இந்தியாவின் அடுத்த சமூகப் பாதுகாப்பு என்பது பணமல்ல, பராமரிப்பே (care) ஆகும். -அர்ஷி ஆதில், ஷோபித் மிஸ்ரா

 சமூகப் பாதுகாப்பை வடிவமைப்பதற்கு பராமரிப்பும், பரிவும் தேவை.


இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பானது, அதன் பெரிய அளவின் அடிப்படையில் மூலமே அடிக்கடி விவரிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, பணம், ஓய்வூதியம் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக நாம் பெரிய தளங்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், தனியாக வாழும், சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நாள்பட்ட நோய் மற்றும் குறைந்த நடமாடும் திறனால் போராடும் முதியவர்களின் அன்றாட யதார்த்தங்கள் என்ற ஒரு மறைமுகமான நெருக்கடியை இந்த அமைப்புகள் இன்னும் முழுமையாகக் கையாளவில்லை.


இந்தியாவில் மக்கள்தொகையானது வயதானவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2022-ல் 149 மில்லியனிலிருந்து 2050-க்குள் 347 மில்லியனாக உயரும். இது மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். ஓய்வூதியம் பசியைத் தடுக்கலாம். ஆனால், அதனால் தனிமையைப் போக்கவோ, மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவோ அல்லது ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல உதவவோ முடியாது. இந்தியாவில் வயது முதிர்வு அதிகரித்து வருவதால், சமூகப் பாதுகாப்பு என்பது பணப் பரிமாற்றங்களைத் தாண்டி, நீண்ட காலமாக ஒரு தனிப்பட்ட குடும்பப் பொறுப்பாகக் கருதப்பட்டு வந்த பராமரிப்பையும் உள்ளடக்கியதாக மாற வேண்டும்.


முதுமையை நல்ல முறையில் எதிர்கொள்ளும் சமூகங்கள், மருத்துவமனைகளையோ அல்லது குடும்பங்களையோ மட்டும் சார்ந்திருப்பதில்லை என்பதை உலகளாவிய சான்றுகள் காட்டுகின்றன. அவை ஒரு வலுவான சமூக ஆதரவு அமைப்பையும் உருவாக்குகின்றன. உலக சுகாதார அமைப்பு இதை நீண்டகாலப் பராமரிப்பு என்று அழைக்கிறது. இது வெறும் முதியோர் இல்லங்களை மட்டுமல்ல, முதியவர்கள் தங்கள் செயல்பாட்டுத் திறனையும் கண்ணியத்தையும் பேணிக்கொள்ள உதவும் வீடு மற்றும் சமூக ஆதரவின் ஒரு தொடர்ச்சியாகும்.


இந்தியாவில் இன்னும் பெரிய அளவிலான இத்தகைய அமைப்பு இல்லை. ஆனால், அதற்குச் சமமான சக்திவாய்ந்த ஒன்று அந்நாட்டில் உள்ளது. அது, ஏற்கனவே கடைக்கோடி மக்களைச் சென்றடையும் பெண்களின் கூட்டு நிறுவனங்களின் நாடு தழுவிய வலையமைப்பு ஆகும்.

ஒரு புதிய பணிக்கான பரிச்சயமான தளம்


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihoods Mission (NRLM)) கீழ், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான அரசு ஆதரவு நிறுவனங்களில் சுய உதவிக் குழுக்களும் (Self-help groups (SHG)) அடங்கும். இன்று, அவை இந்தியா முழுவதும் 9.2 மில்லியனுக்கும் அதிகமான குழுக்களாக 102 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களை ஒன்றிணைக்கின்றன. அவை நிதி உள்ளடக்கமாக இருந்தாலும், சிறு தொழில் ஊக்குவிப்பாக இருந்தாலும், ஊட்டச்சத்தாக இருந்தாலும் அல்லது அரசுத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதாக இருந்தாலும், அவை நம்பிக்கைக்குரியவையாகவும், உள்ளூரில் வேரூன்றியவையாகவும் மற்றும் இறுதிநிலைச் சேவைகளை வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன.


பராமரிப்பின் மூலம் விடுபட்ட அடுக்குநிலை


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) தனது பணிகளை உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் துப்புரவு ஆகிய துறைகளில் ஏற்கனவே விரிவடைந்துள்ளது. இந்த அமைப்புகள் பலவழிகளில் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து, அரசு சேவைகளை அணுகுவதை எளிதாக்கி, ஆஷாக்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் (Anganwadi workers) போன்ற களப்பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது.


இருப்பினும், தொடர்ச்சியான பராமரிப்பிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அடுக்குநிலை பெருமளவில் இல்லாமல் உள்ளது.


தற்போதைய அமைப்புகள் விழிப்புணர்வு மற்றும் சேவை இணைப்பில் திறம்படச் செயல்படுகின்றன. ஆனால், அவை அவ்வப்போது மட்டுமே செயல்படுகின்றன. வழக்கமான நலம்சார்ந்த விசாரிப்புகள், செயல்பாட்டு நலனைக் கண்காணித்தல் அல்லது தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படும் நபர்களுக்கு இடைவிடாத உதவி போன்ற நீடித்த ஆதரவை அவை வழங்குவதில்லை. தனிமையில் வாழும் அல்லது இடம்பெயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள முதியவர்களிடையே இந்த இடைவெளி குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழல்களில், சேவைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், நிலையான, நம்பிக்கை அடிப்படையிலான ஈடுபாட்டைப் பெறுவதே சவாலாக உள்ளது.


இந்தியா புதிதாக ஒரு அமைப்பை ஆரம்பத்திலிருந்து உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே கட்டமைத்துள்ள அமைப்பை விரிவுபடுத்தினால் போதுமானது.


தற்போதுள்ள அமைப்புகளின் மீது ஒரு பராமரிப்பு அடுக்குநிலையை உருவாக்குதல்


பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்கள் மூலம், உள்ளூர் சுகாதார அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சமூக அடிப்படையிலான முதியோர் பராமரிப்பை வழங்கும் ஒரு புதிய சமூகப் பாதுகாப்பு அடுக்கைநிலையை உருவாக்குவதற்காக, இந்தியா தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கீழ் உள்ள சுய உதவிக் குழு (SHG) தளத்தைப் பயன்படுத்த வேண்டும்.


தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) அதிகாரமானது, அதன் கட்டமைக்கப்பட்ட சமூக நிறுவனங்கள் மற்றும் பணியாளர் குழு அடிப்படையிலான அணுகுமுறையில் அடங்கியுள்ளது. இவை, பெரிய அளவில் வழக்கமான, தொலைதூரப் பகுதிகளில்கூட மக்களுடன் வழக்கமான தொடர்பைச் சாத்தியமாக்குகின்றன. எனவே, ஒரு தனி, இணையான பணியாளர் குழுவை உருவாக்குவது முக்கிய சவால் அல்ல, மாறாக, ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை வலுப்படுத்திப் பயன்படுத்துவதே இலக்காக இருக்க வேண்டும்.


அடிப்படைப் பராமரிப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சமூகப் பணியாளர்களுக்குக் கூடுதல் கருவிகளும், தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்படலாம். பாதிக்கப்படக்கூடிய முதியவர்களைத் தவறாமல் சென்று பார்த்தல், ஆரம்ப நிலையிலேயே அபாயங்களை கண்டறிதல், முதியவர்கள் அரசாங்க நலன்களைப் பெறுவதற்கு உதவுதல் மற்றும் உள்ளூர் சுகாதார சேவை இணைப்புகளை எளிதாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பணியானது மருத்துவப் பணி அல்லாததாகவும், பராமரிப்பில் கவனம் செலுத்துவதாகவும் உள்ளது.


ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஆதரவு பராமரிப்பின் முக்கியப் பகுதிகளாகும். இதை உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் நீர், சுகாதாரம் மற்றும் கழுவுதல் (Food, Nutrition, Health, and WASH(FNHW)) தளத்தில் உள்ளீடும்போது, பராமரிப்பானது ஒரு தனிப்பட்ட தலையீடாக இல்லாமல், ஒரு பரந்த நல்வாழ்வு செயல்திட்டத்தின் பகுதியாக மாறுவதை உறுதி செய்கிறது.


முக்கியமாக, இந்த அணுகுமுறை ஒரு தெளிவான செயல்பாட்டு இடைவெளியை நிரப்புகிறது. சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதில் ஆஷாக்கள் (ASHA), அங்கன்வாடிப் பணியாளர்கள் (Anganwadi workers) மற்றும் துணை செவிலியர்கள் (Auxiliary Nurse Midwife (ANM)) இன்றியமையாதவர்களாக இருந்தாலும், வழக்கமான சமூகநல விசாரணைகள், செயல்பாட்டு உதவிகள் அல்லது நீண்டகாலப் பின்தொடர்தல் போன்ற நீடித்த, மருத்துவப் பணி அல்லாத ஈடுபாட்டிற்காக அவர்கள் கட்டமைக்கப்படவில்லை. இதற்கு மாறாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) சமூக நிறுவனங்கள் காலப்போக்கில் தொடர்ச்சியான ஆதரவை வழங்க மிகவும் பொருத்தமானவை.


முன்னோட்டங்களிலிருந்து விரிவாக்கம் வரை


இந்தியாவில் ஏற்கனவே செயல்படும் முன்னுதாரணங்கள் உள்ளன. புனேவின் விருத்தா மித்ரா மற்றும் கேரளாவின் குடும்பஸ்ரீ போன்ற மாதிரிகள், சமூகம் சார்ந்த முதியோர் பராமரிப்பை ஒழுங்கமைத்து, அதற்குத் திறன்களை அளித்து, வழங்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. அடுத்த கட்டமாக, இதை ஒரு முக்கிய சமூகப் பாதுகாப்புச் செயல்பாடாகக் கருதி, பெரிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்க வேண்டும்.


படிப்படியான, இலக்கு சார்ந்த அணுகுமுறை தொடங்குவதற்கு ஒரு நடைமுறைக்கு உகந்த தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இடம்பெயர்வு அதிகம் நிகழும் மற்றும் தொலைதூரப் பகுதிகளில்தான் மிகப்பெரிய தேவை உள்ளது. இப்பகுதிகளில், முதியவர்கள் தனிமையையும், சேவைகளைப் பெறுவதில் உள்ள வரம்புகளையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய புவியியல் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, தேவை அதிகமாக உள்ள இடங்களில் இந்த மாதிரியைச் சோதித்துப் பார்க்க வழிவகுக்கிறது.


அதேசமயம், கிராமப்புற இந்தியா எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. நிலைமைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. மேலும், இதற்கான கொள்கைகள் இந்த வேறுபாடுகளைப் பிரதிபலிக்க வேண்டும். இந்த அணுகுமுறை உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆதரவு இடைவெளிகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப கட்டமைப்பை உருவாக்கும் வகையில், இந்த அணுகுமுறை உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.


பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு தீர்வு


சுய உதவிக் குழுக்கள் (SHG) மூலம் வழங்கப்படும் சமூகப் பராமரிப்பு அமைப்பு நிலையானது, முதியோர் நலனைத் தாண்டிய பல நன்மைகளை வழங்கமுடியும். அவை,


முதலாவதாக, இது சமூகப் பாதுகாப்பு வலையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை நிரப்புகிறது. ஓய்வூதியங்கள் முதியவர்கள் தங்களின் அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன. இருப்பினும், அன்றாடச் செயல்பாடுகளைப் பாதுகாப்பதில்லை. நடமாட்டம், சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல் அல்லது சேவைகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கான ஆதரவு இல்லாமல், பல முதியவர்கள் திறம்படப் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கின்றனர்.


இரண்டாவதாக, இது உள்ளூர் மட்டத்தில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சுய உதவிக் குழுக்களின் மூலம் பராமரிப்பை முறைப்படுத்துவது, ஊதியம் பெறாத வேலையை பெண்களுக்குப் பயிற்சி பெற்ற, ஊதியம் பெறும் பணிகளாக மாற்றுகிறது. இதன் மூலம் இது ஒரு நலத்திட்டமாக இருப்பது போலவே, வாழ்வாதாரத்திற்கான ஒரு தலையீடாகவும் அமைகிறது.


மூன்றாவதாக, இது சுகாதார அமைப்பின் மீதான தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. பல முதியவர்கள் பின்தொடர் சந்திப்புகளைத் தவறவிடுவதாலோ அல்லது மிகவும் தாமதமாகப் பரிந்துரைக்கப்படுவதாலோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு பணியாளர் குழு, சிகிச்சை முறைகளை முறையாகப் பின்பற்றுவதை மேம்படுத்துகிறது. ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிகிறது மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்கிறது. இது, கடுமையான சிக்கல்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட மிகவும் செலவு குறைந்ததாகும்.


நான்காவதாக, இது தனிமை மற்றும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்கிறது. சமூகத் தனிமை பல முதியவர்களைப் பாதிக்கிறது. மேலும், வழக்கமான சந்திப்புகளும் நலம் விசாரிப்புகளும் அவர்களின் கண்ணியத்தையும், ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் உணர்வையும் மீட்டெடுக்க உதவும். நிதிப் பார்வையில், இந்த மாதிரி சாத்தியமானது. ஏனெனில், இது ஏற்கனவே உள்ள அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், மருத்துவமனை சார்ந்த பராமரிப்புடன் ஒப்பிடும்போது செலவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றன.



நிலைத்தன்மைக்காக வடிவமைத்தல்


இந்த அமைப்பு வெற்றிபெற, பராமரிப்பு ஒரு கூடுதல் அம்சமாக அல்லாமல், ஒரு முக்கியப் பணியாகக் கருதப்பட வேண்டும். இதற்குப் பயிற்சிபெற்ற பணியாளர்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகள், முறையான மேற்பார்வை மற்றும் கணிக்கக்கூடிய ஊதியம் ஆகியவை தேவைப்படுகின்றன. இவற்றை ஆதரிப்பதற்கு தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (NRLM) நன்கு தயாராக உள்ளது. பணியாளர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான பணிச்சுமை, சீரற்ற தரம் மற்றும் ஒருங்கிணைப்புச் சவால்கள் உள்ளிட்ட அபாயங்கள் இருந்தாலும், இதற்கு முன்பும் சிக்கலான தலையீடுகளை விரிவுபடுத்திய ஒரு அமைப்பிற்குள் இவற்றைச் சமாளிக்க முடியும்.


கடைக்கோடி வரை சேவைகள் சென்றடைய முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு என்பது வருமானத்தை மட்டுமல்ல, கண்ணியம், செயல்படும் திறன் மற்றும் நல்வாழ்வையும் பாதுகாப்பதை உறுதி செய்வதே அடுத்த கட்டமாகும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது. இனி செய்ய வேண்டியது, விடுபட்ட பராமரிப்பு அடுக்கைக் கட்டமைப்பது மட்டுமே.


ஆதில், மைக்ரோசேவ் கன்சல்டிங்கில் மூத்த மேலாளராகவும், மிஸ்ரா மூத்த மேலாளராகவும் உள்ளனர்.


Original article: India’s next social protection is care, not cash. -Arshi Aadil, Shobhit Mishra

Share:

பரந்த அதிகாரங்கள்

 தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT rules) தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை அல்ல.


மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, தகவல் தொழில்நுட்ப விதிகளில் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கும் டிஜிட்டல் தளத்தின் மீதான அரசின் ஒழுங்குமுறைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பதற்றத்திற்கு மேலும் ஒரு புதிய களத்தைத் திறந்துள்ளன. இந்த சமீபத்திய வரைவு, அரசின் மேற்பார்வையை வழக்கமான வெளியீட்டாளர்களுக்கு (traditional publishers) அப்பால் விரிவுபடுத்தி, இணையத்தில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான உள்ளடக்கங்களைப் பதிவிடும் சாதாரண பயனர்களையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மாற்றம் நடைமுறையில், இது ஒரு கட்டமைப்பு மாற்றத்தைக் குறிக்கிறது. ஏனெனில், முன்னர் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்திற்கு மட்டுமே, வரையறுக்கப்பட்டிருந்த துறைகளுக்கிடையேயான குழுவானது (Inter-Departmental Committee (IDC)), இப்போது இடைநிலைத் தளங்களில் பயனர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கம் தொடர்பான "விஷயங்களை" ஆராய முடியும். ஒரு உள்ளூர் போராட்டத்தைப் பற்றி விவாதிக்கும் X வலைதளத்தில் உள்ள ஒரு பதிவு, ஒரு கொள்கை முடிவு குறித்த யூடியூப் காணொளி (YouTube video) கருத்துரை அல்லது ஒரு அரசியல் உரையை விமர்சிக்கும் லிங்க்ட்இன் பதிவு (LinkedIn post) ஆகியவை இப்போது "செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள்" என்ற வரம்பிற்குள் வரக்கூடும். இதற்கு அமைச்சகம், தானாக முன்வந்து, உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு "விஷயத்தையும்" துறைகளுக்கிடையேயான குழுவிற்குப் பரிந்துரைக்கலாம். இந்தத் திருத்தத்திற்கான காரணம் கட்டுப்பாடற்றதாகத் தோன்றுகிறது. அதற்கு முறையான புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை, நெறிமுறைக் குறியீட்டின் விதிமீறலை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அத்தகைய பரிந்துரைக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்து கேட்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது மேற்பார்வை செயல்முறையை ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் நிர்வாகத்தால் இயக்கப்படும் செயல்முறையாக திறம்பட மாற்றியமைக்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் பாதுகாப்பான புகலிடப் பாதுகாப்புகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு நிபந்தனையாக அரசாங்கத்தின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்குவதை மாற்றுவதன் மூலம், இந்தத் திருத்தங்கள் ஒரு அதிகாரத்துவம் வாய்ந்த நிலையை அறிமுகப்படுத்துகின்றன. சட்டப் பாதுகாப்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், இடைத்தரகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படத் தூண்டப்படலாம். இது, விதிமீறல்களுக்கு அதிகமாக இணங்குவதற்கும், முன்கூட்டியே உள்ளடக்கங்களை அகற்றுவதற்கும் வழிவகுக்கக்கூடும். இதன் விளைவாக, முறையான தடுப்பு உத்தரவுகளுடன் பொதுவாக தொடர்புடைய நடைமுறைப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு "பின்வாசல்" (backdoor) வழிமுறை உருவாகும் அபாயம் ஏற்படுகிறது.


இருப்பினும், அரசாங்கத்தின் கவலைகள் ஆதாரமற்றவை அல்ல. சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள், வதந்திகள் மற்றும் வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டிவிடும் உள்ளடக்கங்கள் பரவுவது, பொது ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான அச்சுறுத்தல்களும் இதில் அடங்கும். தலையங்கக் கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புணர்வு கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படும் பாரம்பரிய ஊடகங்களைப் போலல்லாமல், தனிப்பட்ட பயனர்கள் நிறுவனரீதியான ஒழுங்குமுறை கட்டுப்பாடு இன்றி செயல்படுகின்றனர். எனவே, ஒழுங்குமுறை அவசியமா என்பதல்ல மையக் கேள்வி, மாறாக, முன்மொழியப்பட்ட கட்டமைப்பு சரியான சமநிலையை ஏற்படுத்துகிறதா என்பதேயாகும். தெளிவான நடைமுறைப் பாதுகாப்புகள் மற்றும் கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள் துல்லியமானவையாக இல்லாதது, குறிப்பாக உண்மையாகவே தீங்கு விளைவிப்பதைவிட அரசியல்ரீதியாக சங்கடமான உள்ளடக்கத்திற்கு எதிராக, பாரபட்சமான செயல்திட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும்.


2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் பல பிரிவுகள் ஏற்கனவே நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அரசு காத்திருப்பது விவேகமானதாக இருக்கும். புதிய மற்றும் பரந்த தன்னிச்சையான அதிகாரங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, அரசு மிகவும் கவனமான அணுகுமுறையைக் கையாளலாம். தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் அமலாக்க வழிமுறைகளை அது வலுப்படுத்தலாம். மேலும், பதிலளிக்கும் நேரத்தை மேம்படுத்துவது, தளங்களின் பொறுப்புடைமையை அதிகரிப்பது மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் முதலீடு செய்வது போன்றவற்றில் ஒரு சீரான அணுகுமுறை அமையலாம்.


Original article: Sweeping powers.

Share:

இந்தியா தனது தேசிய ஆழ்கடல் உயிரினக் காப்பகத்தைப் பெறுகிறது — அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன? -ரோஷ்னி யாதவ்

 இந்தியா தனது தேசிய ஆழ்கடல் உயிரினங்களுக்கான தேசியக் களஞ்சியத்தை (National Repository for Deep-Sea Fauna) அறிவித்துள்ளது. அது என்ன? ஆழ்கடல் என்றால் சரியாக என்ன, அது காலநிலை மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், அது எதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது? அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


தற்போதைய செய்தி :


சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)), கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையத்தின் (Centre for Marine Living Resources & Ecology’s (CMLRE)) “பாவசாகரா” பரிந்துரை மையத்தை, ஆழ்கடல் விலங்கினங்களுக்கான தேசியக் களஞ்சியமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சித் திறன்களில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தச் சூழலில், பாவசாகரா மற்றும் ஆழ்கடல் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.


முக்கியக்  அம்சங்கள்:


1. “பாவசாகரா” பரிந்துரை மையமானது, 2002-ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் (Biological Diversity Act) சட்டவிதிகளின்கீழ், ஆழ்கடல் விலங்கினங்களுக்கான தேசியக் களஞ்சியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் பரந்த ஆழ்கடல் உயிரியல் பாரம்பரியத்தை பாதுகாக்க, ஆய்வுசெய்ய மற்றும் பதிவுசெய்ய ஒரு முக்கிய தேசிய மையமாக இதை உருவாக்குகிறது.


2. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் அவர்களின் கூற்றுப்படி, “‘பாவசாகராவை’ ஒரு தேசியக் களஞ்சியமாக அங்கீகரிப்பது, இந்தியாவின் நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் பல்லுயிர் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு  நடவடிக்கையாகும். ஆழ்கடல் மாதிரிகள் மற்றும் அவற்றின் மரபணு தரவுகளை பாதுகாப்பதன் மூலம், நாம் நமது இயற்கை வரலாற்றை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், எதிர்கால கடல்சார்ந்த  ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆழ்கடலின் மர்மங்களை கண்டறிய பயன்படும் அடிப்படை வளத்தையும் இவை வழங்குகின்றன.

3. தற்போது, ​​“பாவசாகரா” பரிந்துரை மையம், வகைப்பாட்டியல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட மற்றும் புவியியல்ரீதியாகக் குறிக்கப்பட்ட சான்று மாதிரிகளின் விரிவான தொகுப்பைக் கொண்டுள்ள ஒரு முக்கிய அறிவியல் மையமாகச் செயல்படுகிறது.


4. உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின்கீழ், இந்தக் களஞ்சியத்திற்கு பின்வரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன:


திறன் மேம்பாடு (Capacity Building): ஆழ்கடல் வகைப்பாட்டியல் (taxonomy) துறையில் நிபுணத்துவத்தை உருவாக்கி, நிலையான வளர்ச்சிக்கான கடல் அறிவியல் ஐ.நா.-வின் 2021–2030-ஆம் ஆண்டின் பத்தாண்டு இலக்குகளுக்கு ஏற்றவறு உருவாக்க வேண்டும்.


பாதுகாப்பான பராமரிப்பை மேற்கொள்ளுங்கள்: எதிர்கால அறிவியல் பயன்பாட்டிற்காக, டிஎன்ஏ வரிசைமுறைகள் போன்ற முக்கியமான தொடர்புடைய தரவுகளுடன், பிரதிநிதித்துவ உயிரியல் மாதிரிகளைச் சான்று மாதிரிகளாகப் பாதுகாக்க வேண்டும்.


வகை மாதிரிகளைப் பாதுகாத்தல்: இந்தியக் கடல் எல்லைக்குள் கண்டறியப்படும் எந்தவொரு புதிய ஆழ்கடல் உயிரினத்திற்கும் அதிகாரப்பூர்வப் பாதுகாவலராக உருவாக்க வேண்டும்.


5. குறிப்பாக, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE) என்பது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகும். இது இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone (EEZ)) மற்றும் அதை ஒட்டிய ஆழ்கடல்களில் உள்ள கடல்வாழ் உயிரின வளங்களை ஆய்வு செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.


2002-ஆம் ஆண்டு  உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்


2002-ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம், 1992-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் உயிரியல் பல்வகைமை ஒப்பந்தத்தின் (Convention on Biological Diversity (CBD)) நோக்கங்களை நடைமுறைப்படுத்த இந்தியா எடுத்த முயற்சியின் விளைவாக உருவானது. இந்தியா இந்த ஒப்பந்தத்தை 1994-ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது. இந்தச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், அதன் வளங்களை பயன்படுத்துதல் மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை ஒரு நியாயமான செயல்முறையின் மூலம் நேர்மையாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும்.


ஆழ்கடல் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன?


1. ஆழ்கடல் என்பது பூமியின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உயிரின மண்டலமாகும். இது பொதுவாக, ஆழ்கடல் சமவெளிகள் முதல் ஆழ்கடல் சமவெளிகள் மற்றும் ஆழ்கடல் தரைகள் வரை 200 மீட்டருக்கும் கீழே உள்ள கடல் பகுதிகளைக் குறிக்கிறது.


2. இது பூமியின் வாழக்கூடிய பரப்பளவின் 90–95% ஆகும். சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை முக்கியத்துவத்தைப் பற்றிய நமது புரிதலை அதிகரித்துள்ளன.


3. குறைந்த வெப்பநிலை, கடுமையான சுற்றுப்புற அழுத்தங்கள், போதிய சூரிய ஒளி இல்லாத சூழல் மற்றும் குறைந்த வளங்கள் போன்ற நிலைமைகள் இருந்தபோதிலும், ஆழ்கடல் பல்வேறு தனித்துவமான சூழல் அமைப்புகளில் செழிப்பான உயிரின வளத்தை ஆதரிக்கிறது.


4. மனித வாழ்வு உட்பட, பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் ஆழ்கடலைச் சார்ந்துள்ளன. ஆழ்கடல் நீரோட்டங்கள் பூமி முழுவதும் வெப்பத்தை மறுவிநியோகம் செய்து, உலகளாவிய காலநிலை அமைப்புகளை இயக்குகின்றன. குளிர்ந்த மேலேறும் நீர்கள் (upwelling waters) கடல் மேற்பரப்பில் நீரை  மீண்டும் வழங்கி, முக்கியமான கடல் உணவுச் சங்கிலிகளை ஆதரிக்கின்றன.


5. ஆழ்கடல் பவளம் மற்றும் கடற்பஞ்சு சமூகங்கள், மருந்துகள், அழகு சாதனங்கள் மற்றும் பிற வணிகப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் மற்றும் வேதிப்பொருட்களின் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத வளங்களாக உள்ளன. உதாரணமாக, COVID-19 பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்த பயன்பட்ட புகழ்பெற்ற PCR பரிசோதனை, ஆழ்கடல் வெப்பநீரூற்றுகளில் காணப்படும் ஒரு நுண்ணுயிரியில் இருந்து பெறப்பட்ட நொதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.



ஆழ்கடல் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?


1. பல பாதிக்கப்படக்கூடிய ஆழ்கடல் வாழ்விடங்கள் மற்றும் உயிரினக் குழுக்கள் மீன்பிடித் தொழிலால் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கனிம வளங்கள் மற்றும் உயிர்வளங்களின் அதிகப்படியான சுரண்டலால் அவை அச்சறுத்தல்களை சந்தித்து வருகின்றன.


2. ஆழ்கடல் சுரங்கத் தொழில் தொடங்குவதால் ஆழ்கடல் அச்சறுத்தல்களை சந்தித்து வருகின்றது. பல ஆழ்கடல் உயிரினங்கள் மெதுவாக வளரக்கூடியவை, தாமதமாக இனப்பெருக்கம் செய்பவை மற்றும் சீர்குலைவுகளிலிருந்து மீண்டுவரும் திறன் குறைவாக உள்ளவை. இதனால், அவை தொழில்துறை நடவடிக்கைகளால் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன.


ஆழ்கடல் சுரங்கத் தொழில் (Deep-sea mining (DSM)) என்பது என்ன?


இது ஆழ்கடல் ஆழமான பகுதியில் இருந்து கனிமச் சேர்மங்களை அகற்றும் செயல்முறையாகும். இதில் இலக்காகக் கொள்ளப்படும் கனிமங்களில் நிக்கல், கோபால்ட், செம்பு மற்றும் மாங்கனீஸ் போன்ற உலோகங்கள் உள்ளன.


கடல் சூழலைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான முயற்சிகள்


1. ஐக்கிய நாடுகள் கடல்சட்ட ஒப்பந்தம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)): 1982-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1994-ல் நடைமுறைக்கு வந்த ஐக்கிய நாடுகள் கடல்சட்ட ஒப்பந்தம், "கடல்கள் மற்றும் பெருங்கடல்களை அமைதியான முறையில் பயன்படுத்துதல், வளங்களை சமமாகவும் திறமையாகவும் பயன்படுத்துதல், உயிர்வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடல் சூழலை ஆய்வு செய்து பாதுகாப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்கியது. பகுதி VII, பிரிவு 2 "ஆழ்கடல்களின் உயிர்வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை, அனைத்து நாடுகளும் தத்தம் குடிமக்களுக்காக எடுக்கவோ அல்லது இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரிவு 117 கூறுகிறது.


2. ஐ.நா. மீன்வள ஒப்பந்தம் (UN Fish Stocks Agreement) : 1995-ஆம் ஆண்டில், கடற்பரப்பு மீன்வளங்கள் மற்றும் அதிக தூரம் இடம்பெயரும் மீன்வளங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான ஐக்கிய நாடுகள் கடல்சட்ட ஒப்பந்த (UNCLOS) விதிகளைச் செயல்படுத்துவதற்கான ஐ.நா. ஒப்பந்தம் (ஐ.நா. மீன்வள ஒப்பந்தம், அல்லது UNFSA என அழைக்கப்படுகிறது) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 11 டிசம்பர் 2001 அன்று நடைமுறைக்கு வந்தது. மேலும், ஆழ்கடல் மீன்வளங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், அவை சார்ந்திருக்கும் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் ஆணைகளைக் கொண்ட பிராந்திய மீன்வள மேலாண்மை அமைப்புகளை (regional fisheries management organizations (RFMOs)) உருவாக்க வழிவகுத்தது.


3. உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கை (Convention on Biological Diversity (CBD)): 1992-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கை, 29 டிசம்பர் 1993 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன: அவை உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல்; உயிரியல் பன்முகத்தன்மையின் கூறுகளை நீடித்த முறையில் பயன்படுத்துதல்; மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும். இந்த உடன்படிக்கையின் 3-வது பிரிவு, "தங்கள் அதிகார வரம்பு அல்லது கட்டுப்பாட்டிற்குள் உள்ள செயல்பாடுகள், பிற நாடுகளின் அல்லது தேசிய அதிகார வரம்பிற்கு  உள்ள பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு  பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு மற்ற நாடுகளுக்கு உள்ளது" என்று கூறுகிறது.


4. நீடித்த வளர்ச்சி இலக்குகள்: 2015-ல், ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, ​​17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs)) உருவாக்கப்பட்டன. இதில் நிலையான வளர்ச்சி இலக்கு 14, கடல்கள் மற்றும் கடல் வளங்களை பாதுகாத்து நிலையான முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிலையான வளர்ச்சி இலக்கு 12 நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை உறுதி செய்யும்; நிலையான வளர்ச்சி இலக்குG 8 பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பிரிக்க முயற்சிகளை மேற்கொள்கிறது.

5. ஆழ்கடல் ஒப்பந்தம்: மார்ச் 2023-ல் செய்யப்பட்ட  இந்த ஒப்பந்தம், எந்தவொரு நாட்டின் தேசிய அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள கடல்களை மட்டுமே கையாள்கிறது. ஒவ்வொரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே உள்ள பகுதிகள் (ஒரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலம் என்பது அதன் கடற்கரையின் அடிமட்டத்திலிருந்து கடலுக்குள் 200 கடல் மைல்கள் வரை நீட்டிக்கப்படுகிறது) ஆழ்கடல் அல்லது சர்வதேச நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆழ்கடல் ஒப்பந்தம் நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: அவை, 


➤ பாதுகாக்கப்பட்ட காடுகள் அல்லது வனவிலங்குப் பகுதிகளைப் போலவே, கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் (MPA) வரையறுத்தல்;


➤ கடல்சார் மரபணு வளங்களின் நீடித்த பயன்பாடு மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மைகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளுதல்;


➤ கடல்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை மேற்கொள்ளும் நடைமுறையைத் தொடங்குதல் மற்றும்


➤ திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்திகள் ஆகும்.


குறிப்பாக, இந்தியா 2024 செப்டம்பர் 25 அன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு (BBNJ) ஒப்பந்தம் அல்லது ஆழ்கடல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


2025 செப்டம்பர் 19 அன்று, ஆழ்கடல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரத் தேவையான 60 நாடுகளின் ஒப்புதல்கள் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியது. 120 நாள் காலக்கெடுவிற்குப் பிறகு, ஆழ்கடல் ஒப்பந்தம் 2026 ஜனவரி 17 அன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. மேலும், தற்போது இது சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகத் திகழ்கிறது. உலகளாவிய கடல் பாதுகாப்பை வலுப்படுத்த, அரசாங்கங்கள் இப்போது அமலாக்கத்தை விரைவுபடுத்தி, அதனை அங்கீகரிக்கும் செயல்முறையையும் அவை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


Original article: India gets its National Repository for Deep-Sea Fauna — what is it, and why does it matter? -Roshni Yadav

Share:

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டம் -எஸ் ஒய் குரைஷி

 இது வெறும் தொழில்நுட்பரீதியான விஷயம் மட்டுமல்ல; இது ஒரு அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழியின் நம்பகத்தன்மை குறித்த விஷயமாகும்.


இந்திய அரசு, 2023-ஆம் ஆண்டின் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் (Women’s Reservation Act, 2023) திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் கூடுதல் கூட்டத்தொடர்களை நடத்த முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள், ஒரு நேர்மறையான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் தற்போது நடைமுறை செயலாக்கத்திற்கான அடிப்படையாக அமைகிறது. 


கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தால் சாதிக்கமுடியாத ஒரு விஷயத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது சாத்தியமாக்க உள்ளார். மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு (106-வது திருத்தம்) சட்டம், 2023 (Constitution (106th Amendment) Act, 2023), ஒரு மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் சுமார் 26 ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், தற்போது இது நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு வலுவான அரசியல் உறுதியைக் காட்டுகிறது.


ஆனால் ஒவ்வொரு சீர்திருத்தமும் ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது: அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்?


தற்போதுள்ள ஆலோசனைகளின்படி, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து சுமார் 816-இடங்களாக அதிகரிக்கப்படலாம் என்கின்றனர். அதாவது கூடுதலாக 273-இடங்கள் சேர்க்கப்படும் என்கின்றனர். இந்தக் கூடுதல் இடங்கள் அனைத்தையும் பெண்களுக்காக ஒதுக்கினால், தற்போதுள்ள உறுப்பினர்களை மாற்றாமலேயே, விரிவாக்கப்பட்ட அவையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. 


இருப்பினும், ஒரு அடிப்படைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது: பெண்கள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவார்கள்?


புதிய நாடாளுமன்ற இடங்களுக்குத் தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்தத் தொகுதிகளை தொகுதி மறுவரையறை (Delimitation) மூலமாக மட்டுமே உருவாக்க முடியும். சட்டப்படி, தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்பாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் மிக வேகமாக நடந்தாலும்கூட, தரவுகளை வெளியிடுதல், ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) அமைத்தல் மற்றும் அதன் பணிகளை முடித்தல் ஆகியவற்றுக்கு பல ஆண்டுகள் ஆகும். கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தத் தொகுதி மறுவரையறைப் பணிகள் 2032 அல்லது 2033-ஆம் ஆண்டிற்குள்கூட முடிவடைய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


இது ஒரு அடிப்படை சிக்கலுக்கு வழிவகுக்கிறது: தொகுதிகள்  மறுசீரமைக்கப்படாமல் தேர்தல்களை நடத்தமுடியாது என்றும் அதேபோல், தொகுதி மறுவரையறை செய்யப்படாமல், இடஒதுக்கீடு முறையைச் செயல்படுத்துவதற்கான முறையான தேர்தல் செயல்திட்டதை உருவாக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. 


இதற்கிடையில் ஒரு அரசியலமைப்புரீதியான சிக்கலும் உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடியும்வரை, மாநிலங்களுக்கு இடையிலான மக்களவை இடங்களின் எண்ணிக்கையைப் பகிர்ந்தளிப்பதில் மாற்றம் செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு முன்னதாகவே இந்த முறையில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு மீண்டும் ஒரு அரசியலமைப்பு திருத்தம் (Constitutional Amendment) தேவைப்படும் என்கின்றனர். அவ்வாறு செய்வது, வட இந்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவப் பங்கீடு குறித்த உணர்வுப்பூர்வமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை பராமரிக்கப்படும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதாச்சார அடிப்படையில் (Proportional) இருக்கும் என்றும் உறுதியளிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய உள்துறை அமைச்சர் முயன்றுள்ளார். இதைவிடச் சிறந்த மாற்றுவழி இல்லாத நிலையில், இது நியாயமானதாகத் தோன்றுகிறது. இருப்பினும், 'விகிதாச்சாரம்' என்பது அந்தந்த மாநிலங்களின் விகிதத்தை மட்டுமே அப்படியே வைத்திருக்கும், பிரதிநிதித்துவத்தை அல்ல என்றும் கூறப்படுகிறது. பெரிய மாநிலங்கள் இன்னும் அதிகமான இடங்களை பெறும், மேலும் நாடாளுமன்ற முடிவுகள் விகிதாச்சாரத்தைவிட எண்ணிக்கையையே அதிகம் சார்ந்திருக்கின்றன. அப்படியிருந்தும், இதுவரை சிறந்த மாற்றுத் திட்டம் எதுவும் முன்மொழியப்படாததால், தற்போதைக்கு இதுவே ஏற்றுக்கொள்ளக் கூடிய  சமரசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.


ஆனால், இந்தப் பிரச்சினையைத் தற்காலிகமாகப் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: தொகுதிகள் ஒதுக்கப்படாமல், தேர்தலில் பெண்கள் எவ்வாறு போட்டியிட முடியும்?


முன்னேறிச் செல்வதற்கு ஒரு வழி இருக்கிறது.


ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட தொகுதியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. பல ஜனநாயக நாடுகளில் தொகுதி வாரியான தேர்தல் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ (Proportional Representation) முறை ஆகிய இரண்டும் கலந்த ஒரு முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய அமைப்புகளில், சில உறுப்பினர்கள் தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; மற்றவர்கள் அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியா இந்த மாதிரியின் ஒரு குறிப்பிட்ட, தற்காலிகமான வடிவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 


தற்போதுள்ள 543 தொகுதிகள் மாற்றமின்றி அப்படியே இருக்கலாம், அவற்றுக்கான தேர்தல்களும் வழக்கம் போலவே நடைபெறலாம் என்கின்றனர். இதற்கு இணையாக, பெண்களுக்கு மட்டுமே எனத் தனியாகச் சில இடங்களை உருவாக்கலாம். இந்த இடங்கள் குறிப்பிட்ட தொகுதிகளோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணி கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் இந்த இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.


கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், ஆளுங்கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணி இடங்களைப் பெறும், மீதமுள்ள இடங்களை இதர கட்சிகள் பெறும் என்றும் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கூட்டணிக்குள்ளும், அந்தந்தக் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.


இந்த அணுகுமுறை, அரசியல் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில், பிரதிநிதித்துவம் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதை உறுதி செய்கிறது. இதன் மூலம் எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ அநீதியான முறையில் நடத்தப்பட வாய்ப்பில்லை என்கின்றனர். 


தேர்தல் முடிந்த பிறகு, ஒவ்வொரு கட்சியும் அல்லது கூட்டணியும் தாங்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடங்களுக்கு, முன்னரே அறிவிக்கப்பட்ட பட்டியலிலிருந்து பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நடைமுறையானது தேர்தல் செயல்பாட்டில் நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.


இந்த அணுகுமுறை மிக முக்கியமான சிக்கலுக்குத் தீர்வாக அமைகிறது. இதன்படி, தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் என்கின்றனர். மேலும், இதற்காகப் புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது.


இந்த முறையானது வேறு சில நன்மைகளையும் கொண்டுள்ளது. இது வாக்காளர்களின் வாக்குச் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், மக்களின் உண்மையான விருப்பத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. மேலும், அதிகச் செலவு பிடிக்கும் தேர்தல் முறைகளால் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை இந்த முறையானது குறைக்க உதவுகிறது. உண்மையில், இந்த முறையினால் அரசுக்குக் கூடுதல் செலவு எதுவும் ஏற்படாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


இடஒதுக்கீடு என்பது பெண்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம் மட்டுமே தவிர, அது அவர்களுக்கான அதிகபட்ச எல்லை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மட்டுமின்றி, பொதுத் தொகுதிகளிலும் தாராளமாகப் போட்டியிட்டு வெற்றி பெறமுடியும்; அவ்வாறு பெண்கள் பொதுத் தொகுதிகளில் பெறும் வெற்றிகளுடன், இந்த இடஒதுக்கீடு தொகுதிகளும் கூடுதல் வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.


புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 888 உறுப்பினர்கள் வரை அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இதற்குமுன் இல்லாத ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, தற்போது அதற்கான உள்கட்டமைப்பும் வசதிகளும் முழுமையாகத் தயாராக உள்ளன. இதற்கான அரசியல் துணிச்சலும், நிறுவனரீதியான தயார்நிலையும் இருக்கும் பட்சத்தில், இதனை நடைமுறைப்படுத்துவதை இன்னும் பத்தாண்டுகளுக்குத் தள்ளிப்போடுவதற்கான காரணங்கள் எதுவுமில்லை என்கின்றனர்.


இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், தொகுதிகள் மறுவரையறை செய்யும் வரை காத்திருக்காமல், 2029-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்கின்றனர். உண்மையில், நாம் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு விதியும் கட்டாயப்படுத்தவில்லை. விகிதாசார ஒதுக்கீட்டிற்கு (Proportional allocation) நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன், பெண்களுக்காக கூடுதல் இடங்களை உருவாக்கி, சமீபத்திய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அவற்றை நிரப்ப முடியும் என்றும் அரசியலமைப்புரீதியாக ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டால், அதை நிறைவேற்ற அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


இந்தத் திட்டமானது ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. சமீபத்திய பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் தற்போதைய மக்களவையில் கூடுதல் இடங்களை உருவாக்க முடியும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலத்தைப் பாதிக்காமல், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உடனடியாக அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்குத் தேவைப்படுவது மற்றொரு தேர்தல் அல்ல, மாறாக ஒரு தீர்க்கமான முடிவு மட்டுமே என்கின்றனர். 


இதற்கானத் தீர்வுக்கு ஒரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மட்டுமே போதுமானதாகும். இந்திய நாடாளுமன்றத்தால் விரைந்து செயல்பட முடியும் என்பதற்கு ஏற்கனவே பல முன்னுதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, பெண்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமையை வழங்குவதற்காக நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், அந்த உரிமை காலதாமதமின்றி பெண்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவும் மீண்டும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


இந்த நடைமுறை நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதனை ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டவுடன், தொகுதிகளை மீண்டும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்; தேவைப்படும் பட்சத்தில், வழக்கமான முறையில் இடஒதுக்கீட்டுத் தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்துகொள்ளலாம் என்கின்றனர்.


தற்போதைய இந்தப் பிரச்சனை ஒரு தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல் அல்ல, மாறாக அரசியலமைப்பு வழங்கிய வாக்குறுதியின் நம்பகத்தன்மை பற்றியதாகும். இதற்கான கட்டமைப்பு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. அதை நாம் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.


குரைஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். இவர் தெற்காசியாவின் அரசியல் போராட்டங்களைப் பற்றி விவரிக்கும் "Democracy’s Heartland: Inside the Battle for Power in South Asia" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


Original article: A roadmap to fast-track reservation for women in Parliament. -S Y Quraishi

Share:

உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) தடுமாறிக் கொண்டிருக்கிறது. -பிரபாஷ் ரஞ்சன்

 உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14-வது அமைச்சர்கள் மாநாடு, விதிகள் அடிப்படையிலான வர்த்தக அமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வர்த்தகப் பன்முகத்தன்மையானது, அதன் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா ஒரு வற்புறுத்தும் ஒருதலைப்பட்ச அணுகுமுறைப் போக்கும், மிகவும் விரும்பப்படும் தேசம் (most-favoured nation (MFN)) போன்ற அடிப்படை விதிகளை பலவீனப்படுத்தச் செய்யும் முயற்சிகளும் மற்றும் இந்த நடவடிக்கைகள் முழு அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில், சமீபத்தில் கேமரூனின் யவுண்டேவில் (மார்ச் 2026) நிறைவடைந்த உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14-வது அமைச்சர்கள் மாநாடு (Ministerial Conference (MC14)), மேலாதிக்கப் போக்குகளைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடிப்படையிலான உலகளாவிய வர்த்தக ஒழுங்கின் முக்கியத்துவம் குறித்து உலக சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் என்று பலர் எதிர்பார்த்தனர்.


இருப்பினும், 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) இந்த சவாலை எதிர்கொள்ளத் தவறிவிட்டது. மேலும், இந்த மாநாடு பெரும் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், 166 உறுப்பினர்களைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பு, எதிர்காலப் பணிகளை கோடிட்டுக் காட்டும் ஒரு அடிப்படை அமைச்சர்கள் மட்டத்திலான பிரகடனத்தை வெளியிடுவதில்கூட ஒருமித்த கருத்தை நிறைவேற்றத் தவறியது கவலையளிக்கிறது. இந்தக் குறைபாடுகளை மறைக்கும் விதமாக, உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர், 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14) சில வரைவு முடிவுகளை உள்ளடக்கிய ஒரு யவுண்டே தொகுப்பைத் (Yaoundé package) தயாரித்துள்ளது என்றும், இதன்பொருளானது, இன்னும் இறுதி செய்யப்படாத முடிவுகள், வரும் மாதங்களில் ஜெனீவாவில் விவாதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.


இரண்டு தற்காலிகத் தடை உத்தரவுகளின் கதை


இரண்டு தற்காலிகத் தடைகள் குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிகழ்வாக 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) வரலாற்றில் இடம்பிடிக்கும். இதில் முதலாவதாக, மின்னணு வர்த்தகப் பரிவர்த்தனைகள் மீதான சுங்க வரிகள் (customs duties) ஆகும். 1998 முதல், டிஜிட்டல் வர்த்தகப் பரிமாற்றங்களைத் தடையின்றி வைத்திருக்க, மின்னணு வர்த்தகப் பரிவர்த்தனைகள் மீது சுங்க வரிகளை விதிக்க வேண்டாம் என உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்தத் தற்காலிகத் தடை, அது தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14), தற்காலிகத் தடையை நீட்டிப்பது குறித்து உறுப்பு நாடுகளால் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை. இதனால், அந்தத் தடை மார்ச் 31 அன்று காலாவதியானது.


தற்போது, நாடுகள் டிஜிட்டல் வர்த்தகப் பரிமாற்றங்கள்மீது சுங்க வரிகளை விதிக்க சுதந்திரம் பெற்றுள்ளன. இருப்பினும், வரும் மாதங்களில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச் சபை இந்த விவகாரம் குறித்து மீண்டும் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வளரும் நாடுகளுக்குத் தங்கள் வருவாயைப் அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும் என்றாலும், நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு இது ஒரு சுமையாக அமையும். மின்னணு வர்த்தகத் தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிகழ்ந்தது, உலக வர்த்தக அமைப்பின் 66 உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட மின்னணு வர்த்தக ஒப்பந்தமாகும் (e-commerce agreement (ECA)) ஆகும். இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் வர்த்தகத்தின் மீதான சுங்க வரிகளைத் தடை செய்கிறது.


உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிப்புத்தகத்தில் (rulebook) இன்னும் இடம்பெறாமலும், கையொப்பமிட்ட உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இரண்டு தனித்தனி சட்டக் கட்டமைப்புகளை உருவாக்கும். ஒன்று, டிஜிட்டல் வர்த்தகத்தின் மீது சுங்க வரிகளை (tariffs on digital trade) அனுமதிக்கும் உலக வர்த்தக அமைப்பு (WTO), மற்றொன்று, அதை அனுமதிக்காத மின்னணு வர்த்தக ஒப்பந்தம் (e-commerce agreement (ECA)) ஆகும்.


இரண்டாவது தடை உத்தரவு 1995 முதல் அமலில் உள்ளது. இது உலக வர்த்தக அமைப்பின், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள்-டிரிப்ஸ் (Trade-Related Aspects of Intellectual Property Rights(TRIPS)) ஒப்பந்தத்தின் கீழ் விதிமீறல் அல்லாத புகார்களைத் தடுத்து நிறுத்தியது. உலக வர்த்தக அமைப்பு, சட்ட மீறல்களுக்காக மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவையாக இருந்தாலும், அவை மற்றொரு நாட்டின் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளைச் செயலிழக்கச் செய்யும்போதும் நாடுகள் புகார்களைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது.


பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக வளரும் நாடுகள் இயற்றும் சட்டங்கள், வளர்ந்த நாடுகளின் அறிவுசார் சொத்துரிமைகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் பலன்களைக் குறைக்கின்றன என்று குற்றம் சாட்டி, அவர்களிடமிருந்து புகார்களைப் பதிவு செய்ய முடிந்தாலும், அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை கடந்தகால அனுபவம் காட்டுகிறது. உலக வர்த்தக அமைப்பில் (WTO) பொருட்கள் வர்த்தகம் தொடர்பான 10 விதிமீறல் அல்லாத புகார்களும் தோல்வியடைந்ததே இதற்குச் சான்றாகும்.





பன்முகப் புதுமை முயற்சிகள் (Plurilateral innovation)


14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14), 166 நாடுகளில் 129 நாடுகளின் ஆதரவுடன், பலதரப்பு முதலீட்டு வளர்ச்சி வசதி (plurilateral Investment Facilitation for Development (IFD)) ஒப்பந்தத்தை உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தின் இணைப்பு 4-ல் இணைப்பது என்பது எளிதில் அடையக்கூடிய ஒரு இலக்காக இருந்தது. இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக அது நிறைவேறவில்லை. உலக வர்த்தக அமைப்பின் சட்டத் தொகுப்பில் பலதரப்பு ஒப்பந்தங்களை இணைப்பதற்கான சட்டப் பாதுகாப்புகள் இல்லாதது உட்பட பல காரணங்களுக்காக, இந்தியா பலதரப்பு முதலீட்டு வளர்ச்சி வசதியை (IFD) இணைப்பதை எதிர்த்தது.


உலக வர்த்தக அமைப்பின் சட்டக் கட்டமைப்பில் புதிதாகச் சேர்க்கப்படும் பன்முக ஒப்பந்தங்கள், அனைவருக்கும் திறந்ததாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். முதலீட்டு வளர்ச்சி வசதி (IFD) ஒப்பந்தத்தை உள்ளடக்கத் தவறியது, உலக வர்த்தக அமைப்பின் சட்ட நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஏனெனில், 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கான விதிகளை வகுப்பதில் இவ்வமைப்பு தற்போது பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.


எதிர்காலத்திற்கான செயல் திட்டம் இல்லை


உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தங்களுக்கான தெளிவான செயல் திட்டத்தை 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) வழங்கத் தவறிவிட்டது. உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு அமைப்பில், முடங்கிப்போன மேல்முறையீட்டுச் செயல்பாட்டை மீண்டும் செயல்படுத்துவது போன்ற முக்கியப் பிரச்சினைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, மிகவும் விரும்பப்படும் நாடு (MFN) மற்றும் சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறை போன்ற முக்கியக் கொள்கைகளைச் சீர்குலைக்க மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.


வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் அதையே தொடர்ந்து செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள் என்றொரு பொதுவான கூற்று உண்டு. வர்த்தகப் பன்முகத்தன்மை எப்போதெல்லாம் மந்தமடைகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன என்பதை வர்த்தகப் பன்முகத்தன்மையின் வரலாறு நிரூபிக்கிறது. 1970-களின் முற்பகுதியில், சுங்கவரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்த (General Agreement on Tariffs and Trade (GATT)) பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது இது நிகழ்ந்தது. இது, 1974-ம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 ஆனது கடுமையான நடவடிக்கைகள் இயற்றப்படுவதற்கு வழிவகுத்தது. நியாயமற்றதாகக் கருதப்படும் வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க இந்த விதிமுறை அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது. நாம் தற்போது இதேபோன்ற ஒரு சூழ்நிலையைக் காண்கிறோம். ஆனால் இம்முறை காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமலும், மிக அதிக பழிவாங்கும் உணர்வுடனும் இது நிகழ்கிறது. 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14) ஏற்படும் ஒரு பின்னடைவு இந்தப் போக்குகளை மேலும் மோசமாக்கும்.


மேலும், 14-வது அமைச்சர்கள் மாநாட்டின் (MC14) தோல்வியானது, உலக வர்த்தக அமைப்புக்கு வெளியே உள்ள நாடுகள் புதிய வர்த்தக விதிகளை உருவாக்கும் போக்கை வேகப்படுத்தும். உலக வர்த்தக அமைப்பின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்க, புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அவசியம். உலக வர்த்தக அமைப்புக்குள் பன்முக ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கும் மற்றும் ஏற்றுகொள்ளுவதற்கும் தேவையான சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இதை அடைவதற்கு ஒரு புதுமையான அணுகுமுறையும், வர்த்தகப் பன்முகத்தன்மைக்கு அசைக்க முடியாத அரசியல் அர்ப்பணிப்பும் தேவைப்படும்.


பிரபாஷ் ரஞ்சன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் பேராசிரியராகவும், ஆராய்ச்சித் துணைத் தலைவராகவும் உள்ளார்.


Original article: The World Trade Organization is flailing. -Prabhash Ranjan

Share: