வேளாண் ஆராய்ச்சியை மறுசீரமைத்தல். -சதீஷ் ஹெக்டே

 விவசாய வருமானம் மற்றும் நிலைத்தன்மை மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.


கடந்த 75 ஆண்டுகளில், இந்திய வேளாண்மை, நாட்டின் வரலாற்றிலேயே மாபெரும் மாற்றக் கதைகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ​​உணவுப் பற்றாக்குறை ஒரு கடுமையாக இருந்ததுடன், லட்சக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது அன்றாட சவாலாக இருந்தது. தொலைநோக்குப் பார்வை கொண்ட வேளாண் ஆராய்ச்சியின் ஆதரவுடன், இந்திய விவசாயிகளின் பெரும் மனவுறுதியே நாட்டைப் பசியிலிருந்து காப்பாற்றியது.


இன்று, 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்லும் வேளையில், பாதுகாப்பு, தொழில், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் என ஒவ்வொரு துறையும் அந்த இலக்கிற்காகத் தயாராகி வருகிறது. ஒரு புதிய நூற்றாண்டின் சவாலை எதிர்கொள்ளும் அளவிற்கு வேளாண் ஆராய்ச்சி மீண்டும் எழுச்சி பெற முடியுமா என்பதே நம் முன் உள்ள கேள்வியாக உள்ளது.


வேளாண்மை இப்போது இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது. அது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில், பாதுகாப்பான உணவு உற்பத்தி மற்றும் மண், சுற்றுச்சூழல் நலப் பாதுகாப்பின் மூலம் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும். 1960ஆம் ஆண்டுகளில், வேளாண் ஆராய்ச்சி மூலம் இந்தியா உணவுப் பாதுகாப்பை அடைய உதவியது.

2016-ம் ஆண்டளவில், ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் மீது கவனம் திரும்பியது. கடந்த பல பத்தாண்டுகளில், உணவு தானிய உற்பத்தியை விட பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தியா பற்றாக்குறை என்னும் நிலையிலிருந்து போதுமான உற்பத்திக்கும், பல பயிர்களில் உபரி உற்பத்திக்கும் முன்னேறியுள்ளது. அரிசி உற்பத்தி தேவையை விட கிட்டத்தட்ட 20 சதவீதமும், கோதுமை 7 சதவீதமும், மக்காச்சோளம் 15 சதவீதமும் அதிகமாக உள்ளன. விவசாயிகள் வணிகப் பயிர்கள் மற்றும் மதிப்புக்கூட்டலை நோக்கி அதிகளவில் கவனம் செலுத்துகின்றனர். இது தன்னிறைவு விவசாயத்திலிருந்து ஒரு தொழிலாக விவசாயத்தை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது.


விவசாயியை மையமாகக் கொண்டது


இருப்பினும், வேளாண் ஆராய்ச்சி குறித்த கருத்தாக்கம் இப்போது தேசத்தை மையமாகக் கொண்டிருப்பதிலிருந்து, உண்மையாகவே விவசாயியை மையமாகக் கொண்டதாக மாற வேண்டும். பசுமைப் புரட்சியின் போது, ​​தேசிய உணவுப் பாதுகாப்பே முதன்மை நோக்கமாக இருந்தது. மேலும், அதன் பலன்கள் பெரும்பாலும் சில வட மாநிலங்களில் மட்டுமே குவிந்திருந்தன. இன்று, இந்திய வேளாண்மையின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் அகில பாரத அளவிலான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உண்மையான விவசாயிகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிக்கு, மதிப்பை உருவாக்குபவர்களுக்கும் அதைப் பெறுபவர்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியமாகும்.


இதற்கு ஒரு சிறந்த உதாரணம் குண்டூர் நகரமாகும். அந்தநேரத்தில், நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் காய்கறிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவராகப் பணியாற்றியபோது, ​​சீனா மற்றும் கொரியாவில் உள்ள முறைகளைப் போலவே, இயந்திரமயமாக்கலுக்காக ஒரே அறுவடை மிளகாய் இரகங்களை உருவாக்கும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. குண்டூரில் நடந்த ஒரு விவசாயிகள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது ஒரு சிறு விவசாயி எழுந்து நின்று, பயிர் சாகுபடிக் காலத்தில் இப்பகுதி அடிக்கடி புயல்களை எதிர்கொள்வதாக விளக்கினார்.


வானிலை பாதகமாக அமைந்தாலும், மூன்று பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு அவற்றில் குறைந்தது ஒன்றிலிருந்தாவது நல்ல விளைச்சலைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். ஒரே ஒரு பயிரை மட்டும் பயிரிடுவது இடரை அதிகரிக்கிறது. இந்த எளிய நடவடிக்கை, தேவையற்ற ஆராய்ச்சிச் செலவுகளைத் தவிர்த்ததுடன், ஒரு முக்கியமான உண்மையையும் உணர்த்தியது: புதிய சிந்தனைகள் என்பவை தொழில்நுட்பத்தால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், விவசாயிகளின் உண்மையான தேவைகளின் மீதே கவனம் செலுத்த வேண்டும்.


தொழில்நுட்ப இடையூறுகள்


தொழில்நுட்பம் வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்கள் பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் வேளாண்மையில், இந்தப் பண்புகள் உயிரினப் பாகுபாடற்றவை. இதன் பொருள், அவற்றை வெவ்வேறு பயிர்களில் பயன்படுத்தலாம். மரபுசார் இனப்பெருக்கத்திலிருந்து மூலக்கூறு இனப்பெருக்கம், இப்போது முன்கணிப்பு அல்லது தரவு சார்ந்த இனப்பெருக்கம் என வேளாண் அறிவியல் வியத்தகு முறையில் உருமாறியுள்ளது. பாரம்பரிய இனப்பெருக்க முறையின் காரணமாகவே பசுமைப் புரட்சி நிகழ்ந்தது. பின்னர், மூலக்கூறு இனப்பெருக்கம் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்த உதவியது. இன்று, பல முன்னணி காய்கறிக் கலப்பினங்கள் மேம்பட்ட மரபணுவியல் நுட்பங்களிலிருந்து வருகின்றன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் மரபணு திருத்தம் போன்ற தொழில்நுட்பங்கள் நம்பிக்கையளிக்கின்றன. இருப்பினும், எந்தவொரு தொழில்நுட்பமும் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் செயல்படுவதில்லை. ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் அதன் சொந்த பலங்கள் மற்றும் வரம்புகளும் உள்ளன. பருத்தியில், விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பண்புகளை ஏற்றுக்கொண்டனர். ஏனெனில், அந்தப் பண்புகள் அவர்களுக்கு மதிப்பைக் கொடுத்தன. மற்ற பயிர்களில், இதே போன்ற அணுகுமுறைகள் விவசாயிகளின் தேவைகளுடன் ஒத்துப்போகாதபோது தோல்வியடைந்தன. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மாறாமல் உள்ளது. பண்புகள் வேளாண் மட்டத்தில் உறுதியான பலன்களை உருவாக்க வேண்டும்.


அறிவியல் அணுகுமுறை ஒரு பெரிய அளவில் மாறியுள்ளது. கடந்த காலத்தில், மரபுசார் பயிர் வளர்ப்பு, பயிர்களில் வேறுபாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. பின்னர் விஞ்ஞானிகள் காலப்போக்கில் படிப்படியாகப் பயனுள்ள பண்புகளைத் தேர்ந்தெடுத்தனர். நவீன அறிவியல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பண்பை அடையாளம் கண்டு, பின்னர் அதைத் துல்லியமாக ஒருங்கிணைப்பதில் தொடங்குகிறது. இந்த மாற்றம் புதிய திறன்கள், மேம்பட்ட ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பின் தொடர்ந்து மேம்படுத்தல் ஆகியவற்றைக் கோருகிறது. வசதிகள் மிக விரைவாகப் பழைமையாகிவிடக்கூடும். மேலும், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு, வேளாண் ஆராய்ச்சி மைய-கிளை மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும். இதில், மையப்படுத்தப்பட்ட உயர்தர உள்கட்டமைப்பு, பரவலாக்கப்பட்ட கள அளவிலான செயலாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது.


வேளாண்மையும் நிலையான வேளாண்மையில் அதிக கவனம் செலுத்துகிறது. இன்றைய விவசாயிகள் இரசாயன, மீளுருவாக்க, அங்கக விவசாயம் மற்றும் இயற்கை விவசாய அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இவை அனைத்தும் வெவ்வேறு வழிகளில் பாதுகாப்பான மற்றும் நிலையான உணவு உற்பத்திக்கு பங்களிக்கின்றன. நாம் தாவரங்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், மண் சூழல் அமைப்பையும் வளர்க்கிறோம் என்பதை உணர்ந்து, மண் பரிசோதனை என்ற கருத்து மண் நலவாழ்வு என்ற பரந்த கருத்தாக வளர்ந்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான தேசிய முயற்சிகள், விவசாயம் விளைச்சலை மையமாகக் கொண்ட சிந்தனையிலிருந்து, உற்பத்தியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒரு அலகு பரப்பிற்கான வருமானத்தை வலியுறுத்தும் நிலைத்தன்மை அடிப்படையிலான விவசாயத்திற்கு மாற்றியுள்ளன.


குழுப்பணி


வேளாண்மை ஆராய்ச்சி மிகவும் கூட்டுப்பணியாக மாறியுள்ளது. 1960ஆம் ஆண்டுகளில், தலைசிறந்த தனிப்பட்ட விஞ்ஞானிகள் இத்துறையை வடிவமைத்தனர். இன்று, புத்தாக்கம் என்பது குழுப்பணியைச் சார்ந்துள்ளது. ஒரு பயிர் வளர்ப்பாளர், மரபணுவியல், சிறந்த கண்டுபிடிப்பு, மரபுப்பொருள் மேலாண்மை, புறத்தோற்றவியல், தரவுப் பகுப்பாய்வு, விரைவுப் பயிர் வளர்ப்பு மற்றும் இரட்டை ஒருமடியத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் உள்ள வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். பயிர் வளர்ப்பாளர் இனி ஒரு தனி நபராக இல்லாமல், களத்திற்குத் தீர்வுகளை வழங்கும் ஒரு பன்முகத் துறைக் குழுவின் அங்கமாக இருக்கிறார்கள். நிறுவனங்கள், ஒருங்கிணைந்த தலைமையின் வழிகாட்டுதலுடன், திட்டப்பணி முறையில் பொதுவான இலக்குகளை நோக்கிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வளர்ந்த இந்தியா (Viksit Bharat) திட்டத்தை எதிர்நோக்கிப் பார்க்கையில், எதிர்கால சவால்களை முன்கூட்டியே கணிக்கும் பரந்த தேசியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வேளாண் ஆராய்ச்சி தன்னை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக (ICAR) நிறுவனங்கள், மாநில வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த பரந்த அடிப்படையிலான கருப்பொருள்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம், grafting & shuttle breeding போன்ற புதுமைகளின் மூலம் வெப்பத்தைத் தாங்கும் இரகங்களையும் வலுவான வேர் அமைப்புகளையும் கோருகிறது. அழுத்த மேலாண்மையானது உயிரியல் மற்றும் உயிரற்ற அழுத்தங்கள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள மேலாண்மைக்கு, சிறு வேளாண்மைகளுக்கு ஏற்ற இயந்திரமயமாக்கல், திறமையான நீர் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடு, உயிரியல் உள்ளீடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அறிவார்ந்த பயன்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. விநியோகச் சங்கிலி மாற்றமானது, வேளாண் வாயிலில் மதிப்புக் கூட்டல், தர மேலாண்மை, ஏற்றுமதி தயார்நிலை மற்றும் சந்தை நுண்ணறிவு ஆகியவற்றைச் சாத்தியமாக்க வேண்டும். கடந்த கால விகிதங்களும் முடிவுகளும் தற்போதைய யதார்த்தங்களை வரையறுக்க முடியாது.

உலகளாவிய போட்டி இந்த அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. துருக்கி பல நாட்கள் எடுத்துக்கொண்டு ஐரோப்பா முழுவதும் காய்கறிகளைக் கொண்டு செல்கிறது. சீனா ஹைனான் தீவில் காய்கறிகளைப் பயிரிட்டு தொலைதூர நகரங்களுக்கு வழங்குகிறது. சூரிய ஒளிபடும் பசுமைக் குடில்கள், நெகிழிப் பந்தல்கள் மற்றும் காய்கறிகளில் ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்பங்கள் ஆகியவை சீனாவில் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக மேம்படுத்துகின்றன. இந்தியா, பெரிய வேளாண்மைகளுக்கு மட்டுமே பொருத்தமான மாதிரிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சிறு விவசாயிகளை வலுப்படுத்தி தனக்கென ஒரு தனிப் பாதையை வகுக்க வேண்டும்.


மைய ஆராய்ச்சி தொடர்பான தலைப்புகளை வரையறுப்பது, தேசிய நிதிநிலை அறிக்கைத் திட்ட செயல்முறையைப் போலவே கடுமையானதாகவும், கலந்தாலோசனை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மாநில மற்றும் மத்திய அளவிலான கலந்தாய்வுகளில் விவசாயிகள், வேளாண் அறிவியல் மையங்கள், மாநில வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் பொது, தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியன பங்கேற்க வேண்டும். பிரச்சனைகள் தீவிரமடைவதற்கு முன்பே அவற்றை ஆராய்ச்சி முன்கூட்டியே கணிக்க வேண்டும். இதன்மூலம், சரியான நேரத்தில் தீர்வுகள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய முடியும்.


புதிய பணி முறைகள் செலவுத் திறன், மீள்திறன், சுறுசுறுப்பு மற்றும் விரைவான தொழில்நுட்ப ஏற்புத்திறன் ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். உள்கட்டமைப்பை சிறந்த மற்றும் திறமையான முறையில் பயன்படுத்த முடியும். இதன் விளைவாக, முடிவுகள் களத்தில் உள்ள விவசாயிகளை விரைவாகச் சென்றடையும். இறுதியில், தேசிய இலட்சியங்களுடன் இணைந்த, உண்மையான விவசாயிகளை மையமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி அமைப்பை உருவாக்குவதே இதன் இலக்காகும்.


இந்தியா 2047-ஐ நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில், வேளாண்மை மீண்டும் ஒரு திருப்புமுனையில் உள்ளது. நிதியுதவியை விட, வியூகம், நோக்கத்தின் தெளிவு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவையே இந்தப் பயணத்தை வடிவமைக்கும். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண் ஆராய்ச்சி இந்தியாவின் உணவு எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவியது. வரும் பத்தாண்டுகளில், அது இந்தியாவின் செழிப்பைப் பாதுகாக்க உதவும்.


சதீஷ் ஹெக்டே கட்டுரையாளர் மற்றும் ஒர் ஓய்வுபெற்ற வேளாண் விஞ்ஞானி ஆவர்.


Original article : Reorienting farm research. -Satish Hegde

Share:

பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களின் நிலையை மேலும் மோசமாக்கக்கூடும். -ஃபைசன் முஸ்தபா

 அனைத்துத் தனிநபர் சட்டங்களிலும் உள்ள பெண்களுக்கான மிகச்சிறந்த மற்றும் சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு சட்டமே பயனுள்ள பொது சிவில் சட்டம் (Uniform Civil Code (UCC)) ஆகும்.


பொது சிவில் சட்டம் (UCC) மீண்டும் ஒருமுறை பொது விவாதத்திற்குரிய முக்கியப் பொருளாக மாறியுள்ளது. இம்முறை அரசாங்கத்தைவிட உச்சநீதிமன்றமே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு (Article 44) இதனை ஒரு கொள்கை முடிவாகக் கருதினாலும், நீதிமன்றம் இதில் கவனம் செலுத்தியுள்ளது. வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை போன்ற விவகாரங்களில் முஸ்லீம் தனிநபர் சட்டத்தைப் பின்பற்ற அனுமதிக்கும் 1937-ஆம் ஆண்டின் முஸ்லீம் ஷரியத் (பயன்பாடு) சட்டத்தை (Muslim Shariat (Application) Act, 1937) ரத்து செய்யக் கோரி அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முஸ்லீம் தனிநபர் சட்டத்தில் உள்ள பாகுபாடான நடைமுறைகளை நீக்க பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான சில முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்தது. அதே நேரத்தில், அதிகப்படியான சீர்திருத்தங்கள் தற்போதுள்ள பயன்களை இழக்கச் செய்துவிடக்கூடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (Jamiat Ulama-i-Hind - JUH) அமைப்பு, புதிதாக இயற்றப்பட்ட குஜராத் பொது சிவில் சட்டத்தில் உள்ள வாரிசுரிமை சட்டத்தில் செய்யபட்டுள்ள மாற்றங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு நபர் தனது சொத்து முழுவதையும் யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைப்பதற்குச் சட்டம் முழு சுதந்திரம் அளிக்கும் பட்சத்தில், மகன் மற்றும் மகளுக்குச் சமமான பங்குகளை வழங்குவது மட்டும் உண்மையான சமநிலையை உறுதி செய்யாது என்றும் வாதிடப்படுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 (Hindu Succession Act-1956), இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 (Indian Succession Act - 1925) அல்லது உத்தரகண்ட் பொது சிவில் சட்டம், 2024 (Uttarakhand Uniform Civil Code -2024) என எதுவுமே ஒருவரின் உயில் எழுதும் அதிகாரத்திற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.


இதற்கு நேர்மாறாக, ஷரியத் சட்டம் (Shariat Act) மற்றும் இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின்கீழ் (Muslim Personal Law (MPL)), ஒரு இஸ்லாமிய நபர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் உயில் (Will) எழுதி வைக்க முடியாது. மேலும், மற்ற வாரிசுகளின் சம்மதம் இன்றி ஒரு வாரிசுக்கு மட்டும் ஆதரவாக உயில் எழுத முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்காத எந்தவொரு பொது சிவில் சட்டமும் (UCC), சொத்துரிமை விவகாரங்களில் இஸ்லாமியப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர்.


1937-ஆம் ஆண்டு ஷரியத் சட்டம் (Shariat Act) இயற்றப்பட்டதற்குக் காரணம், பல இஸ்லாமியச் சமூகங்கள் வழக்கங்கள் என்ற பெயரில் மகள்களுக்கு அவர்களின் தந்தையின் சொத்தில் உரிய பங்கினை வழங்க மறுத்து வந்ததே ஆகும். இந்தச் சட்டத்தின் பிரிவு-2, சம்பந்தப்பட்ட நபர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் பட்சத்தில், சில தனிப்பட்ட விவகாரங்களில் இஸ்லாமியத்  தனிநபர் சட்டம் (Muslim Personal Law (MPL)) பொருந்தும் என்று கூறுகிறது. பொதுவாக இஸ்லாமியத் தனிநபர் சட்டம் என்பது முற்றிலும் மரபுவழிச் சட்டம் என்று தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், இது 1937-ஆம் ஆண்டு சட்டம் போன்ற ஒரு மதச்சார்பற்ற சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் மூலம் ஓரளவிற்கு முறைப்படுத்தப்பட்ட சட்டம் ஆகும். மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளும் இஸ்லாமியத் தனிநபர் சட்டடத்தின்  ஒரு பகுதியாக விளங்குகின்றன. எனவே, இது அறிஞர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களாகவே கருதப்படுகிறது. 


ஷயாரா பானு (2017) (Shayara Bano (2017) case) வழக்கில், உடனடி முத்தலாக் நடைமுறை குர்ஆனில் குறிப்பிடப்படாத காரணத்தால், அது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், சொத்துரிமை  விவகாரங்களில் பாகப்பிரிவினை பற்றி குர்ஆனில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அத்தகைய விதிகளை அந்த மதத்தின் அத்தியாவசியமான மத நடைமுறை (Essential Religious Practice (ERP)) அல்ல என்று வாதிடுவது கடினமான ஒன்றாகும். உதாரணமாக, சபரிமலை மறுஆய்வுத் தீர்ப்பு, ஒரு மதம் சார்ந்த நடைமுறை அந்த மதத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதைத் தீர்மானிக்கும் இந்த 'அவசியத் தன்மை சோதனையையே' மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


ஷரியத் சட்டம் (Shariat Act) வேளாண் நிலங்களுக்குப் பொருந்தாது என்பதால், அத்தகைய சொத்துக்களில் இஸ்லாமியப் பெண்களுக்குப் பங்கு கிடைப்பதில்லை. சில மாநில நிலச் சட்டங்கள் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின்படி (MPL) மகன்களுக்குக் கிடைக்கும் பங்கில் பாதி மகள்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சில நிலச் சட்டங்கள் மகன்கள் இருக்கும்போது மகள்களை முற்றிலும் புறக்கணிக்கின்றன. உத்தரப்பிரதேச வருவாய் குறியீடு (Uttar Pradesh Revenue Code), 2006, திருமணமாகாத மகள்களுக்குப் பங்கு வழங்குவதன் மூலம் சில முன்னேற்றங்களைக் கொண்டு வந்தது. இருப்பினும், திருமணமான மற்றும் திருமணமாகாத மகள்களை வேறுபடுத்திப் பார்ப்பது அநீதியானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவை (Right to Equality) மீறுவதாகும். சில அம்சங்களில், இந்து சட்டத் தொகுப்பு அல்லது உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தைவிட இஸ்லாமியத் தனிநபர் சட்டமே பெண்களுக்கு அதிக ஆதரவாக உள்ளது. எனவே, பொது சிவில் சட்டம் மட்டுமே இஸ்லாமியப் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வு என்று கருதுபவர்கள், இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 



இஸ்லாமியத் தனிநபர் சட்டத்தின்கீழ், ஒரு திருமணத்திற்கு மணப்பெண்ணின் சம்மதம் மிகவும் அவசியமானது; இதில் 'கன்னிகாதானம்' போன்ற கருத்துருக்கள் எதுவும் கிடையாது. மணப்பெண் தனது திருமண ஒப்பந்தத்தில் (நிக்காநாமா - Nikahnama) தனக்கு விருப்பமான எந்தவொரு நிபந்தனையையும் சேர்த்துக்கொள்ளலாம். வரதட்சணை முறையைப் போலன்றி, கணவன் மனைவிக்கு வழங்கும் மஹர் (Mehar) என்ற மணக்கொடை ஒரு முறையான திருமணத்திற்கு மிக அவசியமானது. இஸ்லாமிய முறைப்படி, திருமணம் என்பது ஒரு மதச்சடங்கு அல்ல, அது ஒரு சட்ட ரீதியான ஒப்பந்தம் (Civil Contract) ஆகும். மேலும், ஷரியத் சட்டத்தின்படி (Shariat Act), ஒரு பெண் பல வழிகளில் விவாகரத்து பெற அதிகாரம் பெற்றுள்ளார். உதாரணமாக, குலா (Khula) என்பது ஒரு முஸ்லிம் மனைவி தனக்கு விருப்பமில்லாத பட்சத்தில் பெறக்கூடிய 'குற்றச்சாட்டு இல்லாத' விவாகரத்து முறையாகும். ஷரியத் சட்டம் வந்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒரு முற்போக்கான சீர்திருத்தமாக 1939-ஆம் ஆண்டு இஸ்லாமியத் திருமணங்கள் கலைப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ், கணவன் தனது கடமைகளைச் செய்யத் தவறுதல், மனநலப் பாதிப்பு அல்லது நோய், மற்றும் கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது உள்ளிட்ட கொடுமைகள் ஆகிய காரணங்களை முன்வைத்து ஒரு பெண் நீதிமன்றம் மூலம் விவாகரத்து (பஸ்க் - Faskh) கோர முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


ஒரு பொது சிவில் சட்டத்தை ஒரேடியாகக் கொண்டு வராமல், படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். "ஒரே மாதிரியான" சட்டத்தைவிட, அனைவருக்கும் "சமமான நீதி" என்கிற ஒரு சட்டத்தை உருவாக்குவதே முக்கியம் என்கின்றனர். ஏற்கனவே இந்து சட்டத் தொகுப்பு (Hindu Code), இஸ்லாமியச் சட்டத்திலிருந்து பல கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. நாகரிக வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், இதுபோன்ற நல்ல அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதை நாம் மதிக்க வேண்டுமே தவிர, நிராகரிக்கக் கூடாது. உண்மையிலேயே ஒரு சிறந்த பொது சிவில் சட்டம் என்பது, அனைத்து தனிநபர் சட்டங்களிலும் உள்ள பெண்களுக்கு ஆதரவான மிகச்சிறந்த அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஃபைசான் முஸ்தபா, பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.


Original article : Uniform Civil Code may leave Muslim women worse off -Faizan Mustafa

Share:

தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்த வரைவுத் திருத்தங்கள் ஆரோக்கியமான போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. -மேக்னா பால் மற்றும் அவ்னீத் ஓபராய்

 டிஜிட்டல் உலகம் தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது: அதன் பரந்த தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளைக் கொண்டு மட்டும் இதை நிர்வகித்துவிட முடியாது என்கின்றனர். எனவே, முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள், டிஜிட்டல் நிர்வாகத்தின் சிக்கலான தன்மைகளை மிகவும் அவசரமாகவும், அதே சமயம் தீவிரமாகவும் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.


மார்ச் மாதம் 30-ஆம் தேதி அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) தகவல் தொழில்நுட்ப விதிகளில் (Information Technology Rules) புதிய வரைவுத் திருத்தங்களை வெளியிட்டது. இதன் மூலம், டிஜிட்டல் இடைநிலை தளங்கள் (digital intermediary platforms) அவ்வப்போது அமைச்சகம் வெளியிடும் விளக்கங்கள் அல்லது ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, புதிய தொழில்நுட்பங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் இந்த 'ஆலோசனைகள்' ஒரு புதிய நிர்வாகக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. 


உதாரணமாக, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் ‘Deepfakes’ மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) தொடர்பான சிக்கல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இத்தகைய ஆலோசனைகள் பெரும்பாலும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு அதற்கு எதிர்வினையாக உருவாக்கப்படுவதால், அவை முறையான ஒழுங்குமுறைக்குப் பதிலாக விரைவான அமலாக்கத்திலேயே கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆலோசனை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உரிம முறையைப் (Licensing system) பரிந்துரைத்தது; இது நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியையே முடக்கும் அபாயத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


சட்டப்பூர்வமான விதிகள் மற்றும் சட்டங்களைப் போலன்றி, ஆலோசனைக் குறிப்புகள் பொதுவாக முன்கூட்டியே கலந்தாலோசித்தல், தெளிவான வரையறை மற்றும் குறிப்பிட்ட காலக்கெடு போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதில்லை. இதனால் இவற்றை மிக விரைவாக வெளியிட முடிகிறது. வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சூழலில் இத்தகைய கருவிகள் பயனுள்ளதாகத் தெரிந்தாலும், அவை வணிக நிறுவனங்களுக்கு ஒருவித நிச்சயமற்ற நிலையை உருவாக்குகின்றன. இதன் காரணமாக, நிறுவனங்கள் வரவிருக்கும் ஒழுங்குமுறை மாற்றங்களைக் கணிப்பதிலும், இணக்கத் தேவைகளைப் புரிந்து கொள்வதிலும், முதலீடுகளைத் திட்டமிடுவதிலும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. ஒட்டுமொத்தமாக, நிர்வாகத்திற்கு இது போன்ற ஆலோசனைக் குறிப்புகளை மட்டுமே நம்பியிருப்பது ஒழுங்குமுறை ரீதியான குழப்பங்களுக்கு வழிவகுப்பதோடு, கடுமையான பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.


பொருளாதார ஆய்வுகளின்படி, இணையதள விதிமுறைகளில் நிலவும் தெளிவற்ற தன்மை, செயல்பாட்டுத் திறனைக் குறைப்பதோடு பணப்பரிமாற்றச் செலவுகளையும் அதிகரித்து ஒருவிதத் தடையை உருவாக்குகிறது. இந்தத் தாக்கம் டிஜிட்டல் சந்தையோடு மட்டும் நின்றுவிடாமல், அதோடு நெருங்கிய தொடர்புடைய  உலகப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உலகளாவிய பல வணிகங்கள் இன்று தங்கள் பொருட்களை இணையதளம் வாயிலாகவே விற்பனை செய்கின்றன.


 ‘Boston Consulting Group’ நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கைப்படி, சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் படைப்பாளிகள் (Digital creators), ஆண்டுதோறும் 350 முதல் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டு உபயோகச் செலவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 மேலும், ‘Esya Centre’ நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வருவாயைப் பெருக்கவும் நிர்ணயிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களையே (Targeted digital advertising) பெரிதும் நம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தகவல் தொழில்நுட்ப விதிகளில் (Information Technology Rules (IT Rules)) கொண்டுவரப்பட உள்ள வரைவுத் திருத்தங்கள், இணைய நிர்வாகத்தில் ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற முறையை அறிமுகப்படுத்துகின்றன. மேலும், இவற்றின் பரந்த பொருளாதாரத் தாக்கம் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. டிஜிட்டல் மற்றும் நேரடிப் பொருளாதாரத்திற்கு இடையே உள்ள தொடர்பைப் புறக்கணிப்பது, டிஜிட்டல் சந்தைகளையும் தாண்டி ஒழுங்குமுறைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன. ‘Esya Centre’ ஆய்வின்படி, தரவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பாரம்பரியத் துறைகள் ஆகிய இரண்டிலுமே கணக்கெடுக்கப்பட்ட 85% நிறுவனங்கள், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act, 2023 (DPDP Act)) ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளால் ஏற்படும் இணக்கச் செலவுகள் தங்கள் வருவாயைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வு, குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பொம்மைகள் மற்றும் பொழுதுபோக்குத் தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்  என்றும் கண்டறிந்துள்ளது.


தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளின் திருத்தங்களில் முன்மொழியப்பட்டுள்ள நிர்வாக முறை, வெறும் ஆலோசனைகள் வழங்குவது போல் காட்டப்பட்டாலும், நடைமுறையில் அது நேரடி உத்தரவு பிறப்பிக்கும் ஆட்சியைப் போலவே செயல்படக்கூடும் என்கின்றனர். இம்முறையில், குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு முன் அறிவிப்புமின்றி மிக விரைவாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிச்சயமற்ற சூழல், சந்தை நிலவரங்களைக் கண்டறியவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டிஜிட்டல் தளங்களைச் சார்ந்திருக்கும் வணிகங்களுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும் என்கின்றனர். மேலும், பரிவர்த்தனைச் செலவுகள் அதிகரிப்பது இணையவழி சந்தைப்படுத்தல் செலவையும் உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில், இது முதலீட்டையும் உற்பத்தியையும் குறைப்பதோடு, ஒழுங்குமுறை சார்ந்த இடர்பாடுகளைத் துல்லியமாகக் கணிக்க முடியாத சிறு நிறுவனங்கள், சந்தையை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.


பரந்த அளவிலான தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல், அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகளால் டிஜிட்டல் உலகத்தை ஒருபோதும் திறம்பட நிர்வகிக்க முடியாது. டிஜிட்டல் சந்தைகளின் தொழில்நுட்பத் தன்மை, அதன் வேகமான மாற்றம் மற்றும் அவை சாதாரண சந்தைகளுடன் கொண்டுள்ள தொடர்பு போன்ற டிஜிட்டல் நிர்வாகத்தின் சிக்கல்களை முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த காரணிகளைப் புறக்கணிப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை ஒட்டுமொத்த பொருளாதாரச் சிக்கலாக மாற்றக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 


மேக்னா பால் என்பவர் இயக்குநராகவும், ஓபராய் என்பவர் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘Esya Centre’ என்ற சிந்தனைக் குழுவில் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றுகின்றனர்.


Original article : Draft amendments to IT Rules threaten healthy competition. -Meghna Bal and Avneet Oberoi

Share:

இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவன நாள் சிறப்புப் பதிவு: அதன் வரலாறு, புதிய திட்டங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து… -குஷ்பூ குமாரி

 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) நிறுவனம் நிறுவப்பட்டது. இந்தத் தருணத்தில், அதன் வரலாறு, பணிகள் மற்றும் புதிய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். மேலும், மேற்கு ஆசியப் போரின் போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்வோம். 


ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு, 1934-ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India Act, 1934) சட்டத்தின்கீழ் இந்த வங்கி நிறுவப்பட்டது. இது நாட்டின் பணவியல் உறுதித்தன்மையை நிர்வகித்தல், பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல், வங்கிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்தல் போன்ற முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. 1926-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹில்டன் யங் ஆணையம் (Hilton Young Commission) என்று அழைக்கப்படும் இந்திய நாணயம் மற்றும் நிதி குறித்த ராயல் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிறுவப்பட்டது. இந்த ஆணையம் 'இந்திய ரிசர்வ் வங்கி' என்ற பெயரில் ஒரு மத்திய வங்கியை உருவாக்கப் பரிந்துரைத்தது.


2. ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை முறைப்படுத்துதல், பணவியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இருப்புகளைப் பராமரித்தல், நாட்டின் கடன் மற்றும் நாணய முறையை நிர்வகித்தல் போன்ற பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

3. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர் ஆஸ்போர்ன் ஆர்க்கெல் ஸ்மித் ஆவார். இவர் இந்திய இம்பீரியல் வங்கியின் (Imperial Bank of India (IBI)) மேலாண்மை ஆளுநர்களில் ஒருவராகவும் பணியாற்றியவர். அவருக்குப் பிறகு, சர் சி. டி. தேஷ்முக் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநராகப் பொறுப்பேற்றார்.


4. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் முதன்முதலில் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. பின்னர் 1937-ஆம் ஆண்டில் அலுவலகம் நிரந்தரமாக மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த அலுவலகத்தில்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பணியாற்றுவதாகவும் நாட்டின் முக்கிய நிதி சார்ந்த கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


5. இந்திய ரிசர்வ் வங்கி, 1948-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (பொது உடைமைக்கு மாற்றுதல்) ((Transfer to Public Ownership) Act, 1948)) சட்டத்தின்கீழ், 1949-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்டது. இதன்படி, வங்கியின் அனைத்துப் பங்குகளும் உரிய இழப்பீட்டுடன் ஒன்றிய அரசிற்கு மாற்றப்பட்டன.


6. இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மத்திய இயக்குநர்கள் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த குழுவில் ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் வரை, பல்வேறு துறைகளிலிருந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பத்து இயக்குநர்கள், இரண்டு அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி வாரியங்களிலிருந்து நான்கு இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.


7. இந்திய ரிசர்வ் வங்கி மேற்கத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு உள்ளாட்சி வாரியங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு வாரியத்திலும் ஒன்றிய அரசால் நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். இருப்பினும், 2022-ஆம் ஆண்டு முதல், போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை (Quorum) இல்லாத காரணத்தால் இந்த வாரியங்கள் செயல்படவில்லை. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த உறுப்பினர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில், உள்ளாட்சி வாரியங்களுக்குப் பதிலாக மத்திய வாரியத்தின் நிலைக்குழு (Standing Committee of the Central Board) அந்த விவகாரங்களைக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.


8. இந்திய ரிசர்வ் வங்கி விலை நிலைத்தன்மையை பராமரித்தல், ரூபாய் நோட்டுகளை வெளியிடுதல் மற்றும் அரசுக்கும் பிற வங்கிகளுக்கும் ஒரு வங்கியாகச் செயல்படுதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, இன்றைய காலக்கட்டத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserves) நிர்வகிப்பது ரிசர்வ் வங்கியின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதல்களை ஆதரிப்பதற்கும், அந்நியச் செலாவணி சந்தையைச் சீரான முறையில் மேம்படுத்தி பராமரிப்பதற்கும், ரிசர்வ் வங்கியானது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999-ஐ (Foreign Exchange Management Act - 1999) நடைமுறைப்படுத்துகிறது.





இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்முயற்சிகள்:


ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன: பாதுகாப்பை மேம்படுத்தவும், மோசடிகளைக் குறைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி இரண்டு அடுக்கு அங்கீகாரம் (Two-Factor Authentication) கட்டாயமாக்கப்படும். எனவே வெறும் ஒற்றை கடவுச்சொல் (One-Time Password (OTP)) மட்டும் போதுமானதாக இருக்காது. பணப் பரிவர்த்தனைகளை நிறைவு செய்ய, கடவுச்சொல்லை (Personal Identification Number (PIN)) உள்ளிடுவது அல்லது கைரேகை மற்றும் முக அங்கீகாரம் (Face scan) போன்ற கூடுதல் படிநிலை அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின் பொறுப்புணர்வையும் ரிசர்வ் வங்கி (RBI) அதிகரித்துள்ளது. எனினும் பாதுகாப்பு குறைபாட்டினால் மோசடி நடந்தால், வங்கிகளே வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மின்-காசோலைகள் (E-cheques): இந்தியாவின் பணப்பரிமாற்ற முறையை நவீனப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி மின்-காசோலைகளை (e-cheques) அறிமுகப்படுத்த உள்ளது. இவை காகிதக் காசோலைகளின் நம்பகத்தன்மையையும், டிஜிட்டல் பரிமாற்றங்களின் வேகம் மற்றும் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கின்றன. மின்-காசோலை என்பது காகிதக் காசோலையின் டிஜிட்டல் வடிவமாகும், இது இணைய வழியாக உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. பணம் செலுத்துபவர் (Payer) விவரங்களைப் பூர்த்தி செய்து, டிஜிட்டல் கையொப்பமிட்டு (Digital Signature), அதைப் பெறுபவருக்கோ அல்லது வங்கிக்கோ அனுப்ப வேண்டும். வங்கி இதனை ஒரு சாதாரண காசோலையைப் போலவே சரிபார்த்து அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும் ஆனால் இது காகிதக் காசோலையைவிட அதிக பாதுகாப்புடன் கூடிய முறையாகவும் காகிதமற்ற மற்றும் எளிதாகக் கண்காணிக்கக் கூடிய பரிவர்த்தனை முறையாகவும் இருக்கும் என்கின்றனர்.


வங்கிகள் எதிர்கொண்டு வரும் "mule" வங்கிக் கணக்குகள் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதன் மூலம் டிஜிட்டல் மோசடிகளைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி  உருவாக்கியுள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கருவிதான் MuleHunter.AI ஆகும். "mule" கணக்கு என்பது பணமோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகக் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் ஒரு வங்கிக் கணக்காகும். பொதுவாக, குறைந்த வருமானம் கொண்டவர்கள் அல்லது தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களிடமிருந்து இந்தக் கணக்குகளைக் குற்றவாளிகள் அபகரித்துத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.


மேற்கு ஆசியப் போர் நெருக்கடிக்கு மத்தியில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னால் உள்ள முக்கியமான பணிகள்:


1. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பணவீக்கச் சிக்கல்கள் போன்றவற்றால் இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய நிகர அந்நியச் செலாவணி கையிருப்பு வரம்பை (Net Open Position Limit (NOPL)) 100 மில்லியன் டாலராகக் குறைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகர்கள் (Authorized Dealers) அனைவரும் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதிக்குள் இந்த விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2. இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தவும், ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய மோதலால் குறைந்து வரும் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வங்கிகள் உள்நாட்டில் எவ்வளவு அந்நியச் செலாவணியை வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதற்கு முன்பு, வங்கிகள் தங்களின் மொத்த மூலதனத்தில் 25% வரை நிகர திறந்த நிலைகளை (Net Open Positions - NOP) வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இது தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரம்பைவிட அதிகம் என்கின்றனர். 


3. ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால், அதன் மதிப்பை நிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பிலிருந்து டாலர்களைப் பயன்படுத்தியது. இதனால், போர் தொடங்கியதில் இருந்து கையிருப்பு 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் குறைந்து, தற்போது 698.34 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) நான்கு பகுதிகளைக் கொண்டது: அந்நிய நாட்டுச் செலாவணி சொத்துக்கள், தங்கம், சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights (SDRs)) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் (International Monetary Fund (IMF)) உள்ள இருப்பு நிலை (Reserve Tranche Position) ஆகியவையாகும்.


4. இருப்பினும், இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு 95 ரூபாயைத் தாண்டிய நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு பலன் அளிக்கின்றன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சித்தார்த் உபாசனியுடனான நேர்காணலில் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் மைக்கேல் பாத்ரா, சந்தையில் அமெரிக்க டாலர் தடையின்றி புழக்கத்திலிருப்பதை உறுதி செய்ய, ரிசர்வ் வங்கி அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச பணவியல் அதிகாரிகளுக்கான ரெப்போ வசதியை (Foreign and International Monetary Authorities Repo Facility (FIMA Repo Facility)) பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


5. வெளிநாட்டு மற்றும் சர்வதேச பணவியல் அதிகாரிகளுக்கான ரெப்போ வசதியின் கீழ் (FIMA), இந்திய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் தங்களிடம் உள்ள அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை (US Treasury holdings), ஒன்று அல்லது ஏழு நாட்களுக்கு அமெரிக்காவின் மத்திய வங்கிக்கு (Federal Reserve) அடமானமாக வழங்கி, அதற்குப் பதிலாக டாலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர். இந்த காலக்கெடு முடிந்ததும், வாங்கிய டாலர்களைச் சிறு வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டு, அடமானம் வைத்த பத்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் மத்திய வங்கி அதிகாரியின் கருத்துப்படி, இந்த வசதியைப் பயன்படுத்துவது சந்தையை நிலைப்படுத்தவும், ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அவற்றை மீண்டும் சேமிப்பதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெறவும் உதவும் என்கின்றனர்.


6. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் ஏற்படும் தாக்கம்: இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது, நாட்டின் இறக்குமதிச் செலவு முதலில் பாதிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய், மின்னணு உதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் தொழில்முறை இயந்திரங்கள் போன்ற டாலர் மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் பொருட்கள் அதிக விலையுயர்ந்ததாக மாறுகின்றன. இந்த விலையேற்றம் வணிக நிறுவனங்களையும் பொதுமக்களையும் நேரடியாகப் பாதிப்பதோடு, பணவீக்கத்தை (Inflation) அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தியை (Purchasing Power) குறைத்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


7. கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு இறக்குமதிச் செலவு (இறக்குமதி அளவைப் பொறுத்து) சுமார் 1.5 முதல் 2 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கிறது. இது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (Current Account Deficit (CAD)) நேரடியாக உயர்த்துகிறது. எளிமையாகச் சொன்னால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) என்பது இந்தியா ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்வதைக் குறிக்கிறது. இதனால், இந்திய ரூபாயைவிட அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Original article : RBI Foundation Day Special: History, new initiatives, and rupee stabilisation. -Khushboo Kumari

Share:

6-வது அட்டவணையின்கீழ் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் தொடர்ந்து வருகிறது? - திலீப் பி சந்திரன்

லடாக்கின் மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினர் என்பதால்,  அந்தப்பகுதியை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், 6-வது அட்டவணையின் கீழ் நிர்வகிக்கப்படும் பிராந்தியங்களின் அனுபவம், அடிப்படைச் சமூக-அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைக் கையாள்வது எதைக் குறிக்கிறது?


சமீபத்தில், லடாக்கில் மாநில அங்கீகாரம் மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்புகள் கோரி எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. இந்தப் பிரச்சினை 2019-ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது தொடங்கியது.


6-வது அட்டவணையின் கீழ் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை ஏன் இருந்து வருகிறது? அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் விதிகள் யாவை. மேலும், சுயாட்சி மற்றும் நிறுவன வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அது 5-வது அட்டவணையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


லடாக் ஏன் 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்?


6-வது அட்டவணையில் லடாக்கைச் சேர்ப்பது தொடர்பான பிரச்சினை, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கிய 370-வது சட்டப்பிரிவு 2019-ல் ரத்து செய்யப்பட்டபோது தொடங்கியது. மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள், அவர்களின் சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வரையறுக்க ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளித்திருந்த 35A சட்டப்பிரிவும் ரத்து செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் (Jammu and Kashmir Reorganisation Act) சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத்துடன் கூடிய ஜம்மு காஷ்மீர் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள், ஒன்றியம்   மற்றும் மாநிலங்களுக்கிடையேயான கூட்டாட்சி  உறவுகளின் அடிப்படையை மாற்றியுள்ளன.


மக்கள் தொகை குறைவாக உள்ள இமயமலைப் பகுதியான லடாக்கில், முதலில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் இருந்தன. ஆகஸ்ட் 2024-ல், ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என ஐந்து புதிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. லடாக் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.


லடாக் சட்டமன்றம் இல்லாத ஒரு யூனியன் பிரதேசம் என்பதால், 2019-ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் இல்லாதது, சூழலியல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய இப்பகுதிக்கு நிலம், வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாடுகளில்  பயனுள்ள பங்களிப்பை மறுத்துவிட்டது என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


நிலம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கருதப்படுவதே இந்தப் போராட்டத்தின்   முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. லடாக்கின் மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினராக இருப்பதும், 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரு காரணமாகும். இந்தக் கோரிக்கையை விரிவான அரசியலமைப்புச் சூழலிலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.


6-வது அட்டவணையின் கீழ் அரசியலமைப்புப் பாதுகாப்புகள்


அரசியலமைப்புச் சபையின் சில உறுப்பினர்கள் பழங்குடியினப் பகுதிகளுக்கு அதிக சுயாட்சி வழங்குவது குறித்து அச்சம் கொண்டிருந்தாலும், பழங்குடியினரின் அடையாளங்கள், நிலம், வளங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு 6-வது அட்டவணையை வடிவமைத்தது. 6-வது அட்டவணை அரசியலமைப்பின் 244(2) மற்றும் 275(1) போன்ற பிரிவுகளின் கீழ் அமல்படுத்தப்பட்டது.


பிரிவு 244(2) அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகத்தை பற்றியதாகும். பிரிவு 275(1) சில மாநிலங்களுக்கு, அந்த மாநிலத்தில் உள்ள பட்டியல் பழங்குடியினரின் நலனை மேம்படுத்துவதற்காக அல்லது அந்த மாநிலத்தில் உள்ள பட்டியல் பகுதிகளின் நிர்வாக நிலையை அந்த மாநிலத்தின் மற்ற பகுதிகளின் நிர்வாக நிலையை உயர்த்துவதற்காக ஒன்றிய அரசு மானியங்களை மானியங்களை வழங்குகிறது.


6-வது அட்டவணையானது, நான்கு வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினப் பகுதிகளில் அவர்களின் தனித்துவமான அடையாளங்கள், கலாச்சாரம், உரிமைகள் மற்றும் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த அரசியலமைப்புப் பாதுகாப்பு, சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறைத் துறைகளில் அவர்களுக்கு  சுயாட்சியை (autonomy) வழங்குகிறது.


தன்னாட்சி மாவட்ட சபைகள் (Autonomous District Councils (ADCs))


6-வது அட்டவணையின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தன்னாட்சி மாவட்ட சபைகளை (ADCs) அமைக்க மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தன்னாட்சி மாவட்ட சபைகளும் 30 உறுப்பினர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். அவர்களில் நான்கு நபர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மற்ற நபர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஐந்தாண்டு   காலம்  பதவி வகிக்கின்றனர். நியமன உறுப்பினர்கள் ஆளுநர்களின் விருப்பத்தின் பேரில் பதவி வகிக்கின்றனர். ஆளுநர்கள், பல்வேறு பட்டியல் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்களுக்குள் உள்ள தன்னாட்சிப் பகுதிகளுக்கு மண்டல சபைகளையும் (Regional Councils (RCs)) அமைக்கலாம். அனைத்து சபைகளுக்கும் ஒரே மாதிரியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் இல்லை என்றாலும், தன்னாட்சி மாவட்ட சபைகள் மற்றும் மண்டல சபைகளின் பொதுவான அதிகாரங்கள் பின்வருமாறு:


பாதுகாக்கப்பட்ட காடுகளைத் (reserved forests) தவிர, மற்ற காடுகளின் நிலம் மற்றும் மேலாண்மை தொடர்பாக சட்டங்கள் இயற்றலாம்.


ஊரகப்பகுதிகளை  நிர்வகிக்கலாம். சொத்துரிமை, திருமணம் மற்றும் சமூக மரபுகள் குறித்து சட்டங்கள் உருவாக்கலாம். நீதியை நிர்வகிப்பதற்காக கிராம சபைகளையும் நீதிமன்றங்களையும் அமைக்கலாம்.


தொடக்கப் பள்ளிகள், மருந்தகங்கள், சந்தைகள், மீன்வளங்கள், படகுத்துறைகள், சாலைகள் மற்றும் நீர்வழிகளை உருவாக்கி அதை நிர்வகிக்கப்பதுடன், தொடக்கக் கல்விக்கான பயிற்று மொழியையும் நிர்ணயிக்கலாம்.


மாவட்ட நிதி அல்லது பிராந்திய நிதியை அமைத்து நிர்வகிக்கலாம். நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகளை விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் வழிவகை செய்யும் விதிமுறைகளை உருவாக்கலாம்.


கனிமங்களை ஆய்வு செய்யவும் அல்லது பிரித்தெடுப்பதற்கும்   வழங்கப்படும் உரிமங்கள் அல்லது அல்லது குத்தகை (leases) செய்யும் உரிமையை  வழங்கலாம்..


பழங்குடியினர் அல்லாதோர் பணக் கடன் வழங்குவதையும் வர்த்தகம் செய்வதையும் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை அமைக்கலாம். இந்தக் கட்டமைப்பு 6-வது அட்டவணையின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள தன்னாட்சியை வலியுறுத்தினாலும், பழங்குடியினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரே அரசியலமைப்பு வழிமுறை இதுவல்ல.


மாற்று வழிமுறைகள் – ஐந்தாம் அட்டவணை மற்றும் பிரிவுகள் 371(A-J)


அரசியலமைப்பின் 5-வது அட்டவணையின் கீழ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பழங்குடி சமூகங்களின் நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன. பிரிவு 244(1)ன்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற எந்த மாநிலத்திலும் பட்டியல் பகுதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு  5-வது அட்டவணையின் விதிகள் பொருந்தும்.


இருப்பினும், 6-வது அட்டவணையுடன் ஒப்பிடுகையில், 5-வது அட்டவணையானது வரையறுக்கப்பட்ட அளவிலான சுயாட்சியை மட்டுமே வழங்குகிறது. மேலும் முடிவெடுக்கும் அதிகாரம்  மாநிலம் மற்றும் ஆளுநரிடமே இருந்து வருகிறது. கூடுதலாக, அரசியலமைப்பின் பகுதி XXI-ல் உள்ள 371(A-J) பிரிவுகளின் கீழ் சில மாநிலங்களுக்கு தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்கள் அந்தந்த மாநிலத்தின் தனித்துவமான அரசியல் மற்றும் கலாச்சார சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.


5-வது அட்டவணை

6-வது அட்டவணை

பிரிவு 244(1) ஐந்தாவது அட்டவணையானது, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பட்டியல் பகுதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்குப் பொருந்தும் என்று குறிப்பிடுகிறது.

பிரிவு244(2) ஆறாவது அட்டவணையானது அசாம்,மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகத்திற்குப் பொருந்தும் என்று குறிப்பிடுகிறது.

பழங்குடியினர் ஆலோசனைக்குழு (Tribal Advisory Councils (TAC))   அமைக்கப்படுகிறது.

தன்னாட்சி மாவட்ட சபைகள் (ADCs) மற்றும் மண்டல சபைகளை சுய-ஆட்சி நிறுவனங்களாக நிறுவுதல்

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பு

பரவலாக்கப்பட்ட சுய-ஆட்சி அமைப்பு

பெரும்பாலும் நிர்வாக ரீதியான வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.


எதிர்பார்ப்பும் அனுபவமும்


குறிப்பாக, 1971-ல் மணிப்பூரில் ஆறு தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்கள்  உருவாக்கப்பட்டதிலிருந்து, 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் மீண்டும் எழுந்துள்ளது. லடாக்கைப் பொறுத்தவரை,   பிரதிநிதித்துவப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், வேலையின்மை போன்ற பொருளாதாரத் தடைகளைத் தீர்த்தல், எளிதில் பாதிப்படையக்கூடிய இமயமலைச் சூழலியலைப் பாதுகாத்தல் மற்றும் வள இறையாண்மையை உருவாக்குதல் போன்ற பல காரணங்களுக்காக இந்தக் கோரிக்கை நியாயப்படுத்தப்படுகிறது.


இதற்கு நேர்மாறாக, இந்த நடவடிக்கை குறித்து அச்சம் கொண்டவர்கள், அரசியலமைப்புச் சட்டத் தடைகள், நிர்வாகச் சாத்தியக்கூறுகள் மற்றும் பதற்றமான எல்லைப் பிராந்தியத்தில் உள்ள இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் போன்ற கவலைகளை எழுப்புகின்றனர்.  6-வது அட்டவணையின் கீழ் உள்ள பிற பகுதிகளின் அனுபவங்கள், இந்த விவகாரத்திற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன.


6-வது அட்டவணையின் கீழ் நிர்வகிக்கப்படும் பிராந்தியங்கள், அரசியலமைப்புப் பாதுகாப்பு என்பது அடிப்படையான சமூக-அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்து வைக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுகின்றன.  இனங்களுக்கு இடையேயான மோதல்கள், மாநில அரசுகளுக்கும் மன்றங்களுக்கும் இடையேயான பகைமை, மாநிலத்திற்குள் உள்ள பகுதி வளர்ச்சி மன்றங்களுக்கு இடையேயான நலன் தொடர்பான முரண்பாடுகள், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், வரையறுக்கப்பட்ட நிதித் திறன் மற்றும் கிராம அளவில் வரையறுக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் போன்ற சவால்களைக் கண்டுள்ளன.


சுயாட்சி (Autonomy) மற்றும் தேசிய பாதுகாப்பு (national security)


இந்த பின்னணியில், லடாக் பகுதியில் ஆறாம் அட்டவணையின் கீழ் தன்னாட்சிக்கான கோரிக்கை, வலுவான நிறுவனம் சார்ந்தக் கட்டமைப்புகள், நிதிப் பொறுப்புடைமை, பயனுள்ள அதிகாரப் பரவலாக்கம், அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று கூறலாம்.


மேலும், லடாக் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்ற உண்மையையும் புறக்கணிக்க முடியாது. பாதுகாப்பு கண்ணோட்டத்தில், மையப்படுத்தல் பெரும்பாலும் விரைவான முடிவெடுப்பதை சாத்தியமாக்குகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்ற விஷயங்களில் அரசியல் ரீதியான தலையுடுகளைகளைக் குறைக்கிறது. எனவே,  ஒன்றிய அரசு அதிக சுயாட்சிக்கான உள்ளூர் விருப்பங்களை விட, மையப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்க முனைகிறது.


ஆனால், 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, அரசியல் மற்றும் நிறுவனம் சார்ந்த தன்னாட்சி (constitutional and institutional self-governance) குறித்த விரிவான தேவைகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும், உள்ளூர் மற்றும் நிலையான சமூகங்களை நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்வது, நம்பிக்கை மற்றும் பதிலளிப்பு திறனை (responsiveness) அதிகரிப்பதன் மூலம் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உதவலாம்.

Original article :  Why has there been a consistent demand to include Ladakh under the Sixth Schedule? -Dileep P Chandran

Share: