கணினித் திரைவழி விடைத்தாள் மதிப்பீடு செய்யும் (OSM) திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதை 'Coempt' நிறுவனம் ஆதரிக்கிறது, ஆனால் வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகள் நீடிக்கின்றன. -ராஜீவ் குமார்

ஏறக்குறைய 98 லட்சம் விடைத்தாள்களில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல்கள் வழங்கப்பட்டன. மேலும், 4 லட்சத்திற்கும் குறைவான விடைத்தாள்களே சரிபார்ப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டன. 95%-க்கும் அதிகமான விடைத்தாள்கள் எந்தவொரு சுயாதீனமான ஆய்விற்கும் உட்படுத்தப்படாத நிலையில், "எல்லாம் சரியாக உள்ளது" என்று ‘Coempt Eduteck’ நிறுவனம் கூறும் வாதம் பொதுமக்களிடையே உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்துமா? 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education (CBSE)) பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் வெளியாகி ஏறக்குறைய ஆறு வாரங்கள் ஆகியும், 'கணினித் திரைவழி விடைத்தாள் திருத்தும் முறை' (On-Screen Marking (OSM)) தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சுமார் 17.7 லட்சம் மாணவர்கள் மற்றும் ஏறக்குறைய 98 லட்சம் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, விடைத்தாள்களை மதிப்பிடுவதில் நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், இணையதளக் கோளாறுகள், கட்டணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்கள், விடைத்தாள்களைப் பார்ப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மதிப்பிடுவதில் உள்ள குறைபாடுகள் குறித்த பரவலான புகார்கள், இந்த நோக்கங்கள் உண்மையில் நிறைவேறியதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.


இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தத் திட்டத்தை முன்னெடுத்த 'Coempt Eduteck' நிறுவனம், தங்களுக்குரிய சான்றிதழ்கள், தணிக்கைகள் மற்றும் நிறுவனக் கண்காணிப்புகளைச் சுட்டிக்காட்டி இந்தத் திரைவழி விடைத்தாள் திருத்தும் முறையை நியாயப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த முடிவுகளையே தங்கள் எதிர்காலமாக நம்பியிருக்கும் மாணவர்களுக்கு, தங்கள் விடைத்தாள்களைப் பார்க்கவும், அவற்றைச் சரிபார்க்கவும் மற்றும் தங்களின் மதிப்பெண் மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் ஒரு உண்மையான வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பதுதான் தற்போது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.


கிடைக்கக்கூடிய தரவுகளின்படி பார்த்தால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றே தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த செயல்முறையிலும் ஏறக்குறைய 17.7 லட்சம் மாணவர்களும், சுமார் 98 லட்சம் விடைத்தாள்களும் சம்பந்தப்பட்டிருந்தபோதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களால் மட்டுமே தங்களது விடைத்தாள்களைப் பார்க்கவோ, மதிப்பெண் சரிபார்ப்பிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவோ முடிந்தது. இதன் விளைவாக, பெரும்பான்மையான விடைத்தாள்கள் எந்தவொரு மறுபரிசீலனைக்கும் உட்படுத்தப்படவில்லை.


இந்தக் கட்டுரை இணையப் பாதுகாப்பு, மென்பொருள் கோளாறுகள் அல்லது ஒப்பந்தச் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக,         மிக அடிப்படையான ஒரு கேள்வியை ஆராய்கிறது. கணினித் திரைவழி விடைத்தாள் மதிப்பீட்டு முறைதான் (OSM system) உறுதியளித்தபடியே நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டதா? அல்லது அதன் வடிவமைப்பே பெரும்பாலான மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களை மறுஆய்வு செய்வதற்கும், மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும் வழங்கப்பட்ட உரிமையைப் பயன்படுத்த முடியாமல் தடுத்ததா?


ஏன் முன்கூட்டியே தகவல்களை வெளியிடும் முறை பின்பற்றப்படவில்லை?


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது முந்தைய நடைமுறையிலிருந்து தற்போது விலகிச் சென்றிருப்பது போல் தெரிகிறது. 2018-ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு (JEE Main) போன்ற தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, கொள்குறி வகை (MCQ) தேர்வுகளுக்கான விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் தேர்வர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி வழக்கமாக வழங்கப்பட்டு வந்தன. தற்போது நடைமுறையில் உள்ள கணினித் திரைவழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையின்கீழ் (OSM), மதிப்பீட்டின் போதே 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் அனைத்தும் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விடுவதால், தனியாக மீண்டும் விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமல் போயுள்ளது.


இது ஒரு எளிமையான கேள்வியை எழுப்புகிறது. விடைத்தாள்கள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்தால், மாணவர்கள் தங்களின் சொந்த விடைத்தாள்களைப் பெறுவதற்கு மட்டும் ஏன் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும், இணைய முகப்பு (Portal) சார்ந்த நடைமுறைகளைக் கடந்து செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்? இந்த விடைத்தாள்களைப் பெறும் செயல்முறையே இணையப் பக்கக் கோளாறுகளாலும், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தோல்விகளாலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமோ (CBSE) அல்லது ‘Coempt’ நிறுவனமோ ஏன் இந்த விடைத்தாள்களை அனைத்து மாணவர்களுக்கும் தானாகவே பகிர்ந்தளிக்கவில்லை என்பதற்கான எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.


இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இந்தத் தேர்வில் எழுதப்பட்ட சுமார் 98 லட்சம் விடைத்தாள்களில், வெறும் 4 லட்சம் மாணவர்களுக்குச் சொந்தமான ஏறக்குறைய 11 லட்சம் விடைத்தாள்கள் மட்டுமே நகல் வழங்கும் செயல்முறைக்கு உள்ளாகின. இதிலும்கூட, ‘Coempt’ நிறுவனம் கோரப்பட்ட விடைத்தாள்களில் சுமார் 95 சதவீதத்தை மட்டுமே வழங்க முடிந்தது என்று தெரிவித்தது. இதனால் சுமார் 20,000 மாணவர்கள் எந்தவொரு தெளிவான விளக்கமும் இல்லாமல் பல வாரங்கள் கழிந்தும் தங்களின் விடைத்தாள்களுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, ஏறக்குறைய 14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் விடைத்தாள்கள் இறுதிவரை கிடைக்கவே இல்லை.


அனைத்து விடைத்தாள்களும் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்ததால், அவற்றைப் பாதுகாப்பான தகவல் தொடர்பு வழிகள் மூலமாக மாணவர்களுடன் முன்கூட்டியே பகிர்ந்துகொள்வது மிகவும் எளிதானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருந்திருக்கும். ஆனால், வெளிப்படைத்தன்மைதான் உண்மையான நோக்கமாக இருந்திருந்தால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான (4 சதவீதத்திற்கும் குறைவான) விடைத்தாள்கள் மட்டுமே மறுசரிபார்ப்பு செயல்முறைக்குச் சென்றிருக்கும் நிலையில், ஏன் மிகச் சில மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள்களைப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது? இந்த அணுகுமுறை வெறும் நிர்வாகக் காரணங்களால் மட்டுமே நடந்ததா, அல்லது விடைத்தாள்களைப் பரவலான ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் பெரிய அளவில் குறைபாடுகள் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தினால் செய்யப்பட்டதா? என்கிற கேள்வி எழுகிறது. 


ஸ்கேனிங் செயல்முறை உண்மையில் நம்பகமானதாக இருந்ததா? 


தேர்வுகளின்போது மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் முறையே முதலாவதான மற்றும் மிக அடிப்படையான கவலையாக உள்ளது. இந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விடைத்தாள்களில் பெரும்பாலும் கையால் எழுதப்பட்ட விடைகள், வரைபடங்கள், வரைபடக் கோடுகள் (Graphs), வரைபடங்கள் (Maps) மற்றும் எளிய விளக்கப்படங்கள் மட்டுமே இருக்கின்றன. மருத்துவப் பரிசோதனைப் படங்கள், செயற்கைக்கோள் படங்கள் அல்லது தொழிற்சாலை ஆய்வு அமைப்புகள் போன்றவற்றுக்குத் தேவைப்படுவது போல, இந்த விடைத்தாள்களுக்கு மிகத் துல்லியமான இடஞ்சார்ந்த அல்லது ஒளிர்வுத் தரம் (radiometric resolution) தேவையில்லை. விடைத்தாளில் உள்ள விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு நடுத்தரமான ஸ்கேனிங் தரமே போதுமானதாகும். எனவே, மிக அதிகத் துல்லியத்துடன் ஸ்கேன் செய்கிறோம் என்று கூறப்படும் வாதங்கள், இந்தத் துறையில் இருக்கும் உண்மையான மற்றும் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது.


விடைத்தாள்களை டிஜிட்டல் மயமாக்குவதில் இருக்கும் உண்மையான சவால் மிக எளிதானதுதான். அதாவது, விடைத்தாளின் ஒவ்வொரு பக்கமும் சரியாக நேராக இருப்பதையும், முழுமையாகத் தெரிவதையும், நல்ல வெளிச்சத்துடன் துல்லியமாக ஸ்கேன் செய்யப்படுவதையும், அது அந்தந்த மாணவரின் சரியான அடையாள எண்ணுடன் துல்லியமாக இணைக்கப்படுவதையும் உறுதி செய்வதுதான். இதில் உள்ள சிக்கல் ஏதோ ஒரு மேம்பட்ட தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; மாறாக, ஒட்டுமொத்த செயல்முறையையும் சரியாகக் கட்டுப்படுத்தி, அதன் தரத்தை உறுதி செய்வதுதான். விடைத்தாள்களைத் திருத்தும் மதிப்பீட்டாளருக்குக் காட்டப்படும் டிஜிட்டல் பதிவின் தரத்தைப் பொறுத்தே, இந்த மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மையும் அமைகிறது. ஒருவேளை, ஸ்கேன் செய்யப்பட்ட அந்த டிஜிட்டல் விடைத்தாளில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அது இயல்பாகவே ஒட்டுமொத்த மதிப்பீட்டுச் செயல்முறையின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்கின்றனர்.


முக்கியமாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏழு வகையான குறைபாடுகளைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஆறு குறைபாடுகள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்தல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆவண மேலாண்மை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையவை ஆகும். மேலும், விடைத்தாள்கள் தவறான மாணவர்களின் பெயர்களோடு இணைக்கப்பட்ட சம்பவங்களையும் ‘Coempt’ நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இத்தகைய தவறு ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. இந்தச் சிக்கல்கள் தொழில்நுட்பத்தின் குறைபாட்டை அல்ல, மாறாக அதைச் செயல்படுத்தியதில் ஏற்பட்ட கவனக்குறைவு, முறையான சரிபார்ப்பு இல்லாமை மற்றும் பொறுப்பற்றதன்மை ஆகியவற்றையே காட்டுகின்றன.


இது ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது: வெளிப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விடைத்தாள்களிலேயே இவ்வளவு அடிப்படை குறைபாடுகள் கண்டறியப்பட்டிருக்கும்போது, மாணவர்களுக்கு முழுமையாக விடைத்தாள்களின் நகல்களை அளிக்காமல், விடைத்தாள்களை ஸ்கேன் செய்வதிலும் டிஜிட்டல் மயமாக்குவதிலும் ஏற்பட்ட பிழைகள் வெளியே தெரியாமல் தடுத்துவிட்டதா? மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களைப் பெரிய அளவில் சுதந்திரமாக ஆய்வு செய்து, அதன் பிறகு மறுமதிப்பீடு செய்ய அனுமதித்திருந்தால், இன்னும் ஏராளமான குறைபாடுகளும் முறைகேடுகளும் வெளிப்பட்டிருக்கும் என்பதால்தான், விடைத்தாள்களைப் பரவலாகக் காட்டுவது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. 


"100% சரிபார்ப்பு" என்றால் என்ன?


தங்களுடைய தொழில்நுட்ப அமைப்புகள் 100 சதவீதம் தொழில்நுட்பரீதியாகச் சரிபார்க்கப்பட்டு, எந்தவிதப் பிழைகளும் இல்லாமல் துல்லியமாக இருப்பதாக ‘Coempt’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற வாதங்களை வெறும் சான்றிதழ்களைக் கொண்டு மட்டும் மதிப்பிடக்கூடாது. களத்தில் கிடைக்கும் உண்மையான முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அவை மதிப்பிடப்பட வேண்டும்.

விடைத்தாள்களின் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்களில்    சுமார் 95 சதவீதத்தினருக்கு மட்டுமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது என்ற ‘Coempt’ நிறுவனத்தின் அறிவிப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர்களுடைய இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. விண்ணப்பித்தவர்களில் ஏறக்குறைய 5 சதவீதத்தினர், அதாவது பல்லாயிரக்கணக்கான விடைத்தாள்கள் சம்பந்தப்பட்ட சுமார் 20,000 மாணவர்கள், பல வாரங்களுக்குப் பிறகும் தங்களுடைய மதிப்பெண் ஆவணங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்தத் தேர்வு முறையை முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட, பிழையற்ற ஒரு அமைப்பு என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒவ்வொரு விடைத்தாளும் ஒரு மாணவரின் கல்வி எதிர்காலத்தை நேரடியாகத் தீர்மானிப்பதால், அவற்றை வழங்குவதில் ஏற்படும் தாமதமோ அல்லது வழங்கத் தவறுவதோ இந்த ஒட்டுமொத்த தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தே சந்தேகங்களை எழுப்புகிறது.


இறுதியாக, மாணவர்கள் ஒரு தேர்வு முறையை அதன் முடிவுகளை வைத்துத்தான் மதிப்பிடுகிறார்களே தவிர, அது காட்டும் தணிக்கை (Audit) சான்றிதழ்களை வைத்து அல்ல. ஒப்புக்கொள்ளப்பட்ட குறைபாடுகளும், கேட்கப்பட்ட அனைத்து விடைத்தாள்களையும் சரியான நேரத்தில் வழங்க முடியாத நிலையும், "100% சரிபார்ப்பு" என்ற அந்த அமைப்பின் வாதத்தை பலவீனப்படுத்துகின்றன. கேட்கப்பட்ட சில விடைத்தாள்களைக்கூட முழுமையாகவும் தவறுகளின்றியும் வழங்க முடியவில்லை என்றால், "முழுமையாக சரிபார்க்கப்பட்ட, பிழையற்ற ஒரு தேர்வு முறை" என்கிற வாதம் பொதுமக்களிடையே எப்படி உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்?


வெளிப்படைத்தன்மையின் உண்மையான சோதனை இதுவரை நடந்துள்ளதா?


இப்போதும் கூட, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவை, இந்த கணினித் திரைவழி விடைத்தாள் திருத்தச் (OSM) செயல்முறை அதன் இலக்குகளான நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அடைந்துவிட்டது என்பதை உண்மையாகவே நிரூபிக்க விரும்பினால், அதற்கான மிக எளிமையான தீர்வு என்னவென்றால், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அனைத்து விடைத்தாள்களையும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்களாகவே முன்வந்து வழங்குவதுதான். சுதந்திரமான சரிபார்ப்புக்குத் தேவையான விடைத்தாள் பதிவுகளுக்கான அணுகல் மறுக்கப்படும் வரை, இந்தத் தற்போதைய விடைத்தாள் திருத்தும் முறை நம்பகமானது மற்றும் பிழைகள் இல்லாதது என்ற எந்தவொரு வாதத்தையும் ஏற்பது கடினம் ஆகும்.


உண்மை என்னவென்றால், வெளிப்படைத்தன்மைக்கான உண்மையான சோதனை இன்னும் நடக்கவே இல்லை. வெறும் உறுதிமொழிகள் மூலமாகவோ, தணிக்கைகள் (Audits) மூலமாகவோ வெளிப்படைத்தன்மையை நிரூபித்துவிட முடியாது. மாறாக, யாருடைய எதிர்காலம் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறதோ, அந்த மாணவர்களே நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையிலான திறந்தவெளித் தகவல்களின் மூலமும், அவர்களின் சுதந்திரமான ஆய்வின் மூலமே அதை நிரூபிக்க முடியும்.               இந்தத் தேர்வுமுறை, அதிகாரிகள் கூறுவது போல முற்றிலும் நம்பகமானது என்றால், அனைத்துத் தகவல்களையும் முழுமையாக வெளிப்படுத்துவது பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்யும். ஒருவேளை இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை விரைவாகவும் நியாயமாகவும் கண்டறிந்து திருத்துவதற்கு இதுவே மிகச் சிறந்த வழியாகும். ஏறக்குறைய 17.7 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த ஒட்டுமொத்தச் செயல்முறையின் நோக்கம், அமைப்பில் உள்ள குறைபாடுகளால் எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதாகத்தான் இருக்க வேண்டும். அப்படியிருக்க, "100% சரிபார்ப்பு"  முடிந்துவிட்டது என்ற அதிகாரிகளின் கருத்து, தங்களின் விடைத்தாள்களைக் கேட்டு விண்ணப்பித்த சுமார் 20,000 மாணவர்களுக்கு இன்னும் அது கிடைக்கவில்லை என்ற தகவல்களோடு முற்றிலும் முரண்பட்டதாகவே தோன்றுகிறது.


எனவே, விடைத்தாள்களை ஸ்கேன் செய்வதும், மதிப்பிடுவதும் சரியான முறையில்தான் நடந்துள்ளது என்று முழு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில், டிஜிட்டல்மயமாக்கப்பட்ட அனைத்து விடைத்தாள்களையும் வெளியிட்டு, மாணவர்கள் அவற்றைச் சரிபார்த்துக் கொள்ள ஏன் அனுமதிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை


இந்த கணினித் திரைவழி விடைத்தாள் திருத்த (OSM) விவகாரம் என்பது இறுதியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட நிர்வாகத் திறனுக்கான ஒரு முக்கியச் சோதனையாகும். ஏனெனில், ஏறக்குறைய 17.7 லட்சம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகள் இந்தத் தேர்வு முடிவுகளைத்தான் நம்பியிருக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பில், வழிகாட்டும் கொள்கை மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள், தொழில்நுட்பக் கோளாறுகள், நிர்வாகக் குறைபாடுகள் அல்லது விடைத்தாள் மதிப்பீட்டில் நடக்கும் தவறுகள் என எந்தவொரு குறைபாட்டினாலும் ஒரு மாணவர்கூட பாதிக்கப்படக்கூடாது.


இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது. தேர்வு விடைத்தாள்கள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அதற்கான தகவல் தொடர்பு அமைப்புகளும் தயாராக இருப்பதால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அனைத்து மாணவர்களுக்கும் அந்த டிஜிட்டல் விடைத்தாள்களை வழங்க முடியும்.            மேலும், விடைத்தாள்கள் முழுமையாகவும் சரியாகவும் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க மாணவர்களுக்குச் ஒரு குறுகியகால அவகாசத்தை அளித்து,           அதில் ஏதேனும் உண்மையான டிஜிட்டல் பிழைகள் இருந்தால் அதைச் சரிசெய்து, கண்டறியப்பட்ட முரண்பாடுகளை மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கலாம். இது போன்ற வெளிப்படைத்தன்மையை ஒரு விதிவிலக்காக இல்லாமல் ஒரு பொதுவான விதியாக மாற்றுவதன் மூலம், தகவல்களை வெளிப்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் பிழைகளைத் திருத்துதல் ஆகியவை தேர்வுத் தரக் கட்டுப்பாட்டின் அத்தியாவசியப் பகுதிகளாக மாறிவிடும்.


இறுதியாக, நம்முடைய நோக்கம் ஒரு குறிப்பிட்ட தேர்வு நடைமுறையையோ, அதை நடத்தும் நிறுவனத்தையோ அல்லது அமைப்பையோ பாதுகாப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, ஒவ்வொரு மாணவருக்கும் நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் தேர்வு மதிப்பீடு செய்யப்படுவதை                         உறுதி செய்வதாகவே இருக்க வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தகுந்த நேரத்தில் புத்திசாலித்தனமான முடிவுகளும், சரியான திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதும்கூட, தேர்வு முறையை முழுமையாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கும், அதில் உள்ள உண்மையான குறைபாடுகளைக் கண்டறிந்து நீக்குவதற்கும், இந்த மதிப்பீட்டு முறையின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கும் இன்னும் காலம் உள்ளது.


பேராசிரியர் ராஜீவ் குமார், இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். மேலும், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆகியவற்றில் முன்னாள் விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார்.


Original link:

Coempt defends OSM rollout, but transparency concerns remain.


Share:

ஆளில்லா விமானம் கொள்முதல்களிலிருந்து, ஆளில்லா விமானம் சார்ந்த கூட்டாண்மைகளுக்கு மாறுதல் -ஆத்யா மாதவன்

 இந்தியாவின் ஆளில்லா விமானம் (drone) சார்ந்த இலக்குகளுக்கு மேம்பட்ட ஒப்பந்தங்களும் தொடர்ச்சியான புத்தாக்கமும் தேவைப்படுகின்றன.


உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆளில்லா விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, உள்நாட்டு உற்பத்திக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, நாட்டின் வளர்ந்துவரும் ஆளில்லா விமானத் தொழில்துறைக்கும் ஊக்கமளிக்கும். மேலும், போர் விமானங்கள் போன்ற பெரிய, அதிநவீன தளங்களை வாங்குவதிலிருந்து, சிறிய, மலிவான மற்றும் எளிதில் இழப்பைத் தாங்கக்கூடிய (அதாவது, போரில் சேதமடைந்தாலும் பெரிய இழப்பு ஏற்படாத) அமைப்புகளை வாங்கும் ஒரு மாற்றத்தையும் இது குறிக்கிறது. இந்த மாற்றம், கொள்முதல் நடைமுறைகள் இத்தொழிலில் உள்ள சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கிறது.


டாங்கிகள் (tanks) மற்றும் போர் விமானங்கள் (fighter jets) போன்ற அமைப்புகளைக் கையாளும் நீண்டகால மூலதனக் கொள்முதல், மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்களுக்கான விரைவான தேவையை ஈடுகட்டுவதில் சிரமப்படக்கூடும். இந்தத் தளங்களில் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பது ஒரு நல்ல அறிகுறி, ஆனால் கொள்முதல் அமைப்புகள் அதைச் சரியான முறையில் செலவழிக்குமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாக உள்ளது.




ஆளில்லா விமானங்களின் பொருளாதாரம் (The economics of drones)


இராணுவ ஆளில்லா விமானங்கள் பற்றிய பொது விவாதங்கள் பொதுவாக MQ-9B ரீப்பர் (MQ-9B Reaper) மற்றும் பேரக்டர் TB-2 (Bayraktar TB-2) போன்ற பெரிய ஆளில்லா போர் வானூர்திகளை (uncrewed combat aerial vehicles (UCAV)) மையமாகக் கொண்டிருந்தாலும், சமீபத்திய மோதல்கள் சிறிய, மலிவான ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளன.


இவை பொதுவாக ‘மைக்ரோ’ மற்றும் ‘நானோ’ அளவிலான ஆளில்லா விமானங்களைக் கொண்டுள்ளதோடு, இவை குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியதும், ரஷ்யா-உக்ரைன் போரில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதும் இந்தக் கொள்கையைப் பின்பற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக விலை கொண்ட கருவிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை இடைமறிப்பது, பொதுவாக அந்த ஆளில்லா விமானங்களின் விலையை விட மிகவும் அதிகமாகும். சமீபத்திய போர்களில், மலிவான ஆளில்லா விமானங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, அவற்றை பெருமளவில் களமிறக்குவதே ஒரு முக்கிய நிலையாக இருந்து வருகிறது. முதலில் வணிகப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளும் மாற்றியமைப்புகளும், இராணுவ நோக்கங்களை அடைவதற்கான ஒரு குறைந்த செலவிலான ஒரு வழியாக அமைந்துள்ளது.


போர்முனைகள் பொருத்தப்பட்ட, நேரடிப் பார்வை (first-person-view (FPV)) ஆளில்லா விமானங்களை உக்ரைன் பயன்படுத்தியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இராணுவ ஆளில்லா விமானத் துறையில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள், பொதுமக்களுக்கான ஆளில்லா விமானத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளன. இது தொடர்ச்சியான மற்றும் கூட்டு முயற்சியிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செயல்முறைகளின் தேவையை உருவாக்குகிறது. தொழில் துறை, கல்வித் துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் நன்மைகளைச் சீன ஆளில்லா விமானத் துறை ஒரு சிறந்த உதாரணமாகக் காட்டுகிறது.


ஆளில்லா விமானம் காலத்திற்கேற்ற பொருத்தத்தின் சவால்


உத்திசார்ந்த ஆளில்லா விமானங்களைக் கொள்முதல் செய்வதில் உள்ள மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், சவால் என்பது அவற்றை வாங்குவதில் இல்லை, மாறாக அவை தொடர்ந்து காலத்திற்கேற்ப பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதில்தான் உள்ளது. 2015-ல் வாங்கப்பட்ட ஒரு அதிநவீன போர் விமானம் அல்லது பீரங்கி இன்றும் ஒப்பீட்டளவில் புதியதாகவே உள்ளது. மேலும், அது ஓரளவிற்குப் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது. எதிரிகளின் திறன்களும் அச்சுறுத்தல் சூழல்களும் தொடர்ந்து மாறிவருவதால், இன்று வாங்கப்படும் உத்திசார்ந்த ஆளில்லா விமானங்கள் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கொழிந்து போகக்கூடும். எதிரியின் மின்னணுப் போர் (EW) பிரிவுகள், ஒரு புதிய ஆளில்லா விமானங்களின் சிக்னலுக்கு ஏற்ப தங்களின் ஜாமர்களை (jammers) ஆறிலிருந்து எட்டு வாரங்களுக்குள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.


உக்ரேனியப் பொறியாளர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டபோது, ​​வேறுபட்ட தகவல் தொடர்பு இணைப்புகளுடன் கூடிய புதிய அமைப்புகளை வாங்குவது தீர்வாக அமையவில்லை. மாறாக ரேடியோ இணைப்புகளுக்குப் பதிலாக ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் (fibre-optic cables) பயன்படுத்துவதே தீர்வாக இருந்தது. எனவே, கொள்முதல் மற்றும் மேம்பாட்டுச் செயல்முறைகள் விரைவாக இருக்க வேண்டும். மேலும் தேவையற்ற நிர்வாகத் தடைகள் மற்றும் அதிகாரத்துவ காலக்கெடுவின் கட்டுப்பாடுகள் இன்றி, விரைவான மாற்றங்களையும் மேம்படுத்தல்களையும் செய்ய அவை வழிவகுக்க வேண்டும்.


இந்தியாவின் கொள்முதல் கட்டமைப்புகள் இந்த நிலையில் சில நல்ல விதிகளை உருவாக்கியுள்ளன. இருப்பினும், இதில் மேலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (Defence Acquisition Procedure (DAP)) வரைவானது, ஆயுதப் படைகள் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய (commercial-off-the-shelf (COTS)) அமைப்புகளைக் கொள்முதல் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம், வணிக ரீதியான ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடிய இடங்களில் எல்லாம் அவற்றை வாங்க முடிகிறது. மேம்படுத்தல்களை நெறிப்படுத்துவதற்கான விதிகளையும் இந்த பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DAP) கொண்டுள்ளது. பாதுகாப்பு கொள்முதல் கையேடு (Defence Procurement Manual (DPM)), எதிர்பாராத பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை (financial buffers) வழங்குகிறது. இவை விவேகமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளாகும்.


தற்போதைய கொள்முதல் கட்டமைப்புகளின் முக்கிய பலவீனம் என்னவென்றால், வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் பரிவர்த்தனை சார்ந்ததாகவே உள்ளது. அரசாங்கம் ஒரு தேவையை அடையாளம் கண்டவுடன், அது ஒரு ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டு, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு பொருளைக் கொள்முதல் செய்ய முடியும் என்பதே இதன் அடிப்படை அனுமானமாகும்.


இருப்பினும், தொழில்நுட்பம் வேகமாக வளரும் ஒரு துறையில், தயாரிப்புகளுக்குத் தொடர்ச்சியான மாற்றங்களும் மேம்பாடுகளும் தேவைப்படுகின்றன.


பரிவர்த்தனைகள் அல்ல, கூட்டாண்மைகள்


உத்திசார்ந்த ஆளில்லா விமானக் கொள்முதலுக்கான மிகவும் பொருத்தமான மாதிரி, வன்பொருளை (hardware) வாங்குவதைப் போலன்றி, ஒரு மேலாண்மை செய்யப்பட்ட சேவை ஒப்பந்தத்தை ஒத்திருக்கலாம்.


உதாரணமாக, பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் கணினிகளுடன் பராமரிப்பு சேவைகள், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் மாற்று ஆதரவையும் சேர்த்து கொள்முதல் செய்கின்றன. அதேபோல், ஆயுதப் படைகள் ஆளில்லா விமானங்கள் உற்பத்தியாளர்களுடன் நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம். இத்தகைய ஒப்பந்தங்கள், எதிர்காலத் தேவை குறித்து தொழில்துறைக்கு அதிக முன்கணிப்பை வழங்கும். அதேநேரத்தில், அவை ஆளில்லா விமானங்களின் நம்பகமான விநியோகத்தை உறுதிசெய்து, மேம்படுத்தல்களுக்குத் தெளிவான வழிமுறைகளை வழங்கி, மோதல்களின் போது இதற்கான உற்பத்தியை விரைவாக அதிகரிக்கும் திறனுக்கு வழிவகுக்கும். மேலும், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் மாறிவரும் மின்னணுப் போர் அச்சுறுத்தல்களுக்கு ஏற்பத் தழுவல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கான ஒரு கட்டமைப்பையும் அவை உருவாக்கும். மிக முக்கியமாக, தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்ந்து உருவாக வரும் ஒரு களத்தில், ஆயுதப் படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பை அவை வளர்க்கும்.


இந்தியாவின் கொள்கைக் கட்டமைப்புகள் சரியான திசையில் தொடர்ந்து முன்னேறிவரும் வேளையில், இந்தக் கட்டமைப்புகளுக்குள் செய்யப்படும் கட்டமைப்பு மாற்றங்கள், உத்திசார்ந்த ஆளில்லா விமானங்களின் விரைவான பரிணாம வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் ஒரு சூழலை உருவாக்க உதவக்கூடும். மேலும் மேம்பட்ட கொள்முதல் உறவை ஆதரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப அடித்தளத்தை இந்தியாவின் உள்நாட்டு ஆளில்லா விமானத் தொழில் கொண்டுள்ளது. 2 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த உறுதிப்பாடு, அதற்கான அரசியல் விருப்பம் உள்ளது என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறியாகும். இந்த உறுதிப்பாட்டைச் சரியான ஒப்பந்தக் கட்டமைப்பாக மாற்றுவதே அடுத்த தர்க்கரீதியான படியாகும். அத்தகைய கட்டமைப்பு, ஒருமுறை வழங்குவதைவிட, நீடித்த திறனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


ஆத்யா மாதவன் தக்ஷஷிலா நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.


Original link;

Moving from drone purchases to drone partnerships.


Share:

இந்தியாவின் மிக மலிவான மின்சக்தி இங்கே வந்துவிட்டது, மின்கட்டமைப்பு அதற்கு ஈடுகொடுக்க வேண்டும். -அமோல் பட்கே, நிகித் அப்யங்கர்

நாட்டின் தூய்மையான எரிசக்தியின் எதிர்காலம், வேகமான மற்றும் திறமையான மின்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தலைச் சார்ந்துள்ளது.


இந்தியா பல்லாயிரக்கணக்கான கிகாவாட் (GW) அளவிலான குறைவான சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தியை பயன்படுத்த முடியாமல் வீணடித்து வருகிறது. இதற்குக் காரணம், அந்த மின் உற்பத்தித் திட்டங்கள் தயாராக இல்லாததால் அல்ல. தற்போதுள்ள மின்கட்டமைப்பை மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதன் மூலமும், முக்கிய முனைகளில் சேமிப்பு இடங்களைச் சேர்ப்பதன் மூலமும், மின் பரிமாற்றத்திற்காகக் கூடுதலாக எந்த ஒரு நிலத்தை கையகப்படுத்தாமலேயே 1,000 ஜிகாவாட் புதிய தூய்மையான ஆற்றலைப் பெற முடியும்.


 இந்தியாவின் மின்சார அமைப்பு ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி நாட்டில் மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் மின்சார ஆதாரங்களாக மாறியுள்ளன.  2025-ஆம் ஆண்டில் மட்டும் 45 கிகாவாட்-க்கும் அதிகமான திறன் சேர்க்கப்பட்டு, அந்த அளவு அமெரிக்கா சேர்த்த அளவுக்கு ஏறத்தாழ சமமானதாக இருந்தது. உலகின் மிகக் குறைந்த மின்கலன் செலவுகளில் ஒன்றைக் கொண்டிருப்பதன் மூலம், இந்தியாவால் இப்போது ஒரு கிலோவாட்-மணிக்கு  ₹3.5 என்ற விலையில் நிலையான மற்றும் தூய்மையான மின்சாரத்தை வழங்க முடியும்.


இருப்பினும், தொழில்நுட்பமும் விலைகளும் ஒருங்கிணையும் அதே வேளையில், மின் பரிமாற்றமே ஒரு முக்கிய தடையாக உருவெடுத்துள்ளது. 50 ஜிகாவாட்டிற்கும்  அதிகமான தூய்மையான எரிசக்தி உற்பத்தி திறன்கள், அதற்கான மின்சார பரிமாற்றக் கட்டமைப்பு (Transmission) போதிய அளவில் இல்லாததால் முடங்கிக் கிடக்கின்றன. திட்டங்கள் 12 முதல் 18 மாதங்களில் செயல்பாட்டிற்கு வந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முறையான அனுமதிகள் போன்ற காரணங்களால் பரிமாற்றக் கட்டமைப்பை உருவாக்க 3 முதல் 5 ஆண்டுகள்  வரை தேவைப்படுகின்றன. மின் வலையமைப்பை (Grid) வேகமாகவும் திறமையாகவும் விரிவுபடுத்தாவிட்டால், குறைந்த செலவிலான தூய ஆற்றலின் பயன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.


இந்தியாவில் தற்போது சுமார் 250 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உள்ளது. மேலும் 100 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்கள் ஆரம்பகட்டத்தில் உள்ளன. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், தொழில் மற்றும் போக்குவரத்து துறைகளை மின்மயமாக்குவதற்கும், 2050-ஆம் ஆண்டுக்குள் 2,000 ஜிகாவாட் திறன் தேவைப்படும். இது போன்ற திட்டங்கள் உலகின் மிகப்பெரிய மின் கடத்திக் கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்களில் ஒன்றைச் செயல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இப்போது கேள்வி, இந்தியா மேலும் மின்பரிமாற்றக் கோடுகளை அமைக்க வேண்டுமா என்பது அல்ல, கண்டிப்பாக அவற்றை அமைக்க வேண்டும். ஆனால், புதிய மின்பரிமாற்றக் கோடுகள் மட்டும் போதுமா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. அதற்கான பதில், "போதாது" என்பதாகும். இந்தியாவிற்குப் புதிய மற்றும் பெரிய அளவிலான மின் கட்டமைப்பு வசதிகளும், ஏற்கனவே உள்ள கட்டமைப்பை   சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் முறையும் தேவைப்படுகின்றன.

தூய ஆற்றல் கொண்ட அதிவேகப் பாதைகளை உருவாக்குதல்


இந்தியாவில் புதிய மின் இணைப்புகளை அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே இருக்கும் மின்கட்டமைப்பைப் (grid) புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம் 1,000 ஜிகாவாட் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வேகமாகப் பெற முடியும். இந்த வழிகள் நிலப்பற்றாக்குறையைத் தவிர்த்து, தூய்மையான ஆற்றலை பல மடங்கு உதவி செய்கின்றன.


சேமிப்பகம் அதே கம்பிகளிலிருந்து அதிகப் பயனைப் பெற உதவுகிறது. முதலாவதாக, இன்று பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆலைகள் தங்களின் மின் செலுத்து இணைப்புகளை 25% நேரம் மட்டுமே பயன்படுத்துகின்றன. உதாரணமாக, சூரிய மின்சாரம் பகல் நேரத்தில் மின்பரிமாற்றக் கம்பிகளை முழுமையாகப் பயன்படுத்துகிறது. ஆனால் அதே இணைப்பு மாலை நேர உச்சநிலைகளிலும் இரவிலும் பயன்பாடின்றி இருக்கும். இது, நெரிசல் நேரங்களில் (Rush Hour) மட்டுமே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலையைப் போன்றதாகும். சில மணிநேரங்கள் பரபரப்பாகவும், அந்த நாளின் மற்ற நேரங்களில் வெறிச்சோடியும் காணப்படும். இது போன்ற  இடங்களிலேயே மின்கலன் (Battery) சேமிப்பு அமைப்புகளை நிறுவினால், பகல் நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைத்து, மாலை  மற்றும் இரவு நேரங்களிலும் வழங்க முடியும். இதன் மூலம், புதிய மின்பரிமாற்ற வழித்தடங்களையோ (corridors) அல்லது கூடுதல் நிலப்பரப்பையோ உருவாக்காமல், ஏற்கனவே உள்ள மின்பரிமாற்ற இணைப்புகளின் பயன்பாட்டை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்க முடியும். இதன் விளைவாக, கூடுதலாக 400 ஜிகாவாட் அளவிலான தூய்மையான ஆற்றலை (Clean Energy) சமமான அளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தும் திறன் கிடைக்கிறது.


நிலக்கரி வழித்தடங்கள் தூய்மையான மின்சாரத்தையும் கொண்டு செல்ல முடியும். இரண்டாவதாக, நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுடன் இணைக்கப்பட்ட மின் இணைப்புகள் மற்றொரு முக்கிய வாய்ப்பை வழங்குகின்றன. 100 ஜிகாவாட் மொத்தத் திறன் கொண்ட பல அதிக செலவுள்ள அல்லது பழைய நிலக்கரி ஆலைகள், மதிப்புமிக்க மின் பரிமாற்ற இணைப்புகளைக் வைத்து இருந்தாலும், அவை நீண்ட காலத்திற்கு குறைந்த உற்பத்தித் திறனில் இயங்குகின்றன. இந்த நிலையங்களுக்கு அருகில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை அமைப்பது, நிலக்கரி அலகுகள் முழுமையாகச் செயல்படாத நேரங்களில், இந்த முழுமையாகப் பயன்படுத்தப்படாத திறனைத் தூய்மையான மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. பல மணிநேரங்களில், நிலக்கரி ஆலையை இயக்குவதைவிட, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வது செலவு குறைந்ததாக இருக்கிறது. இது, உருவாக்குநர்களுக்கு அரிதான மின்கட்டமைப்பு இணைப்பைப் பெறவும், நிலக்கரி ஆலை உரிமையாளர்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படாத சொத்துக்களிலிருந்து புதிய வருவாயைப் பெறவும் வழிவகுக்கிறது. இந்த அணுகுமுறை, கூடுதலாக 100 ஜிகாவாட் அளவிலான தூய்மையான ஆற்றல் உற்பத்திக்குச் தேவையான திறனை உருவாக்க உதவும்.


தற்போதுள்ள துணை மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டும். மூன்றாவது வாய்ப்பு, தற்போதுள்ள மின்பரிமாற்ற துணை மின் நிலையங்களில் உள்ளது. இவற்றில் பல இடங்களில் புதிய மின் வலையமைப்பு இணைப்புகளை ஏற்படுத்தும் திறன் உள்ளது. இதன் மூலம், மேலும் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) திட்டங்கள் நேரடியாக மின் வலையமைப்புடன் இணைக்கப்பட முடியும். இந்த முனைகளை மின்கல சேமிப்பு அமைப்புகளுடன் (Battery Storage Systems) இணைப்பது, உச்சபட்ச தேவையின்போது கூடுதல் மின்சாரத்தை வழங்கவும், மின் விநியோகத்தை சீராக வைக்கவும் உதவும். இந்த அணுகுமுறையின்  மூலம், தேசிய அளவில், 100 ஜிகாவாட்  கூடுதல் தூய்மையான ஆற்றல் திறனை உருவாக்க முடியும்.


நவீன மின்கம்பிகள் இரண்டு மடங்கு மின்சாரத்தை கடத்தும் திறன் கொண்டவையாக உள்ளன. நான்காவதாக, இந்தியாவின் மின்கட்டமைப்பின் பெரும்பகுதி, வெப்பத்தால் தொய்வடைந்து மின் ஓட்டத்தைத் தடுக்கும் பழைய கம்பிகள் அல்லது கடத்திகளையே பயன்படுத்துகிறது. அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் குறைந்த தொய்வுள்ள கடத்திகளால் மாற்றுவதன் மூலம், அதே கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களில் மின் பரிமாற்றத் திறனை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். அதே வழித்தடங்களையும் பயன்படுத்தி மின்சார பரிமாற்றத் திறனை இருமடங்காக உயர்த்த முடியும். இது, ஒரே ரயில் பாதையில் அதிக சரக்குகளை இழுத்துச் செல்லும் வகையில் ரயிலின் இயந்திரங்களை மேம்படுத்துவது போன்றதாகும். புதிய நிலம் தேவையில்லை. மேம்பட்ட தொழில்நுட்பம் மட்டும் போதுமானது. இந்த கூடுதல் திறன், மின்சார சேமிப்பு மற்றும் பகிரப்பட்ட பரிமாற்ற இணைப்புகள் மூலம் கிடைக்கும் தூய்மையான மின்சார சக்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க உதவும். இதன் மூலம், தற்போதுள்ள பரிமாற்றக் கட்டமைப்பிலேயே 1,000 ஜிகாவாட்க்கு மேற்பட்ட தூய்மையான மின்சாரத்தை பரிமாறும் திறனை உருவாக்க முடியும். இதனால் இன்றைய மின்வழித்தடங்கள், எதிர்காலத்தின் தூய்மையான ஆற்றல் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைகளாக (clean-energy superhighways) மாறும்.


ஒரு விரைவான பாதை


முக்கியமாக, இந்த தீர்வுகளை ஆண்டுகள் அல்ல, சில மாதங்களுக்குள்ளேயே செயல்படுத்த முடியும். புதிய மின் பரிமாற்ற வழித்தடங்களுக்கு (Transmission Corridors) தேவையான நிலம், அனுமதிகள் மற்றும் பல்வேறு ஒப்புதல்கள் இதற்கு குறைவாகவே தேவைப்படும். இவை உடனடியாக மின்வலையில் உள்ள சிக்கல்களை குறைத்து, பயன்படுத்தப்படாமல் இருக்கும் தூய்மையான மின்சக்தியை இணைக்கவும், புதிய மின்கம்பிகள் அமைக்கப்படும் வரை புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் முன்னேற்றமடையாவும் உதவும். மேலும், இதுபோன்ற திட்டங்கள் மின்கட்டமைப்பின் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு, மின்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான சராசரி செலவையும் குறைக்கின்றன.


புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கணிசமான நிலம் தேவைப்பட்டாலும், தேவையான நிலத்தைப் பெறுவது  கடினமாகி வரும் நிலையில், ஏற்கனவே ஓரளவு நிலமும் மின்கட்டமைப்பு அணுகலும் உள்ள நிலக்கரி ஆலைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்கள் அல்லது துணை மின் நிலையங்களுக்கு அருகில் அவற்றை அமைப்பது, நடைமுறைக்கு ஏற்றதாகவும் குறைந்த முரண்பாடுகளைக் கொண்ட ஒரு பாதையை வழங்குகிறது.

இந்தியா புதிய மின் பரிமாற்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், அதைத் திறமையாக உருவாக்க வேண்டும். மேம்பட்ட கடத்திகளைக் கொண்டு, சேமிப்பு வசதியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மின்பாதையானது, குறைந்த கூடுதல் செலவில் நான்கு முதல் ஐந்து மடங்கிற்கு மேலான தூய்மையான மின்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் $100 பில்லியன்க்கும் அதிகமான செலவில் தனது மின் கட்டமைப்பை 40% விரிவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாலும், இது உலகின் மிகப்பெரிய விரிவாக்கங்களில் ஒன்றாகத் திகழ்வதாலும், ஒவ்வொரு கிலோமீட்டர் பகுதியும் தொடக்கத்திலிருந்தே எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வலுவானதாக அமைக்கப்பட வேண்டும். 

இந்தியாவுக்கு இந்த இரண்டு அணுகுமுறைகளும் தேவைப்படும். தற்போதுள்ள மின்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இன்றைய சிக்கல்களுக்கு  விரைவான தீர்வை அளிக்கும் அதே வேளையில், அடுத்த பத்தாண்டுகளில் தேவைப்படும் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்க, மேம்பட்ட மற்றும் அதிகத் திறன் கொண்ட புதிய மின்பரிமாற்ற உள்கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கும்.


வெற்றியைத் தீர்மானிக்கும் கொள்கை மாற்றங்கள்


ஒருங்கிணைந்த தேசிய மின் கட்டமைப்பு மற்றும் பல்வேறு வளர்ந்த நாடுகளைவிட வேகமாக மின் பரிமாற்றத் திறனை அதிகரித்த சாதனைப் பதிவு போன்ற கட்டமைப்புரீதியான அமைப்புகளை  இந்தியா ஏற்கனவே கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின் கட்டமைப்புடன் இணைக்க முடியாத நிலை, ஆற்றல் மாற்றத்தில் கடுமையான தடையாக உருவெடுத்துள்ளது. இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டைத் வேகப்படுத்தும் போது, ​​தொலை நோக்கு பார்வை கொண்ட கொள்கையின் மூலம் சிக்கலைத் தவிர்க்க முடியும்.


மூன்று மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. முதலாவதாக, சூரிய மின் நிலையங்கள் தங்களின் மின் கட்டமைப்பு அணுகலைச் சேமிப்பு அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் விதிகளை இந்தியாவின் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இந்த அணுகுமுறை இப்போது மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், ஒழுங்குமுறை ஆணையங்களும் பயன்பாட்டு நிறுவனங்களும் இதைத் தங்களின் திட்டமிடல் மற்றும் கொள்முதல் முடிவுகளில் தீவிரமாக இணைத்துக்கொள்ள வேண்டும்.





இரண்டாவதாக, தற்போதைய ஒழுங்குமுறை மற்றும் கொள்முதல் விதிமுறைகள், ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருந்தாலும், புதிய மின் பரிமாற்றப் பாதைகளை (Transmission Corridors) உருவாக்காமல், ஏற்கனவே உள்ள அமைப்பின் திறனை அதிகரித்து, முழுமையான நன்மைகளை வழங்கும் மேம்பட்ட மின் பரிமாற்றத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.


மூன்றாவதாக, பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மண்டலங்கள்  மற்றும் மின் பரிமாற்றத்திற்கு ஏற்ற வழித்தடங்கள் (Optimised Transmission Corridors) ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவது முக்கியமானதாகும். இது இடத் தேர்வு, திட்டமிடல் மற்றும் காலநிர்ணயம் தொடர்பான சவால்களை குறைப்பதோடு, குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் பெரிய அளவிலான தூய்மையான மின்சாரத்தை வேகமாக பரிமாறறம் செய்ய உதவும்.


இந்த நடவடிக்கைகள், எஃகு, அலுமினியம், சிமெண்டு, தரவு மையங்கள் இரசாயனத் தொழில்கள் போன்ற துறைகள், நம்பகமான 24×7 மின்சாரத்தை நிலையான விலையில் அதிகமாக ஆராய்ந்து வரும் சூழலில், குறைந்த செலவிலான தூய்மையான மின்சார உற்பத்தியில் இந்தியா தனது முன்னிலை நிலையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். எதிர்காலப் பாதை தெளிவாக உள்ளது: இந்தியாவுக்குத் தேவையான அனைத்து மின் பரிமாற்ற வசதிகளையும் உருவாக்குவதோடு, ஏற்கனவே உள்ள ஒவ்வொரு மின் பரிமாற்றக் கோட்டிலிருந்தும் அதிகபட்ச பயனைப் பெற வேண்டும். மின்வலையமைப்பு இனி வெறும் பின்னணி உள்கட்டமைப்பு அல்ல. அது இந்தியாவின் அடுத்த வளர்ச்சிக்கு இயந்திரமாகவும், குறைந்த செலவிலும் அதிக உற்பத்தித் திறனுடனும் கூடிய எதிர்காலத்திற்க்கான அடித்தளமாகவும் விளங்குகிறது.


அமோல் ஃபட்கே, அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோல்ட்மேன் பொதுக் கொள்கைப் பள்ளியில் பேராசிரியராக உள்ளார். நிகித் அப்யங்கர், அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோல்ட்மேன் பொதுக் கொள்கைப் பள்ளியில் பேராசிரியராக உள்ளார்.


Original link:

 India’s cheapest power is here, the grid must catch up.


Share:

அணுசக்தி விவகாரம் முதல் ஹார்முஸ் நீரிணை வரை, அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் - பஷீர் அலி அப்பாஸ்

 ஒரு இறுதி உடன்படிக்கையானது ஈரானின் அணுசக்தித் திட்டம் (Nuclear programme) சார்ந்த விஷயங்களை மட்டும் கையாள்வதோடு நின்றுவிடாமல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். இது ஈரானை மேலும் வலுவான நாடாக மாற்றக்கூடும், இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் தாக்கங்கள் ஏற்படும்.


ஜூன் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், அமெரிக்காவும் ஈரானும் ஓர் இறுதி உடன்படிக்கையை நோக்கிய 60 நாட்களுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தைப் போலல்லாமல், இந்த 2026-ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமானது, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பரந்த அளவிலான அமெரிக்க-ஈரான் அரசியல் உறவு ஆகிய இரண்டையுமே இறுதி உடன்படிக்கை கையாளும் என்பதைக் காட்டுகிறது. இந்த விதிமுறைகள் ஈரானுக்கு அதிக பொருளாதார நிவாரணங்களையும், அதன் வழக்கமான ராணுவத் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான புவிசார் அரசியல் அங்கீகாரத்தையும் வழங்குவதன் மூலம், 1979-ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்லாமியக் குடியரசை எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடும். இது மேற்கு ஆசியாவின் அதிகாரச் சமநிலையை கணிசமாக மாற்றியமைக்கலாம்.



இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள், இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கடமைகள் மற்றும் பல மாத கால மோதல்களுக்குப் பிறகு அவர்களின் தற்போதைய நிலைப்ப்பாட்டைப் பற்றி இது என்ன உணர்த்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.


பிரிவு 1: லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல்


இது போரை முடிவுக்குக் கொண்டு வரும் மிக முக்கியமான பிரிவாகும். ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி போர்நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், லெபனானை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தத்துடன் இணைக்கிறது.


இந்த 60 நாட்கள் தற்காலிகக் போர்நிறுத்தக் காலம், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. போர்நிறுத்த மீறல்களுக்கு ஈரான் அளிக்கும் பதிலடியானது, ஜூன் மாதம் 14-ஆம் தேதி எடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்து அமையலாம். பெய்ரூட் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்திருந்த போதிலும், இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. அதற்குப் பதிலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டிருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவது உள்ளிட்ட அமெரிக்காவின் சலுகைகளை ஈரான் ஏற்றுக்கொண்டது. இது ஈரானின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றத்தைக் காட்டக்கூடும்.


பிரிவு 2: உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை 


இந்த பிரிவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவென்றால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய காரணத்தை இல்லாமலாக்குகிறது. ஈரானின் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு "உதவி வரப்போகிறது" என்று டிரம்ப் கூறிய ஜனவரி மாதம் 13-ஆம் தேதிக்கும், போர் தொடங்கிய பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவின் நியாயப்படுத்துதல் என்பது ஈரானின் ஆட்சி மாற்றம் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தடுத்தல் ஆகிய இரண்டிற்கும் இடையே மாறி மாறி நகர்ந்தது. எனவே, அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது குறித்து ஈரானுக்கு நீண்டகாலமாக இருக்கும் கவலைகளுடன் சேர்த்து, இந்த குறிப்பிட்ட பிரிவு தெஹ்ரானுக்கு (Tehran) மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.

பிரிவு 3: இருதரப்பினரும் ஒப்புக்கொண்டால், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக வழங்கப்படும் இந்த 60 நாட்கள் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கு அனுமதிக்கும் ஒரு முக்கியமான விதிமுறை இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.


பிரிவு 4: அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை நீக்குதல்


ஜூன் மாதம் 16-ஆம் தேதிக்குள், அமெரிக்க கடற்படை தனது கடல்வழி முற்றுகையை பெருமளவிற்கு முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. நடைமுறையில், முழுமையாகப் பின்வாங்குவது என்பது ஹார்முஸ் ஜலசந்தியில் எஞ்சியிருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல் குழுக்களை அகற்றுவதைக் குறிக்கும்.


பிரிவு 5: ஹார்முஸ் வழியாகப் போக்குவரத்து


ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி தடையின்றி செல்ல ஈரான் அனுமதிக்கும். இருப்பினும், இந்த ஜலசந்தி பகுதியில் எதிர்கால நிர்வாகத்தை ஈரானும் ஓமனும் இணைந்து தீர்மானிக்க அனுமதிக்கும் நிபந்தனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த ஜலசந்தி பகுதி போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பக்கூடாது என்ற ஈரானின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அமைகிறது.


மான்ட்ரியக்ஸ் ஒப்பந்தத்தின்கீழ் (Montreux Convention) டார்டனல்ஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்தி பகுதிகளுக்கு துருக்கி பயன்படுத்துவதைப் போன்ற ஒரு கட்டண முறையை, ஈரானும் ஓமனும் ஒரு கூட்டு கட்டமைப்பை உருவாக்க முடியும். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20-25% மற்றும் உலகளாவிய எரிவாயு போக்குவரத்தில் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடந்து செல்வதால், இதன் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருவாய் 11-13 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பிரிவு 6: ஈரானின் மறுசீரமைப்பிற்கான 300 பில்லியன் டாலர் திட்டம் 


இந்த மறுசீரமைப்புத் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டத்திற்கு (Joint Comprehensive Plan of Action (JCPOA)) வழிவகுத்த முந்தைய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்த ஒப்பந்தத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சம் ஆகும்.


இந்த நிதி, ஈரான் உலகளாவிய பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் வணிக நில முதலீட்டாளரும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதருமான ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


பிரிவு 7: இறுதி ஒப்பந்தத்தில் தடைகள் நீக்கம் 


இந்தப் பிரிவு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளைப் பாதிக்கும் பல்வேறு தடைகளைக் கையாள்வது பற்றிக் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். ‘Wall Street Journal’ பத்திரிகையின் மதிப்பீட்டின்படி, இந்தத் தடைகள் நீக்கப்பட்டால் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான தடைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சார்ந்த தடைகள் மற்றும் பிற பொருளாதார தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகிய மூன்று வகையான தடைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் அமெரிக்கா ஆராய்ந்து  தீர்வுகாண வேண்டியிருக்கும்.



பிரிவு 8: ஈரான் அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது உருவாக்கவோ கூடாது


ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யாது என்ற அதன் உறுதிப்பாட்டை இந்தப் பிரிவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் ஈரான் 2003-ஆம் ஆண்டு முதலே பராமரித்து வருகிறது.


ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டில் நடான்ஸ் (Natanz), ஃபர்டோ (Fordow), அராக் (Arak) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம், ஈரானின் அணுசக்தி திறனைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் ஏற்கனவே பெருமளவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.


2013-15-ஆம் ஆண்டின் கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம் (JCPOA) பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்போது இருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஈரான் இப்போது 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பைக் கொண்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஈரானிடம் இது இல்லை. மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறொரு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இது அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.


ராஜதந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக் கட்டாயப்படுத்தியுள்ளதால், இப்போது அனைவரின் கவனமும் 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களின் மீது திரும்பும் என்கின்றனர்.


2018-ஆம் ஆண்டில் அமெரிக்காவை கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்ட (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து டொனால்ட் டிரம்ப் விலக்கியதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் முடிவடைந்தபோது ஈரான் தனது எஞ்சிய கடப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும், பிற சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளிலிருந்தும் படிப்படியாக வெளியேறியது. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)) ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தற்போதைய தகவல்களையும் தொடர் கண்காணிப்புத் தரவுகளையும் முற்றிலும் இழந்துவிட்டதாகத் தெரிவித்தது.


பிரிவு 9: இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை தற்போதைய நிலையே நீடித்தல் 


இந்தப்பிரிவு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் உள்ள 14 பிரிவுகளில் ஒன்றுகூட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic missiles) குறித்தோ அல்லது பிராந்தியத்தில் உள்ள அரசு சாரா ஆயுதக் குழுக்களுடன் ஈரானுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தோ நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. ஜூலை மாதம் 17-ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப், ஈரானின் அண்டை நாடுகளிடமும் இது போன்ற ஆயுதங்கள் இருப்பதால், ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திறன்களைத் தொடர்ந்து தன்வசமே வைத்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். இது, 2018-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியபோது கூறிய காரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மற்றொரு குறிப்பிடத்தக்கக் கொள்கை மாற்றத்தைக் காட்டுகிறது.


பிரிவு 10 (தடைகளில் இருந்து தற்காலிக விலக்கு அளிப்பது ) என்பது, பிரிவு 7 (பொருளாதாரத் தடைகளை முற்றிலும் நீக்குவது) முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை பயன்படுத்தப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடாகச் செயல்படுகிறது.


பிரிவு 11: முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்கிறது 


ஈரான் நாட்டிற்குச் சொந்தமான 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 12 பில்லியன் டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு, ஈரானின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஈரானிய அதிபர் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இந்த பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதில் கத்தார் (Qatar) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 


ஒப்பந்தத்தின் பிரிவு 12, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வழிவகை செய்கிறது. 60 நாட்கள் என்ற கால அவகாசத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டு நீட்டிப்பதற்கு அனுமதிக்கும் பிரிவு 3-ஐ செயல்படுத்துவதற்கு இந்தக் கண்காணிப்பு மிகவும் அவசியமானதாகும்.


அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் காலஅவகாசம் தேவைப்படலாம் என்பதால், திறம்பட கண்காணிப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். இத்தகைய கால நீட்டிப்பானது, ஈரான் நாடு ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைத்திருக்கும் காலத்தையும், அமெரிக்க ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவையும் நீட்டிக்கும். இது ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு (Tehran) உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த 60 நாள் காலஅவகாசம் முழுவதும் இரு தரப்பினரும் தொடர்ந்து பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்படுவதை உறுதிசெய்ய இந்த கண்காணிப்பு வழிமுறை நிச்சயம் உதவும்.


60 நாட்கள் காலஅவகாசத்தின் போது இருதரப்பினரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய முன்னுரிமைகளின் வரிசைமுறையை பிரிவு 13 உருவாக்குகிறது.


இறுதியாக, பிரிவு 14 மிகவும் கவனிக்கத்தக்கது; ஏனெனில் இந்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (United Nations Security Council (UNSC)) தீர்மானம் மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கோருகிறது.              ஐக்கிய நாடுகள் சபையையும், அது அமெரிக்காவின் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் டிரம்ப் நிர்வாகம் அடிக்கடி விமர்சித்து வந்த போதிலும், இந்த ஒப்புதலைக் கோருவது குறிப்பிடத்தக்கது.


கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம் (JCPOA) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (United Nations Security Council (UNSC)) தீர்மானம் 2231-ன் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஐநா சாசனத்தின் (UN Charter) 25-ஆவது பிரிவின் மூலம் இந்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிப்பதன் கட்டாயத் தன்மை வலுப்படுத்தப்பட்டது. கொண்டுவரப்படவிருக்கும் புதிய தீர்மானமும் இதே போன்ற ஒரு அணுகுமுறையைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், அமெரிக்கா 2018-ஆம் ஆண்டில் தன்னிச்சையாக இதிலிருந்து விலகுவதைத் தடுப்பதில் ஐநா பாதுகாப்புச் சபைக்கு இருந்த வரம்புக்குட்பட்ட திறனே வெளிப்பட்டது. இதன் காரணமாக, ஈரான்  இந்த முறை கூடுதல் பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : A point-by-point breakdown of US-Iran MoU, from nuclear issue to Strait of Hormuz -Bashir Ali Abbas

Share:

பருவமழையின் தீவிரம் ஏன் குறைந்துவிட்டது? அடுத்தகட்ட மழைப்பொழிவு எப்போது எதிர்பார்க்கப்படுகிறது? - அஞ்சலி மாரார்

 ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வங்காள விரிகுடா பகுதியைவிட அரபிக்கடல் பகுதியில் வீசும் பருவக்காற்று இந்த ஆண்டு மிகவும் மெதுவாகவே தீவிரமடைவது போல் தெரிகிறது.


தென்மேற்குப் பருவமழை காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதன் செயல்பாடு இதுவரை இயல்பான அளவைவிடக் குறைவாகவே உள்ளது. ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 17-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் மழைப்பொழிவின் அளவு சராசரியைவிட 38% குறைவாகவே இருந்தது.


ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பொழியும் தென்மேற்குப் பருவமழை, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையளவில் 70%-க்கும் அதிகமான மழையைக் கொண்டுவருகிறது. இந்தப் பருவமழை மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அந்தமான் கடல் பகுதியில் தொடங்கி, பொதுவாக            ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்குள் கேரளா வழியாக இந்தியாவின் முக்கிய நிலப்பகுதிக்குள் நுழைகிறது.


அதன் பிறகு, பருவமழை வெவ்வேறு கட்டங்களாக முன்னேறி, ஜூன் மாத இறுதிக்குள் வட உத்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்றடைகிறது. மேலும், ஜூலை மாதம் 15-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் சென்றடைகிறது. இருப்பினும், பருவமழை முன்கூட்டியோ அல்லது சரியான நேரத்திலோ தொடங்குவது என்பது, நல்ல மழையையோ அல்லது நாடு முழுவதும் அது சரியான அளவில் பரவிப் பொழிவதையோ உறுதிப்படுத்துவதில்லை.  அதேபோல, மழை தாமதமாகத் தொடங்கினாலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதுவரை பருவமழையின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது?


இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது, மேலும் அது அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு தீவிரம் அடைந்தது. இது கர்நாடகா மற்றும் கோவா உள்ளிட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு முன்கூட்டியே நகர்ந்தது. ஆனால், வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, லட்சத்தீவு மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதிலும் ஜூன் மாத தொடக்கத்தில் மழையின் தீவிரம் அதிகரித்தது, ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. தென்மேற்கு இந்தியப் பகுதி ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரை 8% கூடுதல் மழைப்பொழிவைப் பெற்றுள்ளது.


மஹாராஷ்டிராவில் பருவமழை எப்போது தொடங்கும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. கடைசியாக ஜூன் மாதம் 8-ஆம் தேதி தெற்கு கொங்கன் (South Konkan) மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் மட்டுமே பருவமழை தீவிரமடைந்தது.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ஆண்டு வங்காள விரிகுடா கிளையுடன் ஒப்பிடுகையில், அரபிக்கடல் கிளையின் பருவமழையின் தீவிரம் மிகவும் மெதுவாக உள்ளது. வங்காள விரிகுடா கிளையானது ஜூன் மாதம் 17 நிலவரப்படி கோராபுட் (Koraput), புல்பானி (Phulbani), ராஞ்சி (Ranchi), ஜமுய் (Jamui) மற்றும் முசாபர்பூர் (Muzaffarpur) ஆகிய பகுதிகள் வரை பரவியுள்ளது.


ஜூன் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு, பருவமழையின் தீவிரம் முக்கியமாகக் கிழக்கு இந்தியப் பகுதிகளை நோக்கியே நீடித்தது. ஜூன் மாதம் 15-ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் மீதமுள்ள பகுதிகளுக்கும் பருவமழை தொடர்ந்தது.


மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை ஏன் வேகம் குறைந்துள்ளது?

முதலாவதாக, இந்த பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று பலவீனமடைந்துள்ளது. இதன் விளைவாக, மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலுள்ள உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது.


அதேநேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வீசும் வறண்ட பலத்த காற்று இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வறண்ட காற்றானது பலவீனமாக இருக்கும் பருவக்காற்றுக்கு ஒரு தடையாக மாறி, அதைத் தடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், அரபிக்கடலில் இருந்து பருவக்காற்றை முன்னோக்கித் தள்ளும் வலுவான உந்துதலும் கிடைக்கவில்லை. பொதுவாக, இதுபோன்ற உந்துதல்கள்தான் அதிக ஈரப்பதத்தைக் கொண்டுவந்து, பரவலான மழையைத் தந்து, பருவமழை மேலும் முன்னேறிச் செல்ல உதவுகின்றன.


இரண்டாவதாக, மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மேலே நிலநடுக்கோட்டைக் கடந்து வீசும் காற்றுகளும் பலவீனமடைந்துள்ளன. இந்தக் காற்றுகளும் ஈரப்பதத்தைக் கடத்துவதற்கும், தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் முன்னேறுவதற்கும் பெரிதும் உதவக்கூடியவை ஆகும்.


மூன்றாவதாக, பருவமழை தொடர்ந்து பெய்வதற்கும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறிச் செல்வதற்கும் மற்ற வானிலை அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அரபிக்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த அழுத்தப் பகுதிகள், சூறாவளி சுழற்சிகள் மற்றும் மேற்கு கடற்கரையை ஒட்டி உருவாகும் கடலோரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக இந்த வானிலை அமைப்புகள் பருவமழை முன்னேற உதவும், ஆனால் தற்போதைய சூழலில் இவை எதுவும் உருவாகவில்லை.


இறுதியாக, உள்ளூர் வானிலை நிலவரங்களைத் தவிர, தென்மேற்கு பருவமழையானது சாதகமான உலகளாவிய வானிலை வடிவங்களையும் சார்ந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு வானிலை அமைப்புதான் 'மேடன்-ஜூலியன் அலைவு' (Madden–Julian Oscillation (MJO)) ஆகும். இது மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி கிழக்கு நோக்கி நகரும் ஒரு காற்று மற்றும் மேகங்களின் கூட்டமைப்பாகும். இந்த 'மேடன்-ஜூலியன் அலைவு' (MJO) சாதகமான கட்டத்தில் இருக்கும்போது, அது இந்தியாவில் மழையளவை அதிகரிக்கும். ஆனால், தற்போது இது நமக்குச் சாதகமான கட்டத்தில் இல்லை என்கின்றனர்.



இந்தக் காரணங்கள் அனைத்தும் சேர்ந்து, பருவமழையின் அரபிக்கடல் கிளையின் வேகத்தைக் குறைத்துள்ளன. இதனால் மகாராஷ்டிர மாநிலம் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல பகுதிகளில் இயல்பான அளவைவிட 60% முதல் 99% வரையிலும், சில இடங்களில் 99%-க்கும் அதிகமாகவும் மழைக் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


அடுத்ததாகப் பருவமழை எப்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது?


ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மகாராஷ்டிராவில் பருவமழையின் தீவிரம் குறித்த எந்தவொரு புதிய தகவலையும் வெளியிடவில்லை. இது பருவமழை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை மட்டுமல்லாமல், அது எப்போது அடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற நிச்சயமற்றத் தன்மையையும் காட்டுகிறது.


ஜூன் மாதம் 17-ஆம் தேதி, மும்பை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD Mumbai) வெளியிட்ட தகவலின்படி, வானிலை மாதிரிகள் ஜூன் மாதம் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் பருவமழையின் தீவிரம் குறித்து எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பருவமழையானது தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகளுக்குள் அடுத்ததாக முன்னேறிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : Why has monsoon progress stalled, and when can rains be expected next? -Anjali Marar

Share: