உள்ளூர் பொருளாதாரங்களை வளர்ப்பதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் தீர்வுகளை உருவாக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு விரிவான தரவு உதவும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, பொதுவாக சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் மூலம் அளவிடப்படுகிறது. இருப்பினும், நாட்டின் வளர்ச்சியின் மிக முக்கியமான அலகுகளான மாவட்டங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், உள்ளூர்மயமாக்கப்பட்ட வளர்ச்சியின் உத்திகளை ஊக்குவிப்பதன் மூலம், பொருளாதார முன்னேற்றத்தில் மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். இருப்பினும், துல்லியமான மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) மதிப்பீடுகள் இல்லாமல், கொள்கை வகுப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதில் முடிவெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டு முறையானது, மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறையைப் (top-down approach) பின்பற்றுகிறது. இது, முதலில் தேசிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது. பின்னர் மாவட்ட அளவில் பொருளாதார நடவடிக்கைகளை நேரடியாக அளவிடுவதற்குப் பதிலாக, கிடைக்கக்கூடிய குறிகாட்டிகளின் (available indicators) அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விநியோகிக்கிறது.
இது குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகளில் தெளிவாகத் தெரிகிறது. இது உள்ளூர் மட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த தெளிவற்ற புரிதலை ஏற்படுத்துகிறது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பினால், ஒவ்வொரு மாவட்டமும் எவ்வளவு பங்களிக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான பலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்கைகளை அது உருவாக்க வேண்டும்.
தற்போதைய முறைமை (Current methodology)
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு பொருளாதார நடவடிக்கைகளை மூன்று துறைகளாக பரவலாக வகைப்படுத்துகிறது. அவை, (i) முதன்மைத் துறை : விவசாயம், வனவியல், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கம் ஆகியவை அடங்கும்; (ii) இரண்டாம் நிலைத் துறை : உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியது, மற்றும் (iii) மூன்றாம் நிலைத் துறை : வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற சேவைகளை உள்ளடக்கியது.
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, துறையைப் பொறுத்து, மேல்-கீழ் (top-down) மற்றும் கீழ்-மேல் அணுகுமுறைகளின் (bottom-up methods) கலவையைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகிறது. முதன்மைத் துறையின் பங்களிப்பின் மதிப்பீடு கீழ்-மேல் அணுகுமுறையைப் (bottom-up approach) பின்பற்றுகிறது. மாவட்ட அளவில் தரவு சேகரிக்கப்பட்டு, பின்னர் மாநில மற்றும் தேசிய மட்டங்களில் ஒன்றிணைக்கப்படுகிறது. இருப்பினும், முதன்மைத் துறையில் தரவு சேகரிப்பு முறைகள் பெரும்பாலும் பழமையானவை மற்றும் சீரற்றவையாகும். இது துல்லியமின்மையை (inaccuracies) ஏற்படுத்துகிறது.
மறுபுறம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகளுக்கு, மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை (top-down approach) பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (national GDP) மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு வேலைவாய்ப்பு நிலைகள், ஊதியங்கள் அல்லது கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு போன்ற துறைசார்ந்த குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. இது உண்மையான பொருளாதார வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது அல்ல. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) இந்த செயல்முறையை மேற்கொள்கிறது.
இது மாவட்ட அளவிலான பிரிவினையின் சில நிலைகளை அனுமதிக்கும் அதே வேளையில், மாவட்ட அளவில் பொருளாதார யதார்த்தத்தை குறிகாட்டிகள் முழுமையாகப் பிரதிபலிக்காததால், நிகழ்நேர பொருளாதார செயல்பாடு அல்லது துறைசார் பங்களிப்புகளை இது துல்லியமாகக் காட்டாது. அமைப்புசாரா துறையில் தரவு இடைவெளிகள் மற்றும் கணக்கெடுப்பு முறைகளில் உள்ள வேறுபாடுகள் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை மேல்-கீழ் அணுகுமுறையில் (top-down approach) குறைந்த நம்பகத்தன்மையுடையதாக ஆக்குகின்றன.
இந்த முறை பயன்படுத்த எளிதானது. இருப்பினும், இது கடுமையான வரம்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு மாவட்டத்தின் பொருளாதார பலங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்காது. இது ஒரு நிர்வாகப் பணியாக மட்டுமே செயல்படுகிறது.
இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு அணுகுமுறையை உருவாக்குகிறது. இது உள்ளூர் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாது. இந்தக் கருத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டு இங்கே குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, கோவிட்-19 காலகட்டத்தில் முறைமையில் உள்ள இடைவெளி மிகவும் தெளிவாகியது. 2020-21ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவை விநியோகிக்க புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அதன் வழக்கமான முறையைப் பயன்படுத்தியது. இது மாநிலங்களுக்கு இடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியை விகிதாசாரமாகப் பிரித்தது. உத்தரப் பிரதேசம் இந்த முறையை எதிர்த்தது. மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross State Value Added (GSVA)) விவசாயம் 25% என்று உத்திரப் பிரதேசம் வாதிட்டது. மேலும், 65% மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்.
இந்தத் துறை, தொழில்துறைவிட குறைவாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் சரிவு, உற்பத்தித் துறையிலிருந்து மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலின் (GSVA) அதிக பங்கைக் கொண்ட மாநிலங்களைவிட குறைவாக இருக்க வேண்டும். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதற்கு கீழ்மட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துவதை ஆதரித்த முதல் அரசாங்கங்களில் உத்திரப் பிரதேச அரசும் ஒன்றாகும். இந்த அணுகுமுறை மாவட்ட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது.
மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) மதிப்பீட்டின் விரிவான தரவு, கொள்கை வகுப்பாளர்கள் சிறந்த திட்டங்களை உருவாக்க உதவும். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தலாம். எடுத்துக்காட்டாக, மாவட்ட அளவிலான GDP மதிப்பீடுகள் வெவ்வேறு பிராந்தியங்களில் எந்தத் துறைகள் பலவீனமாக உள்ளன என்பதைக் காட்டலாம். அது ஒரு மாவட்டத்தில் விவசாயமாகவோ அல்லது மற்றொரு மாவட்டத்தில் உற்பத்தியாகவோ இருக்கலாம். இந்தத் தகவல் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய துறைகளில் இலக்குக்காக முதலீடுகளைச் செய்ய உதவும்.
தேசிய அல்லது மாநில அளவிலான கொள்கைகள் வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவும். இது மிகவும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அந்தக் கொள்கைகளை சரிசெய்வதை எளிதாக்கும். இந்த அணுகுமுறை நிதி கூட்டாட்சியை (fiscal federalism) வலுப்படுத்தும். மாநில அல்லது மத்திய அரசாங்கங்கள் தங்கள் வளர்ச்சிப் பாதையை அமைக்க சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மாவட்டங்கள் தங்கள் சொந்த பொருளாதார உத்திகளை உருவாக்க முடியும். இந்த உத்திகள் இன்னும் தேசிய மற்றும் மாநில இலக்குகளுடன் ஒத்துப்போகும்.
கணிசமான முதலீடுகள் (Substantial investments)
வலுவான மாவட்ட அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி அமைப்புக்கு மாறுவது தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு சேகரிப்பை மேம்படுத்துவதற்கு நிறைய பணமும் முயற்சியும் தேவைப்படும். இதற்கு ஒன்றிய மற்றும் மாநில புள்ளிவிவர நிறுவனங்களுக்கு இடையே தீவிர அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணியும் தேவை. புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளில் $1 முதலீடு செய்வது வளர்ச்சியில் $32 திரும்பக் கொடுக்கும் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பொருளாதாரக் கொள்கை வகுப்பில், நாடு அல்லது மாநிலங்களிலிருந்து ஒட்டுமொத்த தரவைப் பார்ப்பது பொதுவான முறையாகும். இது அனைத்து மக்களுக்கும் பரந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. இருப்பினும், இந்த உயர்மட்ட அணுகுமுறை பெரும்பாலும் பிராந்தியங்களுக்கு இடையிலான முக்கியமான வேறுபாடுகளை புறக்கணிக்கிறது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, ”வளர்ந்த இந்தியா-2047” (Viksit Bharat 2047)-க்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை அதன் மாவட்டங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தச் சூழலில், மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (District Domestic Product (DDP)) மதிப்பீடு ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமான பொருளாதார இயக்கவியலை தக்கவைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியை வழங்குகிறது. இது கொள்கை வகுப்பாளர்கள் உள்ளூர் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்யும் இலக்குக்கான தலையீடுகளை வடிவமைக்க உதவுகிறது. இது பொருளாதார வளர்ச்சி சமமாக இருப்பதையும், மிகவும் பின்தங்கிய பகுதிகளை அடைவதையும், அதேநேரத்தில் பின்தங்கியிருக்காமல் இருப்பதையும் உறுதி செய்யும்.
சம்ரிதி ஒரு ஆராய்ச்சியாளராகவும், பாயல் ஒரு இணை ஆய்வாளராகவும், MoSPI இன் முன்னாள் DG ஆஷிஷ், பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ஒரு சிறப்பு ஆய்வாளராகவும் உள்ளனர்.