டிஜிட்டல் உள்கட்டமைப்பு எவ்வாறு உழவர்களை சந்தைகள் மற்றும் நிதியுடன் நேரடியாக இணைக்கிறது? -அமித் அகர்வால்

டிஜிட்டல் வேளாண்மையின் உண்மையான பலன், மேலும் இணைக்கப்பட்ட மற்றும் மதிப்பு சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரத்தை உருவாக்குவதே ஆகும்.


57% என்பது, தங்கள் விளைபொருட்களை இணையவழியில் விற்கும் உழவர்களுக்கும், பாரம்பரிய வர்த்தக வழிகளைச் சார்ந்திருக்கும் உழவர்களுக்கும் இடையே காணப்படும் வருமான வேறுபாடு ஆகும். (இணையவழியில் விற்கும் உழவர்கள் கணிசமாக அதிக வருமானம் ஈட்டுகின்றனர்).


கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள பருத்தி உழவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, தெளிவான புள்ளிவிவரங்களைக் காட்டியது. டிஜிட்டல் முறையில் விற்கும் உழவர்களுக்கு ஒரு மூட்டைக்கு ₹2,718 ஆகவும், பாரம்பரிய வழிகளில் விற்கும் உழவர்களுக்கு ₹1,735 ஆகவும் உள்ளது.


இந்த மாற்றம், உழவர்கள் இணையவழியில் நிதியைப் பெறும் முறையை மறுவடிவமைத்து வருகிறது.


கர்நாடகாவில் உள்ள சிறு உழவர்களிடையே டிஜிட்டல் நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துவதில் நிதிதொழில்நுட்பத்தின் (fintech) பங்கை ஆய்வு செய்த ஒரு தனி ஆய்வில், இதில் 58 சதவீதம் பேர் கடன் பெறுவது எளிதாக இருப்பதாகவும், சுமார் 55 சதவீதம் பேர் நிதிப் பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் தெரிவித்தனர்.


வரையறுக்கப்பட்ட அணுகல்


இருப்பினும், இந்த நன்மைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. டிஜிட்டல் அமைப்புகள் உழவர்களுக்கு அதிகளவில் கிடைத்து வந்தாலும், வேளாண் நடவடிக்கைகளில் அவற்றின் அன்றாடப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.


இந்திய நுகர்வோரின் நிதிப் பழக்கவழக்கங்களை மறுவரையறை செய்துள்ள ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகப் (Unified Payments Interface (UPI)) புரட்சியின் அடிப்படையில், வேளாண்மையில் பரவலான டிஜிட்டல் பயன்பாடு ஒரு படிநிலை வடிவத்தைப் (layered pattern) பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


• முதல் கட்டம் உள்கட்டமைப்பு (infrastructure) ஆகும். இதில் இணைப்பு வசதி (connectivity), அடையாளம் (identity) மற்றும் புறநிலைக் கட்டமைப்புகள் (physical structures) அடங்கும். வேளாண்மையில், கிராமப்புற இந்தியாவில் அதிகரித்து வரும் திறன்பேசி மற்றும் இணைய அணுகல், ஆதார் மற்றும் ஆதாரால் இயக்கப்படும் பணப்பரிவர்த்தனை அமைப்பு (Aadhaar Enabled Payment System (AEPS)) போன்ற டிஜிட்டல் அடையாள அமைப்புகள், மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) போன்ற திட்டங்களின்கீழ் வங்கிக் கணக்குகளின் பரவல் ஆகியவற்றின் மூலம் இந்த அடித்தளம் கட்டப்பட்டுள்ளது.


• இரண்டாவது கட்டம் வேளாண் தொழில்நுட்பத் தளங்கள் (agritech platforms) ஆகும். அதாவது, இந்த உள்கட்டமைப்பின் மீது செயல்படும் மின்-சந்தைகள், நிதித் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் வேளாண்-டிஜிட்டல் ஆலோசனை அமைப்புகள் ஆகியவை அடங்கும். டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் போன்ற முன்முயற்சிகளும், வேளாண் இருப்பு (AgriStack) போன்ற வளர்ந்து வரும் அமைப்புகளும் ஒரு டிஜிட்டல் சூழல் அமைப்புக்குள் உழவர்களுக்கான சேவைகளையும் தரவுகளையும் ஒழுங்கமைக்கத் தொடங்கியுள்ளன.


• மூன்றாவது கட்டம் நடத்தை சார்ந்த பயன்பாடு (behavioural adoption) ஆகும். இதில் பயனர்கள் இந்த அமைப்புகளைச் சார்ந்து தொடங்கும்போது இந்தக் கட்டம் தொடங்குகிறது. அவர்கள் தங்களின் அன்றாட முடிவெடுக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.


டிஜிட்டல் வேளாண் இயக்கம்: தொலைநோக்குப் பார்வையை நனவாக்குதல்


இந்தியாவின் வேளாண் துறையின் டிஜிட்டல்மயமாக்கல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வேளாண் இருப்பு (AgriStack) மற்றும் கிருஷி முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு (Krishi Decision Support System) போன்ற லட்சியத் திட்டங்கள் மூலம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் வேளாண்மை இயக்கம், 2024-ல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அடிமட்ட அளவில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலமும், உழவர்களை முதன்மைப் பயனாளிகளாகக் குறிவைப்பதன் மூலமும், தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, ஜிபிஎஸ் அடிப்படையிலான வேளாண் நில வரைபடம் மற்றும் தொலை உணர்வு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வழியாக, அரசுத் திட்டங்கள், பயிர்க் கடன்கள் மற்றும் நேரடி ஆலோசனைகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அணுகல் உட்பட, உழவர்களுக்கான சேவை வழங்கலை இந்த இயக்கம் மேம்படுத்த உள்ளது.


இந்த இயக்கத்தின் முதல் இரண்டு கட்டங்கள் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள நிலையில், நாம் உரையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மூன்றாவது கட்டம் உருவாகி வருகிறது. இந்தக் கட்டம் ஒரு மாற்றத்தின் கட்டமாகும். இந்தக் கட்டத்தில், உழவர்கள் சந்தைகளை அணுகவும், நிதியைப் பெறவும், வேளாண் முடிவுகளைச் சுதந்திரமாக நிர்வகிக்கவும் டிஜிட்டல் அமைப்புகளை வழக்கமாகப் பயன்படுத்தத் தொடங்கும் நிலை ஆகும்.


இந்த மாற்றம் வெற்றிபெற, இந்த அளவிலான செயல்பாடுகளுடன், தளங்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கை, தொழில்நுட்ப இடைமுகங்களைக் கையாள்வதற்கான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் தானியங்குப் பரிவர்த்தனைகள் மீதான நம்பிக்கை ஆகியவையும் துணைபுரிய வேண்டும். தலைமுறை தலைமுறையாக உள்ளூர் சந்தை (மண்டி) அமைப்புகளுக்குள் இயங்கி வரும் சிறு உழவர்களுக்கு, தங்கள் தொழிலின் மையமாக இருந்த உறவுகளை மறுபரிசீலனை செய்வது என்பது ஒரு பெரும் நம்பிக்கைப் பாய்ச்சலாகும்.


2 முக்கிய காரணிகள்


இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பத்தின் பயன்பாடு 2 சதவீதமாக உள்ள நிலையில், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலான இந்திய உழவர்கள் டிஜிட்டல் வேளாண் சூழல் அமைப்பில் இன்னும் தீவிரமாகப் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும், டிஜிட்டல் கல்வியறிவு (digital literacy) மற்றும் நம்பிக்கை (trust) ஆகிய இரண்டு காரணிகளும், வேளாண் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு முக்கிய மையமாகச் செயல்படுகிறது.


பாரத் விஸ்தார் (Bharat VISTAAR) போன்ற முன்முயற்சிகள், உழவர்களின் அதிகப் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான சரியான திசையில் எடுக்கப்பட்ட படிகளாகும். இந்தத் திசையில் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுவதால், இதை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த முயற்சிகள் தேவைப்படும். இதற்கு ஒரு உதாரணமாக, முறையான வங்கிச் சேவைகளைப் போலல்லாமல், வேளாண்-வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (Agri-NBFC) பெரும்பாலும் உழவர்களுடன் நீண்டகால உறவுகளைக் கொண்ட களப் பிரதிநிதிகள் மூலம் செயல்படுகின்றன. டிஜிட்டல் தளங்கள் மீதான நம்பிக்கை இன்னும் உருவாகிவரும் பகுதிகளில், இந்த இடைத்தரகர்கள் உழவர்களின் ஏற்றுக்கொள்ளும் நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்றனர். வேளாண்-வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மூலதன அடித்தளம் வலுப்படுத்தப்பட்டால், அவை மேலும் திறம்பட செயல்பட முடியும். அவற்றை டிஜிட்டல் சூழல் அமைப்புகளுக்கும் உழவர்களுக்கும் இடையே ஒரு திட்டமிட்ட பாலமாக நிலைநிறுத்தக்கூடும்.


இந்தச் சூழல் அமைப்பு வளர்ந்து வலுவடையும்போது, அதில் உழவரின் பங்கும் உருவாகும். உழவர்கள் இனிமேலும் சிதறிய மற்றும் ஒன்றோடொன்று தொடர்பற்ற அமைப்புகளைக் கையாள வேண்டியதில்லை. பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு அவர்கள் பல இடைத்தரகர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. மாறாக, உழவர்கள் சந்தைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைச் சேவைகளுடன் நேரடியாகவே அதிகம் தொடர்புகொள்வார்கள். தேவையற்ற இடைத்தரகர்கள் எவருமின்றியே, அவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவும், கடன் வசதிகளைப் பெறவும், உரிய வழிகாட்டுதல்களைப் பெறவும் இயலும். இந்த மாற்றத்தில்தான், டிஜிட்டல் வேளாண்மையின் உண்மையான வாக்குறுதி அடங்கியுள்ளது. அதாவது, அதிக அளவில் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கிராமப்புறப் பொருளாதாரத்தை உருவாக்க உள்ளது


இக்கட்டுரையின் ஆசிரியர், இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான 'StarAgri'-யின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.                  

               


Original Link: How digital infrastructure is linking farmers more directly to markets and finance? 

Share:

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு : நுகர்வோர்மீது இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? - சுகல்ப் சர்மா

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போரின் காரணமாக, எரிபொருள் விற்பனையாளர்கள் மீதான நிதி நெருக்கடி ஏற்கனவே தொடங்கியுள்ளது. பெரும்பான்மையான இந்தியர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் மீதும், அரசாங்கத்தின் வருவாய் மீதும் இந்த நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இந்தப் பதிவில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.


உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளின் கடுமையாக உயர்வால், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (oil marketing companies (OMC)) நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 'சிறப்பு கூடுதல் கலால் வரியை' (Special Additional Excise Duty (SAED)) லிட்டருக்கு தலா ரூ. 10 வீதம் குறைத்து அரசாங்கம் மார்ச் 27, வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது. சில்லறை விலைகளைக் கட்டுப்படுத்துவதும், உலகளாவிய விலை உயர்வால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.


சர்வதேச எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வாகவே இருப்பதால், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. அப்படியிருந்தும், அவை பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகளை உயர்த்தவில்லை. மேலும், உள்நாட்டுச் சந்தையில் போதுமான அளவு பொருட்களின் தடையற்ற இருப்பை உறுதி செய்யும் நோக்கில், டீசல் மற்றும் விமான எரிபொருள் (aviation turbine fuel (ATF)) ஆகியவற்றின் ஏற்றுமதி மீதும் அரசாங்கம் வரியை விதித்துள்ளது.


கலால் வரி குறைப்பின் விளைவாக, பெட்ரோல் மீதான வரி தற்போது லிட்டருக்கு ரூ. 3 ஆகவும், டீசல் மீதான வரி 'பூஜ்யம்' (Nil) ஆகவும் குறைந்துள்ளது. இதன் மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்குச் சற்று நிம்மதியை அளிப்பதற்காக, இவ்விரு எரிபொருட்களின் சில்லறை விற்பனை வாயிலாக எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய தனது வருவாயின் பெரும்பகுதியை மத்திய அரசாங்கம் விட்டுக்கொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு மாற்றாக இருந்த மற்றொரு வழி என்னவென்றால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை உயர்த்துவதாகும். அவ்வாறு செய்திருந்தால் அது பொருளாதாரத்தில் பணவீக்கத்தை மேலும் அதிகரித்திருக்கும் அல்லது சர்வதேச அளவில் மிக அதிகமாக உள்ள எரிபொருளின் விலையின் சுமையை அவர்களே தொடர்ந்து ஏற்றுக்கொண்டிருக்கலாம். இது அவர்களின் நிதி நிலையை மேலும் மோசமடையச் செய்திருக்கும்.


வழக்கமான பெட்ரோல் மீது மொத்தம் லிட்டருக்கு ரூ.21.9-ஆகவும், வழக்கமான டீசல் மீது லிட்டருக்கு ரூ.17.8-ஆகவும் கலால் வரியாக விதிக்கப்பட்டு வந்தது. இவ்விரு எரிபொருட்களுக்குமான கலால் வரி அமைப்பில், 'சிறப்பு கூடுதல் கலால் வரி' (Special Additional Excise Duty (SAED)) என்பதே மிகப்பெரிய அங்கமாகத் திகழ்ந்தது. அடிப்படை கலால் வரி, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கட்டணம் (Cess), சாலை மற்றும் உள்கட்டமைப்புக் கட்டணம் ஆகியவை கலால் வரியின் பிற அங்கங்களாக இருந்தன. தற்போது சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) குறைக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ. 11.9 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ. 7.8 ஆகவும் குறைந்துள்ளது.


அரசாங்கம் எரிபொருள் மீது ஏற்றுமதி வரிகளை விதித்துள்ளது. அவை, டீசல் மீது லிட்டருக்கு ரூ. 21.5-ம், விமான எரிபொருள் (ATF) மீது லிட்டருக்கு ரூ. 29.5-ம் வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும். அரசாங்கத்தின் தோராயமான மதிப்பீடுகளின்படி, இந்த ஏற்றுமதி வரிகள் மூலம் ஒரு இரண்டுவார காலத்திற்கு சுமார் ரூ. 1,500 கோடி வருவாய் கிடைக்கக்கூடும். இந்தத் தகவலை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்தார். கலால் வரி குறைப்பால் அரசுக்கு பதினைந்து நாட்களுக்கு மதிப்பிடப்பட்ட ரூ. 7,000 கோடி வருவாய் இழப்புடன் ஒப்பிடும்போது, இந்த வருவாய் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்கும்.


"சர்வதேச டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள இந்த நேரத்தில், ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்கும், சுத்திகரிப்பு நிலையங்கள் முதலில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்வதே மிக உயர்ந்த முன்னுரிமை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகளாவிய விலைகளில் எரிபொருள் ஏற்றுமதி அதிக லாபம் தரக்கூடியதாக இருந்தாலும், அதைவிட இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சகம் கூறியுள்ளது.


பெரும் நஷ்டம் மற்றும் அரசு வருவாயில் அதன் தாக்கம்


பெட்ரோலிய அமைச்சகத்தின்படி, தற்போதைய சர்வதேச கச்சா எண்ணெய் விலையில், பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.26 மற்றும் டீசலில் ஒரு லிட்டருக்கு ரூ.81.90 நஷ்டம் ஏற்படுகிறது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) கிட்டத்தட்ட ரூ.2,400 கோடி மதிப்பிலான தினசரி கூட்டு வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன.


"கலால் வரி குறைப்பு என்பது பெட்ரோல் நிலையங்களில் விலைக் குறைப்பாக நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை. மாறாக, இது பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான (OMC) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் ஈடுசெய்யப்படும் நஷ்டத்தை நேரடியாக குறைக்க உதவுகிறது. இந்த நிறுவனங்கள், தங்களின் விநியோகச் செலவை விட மிகக் குறைந்த விலையில் இந்திய நுகர்வோருக்குத் தொடர்ந்து எரிபொருளை வழங்கி வருகின்றன. இந்த கலால் வரி குறைப்பு, இந்த நஷ்டங்களில் ஒரு லிட்டருக்கு ரூ. 10 என்ற அளவில் அவற்றின் இழப்புகளைக் குறைக்கிறது. இதன் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சில்லறை விலைகளை மாற்றாமல், தடையின்றி தொடர்ந்து எரிபொருளை வழங்கமுடியும் என்பதை உறுதி செய்கிறது," என்று அமைச்சகம் கூறியது.


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி, மேற்கு ஆசியப் போரைத் தொடங்கி வைத்ததற்கு முந்தைய நாளான பிப்ரவரி 27 அன்று இருந்த விலைகளைவிட, சர்வதேச எண்ணெய் விலைகள் தற்போது சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளன.


Emkay Global நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோரா அவர்களின் கூற்றுப்படி, தற்போதைய விலைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வதன் மூலம் எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு ஏற்படும் ஆண்டு இழப்புகளில் சுமார் 30-40 சதவீதத்தை இந்த கலால் வரிக்குறைப்பு ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தச் சுமைப் பகிர்வின் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படும் ஆண்டு நிதிச்சுமை சுமார் ரூ. 1.55 லட்சம் கோடியாக இருக்கும். தரமதிப்பீட்டு நிறுவனமான ICRA வெளியிட்ட குறிப்பு ஒன்றின்படி, கலால் வரியில் ஒரு லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் 16,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இதேபோல், ஒரு லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டால், அந்த வருவாய் இழப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் முதல் 1.6 லட்சம் கோடி வரை அதிகரிக்கும். India Ratings and Research நிறுவனம் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, இவ்வாறு அரசாங்கம் இழக்கும் ஆண்டு வருவாயின் அளவு ரூ.1.7 லட்சம் கோடியாக இருக்கும்.


கச்சா எண்ணெய் விலை சராசரியாக ஒரு பேரலுக்கு $100 முதல் $105 என்ற அளவிலேயே நீடித்தால், எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்குப் பெட்ரோல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ.11-ம், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ.14-ம் இழப்பு ஏற்படும் என்றும் ICRA தெரிவித்துள்ளது.


எரிபொருள் விற்பனையாளர்களின் நிதிநிலையில் நெருக்கடி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட்டன. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) சமீபத்தில் 'பிரீமியம்' வகை பெட்ரோல் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தின. அதேவேளையில், இந்திய மக்களில் பெரும்பான்மையினர் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருந்தன.


எனினும், தனியார்துறை எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா ஆற்றல் நிறுவனம் (Nayara Energy), எரிபொருள் விநியோகத்திற்கான உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட கூடுதல் சுமையை ஓரளவிற்கேனும் நுகர்வோர் மீது சுமத்தும் வகையில், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை எரிபொருள் விற்பனையாளராக நயாரா (Nayara) திகழ்ந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் விற்பனை வலையமைப்பில் அதன் பங்கு சுமார் 7% மட்டுமே உள்ளது. அதேவேளையில், மூன்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) இணைந்து 90% பங்கை வைத்துள்ளன. மேலும், இந்தியாவின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நடைமுறையில் அவர்களே கட்டுப்படுத்துகின்றனர்.


“கடந்த ஒருமாத காலத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் மிகத் தீவிரமாக உயர்ந்துள்ளன. இதன் அடிப்படையில், ஒரு பீப்பாய்க்கு சுமார் 70 டாலர்களாக இருந்த விலை, தற்போது சுமார் 122 டாலர்களாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் நுகர்வோருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விலைகள் சுமார் 30% முதல் 50% வரையிலும், வட அமெரிக்க நாடுகளில் 30% வரையிலும், ஐரோப்பிய நாடுகளில் 20% வரையிலும், ஆப்பிரிக்க நாடுகளில் 50% வரையிலும் அதிகரித்துள்ளன. மோடி அரசாங்கத்திடம் இரண்டு வழிகள் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். ஒன்று, மற்ற நாடுகள் அனைத்தும் செய்தது போலவே இந்தியக் குடிமக்களுக்கு எரிபொருள் விலையைத் திடீரென வெகுவாக உயர்த்துவதாகும். இரண்டாவது, சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்திலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில், அந்த நிதிச்சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது,” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ‘X’ வலைதளத்தில் (முன்னர் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.


“இந்தக் கொள்கை, 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட ரஷ்யா-உக்ரைன் போரின்போது பின்பற்றப்பட்ட அணுகுமுறைக்கு இணக்கமாகவே அமைந்துள்ளது. அப்போதும், சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்தியக் குடிமக்களையும் வணிக நிறுவனங்களையும் பாதுகாக்க, எண்ணெய் நிறுவனங்கள் தொடர் இழப்புகளைத் தாங்கிக்கொண்டன. அதேவேளையில், மத்திய அரசாங்கம் தனது வரிகளைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பளித்தது. அதே கொள்கையே இன்றைய நடவடிக்கையையும் வழிநடத்துகிறது. இந்தியக் குடிமக்களோ அல்லது இந்தியத் தொழில்துறையோ, தாங்கள் ஏற்படுத்தாத இடையூறுகளுக்கான விலையைச் சுமக்கக்கூடாது. மாறிவரும் சர்வதேச எரிசக்திச் சூழலை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், இந்திய நுகர்வோருக்கு எரிபொருள் விநியோகத்தில் நிலைத்தன்மையையும், விலைப் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


‘ஊரடங்கு திட்டம் இல்லை, போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது’


நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை மக்கள் பதற்றத்துடன் வாங்குவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாகப் பரவும் வதந்திகள் “முற்றிலும் பொய்யானவை” என்றும், “அத்தகைய எந்தவொரு திட்டமும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்றும் அமைச்சர் பூரி தெளிவுபடுத்தியுள்ளார். ஊரடங்கு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் பரவியதன் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. 


“உலகளாவிய சூழல் தொடர்ந்து நிலையற்ற தன்மையுடனே காணப்படுகிறது; எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சார்ந்த நிகழ்வுகளை அரசாங்கம் நேரடி தன்மையின் அடிப்படையில் மிகக் கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின்கீழ், நமது குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற முக்கியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எழும் எந்தவொரு புதிய சவால்களை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம் அவர் கூறினார். உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியா தொடர்ந்து தனது மீள்திறனை (resilience) நிரூபித்து வந்துள்ளது. அதேபோல், அரசாங்கம் தொடர்ந்து சரியான நேரத்தில், முன்னெச்சரிக்கையுடனும், ஒருங்கிணைந்த முறையிலும் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.


வியாழக்கிழமையன்று, இந்தியாவிடம் தற்போது 60 நாட்களுக்கான நுகர்வுக்குப் போதுமான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்புகள் உள்ளதாகவும், வரும் இரண்டு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் கொள்முதல் ஏற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அரசு உறுதியளித்தது. இதன் மூலம், அடுத்த சில மாதங்களுக்கு நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பற்றாக்குறை ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அரசு, “தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், வேண்டுமென்றே தீங்கிழைக்கும் வகையில், ஒருங்கிணைந்து பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு” குடிமக்கள் பலியாகிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியது.


வீட்டு உபயோகத்திற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் (LPG) எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசியாவைச் சாராத பிற நாடுகளிலிருந்து வரும் கூடுதல் எல்பிஜி கைருப்பு ஆகியவற்றின் மூலம் விநியோக நிலைமை மேம்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவைச் சாராத பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம், சுமார் ஒரு மாதத்திற்கான எல்பிஜி விநியோகம் "உறுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும், கூடுதல் கொள்முதல் பணிகள் தொடர்ச்சியான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, கச்சா எண்ணெய், எரிபொருட்கள் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.


"தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிலையங்களில் ஆங்காங்கே பதற்றத்தின் காரணமாக மக்கள் முண்டியடித்துக்கொண்டு எரிபொருளை வாங்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட சில காணொளிகள் வாயிலாகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட தவறான தகவல்களே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்தன. அத்தகைய எரிபொருள் நிலையங்களில் தேவை திடீரென அதிகரித்தபோதிலும், அனைத்து நுகர்வோருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. மேலும், விநியோகத்தை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இரவு முழுவதும் செயல்பட்டு வந்தன. எரிபொருள் நிலைய உரிமையாளர்களின் நடைமுறை மூலதனம் (working capital) தொடர்பான சிக்கல்களால் எந்தவொரு நிலையத்திலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் கடன் வழங்கும் கால அளவை, முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நாளிலிருந்து மூன்று நாட்களுக்கும் மேலாக அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று பெட்ரோலிய அமைச்சகம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது.


Original Link: Petrol, diesel excise duty slashed by Rs 10: How it impacts consumers.

Share:

உமிழ்நீர் (saliva) அல்லது கன்னச் சளி மாதிரி (cheek swab) பரிசோதனை மூலம், உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு பெண்ணின் தகுதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? -மிஹிர் வஸவ்தா

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு பெண்ணும் இனி கட்டாயமாக பாலின நிர்ணயப் பகுதி Y (Sex-determining Region Y(SRY)) மரபணுப் பரிசோதனை அல்லது பாலினப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee (IOC)) கூறியுள்ளது. இதன் பொருள் என்ன? இது பற்றி ஒரு தெளிவான விளக்கம் கீழே குறிப்பிட்டுள்ளது.


வியாழக்கிழமையன்று எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவில், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), திருநங்கைப் பெண்கள் (transgender women) மற்றும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (Differences in Sex Development(DSD)) உள்ள விளையாட்டு வீரர்கள் பெண்கள் பிரிவுகளில் போட்டியிடுவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும், சர்வதேச விளையாட்டுகளில் போட்டியிட விரும்பும் எந்தவொரு பெண்ணும் இனி கட்டாயமாக SRY மரபணுப் பரிசோதனை அல்லது பாலினப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.




பாலின நிர்ணயப் பகுதி Y (Sex-determining Region Y(SRY)) மரபணு என்றால் என்ன?


SRY என்பது ‘பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதி Y’ (sex determination region Y) என்பதன் சுருக்கமாகும். SRY மரபணு என்பது டிஎன்ஏ-வின் ஒரு சிறிய பகுதியாகும். இது பெரும்பாலும் Y குரோமோசோமில் காணப்படும். SRY மரபணுவின் இருப்பு, பொதுவாக விந்தகங்களின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாகவும், "டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியின் மூலம் ஆண் பாலின வளர்ச்சியைத் தூண்டுவதாகவும்" சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.


1990-ல் முதன்முதலில் SRY மரபணுவைக் கண்டுபிடித்த பேராசிரியர் ஆண்ட்ரூ சின்க்ளேர், SRY மரபணு ஒரு முழுமையான துல்லியமான குறிப்பான் அல்ல என்று கடந்த ஆண்டு கூறியிருந்தார். "SRY மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, சரியாகச் செயல்படவில்லை என்றால், ஒருவருக்கு விந்தகங்கள் உருவாகாமல் போகலாம் என்று அவர் மேலும் விளக்கினார். அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த நபர் உயிரியல்ரீதியாகப் பெண்ணாக இருக்கலாம்," என்று அவர் கடந்த ஆண்டு 'தி கான்வர்சேஷன்' இதழில் எழுதியிருந்தார்.


அப்படியானால், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), பெண்கள் பிரிவில் போட்டியிட விளையாட்டு வீரர்களை அனுமதிப்பதற்கு முன்பு, SRY மரபணு சோதனை செய்ய அவர்களை ஏன் முடிவு செய்துள்ளது?


பெண்களுக்கான போட்டிகளில் திருநங்கைகள் மற்றும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (Differences of Sex Development (DSD)) உள்ள விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது விளையாட்டுத் துறையில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முன்னதாக, உயிரியல்ரீதியான பெண்களைவிட திருநங்கைகளுக்கு நியாயமற்ற அல்லது விகிதாசாரமற்ற அனுகூலம் இருப்பதாகத் தானாகவே கருதக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியிருந்தது. இருப்பினும், ஆண்களுக்குரிய குரோமோசோம்களைக் கொண்டிருப்பது, பெண்களுக்கு எதிரான போட்டிகளில் உடல்ரீதியான அனுகூலத்தை அளிக்கக்கூடும் என்று பிற்கால அறிவியல் ஆய்வுகள் காட்டின.


எனவே, "பெண் பிரிவைப் பாதுகாக்கவும், அவர்களின் நியாயம் மற்றும் பாதுகாப்பிற்காகவும்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உலக விளையாட்டு அமைப்பு கூறியுள்ளது. அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், “SRY மரபணு வாழ்நாள் முழுவதும் நிலையானது மற்றும் ஒரு விளையாட்டு வீரர் ஆண் பாலின வளர்ச்சியை அடைந்துள்ளார் அல்லது அடையவுள்ளார் என்பதற்கு இது மிகவும் துல்லியமான சான்றாகும்” என்று அது மேலும் கூறியது.


பெண் விளையாட்டு வீரர்களைவிட ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் சாதகத்தின் அளவு என்ன?


தனது கொள்கை ஆவணத்தில், உயர்மட்ட அளவில் உள்ள வேறுபாட்டை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) விளக்கியுள்ளது. அவை,


பெரும்பாலான ஓட்டப்பந்தயம் மற்றும் நீச்சல் போட்டிகளில், பெண் விளையாட்டு வீரர்களைவிட ஆண் விளையாட்டு வீரர்கள் 10-12% செயல்திறன் கொண்ட சாதகத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலான எறிதல் மற்றும் தாண்டுதல் போட்டிகளில், ஆண்களின் செயல்திறனின் மேன்மை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


வெடிக்கும் ஆற்றல் தேவைப்படும் போட்டிகளில், இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, மோதல் விளையாட்டுகள் (collision), பளு தூக்குதல் (lifting) மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் (punching sports) ஆண்களின் செயல்திறனானது 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும்.


SRY மரபணுப் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


தடகளம் மற்றும் குத்துச்சண்டை ஆகியவை, இக்கொள்கையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள சில விளையாட்டுத் துறைகளில் அடங்கும். இந்தியத் தடகளக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய செய்தித் தொடர்பாளருமான அடில் சுமாரிவாலா, விளையாட்டு வீரர்கள் ஏதேனும் ஒரு பரிசோதனை மையத்தில் (diagnostic lab) தங்கள் உமிழ்நீர் மாதிரியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். பரிசோதனை மையம் (diagnostic laboratory) மாதிரியைப் பெற்றபிறகு, அதை ஆய்வு செய்து இது தொடபான அறிக்கைகளை வெளியிட ஒரு வாரம் வரை ஆகலாம். பின்னர், அம்முடிவுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, அந்தந்த விளையாட்டின் சர்வதேச நிர்வாக அமைப்பிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.


உயர்மட்ட விளையாட்டுகளில் போட்டியிட விரும்பி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விதி அடிமட்ட விளையாட்டுகளுக்கோ (grassroots sports) அல்லது பொழுதுபோக்கிற்காக விளையாடுபவர்களுக்கோ பொருந்தாது. ஏனெனில், இவை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை ஆகும். இருப்பினும், விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இப்பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், "பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்காகத் தாங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்து, விளையாட்டு வீரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் (entourage) தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்." இந்தப் பரிசோதனையில் இளம் வயது விளையாட்டு வீரர்கள் ஈடுபட்டிருந்தால், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளையும் உறுதி செய்ய வலுவான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கூறியுள்ளது.


சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) பின்வருமாறு குறிப்பிட்டதாவது, "பரிசோதனையின் முடிவானது 'எதிர்மறையாக' (negative) வந்திருந்தும், அதில் ஏதேனும் பிழை இருக்கக்கூடும் என்று நம்புவதற்குப் போதுமான காரணம் இருந்தால் தவிர, இப்பரிசோதனை ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும்." SRY மரபணுப் பரிசோதனையில் எதிர்மறையான முடிவைப் பெறும் விளையாட்டு வீரர்கள், பெண்கள் பிரிவில் போட்டியிட நிரந்தரமாகத் தகுதி பெறுவார்கள்.


ஒரு விளையாட்டு வீரர் இப்பரிசோதனையை மேற்கொள்ள மறுக்க முடியுமா?


ஆம். ஒரு விளையாட்டு வீரர் பரிசோதனை செய்துகொள்ள மறுக்கலாம். ஆனால் அத்தகைய சூழலில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக் மற்றும் குளிர்கால இளையோர் ஒலிம்பிக் உள்ளிட்ட, சர்வதேச ஒலிம்பிக் குழுவால் (IOC) ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு போட்டியிலும் அந்த விளையாட்டு வீரர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்.


தனிப்பட்ட விளையாட்டு துறைகளும் இந்தக் கொள்கையைப் பின்பற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) அறிவுறுத்தியுள்ளது. அத்துறைகள் இதனை நடைமுறைப்படுத்தினால், பரிசோதனை செய்துகொள்ள மறுக்கும் விளையாட்டு வீரர்கள், அந்தத் துறையைச் சார்ந்த சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


பரிசோதனை முடிவு 'நேர்மறையாக' (positive) வந்தால் என்ன நடக்கும்?


ஒரு விளையாட்டு வீரருக்கு SRY மரபணுப் பரிசோதனையில் நேர்மறை முடிவு கிடைத்தால், அவர் 'பெண்கள் பிரிவில்' போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார். இருப்பினும், அவர்கள் ஆண்கள் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவர். இதில், கலப்புப் பிரிவுகளில் (mixed category) ஆண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், 'திறந்த பிரிவுகள்' (open category) அல்லது விளையாட்டு வீரர்களைப் பாலின அடிப்படையில் வகைப்படுத்தாத விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்கலாம். இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. முழுமையான ஆண்ட்ரோஜன் உணர்வின்மை நோய்க்குறி (Complete Androgen Insensitivity Syndrome (CAIS)) மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் வளர்சிதை மாற்ற மற்றும்/அல்லது செயல்திறனை மேம்படுத்தும் விளைவுகளிலிருந்து பயனடையாத பிற அரியவகை XY பாலின வளர்ச்சி வேறுபாடுகளைக் (DSD) கொண்ட XY-பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (DSD) கொண்ட விளையாட்டு வீரர்கள், பெண் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவர்.


சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) கூற்றுப்படி, மிகச் சில சோதனைகளே நேர்மறை முடிவுகளைத் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. மொத்தச் சோதனைகளில் இவை 1 சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளன. பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்த விளையாட்டு வீரர்கள், தங்கள் தகுதி நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள மருத்துவரீதியான பரிசோதனையை (clinical diagnosis) நாடலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கூறியுள்ளது. SRY மரபணு தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளிலும், 99 சதவீத முடிவுகள் எதிர்மறையாகவே (negative) உள்ளன.


Original Link: How sex test using saliva or cheek swab will determine a woman’s eligibility to compete in elite sports?.


Share:

ஹரீஷ் ராணா வழக்கு: வாழ்வுரிமையானது, கண்ணியத்துடன் இறக்கும் உரிமையையும் உள்ளடக்கியது. - ஆனந்த் ராவத் மற்றும் அனிகேத் டோங்ரே

சிதை நெருப்பு, மனக்கவலைக்கு இடையில், மனக்கவலையே அதிக ஆபத்தை உண்டாக்குகிறது. சிதை நெருப்பு இறந்த உடலை மட்டும் எரிக்கிறது. ஆனால், மனக்கவலை உயிரோடு உள்ள மனிதனை எரித்துவிடுகிறது.


13 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்புறத்தை புரிந்துகொள்ள முடியாத நிலையில் (persistent vegetative state) இருந்துவந்த ஒரு இளைஞருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்குகையில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் இந்த கருத்தை மேற்கோளாக எடுத்துக்காட்டியது. இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியமான அரசியலமைப்பு நெறிமுறையை மீண்டும் உறுதிப்படுத்தியது: கண்ணியத்துடன் மரணமடையும் உரிமையானது, அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் வரும் 'வாழும் உரிமையின்' (right to life) ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை விளக்குகிறது. இருப்பினும், இந்த வழக்கு ஒரு நீடித்த அமைப்புரீதியான இடைவெளியையும் சுட்டிக்காட்டுகிறது. வாழ்வின் இறுதிப்பருவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளை (end-of-life care) முறைப்படுத்தும் ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பு இந்தியாவில் இன்னும் இல்லை.


இந்த வழக்கு, தனது விடுதிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கடுமையான மூளைக் காயத்திற்கு உள்ளான தொழில்நுட்ப இளங்கலை மாணவர் ஹரிஷ் ராணா தொடர்பானது. விபத்துக்குப் பிறகு, அவருக்கு செயற்கை ஊட்டச்சத்து மற்றும் உணவுக்குழாய் மூலம் வழங்கப்படும் நீரேற்றம் ஆகியவற்றின் மூலமே உயிர் வாழ்ந்து வந்தார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி அமைக்கப்பட்ட மருத்துவக் குழுக்கள், தொடர் சிகிச்சையானது உயிரியல் வாழ்வை நீட்டிக்க மட்டுமே செய்கிறது என்றும், நரம்பியல்ரீதியான மீட்புபெற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என்று முடிவு செய்தன. இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், நீதிமன்றம் உயிர்காக்கும் கருவிகளை விலக்கிக்கொள்ள அனுமதி அளித்தது.


இந்த முடிவு ஒரு நீண்ட அரசியலமைப்புப் பயணத்தின் ஒரு பகுதியாகும். செயலற்ற கருணைக்கொலை (passive euthanasia) குறித்த விவாதம் முதன்முதலில் 2011-ஆம் ஆண்டு அருணா ஷான்பாக் வழக்கில் சட்டரீதியாக முக்கியத்துவம் பெற்றது. அதில், உச்சநீதிமன்றம் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் செயலற்ற கருணைக்கொலையின் சட்டப்பூர்வ தன்மையை அங்கீகரித்து, நடைமுறைப் பாதுகாப்புகளையும் வகுத்தது. 2018-ஆம் ஆண்டில், காமன் காஸ்  vs  இந்திய யூனியன் (Common Cause v. Union of India) வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்கு பின்னர் இந்தக் கொள்கை வலுப்படுத்தப்பட்டது. அந்தத் தீர்ப்பில், மருத்துவ சிகிச்சையை மறுக்கும் உரிமை தனிநபர்களுக்கு உண்டு என்றும், அவர்கள் தங்களது விருப்பங்களை உயில் என்று பொதுவாக அறியப்படும் முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மூலம் பதிவு செய்யலாம் என்றும்  அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்தது. 2023-ஆம் ஆண்டில், மருத்துவப் பயிற்சியாளர்கள் எழுப்பிய கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, நீதிமன்றம் இந்த நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தியது.


உயில் ஆவணம் (living will) அல்லது முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல் ஆவணம் என்பது, தகுதியுள்ள வயது வந்த ஒருவர், உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்தி வைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ வேண்டிய சூழ்நிலைகளை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த ஆவணம் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு, ஒரு நோட்டரி அல்லது அரசு அலுவலரால் சான்றளிக்கப்பட்டு, காப்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களிடம் பதிவு செய்யப்பட வேண்டும். இது நோயாளியின் மின்னணு மருத்துவப் பதிவுகளிலும் இணைக்கப்படலாம். இதன் மூலம், பிற்காலத்தில் அந்த நபர் தனது விருப்பங்களை வெளிப்படுத்த இயலாத நிலையை எதிர்கொள்ள நேரிட்டால், மருத்துவர்கள் அதனைச் சரிபார்த்துச் செயல்படுத்த முடியும்.


நீதித்துறை சார்ந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், வாழ்வின் இறுதித் தருணம் குறித்த முடிவுகளை நெறிப்படுத்தும் சட்டக் கட்டமைப்பு இன்னமும் முழுமையடையாமலே உள்ளது. நாடாளுமன்றம் ஒரு விரிவான சட்டத்தை இயற்றும் வரை நடைமுறையில் இருக்கக்கூடிய இடைக்கால சட்டங்களே வழிகாட்டுதல்கள் என்று உச்சநீதிமன்றமே பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், அப்படி ஒரு  சட்டம் பரிசீலனையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டிப் பல ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்தியா இன்றும்  நீதிமன்றமே வகுத்தளித்த நடைமுறைகளையே சார்ந்திருக்கிறது.


சட்டரீதியான இதுபோன்ற நடவடிக்கை, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பது குறித்த முடிவுகள் பெரும்பாலும் கடினமான சூழ்நிலைகளில் எடுக்கப்படுகின்றன. குடும்பங்கள் நிச்சயமற்ற தன்மையுடனும் தார்மீக வேதனையுடனும் போராட வேண்டியுள்ளது. அதே, நேரத்தில் மருத்துவர்கள் சட்டப் பொறுப்புக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். சட்டரீதியான தெளிவான வழிகாட்டுதல் இல்லாத நிலையில், மருத்துவரீதியாக தொடர்ந்து சிகிச்சை பயனற்றது என்று ஒருமித்த கருத்து இருந்தாலும், மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடும்.


சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்கள், மருத்துவ வாரியங்களை அமைப்பதையும், நோயாளிகளின் விருப்பங்கள் அல்லது குடும்பத்தினரின் ஒப்புதலை முறையாக ஆவணப்படுத்துவதையும் விதிப்பதன்மூலம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த முற்படுகின்றன.  இது போன்ற  நடவடிக்கைகள் ஒரு முன்னேற்றத்தைக் குறிப்பதாக இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது.


ஒரு குறைபாடு, நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட நிறுவனக் கட்டமைப்பைப் பற்றியது. 2023-ஆம் ஆண்டின் விளக்கத்தின் படி, நகராட்சி அமைப்புகள் அல்லது பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள், முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்களின் பாதுகாவலர்களாகச் செயல்படும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாவலர்கள், தேவைப்படும்போது மருத்துவமனைகளும் மருத்துவர்களும் ஒரு நோயாளியின் விருப்பங்களைச் சரிபார்க்கும் வகையில் பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், பல மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை அல்லது உயில் ஆவணத்தை (living will)  பதிவு செய்யும் முறைமையும் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாக, இந்த அமைப்பு காகிதத்தில் மட்டுமே இருந்து, உண்மையான மருத்துவச் சூழல்களில் நடைமுறைப்படுத்துவதற்குச் சிரமமான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது.


தேசிய அளவில் அணுகக்கூடிய உயில் ஆவணங்களுக்கான ஒரு டிஜிட்டல் பதிவேட்டின் தேவையும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவசரத் தேவையின்போது முன்கூட்டியே வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் கண்டறியப்பட்டால் மட்டுமே அவை தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும். ஒருவர் ஒரு மாநிலத்தில் உயில் எழுதி வைத்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு நகரத்தில் அவருக்கு சிகிச்சை தேவைப்படலாம். ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இணக்கமான தரவுத்தளம் இல்லாமல், மிகவும் முக்கியமான நேரத்தில் அந்த ஆவணத்தை அணுகுவதற்கு மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நடைமுறை வழி இல்லாமல் போகலாம். முன்கூட்டியே வழங்கப்படும் வழிகாட்டுதல்களை நாடு  முழுவதும் டிஜிட்டல் சுகாதாரப் பதிவேட்டில் ஒருங்கிணைப்பது, ஒரு நோயாளியின் இறுதிக்கால விருப்பங்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் பாதுகாப்பாக அணுகுவதை உறுதி செய்யும்.


நல்லெண்ணத்துடன் செயல்படும் மருத்துவர்களுக்கு வெளிப்படையான சட்டப் பாதுகாப்பு இல்லாதது மற்றொரு கவலையாகும். உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துவதில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள், அலட்சியம் அல்லது குற்றவியல்  நடைமுறை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். சட்டப்பூர்வப் பாதுகாப்புகள் இல்லாததால், தொடர் சிகிச்சையால் எந்த மருத்துவப் பயனும் இல்லாதபோதும், பல மருத்துவர்கள் இயல்பாகவே எச்சரிக்கையாக செயல்படுகினறனர்.


பொதுமக்களிடையே விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளது. ஒருவரின் இறுதிக்கால விருப்பங்களைப் பதிவு செய்வது என்ற கருத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. அத்தகைய ஒரு சட்டப்பூர்வ வழிமுறை இருப்பதை பல நோயாளிகளும் குடும்பத்தினரும் தெரிந்திருக்கவில்லை. மருத்துவத் துறைக்குள்ளேயே, நடைமுறைச் சட்டக் கட்டமைப்பு குறித்த தெளிவுத் தன்மை வேறுபடுகிறது.


நோய்த்தணிப்பு மற்றும் இறுதிக்காலப் பராமரிப்பைச் சட்டக் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்துவது என்பது பராமரிப்பைக் கைவிடுவது என்று அர்த்தமல்ல. மாறாக, அது நோயாளியின் இறுதித் தருணங்களில் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வலி நிவாரணம், உளவியல் ஆதரவு மற்றும் இரக்கமுள்ள மருத்துவக் கவனிப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதாகும்.


இறுதியாக, செயலற்ற கருணைக்கொலை (passive euthanasia) குறித்த விவாதம் என்பது மருத்துவ நடைமுறை அல்லது சட்டக் கோட்பாடு பற்றியது மட்டுமல்ல. அது, ஒரு சமூக வாழ்வின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கட்டத்தில் மனித கண்ணியத்தை எவ்வாறு மதிக்கிறது என்பது பற்றியது. அரசியலமைப்பு மதிப்பை அங்கீகரிப்பதிலும், இடைக்காலப் பாதுகாப்புகளை உருவாக்குவதிலும் உச்சநீதிமன்றம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், நீதிமன்றங்களால் மட்டும் ஒரு முழுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க முடியாது.


தற்போதுள்ள பாதுகாப்புகளை முறைப்படுத்துவதோடு, அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை இடைவெளிகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு விரிவான இறுதிக்காலப் பராமரிப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றுவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. அதுபோன்ற ஒரு சட்டம், நடைமுறைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். சிறப்பாக செயல்படும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டும். நோய்த்தணிப்புப் பராமரிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்களைப் பதிவு செய்வதற்கும் அணுகுவதற்கும் நம்பகமான அமைப்புகளை  உருவாக்க வேண்டும்.


அதுவரை, கண்ணியமான மரணம் (dignified death) குறித்த வாக்குறுதியானது, நீதித்துறை வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக அறிவுறுத்தல்களின் ஒரு பலவீனமான  செயல்முறையைச் சார்ந்தே இருக்கும். அரசியலமைப்பு கோட்பாடு (constitutional principle) தெளிவாக உள்ளது. அந்தக் கோட்பாட்டை மனிதாபிமானமுள்ள மற்றும் நடைமுறைக்கு ஏற்ற சட்டக் கட்டமைப்பாக மாற்றுவதற்கான சட்ட உறுதிப்பாடு  இன்னும் உருவாக்கபடவில்லை.


ராவத், மும்பையில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகவும், மகாராஷ்டிராவில் 'முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்களுக்கான' (Advance Medical Directives) பாதுகாவலர்கள் நியமனத்திற்கு வழிவகுத்த பொதுநல வழக்கின் இணை மனுதாரராகவும் உள்ளார். டோங்ரே, இந்திய உச்சநீதிமன்றத்தில் ஆராய்ச்சிப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.


Original Link: Harish Rana case: Right to life includes the right to die with dignity.


Share:

சில மாநிலங்களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) ‘ஆரஞ்சு எச்சரிக்கை’க்கு நடுவே, மேற்கத்திய இடையூறு (Western Disturbances) பற்றிய விளக்கம். -குஷ்பூ குமாரி

தற்போது மேற்கத்திய இடையூறு (Western Disturbances) நாட்டைப் பாதித்து வருவதால், அவற்றின் செயல்முறை, குளிர்காலத்திலிருந்து கோடைகாலத்திற்கு மாறும் காரணிகள், மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதில் இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.


தற்போதைய செய்தி :


கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மார்ச் 27 அன்று பல மாநிலங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஒரு ‘மேற்கத்திய இடையூறு’ (Western Disturbance) மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வரும் ஈரப்பதம் ஆகியவற்றின் விளைவாக, பல்வேறு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.


மேற்கத்திய இடையூறின் செயல்முறை, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்..


முக்கிய அம்சங்கள்:


1. மேற்கத்திய இடையூறு என்பது மழையை கொண்டுவரும் காற்று அமைப்புகள் ஆகும். அவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பகுதிகளைத் தாண்டி உருவாகி, கிழக்குநோக்கி இந்தியாவுக்கு நகரும்போது மத்தியதரைக் கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரேபிய கடல் போன்ற கடல்களின் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு வருகின்றன.

2. மேற்கத்திய இடையூறு பருவமழை அல்லாத மாதங்களில் (ஜூன்-செப்டம்பர் வரை), வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழையையும், உயரமான பகுதிகளில் பனிப்பொழிவையும் ஏற்படுத்துகின்றன. மார்ச் மாதத்தின் தொடக்கத்திலும், குளிர்காலத்தின் தாக்கம் இன்னும் நீடிக்கும்போது, இதே நிலை தொடர்கிறது.


3. நமது நாடு குளிர்காலத்திலிருந்து கோடைக்காலத்திற்கு மாறிவரும் நிலையில், வர்த்தகக் காற்றுகளின் திசை, வெப்பநிலை, காற்றழுத்தம் மற்றும் மேற்கத்திய இடையூறு ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.


4. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, அட்சரேகை மற்றும் உயரத்துடன் சேர்த்து, மேற்பரப்புக் காற்றுகள் மற்றும் மேல் வளிமண்டல சுழற்சிகளை உள்ளடக்கிய காற்றழுத்தக் காற்றுகள்; மேற்கத்திய இடையூறு மற்றும் வளிமண்டலச் சூறாவளிகள் ஆகியவை இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கின்றன.


5. வட இந்தியாவில் பொதுவாக நவம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலத்தில், வடகிழக்கு வர்த்தகக் காற்றுகள் நாடு முழுவதும் அதிகமாக வீசும். இந்தக்காற்றுகள் நிலப்பகுதியிலிருந்து கடலை நோக்கி வீசுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இது ஒரு வறண்ட காலநிலையை ஏற்படுத்துகிறது.


6. மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளிலிருந்து வளிமண்டலச் சூறாவளிகள் உள்ளே வருவது, வட இந்தியச் சமவெளிகளில் நிலவும் குளிர்காலத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இவை சமவெளிகளுக்கு மிகவும் தேவையான குளிர்கால மழையையும், மலைப்பகுதிகளுக்குப் பனிப்பொழிவையும் கொண்டு வருகின்றன. இந்த குளிர்கால மழை உள்ளூர் மொழியில் 'மஹாவத்' (Mahawat) என்று அழைக்கப்படுகிறது; இந்த மழை 'ரபி பயிர்களைப் பயிரிடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.


7. இந்தியாவின் தீபகற்பப் பகுதியில், தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குளிர்காலம் இருப்பதில்லை. கடலின் சமநிலைப்படுத்தும் (moderating) தாக்கம் காரணமாக, குளிர்காலத்தில் வெப்பநிலையின் மாற்றம் பெரிதாக உணரப்படுவதில்லை.


கோடைகாலம் (hot weather season) தொடங்கும் போது என்ன மாற்றங்கள் ஏற்படும்?


8. பொதுவாக, மார்ச் முதல் மே வரையிலான காலம் இந்தியாவில் கோடைக்காலமாகக் கருதப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுவதால், உலகளாவிய வெப்ப மண்டலம் வடக்கு நோக்கி நகர்கிறது. இது வட இந்தியச் சமவெளிகளில் வெப்பநிலை உயர்வதற்கு முக்கியக் காரணியாக அமைகிறது. மே மாதத்தில், நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவது ஒரு இயல்பான நிகழ்வாகும். தீபகற்ப இந்தியாவில், பெருங்கடல்களின் சமநிலைப்படுத்தும் (moderating) தாக்கத்தினால் வெப்பநிலை குறைவாகவே  உள்ளது.


9. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ‘லூ’ எனப்படும் வலுவான, வேகமான, வெப்பமான வறண்ட காற்று, கோடைகாலத்தின்  முக்கிய காற்றுகளில் ஒன்றாகும். வட இந்தியாவில் மே மாதத்தில் உருவாகும்  புழுதிப் புயல்களும் இயல்பானவை, அவை தற்காலிகமாக வெப்பத்தை குறைக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஏற்படும் உள்ளூர் இடியுடன் கூடிய மழையானது ‘கால் பைசாகி’ (Kaal Baisakhi) அல்லது ‘நார்வெஸ்டர்ஸ்’ (Nor’westers) என்று அழைக்கப்படுகிறது.


10. கோடை காலத்தின் இறுதியில், குறிப்பாகக் கேரளாவிலும் கர்நாடகாவிலும் பருவமழைக்கு முந்தைய சாரல் மழைகள் பெய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். இவை மாம்பழங்கள் விரைவாகப் பழுக்க உதவுவதால், பெரும்பாலும் இவை ‘மாம்பழ மழை’ (Mango showers) என்று அழைக்கப்படுகின்றன.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வண்ணக் குறியீட்டு எச்சரிக்கைகள்


‘பச்சை’ என்பது ‘எச்சரிக்கை இல்லை’ என்பதைக் குறிக்கிறது: அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை, மேலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்ற  முன் அறிவிப்பாகும். ‘மஞ்சள்’ எச்சரிக்கை “கண்காணிக்கவும்” என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகள் நிலைமை குறித்து “தகவல்களைத் தெரிந்துகொள்ள” அறிவுறுத்தப்படுகிறார்கள். ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை “எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்பதைக் குறிக்கிறது. மேலும், அதிகாரிகள் “தயாராக இருக்கவேண்டும்” என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரஞ்சு எச்சரிக்கையின்போது, கன முதல் மிகக் கனமான மழைப்பொழிவுக்கான முன்னறிவிப்பு இருக்கும். 'சிவப்பு' எச்சரிக்கை என்பது "எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்பதைக் குறிக்கிறது. மேலும் "நடவடிக்கை எடுங்கள்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த முன்னறிவிப்பு மிக அதிக  மழைப்பொழிவுக்கானதாகும். இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), "சிவப்பு நிற எச்சரிக்கை என்பது 'சிவப்பு எச்சரிக்கை' என்று பொருளல்ல," என்றும், அது "நடவடிக்கை எடுங்கள்" என்பதை மட்டுமே குறிக்கிறது என்று தெளிவுபடுத்துகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு பற்றி 

 

1. 2003-ஆம் ஆண்டு முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது செயல்பாட்டு வானிலை ஆய்வு நோக்கங்களுக்காக இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (Indian National Satellite System (INSAT)) தரவுகளைப் பயன்படுத்தி வருகிறது. செயற்கைக்கோள் அடிப்படையிலான தயாரிப்புகளின் வருகையானது, முன்னறிவிப்புத் துல்லியம், வளிமண்டலம் மற்றும் கடல் அளவுருக்களைக் கண்காணித்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவந்ததுடன், ஒட்டுமொத்த வானிலை ஆய்வு சேவைகளையும் மேம்படுத்தி, சொத்து, உயிர் மற்றும் வாழ்வாதார இழப்புகளைக் குறைத்தது.


2. செயற்கைக்கோள்கள்: இந்தியாவிடம் INSAT-3D, INSAT-3DR மற்றும் INSAT-3DS என மூன்று செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உள்ளன. இவை முக்கியமாக வானிலை ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், INSAT-3D மற்றும் INSAT-3DR ஆகியவை 8 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருந்து, தங்களின் திட்டக் காலத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளன. INSAT-3DS 2024-ல் ஏவப்பட்டது.


3. பருவமழைத் திட்டம்: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தனது திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன் முதன்மையான முன்னெடுப்புகளில் ஒன்று 'பருவமழைத் திட்டம்:' (Monsoon Mission) ஆகும். இது பல்வேறு கால அளவுகளில் பருவமழைப் பொழிவைச் சிறப்பாகக் கணிப்பதற்காக, 'உயர் செயல்திறன் கணினி' (High-Performance Computing (HPC)) தொழில்நுட்பத்தால் இயங்கும் மேம்பட்ட 'எண்முறை வானிலை முன்னறிவிப்பு' (Numerical Weather Prediction (NWP)) மாதிரிகளைப் பயன்படுத்தும் ஒரு விரிவான திட்டமாகும்.


4. பாரத் முன்னறிவிப்பு அமைப்பு (Bharat Forecast System (BFS)): இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) உள்நாட்டிலேயே உருவாக்கிய ஒரு புதிய வானிலை மாதிரியான 'பாரத் முன்னறிவிப்பு அமைப்பை' (BFS), இந்திய வானிலை ஆய்வு மையம் 2025 மே 26 அன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.


5. இந்த மாதிரி 6 கி.மீ x 6 கி.மீ என்ற உயர் இடம்சார்ந்த தெளிவுத்திறனைக் (spatial resolution) கொண்டுள்ளது. இதன் மூலம் 36 சதுர கி.மீ பரப்பளவை ஒரு அலகாகக் கொண்டு வானிலை முன்னறிவிப்புகளை வழங்கமுடிகிறது. இது, 144 சதுர கி.மீ பரப்பளவை ஒரே அலகாகக் கொண்டு செயல்பட்டுவந்த, தற்போது பயன்பாட்டிலுள்ள 12 கி.மீ x 12 கி.மீ தெளிவுத்திறன் கொண்ட மாதிரியிலிருந்து ஒரு வந்த ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பாரத் முன்னறிவிப்பு அமைப்பானது, இந்திய வானிலை ஆய்வு மையயத்தின் முன்னறிவிப்புகளின் துல்லியத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, ஊராட்சி (Panchayat) நிலை வரையிலும் மிகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


6. மௌசம் திட்டம் (Mission Mausum): மற்றொரு  முக்கிய  முன்னெடுப்பு ‘மௌசம் திட்டம்' ஆகும். இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 150 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனவரி 14 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் 'மௌசம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட்டது. வானிலை முன்னறிவிப்பு, மாதிரி உருவாக்கம் மற்றும் தகவல்களைப் பரப்புதல் ஆகிய துறைகளில் இந்தியாவின் வானிலை ஆய்வுத் துறையின் திறன்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடாக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


Original Link: Western Disturbances explained amid IMD ‘Orange alert’ in some states.


Share:

அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை: இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்பிற்கான விலையை யார் கொடுக்கிறார்கள்? -அபிலாஷா செம்வால்

தொழில்நுட்பம் பிரச்சினை அல்ல: பிரச்சினை தரவு ஆளுமைகளில்தான் உள்ளது. அங்கு  நம்பிக்கைக்குப் பதிலாக இலக்குகள் முக்கியமாகின்றன; மக்களுடன் நேரடி தொடர்பு கொள்ளுவதற்குப் பதிலாக அளவீடுகள் முன்னிலைப்படுத்தபடுகின்றன. டிஜிட்டல் சுகாதாரம் வெற்றிபெற வேண்டுமெனில், சீர்திருத்தம் முதலில் தொழிலாளர்களிடமிருந்து தொடங்க வேண்டும். தேவையற்ற பதிவுகளை குறைக்க வேண்டும். டிஜிட்டல் உழைப்பிற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான முடிவுகளை கேள்விக்குட்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும்.


ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர் தனது மொபைல் போனைச் சரிபார்க்கிறார். அதில் செயல்திறன் எச்சரிக்கைகள், நிரப்பப்படாத பதிவுகள் மற்றும் நிலுவையில் உள்ள பதிவேற்றங்கள் போன்ற அறிவிப்புகள் வருகின்றன. வீட்டுக்கு வீடு சென்று பணியைத் தொடங்குவதற்கு முன்பே, கணினி அடிப்படையிலான வினாடி வினா (quiz) அமைப்பு அவரது  திறனை மதிப்பீடு செய்து விடுகிறது. இந்தியாவின் சுகாதாரத் தொழில்நுட்பப் புரட்சியானது தகவல் பலகைகள் மற்றும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், வீடு தேடி செல்லும் பெண்களே முக்கியமான நபர்களாக திகழ்கின்றனர்.


இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்களும், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்களும் இறுதிக்கட்ட சுகாதாரப் பணிகளை செய்துவருகின்றனர். இது உலகின் மிகப்பெரிய சமூக சுகாதார வலையமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. கோவிட்-19 தடுப்பூசித் திட்டம், காசநோய் கண்காணிப்பு மற்றும் குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு முயற்சிகள் அனைத்தும் அவர்களைச் சுற்றியே இருந்து வருகிறது. இன்றைய டிஜிட்டல் அரசியல் சூழலில், அவர்களின் பங்கு குறைக்கப்படவில்லை. மாறாக, அது மறுபரிணாமம் பெற்று, உரிய அங்கீகாரம் இன்றி  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


ஒரு தரவுப் பலகை நோயாளிகளை பதிலீடு செய்யும்போது


ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (Ayushman Bharat Digital Mission) மூலம் 65 கோடிக்கும் மேற்பட்ட சுகாதார தரவு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன; மேலும், 80 கோடிக்கும் அதிகமான சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. eSanjeevani என்ற தேசிய தொலைமருத்துவ திட்டத்தின் மூலம் 39 கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பம், உணவுமுறை, தடுப்பூசி, மற்றும் நோய் கண்காணிப்பு போன்றவை அனைத்தும் மொபைல் பயன்பாடுகள் மூலம் பதிவுசெய்யப்படுகின்றன. வளங்கள் ஒதுக்கீடு மற்றும் அபாயங்களை முன்கூட்டியே கணிக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) பயன்படுத்தப்படுகிறது. இந்த கொள்கையின் தனிச்சிறப்பு அதன் செயல்திறனாகும். இருப்பினும், இதை செயல்படுத்துவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது.


காகிதப் பணிகளை முற்றிலும் ஒழிப்பதற்குப் பதிலாக, டிஜிட்டல் மயமாக்கல் அதை மேலும் அதிகரித்துள்ளது. பல்வேறு செயலிகளில் தரவை பதிவு செய்வதுடன், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் (ASHA) கையால் எழுதும் பதிவுப் புத்தகங்களையும் பராமரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இணைய இணைப்பு சிக்கல்கள் காரணமாக, டிஜிட்டல் வேலைகள் இரவு நேரம் வரை தள்ளிப் போகின்றன. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், தாமதமான பதிவுகள் எச்சரிக்கைகளுக்கும் அல்லது ஊக்கத் தொகை இழப்பிற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இறுதியில், இந்த அமைப்பு பராமரிப்பு (care) சேவையைவிட, தரவு பதிவேற்றத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது.


பெருநகரங்களில்- தடையற்ற மின்சாரம், நம்பகமான இணைய வசதி மற்றும் ஆங்கில அறிவுதான் இந்த செயலியின் (app) வடிவமைப்புக்கு அடிப்படையாக உள்ளது. ஆனால், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அவ்வாறு நடக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும்போது, செயலி உருவாக்குபவர்களோ அல்லது நிர்வாகிகளோ பொறுப்பேற்பதில்லை, மாறாக முன்கள பணியாளர்களே (Frontline workers) பொறுப்பேற்க வைக்கப்படுகிறார்கள். துல்லியமானதாக டிஜிட்டல் செயல்முறையில் பொறுப்புடைமை (accountability) போதுமான அளவு இல்லை.


இந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு மேலும் அதிகரிக்கிறது. அது ஒரு பகுதியை “செயல்திறன் குறைவானது” என்று சுட்டிக்காட்டுகிறது. ஆனால், சாதி சார்ந்த பிரச்சினைகள், இடம்பெயர்வு போக்குகள் அல்லது பொது நிறுவனங்களின் மீது உள்ள நம்பிக்கையின்மை போன்றவற்றை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மீண்டும், மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நபர்கள் — அதாவது பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் விளக்கத்தின் முழுச் சுமையையும் ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.


டிஜிட்டல் அரசு, ஊதியம் பெறாத பெண்கள்


சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளில் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்களின் பெரும்பகுதியை பெண்களே சுமக்கின்றனர்.


அதிகாரப்பூர்வமாகத் தன்னார்வலர்கள் என வகைப்படுத்தப்பட்டாலும், செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பொதுவாகத் தங்களின் திறன்பேசிகள், இணைய இணைப்பு மற்றும் மின்சாரத்திற்குத் தாங்களே பணம் செலுத்துகின்றனர். படிப்படியாக அதிகரிக்கும் பணிகளின் வரம்பு இருந்தபோதிலும், ஊக்கத்தொகைகள் உட்பட, ஒரு குறிப்பிட்ட மாதாந்திர மதிப்பூதியம், 2025-ஆம் ஆண்டு பிறகும்கூட, ரூ.3,500 என்ற அளவிலேயே உள்ளது. இதன் பொருள், அரசு முறைசாரா தொழிலாளர்களின் (informal) உழைப்பை பயன்படுத்தி சுகாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது என்பதாகும்.


இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சுகாதாரத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. ஆனால், கீழ்மட்ட ஊழியர்கள் இந்தத் தரவுகள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.


சீர்திருத்தம் தேவைப்படும் இடம்


தொழில்நுட்பம் ஒரு பிரச்சனையல்ல: சில மாநிலங்களில், டிஜிட்டல் பணம் செலுத்துதல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தொலைமருத்துவம் அணுகலை விரிவுபடுத்தியுள்ளது. பிரச்சனை தகவல் பலகைகளில்தான் உள்ளது. அங்கு நம்பிக்கைக்குப் பதிலாக இலக்குகளும் நோக்கங்களும் முக்கியமாகின்றன.


டிஜிட்டல் சுகாதாரத்தின் இலக்கு வெற்றிபெற வேண்டுமானால், சீர்திருத்தம் உழைப்பிலிருந்து தொடங்க வேண்டும்: தேவையற்ற பதிவுகளைக் குறைத்தல், டிஜிட்டல் உழைப்பிற்கு ஊதியம் வழங்குதல், தொடர்ச்சியான பயிற்சி அளித்தல், மற்றும் செயற்கை நுண்ணறிவின் தேர்வுகளை கேள்விக்குட்படுத்தக்கூடியதாக  மற்ற வேண்டும். இல்லையெனில், டிஜிட்டல்மயமாக்கல் சுரண்டலாக மாறிவிடும், அப்போது ஏழைகளிடமிருந்து தரவுகளைச் சுரண்ட பெண்களின் ஊதியமற்ற உழைப்பு பயன்படுத்தப்படும்.


இந்தியாவின் சுகாதார அமைப்பின் வெற்றிக்கு, அரசு மற்றும் மக்களுக்கிடையில் இடைத்தரகர்கள்மீது இருக்கும் நம்பிக்கைதான் முக்கிய காரணமாக உள்ளது. அந்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அமைப்பு செயலிழந்து விடும்; ஆனால் தரவு மட்டும் அப்படியே இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் சுகாதாரம் இருக்குமா என்பது பிரச்சனை அல்ல; மாறாக, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மருத்துவ வல்லுநர்கள் இருப்பார்களா என்பதே உண்மையான பிரச்சினையாகும்.


அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, பொதுச் சுகாதாரத்தின் எதிர்காலம் தொழில்நுட்பத்தைவிட அரசியல் சூழலை சார்ந்தே உள்ளது. வெறும் செயல்திறன் மட்டும் முக்கியமா, அல்லது மனித மரியாதையுடன் செயல்திறனும் சேர்ந்து இருக்கவேண்டுமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.


அபிலாஷா செம்வால், ASIA-வின் திட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கான துணை இயக்குநராகவும், குர்கானில் உள்ள SGT பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார். 


Original Link: From ASHA to AI: who pays the price of India’s digital health push?


Share:

இந்தியாவின் வளர்ச்சி குறித்த உரிமைகோரல்கள், தரவுகளின் உண்மை நிலைக்கு முரணாக உள்ளன. -பவன் கேரா

இந்தியாவுக்குத் இப்போது தேவையானது, புள்ளிவிவரங்களை வெளியிடும் அமைப்புகளின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதாகும். அந்த அமைப்புகள் நாட்டின் நிலைமையை உண்மையான தரவுகளின் மூலம் நேர்மையாக விவரிக்க வேண்டும்.


பல ஆண்டுகளாக, இந்தியர்கள் செய்திகளில் வரும் தலைப்புச் செய்திகளை மட்டுமே நம்புமாறு கூறப்பட்டு வருகின்றனர்: அதாவது இந்தியா "மிக வேகமாக வளரும் பொருளாதாரம்", "உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி", மற்றும் "வலுவான வளர்ச்சி வேகம்" என்பதே அந்த செய்திகள் ஆகும். ஆனால் மக்கள், தலைப்புச் செய்திகளில் கூறப்படும் வளர்ச்சிக்கு இணையான நிலையில் வாழ்வதில்லை மாறாக அவர்கள் தங்களின் மாதச் சம்பளம், உயர்ந்துவரும் விலைவாசி, வேலை வாய்ப்பின்மை, பள்ளிக் கட்டணங்கள் மற்றும் உயிர் பிழைத்திருக்கப் போராடும் சிறு தொழில்களுக்கிடையில்தான் வாழ்கிறார்கள்.


எனவே, இந்தியப் பொருளாதாரம் அறிக்கைகளில் மட்டும் சிறப்பாகத் தெரிகிறதா என்பது அல்ல, மாறாக அந்தப் புள்ளிவிவரங்களை இன்னும் நம்ப முடியுமா என்பதுதான் இந்தியாவின் முன் இருக்கும் உண்மையான கேள்வி ஆகும். 


அபிஷேக் ஆனந்த், ஜோஷ் ஃபெல்மேன் மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரின் புதிய ஆய்வு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளாகத் தவறாகக் கணக்கிடப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. அவர்களின் அறிக்கை (“இந்தியாவின் 20 ஆண்டுகால மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தவறான மதிப்பீடு: புதிய சான்றுகள்”, மார்ச் 2026) (“India’s 20 years of GDP misestimation: New evidence”, March 2026), 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி சுமார் 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகமாகக் காட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இது பார்ப்பதற்கு ஏதோ தொழில்நுட்பரீதியான சிக்கலாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் இது அத்தகைய கடினமான விஷயம் அல்ல என்கின்றனர். 


மிகச்சிறிய மாற்றங்கள்கூட ஏற்படுத்தக்கூடிய தாக்கம்


ஒரு பத்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் வெறும் இரண்டு சதவீத வித்தியாசம் கூட, அந்தப் பொருளாதாரம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதையே பெரிய அளவில் மாற்றிவிடும். இது கொள்கை வகுப்பாளர்கள் தங்களின் வெற்றியை மதிப்பிடுவதிலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதிலும் மற்றும் பொதுமக்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, இது ஒரு ஆழமான சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது: பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா துறையில் (Informal Sector) இருக்கும் ஒரு பொருளாதாரத்தில், வெறும் முறைசார்ந்த துறை (Formal Sector) தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள், சாதாரண இந்தியர்கள் சந்திக்கும் உண்மையான சவால்களைப் புறக்கணித்துவிடக்கூடும்  என்றும் கூறப்படுகிறது. குறிப்பாகக் கொள்கை மாற்றங்கள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் அன்றாடம் வருமானம் ஈட்டுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மைகள் போன்றவற்றுடன் போராடும் சாமானிய மக்களின் நிலையை இந்தத் தரவுகள் சரியாகப் பிரதிபலிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.


இந்த நடைமுறை மிகவும் எளிமையானது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயல்பாடுகளைக் கணக்கிடுவதற்கு, இந்தியா அதிகளவில் முறைசார்ந்த துறையிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகளையே சார்ந்து இருக்கிறது. ஆனால், முறைசாராத் துறையைவிட முறைசார்ந்த துறையை அளவிடுவது மிகவும் எளிது என்பதால், தேசிய கணக்குத் தரவுகள் (National Accounts Statistics (NAS)) நாட்டின் பொருளாதார நிலையின் உண்மையைப் பிரதிபலிப்பதைவிட, புள்ளிவிவரங்களில் எவை எளிதாகத் தெரிகிறதோ அவற்றை மட்டுமே படிப்படியாகப் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இலட்சக்கணக்கான மக்கள் சிறு பணிமனைகள் (Workshops), தெருவோரக் கடைகள், குடும்பத் தொழில்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டில், இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வலுவான பொருளாதார வளர்ச்சியை (முன்னிலைப்படுத்திய அதேவேளையில், தனியார் முதலீடு குறைவாகவே இருந்தது, உண்மையான ஊதிய வளர்ச்சி மந்தமாக இருந்தது மற்றும் உற்பத்தித் துறை எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. குறிப்பாக வேலைச்சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கவலையாகவே நீடித்தது, இதன் மூலம் கடந்த பத்தாண்டுகள் ஏன் பல இந்தியர்களுக்குக் குழப்பமானதாகத் தோன்றியது என்பதை இந்தக் கருத்தாக்கம் விளக்குகிறது.


தொடரும் நெருக்கடிகள்


அறிக்கைகளில் கூறப்படும் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின்  உண்மையான வாழ்க்கை அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளி பல பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கை, முறைசாரா வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கும் ரொக்கப் பணத்தைச் சார்ந்திருந்த துறைகளை நிலைகுலையச் செய்ததாகவும் அதன்பின் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)), சிறு தொழில்கள் சமாளிக்க முடியாத அளவிற்கு வரி இணக்கச் செலவுகளை (Compliance costs) அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வந்த கொரோனா (COVID-19) பெருந்தொற்று, முறைசாரா பொருளாதாரத்தை (Informal economy) மிகக் கடுமையாகப் பாதித்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகள் பெரும்பாலும் முறைசார்ந்த துறையின் தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்போது, முறைசாராத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் பொருளாதார பாதிப்புகள் புள்ளிவிவர ரீதியாகத் தெரியாமல் மறைந்துவிடக்கூடும் என்கின்றனர். அதாவது, இத்தகைய பாதிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானத்தை முழுமையாக மாற்றியமைத்தாலும், அவை அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்காமல் போய்விடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஆனால், உண்மையான பிரச்சினை வெறும் புள்ளிவிவரக் கணக்கீடுகளுக்கும் அப்பால் ஆழமாக உள்ளது. இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி மாதிரியில் உள்ள மிக முக்கியமான முரண்பாடாக பல பொருளாதார வல்லுநர்கள் அடையாளம் காட்டும் ஒரு விஷயத்தில்தான் அந்தப் பிரச்சினை அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


நாட்டின் செல்வங்களானது ஒரு சிறிய குழுவினரிடமும், குறிப்பாகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் சில மேல்தட்டு மக்களிடமும் அதிகமாகக் குவிந்து வருகிறது. அதேவேளையில், பொது நலத்திட்டங்களின் சென்றடையும் தன்மையும் செயல்திறனும் குறைந்து வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்தாலும், அதன் நன்மைகள் சுருங்கி, ஏழைகளுக்கான பாதுகாப்பு நிலைகள் பலவீனமடைந்து வருகின்றன. இதன் விளைவாக, மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போதும் புள்ளிவிவரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார வளர்ச்சி எண்கள் உயர்ந்துகொண்டே இருக்கலாம். இச்சூழலில், "முறைப்படுத்துதல்" என்ற சொல் அரசியலுக்கு மிகவும் வசதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுவதுபோல் தோன்றினாலும், அதன் பின்னே சிறு தொழில்கள் மறைந்து, பெரிய நிறுவனங்கள் அவற்றைக் கைப்பற்றுகின்றன எனும் ஒரு கடினமான உண்மை மறைந்திருக்கிறது. இந்த மாற்றமானது தேசிய கணக்குத் தரவுகளில் "வளர்ச்சி" எனப் பதிவு செய்யப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


ஒரு பெருநிறுவனத்தின் உணவகத்தையோ அல்லது கடையையோ கணக்கெடுப்பது எளிது என்பதற்காகவே, ஒரு சாதாரண மளிகைக் கடை மூடப்படுவதை நாட்டின் நவீனமயமாகக் கருதிவிட முடியாது. தற்போதைய நிலையில், இந்தப் பிரச்சனை என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவோ அல்லது பொருளாதாரக் கணக்கீடு சார்ந்ததாகவோ மட்டும் இல்லை மாறாக, இது மக்களாட்சி மற்றும் ஜனநாயக உரிமை சார்ந்த விஷயமாகவும் உருவெடுத்துள்ளது.


மோசமான தரவுகள்


ஒரு நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரத் தரவுகள் (Economic Data) தீவிரமான சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படும்போது, அதற்கு இயல்பான எதிர்வினை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகத்தான் இருக்கவேண்டும், அதைக் குறைப்பதாக இருக்கக் கூடாது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் புள்ளிவிவர அமைப்பு இதற்கு நேர்மாறான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமானதால், கொள்கை வகுப்பாளர்கள்  இன்னும் 2011-ஆம் ஆண்டின் தரவுகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2017–18-ஆம் ஆண்டின் நுகர்வு ஆய்வு (Consumption Survey), குடும்பச் செலவினங்கள் குறைந்திருப்பதைக் காட்டியதால் (இது கொரோனா (COVID-19) பாதிப்பிற்கு முன்பே நடந்திருந்தாலும்), அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு, வேலையில்லாத் திண்டாட்டம் பல ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருப்பதாகக் காட்டிய தொழிலாளர் வள ஆய்வு (Labour Force Survey (PLFS)), பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (National Statistical Commission (NSC)) உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.


இந்த ஒவ்வொரு நிகழ்விற்கும் தனித்தனி விளக்கங்கள் கூறப்படலாம், ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, அரசு தங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் தரவுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த அளவிற்கு விருப்பத்துடன் இருக்கிறது என்பது குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது.


ஒரு ஜனநாயக நாட்டில், புள்ளிவிவரங்கள் என்பது வெறும் மேடைப் பேச்சுகளில் காட்டுவதற்காக மட்டும் அல்ல, அவை பொதுமக்களுக்கான அத்தியாவசியக் கருவிகள் ஆகும். குடிமக்கள் அரசின் செயல்பாடுகளை மதிப்பிடவும், பொருளாதார வல்லுநர்கள் கொள்கைகளை வடிவமைக்கவும், அரசாங்கங்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியவும் இந்தத் தரவுகள் உதவுகின்றன. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, நம்பகமான பொருளாதாரத் தரவுகள் என்பது வெறும் விருப்பத்தேர்வு மட்டுமல்ல அது மிகவும்  முக்கியமானதாகிறது. வெறும் முழக்கங்களால் வேலையில்லாத் திண்டாட்டத்தை சரிசெய்யவோ, இணையதள ஹேஷ்டேக் (#Hashtags) மூலம் தேவையை  அதிகரிக்கவோ அல்லது போலியான தரவுகள் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்க்கவோ முடியாது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதார வளர்ச்சி உண்மையானதாக இருந்தால், அது எந்தவொரு கடுமையான ஆய்விற்கும் உட்படும்போது உண்மையை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது சுதந்திரமான புள்ளியியல் நிறுவனங்கள், முறைசாரா தொழிலாளர்கள்  மற்றும் ஏழைகளின் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரு தரப்பினரின்) உண்மையான நிலையை வெளிப்படுத்தும் தரவுகள் ஆகும். மேலும், பொருளாதாரத்தின் உண்மையான நிலையை மறைக்கும் குறுக்குவழிகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். 


நாட்டின் உண்மையான நிலவரத்தை தரவுகள் நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டும். அவை வெறும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


பவன் கேரா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் துறையின், ஊடக மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவராக உள்ளார்.


Original Link: India’s growth claims, a clash with data reality 


Share: