ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி (Indian Police Service (IPS)) அதிகாரியும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான பிரிஜ் லால் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், 2011-ஆம் ஆண்டில் குடிமைப் பணிகள் தேர்வுத்திறன் தேர்வு (Civil Services Aptitude Test (CSAT)) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தொடங்கிய ஒரு பெரிய விவாதத்தின் ஒரு பகுதியாகும்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாநிலங்களவை உறுப்பினர் பிரிஜ் லால் ஒரு முக்கிய கருத்தை முன்வைத்தார். குடிமைப் பணித் தேர்வின் முதற்கட்டத் தேர்வில் தகுதி பெற வேண்டிய இரண்டு தாள்களில் ஒன்றான குடிமைப் பணிகள் தேர்வுத்திறன் தேர்வு (CSAT) என்பது, "பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய தடையாக" இருப்பதாகவும், எனவே அதை நீக்க வேண்டும் அல்லது சீர்திருத்த வேண்டும் என்றும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களிடையே இந்தத் தேர்வுத்தாள் "சமமற்ற பிரதிநிதித்துவத்தை" உருவாக்குவதாக கூறினார். வெற்றி பெறுபவர்களில் சுமார் 65% பேர் பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர். ஆனால், குடிமைப் பணித் திறன் தேர்வு (CSAT) என்பது தொழில்நுட்பம், கணிதம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் சார்ந்த கேள்விகளில் அதிக கவனம் செலுத்துவதால், கலை மற்றும் மானுடவியல் துறைசார் மாணவர்கள் இதில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரியான பிரிஜ் லால், குடிமைப் பணிகள் தேர்வுத் திறன் தேர்வு (CSAT) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தொடங்கிய ஒரு விரிவான விவாதத்தின் ஒரு பகுதியாக இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
குடிமைப் பணிகள் தேர்வுத் திறன் தேர்வு என்பது என்ன?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)), இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவல் பணி போன்ற மிக உயரிய 'குரூப் ஏ' பதவிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் குடிமைப் பணித் தேர்வை (Civil Services Examination) நடத்துகிறது. இந்தத் தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது: அவை முறையே முதல்நிலைத் தேர்வு (Prelims - கொள்குறி வகை வினாக்கள்), முதன்மைத் தேர்வு (Mains - விளக்கமான விடை எழுதும் வினாக்கள்) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview - ஆளுமைத் திறன் தேர்வு) ஆகும்.
2010-ஆம் ஆண்டு வரை, குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருந்தது: பொதுஅறிவுத் தாள் (General Studies - 150 மதிப்பெண்கள்) மற்றும் விண்ணப்பதாரர்கள் 23 பாடங்களில் இருந்து தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் விருப்பப் பாடம் (300 மதிப்பெண்கள்). அந்தச் சமயத்தில், பொதுப் பாடத் தாளில் (General Studies) தர்க்கரீதியான சிந்தனை (Reasoning) மற்றும் கணிதம் தொடர்பான கேள்விகள் மிகக் குறைந்த அளவிலேயே கேட்கப்பட்டன.
2011-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த மாற்றியமைக்கப்பட்ட தேர்வு முறையின்படி, முதல்நிலைத் தேர்வு அனைத்துத் தேர்வர்களுக்கும் பொதுவான இரண்டு தாள்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாளும் தலா 200 மதிப்பெண்களைக் கொண்டது. அவை: பொது அறிவுத் தாள்-I (GS-I)) மற்றும் பொதுஅறிவுத் தாள்-II ஆகும். இதில் முதல் தாள் (GS-I) நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகளைக் கொண்டது. பொதுஅறிவுத் தாள்-II, அதாவது குடிமைப் பணித் திறன் தேர்வு (CSAT), மொழித்திறன், தர்க்கரீதியான சிந்தனை மற்றும் அடிப்படை கணிதத் திறனைச் சோதிக்கும் வகையில் அமையும் என்கின்றனர். இந்த குடிமைப் பணித் திறன் தேர்வு என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே; அதாவது, இதில் தேர்ச்சி பெற ஒரு தேர்வர் குறைந்தபட்சம் 33% அல்லது 66 மதிப்பெண்களைப் பெற வேண்டும். அவ்வாறு 66 மதிப்பெண்களைப் பெறத் தவறினால், அவர்களின் பொது அறிவுத் தாள்-I (GS-I) விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?
தேர்வு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் காலத்தில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் போது அமைக்கப்பட்ட ஒய். கே. அலக் தலைமையிலான குடிமைப் பணிகள் மறுஆய்வுக் குழு, எம். வீரப்ப மொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)) மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வழங்கிய பரிந்துரைகளும் அடங்கும் என்கின்றனர்.
பழைய கல்வி முறையில் இருந்த ஒரு முக்கியமான குறைபாடு என்னவென்றால், அது மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனை சோதிப்பதைவிட, பாடங்களை மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் மடைமாற்றமில்லா கற்றல் (rote learning) முறைக்கே அதிக முக்கியத்துவம் அளித்ததாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
குடிமைப் பணித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு திறனறித் தேர்வு ஏன் முக்கியமானது?
இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வானது, பத்தாம் வகுப்புத் தரத்திலான மொழிப் புரிதல் திறன், தர்க்கரீதியான பகுத்தாய்வு, பகுப்பாய்வுத் திறன், முடிவெடுக்கும் திறன், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் பொதுவான மனத்திறன் ஆகியவற்றைச் சோதிக்கிறது. மேலும், எண்கள், அவற்றுக்கிடையேயான உறவுகள், எண்களின் வரிசை முறை போன்ற அடிப்படை எண் கணிதம் மற்றும் வரைபடங்கள், அட்டவணைகள் மூலம் தரவுகளை விளக்குதல் (Data Interpretation) ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 80 கேள்விகளில் ஒவ்வொன்றுக்கும் தலா 2.5 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தவறான பதில்களுக்கு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 0.83 மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதேபோல், பொது அறிவுத் தாள்-1 மொத்தம் 100 கேள்விகளைக் கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.66 மதிப்பெண்கள் எதிர்மறை மதிப்பெண்களாக (Negative Marking) கழிக்கப்படும் என்கின்றனர்.
குடிமைப் பணிகள் திறனறித் தேர்வு (CSAT) கடினத்தன்மை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகப் பலர் வாதிடுகின்றனர். குடிமைப் பணித் தேர்வு (CSE) என்பது பொதுவாக அரசியல், வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், தற்போதுள்ள குடிமைப் பணிகள் திறனறித் தேர்வு முறை அறிவியல், கணிதம் அல்லது பொறியியல் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தத் தேர்வு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் இருந்து வரும் தேர்வர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்தி மொழி பேசுபவர்கள்கூட இத்தேர்வின் தொழில்நுட்பரீதியான சிக்கல்கள், மோசமான மொழிபெயர்ப்புகள் மற்றும் இந்தி மொழியில் தரமான பாடப்புத்தகங்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் இத்தகைய தேர்வுமுறைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, குடிமைப் பணிகள் திறனறித் தேர்வு (CSAT) மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன. இதன் விளைவாக, 2011-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வு (CSE) எழுதிய தேர்வர்களுக்கு, ஒரு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பிரிஜ் லால் அவர்களின் கூற்றைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றனவா?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அன்றைய பாரதிய ஜனதா கட்சி (BJP) நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி, எத்தனை தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (Department of Personnel and Training (DoPT)) மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி பதிலளித்தார்.
2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், அறிவியல், மருத்துவம் அல்லது பொறியியல் பின்னணி கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை முறையே 715, 528, 595, 566 மற்றும் 497-ஆக இருந்தது. இதற்கு மாறாக, கலை மற்றும் மானுடவியல் துறைசார் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. அவர்களின் எண்ணிக்கை முறையே 106, 81, 77, 84 மற்றும் 88 எனப் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டது.
இருந்தபோதிலும், பல அறிவியல் பட்டதாரிகள் முதன்மைத் தேர்வில் (Mains Exam) - இதில் விருப்பப் பாடங்கள் தேர்வு செய்யும் முறை உள்ளது. சமூக அறிவியல் அல்லது மானுடவியல் துறைசார் பாடங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கலைப்பாடப் பிரிவின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை முறையே 230, 199, 223, 193 மற்றும் 188-ஆக இருப்பதே இதற்குச் சான்றாகக் காட்டப்படுகிறது.
2011-ஆம் ஆண்டில், ஆங்கில வழியில் பயின்ற 800-தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்தி வழியில் பயின்றவர்கள் 89-பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வின்படி, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கழகத்தில் (Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA)) பயிற்சி பெற்ற 2015-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் (CSE) தேர்ச்சி பெற்ற 370-பேரில், 8-பேர் மட்டுமே இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது. இதுவே 2013-ஆம் ஆண்டில் 202-பேரில் 48-மட்டுமே இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேர்வானவர்களில் 5-பேர் மட்டுமே இந்தி வழிப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள், 30-பேர் இந்தி வழிப் பள்ளிகளில் பயின்றவர்கள் ஆவர்.
2013-ஆம் ஆண்டிலிருந்து கிடைத்துள்ள தரவுகளின்படி, இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service (IAS)), இந்தியக் காவல் பணி (Indian Police Service (IPS)) மற்றும் இந்திய வெளியுறவுப் பணி (Indian Foreign Service (IFS)) போன்ற பதவிகளுக்காக நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வை (CSE) இந்தியில் எழுதுவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தி வழிக் கல்வி பயின்ற பள்ளிகள் அல்லது பல்கலைக்கழக மாணவர்களின் தேர்ச்சியும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில், அதிகப்படியான மாணவர்கள் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்துத் தேர்வு எழுதுவது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமி (LBSNAA) இணையதளத்தில் முன்பு வெளியிடப்பட்ட அடிப்படைப் பயிற்சி வகுப்புத் தரவுகளின்படி, குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பின்னணி குறித்த ஆய்வு இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது. இதில் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 17 சதவீதமாக இருந்தது; ஆனால் அது 2014-ஆம் ஆண்டில் 2.11%-ஆகவும், 2015-ஆம் ஆண்டில் 4.28%-ஆகவும், 2016-ஆம் ஆண்டில் 3.45%-ஆகவும், 2017-ஆம் ஆண்டில் 4.06%-ஆகவும் குறைந்தது. குறிப்பாக, 2018-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து 2019-ஆம் ஆண்டில் பயிற்சியை முடித்தவர்களில், வெறும் 2.16% பேர் மட்டுமே குடிமைப் பணித் தேர்வை (CSE) இந்தி மொழியில் எழுதியவர்கள் ஆவர்.
குடிமைப் பணிகள் திறனறித் தேர்வு (CSAT) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்தி வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. 2005-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்களின்படி, சுமார் 12-15% விண்ணப்பதாரர்கள் குடிமைப்பணி முதன்மைத் தேர்வை (CSE Mains) இந்தியில் எழுதினர். உதாரணமாக, 2008-ஆம் ஆண்டில் 239-மாணவர்களில் 32-பேர் (14%-க்கும் மேல்) இந்தியில் தேர்வு எழுதினர். இருப்பினும், இது தொடர்பான விவரங்கள் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கழகத்தின் (LBSNAA) இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனவே, அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கான நம்பகமான தரவுகள் தற்போது கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் பதில் என்னவாக இருந்தது?
2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ஜிதேந்திர சிங், வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எத்தனை பேர் இந்திய மொழிகள் அல்லது கலைப் பாடப்பிரிவுகள் சார்ந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மார்ச் மாதம் 12-ஆம் தேதி, 2020-ஆம் ஆண்டு, தேர்வு முறையானது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்நிலைத் தேர்வு (Prelims) பெரும்பாலும் அனைத்து மொழியினருக்கும் பொதுவானதாக (மொழி-சார்பற்றதாக) இருந்தாலும், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வை (Mains) ஆங்கிலத்தில் எழுதவே விரும்புகிறார்கள் என்றும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
Original article: Debate over CSAT as a ‘barrier to diversity’ in UPSC Civil Services Exam. -Shyamlal Yadav