வக்ஃப் சட்டம்-1995 (Waqf Act-1995) ஐ திருத்தம் செய்வதற்கான புதிய மசோதாவை ஒன்றிய அரசு ஆகஸ்ட் 8-ம் தேதி வியாழக்கிழமை, மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மூலம், வக்ஃப் சொத்துக்கள் மீதான ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலமும், முஸ்லிம் அல்லாதவர்களை முதல் முறையாக வக்ஃப் வாரியங்களில் சேர அனுமதிப்பதன் மூலமும் இந்த சட்டத்தை சீர்திருத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வரைவுச் சட்டமானது, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்-2024 (Unified Waqf Management, Empowerment, Efficiency, and Development Act-2024) என்று மறுபெயரிடப்பட இந்தப் புதிய சட்டத்தின் மூலம், வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான செயல்திறனை" மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான மறுசீரமைப்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வாரியங்களின் பங்குதாரர்களிடம் போதிய ஆலோசனை இல்லாமல் மசோதாவை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியதாக பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை மீறுவதுடன், திருத்தங்கள் மூலம் வக்ஃப் வாரியங்களை வலுவிழக்கச் செய்து, அவற்றை "குரலற்ற பார்வையாளர்களாக" (mute spectators) மாற்றும் என்றும், பல மதச் சுதந்திரங்களை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ளும் என்றும் எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
இந்தியாவில் 'வக்ஃப்' சட்டம் (‘Waqf’ law in India)
இஸ்லாமிய சட்டத்தில், வக்ஃப் (waqf) என்பது மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை குறிக்கிறது. பொது நலனுக்காக ஒதுக்கப்பட்ட எந்தவொரு அசையும் அல்லது அசையாச் சொத்துக்களும் இதில் அடங்கும். இது முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களின் தொண்டுக்கான செயல்களை நீட்டிக்க அனுமதிக்கும் ஒரு பக்தியான செயலை உள்ளடக்கியது. ஒரு வக்ஃப் ஒரு முறையான பத்திரம் அல்லது ஆவணம் (formal deed or document) மூலம் நிறுவப்படலாம் அல்லது ஒரு சொத்து நீண்ட காலத்திற்கு மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை வக்ஃப் என்று கருதலாம். இத்தகைய சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானம் பொதுவாக மசூதிகளை பராமரிக்கவும், பள்ளிகளுக்கு நிதியளிக்கவும் அல்லது ஏழைகளுக்கு உதவவும் பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், வக்ஃப் (waqf) என தீர்மானிக்கப்பட்டவுடன், சொத்தை பரம்பரை மூலம் மாற்றவோ, விற்கவோ அல்லது கொடுக்கவோ முடியாது. ஒரு முஸ்லிமல்லாதவர் (non-Muslim) ஒரு வக்ஃப்பை உருவாக்க அனுமதிக்கப்படுகிறார். இருப்பினும், அதை உருவாக்குவதன் நோக்கம் இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
இந்தியாவில், வக்ஃப்கள் 1995 சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், வக்ஃப் சொத்துக்கள் கண்டறியப்பட்டு, மாநில அரசு நடத்தும் கணக்கெடுப்பின் மூலம் வரையறுக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு கணக்கெடுப்பு ஆணையர் (survey commissioner) நியமிக்கப்படுகிறார். இந்த ஆணையர் உள்ளூர் விசாரணைகளை நடத்தி, சாட்சிகளின் சாட்சியங்களை சேகரித்து, பொது ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் சொத்துக்களை அடையாளம் காட்டுகிறார். அடையாளம் காணப்பட்ட பிறகு, இந்த சொத்துக்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் (State's official gazette) பதிவு செய்யப்படுகின்றன. மாநில வக்ஃப் வாரியம் (State Waqf Board) இந்த சொத்துகளின் பட்டியலை பராமரிக்கிறது. ஒவ்வொரு வக்ஃபும் அதன் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஒரு அறக்காப்பாளர் அல்லது பாதுகாவலர் (mutawalli or custodian) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. வக்ஃப் என்பது 1882-ன் இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் (Indian Trusts Act) கீழ் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையைப் போன்றது. இருப்பினும், ஒரு அறக்கட்டளையைப் போலன்றி, ஒரு வாரியத்தால் வக்ஃப் அமைப்பை கலைக்க முடியாது.
வக்பு வாரியத்தின் பங்கு
1995-ம் ஆண்டு சட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் வாரியங்கள் மூலம், தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள வக்ஃப் தொடர்பான சொத்துக்களை நிர்வகிப்பதற்குப் பொறுப்பாகும். அவர்கள் நீதித்துறை நபர்களாக (juristic persons) அங்கீகரிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்ளலாம். ஒவ்வொரு மாநில வக்ஃப் வாரியத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். இந்த வாரியத்தில் மாநில அரசாங்கத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நபர்கள் உள்ளனர். முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் வக்ஃப்களின் அறக்காப்பாளர் (mutawalli) ஆகியோரும் வாரியத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். ஒவ்வொரு வாரியத்திற்கும் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மாநில அரசாங்கத்தில் துணை செயலாளர் (Deputy Secretary in State government) பதவியில் இருக்க வேண்டும்.
வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் இழந்த சொத்துக்களை மீட்பதற்கும் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கும் வக்ஃப் வாரியத்திற்கு (Waqf Board) அதிகாரம் உள்ளது. இது விற்பனை (sale), பரிசு (gift), அடமானம் (mortgage), பரிமாற்றம் (exchange) அல்லது குத்தகை (lease) மூலம் அசையா வக்ஃப் சொத்தை மாற்றுவதற்கும் வாரியம் ஒப்புதல் அளிக்கலாம். இருப்பினும், இதற்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும். 1995-ம் ஆண்டு சட்டத்தில், 2013-ல் திருத்தங்கள் வாரியத்தின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியது மற்றும் வக்ஃப் சொத்துக்களை விற்பதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியது. ஏனெனில், இந்த சொத்துக்களை விற்க அறக்காப்பாளருக்கோ (mutawalli) அல்லது வாரியத்திற்கோ உரிமை இல்லை.
மாநில வக்ஃப் வாரியங்களுக்கு கூடுதலாக, இந்த சட்டத்தின் மூலம் ஒன்றிய வக்ஃப் ஆணையத்தை (Central Waqf Council) உருவாக்குகிறது. இது சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆலோசனை அமைப்பாகச் (national advisory body) செயல்படுகிறது. நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்கள் தொடர்ந்து நிர்வகிக்கப்படுவதை இந்த ஆணையம் உறுதி செய்கிறது. இதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார். வக்ஃப் வாரியம் தொடர்பான பிரச்சனைகளிலும் இந்த ஆணையம் ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது. இதில் கொள்கைகளை உருவாக்குதல், வக்ஃப் தொடர்பான சட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.
முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள முக்கிய மாற்றங்கள்
இந்த மசோதாவின் கீழ், குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாக இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் சட்டபூர்வமான சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே முறையான பத்திரங்களை நிறைவேற்றுவதன் மூலம் 'வக்ஃப்' சொத்துக்களை உருவாக்க அதிகாரம் உள்ளது. இந்தத் திருத்தம், 'பயன்பாடு மூலம் வக்ஃப்' (waqf by use) என்ற கருத்தை நீக்குகிறது. இதன் உண்மையான பத்திரம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு சொத்தை வக்ஃப் எனக் கருத அனுமதிக்கிறது. பாரம்பரியமாக, வக்ஃப் சொத்துக்கள் பெரும்பாலும் வாய்வழி ஒப்பந்தங்கள் (oral agreements) மூலம் அர்ப்பணிக்கப்பட்டன. பின்னர்தான், முறையான ஆவணங்கள் நிலையான நடைமுறையாக மாறியது.
எந்தவொரு, மோசடியான வக்ஃப் உரிமைகோரல்களைத் (waqf claims) தடுக்க, வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் வக்ஃப் சொத்தாக அங்கீகரிக்கப்படாது என்று இந்த திருத்த மசோதா கூறுகிறது. கூடுதலாக, விதவைகள் (widows), விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் (divorced women) மற்றும் ஆதரவற்றோர்கள் (orphans) வக்ஃப் சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தின் பயனாளிகளாக இருக்க சட்டம் அனுமதிக்கிறது.
முன்பு 1995 சட்டத்தின் கீழ், கணக்கெடுப்பு ஆணையரால் நிர்வகிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை ஆய்வு செய்யும் பொறுப்பு, இப்போது மாவட்ட ஆட்சியர்கள் அல்லது அதற்கு சமமான நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும். வக்ஃப் வாரிய சொத்து பதிவுகளின் துல்லியத்தை மேம்படுத்த, ஒரு மையப்படுத்தப்பட்ட பதிவு முறையை (centralised registration system) இந்த திருத்த மசோதா முன்மொழிகிறது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் வக்ஃப் சொத்துக்கள் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த போர்ட்டலில் (portal) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், எந்தவொரு புதிய வக்ஃப் சொத்து பதிவுகளும் இந்த போர்டல் மூலம் பிரத்தியேகமாக வக்ஃப் வாரியங்களுக்கு சமர்ப்பிக்கப்படவும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு தகுதியுடையதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்ஃப் தீர்ப்பாயங்களுக்கு (waqf tribunals) முன்பு வழங்கிய அரசியலமைப்புப் பிரிவு-40ஐ இந்த மசோதா நீக்குகிறது. மாறாக, இது போன்ற விஷயங்களில் மாவட்ட ஆட்சியரை இறுதி தீர்ப்பு நடுவராக நியமிக்கிறது. இதை நிர்ணயம் செய்யப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் இந்த வாரியத்தின் வருவாய் பதிவேடுகளை புதுப்பித்து, மாநில அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், ஆட்சியர் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சர்ச்சைக்குரிய சொத்தை வக்ஃப் சொத்தாகக் கருத முடியாது என்று மசோதா தெளிவுபடுத்துகிறது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் இறுதி முடிவெடுக்கும் வரை, சர்ச்சைக்குரிய நிலத்தை வக்பு வாரியம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்பதையும் இது தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த திருத்த மசோதாவின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்று, முக்கியமான வக்ஃப் நிறுவனங்களில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க முன்மொழியப்பட்டதாகும். இந்த நிறுவனங்களில் ஒன்றிய வக்ஃப் ஆணையம் (Central Waqf Council), மாநில வக்ஃப் வாரியங்கள் (State Waqf Boards) மற்றும் வக்ஃப் தீர்ப்பாயங்கள் (waqf tribunals) ஆகியவை அடங்கும். இந்த புதிய மசோதாவின் மாற்றங்கள் ஒன்றிய வக்ஃப் ஆணையத்துக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசை அனுமதிக்கிறது. இதில் மக்களவையிலிருந்து இருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவர். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் புதிய விதியில் குறிப்பிடவில்லை. ஆனால் முன்னதாக, 1995-ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. கூடுதலாக, இதேபோல், புதிய திருத்த மசோதாவின்படி, மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இருவரையும், இரண்டு பெண்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
வக்ஃப் தீர்ப்பாயங்களின் அமைப்பு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பிலிருந்து இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயம் இனி மாவட்ட நீதிபதி மற்றும் மாநில அரசின் இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியைக் கொண்டிருக்கும். முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, ஆறு மாதங்களுக்குள் நீதிமன்றங்கள் தகராறுகளைத் தீர்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் இந்த காலகட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்.
கடுமையான நிதி மேற்பார்வை (Stringent financial oversight)
இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller and Auditor General of India (CAG)) நியமிக்கப்பட்ட ஒரு தணிக்கையாளர் அல்லது அந்த நோக்கத்திற்காக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியாலும் எந்த நேரத்திலும், எந்தவொரு வக்ஃப் வாரிய கணக்கையும் தணிக்கை செய்ய இந்த திருத்த மசோதா ஒன்றியத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், வக்ஃப் வாரியங்கள் தங்கள் கணக்குகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து தணிக்கையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில், முறையான கணக்குகளை பராமரிக்க தவறினால், அறக்காப்பாளர் (mutawalli) என்ற பாதுகாவலர் மீதும் அபராதம் விதிக்கப்படும்.
நீதித்துறை ஆய்வு (Judicial review)
வக்ஃப் தகராறுகளில் நீதிமன்றங்கள் தலையிட முன்மொழியப்பட்ட இந்த சட்ட மசோதாவானது அனுமதிக்கிறது. இது வக்ஃப் தீர்ப்பாயங்கள் (waqf tribunals) எடுக்கும் முடிவுகளின் இறுதித் தன்மையை நீக்கி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது. இது நீதித்துறையின் மேற்பார்வையை (judicial oversight) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், வக்ஃப் வாரியங்கள் அல்லது தீர்ப்பாயங்கள் தன்னிச்சையாக அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
சாத்தியமான விளைவுகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி
பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பிரபல கல்வியாளரும், துணை வேந்தருமான பேராசிரியர் (Vice Chancellor of Chanakya National Law University) பைசான் முஸ்தபா, தி இந்துவிடம் கூறுகையில், இந்த திருத்தங்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இதில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மீறாமல் வக்ஃப் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது முக்கியம் என்றும், அதே நேரத்தில், இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 25-வது பிரிவு உத்தரவாதம் அளிக்கும் மத சுதந்திரத்தை மீறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். “நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நிர்வாக அதிகாரிகளால் எடுத்துக்கொள்ள முடியாது. இது நியாயமான நீதித்துறை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.
வக்ஃப் வாரியச் சொத்து நிர்வாகத்தின் அதிகரித்த மையமயமாக்கல் முஸ்லிம் மத நிறுவனங்களின் சுயாட்சியைக் (autonomy of Muslim religious institutions) குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள இந்துக் கோயில் வாரியங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று முஸ்தபா கேள்வி எழுப்பினார். மேலும், அரசாங்கத்தின் அதிகப்படியான கட்டுப்பாடு பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் முரண்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கூடுதல் ஆய்வுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (joint parliamentary panel) அனுப்பப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்த சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி எதிர்த்ததால் இது நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், 1995 சட்டத்தின் பல்வேறு விதிகளை எதிர்த்து 120 மனுக்கள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தது.
Original article: