காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த வாரம், அஜர்பைஜானின் நாட்டில் உள்ள பாகு(Baku)-வில், வருடாந்த இரண்டு வார காலநிலை மாநாடு நடக்கவிருக்கிறது. மனிதனால் ஏற்படும் புவி வெப்பமடைதலை சமாளிக்க உலகளாவிய முயற்சிகளை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோளாகும். உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயராமல் இருக்க, 2025 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு (greenhouse gas emissions) உச்சத்தை எட்ட வேண்டும் என்றும் 2030-ஆம் ஆண்டுக்குள் 43% குறைய வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதாக நாடுகள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் 2030-ஆம் ஆண்டிற்குள் 2.6% மட்டுமே உமிழ்வைக் குறைக்கும். இது 2019-ன் அளவுகளுடன் ஒப்பிடப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது 2020 தவிர, ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய உமிழ்வுகள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 53 பில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்பட்டது.
பெரும்பாலான பணக்கார நாடுகள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற விரும்பவில்லை, அதே நேரத்தில் ஏழை நாடுகள் பணக்கார நாடாக மாற விரும்புகின்றன. புதைபடிவ எரிபொருட்களைப் (fossil-fuel) பயன்படுத்தாமல் வளரும் நாடுகள் பணக்கார நாடாக மாறுவதே நடைமுறை தீர்வாகும். இருப்பினும், அதிக நிலம் தேவைப்படும் மற்றும் அதிக விலை கொண்ட தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்குச் செல்வதற்கான செலவுகள் குறித்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவிவருகின்றன.
2009-ஆம் ஆண்டில், கோபன்ஹேகனில் நடந்த காலநிலை உச்சிமாநாட்டில், வளர்ந்த நாடுகள் இந்த மாற்றத்திற்கு உதவும் வகையில் "காலநிலை நிதியாக" (‘climate finance’) 2020-க்குள் வளரும் நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் $100 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்தன. நிதி இலக்குகள் எட்டப்பட்டதா என்பதை உறுதி செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும். இருப்பினும், "காலநிலை நிதி" என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்கப்படவில்லை. நிதிக் கடன் வழங்கும் முறையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் வளரும் நாடுகளில் குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் இலக்குகளை அடையவில்லை என்று கருதுகின்றனர். 2016-ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தம், 2025-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு புதிய கூட்டு அளவீட்டு இலக்கை (NCQG) நாடுகள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த புதிய கூட்டு அளவுகோல் (new collective quantified goal (NCQG)) $100 பில்லியன் இலக்கை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தும். கூடுதலாக, வளர்ந்த நாடுகளில் இது குறித்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சீனா மற்றும் இந்தியா பெரிய பொருளாதாரங்களாக உள்ளன மற்றும் குறிப்பிடத்தக்க அளவு உமிழ்வுகளை வெளிப்படுத்துவதால் காலநிலை நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் தெரிவிக்கின்றன.
பாகுவில் நடைபெறும் காலநிலை மாநாட்டில் இந்த புதிய கூட்டு அளவுகோல் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு முக்கியமான பிரச்சினை கார்பன் சந்தைகள். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான தீர்வாக இந்த சந்தைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தைகளில், பணக்கார நாடுகள் அல்லது நிறுவனங்கள் வளரும் நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளுக்கு நிதியளித்து, அதற்கு சமமாக தேவையான வர்த்தகக் கடனைப் பெறலாம். இருப்பினும், இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதற்கான விதிகளைக் கண்டறிவது ஒரு பிரச்சனையாக உள்ளது. காலநிலை குறித்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் சட்ட சிக்கலைக் கொண்டுள்ளது. உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அடைவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் இது.