பின் தேதியிட்ட அனுமதிகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுற்றுச்சூழல் சட்டத்தை பல பத்தாண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது. -ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

ஆரோக்கியமான சூழலுக்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டபோது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று எதிர்கால சந்ததியினர் திரும்பிப் பார்த்துக் கேட்க வாய்ப்புள்ளது.


தேசிய தலைநகரின் காற்று அபாயகரமான அளவில் மாசுபட்டுள்ளது. இது மக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கிறது. உலகில் மிகவும் மாசுபட்ட 100 நகரங்களில், 83 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. டெல்லியில் உள்ள குழந்தைகள் 10 வயதிற்கு முன்பே நுரையீரல் திறனை இழக்கின்றனர். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் புற்றுநோயை உண்டாக்கும் துகள்களை சுவாசிக்கின்றனர். இளம் குழந்தைகள் உட்பட மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர். சுற்றுச்சூழல் விதிகள் அத்தியாவசியமானவை என்பதை உணர்ந்தும் அவற்றை புறக்கணிப்பது மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை ஒரு பயங்கரக் கனவாக மாற்றுகிறது என்று கூறுகின்றனர்.


இப்போதைய சூழலில் உச்சநீதிமன்றம் “பின்தேதியிட்ட” சுற்றுச்சூழல் அனுமதியை ஏற்றுக்கொண்ட தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அரசுகள் மக்கள் போராட்டத்தை அடக்கியபோது கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றமே இப்படி தீர்ப்பு சொன்னது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்ட வரலாற்றில் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திய தீர்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவிக்கின்றனர்.


இந்தத் தீர்ப்புக்கு முன்னர், மே மாதம் 16-ஆம் தேதியன்று, வனசக்தி vs இந்திய ஒன்றியம் வழக்கில், பின் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிச்சான்றுகள் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர், இந்திய மனை வணிக நிறுவனங்கள் கூட்டமைப்பு (Confederation of Real Estate Developers of India) அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு அளித்திருந்தது. மேலும் நவம்பர் மாதம் 18-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அதைத் தள்ளுபடி செய்தது. முன்னோக்குச் சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றுகளை வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் "அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு" மட்டுமே வழங்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 


இந்தத் தீர்ப்பு வெறும் நடைமுறைக் குறைபாட்டின் வழியை மட்டும் திறக்கவில்லை. இது, பல ஆண்டு காலமாக மிகுந்த சிரமத்துடன் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பையே அச்சுறுத்துகிறது. உலகின் மோசமான மாசுபாடு குறியீடுகளுடன் போராடும் ஒரு நாட்டில், குழந்தைகள் விஷத்தை சுவாசிக்கும், நச்சு நுரையால் மூடப்பட்ட ஆறுகள் உயிருக்காகப் போராடும் நிலையில், இந்தத் தீர்ப்பு பிரச்சினையை முற்றிலும் மோசமாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர்.


சுற்றுச்சூழல் அனுமதி என்பது வெறும் வழக்கமான நடைமுறை அல்ல. அது சுத்தமான காற்று, நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையை உள்ளடக்கிய, வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் உள்ள ஒரு அரசியலமைப்பு உரிமை ஆகும். இதன் முக்கிய நோக்கம் தடுப்பு ஆகும். அதாவது, மாசுபாடு ஏற்பட்ட பிறகு சேதத்தைச் சரிசெய்வதைவிட, அது நடப்பதற்கு முன்பே நிறுத்துவது நல்லது என்பதை முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்கின்றனர். மக்கள் ஏற்கனவே நச்சுக் காற்றை சுவாசிக்கும் நிலைக்கு  ஆளான பிறகு நம்மால் அதனை ஒழுங்குபடுத்த முடியாது. மேலும், மாசுபடுத்துபவர்கள் முதலில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புகளைச் செய்துவிட்டு, பிறகு மன்னிப்புக் கேட்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.


இந்தத் தீர்ப்பு, சுற்றுச்சூழல் சட்டங்களைப் புறக்கணித்து, விதிகளை மீறி, நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியவர்களுக்கும்கூட பாதுகாப்பை அளிக்கிறது. இது தவறான செயல்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றி, சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போலாகிறது. இதன்மூலம், சட்டத்தைப் பின்பற்றுவது ஒரு விருப்பத் தேர்வு என்றும், சட்டத்தை மீறுவது லாபகரமானது என்று நேர்மையான மக்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையை தெரிவிப்பதாக அமைகிறது. 


கடந்த பத்து ஆண்டுகளில், நமது சுற்றுச்சூழல் சட்டங்கள் சீராக பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்தச் சட்டங்களை வெளிப்படையாக பெரிய தடைகளாகவே கருதுகிறது. ஆனால், நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும்போது  இந்தச் சூழலை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.


இங்கே ஐந்து உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: இதில் முதலாவதும் மிகவும் அறியப்பட்டதும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு 2020 (மற்றும் 2021 அலுவலக குறிப்பாணை) ஆகும். இந்த அறிவிப்பானது, பிறகு சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதை ஒரு வழக்கமான நடைமுறையாக மாற்ற முயன்றது. இது, முன் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த தொழில்கள், பிறகு ஒரு சிறிய அபராதத்துடன் ஒப்புதல் பெற அனுமதிக்கிறது என்கின்றனர். இது தொழிற்சாலைகள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்கும் காலத்தைக் குறைத்தது, பொதுமக்களின் கருத்துக் கேட்பை வரம்பாக்கியது, (Environmental Impact Assessment (EIA)) (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) தேவையில்லாத தொழில்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, பெரிதும் விமர்சிக்கப்படும் இந்த சுற்றுச்சூழல்-விரோத சட்டத்துக்கு ஆதரவாகவே அமைந்திருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.


இரண்டாவதாக, காடு (பாதுகாப்பு) சட்டத்தில் (Forest (Conservation) Act (FCA)) செய்யப்பட்ட திருத்தங்கள், "வன நிலம்" என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து, முன்னர் நீதித்துறை விளக்கத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட காட்டு நிலங்களை திறம்பட விலக்கின. வரலாற்று சிறப்புமிக்க டி.என். கோதவர்மன் திருமுல்பாட் vs இந்திய ஒன்றியம் (1996) மூலம் ஒரு காலத்தில் பாதுகாக்கப்பட்ட பெரிய பகுதிகள் திடீரென வரையறைக்கு உள்ளாக இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தத் திருத்தம், காடுகள் நிறைந்த பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மற்றும் பழங்குடிப் பகுதிகளில், முந்தைய பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்கு ராஜதந்திர ரீதியிலான நேரியல் திட்டங்களை, அதாவது சாலைகள், ரயில்வே மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை அனுமதித்தது. மேலும், இது கடுமையான நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படாமல் காடுகள் ஆக்கிரமிப்புக்கான பல வழிகளைத் திறந்துள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.


மூன்றாவதாக, பல ஆண்டுகளாக, நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் குறிப்பிட்ட கட்டுமானப் பிரிவுகள் உட்பட முக்கியமான துறைகளுக்கு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன அல்லது குறைந்த ஒழுங்குமுறைக் குழுக்களில் வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, “B2” வகைகளின்கீழ் வகைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) தேவையில்லை என்றும் பொது விசாரணை தேவையில்லை என்றும் மிகக் குறைந்த சுற்றுச்சூழல் மேற்பார்வை மட்டுமே போதுமானது என்றும் அங்கீகரிக்கப்படுவது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துமென்று தெரிவிக்கின்றனர். இது பல சுரங்கம் மற்றும் தொழிற்சாலை வேலைகளில் மிக முக்கியமான பாதுகாப்பு விஷயமான “பொது ஆலோசனை” என்ற மிக முக்கியமான பாதுகாப்பு விதியை மீறச் சாதகமாக அமைகிறது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


நான்காவதாக, 2018-ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு (Coastal Regulation Zone (CRZ))-2018 கடற்கரையோரப் பாதுகாப்பை மிகவும் பலவீனப்படுத்தியது. இதனால், கடற்கரைக்கு மிக அருகில் கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைத்தது, உணர்திறன் மிக்க கடலோரப் பகுதிகளை சுற்றுலா திட்டங்களுக்கு அளித்தது, வியாபார நோக்கில் கட்டுவதற்கான கட்டுப்பாடுகளை

தளர்த்தியது போன்றவை பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.  இந்தியக் கடற்கரைகள் ஏற்கனவே மண் அரிப்பு, கடல் மட்டம் உயர்வு, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்ற ஆபத்து இன்னும் அதிகரித்து வரும் இந்நேரத்தில், இந்த புதிய விதிகள் கடற்கரையைப் பாதுகாப்பதற்குப் பதில், தனியார் நிறுவனங்கள் அதன் வளங்களைச் சுரண்டிக்கொள்ள எளிதாக வழிவகுத்தன.


ஐந்தாவது, சுற்றுச்சூழல் மற்றும் வன ஒப்புதல்கள் இப்போது திட்டங்களுக்கு வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போடும் குழுக்களால் மிக விரைவாக வழங்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் பெரும்பாலும் இணையம் வழியாகச் சந்தித்து, பல திட்டங்களை ஒரே நேரத்தில் மதிப்பாய்வு செய்து, கள ஆய்வு மிகக் குறைவாகவே செய்து ஒப்புதல் அளிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், 95 சதவீதத்துக்கும் அதிகமான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய பாதுகாப்பு அமைப்பை வெறும் ஒப்புதல் செயல்முறையாக மாற்றியுள்ளது. முன்னர் சமூகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதித்த பொது விசாரணைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க வாய்ப்பில்லாமல் பாதிப்படைகின்றனர். 


இது போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கியபிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என்றும், பிற்போக்கு அனுமதிகளைத்  (post-facto clearances) தடை செய்வதாக முந்தைய தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், 2021-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பு (Office Memorandum) போன்ற விதிகள், மாசுபாடு இல்லாத சூழலில் வாழ மக்களுக்கு உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் (Article 21) கீழ் உள்ள அடிப்படை உரிமையை மீறுகின்றன என்று அத்தீர்ப்பில் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


ஆரோக்கியமான சூழலுக்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டபோது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று எதிர்கால சந்ததியினர் திரும்பிப் பார்த்துக் கேட்க வாய்ப்புள்ளது.


எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.



Original Article : SC ruling on post-facto clearances sets environmental law back by decades.

Share:

கடந்த 10 ஆண்டுகளில், எந்த ஒரு பெரிய இந்திய நகரமும் பாதுகாப்பான காற்று தர நிலையை அடையவில்லை: புதிய ஆய்வு ஒன்று சொல்வது என்ன?

சமீபத்திய ஆய்வின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் டெல்லிதான் 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை மிக மோசமான காற்று மாசு அளவினைக் கொண்டிருந்தது. டெல்லியில் ஆண்டு சராசரி  காற்று தரக் குறியீடானது (Air Quality Index (AQI)) 2016-ஆம் ஆண்டில் மிக அதிகமாக (250-க்கு மேல்) இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் பாதுகாப்பான அளவைவிட மிகவும் மோசமாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 


ஒரு புதிய பகுப்பாய்வின்படி, 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் எந்தப் பெரிய நகரத்திலும் “பாதுகாப்பான” காற்றுத் தரம் இல்லை என்று தெரிவிக்கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் டெல்லியே அதிக காற்று தரக் குறியீட்டுடன் மிக மோசமான மாசுபட்ட நகரமாக இருந்தது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட “கிளைமேட் ட்ரெண்ட்ஸ்” (Climate Trends) நிறுவனம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை “முக்கிய இந்திய நகரங்களின் காற்றுத் தர மதிப்பீடு (2015–2025)” (‘Air Quality Assessment of Major Indian Cities (2015–2025))’ என்கிற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வு 11 பெரிய நகரங்களின் ஆண்டு சராசரி காற்றுத் தரத்தை ஆராய்ந்து தரவுகளை வெளியிட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, வாரணாசி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 


காற்று தரக் குறியீட்டின் அளவு 0 முதல் 50 வரை இருக்கும்போது, காற்றின் தரம் பொதுவாக பாதுகாப்பான அளவில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 


தகவல்கள்

சமீபத்திய ஆய்வின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் டெல்லிதான் 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை மிக மோசமான காற்று மாசு அளவினைக் கொண்டிருந்தது. டெல்லியில் ஆண்டு சராசரி காற்று தரக் குறியீடானது (Air Quality Index (AQI)) 2016-ஆம் ஆண்டில் மிக அதிகமாக (250-க்கு மேல்) இருந்தது. 2019-ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் பாதுகாப்பான அளவைவிட மிகவும் மோசமாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 2025-ஆம் ஆண்டில் டெல்லியின் சராசரி காற்று தரக் குறியீடு 180-ஆக உள்ளது. இது இன்னும் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவு என்றே குறிப்பிடுகின்றனர்.


டெல்லியைத் தொடர்ந்து லக்னோ, வாரணாசி, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் நீண்டகாலத்திற்கு உயர்த்தப்பட்ட காற்றின் தரக் குறியீட்டு அளவை எட்டியுள்ளன.


"லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய நகரங்கள் மிக உயர்ந்த அளவுகளுடன் (பெரும்பாலும் 200-க்கு மேல்) தொடங்கின. மேலும், 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு நகரங்களும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டினாலும், அவற்றின் 2025 காற்று தரக் குறியீட்டு மதிப்புகள் ஆரோக்கியமான வரம்புகளைவிட அதிகமாகவே உள்ளன," என்று அந்த பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

AQI2015-ஆம் ஆண்டு முதல் 20 நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு நகரத்திற்கும் தினசரி AQI மதிப்புகளிலிருந்து பெறப்பட்ட சராசரி காற்று தரக் குறியீடு. மூலம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB) & காலநிலை போக்குகள் (climate trends)

மற்ற நகரங்களை விட சென்னை, சண்டிகர், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய நான்கு நகரங்களில் காற்றின் தரம் சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த நகரங்களிலும் காற்று “ஆரோக்கியமான நிலை”யை எட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர். பகுப்பாய்வில் இந்த நகரங்களின் காற்று தரக் குறியீட்டு அளவு 80

முதல் 140 வரை இருந்தது தெரியவந்தது. அதாவது, மற்ற இடங்களைவிட காற்றின் தரம் நன்றாக இருந்தாலும், இவையும் முழுமையாக சுத்தமான காற்று இல்லை என்று தெரிவிக்கின்றனர்.


ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 11 நகரங்களில் பெங்களூருவின் காற்று தரம் ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தாலும், 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம்  2025-ஆம் ஆண்டு வரை ஒரு நாள்கூட "பாதுகாப்பான" (காற்று தரக் குறியீடு  0-50) அளவை எட்டவில்லை என்கின்றனர். பெரும்பாலான ஆண்டுகளில் பெங்களூருவின் காற்று தரக் குறியீட்டு (AQI) அளவானது 65 முதல் 90 வரைதான் இருந்தது என்று தெரிவிக்கின்றனர்.



காரணங்கள்

டெல்லியில் மாசுபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக வாகனங்கள் வெளியிடும் புகைகள், தொழிற்சாலை நடவடிக்கைகள், பருவகாலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது மற்றும் புவியியல் காரணிகள் ஆகியவைதான் என்று அறிக்கை

தெரிவிக்கின்றன. தேசிய தலைநகரில் இந்த ஆண்டு குளிர்காலத்தில் வேளாண் சாகுபடி முடிந்த நிலங்களில் தீ வைப்பது குறைந்திருந்தபோதிலும், காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள் உயர்வாகவே இருக்கின்றன. ஏனெனில், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வரை டெல்லியில் மழை எதுவும் பெய்யவில்லை என்பது முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மழை பெய்யும்பட்சத்தில் மாசு அளவு கட்டுக்குள் இருந்திருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 


"இந்த ஆண்டு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலைகள் (Western Disturbances) மிகப் பலவீனமாக இருந்தன. அதனால், வட இந்தியாவில் நல்ல மழை பெய்யவில்லை என்பது காரணமாகக் கூறப்படுகிறது.  மழை இல்லாததால் காற்றில் உள்ள மாசு அகற்றப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே இப்போதே புகைமூட்டம் நிலை ஏற்பட்டு, அது நீண்ட நாட்கள் நீடிக்கிறது" என்று Skymet Weather என்கிற நிறுவனத்தின் துணைத் தலைவர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், பெங்களூரு போன்ற பெருநகரங்களில், பல ஆண்டுகளாக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகரித்து வருவதால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்கின்றனர்.

நாடு முழுக்க போக்குவரத்து, தொழிற்சாலைகள், வானிலை மாற்றம், வேகமான நகர வளர்ச்சி ஆகியவற்றால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் நலனையும் நகரங்களின் நீண்டகால எதிர்காலத்தையும் காக்க, கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள், அவற்றை சரியாக அமலாக்குவது, தூய்மையான எரிசக்திக்கு மாறுவது, ஒருங்கிணைந்த மாசுக் கட்டுப்பாடு

நடவடிக்கைகள் ஆகியவை மிக அவசியம் என்பதையே கடந்த 10 ஆண்டுகாலப் போக்கு வலியுறுத்துகிறது  என்கின்றனர். 




Share:

கணக்கீடு இல்லாத ஒரு பாடத்திட்டம்: பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கணித சீரமைப்பின் அபாயங்கள். -சௌம்யா மாளவியா

இந்தியமயமாக்கும் செயல்முறையை அவசரப்படுத்துவது கணித கற்பித்தல் மற்றும் துறை இரண்டையும் பலவீனப்படுத்தக்கூடும்.


செப்டம்பர் 20-ஆம் தேதி இந்த நாளிதழில் செய்தி வெளியிட்டதுபோல, நாடு முழுவதும் உள்ள கணிதவியலாளர்கள் அரிதாகவே செய்யும் ஒரு நடவடிக்கையாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) கணிதத்துக்கான வரைவு “கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டக் கட்டமைப்புக்கு” (Learning Outcome-based Curriculum Framework (LOCF)) எதிராகக் கையெழுத்திட்டு மனு அளித்தனர். கணிதம் கற்பிக்கப்படும் முறையை “சீர்திருத்தம்” என்ற பெயரில் மோசமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்துக்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயம் கணிதவியலாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


அம்பர் ஹபீப் மற்றும் ஆர். ராமானுஜம் போன்ற கணிதவியலாளர்கள் இந்த வரைவுப் பாடத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது காலாவதியான பாடப்புத்தகங்கள், மோசமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. மேலும், நவீன கற்பித்தல் முறைகளை புறக்கணிக்கிறது என்று

அவர்கள் கூறுகின்றனர். நவீன கணிதத்தை இந்திய அறிவு அமைப்புகளுக்குள் (Indian Knowledge Systems (IKS)) திணிப்பது இரண்டு பாடங்களுக்கும் தீங்கு

விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அணுகுமுறை கணிதத்தை ஒரு கருத்தியல் பரிசோதனையாக மாற்றுவதுடன், "இந்தியன்", "பாரம்பரியம்" மற்றும் "அறிவு" ஆகிய சொற்களுக்குப் பின்னால் உள்ள பல்வேறு வரலாறுகளை அங்கீகரிக்காமல், "இந்திய" அறிவை தானாகவே வேத அல்லது சமஸ்கிருத அடிப்படையிலானதாக முன்வைப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.


கடந்த பல ஆண்டுகளாக கணித நடைமுறையைப் பற்றிப் படிக்கும் மானுடவியலாளராக, இந்த நிகழ்வுகள் ஆராய்ச்சியின் சில கொள்கைகளை உறுதிப்படுத்த உதவியுள்ளன. மேலும், அவற்றை இங்கே பகிர்வது இந்த முக்கியமான விஷயத்தைச் சுற்றியுள்ள உரையாடலைத் தக்கவைக்க உதவக்கூடும்  என்று கருதப்படுகிறது. 


கணிதம் உட்பட எந்தவொரு நடைமுறைக்குப் பின்னாலும் உள்ள ஆழமான காரணங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று மானுடவியல் அறிஞர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கணித மற்றும் அறிவியல் அறிவு எவ்வாறு மனித காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. இது மதிப்புமிக்கதுதான், ஆனால் கணிதவியலாளர்கள் மற்றும் அவர்களது நூல்களுடனான பணி, நாம் "மனித" அம்சங்களை "கணித" அம்சங்களிலிருந்து தெளிவாகப் பிரித்து பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கணிதம் மனித செல்வாக்கிலிருந்து தன்னிச்சையானது என்று தோன்றினாலும், அதை விமர்சனரீதியாக ஆய்வு செய்யமுடியும் என்கின்றனர். ஆனால், அத்தகைய

விமர்சனம் கணிதப் பணியின் அமைப்பு மற்றும் தர்க்கத்தை மதிக்க வேண்டும். மேலும், அந்த நடைமுறையின் உள்ளார்ந்த விமர்சனத் தன்மையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய வரைவுக் கல்வித்திட்டம் கணிதத்தை “நாகரிக” அல்லது “மனித” தன்மை கொண்டதாகக் காட்ட விரும்புகிறது. ஆனால் உண்மையான கேள்விகள் என்பன, கணிதத்தில் என்ன இருக்க வேண்டும், என்ன இருக்கக் கூடாது என்பதை மக்கள் திறந்த மனதுடன் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த விவாதத்தின் அடிப்படையிலேயே பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதைச் செய்யாமல், கணிதத்தின் உள்ளார்ந்த தர்க்க அமைப்பைத் தொடாமல், அதன் மேலே “இந்தியா” என்று தோன்றும் சில தலைப்புகளை ஒட்டிவிடுவது போன்ற எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. கணிதம்

ஒரு முழுமையான, தன்னிறைவான அமைப்பு. இந்திய அறிவும் ஒரு முழுமையான அமைப்பு என்று சொல்கிறார்கள். இரண்டையும் ஒன்றாக இணைக்க வேண்டுமானால், வெளிப்புறமாக தொடர்பில்லாத விஷயங்களைத் திணிக்கக் கூடாது. அப்படித் திணித்தால் கணிதத்தின் அமைப்பே பலவீனமாகிவிடும் என்றும் வாதிடுகின்றனர்.


தாய்மொழியில் கற்பிப்பது அல்லது அறிவை "இந்தியமயமாக்க" வேண்டும் என்று திணிப்பதும் ஒரு வகை ஆதிக்கமாக மாறலாம் என்கின்றனர். ஏனென்றால், அறிவு என்றால் எப்போதும் தூய்மையான "பாரம்பரியம்" அல்லது "நவீனம்", "உள்ளூர்" அல்லது "உலகத்தரம்" என்று பிரிக்க முடியாது. அது எப்போதும் கலந்தே இருக்கும். மேலும், உண்மையான கல்வி நடைமுறைகள் தன்னாலேயே தனக்கான சூழலை உருவாக்கிக்கொள்ளும், இம்முறை "காலனித்துவமற்றதாக்குதல்" என்ற பெயரில் வெளியிலிருந்து "கலாச்சாரத்தைத் திணித்துச் சேர்ப்பது" புதிய தீங்கை உண்டாக்கும்  என்றும் கூறுகின்றனர். செந்தில் பாபு டி. போன்ற வரலாற்றாளர்கள் காட்டுவது என்னவென்றால் பழங்காலத் தாய்மொழிக் கணித முறைகள் படைப்பாற்றல் மட்டுமல்ல, சாதி மற்றும் சமத்துவமற்ற உழைப்பு அமைப்புகளாலும் வடிவம் பெற்றவை. இந்தக் கசப்பான வரலாற்றை மறைக்காமல், இம்மரபுகளை நேர்மையாக ஆராய வேண்டும். உதாரணமாக, காலனித்துவத்துக்கு முந்தைய இந்தியாவில் கணக்கர்கள் எப்படி சாதாரண மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்த கணிதத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதை அவர் ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, தாய்மொழிக் கல்வி என்பது வெறுமனே "பெருமையான பழங்காலத்தைத் திரும்பக் கொண்டுவருவது" அல்ல. மாறாக, ஒவ்வொரு தொழிலின் சமூக-பொருளாதார வரலாற்றையும் ஆழமாகப் புரிந்துகொண்டு, உழைக்கும் மக்களுக்கு கணிதம் எப்போதும் என்னவாக இருந்தது என்பதை உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.


சில சமூக அடிப்படையிலான கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நடுநிலையான உண்மைகளாகப் பாடப்புத்தகங்களில் வைப்பது வரலாறு மற்றும் கணிதம் ஆகிய இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்கின்றனர். உள்ளூர் கணித மரபுகள் குறித்து சிறந்த விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வரலாற்று ஆராய்ச்சியை கணிதத்துடன் கலப்பது ஒரு அடிப்படைத் தவறு. பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவுப் பாடத்திட்டத்தில், இது கவனக்குறைவான மற்றும் அவசரமான சிந்தனையையும் காட்டுகிறது.


கணிதத்தில் பல விதமான “வடிவங்கள்” (methods/representations) உள்ளன. எடுத்துக்காட்டாக இயற்கணிதமும் வடிவவியலும் முற்றிலும் வேறு வேறு. ஆனால், இவற்றை ஒன்றோடொன்று இணைத்தால் (டெஸ்கார்ட்ஸ் செய்தது போல) புதிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். ஒவ்வொரு தனித் தன்மையும் (தூய இயற்கணிதத்தின் சக்தியோ, தூய வடிவவியலின் சக்தியோ) கொஞ்சம் இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஒரு வடிவத்தை வேறு வடிவத்துக்கு மாற்றுவதன் மூலம்தான் (மொழிபெயர்ப்பு மூலம்தான்) கணிதம் வளர்கிறது. அதனால் கணிதம் ஒரே ஒரு அடித்தளம் (கணங்கள் அல்லது தர்க்கம் மட்டும்) மீது நிற்கிறது என்று சொல்ல முடியாது. மாறாக, பல்வேறு “மரபுகளும்” (conventions), தொகுதித் தன்மையும் (modularity) முக்கியம் என்பதை இது காட்டுகிறது. மிகக் குறுகிய வடிவம்: கணிதம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவதால் வளர்கிறது; ஒரு வடிவத்தை இன்னொரு வடிவத்தில் சொன்னால் புதிய பிரச்சினைகள் தீரும், ஆனால் சில சக்திகள் இழக்கப்படும். அதனால் கணிதத்துக்கு ஒரே அடித்தளம் இல்லை — பல மரபுகளும் தொகுதிகளும் தேவை என்றும் வாதிடப்படுகிறது. 


இந்தியத் தத்துவங்களையோ கருத்துக்களையோ பாடத்திட்டத்தில் சேர்க்க விரும்பினால், அவற்றை மறைமுகமாகத் “திணிக்காமல்”, நவீனப் பிரச்சினைகளை (குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் (AI) உள்ள சிக்கல்களை) தீர்க்க அவை எவ்வளவு பயனுள்ளவை என்பதை நேரடியாக ஆய்வு செய்து, சோதித்துப் பார்ப்பது சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. உதாரணமாக: கணக்கீட்டு முறைகளோ பௌத்த/சமண தர்க்கங்களோ இன்றைய மல்டிமாடல் அல்லது ஃபஸி லாஜிக் பிரச்சினைகளுக்கு உதவுமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இவற்றை வெளிப்படையாக மதிப்பீடு செய்தால், துறையின் தரம் காப்பாற்றப்படும்; உண்மையான, பொருள்பொதிந்த விவாதங்கள் நடக்கும். அந்த விவாதங்களில் இருந்து வரும் உண்மையிலேயே பயனுள்ள நுண்ணறிவுகளை மட்டும் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.


இறுதியாக ஒன்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இந்தக் கட்டுரை இப்போதைய கணிதக் கல்வி அமைப்பை ஆதரிக்கவில்லை. மாறாக, “சீர்திருத்தம்”

என்ற பெயரில் நடக்கும் மாற்றங்களையே கேள்வி கேட்கிறது. இந்த மாற்றங்களை யார் செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? கணித ஆசிரியர்களும் மாணவர்களும் இதில் எங்கே இருக்கிறார்கள்? இன்றைய கணிதக் கல்விக்கு என்ன தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. 


இந்த இயக்கத்தில் கணிதவியலாளர்களே முன்னணியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்தியாவில் கணிதம் பற்றிய திறந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு. சுதந்திரத்துக்குப் பிறகு இது போன்ற விவாதம் மிகக் குறைவாகவே நடந்திருக்கிறது. பல மொழிகள் பேசப்படும் இந்தியா போன்ற நாட்டில் கணிதத்தை உருவாக்குவதிலும் கற்பிப்பதிலும் இன்னும் பல பெரிய பிரச்சினைகள் உள்ளன. அவை மொழிப் பன்முகத்தன்மை, நல்ல தரமுள்ள இந்திய மொழிப் பாடப்புத்தகங்கள் இல்லாமல் இருப்பது, உலகளாவிய புதிய கணித வளர்ச்சிகளுடன் போதிய தொடர்பு இல்லாமல் இருப்பது, பள்ளி ஆசிரியர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி மட்டுமே கொடுக்கப்படுவது போன்றன ஆகும். வெறுமனே பாடத்திட்டத்தை “இந்தியமயமாக்குவது” அல்லது “தேசியமயமாக்குவது” என்று பெயர் மாற்றினால் இந்த உண்மையான பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும் கூறப்படுகிறது.  இப்போது நமக்குத் தேவை உண்மையான கணித நடைமுறைகளையும் அதன் பல்வேறு வடிவங்களையும் ஆழமாகப் புரிந்து கொள்வதுதான் என்கின்றனர். கவனமாகவும் சிந்தனையோடும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், புதிதாக மாற்றிய பாடத்திட்டம் “முன்னேற்றம் வந்துவிட்டது” என்ற மாயையை மட்டுமே தந்து, உண்மையில் நம்மை பின்னுக்குத் தள்ளிவிடும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். கணிதத்தில் சொல்வார்கள் அல்லவா — இறுதி விடையைவிட, நாம் எடுத்துவைக்கும் அடுக்கடுக்கான படிகளே அதிக முக்கியம் என்று. அதுபோல்தான் இந்த நடவடிக்கைகளும் என்று மேற்கோள்காட்டப்படுகிறது. 


எழுத்தாளர், ஒரு இந்தி கவிஞர் மற்றும் IIT மண்டியின் (Mandi) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் உதவிப் பேராசிரியர் (சமூகவியல்)  ஆவார்.



Original Article: A curriculum without calculation: The risks of UGC’s math overhaul.

Share:

அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு. -குஷ்பூ குமாரி

ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பைப் பாதிக்காது என்று 23வது சட்ட ஆணையம் கூறியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், இந்த அடிப்படை அமைப்பு (basic structure) என்றால் என்ன, ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்றால் என்ன?


தற்போதைய செய்தி?


டிசம்பர் 4-ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்கள் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் 23-வது சட்ட ஆணையத்தின் விளக்கவுரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கூட்டாட்சி மற்றும் வாக்காளர் உரிமையைப்

பொறுத்தவரை, மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.


பிரிவு 368(2), பிரிவுகள் (a) முதல் (e) வரையிலான மாநில ஒப்புதல் தேவைப்படும் எந்தவொரு பிரிவையும் அவை மாற்றாததால், மசோதாக்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று ஆணையம் நம்புகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி பி சவுத்ரி தலைமையிலான குழுவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மாதிரி நடத்தை விதிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று ஆணையம் கண்டறிந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு என்பது நீதிமன்றங்களால் எந்தவொரு சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையையும் சோதிக்கப் பயன்படுத்தப்படும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) ஒரு வடிவமாகும். அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை மாற்றுவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இது கட்டுப்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் தோற்றம் போருக்குப் பிந்தைய ஜெர்மன்

அரசியலமைப்புச் சட்டத்தில் (German Constitution law) காணப்படுகிறது. இது நாஜி ஆட்சிக்குப் பிறகு, சில அடிப்படைச் சட்டங்களைப் பாதுகாக்க திருத்தப்பட்டது.


2. 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் (Kesavananda Bharati v State of Kerala) வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. 7-6 என்ற தீர்ப்பில், 13 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அரசியலமைப்பின் 'அடிப்படைக் கட்டமைப்பு' மீற முடியாதது என்றும், அதைத் திருத்த முடியாது என்றும் தீர்ப்பளித்தது.


3. ஒரு சட்டம் "அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை" "சேதப்படுத்துவதாகவோ அல்லது அழிப்பதாகவோ" கண்டறியப்பட்டால், நீதிமன்றம் அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கிறது. இந்தத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைகளை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பை எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு தெளிவான வரம்புகளை நிர்ணயிப்பதால், நாடாளுமன்றம் அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக இந்தச் சோதனை பார்க்கப்படுகிறது.


4. 2025-ஆம் ஆண்டு அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அபய் எஸ் ஓகா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான பிரத்யேக உரையாடலில், அடிப்படை கட்டமைப்பு என்பது "உலகெங்கிலும் உள்ள பல ஜனநாயக நாடுகளை விட இந்தியாவில் ஜனநாயகத்தை மேன்மையாக்கும் ஒரு கோட்டபாடாக இருப்பதாக தெரிவித்தார். சட்டமன்றம்கூட அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.


5. நீதிமன்றங்களுக்கும் பிரதமர் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல்களுக்குப் பிறகு கேசவானந்தா பாரதி வழக்கின் தீர்ப்பு வந்தது. அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் நாடாளுமன்றம் மாற்ற முடியும் என்றும், நீதிமன்றங்கள் இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்யமுடியாது என்றும் கூறி அரசாங்கம் முக்கியமான சட்டங்களை இயற்றியது.


6. நாடாளுமன்றத்தின் திருத்த அதிகாரத்தின் நோக்கம் மற்றும் நில சீர்திருத்தங்களின் சட்டபூர்வமான தன்மையை ஆராய, நீதிமன்றம் 13 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்தது. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், சில "அடிப்படை அம்சங்களை" திருத்த முடியாது என்று அமர்வு தீர்ப்பளித்தது. அரசியலமைப்பின் சில முக்கியப் பகுதிகளை அதன் "அடிப்படை அம்சங்கள்" என்று உச்சநீதிமன்றம் பட்டியலிட்டது. ஆனால், அந்தப் பட்டியல் முழுமையானது அல்ல என்று கூறியது.


7. 'அடிப்படை கட்டமைப்பு' கோட்பாடு, அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாடு, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு, நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான

தேர்தல்களின் கொள்கை, நலன்புரி அரசு போன்றவற்றை உள்ளடக்கியதாக விளக்கப்பட்டுள்ளது.


1. 23-வது சட்ட ஆணையம் என்றால் என்ன?


காலாவதியான மற்றும் ரத்து செய்யக்கூடிய சட்டங்களை அடையாளம் காண, ஒன்றிய அரசு 23வது சட்ட ஆணையத்தை மூன்று ஆண்டுகளுக்கு (செப்டம்பர் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2027 வரை) அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆணையத்தின் தலைவராக உள்ளார்.


இந்த ஆணையத்தில் ஒரு முழுநேரத் தலைவர், நான்கு முழுநேர உறுப்பினர்கள், சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமன்றத் துறைகளின் செயலாளர்கள் அலுவல்ரீதியான உறுப்பினர்களாகவும், ஐந்து பேர்வரை பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.


02. அரசியலமைப்பு திருத்தம் (constitutional amendment) என்றால் என்ன?


அரசியலமைப்புத் திருத்தம் என்பது இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள விதிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு முறையான செயல்முறையாகும். அரசியலமைப்பின் XX பகுதி அதன் திருத்தத்தைப் பற்றி விவாதிக்கிறது. பிரிவு 368(2)-ன்கீழ், ஒரு மசோதா இரு அவைகளிலும் பெரும்பான்மையான அனைத்து உறுப்பினர்களாலும், குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தால் அரசியலமைப்பை மாற்ற முடியும். அதன்பிறகு மசோதா குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர் அதற்கு ஒப்புதல் அளிப்பார், அதன் மூலம் அரசியலமைப்பு திருத்தம் சட்டமாகிறது.


03. அரசியலமைப்பு திருத்தத்திற்கு எப்போது மாநில ஒப்புதல் தேவைப்படுகிறது?


அரசியலமைப்பில் 54, 55, 73 ஆகிய பிரிவுகள், 7-வது அட்டவணையில் உள்ள பட்டியல்கள் அல்லது நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்யமுயலும் ஒரு திருத்தம், மாநிலங்களில் பாதிக்கு குறையாத சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் எந்தவொரு திருத்தத்திற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை. மேலும், பிரிவு 368-ல் ஏற்படும் மாற்றங்களுக்கு மாநில ஒப்புதல் (ratification by the states) தேவை.

04. நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Committee of Parliament) என்றால் என்ன?


ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது ஒரு முக்கியமான நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தால் அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை ஒரு மசோதாவை விரிவாக ஆய்வு செய்வது போன்றது. பெயர் குறிப்பிடுவதுபோல, இது இரு அவைகளிலிருந்தும், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் பதவிக்காலம் முடிந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் கூட்டுக் குழு கலைக்கப்படுகிறது.


ஒரே நாடு, ஒரு தேர்தல்


1. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" (One Nation, One Election) என்பது ஒரே நேரத்தில் மக்களவை, அனைத்து மாநில சட்டமன்றங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள்) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதாகும்.


2. முன்னாள், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த பரிந்துரைத்தது. அந்தக் குழு, இந்திய அரசியலமைப்பில் 15 திருத்தங்களை பரிந்துரைத்தது - புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்கள் என இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.


3. "ஒரே நேரத்தில் தேர்தல்" என்ற கருத்து இந்தியாவிற்கு புதியது அல்ல. ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. நமது ஜனநாயக பயணம் முதல் பொதுத் தேர்தலுடன் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டும் ஒரேநேரத்தில் நடத்தப்பட்டன.


4. 1967-ஆம் ஆண்டு 4-வது பொதுத் தேர்தல்கள் வரை ஒரேநேரத்தில் தேர்தல்கள் பெரும்பாலும் நடைமுறையில் இருந்தன. இருப்பினும், அடுத்தடுத்த வந்த ஒன்றிய அரசாங்கங்கள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே மாநில அரசாங்கங்களை கலைக்க அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தியதாலும், மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் கூட்டணி அரசாங்கங்கள் தொடர்ந்து

தோல்வியடைந்ததாலும், நாடு ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடைபெறத் தொடங்கியது.


5. அரசியலமைப்பு (129வது திருத்த) மசோதா, 2024 மற்றும் ஒரேநாடு ஒரேதேர்தல் மசோதாக்கள் எனப்படும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மீதான குழு டிசம்பர் 4-ஆம் தேதி கூட உள்ளது.



Original Article: Basic Structure Doctrine.

Share:

திட்டம் இயக்கமாக : சமூக ஈடுபாடு NIPUN பாரத் திட்டத்தை எவ்வாறு வலுப்படுத்தும்? -ஜெய்ஸ்ரீ ஓசா, ஷவேதா சர்மா-குக்ரேஜா

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சுனிதா யாதவ், வீட்டுப்பாடம் எழுதுவதற்கான குறிப்பேடுகள் இல்லாமல் வளர்ந்தார். மேலும், தனது படிப்பைப் பற்றி ஒருபோதும் கேட்காத பெற்றோர்கள். இன்று, அவரது மகள் ரிஷிகா மிகச் சிறந்த பள்ளிச் சூழலில் படிக்கிறார். அரசுப் பள்ளி இப்போது கற்றுக்கொள்வதற்கு தேவையான பொருட்களை வழங்குகிறது. ஆசிரியர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பெற்றோருக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், கிராம பஞ்சாயத்து கல்வியை ஆதரிக்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் சுனிதாவை வீட்டுப்பாடத்தில் எவ்வாறு உதவுவது என்பதைக் காட்டிய பிறகு, அந்தப் பெண் தனது அன்றாட வாழக்கை முறையை மாற்றினாள். "நான் சமைக்கும்போது, ​​ரிஷிகாவை என் அருகில் உட்கார வைத்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.


மத்தியப் பிரதேசத்தில், பால் சௌபால் அமர்வுகள் குடும்பங்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான கற்றலை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பீகாரில், ஒலிபெருக்கிகள் "அபன் பீகார், நிபுன் பீகார்" போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இது ஆரம்பகால கற்றலை ஒரு சமூக முயற்சியாக மாற்றுகிறது. ஆரம்ப வகுப்புகளில் உள்ள ஐந்து கோடி இளம் குழந்தைகளுக்கு நாம் தேவையான ஆதரவை வழங்கினால், புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ((NIPUN BHARAT)) ஒரு நோக்கத்திலிருந்து ஒரு இயக்கமாக மாறும். இதைச் சாத்தியமாக்குவதற்கான சிறந்தவழி சமூகத்தில் இருந்து தொடங்குவதாகும்.


சமூக அணிதிரட்டலின் (Community Mobilisation) ஆற்றல்


நமது அரசால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது எவ்வாறு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதைக் காட்டியது. 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த

சுகாதார இயக்கத்தில் இணைந்தனர். மேலும், 650,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கிராமங்களில் வீடுகளுக்குச் சென்று மக்கள் கழிப்பறைகள் இல்லாத இடங்களைக் கண்டறிந்தனர். கழிப்பறைகள் கட்ட உதவினார்கள், அவை பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் சரிபார்த்தனர். இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் 60,000 முதல் 70,000 குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியதாக ஒரு அறிவியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இப்போது, ​​கல்வியை மேம்படுத்த அதே அளவிலான ஒரு சமூக முயற்சி நமக்குத் தேவைப்படுகிறது.


உலகம் முழுவதும், சமூக அணிதிரட்டல் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. 1977ஆம் ஆண்டில், பேராசிரியர் Wangari Maathai, சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடவும், இயற்கை வளங்கள் இழப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் கென்யாவில் பசுமைப் பட்டை இயக்கத்தைத் (Green Belt Movement) தொடங்கினார். பத்தாண்டுகளுக்குள், 30,000 பெண்கள் வனவியல் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் பயிற்சி பெற்றனர். 5.1 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு 4,000-க்கும் மேற்பட்ட சமூகங்களை மாற்றினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ரியோ டி ஜெனிரோவின் ஃபவேலா-பைரோ இயக்கம் (Favela-Bairro Program) உள்ளூர்

சமூகங்களுடன் இணைந்து 105 முறைசாரா குடியிருப்புகளை மேம்படுத்தியது. இது சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக இடங்களை மேம்படுத்தி, 4.5 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது.


உலகளாவிய ஆய்வுகள் சமூகப் பங்கேற்பு (community participation) கற்றல் விளைவுகளையும் மாற்றும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. வியட்நாமில், 2012-ஆம் ஆண்டு மற்றும் 2015-ஆம் ஆண்டிற்கு இடையில் மாணவர்களின் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்ட (Programme for International Student Assessment (PISA)) மதிப்பெண்களில் ஏறக்குறைய பாதி வித்தியாசத்தை பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் சமூக ஈடுபாடும் விளக்கியதாக உலகவங்கி ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சமூக ஈடுபாட்டை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, துடிப்பான பொதுக் கல்வி முறையில் கணிசமான முதலீட்டை மேற்கொள்வதோடு, உண்மையான தனியார் மற்றும் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்து எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  2021-ல் தொடங்கப்பட்ட புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முயற்சி (National

Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ((NIPUN BHARAT)), அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதற்கான முழு சமூக அணுகுமுறையையும் ஊக்குவிப்பதன் மூலம் அடிப்படைக் கொள்கையை மேம்படுத்த முயற்சிக்கிறது.


புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முன்னெடுப்பு (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN BHARAT)) இயக்கத்தை நோக்கி


ரூ. 2,500 கோடி ஆண்டு பட்ஜெட்டில், புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முன்னெடுப்பு நன்கு தயாரிக்கப்பட்ட கற்பித்தல்-கற்றல் பொருட்கள் (teaching-learning materials (TLMs)), ஆசிரியர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல், கண்காணிப்பு மற்றும் மாணவர்களுக்கு வழக்கமான தேர்வுகள் போன்றவற்றை ஆதரிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முடிவுகள் நன்றாகத் தெரிகின்றன. 2024ஆம் ஆண்டு PARAKH Rashtriya Sarvekshan, தரம் 3 மாணவர்கள் மொழியில் 64% (தரம் 6-ல் 57% மற்றும் தரம் 9-ல் 54% உடன் ஒப்பிடும்போது) மற்றும் கணிதத்தில் 60% (தரம் 6-ல் 56% மற்றும் தரம் 9-ல் 37% உடன் ஒப்பிடும்போது) மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 2024 வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)), கோவிட் காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்புக்குப் பிறகும்கூட, 2014ஆம் ஆண்டைவிட அதிகமான தரம் 3 குழந்தைகள் 2-ஆம் வகுப்பு பாடத்தைப் படித்து அடிப்படைக் கழித்தல்களைச் (simple subtraction) செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது - வாசிப்பு ஆறு சதவீத புள்ளிகளாலும் கழித்தல் பத்து சதவீத புள்ளிகளாலும் அதிகரித்துள்ளன.

இருப்பினும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தர-நிலை திறன்களை அடைய உதவ, NIPUN BHARAT இயக்கம் ஒரு பெரிய இயக்கமாக மாற வேண்டும். அரசாங்கம் அடிப்படைக் கற்றலின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலக் கற்றலில் மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சித்திறனை அதிகரிப்பதிலும் அதன் தாக்கம் குறித்த புரிதலை மேம்படுத்த, அரசாங்கம் முதலில் அடிப்படைக் கற்றலிற்கான விழிப்புணர்வு மற்றும் தகவல் பிரச்சாரங்களில் முதலீடு செய்யலாம்.


தூய்மை இந்தியா இயக்கத்தில் (Swachh Bharat Mission) விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக தங்கள் பட்ஜெட்டுகளில் 5-15% ஒதுக்குவதன் மூலம் அதையே செய்தது. NIPUN BHARAT இயக்கமும் இதே போன்ற முதலீடுகளைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த இயக்கத்திற்கு பட்ஜெட்டில் 10% (ரூ. 250 கோடி) பரப்புரை, பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்துவது பெற்றோருக்கும் சமூகங்களுக்கும் தேவையான அறிவையும் கருவிகளையும் அளித்து, உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர உதவும்.


பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளூர் தலைவர்கள் NIPUN சபைகள், வாய்மொழியாக சரளமாக வாசிக்கும் போட்டிகள், தெரு நாடகங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் போன்ற சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். பீகாரின், NIPUN கிராம சபை மாதிரியை வேறு இடங்களில் செய்து பார்க்கலாம். தலைவர்கள் (Mukhiyas) மூலம், பெற்றோர்கள் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களைப் பற்றியும், அவர்களின் ஈடுபாடு ஏன் முக்கியமானது என்பதையும் அறிந்து கொண்டனர். இதன் விளைவாக, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் பெற்றோர் வருகை 20–30%-லிருந்து 60%-ஆகவும், மாணவர் வருகை 58–65%-லிருந்து 70–76%ஆகவும் ஒரு வருடத்தில் அதிகரித்தது.


ஆசிரியர்களின் பங்கு


ஆசிரியர்களின் பார்வையை மாறலாம். மேலும், அவர்களின் விருமபங்களும் அதிகரிக்கலாம். திறமையான ஆசிரியர்கள் மாணவர்களின் சாதனையை 1.5 தரநிலை அளவுகளால் அதிகரிப்பதாகக் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் பலவீனமானவர்கள் அரைவருட வளர்ச்சியை மட்டுமே வழங்குகிறார்கள். இருப்பினும், இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள்,

பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தால், ஒரு மாணவருக்கு அதிகம் உதவ முடியாது என்று பல ஆசிரியர்கள் நினைப்பதைக் காட்டுகின்றன.


மேலும், ஆசிரியர்கள் பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறார்கள். போராடும் மாணவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள், இது திறன் இடைவெளியை அதிகரிக்கிறது. அனைத்து குழந்தைகளும் வெற்றிபெற உதவ, இந்த மனநிலையை மாற்ற வேண்டும். சிறப்பு பிரச்சாரங்கள் ஆசிரியர்களுக்கு அடிப்படை கற்றல் (FLN) ஏன் முக்கியமானது

என்பதைக் கற்பிக்க முடியும். மேலும், அவர்களுக்கு வழக்கமான மாணவர் செயல்திறன் தரவை வழங்குவது அவர்களின் பங்கு பற்றிய தவறான கருத்துக்களை சரிசெய்யும்.


மாவட்ட அளவில் வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத் திட்டங்களைச் சேர்ப்பது ஆசிரியர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் இத்தகைய அமைப்புகளை கொண்டுள்ளன. இதன் விளைவாக ஆசிரியர்களின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


பெற்றோரை ஈடுபடுத்துதல்


சிறந்த பலன்களைப் பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றல் பயணத்தில் பங்கேற்கலாம். உலகளாவிய ஆய்வுகள், 6-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் விளைவுகளில் 61% மாறுபாட்டிற்கு பெற்றோரின் ஈடுபாடுதான் காரணம் என்பதைக் காட்டுகிறது. மேலும், வலுவான பெற்றோரின் ஈடுபாட்டைக் கொண்ட பள்ளிகள் கற்றல் விளைவுகளை மேம்படுத்தவும், குழந்தைகள் ஒரு வருடத்தில் நான்கு கூடுதல் மாத முன்னேற்றத்தை அடையவும் 10 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

வழக்கமான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் வலுவான தொடர்புகளை உருவாக்கி, சிறந்த கல்வித் தரத்தை வலியுறுத்துகின்றன. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில், மாதாந்திர பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் பெற்றோர் வருகையை 28% அதிகரித்துள்ளது. 2010-ல் 5-ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்ற 35%-ஆக இருந்த படித்த தாய்மார்கள் 2022-ல் 60%-ஆக உயர்ந்துள்ளனர் - வீட்டில், படித்த தாய்மார்களின் அதிகரிப்பு ஆதரவுக்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது.  இருப்பினும், பலருக்கு அடிப்படை கற்றலுக்கு எவ்வாறு உதவுவது என்று இன்னும் தெரியவில்லை. வீட்டுப் பணிப்புத்தகங்கள் அல்லது வாட்சாப் நினைவூட்டல்கள் போன்ற எளிய கருவிகள் நன்றாக வேலை செய்கின்றன. CSF மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இது போன்ற பயனுள்ள அதிகரிப்புகளைப் ஈடுபட்ட பெற்றோர்கள், பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தங்கள் குழந்தையின் கற்றலில் முதலீடு செய்ய 1.16 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.


அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு, பொது ஆலோசனையின் சக்தியை தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உருவாக்கம் நிரூபித்தது. இந்த உணர்வுதான் இப்போது NIPUN Bharat இயக்கத்தை வழிநடத்த வேண்டும். அரசாங்கங்கள் விழிப்புணர்வில் முதலீடு செய்யவேண்டும், சமூகங்கள் ஈடுபட வேண்டும், ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும், பெற்றோர்கள் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் "மக்கள் பங்களிப்பு (Janbhagidari) மூலம் மட்டுமே, ஒவ்வொரு குழந்தையும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை அடைவதை உறுதிசெய்ய முடியும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும், இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். NIPUN Bharat ஒரு குறிக்கோளைத் தாண்டி நகர வேண்டும்; அது மக்களாலும், வளர்ந்த இந்தியாயவை உருவாக்கும் மக்களாலும் இயக்கப்படும் ஒரு இயக்கமாக மாற வேண்டும்.


(ஷவேதா சர்மா-குக்ரேஜா, சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆவார். ஜெயஸ்ரீ ஓசா, சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் கல்வி நிபுணர் மற்றும் மூத்த ஆலோசகர் ஆவார்.)



Original Article: From mission to movement: How community involvement can power NIPUN Bharat 

Share: