லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஏன் போராட்டம் நடத்தினர்? 6-வது அட்டவணை என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன? லடாக்கை 6-வது அட்டவணையில் சேர்க்க முடியுமா? சட்டப்பிரிவு 371-ன் கீழ் சில மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து என்ன?
அக்டோபர் 21 அன்று, லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தின் எதிர்கால விவாதங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைப் பெற்ற பின்னர், தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதில், வாங்சுக் மற்றும் பிற ஆர்வலர்கள் லடாக்கின் நிர்வாகத்தில் கூடுதல் தன்னாட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள், குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்கவும், மேலும் இப்பகுதியில் ஒரு சட்டமன்றத்தை நிறுவவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1. ஆகஸ்ட் 2019-ம் ஆண்டில், சட்டப்பிரிவு 370-வது பிரிவை நீக்கி, ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (J & K Reorganisation Act), 2019 இயற்றப்பட்ட பின்னர் லடாக் நிர்வாகத்தில் தன்னாட்சிக்கான கோரிக்கை மற்றும் இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 6-ல் சேர்ப்பது முக்கியத்துவம் பெற்றது.
2. ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் (J & K Reorganisation Act), 2019-ம் ஆண்டில் லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக அங்கீகரித்தது. இருப்பினும், லடாக் "சட்டமன்றம் இல்லாத" யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, புது டெல்லி மற்றும் பாண்டிச்சேரியைப் போலவே ஜம்மு & காஷ்மீரும் தனிப்பட்ட முறையில் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது.
3. ஆறாவது அட்டவணை இந்திய அரசியலமைப்பின் 244-வது பிரிவின் ஒரு பகுதியாகும். இது பழங்குடியின நிர்வாகப் பகுதிகளை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த பிராந்தியங்கள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (Autonomous District Councils (ADC)) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (Autonomous Regional Councils (ARC)) என்று அழைக்கப்படுகின்றன.
4. ஆறாவது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள் உள்ளன.
5. ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்படுவது லடாக் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (ARC) உருவாக்க அனுமதிக்கும். இந்த கவுன்சில்கள் பழங்குடியின பகுதிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாகும். அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக சட்டங்களை உருவாக்க முடியும். இதில் வன மேலாண்மை, விவசாயம், கிராமம் மற்றும் நகர நிர்வாகம், பரம்பரை, திருமணம், விவாகரத்து மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் போன்ற பகுதிகள் அடங்கும்.
6. இந்த அட்டவணை ARC கள் மற்றும் ADC களுக்கு நிலவரி வசூலிக்கவும், வரி விதிக்கவும், கடன் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும், தங்கள் பகுதிகளில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான உரிமங்கள் அல்லது குத்தகைகளில் இருந்து ராயல்டிகளை சேகரிக்கவும், பள்ளிகள், சந்தைகள் மற்றும் சாலைகள் போன்ற பொது வசதிகளை நிறுவவும் அதிகாரம் அளிக்கிறது.
7. தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களின் (ADC) உட்கூறுகள் : இந்த கவுன்சில்கள் ஐந்து வருட காலத்துடன் 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். அசாமில் உள்ள போடோலாந்து பிராந்திய கவுன்சில் 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும் மற்றும் 39 தொடர்பான பிரச்சனைக்கான சட்டங்களை இயற்றும் உரிமை உள்ளது. தற்போது, வடகிழக்கில் 10 தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) உள்ளன. இதில், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்றும், திரிபுராவில் ஒன்றும் உள்ளது.
8. 2019-ம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Tribes) லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:
(i) லடாக்கில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். 97 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
(ii) இவை நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்கள் இப்பகுதியில் நிலம் வாங்குவதையோ அல்லது கையகப்படுத்துவதையோ தடுக்கிறது.
(iii) இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
9. குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே எந்த பிராந்தியமும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மணிப்பூரில் கூட, தன்னாட்சி கவுன்சில்கள் ஆறாவது அட்டவணையின் ஒரு பகுதியாக இல்லை. இதேபோல், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் முற்றிலும் பழங்குடி மக்களைக் கொண்டிருந்தாலும், அவர்களும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அந்தஸ்து மற்றும் சட்டப்பிரிவு 371
1. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 371 மற்றும் 371-A முதல் J வரையிலான பிரிவுகள் சில மாநிலங்களுக்கு "சிறப்பு அந்தஸ்துகளை" (special provisions) வழங்குகின்றன. இந்த விதிகள் குறிப்பிட்ட மத மற்றும் சமூக குழுக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கின்றன. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் தலையீடு இல்லாமல் இந்த குழுக்களை தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கவும் அவர்கள் அனுமதிக்கிறார்கள்.
2. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் (சட்டப்பிரிவு-371) : "விதர்பா (Vidarbha), மராத்வாடா (Marathwada) மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகள்" மற்றும் குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா (Saurashtra) மற்றும் கட்ச் (Kutch) ஆகியவற்றிற்கு "தனித்தனி மேம்பாட்டு வாரியங்களை" (separate development boards) நிறுவ ஆளுநருக்கு "சிறப்பு அந்தஸ்து" உள்ளது. இது, மாநில அரசின் கீழ், மேற்கூறிய பகுதிகளில் வளர்ச்சிக்காக சமமான நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கு போதுமான வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கு சமமான அந்தஸ்தை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு-371 படி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அரசின் செலவினங்களின் தேவையை மதிப்பிடுவதற்காக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு "வளர்ச்சி வாரியங்கள்" உருவாக்கப்பட வேண்டும். புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால், கூடுதல் சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
3. நாகாலாந்து (பிரிவு 371A) : இந்த விதி 1962-ஆம் ஆண்டில் 13-வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நாகா மதம் (Naga religion) அல்லது சமூக நடைமுறைகள் (social practices) குறித்து நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க முடியாது என்று கூறுகிறது. இது நாகா மரபுச் சட்டம் மற்றும் நடைமுறைகள் மற்றும் நாகா வழக்கத்தைப் பின்பற்றும் குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக, இது நிலம் மற்றும் அதன் வளங்களின் உரிமை மற்றும் பரிமாற்றத்தை உள்ளடக்கியது.
மேலும், துயன்சாங் மாவட்டத்திற்கான 35 உறுப்பினர்களைக் கொண்ட பிராந்திய கவுன்சிலுக்கான ஏற்பாடு உள்ளது. இது சட்டமன்றத்தில் துயென்சாங் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. துயன்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் துயன்சாங் விவகாரங்களுக்கான அமைச்சராக உள்ளார். துன்சாங் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆளுநரே இறுதிக் கருத்தைக் கூறுவார்.
4. அஸ்ஸாம் (பிரிவு 371 பி, 22 வது திருத்தச் சட்டம், 1969) : மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் குழுவை அமைப்பதற்கும், இதன் செயல்பாடுகளை வரையறுப்பதற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் உருவாக்கலாம்.
5. மணிப்பூர் (பிரிவு 371 சி, 27 வது திருத்தச் சட்டம், 1971) : இந்திய குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றத்தில் ஒரு குழுவை அமைக்கலாம். இந்தக் குழுவில் மணிப்பூர் மலைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பர். இந்தக் குழு சரியாகச் செயல்படுவதை உறுதி செய்ய, குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு "சிறப்புப் பொறுப்பையும்" வழங்குவார். ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் அவர்கள், குடியரசுத் தலைவருக்கு இது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
6. ஆந்திரா மற்றும் தெலுங்கானா (பிரிவு 371D, 32 வது திருத்தச் சட்டம், 1973; ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 ஆல் மாற்றப்பட்டது) : மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பொது வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருப்பதை குடியரசுத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு வகையான சிவில் சர்வீஸ் பதவிகள் அல்லது சிவில் பதவிகளை உள்ளூர் பணியாளர்களாக ஒழுங்கமைக்க குடியரசுத் தலைவர் மாநில அரசைக் கேட்கலாம். இந்தப் பதவிகளை ஒதுக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. கூடுதலாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு இதே போன்ற அதிகாரங்கள் உள்ளன.
சட்டப்பிரிவு 371-E ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது. இருப்பினும், அரசியலமைப்பின் இந்தப் பிரிவில் உள்ள மற்ற விதிகளைப் போல இது ஒரு "சிறப்பு அந்தஸ்து" என்று கருதப்படவில்லை.
7. சிக்கிம் (பிரிவு 371 F, 36 வது திருத்தச் சட்டம், 1975) : சட்டப் பிரிவு 371-F மூலம், "மக்களின் பல்வேறு பிரிவுகளின் உரிமைகள் மற்றும் நலன்களை" பாதுகாப்பதற்காக, சிக்கிம் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு வழங்க சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
8. மிசோரம் (பிரிவு 371-G, 53 வது திருத்தச் சட்டம், 1986) : மிசோரம் மாநில கலாச்சாரம் தொடர்பான
மிசோரத்தின் மத மற்றும் சமூக நடைமுறைகள் (religious and social practices of the Mizos)
மிசோ வழக்கமான சட்டம் மற்றும் நடைமுறைகள் (Mizo customary law and procedure)
மிசோ மரபுச் சட்டத்தின் அடிப்படையில் சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் (civil and criminal justice based on Mizo) ஆகியவை அடங்கும்.
இது நிலத்தின் உரிமை மற்றும் பரிமாற்றம்.
போன்ற அம்சங்களில் நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க முடியாது என்று இந்த விதி கூறுகிறது. எனினும், சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் இந்தச் சட்டங்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
9. அருணாச்சலப் பிரதேசம் (பிரிவு 371 H, 55-வது திருத்தச் சட்டம், 1986) : சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநருக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது. மேலும் "அமைச்சர் குழுவைக் கலந்தாலோசித்த பிறகு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அவர் தனது தனிப்பட்ட முடிவைப் பயன்படுத்துவார்". ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ஆளுநர் "தனது தனிப்பட்ட முடிவின்படி செயல்பட வேண்டும். ஆளுநரின் முடிவே இறுதியானது" மற்றும் "கேள்விக்கு அழைக்கப்படக்கூடாது... ”
10. கோவா (பிரிவு 371-I, 56 வது திருத்தச் சட்டம், 1987) : இது "கோவா மாநிலத்தின் சட்டமன்றத்தில் 30-க்கும் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்" என்று கூறுகிறது.
10. கர்நாடகா (பிரிவு 371 J, 98 வது திருத்தச் சட்டம், 2012) : ஹைதராபாத்-கர்நாடகா பகுதிக்கு தனி மேம்பாட்டு வாரியம் (separate development board) அமைக்கப்படும். இந்த வாரியம் தனது செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் சட்டசபைக்கு தெரிவிக்கப்படும். இப்பகுதியின் மேம்பாட்டிற்க்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இப்பகுதி மக்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் சம வாய்ப்புகள் மற்றும் வசதிகள் அமைய வலியுறுத்தும்.
ஹைதராபாத்-கர்நாடகா பகுதியில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் இருப்பிடத்தின் அடிப்படையில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு, வேலைவாய்ப்புகளில் "விகிதாச்சார அடிப்படையில்" ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
Original article: