பிரதமரின் பதவிக்காலம் குறித்து சட்டம் என்ன சொல்கிறது? -வி. வெங்கடேசன்

 இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறை போட்டியிடுவதைத் தவிர்க்கும் ஒரு மரபு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரின் பதவிக்காலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அத்தகைய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியில் 8,931 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த இரண்டு பதவிகளுக்கும் இடையிலான பதவிக்கால வேறுபாடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.


மார்ச் மாதம் 22-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக 8,931 நாட்களை நிறைவு செய்தார். இதில் குஜராத் முதலமைச்சராக இருந்த 13 ஆண்டுகளுக்கும் மேலான காலமும் (அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி, 2001-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 21-ஆம் தேதி, 2014-ஆம் ஆண்டு வரை), அதைத் தொடர்ந்து மூன்று முறை தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்த காலமும் அடங்கும். இதன் மூலம், 8,930 நாட்கள் பதவியில் இருந்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை அவர் முறியடித்தார். இருப்பினும், ஆளும் தரப்பின் புகழ்ச்சியோ அல்லது எதிர்க்கட்சிகளின் விமர்சனமோ இந்த சாதனை எழுப்பும் முக்கியமான அரசியலமைப்புப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. அதாவது, உண்மையான நிர்வாக அதிகாரம் கொண்ட ஒரு பதவியில் ஒருவர் எவ்வளவு காலம் நீடிக்கலாம் என்பதற்கு இந்திய அரசியலமைப்பு ஏன் எந்த வரம்பையும் விதிக்கவில்லை?


இந்த விஷயத்தில் இந்தியா மற்ற பல பெரிய ஜனநாயக நாடுகளிலிருந்து மாறுபட்டது. அமெரிக்காவில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்ததைத் தொடர்ந்து, 1951-இல் 'இருபத்தி இரண்டாவது சட்டத்திருத்தம்' (Twenty-Second Amendment) கொண்டு வரப்பட்டு அதிபர் பதவிக்கு கால வரம்பு விதிக்கப்பட்டது. தென் கொரியா, பிரேசில், கொலம்பியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் அதிபர் பதவிக்கு இதுபோன்ற கால வரம்புகள் உள்ளன. பொதுவாக, நாடாளுமன்ற ஜனநாயக முறையிலான நாடுகளில் இந்தப் பிரச்சனை அவ்வளவு அவசரமானதாகக் கருதப்படுவதில்லை; ஏனெனில், அங்குப் பிரதமர் பதவியில் நீடிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியமாகிறது. இருப்பினும், 'ஒரு பிரதமரை எளிதாகப் பதவியிலிருந்து நீக்கிவிட முடியும்' என்கிற இந்த அனுமானம், இந்தியச் சூழலில் எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.


அரசியலமைப்பு நிர்ணய சபையின் அடிப்படை வாதம்


அரசியலமைப்பு நிர்ணய சபையின் இந்த வாதத்தை, நவம்பர் மாதம் 4-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு வரைவு அரசியலமைப்பை அறிமுகப்படுத்திப் பேசிய பி.ஆர். அம்பேத்கர் இதனை விளக்கினார். அவர் நிர்வாகத்தின் பொறுப்புணர்வைக் கணக்கிட இரண்டு வழிகளைப் பிரித்துக் காட்டினார்: ஒன்று, கேள்வி நேரங்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மற்றும் ஒத்திவைப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் "தினசரி பொறுப்பு மதிப்பீடு" (Daily assessment of responsibility), மற்றொன்று, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் தேர்தல்கள் மூலம் கிடைக்கும் "காலமுறை மதிப்பீடு" (Periodic assessment) ஆகும் . இதில் தினசரி மதிப்பீடே அதிக செயல்திறன் கொண்டது என்று அம்பேத்கர் வாதிட்டார். சட்டமன்றத்தின் நம்பிக்கை இருக்கும் வரை மட்டுமே ஒருவர் பதவியில் நீடிக்க முடியும் என்ற சுழற்சி முறையிலான கட்டுப்பாடு இருப்பதால், பதவிக் கால வரம்பு தேவையில்லை என்பது அவருடைய கருத்தாகும். இந்த வாதம் இங்கிலாந்தின் 'வெஸ்ட்மின்ஸ்டர்' (Westminster) நாடாளுமன்ற முறையைப் பிரதிபலிக்கிறது. அங்குப் பிரதமர்களுக்கு கால வரம்பு கிடையாது, ஆனால் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே (Caucus) தங்கள் தலைவரை பதவிநீக்கம் செய்யும் முறை உள்ளது; உதாரணமாக, 1990-ஆம் ஆண்டு மார்கரெட் தாட்சரை (Margaret Thatcher) கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருந்து நீக்கியதைக் குறிப்பிடுகின்றனர்.


பத்தாவது அட்டவணை எதை  சிதைத்தது?


இந்திய அரசியலமைப்பின் ஐம்பத்து இரண்டாவது சட்டத்திருத்தம் (52nd Amendment, 1985) பத்தாவது அட்டவணையைச் சேர்த்தது. இது கட்சியின் உத்தரவை மீறி வாக்களிக்கும் எந்தவொரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரையும் தகுதி நீக்கம் செய்கிறது. கிஹோட்டோ ஹொல்லோஹன் vs சச்சில்லு (Kihoto Hollohan vs. Zachillhu, 1992) என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தை வாக்காளர்களின் தீர்ப்பைப் பாதுகாக்கும் ஒரு வழியாக உறுதி செய்தது. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் நம்பியிருந்த சட்டமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான உறவை இந்த பத்தாவது அட்டவணை அடிப்படையிலேயே மாற்றிவிட்டது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் (Anti-defection Law), ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர் தனது பதவியை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பதவிக் கால வரம்பிற்கு மாற்றாகச் செயல்பட வேண்டிய 'நம்பிக்கையில்லாத் தீர்மானம்' என்பது, ஆளும் கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கும் வரை செயலற்ற ஒன்றாக மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது.


இதேபோல், பிரிட்டிஷ் ஆட்சி முறையில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகள் இந்தியாவில் செயல்படுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளில், தற்போதைய தலைமையை எதிர்த்து கேள்வி கேட்கவோ அல்லது மாற்றவோ முறையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் கிடையாது. கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law (ADL)) சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் கட்சிகளுக்குள் முறையான உட்கட்சி ஜனநாயகம் இல்லாததால், கட்சி எப்போதும் அதன் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்கிறது. இவ்வாறாக, பதவிக் கால வரம்பிற்குப் பதிலாக இருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டு வழிகளில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஒப்பீட்டுச் சான்றுகள்


டாம் கின்ஸ்பர்க், ஜேம்ஸ் மெல்டன் மற்றும் சக்கரி எல்கின்ஸ் ஆகியோர், தலைவர்கள் எவ்வாறு தங்கள் பதவிக் கால வரம்புகளைத் தவிர்க்கிறார்கள் என்பது குறித்த ஆய்வில் ஒரு முக்கிய உண்மையைக் கண்டறிந்துள்ளனர். பல நாடுகளில் உள்ள தலைவர்கள், அரசியலமைப்பை மாற்றியமைப்பதன் மூலமோ, புதிய சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலமோ அல்லது நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்க முயல்கின்றனர் என்பதைக் காட்டியுள்ளனர். அஜீஸ் ஹக் மற்றும் கின்ஸ்பர்க் ஆகியோர், ஒரு ஜனநாயகம் என்பது திடீர் சர்வாதிகாரப் புரட்சிகளால் வீழ்வதைவிட, அரசு நிறுவனங்களின் படிப்படியான வீழ்ச்சியின் மூலமே மெதுவாகப் பலவீனமடைகிறது என்று வாதிடுகின்றனர். இந்தியாவில் பிரதமர் பதவிக்குக் கால வரம்பு என்று எதுவுமே இல்லாததால், அதை நீக்க வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை. ஆனால், இத்தகைய கால வரம்புகள் இல்லாததும், நாடாளுமன்றத்தின் மீதான பொறுப்புணர்வு குறைந்து வருவதும் சேர்ந்து, மற்ற நாடுகளில் பதவிக் கால வரம்புகள் தடுக்க நினைக்கும் அதே ஆபத்துகளை இந்தியாவிலும் உருவாக்குகிறதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.


குடியரசுத் தலைவர் பதவி குறித்த முரண்பாடு


இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும்பாலும் பெயரளவு அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவியாக இருந்தாலும், ஒருவர் மூன்றாவது முறை அந்தப் பதவியை வகிக்கக் கூடாது என்ற மரபு இந்தியாவில் வளர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு குடியரசுத் தலைவரும் இரண்டு முறைகளுக்கு மேல் பதவி வகித்ததில்லை. இந்த மரபானது, ஐவர் ஜென்னிங்ஸ் (Ivor Jennings) தனது 'The Law and the Constitution - 1959' என்ற நூலில் குறிப்பிட்ட 'அரசியலமைப்பு மரபுகளுக்கான மூன்று கட்டச் சோதனை' விதிமுறைகளுக்குப் பொருந்திப் போகிறது. அதாவது, இதற்கு முன்மாதிரிகள் உள்ளன. மக்கள் இதனை ஒரு விதியாகவே நம்பிப் பின்பற்றினர். மேலும், இதற்குப் பின்னால் ஒரு நியாயமான காரணமும் இருக்கிறது. எனவே, உண்மையான நிர்வாக அதிகாரம் குறைவான ஒரு பதவிக்கு இத்தகைய மரபுரீதியான கட்டுப்பாடு இருக்கும்போது, ஏறக்குறைய அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் கொண்ட பிரதமர் பதவிக்கு, தேர்தல்கள் மட்டுமே முக்கியக் கட்டுப்பாடாக உள்ளன. ஏனெனில், 'கட்சித் தாவல் தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் மற்ற வகை பொறுப்புக்கூறல் முறைகளை வலுவிழக்கச் செய்கின்றன.


விமர்சகரின் ஆட்சேபனையும், அதன் வரம்புகளும்


நரேந்திர மோடி அவர்களின் ஆட்சிக் காலத்தை மக்கள் தொடர்ந்து மூன்று முறை ஆதரித்துள்ளனர்; எனவே, பதவிக் கால வரம்பு விதிப்பது மக்களின் விருப்பத்திற்கு எதிராக அமையும் என்பதே இதற்கு முன்வைக்கப்படும் வலுவான எதிர்வாதம் ஆகும். இது ஒரு முக்கியமான சிக்கல் ஆகும், ஏனெனில் பதவிக் கால வரம்புகள் மக்களாட்சிக்கு விரோதமானதாகக் கருதப்படலாம். இருப்பினும், முறையான தேர்தல்களும் நாடாளுமன்றப் பொறுப்புக்கூறலும் நிர்வாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்த போதுமானவை என்ற பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வாதம் அமைகிறது. ஆனால், பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) காரணமாக இந்த நாடாளுமன்றப் பொறுப்புக்கூறல் பலவீனமடைந்திருந்தால், தேர்தல்கள் இன்னும் முக்கியப் பங்கை வகிக்க வேண்டியுள்ளது. ஆனாலும், நீண்டகால ஆட்சியில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் பலன்களான—முக்கியப் பதவி நியமனங்களைக் கட்டுப்படுத்துதல், தகவல்களைக் கையாளுதல் மற்றும் தேர்தல் ஆதாயத்திற்காகக் கொள்கைகளை மாற்றுதல் போன்றவற்றைச் சமாளிக்க, சுதந்திரமான தேர்தல்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


என்ன நடவடிக்கை எடுக்கப்படலாம்?


அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்த பழைய முறையையே மீண்டும் கொண்டு வருவது ஒரு இயற்கையான சீர்திருத்தமாக இருக்கும் என்கின்றனர். பத்தாவது அட்டவணையின்கீழ் உள்ள தகுதிநீக்க விதியிலிருந்து 'நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு' விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும் என்ற பயமில்லாமல், ஒரு அரசாங்கத்தைப் பதவியிலிருந்து நீக்கமுடியும் என்றும் கூறப்படுகிறது. மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், இந்திய அரசியலமைப்பை திருத்தி, பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் தொடர்ந்து பதவி வகிக்கும் காலத்தை வரைமுறைப்படுத்துவது ஆகும். இருப்பினும், ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பதவிக்கு வர அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஜோதி பாசு, நவீன் பட்நாயக் மற்றும் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் நீண்டகாலம் பதவியில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, குறிப்பாக மாநில அளவில் இத்தகைய கால வரம்பு முறை மிகவும் அவசியமானதாகிறது.


8,931 நாட்கள் என்ற இந்த சாதனை, இந்தியாவின் நாடாளுமன்ற முறை இப்போதும் அரசியலமைப்புச் சட்டமேதைகள் எதிர்பார்த்த அந்த 'தவறுகளைத் தானாகவே திருத்திக்கொள்ளும்' திறனைக் கொண்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால், தற்போதையச் சான்றுகள் அந்தத் திறன் இப்போது இல்லை என்பதையே காட்டுகின்றன. இதற்கிடையில், காலவரையற்ற பதவிக் காலத்திற்கு எதிரான அதிபர் முறை மரபு, உண்மையில் அத்தகைய கட்டுப்பாடு தேவையில்லாத ஒரு பதவிக்கு மட்டுமே பொருந்துகிறது. இந்தப் பதவியில் யார் இருந்தாலும் சரி, இந்த குறைபாடானது  நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


(வி. வெங்கடேசன், பத்திரிகையாளர் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்).


Original article: What does law say on tenure of Prime Minister? -V. Venkatesan

Share: