ஏப்ரல் 1, 1950-ல், சீன மக்கள் குடியரசு (People’s Republic of China (PRC)) உடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் சோசலிஸ்ட் அல்லாத நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
அந்த நேரத்தில், பனிப்போர் தொடங்கியதிலிருந்து, உலகம் பெரும்பாலும் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மா சேதுங்கின் கீழ், ஒரு கடுமையான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நாட்டை முற்றிலும் கம்யூனிச சீன அரசாக ஆறு மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியா, இந்த மோதலில் "அணிசேராமல்" (non-aligned) இருக்கத் தேர்ந்தெடுத்தது. இருப்பினும், சீனாவை அணுகுவதற்கு நேருவுக்கு சில காரணங்கள் இருந்தன. இதில், இரு நாடுகளுக்கும் நிறைய பொதுவான விஷயங்கள் இருந்தன. அவை நீண்ட கால காலனித்துவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட பண்டைய நாகரிகங்கள் ஆகும். நேரு பெரும்பாலும் சீனாவை "இந்தியாவின் பழைய கால நண்பர்" (India’s old-time friend) என்று குறிப்பிட்டார். மேலும், அதன் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பாராட்டினார்.
ஆரம்பகாலத்தில் உற்சாகம் இருந்தபோதிலும், பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் 3,000-கிமீ பகிரப்பட்ட எல்லையிலும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. 1962-ம் ஆண்டில் நடைபெற்றப் போரால், சுதந்திர இந்தியாவின் ஒரே இராணுவ தோல்வியால், நாடுகளின் உறவுகளின் மிகக் குறைந்த நிலையைக் குறித்தது.
இதுபோன்ற சமயத்திலும், நாடுகளின் நெருக்கம் சமரச முயற்சிகளுக்கு வழிவகுத்தது. "யானை" (இந்தியா) மற்றும் "டிராகன்" (சீனா) ஒவ்வொரு பின்னடைவுக்குப் பிறகும் உறவுகளை மேம்படுத்த முயற்சித்தன.
இன்று, இரு நாடுகளும் வலுவான பொருளாதார நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. இது, 2020-ல் லடாக்கில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகும், ஈடுபாட்டின் சாத்தியத்தை நடைமுறையில் வைத்திருக்கிறது. 2023-24 நிதியாண்டில், சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகரீதியில் நட்புநடாக மாறியது.
சரி, இந்தியாவும் சீனாவும் ஒன்றையொன்று எப்படிப் பார்த்திருக்கின்றன? இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளின் அதிகாரப்பூர்வ பதிவுகள், அறிக்கைகள் மற்றும் கருத்துகள் சில நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
அவநம்பிக்கையின் விதைகள்
1914-ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தை சீனா பின்பற்ற மறுத்துவிட்டது. இந்த ஒப்பந்தம் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையாக மெக்மஹோன் கோடு (McMahon Line) உட்பட கட்டுப்பாட்டுப் பகுதிகளை வரையறுத்தது. சீன மக்கள் குடியரசுடன் (PRC) ஆரம்பத்திலேயே உறவுகளை உருவாக்குவது நல்லெண்ணத்தை உருவாக்கும் என்று நேரு நம்பினார். இந்த நல்லெண்ணம் சீனாவுடனான கடினமான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு உதவும். சீனாவைப் பொறுத்தவரை, இந்தியாவுடனான உறவு புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளிடையே அதன் நிலையை வலுப்படுத்தக்கூடும். அணிசேராக் கொள்கையின் கீழ் இந்தியாவின் தற்போதைய உறவுகள் சீனாவிற்கு மதிப்புமிக்கவையாகும். முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் சீனாவுக்கான இந்தியத் தூதருமான விஜய் கோகலே, தனது ‘The Long Game: How the Chinese negotiate with India’ என்ற புத்தகத்தில், இந்தியா சில நன்மைகளை இழந்திருக்கலாம் என்று எழுதினார். இந்தியா தனது சொந்த நிபந்தனைகளை வழங்காமல் சீனாவின் நிபந்தனைகளுக்கு விரைவாக ஒப்புக்கொண்டபோது இது நடந்தது.
உதாரணமாக, இந்தியா ஒரே-சீனா கொள்கையை ஏற்க வேண்டும் என்று சீனா தெளிவுபடுத்தியது. இதன் பொருள் இந்தியா தைவானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க முடியாது. இருந்த போதிலும், சீனத் தலைவர்கள் இந்தியாவை நம்பத்தகாததாகக் கருதினர். இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கான இந்தியாவின் முடிவு பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கை அனுமதித்தது.
இந்தியாவில், அக்டோபர் 1950-ல் திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு கடுமையான கவலைகளை ஏற்படுத்தியது. துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் சீனாவை ஒரு சாத்தியமான எதிரியாகப் பார்க்குமாறு நேருவுக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், நேரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1954-ல், பஞ்சசீல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவை வழிநடத்த ஐந்து முக்கிய மதிப்புகளை அது கோடிட்டுக் காட்டியது: அவை,
1. ஒருவருக்கொருவர் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு
மரியாதை.
2. பரஸ்பர ஆக்கிரமிப்பு இல்லாமை.
3. பரஸ்பர தலையீடு இல்லாமை.
4. சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை.
5. அமைதியான சகவாழ்வு.
1959-ல், திபெத்தின் தலைநகரான லாசாவில் சீன எதிர்ப்பால் கலவரங்கள் வெடித்தன. தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இது திபெத்தின் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை இந்தியா பலவீனப்படுத்த முயற்சிப்பதாக சீனத் தலைமையை நம்ப வைத்தது. முன்னாள் வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண் தனது ‘How China Sees India and the World’ என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு எல்லை மோதல்கள் ஒரு இராஜதந்திர ரீதியில் அச்சுறுத்தலின் உணர்வை அதிகரித்தன.
"இந்தி சீனி பாய் பாய்" (இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்ற கருத்தும் பஞ்சசீலமும் இனி நிலைமையின் யதார்த்தத்துடன் பொருந்தவில்லை. 1962-ல் போர் நிகழும்போது, இந்தியா 3,000 க்கும் மேற்பட்ட வீரர்களையும், அக்சாய் சின் பகுதியில் சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் இழந்தது.
பெரிய சக்தி முக்கோணம் (Great power triangle)
இந்த ஆரம்பகால தொடர்புகள் ஒரு சிக்கலான உறவுக்கு அடித்தளம் அமைத்தன. இதில், எல்லைகள் ஒரு காரணி மட்டுமே. கார்னகி இந்தியாவிற்கான 2022-ம் ஆண்டு ஆய்வறிக்கையில், கோகலே "சீனாவின் இந்தியக் கொள்கை இராஜதந்திர ரீதியில் சீனா, சோவியத் யூனியன் (பின்னர் ரஷ்யா) மற்றும் அமெரிக்கா என்ற முக்கோணத்தைப் பற்றிய அதன் பார்வையால் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
ஆசியாவில் பாதுகாப்பு மற்றும் அந்தஸ்து இரண்டிற்கும் இந்தியாவை ஒரு போட்டியாளராக சீனா பார்த்தது. அதே நேரத்தில், ஒரு சமமற்ற வீரராகவும் பார்த்தது. பல சீன வெளியுறவு அமைச்சர்கள் அல்லது தலைவர்கள் தங்கள் எழுத்துக்களில் இந்தியாவைக் குறிப்பிடவில்லை. 1962-க்குப் பிறகு, சோவியத் ஒன்றியத்துடனான இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகள் சீனாவிற்கு கவலையாக மாறியது. சோவியத் யூனியனுடனான சீனாவின் சொந்த உறவுகள் மோசமடைந்து வந்தன. இது பாகிஸ்தானுடனான தனது உறவை சீனா வலுப்படுத்த வழிவகுத்தது.
பிரதமர் ராஜீவ் காந்தி 1988-ல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான இறுக்கமான உறவை மேம்படுத்த உதவியது. அந்த நேரத்தில், டெங் சியாவோபிங் சீன அதிபராக இருந்தார். 1978-ல் சீனாவின் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பின்னால் இருந்த முக்கிய நபராகவும் அவர் இருந்தார். இந்தியாவும் சீனாவும் இணைந்து வளர்ச்சியடையாவிட்டால் "ஆசிய நூற்றாண்டு" (Asian Century) நடக்காது என்று டெங் கூறினார். ராஜீவ் காந்தி இந்தியா தனது பிரதேசத்தை இனி விட்டுக்கொடுக்காது என்பதை தெளிவுபடுத்தி பதிலளித்தார்.
”ஆசிய நூற்றாண்டு” என்பது ஆசியா, குறிப்பாக சீனா மற்றும் இந்தியா, உலகின் மேலாதிக்க பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சக்தியாக மாறும் காலத்தைக் குறிக்கிறது. |
1988வாக்கில், பல முக்கியமான மாற்றங்கள் ஏற்கனவே நடந்துவிட்டன. நேருவும் மாவோவும் காலமானார்கள். பின்னர், சீனா தனது பொருளாதாரத்தைத் திறக்கத் தொடங்கியது. அமெரிக்காவும் சீனாவும் 1979-ல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. 1975-ல், சிக்கிம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது, ஆனால் சீனா இதை ஏற்கவில்லை. மேலும், சீனா தனது முதல் அணு ஆயுத சோதனையை 1964-ல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இந்தியா 1974-ல் தனது சொந்த அணு ஆயுத சோதனையை நடத்தியது.
1991-ம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சோவியத் ஒன்றியம் சரிந்தது, இந்தியா அதன் பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் (liberalize its economy) தொடங்கியது. முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தனது ”Choices: Inside the Making of India’s Foreign Policy” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, "சோவியத் ஒன்றியத்தின் சரிவு பழைய வெளியுறவுக் கொள்கை யோசனைகளை காலாவதியாக்கியது... இந்தியா-சீனா உறவுகளுக்கு ஒரு புதிய அணுகுமுறைக்கான நேரம் இது... எதிர்காலத்திற்கான எல்லையைத் தீர்மானிப்பதில் கடினமான பணியை விட்டுவிட்டு, சீனாவும் இந்தியாவும் எல்லையில் அமைதிக்காக பாடுபடுவது அர்த்தமுள்ளதாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேனன் மேற்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) தற்போதைய நிலையைப் பராமரிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். எல்லை அமைதி மற்றும் அமைதி ஒப்பந்தம் செப்டம்பர் 1993-ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டபோது கையெழுத்தானது. 1962 போரின் தோல்வியால் பொதுமக்களின் உணர்வு இன்னும் புண்பட்டுள்ளதால், இதை இந்தியாவிற்கு ஒரு முக்கிய முடிவு என்று மேனன் விவரித்தார். "தேசிய நலனை கவனமாகக் கணக்கிட்டதற்காக" மற்றும் தனது கூட்டணி நாடுகள் மற்றும் எதிரிகள் இருவரையும் அமைதியாக சம்மதிக்க வைக்கும் திறனுக்காக ராவைப் பாராட்டினார்.
இந்த ஒப்பந்தத்தில் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகில் ராணுவப் பயிற்சிகள் மீதான கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "பரஸ்பர மற்றும் சம பாதுகாப்பு" அடிப்படையில் "குறைந்தபட்ச அளவில்" LAC-க்கு அருகில் இராணுவ வீரர்களை வைத்திருப்பதற்கான ஏற்பாடு இன்னும் ஆராயப்படவில்லை.
டிராகன் (சீனா) முன்னோக்கி செல்கிறது
21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பொருளாதார சக்திகளாக மாறத் தயாராக இருந்தன. அவர்களின் உறவை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2003-ம் ஆண்டில், அவர்கள் ஒரு சிறப்பு பிரதிநிதித்துவ செயல்முறையை நிறுவினர். அதே ஆண்டில், சீனாவும் சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது.
இருப்பினும், அவர்களின் பொருளாதார பாதைகள் விரைவில் தெளிவான வேறுபாட்டைக் காட்டின. 1987 முதல் 2023 வரை, சீனாவின் பொருளாதாரம் 272 பில்லியன் டாலரிலிருந்து 17.7 டிரில்லியன் டாலராக வளர்ந்தது. இதை ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 279 பில்லியன் டாலரிலிருந்து 3.56 டிரில்லியன் டாலராக வளர்ந்தது.
இந்தியா தன் குறைந்த நிலையை ஏற்க வேண்டும் என்றும் சீனாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சீன அறிஞர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பரிந்துரைப்பார்கள் என்று சரண் எழுதினார்.
சவால்கள், பாடங்கள்
இன்று, புவிசார் அரசியல் நிலப்பரப்பு இப்போது பல பத்தாண்டுகளாக இருந்ததைவிட கணிக்க முடியாததாக உள்ளது. இருப்பினும், சீனா இன்னும் இந்தியாவுடனான அதன் உறவுகளை அமெரிக்காவுடனான அதன் பெரிய மோதலின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. பெய்ஜிங்கைப் பொறுத்தவரை, ஆதிக்கம் செலுத்துவதற்கான அதன் இலக்கு, காலனித்துவ சக்திகளால் அவமானப்படுத்தப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து, ஒரு தேசிய புதுப்பித்தல் திட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருங்கிய உறவுகள் சீனாவிற்கு ஒரு பிரச்சனையாகும்.
சீனாவின் எழுச்சியிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ளலாம். தரமான கல்வி மூலம் தனது மக்களை வளர்ப்பதில் சீனா கவனம் செலுத்துவதும், உள்கட்டமைப்பில் அதன் முதலீடுகளும் இந்தியா பின்பற்றக்கூடிய உத்திகள் ஆகும். இருப்பினும், இந்தியா வேறுபட்ட வளர்ச்சி மாதிரியை இலக்காகக் கொள்ளலாம். இந்த மாதிரி மிகவும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையானதாகவும், மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும்.
இந்தியா தனது இராணுவத் தயார்நிலையை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேம்படுத்த வேண்டும். சீனாவின் சவாலைச் சமாளிக்க, இந்தியா அதன் நிலையான அரசியல் அமைப்பு மற்றும் அதன் கலாச்சார பலங்களை கட்டியெழுப்ப வேண்டும். இருப்பினும், குறுகிய தேசியவாதம், வகுப்புவாத பதற்றம் மற்றும் இந்தியாவின் பன்முக அடையாளத்தை எளிமைப்படுத்தும் முயற்சிகள் இந்த பலங்களை பலவீனப்படுத்தக்கூடும்.
எதிர்கால சிந்தனை
அர்த்தமுள்ள ஒத்துழைப்புக்கு சீனா, இந்தியா குறித்த தனது கருத்துக்களை மாற்ற வேண்டும். 2020 LAC மோதல், தேவைப்பட்டால் இந்தியா இராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்பதை நிரூபித்தது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு இதற்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளது என்று கோகலே எழுதினார். உலகெங்கிலும், தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள நாடுகளும் சீனாவின் விரிவாக்க நடவடிக்கைகளை எதிர்த்துள்ளன.
அதே நேரத்தில், அண்டை நாடுகளாகவும் அணுசக்தி சக்திகளாகவும் இருக்கும் இரண்டு முக்கிய ஆசிய நாடுகள் தங்கள் உறவு குறித்த விவாதங்களைத் தவிர்ப்பது நியாயமற்றது என்று கோகலே எழுதினார்.
கடந்த ஆண்டில், உறவுகளை மேம்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசானில் நடந்த BRICS உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்த முயற்சிகள் எந்த திசையில் செல்லும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், 75 ஆண்டுகால மைல்கல்லில், இந்தியா-சீனா உறவுகளில் எச்சரிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய இரண்டிற்கும் இன்னும் இடம் உள்ளது.
Original article: