வளர்ந்த நாடுகள் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான புதிய விதிகளை வலியுறுத்தி வரும் வேளையில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கொள்கை வகுப்பதில் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு இல்லாமல், டிஜிட்டல் வர்த்தகம் குறித்த கட்டுப்படுத்தும் உறுதிமொழிகளை அவர்கள் ஏன் ஏற்கமுடியாத ஒன்றாகக் கருதுகிறார்கள்?
உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14), டிஜிட்டல் பதிவிறக்கங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் போன்ற மின்னணு வர்த்தகத்தின் மீதான சுங்கவரிகளுக்கான தடையை நீட்டிப்பது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்குத் தீர்வு காணாமலேயே முடிவடைந்தது.
மிக முக்கியமாக, 14-வது அமைச்சர்கள் மாநாடானது (MC14), வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான கட்டமைப்பு வேறுபாடுகளை மின்னணு வர்த்தகத்தில் மட்டுமல்லாமல், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, உலக வர்த்தக அமைப்பின் எதிர்கால சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த திசை ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தன.
ஆனால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் முன்னுரிமைகளைச் சமநிலைப்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்கள் என்ன? உலக வர்த்தக அமைப்பின் விதிகள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கொள்கைகளைக் கட்டுப்படுத்துகின்றனவா? பலதரப்பு ஒப்பந்தங்களை நோக்கிய நகர்வு, உலக வர்த்தகத்தில் பன்முகத்தன்மை பலவீனமடைந்து வருவதைக் காட்டுகிறதா?
முதலில், மார்ச் 30 திங்கட்கிழமை அன்று, கேமரூனின் யவுண்டே நகரில் நிறைவடைந்த 14-வது அமைச்சர்கள் மாநாட்டின் (MC14) முக்கிய முடிவுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
14-வது அமைச்சர்கள் மாநாட்டிலிருந்து (MC14) பெறப்பட்ட முக்கிய அம்சங்கள்
14-வது அமைச்சர்கள் மாநாட்டின் (MC14) அதிகாரப்பூர்வ முடிவு ஒரு கலவையான குறிப்பை அளிக்கிறது. இந்த மாநாட்டின் உறுப்பினர்கள் என்ன சாதித்துள்ளனர் என்பதை தொகுத்துரைக்கும் ஒரு முறையான ஆவணமாக அமைச்சர்கள் பிரகடனத்தை வெளியிடுவதில் அது ஒருமித்த கருத்தை எட்டத் தவறிவிட்டது. ஆனால், இந்த தொகுப்பில் சில வரைவு முடிவுகளை உள்ளடக்கிய ஒரு யவுண்டே தொகுப்பை உருவாக்கியுள்ளது.
அப்படியானால், உண்மையில் என்ன சாதிக்கப்பட்டது?
முதலில், உலகளாவிய வர்த்தகத்தில் சிறு பொருளாதாரங்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தொகுதி முடிவுகளுக்கு மாநாட்டு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.
இரண்டாவதாக, சுகாதார மற்றும் தாவர சுகாதார (Sanitary and Phytosanitary (SPS)) மற்றும் வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் (Technical Barriers to Trade (TBT)) ஒப்பந்தங்களின் கீழ், சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறையை (Special and Differential Treatment (S&DT)) செயல்படும் விதத்தில் அவர்கள் நடைமுறை மேம்பாடுகளை அறிமுகப்படுத்தினர். இதன் பொருள், வளரும் நாடுகள் இப்போது தொழில்நுட்ப உதவியைச் சற்றே சிறப்பாகப் பெறுவதற்கும், விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான நீண்டகால அவகாசத்தை பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
மூன்றாவதாக, மீன்வள மானியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். நான்காவதாக, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஒருமித்த கருத்து எட்டப்படாத இடங்களில் :
முதலில், மின்னணு வர்த்தகத் தடையை நீட்டிப்பது குறித்து உறுப்பு நாடுகள் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தத் தடையானது, மென்பொருள், ஒளிபரப்பு மற்றும் தரவுப் பரிமாற்றங்கள் போன்ற டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீதான சுங்க வரிகளைத் தடுக்கிறது.
இரண்டாவதாக, சீனாவின் ஆதரவுபெற்ற முதலீட்டு மேம்பாட்டு வசதி ஒப்பந்தம் (Investment Facilitation for Development (IFD)) ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு 128 நாடுகள் ஆதரவு இருந்தபோதிலும், பலதரப்பு வழிமுறையின் மூலம் அதை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா அதை எதிர்த்தது.
பலதரப்பு ஒப்பந்தங்கள் ஆனது, பங்கேற்கும் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலக வர்த்தக அமைப்பு மரபுரீதியாகப் பன்முகத்தன்மை மற்றும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மூன்றாவதாக, ஒரு விரிவான உலக வர்த்தக அமைப்பின் ஒரு முழுமையான சீர்திருத்தத் தொகுப்பு குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. முடிவெடுத்தல் (decision-making), தகராறு தீர்வு மற்றும் மேம்பாடு (dispute settlement development) உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களின் தேவை குறித்து பரந்த உடன்பாடு இருந்தாலும், எவ்வாறு முன்னேறுவது என்பதில் உறுப்பு நாடுகளால் உடன்பட முடியவில்லை.
கட்டமைப்புப் பிளவு
14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14) ஏற்பட்ட தோல்விக்குக் கட்டமைப்பு ரீதியான வேறுபாடுகளே காரணம். மின்னணுப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரிகள் மீதான தற்போதைய தடையை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து, வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே நிலவும் வேறுபாடே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்துதல், விற்பனை செய்தல் அல்லது வழங்குதல் ஆகியவை டிஜிட்டல் வர்த்தகம் என வரையறுக்கப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பு நாடுகள் 1998 முதல் டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீது சுங்கவரிகளை விதிக்க வேண்டாம் என ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14), உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ளாததால் அது காலாவதியானது.
மென்பொருள், டிஜிட்டல் சேவைகள், ஒளிபரப்பு உள்ளடக்கம் மற்றும் தரவுப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீது சுங்கவரிகள் விதிப்பதை இந்தத் தடை உத்தரவு தடுக்கிறது. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், பின்வரும் காரணங்களுக்காக இந்த நீட்டிப்பை எதிர்த்துள்ளன:
1. எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் சேவைகளின் மூலம்
ஆண்டுதோறும் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய்
இழப்பு ஏற்படும் என ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாடு (UNCTAD)
மதிப்பிட்டுள்ளது.
2. டிஜிட்டல் வர்த்தகத்தின் வீச்சு குறித்த நிச்சயமற்றத் தன்மை நிலவுகிறது.
3. அதன் தாக்கம் குறித்த அனுபவப்பூர்வமான தரவுகள் பற்றாக்குறையாக
உள்ளன.
இதற்கு மாறாக, வளர்ந்த நாடுகள் காப்புரிமைகள், சேவைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் போன்ற டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விதிகளை வலியுறுத்துகின்றன. அவற்றின் டிஜிட்டல் சேவைகள் ஏற்றுமதியானது, பூஜ்ஜிய வரிகள் மற்றும் கணிக்கக்கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்புகளைச் சார்ந்துள்ளது. உதாரணமாக, அமெரிக்கா மட்டும் 2023-ம் ஆண்டில் 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான டிஜிட்டல் சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கொள்கை நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. அவர்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு இல்லாமல், டிஜிட்டல் வர்த்தகம் குறித்த கட்டுப்படுத்தும் உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளது.
இந்த வேறுபாடுகளைச் சமரசம் செய்வது கடினம். மேலும், இது ஒரு பரந்த கேள்வியை எழுப்புகிறது. இதில் முக்கியமாக, டிஜிட்டல் பொருளாதாரத்தின் விதிகளை யார் வடிவமைப்பார்கள்?
இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவின் நிலைப்பாடு டிஜிட்டல் வர்த்தகத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, அதன் நீண்டகால விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு முன்பே, கட்டுப்படுத்தும் மற்றும் நிரந்தரமான விதிகளை அது எதிர்க்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றியமைக்க முயல்கிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
உதாரணமாக, கூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் மெட்டா போன்ற அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ள டிஜிட்டல் வர்த்தகத் துறைக்கு, அது நிரந்தரமான கட்டணமில்லா வர்த்தகத்தை முன்னெடுத்து வருகிறது. அதேநேரத்தில், சீனா எஃகு முதல் ஐரோப்பிய கார்கள் வரையிலான பல்வேறு பொருட்களுக்கு வரி விதிப்பது போன்ற பாதுகாப்புவாத நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா சில துறைகளில் தடையில்லா வர்த்தகத்தை (free trade) ஆதரித்து, மற்ற துறைகளில் பாதுகாப்புவாதத்தைக் கடைப்பிடிக்கும் இந்த முரண்பாடு கவனிக்கப்படாமல் இல்லை. மேலும், இது உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே உடன்பாட்டை உருவாக்குவது கடினமாகியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பு (WTO) என்பது ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். இதில் 166 உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றிற்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது. இதன் விளைவாக, சில நாடுகள் முழுமையான ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் ஒன்றாக முன்னேற முடிவு செய்யும் நாடுகளின் சிறிய கூட்டணி நாடுகள் பலதரப்பு ஒப்பந்தங்களை நோக்கி நகர்கின்றன.
66 நாடுகள் தங்களின் சொந்த டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கின. மேலும் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு தனி முதலீட்டு ஒப்பந்தத்தை ஆதரித்தன. கூடுதலாக, 350-க்கும் மேற்பட்ட பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. அவற்றில் பல, உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தங்களைவிட வலுவான விதிகளைக் கொண்டுள்ளன. இப்படித்தான் பலதரப்பு அமைப்புகள் மெதுவாக பலவீனமடைகின்றன என்று சொல்வது தவறாக இருக்காது. அவை திடீரெனச் சரிந்துவிடுவதில்லை. மாறாக, நாடுகள் பிரதான அமைப்புக்கு வெளியே அமைதியாகத் தனி ஏற்பாடுகளைச் செய்துகொள்கின்றன.
இந்தியா ஏன் தனது கொள்கைக்கான இடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கிறது?
14-வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC14) இந்தியா தனது கருத்துக்களை மிகவும் வலுவாக முன்வைத்த நாடுகளில் ஒன்றாகும். டிஜிட்டல் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு நேரடியானதாகவும் உள்ளது. இத்தகைய முடிவுகளின் முழுமையான தாக்கத்தை முதலில் புரிந்துகொள்ளும் முன்பும், தனது மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கு இன்னும் நம்பகமான இணைய வசதி இல்லாத நிலையிலும், சுங்க வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயையும், தனது கொள்கைகளை வகுத்துக்கொள்வதற்கான இடத்தையும் நிரந்தரமாக விட்டுக்கொடுக்க அது தயாராக இல்லை.
இந்தியாவின் உணவுத் திட்டம் சுமார் 50 கோடி மக்களுக்கு உணவளிக்கிறது. அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்து, சேமித்து வைத்து, விநியோகம் செய்கிறது. ஆனால், 1986 முதல் 1988 வரையிலான விலைகளின் அடிப்படையில் மானியங்களை அளவிடுவதால், இந்தியா மானிய வரம்பை மீறுவதாக உலக வர்த்தக அமைப்பு (WTO) கூறுகிறது.
இன்று, ஒரு பொருளின் சந்தைவிலையானது கிலோவுக்கு 24 ரூபாயாக இருக்கும்போது, ஒரு விவசாயிக்கு 25 ரூபாய் கிடைத்தால், உண்மையான மானியம் 1 ரூபாய் ஆகும். இருப்பினும், இந்த ஆதரவை 1986 முதல் 1988 வரையிலான ஒப்பீட்டு விலைகளுடன் ஒப்பிடும்போது, மானியம் உண்மையில் இருப்பதைவிட மிகவும் அதிகமாகத் தெரிகிறது.
மேலும், உணவுப் பாதுகாப்பிற்கான பொது கையிருப்பு முறைக்கு (public stockholding) ஒரு நிரந்தரத் தீர்வு, வலுவான மற்றும் செயல்திறன் மிக்க சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறை (Special and Differential Treatment (S&DT)) விதிகள், தகராறு தீர்வு முறையை முழுமையாக மீட்டமைத்தல், மற்றும் ஒருமித்த கருத்து இல்லாமல் பலதரப்பு ஒப்பந்தங்களை உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஒருங்கிணைக்கக் கூடாது என்பனவற்றை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
என்ன மாற்றப்பட வேண்டும்?
மூன்று முக்கியப் பிரச்சினைகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவதாக, தகராறு தீர்வு முறை (dispute settlement system) சரிசெய்யப்பட வேண்டும். அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள், உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்க்கும் அமைப்புக்கு நீதிபதிகளை நியமிப்பதைத் தடுத்து வருவதால், அதன் வர்த்தகத் தகராறு தீர்க்கும் அதிகாரங்கள் செயலிழந்துவிட்டன.
இரண்டாவதாக, வேளாண் விதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும். 2026-ம் ஆண்டில் மானியங்களைக் கணக்கிடுவதற்கு 1986-ம் ஆண்டு விலைகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது.
மூன்றாவதாக, டிஜிட்டல் வர்த்தகம் மிகவும் நியாயமான மற்றும் சமநிலையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். மின்னணு வர்த்தகத் தடையை நீங்கியது என்பது கட்டாயம் ஒரு பின்னடைவு அல்ல. அது, டிஜிட்டல் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளைப் பிரதிபலிக்கும் விதிகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதப்படலாம்.
நான்காவதாக, முடிவெடுக்கும் செயல்முறையை மேலும் நெகிழ்வுத்தன்மை உடையதாக மாற்றுவது உதவியாக இருக்கும். ஒருமித்த கருத்தைக் கைவிட முடியாது என்றாலும், அது முழுமையான செயலற்ற தன்மைக்கு வழிவகுக்கும் அளவுக்குக் கடுமையானதாக இருக்கக்கூடாது. அதேநேரத்தில், அத்தகைய ஒப்பந்தங்களில் அங்கம் வகிக்காத நாடுகளுக்கான பாதுகாப்புகளுடன் கூடிய பலதரப்பு ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்படலாம்.
உலக வர்த்தக அமைப்பு நிலைத்து நிற்குமா?
உலக வர்த்தக அமைப்பு (WTO) உலக வர்த்தகத்தில் 98 சதவீதத்தை நிர்வகிக்கிறது. ஆனால், முக்கிய நாடுகள் விதிகளைப் பின்பற்றும்போது மட்டுமே அதன் நிர்வாகம் செயல்படும். மிகவும் சக்திவாய்ந்த உறுப்பு நாடுகள் தங்களுக்குப் பொருந்தாத விதிகளிலிருந்து விலகும்போது, அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை இழக்கிறது.
பெரிய பொருளாதாரங்களை எதிர்த்துப் போராட சிறிய நாடுகளுக்கு சட்டப்பூர்வமான வழிமுறைகளை வழங்கியதே உலக வர்த்தக அமைப்பின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகும். இன்று, இந்த அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினை பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. உலக வர்த்தக அமைப்பில் குறைபாடுகள் இருந்தபோதிலும், ஒரு வளரும் நாடு தனது பொருளாதாரத்தின் அளவைவிட, தனது வாதத்தின் வலிமையின் அடிப்படையில் வெற்றிபெறும் மிகச் சில தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
14-வது அமைச்சர்கள் மாநாடு (MC14) அமைப்புமுறையை சிதைக்கவில்லை. இந்த அமைப்பு அதன் பிளவுகளை வெளிப்படுத்தியது. புதிய உலகளாவிய வர்த்தக விதிகளை உருவாக்குவதற்கான முதன்மை மன்றமாக உலக வர்த்தக அமைப்பு இனி இல்லை. உண்மையான ஆபத்து மெதுவான மற்றும் நிலையான ஓரங்கட்டப்படுதலே ஆகும்.
உலக வர்த்தக அமைப்பால் கலந்துரையாடல்களை எளிதாக்க முடியுமா என்பதல்ல கேள்வி. மாறாக, அதனால் அதன் விளைவுகளை இன்னும் வடிவமைக்க முடியுமா என்பதேயாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, கொள்கைக்கான இடத்தை தொடர்ந்து பாதுகாப்பதும், சமச்சீரற்ற விதிகளை முன்னெடுப்பதும், கட்டுப்படுத்தும் மற்றும் செயல்திறன் மிக்க ஒரு தகராறு மேலாண்மை அமைப்பை வலியுறுத்துவதும் தற்போதைய சூழலுக்கு அவசியமாகத் தெரிகிறது.
Original article : How WTO conference exposes deep divide between developed and developing nations?. -Pushpendra Singh and Archana Singh