சமூகத் துறையின் நிதித் தேவைகளைப் புதிய நிதி கண்டுபிடிப்புகள் மூலம் பூர்த்திசெய்ய வேண்டியிருந்தாலும், நிதி நிறுவனங்கள் முழுமையாக உள்கட்டமைப்புத் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவின் சமூகத் துறைக்கு குறிப்பிடத்தக்க நிதித் தேவைகள் உள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, மீபத்திய தரவுகளின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் மற்றும் பிற துறைகளுக்கான செலவினம் பொருளாதார ஆய்வறிக்கை FY25-ன் படி, தோராயமாக ₹26 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ன் & கம்பெனியின் இந்திய தொண்டு அறிக்கை 2025-ல் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளபடி, ஆண்டுதோறும் ₹14 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையை எடுத்துரைக்கிறது. இந்த இடைவெளி, உள்கட்டமைப்புத் துறைக்கான தற்போதைய வங்கிக் கடனுக்கு ஏறக்குறைய சமமாக உள்ளது. இது 2029-ம் ஆண்டுக்குள் ₹16 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2030-ம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, வளரும் நாடுகள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் செலவினங்களை 75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (G20 தனித்தியங்கும் நிபுணர் குழு).
வளர்ச்சியின் ஒரு மறைமுக இயந்திரமாக அங்கீகரிக்கப்பட்ட சமூகத் துறை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மனித மேம்பாட்டிற்கு இன்றியமையாதது. இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் சமூக நலச் செலவினங்களை (social spending expenditure (SSE)) அதிகரித்துள்ளன.
கடந்த பொருளாதார ஆய்வின்படி, மொத்த செலவினங்களில் (மத்திய + மாநிலங்கள்) சமூக நலச் செலவின (SSE) சதவீதமானது 2021 நிதியாண்டில் (பெருந்தொற்று ஆண்டு) 23.3 சதவீதத்திலிருந்து 2025 நிதியாண்டில் சுமார் 26.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செலவினத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் சுமார் 58 சதவீதமாக இருந்தன.
இந்தக் காலகட்டத்தில், சமூக நலச் செலவினம் (SSE) 15 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்துள்ளது. அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தப் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் சமூகத் துறை தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
குறைந்த செலவினம்
அதிகரித்துவரும் முக்கியத்துவம் இருந்தபோதிலும், இந்தியாவின் சமூகத் துறைக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைந்த நிலையிலேயே உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8 சதவீதமாக உள்ளது, ஆனால் தேவை 13 சதவீதமாக உள்ளது. சமூக உள்கட்டமைப்பிற்கு நிதியளிப்பது (மூலதனம்) பல்வேறு காரணங்களால் (குறைந்த பயனர் கட்டணங்கள் போன்றவை) ஒரு சிக்கலாகவே உள்ளது.
இதன் விளைவாக அரசாங்கம் காலப்போக்கில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி அமைச்சகத்தின் இணக்கமான உள்கட்டமைப்பு பட்டியலில் சமூக உள்கட்டமைப்பை சேர்ப்பது, வங்கி முன்னுரிமைத் துறை கடனில் (priority sector lending (PSL)) அதை கட்டாயமாக்குதல், நம்பகத்தன்மை இடைவெளி நிதியை (Viability Gap Funding (VGF)) அறிமுகப்படுத்துதல் மற்றும் பங்கு மற்றும் பத்திர தீர்வுகளுக்கான சமூக பங்குச் சந்தையை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். அரசாங்கம் புதிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் (New Infrastructure Pipeline (NIP)) மூலம் பொது-தனியார் கூட்டாண்மைகளை (Public Private Partnerships (PPP)) ஊக்குவித்துள்ளதுடன், உள்கட்டமைப்புத் திட்டங்கள் பத்திரச் சந்தைகளை அணுகுவதற்கு உதவும் வகையில் பகுதி கடன் மேம்பாட்டுத் திட்டங்களையும் (Partial Credit Enhancements (PCE)) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சமூக உள்கட்டமைப்புக்கான வெளிப்புற நிதியுதவி இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், பெரும்பாலான நிதி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்களில் இருந்தே வருகிறது. கடன் வழங்கும் நிறுவனங்களின் தரவுகளின்படி, வங்கிகள் இன்னும் மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் சாலைகள் போன்ற நிறுவப்பட்ட துறைகளிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றன. உள்கட்டமைப்புத் துறைக்கான வங்கிக் கடன் சுமார் ₹14 லட்சம் கோடியாக உள்ளது (ரிசர்வ் வங்கி) மற்றும் இது பெரும்பாலும் பாரம்பரியத் துறைகளிலேயே குவிந்துள்ளது. இந்தச் சிக்கல் 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வளங்கள் குறைவாக இருப்பதாலும், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டிய தேவை இருப்பதாலும் இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.
மேம்பாட்டு நிதி நிறுவனங்களில் (Development Finance Institutions (DFI)) கூட, இந்தப் போக்கு அப்படியே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் புதிய உள்நாட்டு மற்றும் பலதரப்பு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (DFI) தோன்றிய போதிலும் இந்த நிலைமையே தொடர்கிறது.
சமீபத்தில் நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கியை (National Bank for Infrastructure and Development (NaBFID)) உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். செப்டம்பர் 2025 நிலவரப்படி, அதன் கடன் இலாகாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சாலைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறைகளைக் கொண்டுள்ளன. நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூக உள்கட்டமைப்பு சுமார் 4% மட்டுமே.
புதிய மேம்பாட்டு வங்கி (2015-ல் அமைக்கப்பட்ட BRICS பலதரப்பு DFI) இதேபோன்ற போக்கைக் காட்டுகிறது. அதன் வருடாந்திர போர்ட்ஃபோலியோ மதிப்பாய்வு இந்தியாவில் 28 திட்டங்களுக்கு $10 பில்லியனுக்கும் அதிகமாக நிதியளித்திருந்தாலும், 'அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்' சமூக மற்றும் மின்னணு உள்கட்டமைப்புத் துறைகளுக்கு கடன் வழங்குவதில் இன்னும் பெரிய இடைவெளி உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தத் துறைகள் நிதிப் பற்றாக்குறையாகவே உள்ளன.
சமூக உள்கட்டமைப்புக்கு நிதியுதவியை அதிகரிக்க, சமூகப் பங்குச் சந்தை (SSE) போன்ற பிற நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்கியுள்ள நிலையில், அது தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது மற்றும் இதன் முக்கிய நோக்கம், மேம்பாட்டு நிதியுதவியில் உள்ள பங்குச் சிக்கலைத் தீர்ப்பதாகும். இது நன்கொடைகளைப் போன்ற பூஜ்ஜிய கூப்பன் மற்றும் பூஜ்ஜிய உணமையான பத்திரங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைத் துறை கடன் (PSL) போன்ற பிற நடவடிக்கைகளும், 'சமூக பொருளாதார வளர்ச்சிக்கு' முக்கியமான துறைகளுக்கு கடனைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல.
மேலும், துறை சார்ந்த நிறுவனங்களைத் தவிர, மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (DFI), பரந்த உள்கட்டமைப்புத் துறைகளில் மேம்பாட்டு நிதியுதவியை மேம்படுத்துவதற்கான பரந்த இலக்குகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை நன்கு நிறுவப்பட்ட துறைகளுக்குக் கடன் வழங்க விரும்பலாம். ஏனெனில் நிறுவப்பட்ட துறைகள் பாதுகாப்பானவை மற்றும் எளிதில் கணிக்கக்கூடியவை. இதன் விளைவாக, சமூகத் துறைப் பகுதிகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த கவனம் கிடைக்கிறது.
மத்திய அரசு, சமூக உள்கட்டமைப்புத் துறைக்காக ஒரு பிரத்யேக மேம்பாட்டு நிதி நிறுவனத்தை (DFI) அமைப்பதைக் கருத்தில் கொள்ளலாம். அதே நேரத்தில், பல்வேறு மன்றங்களில் ‘சமூக உள்கட்டமைப்பு’ என்பதற்கான வரையறைகளை ஒத்திசைக்கும் பணியிலும் ஈடுபடலாம். இந்த பிரத்யேக மேம்பாட்டு நிதி நிறுவனம் சமூக உள்கட்டமைப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தி, அவற்றுக்குத் தேவையான பெரும் நிதியை ஒரு சிறப்பு நிறுவனம் மூலம் வழிநடத்த உதவும்.
துறை சார்ந்த மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (DFI) புதியவை அல்ல. மேலும் ஏற்கனவே துறை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. அதாவது நபார்டு (விவசாயத்திற்காக), என்ஹெச்பி (வீட்டுவசதிக்காக) மற்றும் பிஎஃப்சி (மின்சாரத் துறைக்காக) கவனம் செலுத்துகின்றன. விவசாயம் அல்லது மின்சாரத் துறைக்கு பிரத்யேக நிறுவனங்கள் இருக்க முடியுமானால், சமூகத் துறைக்கும் ஒன்று தேவை என்ற வாதம் உள்ளது. உற்பத்தித் துறைக்காகவும் ஒரு மேம்பாட்டு நிதி நிறுவனம் தேவை என்று அறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சமூக உள்கட்டமைப்புக்கான ஒரு பிரத்யேக மேம்பாட்டு நிதி நிறுவனம் (DFI), இந்தத் துறையின் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள முடியும். இது கவனத்தை வழங்குவதோடு, அவசரமாகத் தேவைப்படும் புதுமையான நிதி வழிமுறைகளைத் திரட்டவும் உதவும்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்திலிருந்தே இருந்துவரும் மற்றும் பெரும்பாலும் 'சந்தை தோல்விகளை' நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்கள் என்று விவரிக்கப்படும் மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் (DFI) பற்றி சந்தேகத்திற்கு இடமின்றி அதிகம் விவாதிக்கப்பட்டாலும், சமூகத் துறையின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தின் பங்குகளைப் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறப்புத் துறை நிறுவனம் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க முடியும்.
இருப்பினும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நகரும்போது, அரசாங்கத்தின் பங்கு படிப்படியாக மூலதனத்தின் முக்கிய வழங்குநராக இருந்து சமூகத் துறை திட்டங்களின் வங்கித் திறனை மேலும் மேம்படுத்துவதில் (சமூக-பொருளாதார தடைகளைத் தீர்ப்பதன் மூலம்) கவனம் செலுத்தும் வசதியாளராக மாற வேண்டும். இதனால் மூலதனச் சந்தைகள் மற்றும் சிறப்பு நிறுவனங்கள் நிதி சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
எழுத்தாளர், புது தில்லியில் உள்ள வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் (RIS) வருகைதரு ஆய்வாளர் ஆவார்.
Original Article : Financial institution for social infrastructure? -Amol Baxi