சிக்கல்கள் என்ன?
மத்திய இந்தியாவில் ஒரு வேட்டையாடும் குழுவானது செயல்பட்டு வருகிறது. இது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கியது. அவர்கள் "ஹவாலா நிதி" (hawala funds) மூலம் டிஜிட்டல் கட்டணங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் நேபாளம் மற்றும் மியான்மருக்கு தனித்தனி விநியோக வழிகளைக் கொண்டுள்ளனர். 2022 முதல், அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 100 புலிகளை, ஒருவேளை அதிகமாகக் கூட கொன்றுள்ளனர். இந்த செய்தியானது, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்கா (Madhav National Park) புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இந்த சூழ்நிலையில், புலியின் சுற்றுச்சூழல், கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். பாதுகாப்பு முயற்சிகளும் மிகவும் முக்கியமானதாகின்றன.
புலிகள் ஒரு குடை இனமாக எவ்வாறு செயல்படுகின்றன? பல்லுயிர் பெருக்கத்திற்காக அவற்றைப் பாதுகாப்பது ஏன் முக்கியம்?
புலி நமது தேசிய விலங்கு மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழல் அமைப்பின் சின்னமும் ஆகும். சிறந்த வேட்டையாடுபவர்களாக புலிகள் 'குடை இனங்கள் (umbrella species)' என அழைக்கப்படுகின்றன. புலிகள் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் பிரமிடின் உச்சி நிலையில் புலிகள் அமர்ந்துள்ளன. அவை, மான் போன்ற பிற தாவரவகைகளை (தாவர உண்ணிகள்) வேட்டையாடுகின்றன. ஆனால், போதுமான புலிகள் இல்லையென்றால், தாவர உண்ணிகள் எண்ணிக்கையில் அதிகரிக்கும். அவை அதிகமாக மேய்ந்து நிலத்தை சேதப்படுத்தும். இது உள்ளூர் சூழலின் சமநிலையை சீர்குலைக்கும்.
புலிகள் பற்றிய உண்மைகள் |
அறிவியல் பெயர்: பாந்திரியா டைகிரிஸ் எடை: 220-660 பவுண்டுகள் நீளம்: 6-10 அடி வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (WPA), 1972 நிலை : அட்டவணை I. IUCN சிவப்பு பட்டியல் நிலை: அழியும் நிலையில் உள்ளது. CITES நிலை: பின் இணைப்பு I. வாழ்விடங்கள்: வெப்பமண்டல மழைக்காடுகள், பசுமையான காடுகள், மிதமான காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் புல்வெளிக்காடுகள். இந்தியாவின் வாழ்விடம்: சிவாலிக்-கங்கை சமவெளி, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மலைகள் & பிரம்மபுத்திரா வெள்ள சமவெளிகள் மற்றும் சுந்தரவனக் காடுகள்.
|
புலிகள் அழிந்து விட்டால், அது முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதிக்கும். இது தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். உலக வனவிலங்கு நிதியத்தின் (Wildlife Fund's) வலைத்தளத்தின்படி, புலிகள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. புலிகள் வாழும் பகுதிகள் உலகின் வேறு எந்த காடுகளையும் விட அதிக கார்பனைச் சேமிக்கின்றன. ஆசியாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகள் கார்பனைச் சேமிப்பதில் சிறந்தவையாக உள்ளன. இவை, புலிகளைப் பாதுகாப்பதன் மூலம், நாம் ஒரு இனத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழிந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் காப்பாற்றுகிறோம்.
புலிகள் பாதுகாப்பு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறது?
புலிகளைப் பாதுகாப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், நிதிக்கான பலன்களையும் வழங்குகிறது. புலி காப்பகங்கள் விவசாய நிலங்கள், மீன் வளர்ப்பு பண்ணைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன, மேலும் சுத்தமான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்தை வழங்குகின்றன. இந்தப் பகுதிகள் அருகிலுள்ள சமூகங்களுக்கு பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கவை ஆகும்.
புலி காப்பகங்கள் சூழலியல் சுற்றுலாவையும் (ecotourism) ஈர்க்கின்றன. இது பெரும்பாலும் 'புலி சுற்றுலா' (tiger tourism) என்று அழைக்கப்படுகிறது. இது உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கிறது மற்றும் வேட்டையாடுதல் மற்றும் காடழிப்பு போன்ற தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளுக்கான சமூகத்தின் தேவையைக் குறைக்கிறது.
புலி சுற்றுலா |
ரந்தம்போர் தேசியப் பூங்காவின் இணையதளத்தின்படி, புலி சுற்றுலா என்பது காட்டுப் புலிகளின் இருப்பிடமான தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்குச் செல்லும் நடைமுறையைக் குறிக்கிறது. முதன்மையான குறிக்கோளாக கம்பீரமான விலங்கை அதன் இயற்கை வாழ்விடத்தில் பார்த்து அனுபவிப்பதாகும். புலிகள் சுற்றுலாவின் முக்கிய நோக்கம், பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதும், புலிகளின் அழிந்து வரும் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். |
உலக வனவிலங்குகளின் வலைத்தளத்தின்படி, உலகின் சில ஏழ்மையான சமூகங்களுக்கு புலிகள் நேரடியாக உதவ முடியும். புலிகள் இருக்கும் சில இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் சென்று, பணம் சம்பாதிப்பதற்கான சில மாற்று வழிகளைக் கொண்ட சமூகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். புலிகள் பாதுகாப்புத் திட்டங்கள் கிராமப்புற சமூகங்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை வழங்க உதவுகின்றன. அதாவது, வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுகின்றன.
கூடுதலாக, சுற்றுச்சூழல் சுற்றுலாவானது வருவாயை உருவாக்குகிறது. இந்த வருவாய் வேட்டையாடுதலுக்கு எதிரான ரோந்துகள், வாழ்விட மறுசீரமைப்பு மற்றும் காடுகளைப் பாதுகாத்தல் போன்ற பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க முடியும். இது சமூக அடிப்படையிலான பாதுகாப்பு திட்டங்களுக்கும் உதவுகிறது.
இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை நிலை என்ன?
2022-23 ஆம் ஆண்டுக்கான வெளியிடப்பட்ட கடைசி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 3,681 புலிகள் உள்ளன. அவற்றின் வரம்பு 3,167 முதல் 3,925 வரை உள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority (NTCA)) அறிக்கையின்படி, இந்தப் புலிகள் சுமார் 89,000 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளன.
புலிகள் இந்தியா முழுவதும் பல்வேறு "நிலப்பரப்புகளில்" (landscapes) காணப்படுகின்றன. இவற்றில், சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள், மத்திய இந்திய மலைப்பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா வெள்ளப்பெருக்கு சமவெளிகள் மற்றும் சுந்தரவனக்காடுகள் ஆகியவை அடங்கும்.
கார்பெட்டில் (Corbett) தேசிய பூங்காவில் 260 புலிகளுடன் மிக அதிகளவிலான புலிகள் எண்ணிக்கை உள்ளது. மேலும், இதில் பந்திப்பூர் (150), நாகர்ஹோலே (141), பாந்தவ்கர் (135), துத்வா (135), முதுமலை (113), கன்ஹா (105), காசிரங்கா (104), சுந்தர்பன்ஸ் (100), தடோபா-அந்தாரி (97), சத்தியமங்கலம் (87), மற்றும் ப்லமென்ச் (85) ஆகியவை அதிக மக்கள்தொகையைக் கொண்ட பிற காப்பகங்களில் அடங்கும்.
இந்திய மாநிலங்களில், மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 563, உத்தரகண்டில் 560 மற்றும் மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன. தற்போது, 50-க்கும் மேற்பட்ட புலிகள் கொண்ட 26 புலிகள் காப்பகங்கள் உள்ளன. மற்ற 27 காப்பகங்களில், புலிகளின் அடர்த்தி குறித்து கவலைகள் உள்ளன. 2022 அறிக்கையின்படி, 16 காப்பகங்களில் புலிகள் இல்லை, ஆண் புலிகள், அல்லது ஐந்துக்கும் குறைவான புலிகள் மட்டுமே உள்ளன. இந்த காப்பகங்கள் அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் அமைந்துள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் புலிகளின் எண்ணிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த சவால்களையும் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தில் புலிகளின் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் புரிந்துகொள்கிறது. அவற்றைப் பாதுகாக்க, பல புலி பாதுகாப்பு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புலிகள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள முக்கிய முயற்சிகள் என்ன?
தீரஜ் பாண்டே (தலைமை வனப் பாதுகாவலர், குமாவோன்) 'புலியின் மறுமலர்ச்சி : ஒரு கூட்டு முயற்சி, ஒரு கலாச்சார மறுமலர்ச்சி' - (Revival of the tiger: A joint effort, a cultural renaissance) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இந்தியாவில், புலியானது மத மற்றும் புராண சின்னங்களில் ஒரு முக்கிய பகுதியாகும். இது வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. வேட்டைக்காரராக இருந்து பாதுகாவலராக மாறிய ஜிம் கார்பெட்டின் கதைகள் புலியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. 1973-ம் ஆண்டில், புலிகள் அழிவின் விளிம்பில் இருந்தபோது, அது இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக மாறியது. அப்போதிருந்து, புலியின் மறுமலர்ச்சி ஒரு கலாச்சார மறுமலர்ச்சிக்கும் பாதுகாப்பு மதிப்புகளில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்துவதற்கும் வழிவகுத்தது.
திட்ட புலி (Project Tiger)
திட்டம் புலி (Project Tiger) என்பது ஏப்ரல் 1, 1973 அன்று இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு மத்திய நிதியுதவி திட்டம் (Centrally Sponsored Scheme (CSS)) ஆகும். இது, புலிகளைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து கொண்டிருந்தபோது இந்தத் திட்டம் தொடங்கியது.
புலிகள் மற்றும் பிற விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதையும், அத்துமீறி திருடுவதையும் தடுக்க, பிரதமர் இந்திரா காந்தி 1972-ல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை (Wildlife Protection Act) அறிமுகப்படுத்தினார். ஒரு வருடம் கழித்து, புலிகள் காப்பகங்களின் வலையமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழு பரிந்துரைத்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினார்.
புலிக் கோடுகள் எப்படி தனித்தன்மை வாய்ந்தவை? |
மனித கைரேகைகளைப் போலவே, ஒவ்வொரு புலியின் பட்டை வடிவமும் தனித்துவமானது. தனித்தனி புலிகளை அவற்றின் தனித்துவமான கோடுகளால் அடையாளம் காணலாம். அவை கேமரா ட்ராப் படங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தப்படுகின்றன. இந்த முறையானது, ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அல்லது ஒரு முழு நாட்டிற்கான பெரிய அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையை மதிப்பிட உதவுகிறது. |
திட்டம் புலி (Project Tiger) ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் தொடங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது புலிகள் காப்பகங்களில் தொடங்கியது. இவற்றில் அசாம், பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும். இந்த காப்பகங்கள் அனைத்தும் சேர்ந்து 14,000 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருந்தன.
இந்த திட்டம் புலிகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல. அவற்றின் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தியது. புலிகள் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருப்பதால் இது முக்கியமானதாக உள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority (NTCA))
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது புலிகள் பாதுகாப்பை வலுப்படுத்த, 1972 வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (Wildlife (Protection) Act) கீழ் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் NTCA குறிப்பிட்ட அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.
புலிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அகில இந்திய புலி மதிப்பீட்டை நடத்துகிறது. இது வழக்கமாக ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் இந்த மதீப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
புலிகளுக்கான கண்காணிப்பு அமைப்பு: தீவிர பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலை (Monitoring System for Tigers: Intensive Protection and Ecological Status(M-STrIPES))
"M-STrIPES" (புலிகளுக்கான கண்காணிப்பு அமைப்பு: தீவிர பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலை) என்பது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு தளமாகும். இது புலி காப்பகங்களைச் சுற்றி ரோந்து, சுற்றுச்சூழல் நிலையை மதிப்பிடுதல் மற்றும் மனித-வனவிலங்கு மோதலைக் குறைத்தல் ஆகியவற்றில் உதவுகிறது.
உலகளவில், பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்த இந்தியா அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, சுந்தரவன நிலப்பரப்பில் புலி பாதுகாப்பை ஊக்குவிக்க இந்தியாவும் வங்காளதேசமும் இணைந்து செயல்படுகின்றன.
உலகளாவிய புலிகள் தினம் |
2010-ம் ஆண்டு நிறுவப்பட்டது, இந்த அற்புதமான மற்றும் அழிந்து வரும் பெரிய பூனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 29 ஆம் தேதி உலகளாவிய புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. |
சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி (International Big Cats Alliance (IBCA)) 2023-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது ஏழு பெரிய பூனைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிங்கம், சிறுத்தை, பூமா மற்றும் ஜாகுவார் போன்றவை ஆகும். இந்த பெரிய பூனைகள் இயற்கையாக வாழும் நாடுகளை இந்த கூட்டணி இணைக்கிறது. புலி பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.
புலி பாதுகாப்புத் திட்டம் போன்ற அரசாங்க முயற்சிகள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்ட இந்தியா, ஒரு சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டும். இதில் அரசாங்க நடவடிக்கை, சமூக பங்கேற்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும். நாட்டில் புலிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்கு இந்த முயற்சிகள் அவசியம்.
Original article: