அதிகரித்து வரும் வெப்ப அலைகளுக்கு மத்தியில், வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களை இந்தியா எவ்வாறு பாதுகாக்கிறது? -அபினவ் ராய்


 


இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகமாகவும், நெருக்கமாகவும் இருப்பதால், வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இதன் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மற்றும் அந்த நடவடிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன? 


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department) சமீபத்திய அறிவிப்பின்படி, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என்றும், அது மேலும் 1–2°C வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதிகளில் வெப்பநிலை 40°C முதல் 42°C வரை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக வட இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் வெப்ப அலை பாதிப்புகள் அதிகமாக இருக்கும், ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே கடும் வெப்பம் நிலவத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் உலகளாவிய காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகிறதா அல்லது மனித செயல்பாடுகளால் ஏற்படுகிறதா? மேலும், வெப்ப அலை என்பது சரியாக எதைக் குறிக்கிறது?


வெப்ப அலை என்றால் என்ன?


ஒரு பகுதியில் நிலவும் சராசரி வெப்பநிலையைவிட, அந்த இடத்தில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக உயர்ந்து காணப்படும் நிலையே 'வெப்ப அலை' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திற்கும் அந்தப் பகுதியின் நீண்டகால சராசரி வெப்பநிலையின் அடிப்படையில்தான் வெப்ப அலை நிலைமைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ஒரு பகுதியில் வெப்ப அலை நிலவுகிறது என்பதை அறிவிப்பதற்கு பல்வேறு காரணிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.


வெவ்வேறு பகுதிகளுக்கான குறைந்தபட்ச தகுதி நிலைகள்


வெப்ப அலை (Heatwave) நிலையை அறிவிப்பதற்கான வெப்பநிலையின் வரம்புகள் சமவெளிப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன:


சமவெளிப் பகுதிகள்: ≥40°C வெப்பநிலை


கடலோரப் பகுதிகள்: ≥37°C வெப்பநிலை


மலைப்பாங்கான பகுதிகள்: ≥30°C வெப்பநிலை


இயல்பான நிலையிலிருந்து விலகிச் செல்லுதல்


எந்தவொரு இடத்திலும், வழக்கமான சராசரி வெப்பநிலையைவிட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாகப் பதிவானால், அது வெப்ப அலை என்று கருதப்படுகிறது. அதேபோல், சராசரி வெப்பநிலையைவிட 6.4°C-க்கும் அதிகமாக வெப்பநிலை உயரும்போது, அது தீவிர வெப்ப அலை என்று அறிவிக்கப்படுகிறது.


உண்மையான அதிகபட்ச வெப்பநிலை (சமவெளிப் பகுதிகளுக்கு மட்டும்)

ஒரு வானிலை உட்பிரிவில் உள்ள குறைந்தது இரண்டு வானிலை நிலையங்களில், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 45°C அல்லது அதற்கு மேற்பட்ட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகினால், அது 'வெப்ப அலை' (Heatwave) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒருவேளை வெப்பநிலை இந்த அளவைவிட மிக அதிகமாக இருந்தால், அது 'தீவிர வெப்ப அலை' (Severe heatwave) என்று கருதப்படுகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), வெப்ப அலையின் தீவிரத்தைப் பொறுத்து நிறங்கள் மூலம் எச்சரிக்கைகளை வழங்குகிறது: பச்சை (Green) – எந்த நடவடிக்கையும் தேவையில்லை; மஞ்சள் (Yellow) – விழிப்புடன் இருக்க வேண்டும்; ஆரஞ்சு (Orange) – முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும்; மற்றும் சிவப்பு (Red) – பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


இந்தியாவில் நிலவும் வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகள்


இந்தியாவில் வெப்ப அலைகள் முக்கியமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஏற்படுகின்றன. இவை இந்தியாவின் மத்திய, கிழக்கு மற்றும் வடபகுதிகளை அதிகம் பாதிக்கின்றன. வளிமண்டலத்தின் மேல் பகுதியில் நிலவும் வறண்ட காற்று, காற்றில் ஈரப்பதம் இல்லாமை மற்றும் மேகங்கள் இல்லாத தெளிவான வானம் போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்து, வெப்ப அலைகள் உருவாவதற்கு சாதகமான சூழல் ஏற்படுகிறது.


காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை, 1950-களுக்குப் பிறகு மனிதச் செயல்பாடுகளால் தீவிர இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கையும் அவற்றின் தாக்கமும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் வெப்ப அலைகள், இப்போது உலகின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்வதோடு, முன்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் தீவிரமடைந்துள்ளன.


வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, தனது மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை காரணமாக வெப்ப அலைகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. வளரும் நாடாக இருப்பதால், இங்கு ஏராளமான மக்கள் வெளிப்புறச் சூழலில் வேலை செய்கின்றனர். இதன் விளைவாக, மக்கள்தொகையில் ஒரு பெரும்பகுதியினர் கடுமையான வெப்ப பாதிப்புகளுக்கும் நேரடியாக ஆளாக வேண்டிய சூழலில் உள்ளனர்.


2022-ஆம் ஆண்டின் உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவின் தொழிலாளர்களில் சுமார் 75% பேர் (சுமார் 38 கோடி மக்கள்) கடும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு வேலை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது. வெப்ப அலைகள் (Heatwaves) உடலில் நீர்ச்சத்து குறைபாடு, தசைப்பிடிப்பு, கடுமையான சோர்வு, வெப்பத் தாக்குதல் போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பதற்றம், படபடப்பு, நரம்புத் தளர்ச்சி, உயிரிழப்பு போன்ற தீவிர விளைவுகளையும் உருவாக்கக்கூடும். குறிப்பாக, நகரங்களில் நிலவும் 'நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு' (Urban Heat Island effect - கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சாலைகளால் நகரங்கள் வெப்பத்தை ஈர்த்துத் தக்கவைத்துக் கொள்ளும் நிலை) இந்தச் சிக்கலை மேலும் தீவிரப்படுத்துகிறது.


நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island) என்பது, வெப்பநிலையின் மாறுபாடு காரணமாக ஒரு நகரமோ அல்லது அதன் சில பகுதிகளோ அருகில் உள்ள பகுதிகளைவிட அதிக வெப்பமடைவதைக் குறிக்கும். பகல் நேரத்தில் சேமிக்கப்பட்ட வெப்பம் இரவு நேரத்தில் வெளியேற்றப்படுவதால், இந்த விளைவு இரவில் மிகவும் வலுவாக உணரப்படுகிறது.


இதன் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் பல நகரங்களில் கோடைகால இரவுகளில் வெப்பம் அதிகரிப்பதை அதிகமாகக் காண முடிகிறது. இது குறித்து ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆராய்ச்சி நிறுவனம் (Council on Energy, Environment and Water (CEEW)) மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 15, பெங்களூருவில் 11, போபால் மற்றும் ஜெய்ப்பூரில் தலா 7, டெல்லியில் 6 மற்றும் சென்னையில் 4 இரவுகளும் இயல்பைவிட கூடுதல் வெப்பமான இரவுகளாகப் பதிவாகியுள்ளன.


நகரங்களின் வடிவமைப்பு, அதிக மக்கள்தொகை நெருக்கம், கட்டுமானப் பொருட்கள், சாலைகள், வாகனங்கள் மற்றும் குளிரூட்டும் கருவிகள் (Air Conditioners (AC)) இருந்து வெளியேறும் வெப்பம், மற்றும் பசுமையான அல்லது திறந்தவெளிகள் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் இது நிகழ்கிறது. முறையான திட்டமிடல் எதுவுமின்றி நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், 'நகர்ப்புற வெப்பத் தீவு' (Urban Heat Islands) ஏற்படும் அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கபடுகிறது.


மக்களின் வாழ்வு, வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீதான தாக்கம்


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)), வெப்ப அலைகளை ஒரு "அமைதியான கொலையாளி" என்று அழைக்கிறது. ஏனெனில், இந்தியாவில் 1992-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவை சுமார் 24,223 மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெயில் தாக்கத்தினால் 3,798-பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) தெரிவித்துள்ளது.


இந்தியாவில் நிலவும் வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது, தவறான வகைப்படுத்துதல் மற்றும் இறப்பிற்கான உண்மையான காரணத்தை ஆராயாமல் உடனடி காரணத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால், உண்மையான பாதிப்பைவிட குறைவாகவே கணக்கிடப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வெயிலில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், தினசரி கூலிகள், தெருவோர வியாபாரிகள், காவல்துறையினர், விநியோக ஊழியர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் போன்றோர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களாக உள்ளனர்.


கடுமையான வெப்பம் மனித ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பொருளாதார உற்பத்தித் திறனைக் குறைத்து, எரிசக்திப் பயன்பாட்டையும் அதிகரிக்கிறது. இது உணவு விநியோகம் மற்றும் அத்தியாவசிய மருத்துவ வளங்களையும் பாதிக்கிறது. வறண்ட பகுதிகளில் நீர் ஆதாரங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுவது, காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரிப்பது, மின்சாரத் தேவை உயருவது மற்றும் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவை இதர முக்கிய பாதிப்புகள் ஆகும்.

மேலும், இது கடல் மேற்பரப்பு வெப்பநிலையை மாற்றக்கூடும்; இது காற்றில் ஏற்படும் சுழற்சி முறைகள், தீவிர இயற்கைச் சீற்றங்களின் அதிர்வெண் மற்றும் அவற்றின் பாதிப்பு, மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொடர்பான சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே, வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களும் அவற்றின் செயல்திறனும்


2016-ஆம் ஆண்டில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), வெப்ப அலைகளைத் தடுக்கவும் மற்றும் மேலாண்மை செய்யவும் தேவையான செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் 2017-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டன. தற்போது, வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களை (Heat Action Plans) செயல்படுத்துவதற்காக 23 மாநிலங்களுடன் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) பணியாற்றி வருகிறது. இந்தத் திட்டங்களில் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல், மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், மருத்துவ சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான குளிரூட்டும் மையங்களை அமைத்தல் ஆகியவை அடங்கும்.


இந்த வெப்பத் தடுப்பு செயல் திட்டங்கள் (Heat Action Plans), கடும் வெப்பத்தைச் சமாளிப்பதற்கும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழிகாட்டுகின்றன. இத்தகைய முதல் திட்டம் அகமதாபாத் மாநகராட்சியால், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டெல்லியும் தனது வெப்பத் தடுப்புத் திட்டத்தை 2024–25-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.


2024-ஆம் ஆண்டில், உத்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Uttar Pradesh State Disaster Management Authority (UPSDMA)), இந்தியாவில் முதன்முறையாக அந்த மாநிலத்தின் அனைத்து 75 மாவட்டங்களுக்கும் 'வெப்ப அலை' தொடர்பான குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கை, அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் மற்றும் அந்தந்த இடங்களுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்குப் பெரிதும் உதவுகிறது.


இருப்பினும், சில அடிப்படை கட்டமைப்புச் சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. தேசிய பேரிடர் நிவாரண நிதி (National Disaster Response Fund (NDRF)) மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி (State Disaster Response Fund (SDRF)) ஆகியவற்றின்கீழ் நிதி உதவி பெறுவதற்கு புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், சுனாமி, உறைபனி மற்றும் குளிர்காலக் காற்று போன்ற 12 வகையான பேரிடர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இதில் 'வெப்ப அலைகள்' சேர்க்கப்படவில்லை. இதன் விளைவாக, வெப்ப அலை போன்ற "உள்ளூர் பேரிடர்களுக்கு" மாநிலங்கள் தங்களின் மாநில பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) பத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் இது போதுமானதாக இருப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


கூடுதலாக, வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களின் செயல்திறன் குறித்து பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. பல வெப்பத் தடுப்பு செயல் திட்டங்களில், வெப்பத்தினால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முறையான மதிப்பீடுகள் இல்லை. ‘Sustainable Futures Collaborative’ அமைப்பின் ஆய்வின்படி, நகரங்கள் பசுமைப் பரப்பை அதிகரித்தல், திறந்தவெளிகளை உருவாக்குதல் மற்றும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்ற நீண்டகால தீர்வுகளைவிட, அவசரகால குறுகியகால நடவடிக்கைகளிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, குளிரூட்டும் கருவி உள்ளிட்ட செயற்கை குளிரூட்டும் முறைகளைச் சார்ந்திருக்கும் நிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர்.


செயற்கை முறையில் குளிரூட்டும் கருவிகளைச் சார்ந்திருக்கும் நிலை 


இந்தியாவில் குளிரூட்டும் கருவிகள் (Air Conditioners) இன்னும் ஒரு ஆடம்பரப் பொருளாகவே கருதப்படுகின்றன.  இங்கு 10 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளிலும், சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகளிலும், தாய்லாந்தில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளிலும் குளிரூட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.

வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருவது, மக்களின் வருமானம் உயர்வு மற்றும் வேகமான நகரமயமாக்கல் போன்ற காரணங்களால், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த அதிகரிப்பு நாட்டின் மின்சாரத் தேவை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.


இனி குளிரூட்டும் கருவி என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. ஏனெனில், இது மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இந்திய அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் இந்தியக் குளிர்ச்சியூட்டல் செயல் திட்டத்தை (India Cooling Action Plan (ICAP)) அறிமுகப்படுத்தியது. 20-ஆண்டுகால (2017–18 முதல் 2037–38 வரை) காலக்கெடுவைக் கொண்ட இத்திட்டமானது, குளிரூட்டும் கருவிகளுக்கான தேவையை குறைத்தல், எரிசக்தித் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் மற்றும் அனைவருக்கும் நிலையான குளிர்ச்சியூட்டும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தத் திட்டம், மாண்ட்ரியல் நெறிமுறையின் (Montreal Protocol) ஒரு பகுதியான கிகாலி திருத்தத்தின்கீழ் (Kigali Amendment), இந்தியா அளித்துள்ள உறுதிமொழிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹைட்ரோபுளோரோகார்பன்களின் (Hydrofluorocarbons (HFCs)) பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும். இந்தியா இந்த இலக்கை 2032-ஆம் ஆண்டிலிருந்து நான்கு கட்டங்களாக அடையத் திட்டமிட்டுள்ளது: 2032-ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) பயன்பாட்டை 10%-ஆகவும், 2037-ஆம் ஆண்டுக்குள் 20%-ஆகவும், 2042-ஆம் ஆண்டுக்குள் 30%-ஆகவும், இறுதியாக 2047-ஆம் ஆண்டுக்குள் 85%-ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





அனைவருக்கும் சமமான முறையில் குளிர்ரூட்டும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தல்


இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்பத்தைச் சமாளிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க மிக அவசியமாகும். இதற்குப் பல அடுக்குகள் கொண்ட, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. சமவெளிப் பகுதிகளுக்கு 40°C என்பது போன்ற நிலையான வரம்புகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்தந்தப் பகுதிகளின் வெப்ப பாதிப்பு நிலைகளை உடனுக்குடன் கணித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுப்பது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாக உள்ளது.


வெப்ப தடுப்பு செயல் திட்டங்களை மறுவடிவமைப்பு செய்வதும், வெப்ப அலைகளை அதிகாரப்பூர்வமாக ஒரு 'பேரிடர்' என அறிவிப்பதும், அவற்றுக்கெதிரான பயனுள்ள நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைப் பெற உதவும். நீண்டகால அடிப்படையில், நகரங்கள் முறையான திட்டமிடலுடன் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பசுமையான மற்றும் திறந்தவெளிகள், பசுமைக் கூரைகள் (Green roofs), வெப்பத்தைப் பிரதிபலிக்கும் நடைபாதைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட நகர்ப்புற நீர்நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நகர வளர்ச்சி அமைய வேண்டும் என்கின்றனர்.


உலகம் வெப்பமடைந்துவரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் இந்தியாவின் பெரும் அளவிலான உழைக்கும் மக்களையும் முதியவர்களையும் பாதுகாப்பது அவசியமாகும். இதற்கு அனைவருக்கும் சமமான முறையில் குளிரூட்டும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை அரசாங்கம் தனது கொள்கை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


Original link:


Share:

நீதிபதிகளின் விசாரணை தவிர்ப்பு குறித்த விளக்கம் : நீதிபதிகள் எப்போது, ஏன் வழக்குகளிலிருந்து விலகுகிறார்கள்? -ரோஷ்னி யாதவ்

ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்க மறுக்கலாமா? நீதிபதிகள் ஏன் விலகிக்கொள்கிறார்கள்? 'நலன் சார்ந்த முரண்' (Conflict of Interest) என எதை வரையறுப்பது? இந்தியாவில் இதற்கென  முறையான ஒரு நடைமுறை உள்ளதா? 


தற்போதைய செய்தி :


டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  5 நபர்கள்  தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரண காந்த சர்மா, திங்களன்று மதுபான கொள்கை (excise policy case) தொடர்பான வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டார். நீதிபதி ஷர்மா மீது சுமத்தப்பட்ட “அவதூறுகள், மறைமுகக் குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களுடனேயே” இந்த விலகல் கோரிக்கைகள் ஆதாரங்களுடன் வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதிகளின் விலகல் (recusal of judges) என்றால் என்ன? நீதிபதிகள் எவ்வாறு, ஏன் வழக்குகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள்? 


முக்கிய அம்சங்கள்:


1. நலன் சார்ந்த முரண்பாடு ஏற்படும்போது, ​​ஒரு வழக்கிற்குத் தீர்ப்பளிக்கும்போது அவர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டார் என்ற எண்ணம் உருவாவதைத் தடுப்பதற்காக, ஒரு நீதிபதி அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம்.


2. நலன் சார்ந்த முரண்பாடு (conflict of interest) என்பது, வழக்காடும் ஒரு நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பது முதல், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினருடன் முன் அனுபவமோ அல்லது தனிப்பட்ட தொடர்போ கொண்டிருப்பதுவரை பல வழிகளில் ஏற்படலாம்.


3.  யாரும் தங்களுக்குச் சொந்தமான வழக்கில் தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது என்ற சட்டத்தின் அடிப்படை விதியிலிருந்துதான் இந்த நடைமுறை உருவாகிறது. ஒரு நீதிபதி நேர்மையாகச் செயல்பட வேண்டிய கடமை அவருக்கு இருப்பதால், எந்தவொரு சிறு முரண்பாடும் அவர் அந்த வழக்கிலிருந்து விலகுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.


4. ஒரு நீதிபதி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்போது, அதே நீதிபதி அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க முடியாது. இது ஒரு நீதிபதி வழக்கில் இருந்து விலகுவதற்கான மற்றொரு சூழல் ஆகும். 


இயற்கை நீதிக் கோட்பாடு மற்றும் தனது சொந்த வழக்கில் எவரும் நீதிபதியாக இருக்கக்கூடாது (Nemo Judex In Causa Sua) என்ற கோட்பாடு


இயற்கை நீதி என்பது பொதுவான சட்டத்தின் ஒரு  முக்கியக் கருத்தாகும். இது, ஒரு தனிநபரின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது  நீதிமன்றமும், நீதித்துறை சார்ந்த மற்றும் நிர்வாக அமைப்பும் பின்பற்ற வேண்டிய நடைமுறைக் கோட்பாடுகளைக் குறிக்கிறது. இயற்கை நீதி என்பது நேர்மை, சமத்துவம் மற்றும் நீதியை உள்ளடக்கியது. நீதித்துறை அல்லது நிர்வாகச் செயல்பாடுகளில் இயற்கை நீதிக் கோட்பாடு பின்வரும் இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது:


1. Nemo Judex In Causa Sua: அதாவது, "எந்தவொரு நபரும் தனது சொந்த வழக்கில்தானே நீதிபதியாக இருக்கக்கூடாது". நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது நேர்மையாக வழங்கப்படுவதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும்.


2. இருதரப்பையும் கேட்டு விசாரித்தல் என்ற கோட்பாட்டின்படி, (Audi Alteram Partem) ஒரு நபர் மீது நீதித்துறை அல்லது நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்குமுன், அவருக்கு தகுந்த விளக்கமளிக்கவும், தனது தரப்பு நியாயத்தை முன்வைக்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.


ஒரு வழக்கிலிருந்து நீதிபதி தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் முறை


1. நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவதைக் கட்டுப்படுத்த முறையான விதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்த செயல்முறை  குறித்து ஆராய்ந்துள்ளன.


2. 1987-ஆம் ஆண்டு ரஞ்சித் தாக்கூர் vs இந்திய ஒன்றியம் வழக்கில் (Ranjit Thakur v Union of India (1987)), ஒரு நீதிபதி சார்பாகச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் மனதில் நியாயமாகத் தோன்றுகிறதா என்பதே முக்கிய அளவுகோல் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஒரு நீதிபதி, நான் சார்பாக இருக்கிறேனா? என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொள்வதைவிட, அந்த வழக்கில் உள்ள தரப்பினரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


3. உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நீதித்துறை வாழ்வின் விழுமியங்களின் மறுஉறுதி' (Restatement of Values in Judicial Life - 1999) என்ற நெறிமுறை ஆவணத்தில், ஒரு நீதிபதி தான் பங்குகள் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் வழக்கை, தனது தொடர்பை வெளிப்படுத்தாமலும், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்திலும் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.


4. வழக்கில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவு நீதிபதியிடமிருந்தே வருகிறது. ஏனெனில், அது சாத்தியமான எந்தவொரு முரண்பாட்டையும் வெளிப்படுத்துவது நீதிபதியின் கடமையாகும். சில சூழ்நிலைகளில், வழக்கறிஞர்களோ அல்லது வழக்கில் உள்ள தரப்பினரோ இதனை நீதிபதியிடம் தெரிவிக்கின்றனர். ஒரு நீதிபதி விலகினால், அந்த வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்படுவதற்கு வசதியாக, தலைமை நீதிபதியின் பட்டியலுக்கு அனுப்பப்படும்.


5. குறிப்பாக, ஒரு வழக்கில் இருந்து விலகக் கோரிக்கை விடுக்கப்பட்டவுடன், விலகுவதா இல்லையா என்ற முடிவு நீதிபதியிடமே உள்ளது. சில சூழல்களில், நீதிபதிகள் தங்களுக்கு முரண்பாடு எதுவும் இல்லை என்று கருதினாலும்,  அச்சம் எழுந்த காரணத்தால் மட்டுமே வழக்கில் இருந்து விலகியிருக்கிறார்கள். அதே சமயம், ஒரு வழக்கிலிருந்து விலக நீதிபதிகள் மறுத்த பல சம்பவங்களும் நடந்துள்ளன.


6. இந்தச் செயல்முறையை நிர்வகிக்கும் முறையான விதிகள் எதுவும் இல்லாததால், வழக்கில் இருந்து விலகுவதற்கான காரணங்களைப் பதிவு செய்வது பெரும்பாலும்  வழக்கை விசாரிக்கும்  நீதிபதிகளிடமே விடப்படுகிறது. சில நீதிபதிகள்  நீதிமன்றத்தில் காரணங்களை வெளிப்படையாக கூறுகின்றனர். சில சமயங்களில், காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.



7. 2015-ஆம் ஆண்டில் தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம் (National Judicial Appointments Commission) அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் மதன் லோகூர் ஆகியோர், நீதித்துறை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், இந்தச் செயல்முறைக்கான விதிகளை உருவாக்கவும் நீதிபதிகள் விலகுவதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.


முன் ஜாமீன் (Anticipatory bail) என்றால் என்ன?


தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் பவன் கேராவுக்கு முன்னர் வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனை நீட்டிக்க  உச்சநீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, முன்ஜாமீன் மீண்டும் கவனம் பெற்றுள்ள நிலையில், அதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.


1. பிளாக்ஸ் சட்ட அகராதியின் 4-வது பதிப்பு, ஒரு நபர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் அதிகார வரம்புக்கும் உட்படுவார் என்ற உறுதிமொழியின் அடிப்படையில், அந்த நபரை சட்டப்பூர்வமான காவலில் இருந்து விடுவிப்பதே ஜாமீன் (Bail) என்று இந்த சட்ட அகராதி விவரிக்கிறது.


2. கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் சாதாரணப் பிணைக்கு மாறாக, ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுவது, முன்பிணை  ஆகும்.


3. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு-482-ல் (முன்னர் பிரிவு 438) முன்ஜாமீன் தொடர்பான விதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விதி, முன்பிணை வழங்கும் அதிகாரத்தை அமர்வு நீதிமன்றத்திற்கும் (Sessions Court) உயர்நீதிமன்றத்திற்கும் மட்டுமே வழங்குகிறது.



4. அந்த விதியின் துணைப் பிரிவு (1): “பிணையில் வெளிவர முடியாத குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தாம் கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு எந்தவொரு நபருக்கும் காரணம் இருந்தால், அவர் இந்தப் பிரிவின்கீழ் ஒரு உத்தரவுக்காக உயர்நீதிமன்றத்திலோ அல்லது அமர்வு நீதிமன்றத்திலோ விண்ணப்பிக்கலாம். மேலும், நீதிமன்றம், அந்த செயல்முறை தேவையற்றது என்று கருதினால், அந்த நபர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடலாம்.


5. 1980-ஆம் ஆண்டு குர்பக்ஷ் சிங் சிபியா vs பஞ்சாப் மாநிலம் ( Gurbaksh Singh Sibbia vs State of Punjab (1980)) வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, முன்ஜாமீன் சட்டப்பிரிவானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் (உயிர்வாழ்வதற்கும் தனிமனித சுதந்திரத்திற்குமான பாதுகாப்பு) அடிப்படையில் விளக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது.

Original link:

Recusal of Judges Explained: When and why do judges step aside?


Share:

மாதிரி நடத்தை விதிகள்: தேர்தல்களின்போது கட்சிகள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது? -ரோஷ்னி யாதவ்

பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரை தேர்தல் ஆணையம் ‘ஆய்வு செய்யவுள்ளது’. தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? தேர்தல் நடத்தை விதிகள் பதவியில் இருப்பவர்களுக்கு எது போன்ற வரம்புகளை விதிக்கின்றன. மேலும், புகார்கள்மீது தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது? 


தற்போதைய செய்தி :


பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 18 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகாரை செவ்வாய்க்கிழமை அன்று "ஆய்வு செய்யும்" என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழலில், தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றிப் தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தலைவர்கள், அந்த உரை தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்குக் கடிதம் எழுதி, அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.


2. இந்தப் புகார், ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள் பிரிவால் “ஆய்வு செய்யப்படும்” என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 15 அன்று அமலுக்கு வந்ததுடன், ஐந்து சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே 4 வரை நடைமுறையில் இருக்கும்.


மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct)


1. தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள் என்பது, தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் நெறிமுறைடுத்துவதற்காக வெளியிடப்படும் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இந்த விதிகள் உரைகள், வாக்குப்பதிவு நாள், வாக்குச் சாவடிகள், தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம், ஊர்வலங்கள் மற்றும் பொதுவான நடத்தை தொடர்பான விவகாரங்களை உள்ளடக்கியுள்ளன.


2. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஒரு வடிவம் முதன்முதலில் 1960-ல் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1962 தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளாலும் அதிக அளவில் பின்பற்றப்பட்டதுடன், அதைத் தொடர்ந்த நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் பின்பற்றப்பட்டது. அக்டோபர் 1979-ல், தேர்தல் ஆணையம் 'ஆளும் கட்சியை' நெறிபடுத்துவதற்கும், தேர்தல் நேரத்தில் நியாயமற்ற செயல்முறைகளை தடுப்பதற்கும் ஒரு பிரிவைச் சேர்த்தது.

3. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.


மாதிரி நடத்தை விதிகளின்கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்


1. தேர்தல் நடத்தை விதிகளில், பொது நடத்தை, கூட்டங்கள், ஊர்வலங்கள், வாக்குப்பதிவு நாள், வாக்குச்சாவடிகள், பார்வையாளர்கள், ஆளும் கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகியவை தொடர்பான 8  விதிகள்  இடம்பெற்றுள்ளன.


2. நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், ஒன்றிய அரசோ அல்லது மாநிலங்களிலோ ஆளும் கட்சியோ, தனது அதிகாரப்பூர்வ பதவியை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.  வாக்களிக்கும் போக்கைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு கொள்கை, திட்டம் அல்லது செயல்திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது.


3. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, கட்சியானது பொதுப் பணத்தைச் செலவழித்து விளம்பரம் செய்வதையோ அல்லது சாதனைகளைப் பிரபலப்படுத்த அதிகாரப்பூர்வ வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.


4. அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ பயணங்களை தேர்தல் பணிகளுடன் இணைக்கவோ அல்லது அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தவோ கூடாது என்றும் நடத்தை விதி கூறுகிறது. ஆளும் கட்சியும் பிரச்சாரத்திற்காக அரசாங்கப் போக்குவரத்து அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கான மைதானங்கள் போன்ற பொது இடங்களும், ஹெலிபேடுகள் போன்ற வசதிகளும், ஆளும் கட்சியால் பயன்படுத்தப்படும் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் எதிர்க்கட்சிகளுக்கும் வழங்கப்படுவதை நடத்தை விதி உறுதிசெய்ய வேண்டும்.



5. செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் பொது கருவூலச் செலவில் விளம்பரம் வெளியிடுவதும் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஆளும் கட்சி, வாக்காளர்களை கவரும் வகையில், அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் தற்காலிக (ad-hoc) நியமனங்களை செய்ய முடியாது.

6. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டும். வாக்காளர்களை ஈர்ப்பதற்காகச் சாதி மற்றும் மத உணர்வுகள் போன்றவற்றை பயன்படுத்தப்படக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வேறு எந்த வழிபாட்டுத் தலங்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், அவர்களை மிரட்டுதல் அல்லது ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவை தவறான நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


7. வாக்குப்பதிவு நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரக் காலத்தில் பொதுக் கூட்டங்களை நடத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த 48 மணி நேரக் காலம் ‘தேர்தல் அமைதி’ (Election Silence) என்று அழைக்கப்படுகிறது. வாக்காளர் தனது வாக்கைச் செலுத்துவதற்கு முன்பு, தேர்தல் நிகழ்வுகள் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்குப் பிரச்சாரங்களற்ற ஒரு சூழலை ஏற்படுதித் தருவதே இதன் நோக்கமாகும்.


மாதிரி நடத்தை விதிகள் சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியவையா?

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்தல் நடத்தை விதிகள் (MCC) உருவானது. இது முக்கிய அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் விளைவாக ஏற்பட்டது. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் எதுவும் இல்லை. எளிமையாகச் சொன்னால், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் எவர் மீதும், நடத்தை விதிகளின் எந்தவொரு பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியாது. அனைத்து பணிகளும் தானாக நடைபெறுகின்றன. தேர்தல் ஆணையம் தனது அமலாக்கத்திற்கு அறநெறிசார் தடைகளையோ அல்லது கண்டனத்தையோ பயன்படுத்துகிறது.


2. தேர்தல் ஆணையமானது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தானாகவோ அல்லது மற்றொரு தரப்பினர் அல்லது தனிநபரின் புகாரின் அடிப்படையிலோ ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ அறிவிப்பாணையை அனுப்பலாம்.


3. ஒரு அறிவிப்பாணை வழங்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட நபர் அல்லது தரப்பினர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வேண்டும். ஒன்று தவறை ஏற்றுக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் அல்லது குற்றச்சாட்டை மறுக்க வேண்டும். அந்த நபர் அல்லது தரப்பினர் பின்னர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து எழுத்துப்பூர்வமான கண்டனத்தைப் பெற நேரிடும்.


வாக்கெடுப்புக்குப் பிந்தையக் கணிப்புகள் மற்றும்  கருத்துக்கணிப்புகளும்


1. வாக்கெடுப்புக்குப் பிந்தையக் கணிப்புகள் (Exit polls) என்பவை, வாக்குப்பதிவு முடிந்த உடனேயே முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார்  முகமைகள் மூலம் நடத்தப்படும் ஆய்வுகளாகும். இந்த ஆய்வுகள் வாக்காளர்களின் மனநிலை மற்றும் உருவாகி வரும் போக்குகள் குறித்த ஒரு ஆரம்பக்கட்ட அறிகுறியை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகள் எப்போதும் துல்லியமானவையாக இருப்பதில்லை. அவற்றை இறுதி முடிவுகளாகக் கருத முடியாது.

2. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) வழிகாட்டுதல்களின்படி, வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடையும் வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியாது. இன்னும் வாக்களிக்காத வாக்காளர்களைப் பாதிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றபடுகிறது.


3. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும், கருத்துக்கணிப்புகளும் வேறுபட்டவை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்கு முன்பு நடத்தப்படுகின்றன. அவை வாக்காளர்கள்மீது "தேவையற்ற ஆதிக்கம்" செலுத்துவதால், கடந்த காலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் கருத்துக்கணிப்புகளையும் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.


4. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126A, அனைத்துத் தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கும், இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதையும், கருத்துக் கணிப்பின் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் பரப்புவதையும் தடை செய்கிறது.


5. கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126(1)(b) ஆனது, தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணிநேரக் காலத்தில், கருத்துக் கணிப்பு முடிவுகள் அல்லது பிற கருத்து ஆய்வுகள் உள்ளிட்ட எந்தவொரு தேர்தல் தொடர்பான விவரங்களையும் மின்னணு ஊடகங்கள்  மூலமாக  வெளியிடுவதற்குத் தடை விதிக்கிறது.


6. இந்த விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. பிரிவு 126A (3)-கீழ், விதிகளை மீறும் எந்தவொரு  நபரின் மீதும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து  விதிக்கபடும்.

Original link:

Model Code of Conduct: What parties can and cannot do during polls.


Share:

காலநிலை மாற்றத்திற்கான ஏற்பை, கொள்கை நிலையிலிருந்து அடித்தள மட்டத்திற்குப் பரவலாக்குதல். -அஞ்சனா ராஜகோபாலன், அறிவுடைநம்பி அப்பாதுரை

 ஒருங்கிணைந்த நிர்வாகம், சிறந்த நிதி ஒதுக்கீடு மற்றும் வலுவான உள்ளூர் முயற்சிகள் மூலம் தழுவலை (Adaptation) முன்னெடுக்க முடியும்.


உலகளவில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 1995 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 430 தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளால் 170 பில்லியன் டாலர் இழப்புகளை ஏற்படுத்தி, 1.3 பில்லியன் மக்களைப் பாதித்துள்ளன. 2031-35-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)), இந்த அபாயங்களை ஏற்றுக்கொண்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனையும் அதற்கேற்ப தழுவலையும் நாட்டின் வளர்ச்சி உத்தியில் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவை வலியுறுத்துகின்றன.


புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs), கடலோர மீள்திறன், உள்கட்டமைப்பு, பேரிடர் தயார்நிலை, வெப்பத் தணிப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் தகவமைப்பை வலுப்படுத்துகின்றன. இது, 2035-ம் ஆண்டுக்குள் தகவமைப்புக்கான நிதியை மும்மடங்காக்குவதற்கான உலகளாவிய உறுதிமொழிகளுடனும், COP30 மாநாட்டில் பெலேம் ஏற்பு குறிகாட்டிகளை (Belém Adaptation Indicators) ஏற்றுக்கொள்வதற்கும் இணக்கமாக உள்ளது. இருப்பினும், இந்த இலக்குகளை அடைவதற்கு, தொடர்ச்சியான நிதியுதவியும், தேசிய அளவிலிருந்து அடிமட்டம் வரை ஏற்பை நிறுவனமயமாக்குவதும் அவசியமாகும்.


முக்கிய ஏற்பு  முயற்சிகளில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Agricultural Research (ICAR)) 'காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண்மையில் தேசியப் புத்தாக்கங்கள்' (National Innovations in Climate Resilient Agriculture (NICRA)) முன்னோடித் திட்டம், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய 151 முக்கியப் பகுதிகளில் உள்ள 448 கிராமங்களை உள்ளடக்கி, 651 மாவட்டங்களில் உள்ள இடர்களைப் பட்டியலிடுகிறது. இத்திட்டம், காலநிலைக்கேற்ற திறன்மிகு வேளாண்மை மற்றும் விவசாயிகளின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.


கவனிக்க வேண்டிய ஒரு முன்மாதிரி


2025-26-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையானது, தமிழ்நாட்டின் காலநிலை மீள்திறன் கொண்ட கிராமங்கள் (Climate Resilient Villages (CRV) programme) திட்டத்தை ஒரு சிறந்த நடைமுறையாக அங்கீகரித்துள்ளது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் (Tamil Nadu Climate Change Mission (TNCCM)) கீழ், உலக வளங்கள் நிறுவனம் (World Resources Institute (WRI)) இந்தியாவின் ஆதரவுடன், இந்த காலநிலை மீள்திறன் கொண்ட கிராமங்கள் (CRV) திட்டமானது, உள்ளூர் சமூகங்கள் மற்றும் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, பாதிக்கப்படக்கூடிய 11 மாவட்டங்களில் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கையாளுகிறது. இதன் தலையீடுகளில் நீர் மேலாண்மை, வெள்ளம்/வறட்சித் தணிப்பு, கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல்லுயிர் பாதுகாப்பு, மாற்று வாழ்வாதாரங்கள் மற்றும் காலநிலைத் தகவல்கள் ஆகியவை மற்ற துறைகளில் அடங்கும்.


இதுபோன்ற மாதிரிகளை விரிவுபடுத்துவது, நாடு முழுவதும் தழுவலுக்கானத் திறனை வளர்க்க உதவும். இருப்பினும், ஏற்பை நோக்கிய இந்தியாவின் முயற்சிகள் சிதறிக் காணப்பட்டுள்ளதால், இந்த முயற்சிகளுக்கு நிதியளிப்பது கடினமாகிறது. இந்தியாவின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, 2022 நிதியாண்டில் ஏற்பு மற்றும் மீள்திறன் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6% என மதிப்பிட்டுள்ள நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.


ஏற்பு  நடவடிக்கைக்கு நிதியளித்தல் (Financing adaptation action)


ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme’s (UNEP)) 2025-ம் ஆண்டுக்கான ஏற்பு  இடைவெளி அறிக்கையின்படி, வளரும் நாடுகள் 2035-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 284 பில்லியன் டாலர் முதல் 339 பில்லியன் டாலர் வரையிலான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இந்தியா தற்போது ஏற்பு மீதான தனது கவனத்தை வலுப்படுத்த முற்படும் நிலையில், உள்நாட்டு வளங்களைத் திரட்டுவது முக்கியப் பங்கு வகிக்கும். மேலும், இதற்குத் ஏற்பு நிதியை வகைப்படுத்த ஒரு தெளிவான அமைப்பு தேவைப்படுகிறது (அதாவது, துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் பாதிக்கப்படக்கூடிய ஒவ்வொரு துறைக்கும் தேவைப்படும் வளங்களை மதிப்பிடுவது). இருப்பினும், இந்தியாவின் காலநிலை நிதி வகைப்பாட்டிற்கான வரைவு கட்டமைப்பு (2025) பெரும்பாலும் தணிப்புக்கான (mitigation) நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் கார்பன் உமிழ்வைத் தவிர்த்தல், உமிழ்வு அடர்த்தியைக் குறைத்தல் (சாத்தியமான கூடுதல் நன்மையாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதுடன்) மற்றும் தணிப்பதற்கு கடினமான துறைகளில் மாற்றத்தை ஆதரிக்கும் செயல்பாடுகளைக் கருத்தில் கொள்கிறது.


தவிர்க்கக்கூடிய இழப்புகள் மற்றும் தணிப்புக்கான முயற்சிகள் உள்ளிட்ட சமூக-பொருளாதார, சுற்றுச்சூழல் நன்மைகள் போன்ற தழுவலின் நன்மைகளை அளவிடுவது இன்றியமையாதது. ஏற்பு முதலீட்டில் பத்து மடங்கு வருவாய் கிடைக்கும் என உலக வளங்கள் நிறுவனம் (WRI) ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. இது, தழுவலுக்காக தனியார் மற்றும் சர்வதேச முதலீடுகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு வலுவான வாதத்தை முன்வைக்கிறது. மாநில அளவிலான ஏற்பு வசதிகள், இந்தத் திட்டங்களின் நன்மைகளை அவர்களால் தெளிவாகப் பட்டியலிட்டு வள ஆதாரத்தை விரிவுபடுத்தும், வங்கிகளால் நிதியளிக்கக்கூடிய ஏற்பு திட்டங்களைக் கண்டறிய உதவும்.


மேலும், மாநில வரவு செலவுத் திட்டங்களுக்குள் தழுவலுக்கான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதன் மூலம் உள்நாட்டுப் பொது நிதி (Domestic public finance) சீரமைக்கப்பட வேண்டும். அதன் பிறகு, நிதி அமைச்சகம் மாநில நிதித் துறைகள் மூலம் காலநிலை வரவு செலவுத் திட்டத்தைக் கட்டாயமாக்கலாம். இதை ஒரு வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கை மூலம் ஆண்டு வரவு செலவுத் திட்ட செயல்முறைகளில் ஒருங்கிணைக்கலாம். அத்தகைய ஆணை, ஒரு கண்காணிப்புக் கட்டமைப்புடன் ஏற்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான காலக்கெடுவை உள்ளடக்கியிருக்க வேண்டும். இது துறைசார்ந்த கலந்தாய்வு அணுகுமுறைகள் மற்றும் முக்கியத் துறைகளில் திறன் மேம்பாடு ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தேசிய ஏற்பு திட்டம், தேசியப் பணிகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்கள் (State Action Plans on Climate Change (SAPCC)) ஆகியவற்றின் மூலம் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)) செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் ஆரம்பகட்ட தேசியப் பணிகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களை (SAPCC) வரைவு செய்திருந்தாலும், 2030 வரை தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC) காலநிலை புதுப்பிப்புகளுக்கு ஏற்ப ஒரு சில மாநிலங்கள் மட்டுமே திருத்தங்களைச் சமர்ப்பித்துள்ளன. திட்டமிடலை நிறுவனமயமாக்குவதற்கு, சமூக-பொருளாதார மற்றும் வாழ்வாதாரக் காரணிகளை ஒருங்கிணைத்து, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் காலநிலை பாதிப்பு மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. இதற்கு வலுவான வழிமுறைகள், புதுப்பிக்கப்பட்ட தரவுகள், திறன் மேம்பாடு மற்றும் தரப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன், அவ்வப்போது ஆய்வுகள் மற்றும் தொடர்ச்சியான தரவு சேகரிப்பும் அவசியமாகிறது.


ஏற்பு உத்திகள், மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு, திறன் மேம்பாடு, மாற்று வாழ்வாதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியதாக இருப்பது சிறந்தது. ஏற்கனவே உள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றப் பிரிவுகளைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது பிரத்யேகப் பணியாளர்களுடன் புதிய செயல்பாட்டுப் பிரிவுகளை அமைப்பதன் மூலமோ இதைச் செய்யமுடியும். தெளிவான அறிக்கையிடல் வழிமுறைகள், பரஸ்பரக் கற்றலுக்கும் சரியான நேரத்தில் தலையிடுவதற்கும் மேலும் துணைபுரியும்.


உள்ளூர் தலைமையிலான ஏற்பை ஆதரித்தல்


ஏற்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு, நிறுவன வழிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும். COP30 மாநாட்டில் உள்ளூர் தலைமையிலான ஏற்பு (Locally Led Adaptation (LLA)) முன்னிலைப்படுத்தப்பட்டது. இதில், தேவை அடிப்படையிலான தலையீடுகளின் திட்டமிடல், செயல்படுத்தல், மேலாண்மை, உரிமை மற்றும் தலைமைத்துவம் வரை, சமூகங்களுடன் இணைந்து மீள்திறன் திட்டமிடலை உருவாக்குவது, மக்களின் மையப்படுத்தப்பட்ட காலநிலை நடவடிக்கைக்கு முக்கியமானதாக உள்ளது. காலநிலை மீள்திறன் கொண்ட கிராமங்கள் (CRV) முன்முயற்சியை வெவ்வேறு புவியியல் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது போன்ற, இடம் சார்ந்த மற்றும் சூழலுக்கு ஏற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது, காலநிலை விழிப்புணர்வை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், முடிவெடுக்கும் செயல்முறைகளில் சமூகங்கள் ஒரு பகுதியாக இருக்கவும் உதவுகிறது.


எதிர்கால காலநிலை தாக்கங்களுக்குத் தயாராவதற்கு, பல்வேறு நிலைகளில் திறன் மேம்பாடும், நடத்தை மாற்றமும் தேவைப்படுகின்றன. தேசிய உறுதிமொழிகள் அடிமட்ட அளவில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நிறைவேற்றப்படும் வகையில், தழுவலுக்கான ஒரு முழுமையான அமைப்புக்கு அணுகுமுறை அவசியமாகும்.


அஞ்சனா ராஜகோபாலன், World Resources Institute India அமைப்பின் காலநிலை மீள்திறன் பயிற்சித் திட்டத்தின் திட்ட மேலாளர் ஆவார். அறிவுடை நம்பி அப்பாதுரை, World Resources Institute India அமைப்பின் காலநிலை மீள்திறன் பயிற்சித் திட்டத்தின் இயக்குநர் ஆவார்.


Original link:

Scaling climate adaptation from policy to grassroots.


Share:

எத்தனால் கலப்புக்கும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு? -வாசுதேவன் முகுந்த்

நூறு சதவிகிதக் கலப்பு (blending) அல்லது E100 என்பது, தூய எத்தனாலைக் குறிக்கிறது. சாதாரண பெட்ரோல் விசைப்பொறி எந்திரங்கள் (இன்ஜின்கள்) E20 வரையிலான கலப்புக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


இதுவரையிலான நிகழ்வுகள் : ஏப்ரல் 21 அன்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா எதிர்காலத்தில் 100% எத்தனால் கலவையை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் தன்னிறைவு அடையும் முயற்சியின் பின்னணியில் அவர் இவ்வாறு பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னதாக, நிலையான விமான எரிபொருளைத் (Sustainable Aviation Fuel) தயாரிக்க எத்தனால் பயன்பாட்டை விரிவுபடுத்தும் ஒரு அரசாங்க அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.


100% கலப்பு என்றால் என்ன?


நூறு சதவிகிதக் கலப்பு என்பது தூய எத்தனாலைக் குறிக்கிறது. எத்தனால் எங்கிருந்து பெறப்பட்டாலும், அது ஒரே மாதிரியான வேதியியல் விதிமுறையைத்தான் கொண்டிருக்கும். ஒரு லிட்டர் எத்தனாலைவிட ஒரு லிட்டர் பெட்ரோல் 45-55% அதிக ஆற்றலை வழங்கும். இதற்குக் காரணம், எத்தனால் குறைவான ஆற்றல் அடர்த்தியைக் (energy density) கொண்டிருப்பதே ஆகும்.


வழக்கமான பெட்ரோல் விசைப்பொறி எந்திரங்கள் E20 வரை மட்டுமே சான்றளிக்கப்படுகின்றன. இதன்பொருள், அவை 20% எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தலாம் என்பதாகும். விசைப்பொறி எந்திரங்கள் பழையதாக இருந்தால், அதன் தரமும் பொதுவாகக் குறைவாகவே இருக்கும். 85% அல்லது 100% கலப்புகளுடன், அதாவது E85 அல்லது E100 உடன் இயங்குவதற்கு, விசைப்பொறி எந்திரங்கள் நெகிழ்வான-எரிபொருள் (flex-fuel) வகையைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும். அதாவது, நெகிழ்வான-எரிபொருள் (flex-fuel) விசைப்பொறி எந்திரங்கள் எந்த அளவிலான எத்தனால் கலவையிலும் இயங்க முடியும்.


2000-களில் இருந்து பிரேசிலில் நெகிழ்வான-எரிபொருள் (flex-fuel) வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், தற்போது இந்தியாவில் அத்தகைய வாகனங்கள் பரவலாகக் கிடைக்கவில்லை. டொயோட்டா நிறுவனம் தனது ஹைக்ராஸ் இன்னோவாவின் ஒரு பதிப்பை நெகிழ்வான-எரிபொருள் வாகனமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை பெட்ரோல் பதிப்பைவிட ரூ. 3-4 லட்சம் அதிகம். மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்மாதிரி வாகனங்களைக் கொண்டிருப்பதாகவும், 2026 முதல் 2028 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் புதிய அறிமுகங்கள் இருக்கும் என்றும் அறியப்படுகிறது.


இந்த வாகனங்களில், தேய்மானத்தை தடுக்கும் எரிபொருள் அமைப்புகள், வெவ்வேறு சென்சார்கள் மற்றும் சிறப்பாகச் சரிசெய்யப்பட்ட விசைப்பொறி எந்திர கட்டுப்பாட்டு அலகுகள் (engine control units) உள்ளிட்ட பிற மாற்றங்கள் இடம்பெற வேண்டும்.


உண்மையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் (Make in India initiative) கீழ், எல்லா இடங்களிலும் 100% எத்தனால் கலவையைச் செயல்படுத்த புதிய வாகனங்களும், புதிய விநியோகச் சங்கிலிகளும் தேவைப்படுகின்றன.


கலப்புக்காக இந்தியா எத்தனாலை எவ்வாறு உற்பத்தி செய்கிறது?


இந்தியாவில், எத்தனால் தற்போது பெரும்பாலும் கரும்பிலிருந்து மூலப்பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு அதிக நீர் தேவைப்படும் ஒரு பயிராகும். மேலும், இது மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. எத்தனால் தயாரிக்கக் கரும்பைப் பயன்படுத்துவது, உணவுக்கான அதன் இருப்பைக் குறைக்கிறது. இது உணவு விலைகளையும் விநியோகத்தையும் பாதிக்கக்கூடும்.


இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆதரவு பெற்ற திட்டங்களின்கீழ், நெல் வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ‘இரண்டாம் தலைமுறை’ எத்தனாலை ஊக்குவித்து வருகிறது. மேலும், இந்த முயற்சிகளுக்கு வட இந்தியாவில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளின் அளவைக் குறைக்கும் என்றும் அரசு நம்புகிறது.


எத்தனால் தேவை அதிகரித்து வரும் நிலையிலும், அதனுடன் தொடர்புடைய உற்பத்திச் செலவுகள் பெட்ரோல் செலவுகளை விடக் குறைவாக இல்லை. எனவே, கொள்கை ரீதியான ஆதரவும், தற்போது இருப்பது போல, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் விலை நிர்ணயமும் தேவைப்படுகிறது. மறைமுகச் செலவுகளும் உள்ளன. எத்தனால் எரிக்கப்படும்போது, ​​பெட்ரோலை விடக் குறைவான கார்பன் மோனாக்சைடு மற்றும் துகள்களை வெளியிடுகிறது. அதனால், அந்த மாசுபடுத்திகளால் ஏற்படும் சுகாதாரச் சுமை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், ககரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் உற்பத்திக்கு நிலப் பயன்பாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற உள்ளீடுகள் மற்றும் நீர்த் தேவை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


பெருநிறுவன சராசரி எரிபொருள் செயல்திறன் (CAFE) III என்பது E100 உடன் தொடர்புடையதா?


அரசாங்கம் 2017-ல் பெருநிறுவன சராசரி எரிபொருள் செயல்திறன் (Corporate Average Fuel Efficiency (CAFE)) தரநிலைகளை முன்மொழிந்தது. இந்தத் தரநிலைகள், ஒரு உற்பத்தியாளரின் ஒட்டுமொத்த வாகனத் தொகுப்பும் வெளியிடக்கூடிய மொத்த கார்பன் டை ஆக்சைடின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, SUV-கள் போன்ற அதிக மாசு உமிழும் வாகனங்களை அதிக அளவில் கொண்டுள்ள உற்பத்தியாளர்கள், அதிக செயல்திறன் மிக்க மாடல்களை வடிவமைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.


இந்தியா 2017-ல் CAFE I-ஐயும், 2022-ல் CAFE II-ஐயும் செயல்படுத்தியது. CAFE III முந்தைய நிலைகளை விடக் கடுமையானதாக இருக்கும். இது CAFE II-உடன் ஒப்பிடும்போது, வாகனத் தொகுப்பு முழுவதற்குமான சராசரி புகை வெளியேற்ற இலக்கை சுமார் 30% குறைக்கிறது. மேலும், இது ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும்.


எத்தனால் கலப்பிற்கு எதிராக நிலவும் கணிசமான பொது எதிர்ப்பைச் சமாளிக்க, E85 அல்லது E100 பயன்பாட்டை நோக்கிய நகர்விற்கு CAFE III-ஐப் பயன்படுத்துவது உதவக்கூடும். E20 எரிபொருளானது, தூய பெட்ரோலைவிட 6-7% குறைவான செயல்திறன் கொண்டதுடன், அதேஅளவு எரிபொருளுக்குக் குறைந்த பயணதூர வீதம் தருவதுடன், செலவுகளை அதிகரிக்கிறது.


இந்திய அரசு 2003-ல் தனது எத்தனால் கலப்புத் திட்டத்தைத் தொடங்கியபோதிலும், அது ஒரு பத்தாண்டு காலமாகச் செயல்படாமல் இருந்ததுடன், 2014-ல் சுமார் 2%-ஆக இருந்தது. ஆனால், அரசின் புத்துயிர் பெற்ற முயற்சிக்குப் பிறகு, இந்தியா தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்ட நவம்பர் மாதக் கெடுவிற்கு முன்பாகவே, ஜூன் 2022-ல் E10, அதாவது 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைந்தது.


2023-ம் ஆண்டு முதல் பெட்ரோல் நிலையங்களில் E20 எரிபொருள் கிடைக்கத் தொடங்கியதுடன், 2025-ம் ஆண்டு முதல் சந்தையில் இருந்த E5 மற்றும் E10 உள்ளிட்ட மற்ற கலவைகளுக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட்டது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கையானது, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் E20-ஐ அடையும் என்று முன்னதாகக் கூறியிருந்தது. தீவிரமான கலப்பு இலக்குகள், சேமிப்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பின் தயார்நிலை குறித்து தொழில் அமைப்புகள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களின் கவலை கொண்டுள்ளனர்.


இந்தியா எப்படி எரிசக்தி பாதுகாப்பை அடைய முடியும்?


மாற்று எண்ணெய் ஆதாரங்களைத் (alternative sources of oil) தேடுவது, அணு உலைகளுக்கான புதிய யுரேனியம் ஆதாரங்களைப் பெறுவது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கத்தொகைகளை வழங்குவது போன்றவற்றின் மூலம் இந்தியா தனது எரிசக்தித் தளத்தைப் பன்முகப்படுத்த முயன்றுள்ளது. இருப்பினும், அமெரிக்கத் தடைகளால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. பல எரிசக்தித் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தித் துறை வளர்ச்சியடையாமல் உள்ளதுடன், ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் குறைந்த அளவிலான பலன்களையே அளித்துள்ளன.


தனது அறிக்கையில், கட்கரி, தற்போதைய உலகளாவிய சராசரி விலையான ஒரு கிலோவுக்கு 3-6 டாலர் என்ற நிலைக்கு எதிராக, இந்தியா ஒரு எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறுவதற்கு, இறுதியில் தனது பொருளாதாரத்தை வட்டப்பொருளாதாரமாக, ஒரு கிலோ ஹைட்ரஜனை 1 டாலர் என்ற விலையில் உற்பத்தி செய்யவேண்டும் என்று கூறினார். தனது தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ், இந்தியா ஒரு ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக மாறத் திட்டமிட்டுள்ளது. மேலும், கிலோவுக்கு 1 டாலர் என்ற விலையில் டீசலுக்குப் போட்டியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி திடக்கழிவுகள் அல்லது கழிவுநீரிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


தற்போது இந்தியாவில் ஹைட்ரஜன் பொருளாதாரத்திற்கு, வணிகரீதியான போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன.


எத்தனால் விமானங்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுமா?


ஏப்ரல் 17 அன்று வெளியிடப்பட்ட ஓர் அரசாங்க அறிவிப்பு, நிலையான விமான எரிபொருளை (Sustainable Aviation Fuel (SAF)) தயாரிக்க எத்தனாலையும் பயன்படுத்திக்கொண்டது. விமானங்கள் இன்னும் வணிக அளவில் மின்கலன்களையோ அல்லது ஹைட்ரஜனையோ பயன்படுத்த முடியாததால், விமானப் போக்குவரத்தில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது கடினமாக இருந்து வருகிறது. இதனால், சர்வதேச மாசு உமிழ்வுக் கட்டமைப்புகளுக்கு இணங்குவதற்கான முதன்மை வழியாக நிலையான விமான எரிபொருள் (SAF) விளங்குகிறது.


இருப்பினும், ஜெட் விசைப்பொறி எந்திரங்கள்களில் பயன்படுத்தப்படுவதற்கு, எத்தனால் முதலில் 'ஆல்கஹாலிலிருந்து ஜெட்' (Alcohol-to-Jet (ATJ)) எனப்படும் ஒரு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதில், நீர் நீக்கப்பட்டு, அதன் ஹைட்ரோகார்பன் சங்கிலிகள் நீட்டிக்கப்பட்டு, ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகிறது. ஆல்கஹாலிலிருந்து ஜெட் (ATJ) முறையானது சுத்திகரிக்கப்படாத எத்தனால் ஜெட் விசைப்பொறி எந்திரங்கள்கள் வழியாகச் செல்வதைத் தடுப்பதால், விமர்சகர்கள் குற்றம் சாட்டியதுபோல, அது உந்துவிசையைக் குறைக்கவோ அல்லது ஈரப்பதத்தை உறிஞ்சி எரிபொருள் குழாய்களை அடைக்கவோ செய்யாது.


ஆல்கஹாலிலிருந்து ஜெட் (ATJ) எத்தனால் வேதியியல்ரீதியாக மண்ணெண்ணெயை ஒத்திருக்கிறது. மேலும், தற்போதுள்ள விமான எரிபொருள் உள்கட்டமைப்பால் அதைக் கையாள முடியும். ASTM இன்டர்நேஷனல் உலகளாவிய விமான எரிபொருள் தரநிலைகளை நிர்ணயித்து, ஆல்கஹாலிலிருந்து ஜெட் (ATJ) வழிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது நிலையான விமான எரிபொருளில் (SAF) 50% வரை கலப்பதற்கு அனுமதிக்கிறது.


இருப்பினும், சாலைப் போக்குவரத்து எரிபொருளின் ஒரு பகுதியாகப் பதப்படுத்தப்படாத எத்தனாலைப் பயன்படுத்துவதைப் போலவே, நிலையான விமான எரிபொருள் (SAF) உற்பத்தியும் மூலப்பொருளின்மீது அதே அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. கரும்பு உற்பத்தியை மேலும் பாதிக்காமல் நிலையான விமான எரிபொருள் (SAF) உற்பத்தியை அதிகரிப்பது என்பது, இரண்டாம் தலைமுறை எத்தனாலை எவ்வளவு விரைவாக வணிக அளவில் உற்பத்தி செய்யமுடியும் என்பதைப் பொறுத்தே அமையும்.

Original link:

How are ethanol-blending and India’s energy security linked?


Share: