உமிழ்நீர் (saliva) அல்லது கன்னச் சளி மாதிரி (cheek swab) பரிசோதனை மூலம், உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு பெண்ணின் தகுதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? -மிஹிர் வஸவ்தா

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு பெண்ணும் இனி கட்டாயமாக பாலின நிர்ணயப் பகுதி Y (Sex-determining Region Y(SRY)) மரபணுப் பரிசோதனை அல்லது பாலினப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee (IOC)) கூறியுள்ளது. இதன் பொருள் என்ன? இது பற்றி ஒரு தெளிவான விளக்கம் கீழே குறிப்பிட்டுள்ளது.


வியாழக்கிழமையன்று எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவில், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), திருநங்கைப் பெண்கள் (transgender women) மற்றும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (Differences in Sex Development(DSD)) உள்ள விளையாட்டு வீரர்கள் பெண்கள் பிரிவுகளில் போட்டியிடுவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும், சர்வதேச விளையாட்டுகளில் போட்டியிட விரும்பும் எந்தவொரு பெண்ணும் இனி கட்டாயமாக SRY மரபணுப் பரிசோதனை அல்லது பாலினப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.




பாலின நிர்ணயப் பகுதி Y (Sex-determining Region Y(SRY)) மரபணு என்றால் என்ன?


SRY என்பது ‘பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதி Y’ (sex determination region Y) என்பதன் சுருக்கமாகும். SRY மரபணு என்பது டிஎன்ஏ-வின் ஒரு சிறிய பகுதியாகும். இது பெரும்பாலும் Y குரோமோசோமில் காணப்படும். SRY மரபணுவின் இருப்பு, பொதுவாக விந்தகங்களின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாகவும், "டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியின் மூலம் ஆண் பாலின வளர்ச்சியைத் தூண்டுவதாகவும்" சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.


1990-ல் முதன்முதலில் SRY மரபணுவைக் கண்டுபிடித்த பேராசிரியர் ஆண்ட்ரூ சின்க்ளேர், SRY மரபணு ஒரு முழுமையான துல்லியமான குறிப்பான் அல்ல என்று கடந்த ஆண்டு கூறியிருந்தார். "SRY மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, சரியாகச் செயல்படவில்லை என்றால், ஒருவருக்கு விந்தகங்கள் உருவாகாமல் போகலாம் என்று அவர் மேலும் விளக்கினார். அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த நபர் உயிரியல்ரீதியாகப் பெண்ணாக இருக்கலாம்," என்று அவர் கடந்த ஆண்டு 'தி கான்வர்சேஷன்' இதழில் எழுதியிருந்தார்.


அப்படியானால், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), பெண்கள் பிரிவில் போட்டியிட விளையாட்டு வீரர்களை அனுமதிப்பதற்கு முன்பு, SRY மரபணு சோதனை செய்ய அவர்களை ஏன் முடிவு செய்துள்ளது?


பெண்களுக்கான போட்டிகளில் திருநங்கைகள் மற்றும் பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (Differences of Sex Development (DSD)) உள்ள விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது விளையாட்டுத் துறையில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முன்னதாக, உயிரியல்ரீதியான பெண்களைவிட திருநங்கைகளுக்கு நியாயமற்ற அல்லது விகிதாசாரமற்ற அனுகூலம் இருப்பதாகத் தானாகவே கருதக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு கூறியிருந்தது. இருப்பினும், ஆண்களுக்குரிய குரோமோசோம்களைக் கொண்டிருப்பது, பெண்களுக்கு எதிரான போட்டிகளில் உடல்ரீதியான அனுகூலத்தை அளிக்கக்கூடும் என்று பிற்கால அறிவியல் ஆய்வுகள் காட்டின.


எனவே, "பெண் பிரிவைப் பாதுகாக்கவும், அவர்களின் நியாயம் மற்றும் பாதுகாப்பிற்காகவும்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உலக விளையாட்டு அமைப்பு கூறியுள்ளது. அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், “SRY மரபணு வாழ்நாள் முழுவதும் நிலையானது மற்றும் ஒரு விளையாட்டு வீரர் ஆண் பாலின வளர்ச்சியை அடைந்துள்ளார் அல்லது அடையவுள்ளார் என்பதற்கு இது மிகவும் துல்லியமான சான்றாகும்” என்று அது மேலும் கூறியது.


பெண் விளையாட்டு வீரர்களைவிட ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும் சாதகத்தின் அளவு என்ன?


தனது கொள்கை ஆவணத்தில், உயர்மட்ட அளவில் உள்ள வேறுபாட்டை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) விளக்கியுள்ளது. அவை,


பெரும்பாலான ஓட்டப்பந்தயம் மற்றும் நீச்சல் போட்டிகளில், பெண் விளையாட்டு வீரர்களைவிட ஆண் விளையாட்டு வீரர்கள் 10-12% செயல்திறன் கொண்ட சாதகத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலான எறிதல் மற்றும் தாண்டுதல் போட்டிகளில், ஆண்களின் செயல்திறனின் மேன்மை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


வெடிக்கும் ஆற்றல் தேவைப்படும் போட்டிகளில், இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, மோதல் விளையாட்டுகள் (collision), பளு தூக்குதல் (lifting) மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் (punching sports) ஆண்களின் செயல்திறனானது 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும்.


SRY மரபணுப் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


தடகளம் மற்றும் குத்துச்சண்டை ஆகியவை, இக்கொள்கையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள சில விளையாட்டுத் துறைகளில் அடங்கும். இந்தியத் தடகளக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய செய்தித் தொடர்பாளருமான அடில் சுமாரிவாலா, விளையாட்டு வீரர்கள் ஏதேனும் ஒரு பரிசோதனை மையத்தில் (diagnostic lab) தங்கள் உமிழ்நீர் மாதிரியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். பரிசோதனை மையம் (diagnostic laboratory) மாதிரியைப் பெற்றபிறகு, அதை ஆய்வு செய்து இது தொடபான அறிக்கைகளை வெளியிட ஒரு வாரம் வரை ஆகலாம். பின்னர், அம்முடிவுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, அந்தந்த விளையாட்டின் சர்வதேச நிர்வாக அமைப்பிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.


உயர்மட்ட விளையாட்டுகளில் போட்டியிட விரும்பி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விதி அடிமட்ட விளையாட்டுகளுக்கோ (grassroots sports) அல்லது பொழுதுபோக்கிற்காக விளையாடுபவர்களுக்கோ பொருந்தாது. ஏனெனில், இவை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை ஆகும். இருப்பினும், விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இப்பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், "பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்காகத் தாங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்து, விளையாட்டு வீரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் (entourage) தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்." இந்தப் பரிசோதனையில் இளம் வயது விளையாட்டு வீரர்கள் ஈடுபட்டிருந்தால், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளையும் உறுதி செய்ய வலுவான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கூறியுள்ளது.


சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) பின்வருமாறு குறிப்பிட்டதாவது, "பரிசோதனையின் முடிவானது 'எதிர்மறையாக' (negative) வந்திருந்தும், அதில் ஏதேனும் பிழை இருக்கக்கூடும் என்று நம்புவதற்குப் போதுமான காரணம் இருந்தால் தவிர, இப்பரிசோதனை ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும்." SRY மரபணுப் பரிசோதனையில் எதிர்மறையான முடிவைப் பெறும் விளையாட்டு வீரர்கள், பெண்கள் பிரிவில் போட்டியிட நிரந்தரமாகத் தகுதி பெறுவார்கள்.


ஒரு விளையாட்டு வீரர் இப்பரிசோதனையை மேற்கொள்ள மறுக்க முடியுமா?


ஆம். ஒரு விளையாட்டு வீரர் பரிசோதனை செய்துகொள்ள மறுக்கலாம். ஆனால் அத்தகைய சூழலில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக் மற்றும் குளிர்கால இளையோர் ஒலிம்பிக் உள்ளிட்ட, சர்வதேச ஒலிம்பிக் குழுவால் (IOC) ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு போட்டியிலும் அந்த விளையாட்டு வீரர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்.


தனிப்பட்ட விளையாட்டு துறைகளும் இந்தக் கொள்கையைப் பின்பற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) அறிவுறுத்தியுள்ளது. அத்துறைகள் இதனை நடைமுறைப்படுத்தினால், பரிசோதனை செய்துகொள்ள மறுக்கும் விளையாட்டு வீரர்கள், அந்தத் துறையைச் சார்ந்த சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


பரிசோதனை முடிவு 'நேர்மறையாக' (positive) வந்தால் என்ன நடக்கும்?


ஒரு விளையாட்டு வீரருக்கு SRY மரபணுப் பரிசோதனையில் நேர்மறை முடிவு கிடைத்தால், அவர் 'பெண்கள் பிரிவில்' போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார். இருப்பினும், அவர்கள் ஆண்கள் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவர். இதில், கலப்புப் பிரிவுகளில் (mixed category) ஆண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், 'திறந்த பிரிவுகள்' (open category) அல்லது விளையாட்டு வீரர்களைப் பாலின அடிப்படையில் வகைப்படுத்தாத விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்கலாம். இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. முழுமையான ஆண்ட்ரோஜன் உணர்வின்மை நோய்க்குறி (Complete Androgen Insensitivity Syndrome (CAIS)) மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் வளர்சிதை மாற்ற மற்றும்/அல்லது செயல்திறனை மேம்படுத்தும் விளைவுகளிலிருந்து பயனடையாத பிற அரியவகை XY பாலின வளர்ச்சி வேறுபாடுகளைக் (DSD) கொண்ட XY-பாலின வளர்ச்சி வேறுபாடுகள் (DSD) கொண்ட விளையாட்டு வீரர்கள், பெண் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவர்.


சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) கூற்றுப்படி, மிகச் சில சோதனைகளே நேர்மறை முடிவுகளைத் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. மொத்தச் சோதனைகளில் இவை 1 சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளன. பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்த விளையாட்டு வீரர்கள், தங்கள் தகுதி நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள மருத்துவரீதியான பரிசோதனையை (clinical diagnosis) நாடலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கூறியுள்ளது. SRY மரபணு தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளிலும், 99 சதவீத முடிவுகள் எதிர்மறையாகவே (negative) உள்ளன.


Original Link: How sex test using saliva or cheek swab will determine a woman’s eligibility to compete in elite sports?.


Share: