லது தெளிவான சட்ட விளக்கங்கள் மூலம் அரசியலமைப்பு உரிமைகளை உருவாக்கிவிட முடியாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு செயல்பாட்டை 'டிஜிட்டல் தளம்' என்று அழைப்பது அதன் அடிப்படைத் தன்மையை மாற்றிவிடாது. பந்தயம் கட்டுவதை, 'பொழுதுபோக்கு' என்று விவரிப்பது அதன் சமூக விளைவுகளைக் குறைத்துவிடாது. சூதாட்டத்தைத் 'திறமை சார்ந்த விளையாட்டு' என்று குறிப்பிடுவது, நிச்சயமற்ற முடிவுகளுக்காகப் பணம் பணயம் வைக்கப்படுகிறது என்ற உண்மையை அழித்துவிடாது.


பந்தயம் கட்டுவதற்கும் சூதாடுவதற்கும் அடிப்படை உரிமை ஏதுமில்லை. மேலும், அது போன்ற செயல்பாடுகள் பொது நலனுக்கு அச்சுறுத்தலாக அமையும்போது அதில் தலையிடுவதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு என்கிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீண்டகாலக் கோட்பாடு ஒன்றை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


கட்டுரையாளர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், எடின்பர்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுகலை சட்டக் கல்வி மாணவரும் ஆவார்.


Original article: Game of chance or skill? It doesn’t matter; there is no Fundamental Right to gamble. -Kumar Kartikeya

Share:

வாட்ஸ்அப் செயலியின் பயனர்பெயர் அம்சம் குறித்து ஏன் கவலைகள் எழுந்துள்ளன? -அரூன் தீப்

 வாட்ஸ்அப் செயலி (WhatsApp) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள பயனர்பெயர் (username) அம்சம் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதில் உள்ள தனியுரிமைப் பாதுகாப்புகள் யாவை? இந்திய அரசு ஏன் வாட்ஸ்அப் செயலியை அதன் அறிமுகத்தை நிறுத்தச் சொல்கிறது? ஒரு செயலியின் அம்சங்களை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியுமா?


ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு , வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தின் 'பயனர் பெயர்' (Username) வசதி அறிமுகப்படுத்தப்படுவதை நிறுத்துமாறு மெட்டா (Meta) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தத் தகவல் பரிமாற்றச் செயலி, தற்போது இந்த பயனர் பெயர் வசதிக்கான முன்பதிவுகளைப் பெற்று வருகிறது. சமூக ஊடக நிறுவனமான மெட்டாவிற்கு அனுப்பிய அந்த அறிவிப்பாணையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: பயனர்களின் தொலைபேசி எண்களை மறைத்துவிட்டு பயனர் பெயரை மட்டும் காட்டுவது இணைய மோசடிகள், போலி இணைப்புகள் மூலம் தகவல்களைத் திருடுதல் (Phishing), டிஜிட்டல் கைது மோசடிகள்  மற்றும் ஆள்மாறாட்டத் தாக்குதல்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் என்பது என்ன?


வாட்ஸ்அப் நிறுவனம், மொபைல் எண்களைப் பகிர்ந்து கொள்ளாமலேயே மற்றவர்களுடன்  உரையாடல் (Chat) செய்வதற்கான ஒரு வழியாக இந்த 'பயனர் பெயர்' அம்சத்தை விளம்பரப்படுத்துகிறது. இதன் மூலம், உங்களது புதிய தொடர்புகளுக்கு மொபைல் எண்ணிற்குப் பதிலாக நீங்கள் தேர்ந்தெடுத்த பயனர் பெயர் மட்டுமே தெரியும். இது கட்டாயமான ஒன்று அல்ல, நீங்கள் விரும்பினால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கூடுதல் வசதி ஆகும்.


வாட்ஸ்அப்பில் பயனர் பெயர்களுக்கான பொதுப் பட்டியல் (public directory) எதுவும் இருக்காது. ஒருவரைத் தொடர்புகொள்ள, அவருடைய சரியான பயனர்பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். யாராவது தங்கள் பயனர்பெயரை ஊகித்துவிடுவார்களோ என்று கவலைப்படுபவர்களுக்காக, ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை (personal identification number (PIN)) அமைத்துக்கொள்ளலாம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. அப்படி அமைத்துக்கொண்டால், உங்கள் பயனர்பெயர் தெரிந்த ஒருவரால்கூட, உங்கள் தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN) தெரியாவிட்டால் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது.


இந்த அம்சம் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் இது பரவலாகக் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


அரசாங்கம் இந்த புதிய வசதியைக் குறித்து ஏன் கவலை கொள்கிறது?


தி இந்து நாளிதழ் ஆய்வு செய்த அறிவிப்பின் நகலில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அமைப்பு, இந்த அம்சம் "உண்மையான நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்களைப் போலவே இருக்கும் பயனர் பெயர்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம், தனிநபர்கள், பொது அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகளைப் போலப் போலியாக ஆள்மாறாட்டம் செய்வதற்கும், அடையாள மோசடி செய்வதற்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.


மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கவலைகளை எதிரொலிக்கும் வகையில், சில பொது நிர்வாகங்கள் தங்கள் பெயர்களின் பல்வேறு வடிவங்கள் ஏற்கனவே பயனர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ‘X’ தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், மொபிக்விக் நிறுவனர் (MobiKwik) பிபின் ப்ரீத் சிங், இது தனக்கும் நடந்ததாகக் கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “இது ஒரு நல்ல யோசனையே அல்ல. இது மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் பெருக வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தனது அறிவிப்பாணையில், தவறு செய்யும் நபர்கள் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்புகொண்டு குறுஞ்செய்தி அனுப்ப இந்த வசதி உதவுவதால், இது இணைய மோசடிகள், தகவல்களைத் திருடும் மோசடி (Phishing), டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டத் தாக்குதல்களை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.


இதற்கு அடுத்த சில நாட்களிலேயே, டெலிகிராம் (Telegram), சிக்னல் (Signal) மற்றும் அரட்டை (Arattai) ஆகிய செயலிகளுக்கும் அரசாங்கம் இதேபோன்ற அறிவிப்பாணையை அனுப்பியது. ஏனெனில், இந்த செயலிகளில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்களை மறைத்துக் கொள்ளும் வகையிலான 'பயனர் பெயர்' வசதி ஏற்கனவே நீண்டகாலமாக இருந்து வருகிறது.


இந்தக் கவலைகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்தின் பதில் என்ன?


வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரபலங்களின் பெயர்களில் மற்றவர்கள் போலி கணக்குகளைத் தொடங்குவதைத் தடுப்பதற்காக, முன்னணி ஆளுமைகளின் பயனர் பெயர்களை மெட்டா (Meta) நிறுவனம் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த அறிக்கையின்படி, பிரபல ஆளுமைகள் என்பதில் பொது நபர்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் மெட்டாவால் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் ஆகியவை அடங்கும்.


தங்கள் தொலைபேசி எண்ணை மறைத்துள்ள ஒரு பயனரிடமிருந்து உங்களுக்குச் செய்தி வந்தால், அனுப்புநரின் சொந்த நாட்டை வாட்ஸ்அப் காண்பிக்கும் என்றும், அவர்கள் ஏற்கனவே உங்கள் தொலைபேசிப் புத்தகத்தில் உள்ளார்களா என்பதையும் சுட்டிக்காட்டும் என்றும் மெட்டா கூறுகிறது.


இந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்காக, வாட்ஸ்அப் அதிகாரிகள் ஜூலை மாதம் 3-ஆம் தேதி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அதிகாரிகளைச் சந்தித்தனர். அரசின் அறிவிப்புக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிப்பது ஜூலை மாதம் 4-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது.


அறிமுகம் இல்லாத புதிய நபர்களின் செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்கான உரிமை பயனர்களுக்கு உள்ளது என்று ஜூலை மாதம் 1-ஆம் தேதி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஒரு செயலியின் அம்சங்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியுமா?


வாட்ஸ்அப் போன்ற தனியாருக்குச் சொந்தமான மற்றும் அவர்களால் இயக்கப்படும் ஒரு செயலியில் உள்ள அம்சத்தை அரசாங்கம் தடை செய்ய முடியுமா என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சட்டப்பூர்வமான ஒரு அம்சத்தின் வெளியீட்டை, நிறுவனம் நியாயப்படுத்த வேண்டிய ஒரு தவறாக இந்த அறிவிப்பு கருதுகிறது, என்று டெல்லியைச் சேர்ந்த டிஜிட்டல் உரிமைகளுக்கான குழுவான இன்டர்நெட் ‘Internet Freedom Foundation’ (IFF) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தனது அறிவிப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 2(1)(w)-ஐயும், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதிகள் 2(1)(v) மற்றும் 2(1)(w)-ஐயும் சேர்த்துப் படிக்கும்போது, ​​வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு இடைநிலை அமைப்பு (Intermediary) மற்றும் ஒரு முக்கியமான சமூக ஊடக இடைநிலை அமைப்பு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட ஒரு தளம் முக்கியமான சமூக ஊடக இடைநிலை அமைப்பு என்று வரையறுக்கப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனத்திற்கோ இந்தியாவில் சுமார் 80 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தளம் தகவல் தொழில்நுட்ப விதிகளின்கீழ் உள்ள உரிய சோதனைகள் மற்றும் இதர கடமைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது என்று அரசாங்கம் கூறியுள்ளது.


அந்த அறிவிப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவுகள் 66C (அடையாளத் திருட்டு), 66D (ஆள்மாறாட்ட மோசடி) மற்றும் 79 (இடைநிலை அமைப்பின் பொறுப்பு/பாதுகாப்பு) ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


இந்த விதிகள் அத்தகைய அறிவிப்பை அனுமதிக்காது என்று ‘Internet Freedom Foundation’ (IFF) அமைப்பு கூறியது. ஒரு தயாரிப்பு அம்சத்தை வெளியிடுவதற்கு முன் அங்கீகரிக்கவோ அல்லது அதைத் திரும்பப் பெற உத்தரவிடவோ அனுமதிக்கும் எந்தவொரு விதியையும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) குறிப்பிடவில்லை. எனவே அது அத்தகைய எந்த விதியையும் குறிப்பிடவில்லை. அது சுட்டிக்காட்டும் விதிகள் அத்தகைய அதிகாரத்தை வழங்கவில்லை, என்று அந்த அமைப்பு தெரிவித்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு-79 என்பது, ஒரு இடைநிலை அமைப்பு உரிய கவனத்துடன் செயல்படும் வரை, அதன் பயனர்கள் பதிவிடும் விஷயங்களுக்கான பொறுப்பிலிருந்து அவரைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகும். ஒரு தளம் எப்போது பொறுப்பேற்க வேண்டும் என்பதை அது தீர்மானிக்கிறது. ஒரு தளம் என்ன அம்சங்களை வழங்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு (MeitY) இல்லை.


வாட்ஸ்அப் செயலியானது நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமாக இருக்கலாம், மேலும் அரசாங்கம் கடந்த காலங்களிலும் அதன் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வந்துள்ளது. உதாரணமாக, அக்டோபர் மாதம் 2022-ஆம் ஆண்டில் இந்தச் செயலி உலகளவில் முடங்கியபோது, அதற்கான காரணங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் அந்த நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.


Original article: Why are there concerns over WhatsApp usernames? -Aroon Deep

Share:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பயங்கரவாதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றனர்? - விஜயதா சிங்

 பயங்கரவாதிகளாக வகைப்படுத்துவதற்கான சட்டம் எது? அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட முதல் நபர்கள் யார்? இதற்கான நடைமுறை என்ன?


தற்போதைய செய்தி: ஜூலை மாதம் 4-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, ஒன்றிய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)), 1967-ன்கீழ் 23 நபர்களை "பயங்கரவாதிகள்" (terrorists) என்று வகைப்படுத்தியது. 'பயங்கரவாதிகள்' என்று அறிவிக்கப்பட்ட ஆறு இந்தியர்கள் மற்றும் 17 பாகிஸ்தானியர்களில் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் ஆவர். இந்தியாவில் இல்லாத இந்தக் குறிப்பிட்ட நபர்கள் மீது, ஆள் சேர்ப்பு, பயிற்சி, ஊடுருவல் மற்றும் தளவாட உதவிகள் முதல் நிதியுதவி, ஆயுத விநியோகம், ட்ரோன் மூலம் ஆயுதங்களை அனுப்புதல் மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் நடத்த திட்டமிடுதல் அல்லது அதற்குத் துணைபுரிதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 80-ஆக அதிகரித்துள்ளது.


எந்தச் சட்டத்தின்கீழ் இந்த அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன?


சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)) பிரிவு 35-ன்கீழ் இந்தப் பெயர் பட்டியல் உருவாக்கப்பட்டது. ஒரு நபர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் கருதினால், அந்த நபரின் பெயரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) 4-வது அட்டவணையில் சேர்ப்பதற்கு ஒன்றிய  அரசுக்கு இந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது.


இது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?


குறிப்பிட்ட இந்த விதிமுறை, 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம், முதலில் 2004, 2008 மற்றும் 2013-ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளைத் தடை செய்வதற்காக 2004-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட 34 அமைப்புகள் தடை செய்யப்பட்டன. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம், தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் அதிகாரத்தை ஒன்றிய  உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கியது.


முதலில் இந்தச் சட்டம் ஏன் திருத்தப்பட்டது?


2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதியன்று மாநிலங்களவையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய  உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதச் செயல்கள் அமைப்புகளால் அல்ல, தனிநபர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டார். ஒரு அமைப்பை மட்டும் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது அதற்குப் பின்னணியில் உள்ள தனிநபர்களைத் தடுத்துவிடாது என்றும், அவர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்காவிட்டால் அவர்கள் சட்டத்தைத் நிராகரித்துவிட்டு வேறு பெயரில் ஒன்றிணைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களைத் தொடர வாய்ப்பளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். பயங்கரவாதம் என்பது ஒரு உலகளாவிய பிரச்சனை என்றும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகள் தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்ட விதிகளைக் கொண்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பயங்கரவாதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை முடக்க அல்லது கைப்பற்ற, தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைமை இயக்குநருக்கு இந்தத் திருத்தம் அதிகரமாளிக்கிறது. இந்தச் சட்டம் மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். தேசிய புலனாய்வு முகமை சர்வதேச மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து முக்கியமான தகவல்களும் தேசிய புலனாய்வு முகமையிடமே இருக்கும். மாநில காவல்துறையிடம் இருக்காது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டத்திருத்தம், பயங்கரவாதச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குத் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைமை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டம் மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கொண்ட ஒரு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுக்கும்போது, அந்த வழக்கு தொடர்பான அனைத்து முக்கிய உண்மைகளும் தேசிய புலனாய்வு முகமையிடம் தான் இருக்குமே தவிர, மாநிலக் காவல்துறையிடம் இருக்காது என்று கூறினார். தற்போதைய சட்டப்படி, பயங்கரவாதச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்தந்த மாநிலக் காவல்துறைத் தலைவரிடம் தேசிய புலானாய்வு முகமை முன்அனுமதி பெற வேண்டியுள்ளது. இத்தகைய சொத்துக்கள் பெரும்பாலும் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால், இந்த அனுமதி வாங்கும் நடைமுறை காலதாமதத்தை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.






பயங்கரவாதிகளாக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட நபர்கள் யார்?


2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தச் சட்டத்தின்கீழ் முதன்முதலில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஜெய்ஷ்-இ-முகம்மது (Jaish-e-Mohammad) அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) அமைப்பின் ஹபீஸ் சயீத், அவரது துணைத் தலைவர் ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர். இந்த தனிநபர் பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஆவர்.


இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் ஏதேனும் இருந்தனவா?


எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள்  மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக இந்தச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பின.


காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் மாநிலங்களவையில், "ஒரு தனிநபரை எந்தக் கட்டத்தில் நீங்கள் பயங்கரவாதியாக அறிவிப்பீர்கள்? கைது செய்யும்போதா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதா அல்லது விசாரணை முடிந்த பிறகா? இது தெளிவாக இல்லை. மேலும், அவர் மீது ஏற்கனவே பயங்கரவாதக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தால், அவரைப் பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது. ஏனெனில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் சட்டப்படி குற்றமற்றவராகவே கருதப்படுவார். இந்தச்சட்ட மசோதா நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு ரத்து செய்யப்படலாம். எனவே, இதை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்.





இதற்கு உள்துறை அமைச்சகத்தின் பதில் என்னவாக இருந்தது?


ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சட்டங்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் உள்ளன என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கையும் தனிநபர்களை இவ்வாறு அறிவிக்கத் தொடங்கியதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்கீழ் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க உலக நாடுகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியில், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு இராஜதந்திர வட்டாரங்களில் இக்கட்டான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். அஸாரை ஏன் இன்னும் பயங்கரவாதியாக அறிவிக்கவில்லை என்று எங்களிடம் கேட்கப்பட்டது. அந்த முரண்பாட்டைச் சரிசெய்யவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities Prevention Act (UAPA)) மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி அப்போது கூறியிருந்தார்.


இதில் உள்ள நடைமுறை என்ன?


இந்த முழு செயல்முறையும் நீதிமன்றம் நடவடிக்கை இல்லாது  ஒன்றாகும். இது உள்துறை அமைச்சக (MHA) அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும். மேலும், 'நிரூபிக்கும் பொறுப்பு' (burden of proof) அரசாங்கத்தை சார்ந்தே  இருக்கும்.


ஒரு நபரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு,   உளவுத்துறை அமைப்புகளிடமிருந்தே வர வேண்டும். ஒரு பாதுகாப்பு முகமை வழங்கும் தகவல் மற்றொரு முகமையின் தகவலுடன் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. உள்துறை அமைச்சகம் அந்த முன்மொழிவை ஆய்வு செய்கிறது. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு அமைச்சகம் திருப்தியடைந்தால், உள்துறை அமைச்சரால் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசிதழில் (Gazette of India) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன.



பயங்கரவாதியாகக் குறிப்பிடப்பட்ட நபர்கள், நேரில் அல்லது பதிவுத் தபால் மூலம் உள்துறை அமைச்சகத்திடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டதும், 45 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் அது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட       3  பேர் அடங்கிய சுதந்திரமான மதிப்பீட்டுக் குழுவிடம் (Independent Three-Member Review Committee) மேல்முறையீடு செய்யும் உரிமை உள்ளது. இந்தக் குழுவையும் உள்துறை அமைச்சகம் நியமிக்கிறது. இதுவரை, பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தனிநபர்கள் யாரும் தங்களது வழக்கை மறுபரிசீலனை செய்யக் கோரி உள்துறை அமைச்சகத்தை அணுகியதாக எந்தவொரு தகவலும் இல்லை.


சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்  சட்டத்தின்கீழ் (Unlawful Activities Prevention Act (UAPA)) பயங்கரவாத அமைப்புகளாகக் குறிப்பிடப்பட்ட குழுக்கள் மற்றும் அமைப்புகளின் நிலை என்ன?


உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 35-ன்கீழ் பயங்கரவாத அமைப்புகளாக 45 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அந்தச் சட்டத்தின் முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தவிர, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 3(1)-ன்கீழ் 'சட்டவிரோத அமைப்புகள்' (Unlawful Associations) என 23 குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Original article: How are terrorists designated under the UAPA? -Vijaita Singh

Share:

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாவிட்டாலும், ஒரு நாட்டைச் சார்ந்தவராக வாழ்வதற்கான உரிமை குறித்து… - சுஹ்ரித் பார்த்தசாரதி

 அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான மக்களாட்சியில், குடியுரிமையை நிர்ணயிக்கும் அமைப்பில், ஆவணங்களைவிட மனித நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


2026-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ஆம் தேதி, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of External Affairs (MEA)) உறுப்பினர் ஒருவர்  ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்திய கடவுச்சீட்டு என்பது ஒரு "பயண ஆவணம்" (travel document) என்றும், அது "குடியுரிமை ஆவணம்" (citizenship document) அல்ல என்றும் கூறினார். இந்தக் கூற்று ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. கடவுச்சீட்டே போதுமானதாக இல்லையென்றால், வேறு எந்த ஆவணம் போதுமானதாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.


இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அறிக்கையும் அது எழுப்பும் கேள்விகளும் திசைதிருப்பும் ஒரு செயலாகவே தெரிகின்றன. இந்திய அரசாங்கம் "பொது நலன்" கருதி மிக அவசியமானதாகக் கருதும் சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்குப் கடவுச்சீட்டு வழங்கப்பட முடியும். எனவே, அரசாங்கம் இந்தச் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வழக்குகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து நிலைகளிலும் ஒரு கடவுச்சீட்டு என்பது ஒரு நபரின் குடியுரிமைக்கான முழுமையான மற்றும் உறுதியான சான்றாகவே கருதப்பட வேண்டும்.



ஒருவர் தனது உண்மையான குடியுரிமை நிலையை மறைத்து இந்த ஆவணத்தைப் பெற்றுள்ளார் என்பதைச் சட்டத்தின்படி நிரூபிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு இருக்கலாம். ஆனால், அதற்காக ஒரு கடவுச்சீட்டை வெறும் பயண ஆவணம் மட்டுமே என்று கூறி முழுமையாக நிராகரித்துவிட முடியாது.


கண்காணிப்புக்குள்ளாகும் குடியுரிமை 


வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வெளியிட்ட இந்த அறிக்கை, அரசியல் மற்றும் சட்டச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்ததை (Special Intensive Revision (SIR)) செய்து வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறை செல்லுபடியாகும் தன்மை மற்றும் குடியுரிமையை ஆய்வு செய்வதற்கான வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்ததின் அதிகாரம் குறித்தும், அதற்கு முன்பாக அசாம் ஒப்பந்தம் (Assam Accord) குறித்தும் வழங்கிய இரண்டு தீர்ப்புகளுக்குப் பின்னரும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அசாம் ஒப்பந்தத்தில், குடியுரிமை குறித்த குடியரசுக் கருத்துக்களை நீதிமன்றம் எவ்வாறு கருதுகிறது என்பது குறித்து விரிவாகக் கருத்து தெரிவித்தது. மேலும், 2019-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஒருவருக்குக் குடியுரிமை வழங்கும் விதிகள் மதத்தின் அடிப்படையில் மாற்றி எழுதப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, நம்மை நாமே ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளத் தூண்டுகிறது: இந்தியக் குடிமகனாக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன, இந்த நாட்டிற்குச் சொந்தமானவர் யார், மற்றும் அது என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?


இந்தக் கேள்விகளுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பதில்கள், சிலருக்குத் தெளிவற்றதாகத் தோன்றினாலும் கூட, அவை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் உருவாக்கப்பட்டவை ஆகும். அரசியலமைப்பின் பகுதி II-ல் உள்ள 5 முதல் 11 வரை பிரவுகள், இந்தியப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட கடுமையான சூழ்நிலைகளில் சிக்கிய மக்களின் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளைத் பற்றி குறிப்பிடுகின்றன. பிரவுகள் 11, குடியுரிமையைப் பெறுதல், இழத்தல் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற அனைத்து விவகாரங்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கான விரிவான அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கியது.


மேலோட்டமாகப் பார்க்கும்போது, குடியுரிமையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்னவாக இருக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் வரம்பற்ற அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருப்பதாகத் தோன்றலாம். உண்மையில், மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டங்களை ஆதரிப்பதற்காக இன்று முன்வைக்கப்படும் பல வாதங்களும் இந்த விளக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களை ஆராய்ந்து கௌதம் பாட்டியா சுட்டிக்காட்டியுள்ளது போல, குடியுரிமை விவகாரத்தில் நாடாளுமன்றம் தன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


குடியுரிமையின் அடித்தளங்கள்


உதாரணமாக, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு விதிகளில் பி.எஸ். தேஷ்முக் கொண்டு வர விரும்பிய ஒரு திருத்தத்தை எடுத்துக் கொள்வோம். இந்து அல்லது சீக்கிய மதத்தைச் சேர்ந்த, வேறெந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒரு நபர், அவர் எங்கு வசித்தாலும் இந்தியாவின் குடிமகனாக மாறுவதற்கு தகுதியுடையவர் என்ற தெளிவான நிபந்தனையை சேர்க்க முயன்றார். ஆனால், இந்த முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்தவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு, இத்திருத்தத்தை "பார்த்த உடனே முற்றிலும் அர்த்தமற்றது" என்று கூறி முற்றிலுமாக நிராகரித்தார்.

இதற்கு அலலாடி கிருஷ்ணசுவாமி ஐயர் மிகத் தெளிவான மற்றும் உறுதியான பதிலை அளித்தார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டது என்று அலாடி கிருஷ்ணசுவாமி வாதிட்டார். எனவே, இனம் அல்லது மதம் சார்ந்த அடிப்படையில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே பாகுபாடு காட்டுவதற்கே இடமில்லை என்று கூறினார். இறுதியில், தேஷ்முக்கின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. அதேவேளையில், பி.ஆர். அம்பேத்கரின் நடுநிலையான குடியுரிமைக்கான விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.


எனவே, சட்டப்பிரிவு-11-ல் உள்ள வார்த்தைகள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும், அவை அவற்றின் பரந்த வரையறையின் பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை போன்றவற்றுக்கான அரசியலமைப்பின் மிகவும் போற்றப்படும் மற்றும் அடிப்படையான உறுதிப்பாடுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு மறைமுகமான வரம்பு அவற்றில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றம் குடியுரிமையின் வழிமுறைகளைத் தீர்மானிக்கலாம். ஆனால், குடியுரிமை பெறுவதற்கு மதத்தை ஒரு நிபந்தனையாக நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது.


இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பிறப்பிட அடிப்படையிலான குடியுரிமை (Jus Soli) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது. ஒருவர் இந்தியாவில் பிறந்ததும் அல்லது இந்தியாவில் வசித்தது வருவதன் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்ற கோட்பாடே அப்போது பின்பற்றப்பட்டது. 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், இந்தக் கொள்கையைத் தனது முக்கியக் கொள்கையாகக் கருதியது. ஆனால் காலப்போக்கில், நாடாளுமன்றம் இந்தக் கோட்பாட்டிலிருந்து விலகிச் சென்றது. முதலில், 1985-ஆம் ஆண்டில், அசாம் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் விதமாக, சட்டத்தில் பிரிவு-6A (Section 6A) அறிமுகப்படுத்தப்பட்டது. இது, "இந்திய வம்சாவளியைச்" சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் வந்த தேதிகளின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக, 2003-ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டம் மேலும் திருத்தம் செய்யப்பட்டு, இந்தியாவில் பிறந்திருந்தாலும், அந்த நபரின் பெற்றோரில் ஒருவர் கூட "சட்டவிரோத குடியேறியவர்" (illegal migrant) என்றுக் கருதப்பட்டால், அந்த நபருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று சட்டத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய உச்சநீதிமன்றம்,          பிரிவு 6A-வின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தியபோது, ​​இரண்டு முக்கியக் கொள்கைகளை வலுப்படுத்தியது. முதலாவதாக, அரசியலமைப்பின் பிரிவு-11 நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எந்த மறைமுக வரம்பையும் விதிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது. அதற்குப் பதிலாக, குடியுரிமை தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருப்பது வரம்பற்ற அதிகாரமாகும் என்று நீதிமன்றம் கருதியது. இரண்டாவதாக, 2005-ஆம் ஆண்டு  சரபானந்த சோனோவால்  vs இந்திய ஒன்றியம் மற்றும் பிற (Sarbananda Sonowal vs Union Of India & Anr)  வழக்கில் உச்சநீதிமன்றம் முதலில் முன்வைத்த ஒரு கருத்துக்கு, இந்த தீர்ப்பு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியதாகவும் தோன்றியது. அசாம் மாநிலத்திற்குள் நடக்கும் குடியேற்றம் என்பது மாநிலத்திற்கு எதிரான "வெளிப்புற ஆக்கிரமிப்பு" (external aggression)  என்பதாகும்.


இந்த ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் vs இந்திய யூனியன் (Association for Democratic Reforms vs Union of India) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் இந்த வாதமே தொடர்ந்தது. அதில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கும் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக, ஒரு நபரின் குடியுரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) விசாரிக்கலாம் என்று கூறி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு நபரின் குடியுரிமையை சட்டப்பூர்வமாகத் தீர்மானிப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் நீடிப்பது குறித்த நிர்வாக ரீதியான திருப்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு கொள்கை ரீதியான வேறுபாடு என்று நீதிமன்றம் விவரித்தது. ஒரு நபர் தான் இந்தியக் குடிமகன் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றால், அந்த வழக்கை குடியுரிமைச் சட்டத்தின்கீழ் உள்ள தகுதியான அதிகாரிடம் தேர்தல் ஆணையம் மாற்றிவிட வேண்டும் என்றும் கூறியது.

ஆனால், நாம் இதற்கு முன்பும் இதே போன்றதொரு சூழலைக் கடந்து வந்திருக்கிறோம். அசாமில், முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்போது, ​​'சந்தேகத்திற்குரியவர்' என்று குறிக்கப்பட்ட வாக்காளர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கு அனுப்பப்பட்டு, தங்கள் குடியுரிமையை நிலைநாட்டுவதற்காக ஒரு முடிவற்ற அதிகாரத்துவ சிக்கலில் தள்ளப்பட்டனர். எனவே, இன்று நம்மிடம் உள்ள செயல்முறையில், ஒருவரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு, அவர் ஒரு வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்கள் ஒருவித நிச்சயமற்ற நிலையில், அவர்களின் குடியுரிமை உறுதி செய்யப்படாமலும், அதே சமயம் நிராகரிக்கப்படாமலும், அவர்களுடைய உரிமைகள் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்படுகின்றன.





இது போன்ற சூழலில், வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. குடியுரிமையை உறுதி செய்வதற்கான இது போன்ற நடைமுறைகள் அனைத்திலும், 'நிரூபிக்கும் பொறுப்பு' (burden of proof) என்பது ஒரு பொதுவானதாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில், ஒருவரின் குடியுரிமையை அரசு இயல்பாகவே ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அந்தப் பொறுப்பு சிறிது சிறிதாக தனிநபர்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது. சமர்ப்பிக்கப்படும் எந்த ஒரு ஆவணமும் போதுமான சான்றாகக் கருதப்படுவதில்லை. ஆதார் அடையாள அட்டை என்பது வசிப்பிடத்திற்கான சான்று மட்டுமே என்றும், வாக்காளர் அடையாள அட்டை என்பது முந்தைய பதிவிற்கான சான்று மட்டுமே என்றும், தற்போது கடவுச்சீட்டு என்பது பயணம் செய்வதற்கான உரிமைக்கான சான்று மட்டுமே என்றும் கூறப்பட்டு வருகிறது.


மனித நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்


அரசியலமைப்பின்கீழ், நமக்கு வழங்கப்படும் பல அடிப்படை உரிமைகள் குடியுரிமையை அல்ல, அவை மனித நலனையே (Personhood) அடிப்படையாகக் கொண்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு-14, "எந்தவொரு நபருக்கும்"  சட்டத்தின்முன் அனைவரும் சமம், அது சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதேபோல், பிரிவு-21, அனைத்து நபர்களுக்கும் உயிர் வாழும் உரிமையையும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையையும் வழங்குகிறது. பிரிவு 19-ன்கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், எந்தவொரு வர்த்தகம் அல்லது தொழிலைச் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒரு நபருக்கு வழங்குகிறது. மேலும், குடியுரிமை இருப்பதால்தான் ஒருவர் வாக்களிக்கவும், தன்னை எவ்வாறு ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையையும் உறுதி செய்கிறது. எனவே, குடியுரிமையை இழப்பது என்பது மற்ற அனைத்து உரிமைகளையும் பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமையையே இழப்பதாகும் என்று ஹன்னா அரெண்ட் குறிப்பிட்டுள்ளார்.





மனித நலனுக்கு முதலிடம் அளிக்கும் ஒரு அரசியலமைப்புச் சட்ட அமைப்பில், யார் குடிமகன் என்ற தகுதியை பெறுகிறார் என்பதைத் தீர்மானிக்கும் விதிகள், ஆவணங்களின் தகுதியை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. அந்த விதிமுறைகள், அரசியலமைப்பு மிகவும் மதிக்கும் அடிப்படை மதிப்பீடுகளின் மீது கட்டமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதரின் சமமான கண்ணியத்தையும், அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்ற பாதுகாப்பைப் பெறும் உரிமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.


சுஹ்ரித் பார்த்தசாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வரும் வழக்கறிஞர் ஆவார்.


Original article: The right to belong beyond official documentation. -Suhrith Parthasarathy

Share: