தமிழ்நாடு கடந்த 100 ஆண்டுகளில் அறிவுசார் சமுதாயமாக மாறியுள்ளது. இந்த மாற்றம் கல்வியில் முதலீடுகள் மற்றும் நூலக இயக்கம் போன்ற முயற்சிகளால் ஏற்பட்டது. மாநிலத்தில் தற்போது 4661 நூலகங்கள் பொது நூலக இயக்குநரகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
சமூக, இலக்கிய மற்றும் அரசியல் இயக்கங்கள் கல்விக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தி, தமிழகம் முழுவதும் கல்வியை அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளன. பல்வேறு சாதிகள் மற்றும் மதங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், கல்வியை மேலும் ஜனநாயகப்படுத்தவும் நீதிக்கட்சி வகுப்புவாத (communal G.O.) அரசாணையை வெளியிட்டது. நூலக இயக்கம், மற்ற தலையீடுகளுடன், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கியது.
கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவில் உள்ள நான்கு களஞ்சிய நூலகங்களில் (repository libraries) ஒன்றாகும். 1918 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சரஸ்வதி மகால் (Serfoji’s Saraswathi Mahal) நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது, 1948 ஆம் ஆண்டில் மெட்ராஸ் பொது நூலகச் சட்டம் (Madras Public Libraries Act) நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பொது நூலகங்களுக்காக இயற்றப்பட்ட முதல் சட்டம் இதுவாகும். மெட்ராஸ் பொது நூலகங்கள் சட்டம், கல்வி அமைச்சர் தலைமையிலான மாநில நூலகக் குழு மூலம் நிர்வாகத்தை நிறுவியது. 1972 ஆம் ஆண்டில், திமுக அரசு பொது நூலக இயக்குநரகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் நூலக இயக்கத்தை பெரிதும் விரிவுபடுத்தியது மற்றும் மாநிலம் முழுவதும் ஏராளமான நூலகங்களை நிறுவ வழிவகுத்தது. தற்போது, கன்னிமாரா பொது நூலகம் சென்னை (Chennai), அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை (Madurai) தவிர, 32 மாவட்ட மைய நூலகங்கள், 314 முழுநேர கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1612 கிளை நூலகங்கள், 1915 கிராம நூலகங்கள் மற்றும் 771 பகுதிநேர நூலகங்கள் உட்பட 4661 நூலகங்கள் பொது நூலகத் துறையின் பொது நூலகத் துறையின் ( Department of Public Libraries (DPL)) கீழ் இயங்குகின்றன.
திராவிட இயக்கத்தின் அறிஞரான கே.திருநாவுக்கரசு, தமிழ்நாடு முழுவதும் சிறிய வாசிப்பு அறைகள் மற்றும் நூலகங்களை அமைப்பதில் திராவிடக் கட்சி உறுப்பினர்களின் ஈடுபாட்டை பதிவு செய்துள்ளார். தேநீர் கடைகள் மற்றும் சலூன்களில் கூட சிறிய நூலகங்கள் இருந்தன. இது ஏழைகளின் சமூக இயக்கத்திற்கு உதவுகிறது என்று திருநாவுக்கரசு கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியும் இதே போன்ற முயற்சிகளில் பங்களித்தது.
2010 ஆம் ஆண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகம் (Anna Centenary Library (ACL)) அப்போதைய முதலமைச்சர் கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது. இது, பல்வேறு மொழிகளில் 6.25 லட்சம் புத்தகங்களைக் கொண்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம், நாட்டின் பழமையான கையெழுத்துப் பிரதி நூலகமான கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தையும் கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் கட்டிடம் மற்றும் புத்தகங்களை அணுகுவதற்கான முயற்சிகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வந்த அதிமுக அரசு அதை மருத்துவமனையாக மாற்ற விரும்பியபோது, நீதிமன்றம் தலையிட்டு, நூலகத்தின் சரியான பராமரிப்பை உறுதி செய்தது. 2021 ஆம் ஆண்டில், நூலகங்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த திமுக அரசு முடிவு செய்தது. சிறிது காலமாக புறக்கணிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பிக்க நிதி ஒதுக்கினர். 2023 ஆம் ஆண்டில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் (Kalaignar Centenary Library (KCL)) முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதிக அளவிலான மக்களுக்கு அறிவிற்கான அணுகலை இந்த நூலகம் உறுதி செய்கிறது.
பொது நூலகச் சட்டத்தை புதுப்பிக்க அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கியது. தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு மா.ராஜேந்திரன் இந்தக் குழுவை வழிநடத்துகிறார். குழு உறுப்பினர்கள், நூலக அறிவியல், கல்வித்துறை, காப்பகங்கள் மற்றும் தொழில்நுட்ப துறை எனப் பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளனர். இதன் உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரு வரைவு முன்மொழிவை அரசாங்கத்திடம் கொடுத்தனர். அது இப்போது பரிசீலனையில் உள்ளது. தற்போதைய, நூலக சட்டம் சேவைகள் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
பல தனியார் நூலகங்கள் அரசாங்க ஆதரவைப் பெறுகின்றன. மறைமலை அடிகள் நூலகத்திற்கு ஆதரவு தேவை என்பதை அறிந்த கலைஞரின் அறிவுறுத்தலின் பேரில் மறைமலை அடிகள் நூலகத்தின் புத்தகங்கள் கன்னிமாரா பொது நூலகத்திற்கு மாற்றப்பட்டது. பெசண்ட் நகரில் உள்ள உ.வே. சாமிநாத ஐயர் நூலகம் (U. Ve. Saminatha Iyer Library) 1967 இல் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றது.
2010 ஆம் ஆண்டில் கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு, மற்றொரு முக்கியமான நூலகமான ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தை (Roja Muthiah Research Library (RMRL)) அரசு அங்கீகரித்தது. இந்த முயற்சிக்கு உள்ளூர் நூலக ஆணையக்குழுவிற்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை வழங்கியது. பல அரிய புத்தகங்கள் இங்கு சேமித்து பராமரிக்கப்படுகின்றன. இந்த நூலகம் புத்தகங்களைப் பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்கிறது மற்றும் அதன் பல்வேறு அரிய புத்தகங்களின் மூலம் பொதுமக்களுக்கும் ஆராய்ச்சி சமூகத்திற்கும் சேவை செய்கிறது. தற்போதைய அரசு இத்தகைய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கூடுதல் இடவசதி மற்றும் நிதியை வழங்கி வருகிறது. புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா நூலகம் (Gnanalaya Library), சென்னையில் உள்ள அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோட்டில் உள்ள மகாகவி பாரதி நினைவு நூலகம் (Mahakavi Bharathi Memorial Librar), கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் தமிழ் நூலகம் (Sivagurunathan Tamil Library) மற்றும் தமிழ் நூல் காப்பகம், விருத்தாச்சலம் சாய் மறைகார் நூலகம் (Islamic Library) என இன்னும் பல நூலகங்கள் உள்ளன. இவை நூலக இயக்கத்தை நன்கு ஆதரிக்கின்றன.
சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் விரிவுரையாளராகவும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (Roja Muthiah Research Library (RMRL)) முதல் இயக்குநராகவும் இருந்த சங்கரலிங்கம் புதிய நூலக இயக்கம் குறித்து பேசினார். இந்த இயக்கம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பணிகளை உள்ளடக்கியது. 1994இல் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (Roja Muthiah Research Library (RMRL)) தொடங்கப்பட்டபோது, ஏற்கனவே இருந்த முந்தைய இயக்கத்தைத் தொடர்ந்து ஒரு புதிய நூலக இயக்கத்தின் ஆரம்பமானது என்று குறிப்பிட்டார்.
அரசு, அதன் முயற்சிகளில் ஒன்றாக தமிழ் இணையக் கல்விக்கழகத்தை (Tamil Virtual Academy (TVA)) நிறுவியது. உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், அரிய தமிழ் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை அணுக இதனைப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு பொது நூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூற்பட்டி (Union Catalogue for Public Libraries) என்ற மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நூற்பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலின் நூற்பட்டியல்களையும் ஒன்றிணைத்து, அறிஞர்களுக்குத் தேவையான நூல்களை கண்டுபிடிப்பதில் பெரிதும் உதவுகிறது. பொது நூலகங்களின் இயக்குநரகம் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியவை இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டன. இப்போதைய திமுக ஆட்சியில் உள்ளூர் நூலக ஆணைக்குழு (Local Library Authority) மற்றும் மாநில நூலகக் குழு (State Library Committee) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.