இந்தியாவின் அடுத்த சமூகப் பாதுகாப்பு என்பது பணமல்ல, பராமரிப்பே (care) ஆகும். -அர்ஷி ஆதில், ஷோபித் மிஸ்ரா

 சமூகப் பாதுகாப்பை வடிவமைப்பதற்கு பராமரிப்பும், பரிவும் தேவை.


இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பானது, அதன் பெரிய அளவின் அடிப்படையில் மூலமே அடிக்கடி விவரிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, பணம், ஓய்வூதியம் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக நாம் பெரிய தளங்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், தனியாக வாழும், சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நாள்பட்ட நோய் மற்றும் குறைந்த நடமாடும் திறனால் போராடும் முதியவர்களின் அன்றாட யதார்த்தங்கள் என்ற ஒரு மறைமுகமான நெருக்கடியை இந்த அமைப்புகள் இன்னும் முழுமையாகக் கையாளவில்லை.


இந்தியாவில் மக்கள்தொகையானது வயதானவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2022-ல் 149 மில்லியனிலிருந்து 2050-க்குள் 347 மில்லியனாக உயரும். இது மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். ஓய்வூதியம் பசியைத் தடுக்கலாம். ஆனால், அதனால் தனிமையைப் போக்கவோ, மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவோ அல்லது ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல உதவவோ முடியாது. இந்தியாவில் வயது முதிர்வு அதிகரித்து வருவதால், சமூகப் பாதுகாப்பு என்பது பணப் பரிமாற்றங்களைத் தாண்டி, நீண்ட காலமாக ஒரு தனிப்பட்ட குடும்பப் பொறுப்பாகக் கருதப்பட்டு வந்த பராமரிப்பையும் உள்ளடக்கியதாக மாற வேண்டும்.


முதுமையை நல்ல முறையில் எதிர்கொள்ளும் சமூகங்கள், மருத்துவமனைகளையோ அல்லது குடும்பங்களையோ மட்டும் சார்ந்திருப்பதில்லை என்பதை உலகளாவிய சான்றுகள் காட்டுகின்றன. அவை ஒரு வலுவான சமூக ஆதரவு அமைப்பையும் உருவாக்குகின்றன. உலக சுகாதார அமைப்பு இதை நீண்டகாலப் பராமரிப்பு என்று அழைக்கிறது. இது வெறும் முதியோர் இல்லங்களை மட்டுமல்ல, முதியவர்கள் தங்கள் செயல்பாட்டுத் திறனையும் கண்ணியத்தையும் பேணிக்கொள்ள உதவும் வீடு மற்றும் சமூக ஆதரவின் ஒரு தொடர்ச்சியாகும்.


இந்தியாவில் இன்னும் பெரிய அளவிலான இத்தகைய அமைப்பு இல்லை. ஆனால், அதற்குச் சமமான சக்திவாய்ந்த ஒன்று அந்நாட்டில் உள்ளது. அது, ஏற்கனவே கடைக்கோடி மக்களைச் சென்றடையும் பெண்களின் கூட்டு நிறுவனங்களின் நாடு தழுவிய வலையமைப்பு ஆகும்.

ஒரு புதிய பணிக்கான பரிச்சயமான தளம்


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihoods Mission (NRLM)) கீழ், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான அரசு ஆதரவு நிறுவனங்களில் சுய உதவிக் குழுக்களும் (Self-help groups (SHG)) அடங்கும். இன்று, அவை இந்தியா முழுவதும் 9.2 மில்லியனுக்கும் அதிகமான குழுக்களாக 102 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களை ஒன்றிணைக்கின்றன. அவை நிதி உள்ளடக்கமாக இருந்தாலும், சிறு தொழில் ஊக்குவிப்பாக இருந்தாலும், ஊட்டச்சத்தாக இருந்தாலும் அல்லது அரசுத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதாக இருந்தாலும், அவை நம்பிக்கைக்குரியவையாகவும், உள்ளூரில் வேரூன்றியவையாகவும் மற்றும் இறுதிநிலைச் சேவைகளை வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன.


பராமரிப்பின் மூலம் விடுபட்ட அடுக்குநிலை


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) தனது பணிகளை உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் துப்புரவு ஆகிய துறைகளில் ஏற்கனவே விரிவடைந்துள்ளது. இந்த அமைப்புகள் பலவழிகளில் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து, அரசு சேவைகளை அணுகுவதை எளிதாக்கி, ஆஷாக்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் (Anganwadi workers) போன்ற களப்பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது.


இருப்பினும், தொடர்ச்சியான பராமரிப்பிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அடுக்குநிலை பெருமளவில் இல்லாமல் உள்ளது.


தற்போதைய அமைப்புகள் விழிப்புணர்வு மற்றும் சேவை இணைப்பில் திறம்படச் செயல்படுகின்றன. ஆனால், அவை அவ்வப்போது மட்டுமே செயல்படுகின்றன. வழக்கமான நலம்சார்ந்த விசாரிப்புகள், செயல்பாட்டு நலனைக் கண்காணித்தல் அல்லது தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படும் நபர்களுக்கு இடைவிடாத உதவி போன்ற நீடித்த ஆதரவை அவை வழங்குவதில்லை. தனிமையில் வாழும் அல்லது இடம்பெயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள முதியவர்களிடையே இந்த இடைவெளி குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழல்களில், சேவைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், நிலையான, நம்பிக்கை அடிப்படையிலான ஈடுபாட்டைப் பெறுவதே சவாலாக உள்ளது.


இந்தியா புதிதாக ஒரு அமைப்பை ஆரம்பத்திலிருந்து உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே கட்டமைத்துள்ள அமைப்பை விரிவுபடுத்தினால் போதுமானது.


தற்போதுள்ள அமைப்புகளின் மீது ஒரு பராமரிப்பு அடுக்குநிலையை உருவாக்குதல்


பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்கள் மூலம், உள்ளூர் சுகாதார அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சமூக அடிப்படையிலான முதியோர் பராமரிப்பை வழங்கும் ஒரு புதிய சமூகப் பாதுகாப்பு அடுக்கைநிலையை உருவாக்குவதற்காக, இந்தியா தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கீழ் உள்ள சுய உதவிக் குழு (SHG) தளத்தைப் பயன்படுத்த வேண்டும்.


தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) அதிகாரமானது, அதன் கட்டமைக்கப்பட்ட சமூக நிறுவனங்கள் மற்றும் பணியாளர் குழு அடிப்படையிலான அணுகுமுறையில் அடங்கியுள்ளது. இவை, பெரிய அளவில் வழக்கமான, தொலைதூரப் பகுதிகளில்கூட மக்களுடன் வழக்கமான தொடர்பைச் சாத்தியமாக்குகின்றன. எனவே, ஒரு தனி, இணையான பணியாளர் குழுவை உருவாக்குவது முக்கிய சவால் அல்ல, மாறாக, ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை வலுப்படுத்திப் பயன்படுத்துவதே இலக்காக இருக்க வேண்டும்.


அடிப்படைப் பராமரிப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சமூகப் பணியாளர்களுக்குக் கூடுதல் கருவிகளும், தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்படலாம். பாதிக்கப்படக்கூடிய முதியவர்களைத் தவறாமல் சென்று பார்த்தல், ஆரம்ப நிலையிலேயே அபாயங்களை கண்டறிதல், முதியவர்கள் அரசாங்க நலன்களைப் பெறுவதற்கு உதவுதல் மற்றும் உள்ளூர் சுகாதார சேவை இணைப்புகளை எளிதாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பணியானது மருத்துவப் பணி அல்லாததாகவும், பராமரிப்பில் கவனம் செலுத்துவதாகவும் உள்ளது.


ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஆதரவு பராமரிப்பின் முக்கியப் பகுதிகளாகும். இதை உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் நீர், சுகாதாரம் மற்றும் கழுவுதல் (Food, Nutrition, Health, and WASH(FNHW)) தளத்தில் உள்ளீடும்போது, பராமரிப்பானது ஒரு தனிப்பட்ட தலையீடாக இல்லாமல், ஒரு பரந்த நல்வாழ்வு செயல்திட்டத்தின் பகுதியாக மாறுவதை உறுதி செய்கிறது.


முக்கியமாக, இந்த அணுகுமுறை ஒரு தெளிவான செயல்பாட்டு இடைவெளியை நிரப்புகிறது. சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதில் ஆஷாக்கள் (ASHA), அங்கன்வாடிப் பணியாளர்கள் (Anganwadi workers) மற்றும் துணை செவிலியர்கள் (Auxiliary Nurse Midwife (ANM)) இன்றியமையாதவர்களாக இருந்தாலும், வழக்கமான சமூகநல விசாரணைகள், செயல்பாட்டு உதவிகள் அல்லது நீண்டகாலப் பின்தொடர்தல் போன்ற நீடித்த, மருத்துவப் பணி அல்லாத ஈடுபாட்டிற்காக அவர்கள் கட்டமைக்கப்படவில்லை. இதற்கு மாறாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) சமூக நிறுவனங்கள் காலப்போக்கில் தொடர்ச்சியான ஆதரவை வழங்க மிகவும் பொருத்தமானவை.


முன்னோட்டங்களிலிருந்து விரிவாக்கம் வரை


இந்தியாவில் ஏற்கனவே செயல்படும் முன்னுதாரணங்கள் உள்ளன. புனேவின் விருத்தா மித்ரா மற்றும் கேரளாவின் குடும்பஸ்ரீ போன்ற மாதிரிகள், சமூகம் சார்ந்த முதியோர் பராமரிப்பை ஒழுங்கமைத்து, அதற்குத் திறன்களை அளித்து, வழங்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. அடுத்த கட்டமாக, இதை ஒரு முக்கிய சமூகப் பாதுகாப்புச் செயல்பாடாகக் கருதி, பெரிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்க வேண்டும்.


படிப்படியான, இலக்கு சார்ந்த அணுகுமுறை தொடங்குவதற்கு ஒரு நடைமுறைக்கு உகந்த தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இடம்பெயர்வு அதிகம் நிகழும் மற்றும் தொலைதூரப் பகுதிகளில்தான் மிகப்பெரிய தேவை உள்ளது. இப்பகுதிகளில், முதியவர்கள் தனிமையையும், சேவைகளைப் பெறுவதில் உள்ள வரம்புகளையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய புவியியல் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, தேவை அதிகமாக உள்ள இடங்களில் இந்த மாதிரியைச் சோதித்துப் பார்க்க வழிவகுக்கிறது.


அதேசமயம், கிராமப்புற இந்தியா எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. நிலைமைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. மேலும், இதற்கான கொள்கைகள் இந்த வேறுபாடுகளைப் பிரதிபலிக்க வேண்டும். இந்த அணுகுமுறை உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆதரவு இடைவெளிகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப கட்டமைப்பை உருவாக்கும் வகையில், இந்த அணுகுமுறை உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.


பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு தீர்வு


சுய உதவிக் குழுக்கள் (SHG) மூலம் வழங்கப்படும் சமூகப் பராமரிப்பு அமைப்பு நிலையானது, முதியோர் நலனைத் தாண்டிய பல நன்மைகளை வழங்கமுடியும். அவை,


முதலாவதாக, இது சமூகப் பாதுகாப்பு வலையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை நிரப்புகிறது. ஓய்வூதியங்கள் முதியவர்கள் தங்களின் அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன. இருப்பினும், அன்றாடச் செயல்பாடுகளைப் பாதுகாப்பதில்லை. நடமாட்டம், சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல் அல்லது சேவைகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கான ஆதரவு இல்லாமல், பல முதியவர்கள் திறம்படப் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கின்றனர்.


இரண்டாவதாக, இது உள்ளூர் மட்டத்தில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சுய உதவிக் குழுக்களின் மூலம் பராமரிப்பை முறைப்படுத்துவது, ஊதியம் பெறாத வேலையை பெண்களுக்குப் பயிற்சி பெற்ற, ஊதியம் பெறும் பணிகளாக மாற்றுகிறது. இதன் மூலம் இது ஒரு நலத்திட்டமாக இருப்பது போலவே, வாழ்வாதாரத்திற்கான ஒரு தலையீடாகவும் அமைகிறது.


மூன்றாவதாக, இது சுகாதார அமைப்பின் மீதான தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. பல முதியவர்கள் பின்தொடர் சந்திப்புகளைத் தவறவிடுவதாலோ அல்லது மிகவும் தாமதமாகப் பரிந்துரைக்கப்படுவதாலோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு பணியாளர் குழு, சிகிச்சை முறைகளை முறையாகப் பின்பற்றுவதை மேம்படுத்துகிறது. ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிகிறது மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்கிறது. இது, கடுமையான சிக்கல்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட மிகவும் செலவு குறைந்ததாகும்.


நான்காவதாக, இது தனிமை மற்றும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்கிறது. சமூகத் தனிமை பல முதியவர்களைப் பாதிக்கிறது. மேலும், வழக்கமான சந்திப்புகளும் நலம் விசாரிப்புகளும் அவர்களின் கண்ணியத்தையும், ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் உணர்வையும் மீட்டெடுக்க உதவும். நிதிப் பார்வையில், இந்த மாதிரி சாத்தியமானது. ஏனெனில், இது ஏற்கனவே உள்ள அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், மருத்துவமனை சார்ந்த பராமரிப்புடன் ஒப்பிடும்போது செலவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றன.



நிலைத்தன்மைக்காக வடிவமைத்தல்


இந்த அமைப்பு வெற்றிபெற, பராமரிப்பு ஒரு கூடுதல் அம்சமாக அல்லாமல், ஒரு முக்கியப் பணியாகக் கருதப்பட வேண்டும். இதற்குப் பயிற்சிபெற்ற பணியாளர்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகள், முறையான மேற்பார்வை மற்றும் கணிக்கக்கூடிய ஊதியம் ஆகியவை தேவைப்படுகின்றன. இவற்றை ஆதரிப்பதற்கு தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (NRLM) நன்கு தயாராக உள்ளது. பணியாளர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான பணிச்சுமை, சீரற்ற தரம் மற்றும் ஒருங்கிணைப்புச் சவால்கள் உள்ளிட்ட அபாயங்கள் இருந்தாலும், இதற்கு முன்பும் சிக்கலான தலையீடுகளை விரிவுபடுத்திய ஒரு அமைப்பிற்குள் இவற்றைச் சமாளிக்க முடியும்.


கடைக்கோடி வரை சேவைகள் சென்றடைய முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு என்பது வருமானத்தை மட்டுமல்ல, கண்ணியம், செயல்படும் திறன் மற்றும் நல்வாழ்வையும் பாதுகாப்பதை உறுதி செய்வதே அடுத்த கட்டமாகும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது. இனி செய்ய வேண்டியது, விடுபட்ட பராமரிப்பு அடுக்கைக் கட்டமைப்பது மட்டுமே.


ஆதில், மைக்ரோசேவ் கன்சல்டிங்கில் மூத்த மேலாளராகவும், மிஸ்ரா மூத்த மேலாளராகவும் உள்ளனர்.


Original article: India’s next social protection is care, not cash. -Arshi Aadil, Shobhit Mishra

Share: