நமக்கு சிறிய, பரவலாக்கப்பட்ட நகரங்கள் தேவை. -சுபோத் மாத்தூர்

 விரைவான பொருளாதார வளர்ச்சி நகரங்களில் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. சிறிய நகரங்களை விரிவுபடுத்துவதே முன்னேற்றத்திற்கான வழியாகும்.


1980-களில் இந்தியாவின் பொருளாதாரம் எழுச்சி பெறத் தொடங்கியபோது, ​​பொருளாதார ​​வளர்ச்சியின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. இந்த கவனம் இன்று வரை தொடர்கிறது. வளர்ந்து வரும் செழிப்பு சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டவர்கள் மிகச் சிலரே. இந்த விளைவுகளை சமநிலைப்படுத்தும் கொள்கைகளை உருவாக்கவோ அல்லது செயல்படுத்தவோ மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தவறிவிட்டன. இப்போதுகூட, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உண்மையான அவசர உணர்வு இல்லை.


இதன் விளைவாக, இந்தியாவின் வளர்ந்துவரும் செழிப்பு எதிர்பார்த்ததை விட அதிக தீங்கு விளைவிப்பதாக மாறியுள்ளது. இது இழப்பின் அடையாளமாக மாறியுள்ளது, இது புது தில்லியின் மாசுபட்ட காற்றில் தெளிவாகக் காணப்படுகிறது, இது மக்களின் ஆயுட்காலத்தை பல ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.


இந்த விளைவை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். தொழில்துறை பொருட்கள் மற்றும் நவீன சேவைகளின் உற்பத்தி பெரும்பாலும் காற்று மற்றும் நீரின் தரத்தை மோசமாக்கும் உமிழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, 1858-ம் ஆண்டில், தேம்ஸ் நதி "பெரிய துர்நாற்றத்தால்" பாதிக்கப்பட்டது. 1943-ம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் முதல் பெரிய புகைமூட்டம் போன்ற தாக்குதலை சந்தித்தது. இந்தியாவின் சொந்த அனுபவம் எச்சரிக்கையான அறிகுறிகளை வெளிப்படுத்தியது. 1970-களின் பிற்பகுதியில், அதிக மகசூல் தரும் வகை (HYV) பயிர்கள் நமது மண்ணை மாசுபடுத்தி, பல இடங்களில் நிலத்தடி நீரைக் குறைத்தன. 1980-களில், கங்கை மிகவும் மாசுபட்டதால், மத்திய அரசு "தூய கங்கை" திட்டத்தைத் தொடங்கியது.


1985-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தங்கள் முதல் பொதுநல மனுவை (Public Interest Litigation (PIL)) தாக்கல் செய்தனர். எந்த அரசாங்கமும் எந்த எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இல்லை என்பதால் அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். பின்னர், அரசாங்கங்கள் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றின. ஆனால், எந்த அர்த்தமுள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இப்போது, ​​நமது பல நீர்நிலைகள், காற்றோட்டப்பகுதி மற்றும் மண் பல வழிகளில் மாசுபட்டுள்ளன. மக்கள்தொகை அதிகரித்துள்ளதால், நகரங்களில் குப்பைகள் பரவலாக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு நபரும் முன்பைவிட அதிகக் கழிவுகளை உருவாக்குகிறார்கள்.


சுகாதார தாக்கம்


இந்த முன்னேற்றங்கள் மக்களின் ஆரோக்கியத்தை மறைமுகமாகப் பாதித்துள்ளன. இருப்பினும், அதிகரித்துவரும் செழிப்பு மக்களின் ஆரோக்கியத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று அதிகரித்துவரும் உடல் பருமன் ஆகும். போதுமான உடல் செயல்பாடுகளை ஈடுசெய்யாமல் மக்கள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதை அதிகரித்துள்ளனர். இந்த ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் நீரிழிவு நோயின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது கிராமப்புறங்களிலும்கூட ஊடுருவியுள்ளது. 1980-களில், கிராமப்புற மக்களில் சுமார் 1 சதவீதம் பேருக்கு மட்டுமே நீரிழிவு நோய் இருந்தது. இது, இப்போது அது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


இரண்டாவதாக, மலிவான டிஜிட்டல் தரவுகளுடன் திறன்பேசிகளின் அதிகரித்துவரும் ஊடுருவல், இந்தியர்களின் சமூக வாழ்க்கையை கணிசமாக மாற்றியுள்ளது. இந்தியர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், தங்கள் திறன்பேசிகளில் எண்ணற்ற மணிநேரங்களை செலவிடுகிறார்கள். இதில் சிலநேரங்களில் தொலைபேசிகளால் நன்மைகள் இருந்தாலும், அவை பலரை தனிமையாக உணர வைத்துள்ளன.


அதிகரித்து வரும் உடல் பருமன் அல்லது தனிமையை எதிர்கொள்வதில் இந்தியா மட்டும் தனியாக இல்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்ள நாம் எந்த தீவிரமான, பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


சந்தை சக்திகள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. அவை இந்தியாவை ஒரு பெரிய நகர வளர்ச்சி மாதிரியாக மாற்றியுள்ளன. இப்போது, ​​10 பெரிய நகரங்கள் சேர்ந்து நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்தப் பங்கு முழு கிராமப்புற மக்களைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவின் வளர்ந்துவரும் பெரிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகியவற்றின் மக்கள தொகை இந்தியாவின் மொத்த நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சியைவிட வேகமாக அதிகரித்துள்ளது. டெல்லி NCR, மும்பை மற்றும் சென்னை ஆகியவை ஏற்கனவே பெரியதாகவும் நெரிசலாகவும் இருந்தபோதிலும், அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன.


இந்த விரைவான வளர்ச்சி நகரங்களில் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. நகராட்சி சேவைகள் குறிப்பாக நீர் வழங்கல், மழைநீர் வடிகால், போக்குவரத்து மேலாண்மை மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற காரணங்களால் தவிர்க்க முடியாமல் பின்தங்கியுள்ளன. அரசாங்கங்கள் மெட்ரோ அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்கள் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன, ஆனால் அடிப்படை சேவைகள் இன்னும் பின்தங்கியுள்ளன. இதன் விளைவாக, மக்கள் ஆரோக்கியமற்ற காற்று, மாசுபட்ட மற்றும் சுருங்கி வரும் நீர்நிலைகள், நீண்ட பயணங்கள் மற்றும் நிலையான விரக்தியை எதிர்கொள்கின்றனர்.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மாதிரியானது, நிர்வகிக்க முடியாத, ஆரோக்கியமற்ற நகர்ப்புற தீவிர செறிவிற்கு வழிவகுத்துள்ளது. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கப் பாடுபடுகிறது. இது நன்மை பயக்கும். ஆனால் வளர்ச்சி மாதிரியில் சில மாற்றங்கள் இல்லாவிட்டால், இது இன்னும் அதிக பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


இந்தியா நகரமயமாக்கலை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்ந்த நாட்கள் போய்விட்டன. பெரிய நகரங்கள் ஆதரவான சூழல்களையும் சிறந்த வாய்ப்புகளையும் வழங்குவதால் திறமையான நிபுணர்களை ஈர்க்கும். அதே நேரத்தில், வீடு சுத்தம் செய்தல், கட்டிட பாதுகாப்பு மற்றும் விநியோகங்கள் போன்ற சேவைகளை வழங்கும் பல குறைந்த திறன்கொண்ட தொழிலாளர்களையும் ஈர்க்கும். நகர வாழ்க்கை பல தினசரி சவால்களைக் கொண்டிருந்தாலும், இந்தத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு தொடர்ந்து வருவார்கள்.


சிறு நகர வளர்ச்சி


ஒரு வழி, பரவலாக்கப்பட்ட நகர்ப்புற செறிவு மாதிரிக்கு மாறத் தொடங்குவது ஆகும். இந்தியாவின் சிறிய நகரங்களில் அதிக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு இது சாத்தியமாகும். இந்த சிறிய நகர வளர்ச்சி, பெரிய நகரங்களிலிருந்து நிறுவனங்களை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதன் அடிப்படையில் சார்ந்து இருக்கக்கூடாது, ஏனெனில் அந்த அணுகுமுறை வெற்றிபெறாது. அதற்குப் பதிலாக, இந்த வளர்ச்சி, புதிதாக உருவாகும் உள்ளூர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் அடிப்படையிலும், சில முக்கிய தடைகளைத் தணிப்பதன் அடிப்படையிலும், தற்போதுள்ள மனித, டிஜிட்டல் மற்றும் நிலையான உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் அடிப்படையிலும் இருக்க வேண்டும். இது கிராமப்புறங்களை விட மிகவும் சிறந்தது.


இந்தியா நடுத்தர, சிறு மற்றும் நுண் தொழில்களை ஒன்றிணைக்க குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் (MSME) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இது ஒரு தவறான ஒருங்கிணைப்பு ஆகும். நடுத்தர நிறுவனங்கள் அனைத்து குறு சிறு நடுத்தர நிறுவனங்களிலும் (MSME) 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. ஆனால், மொத்த குறு சிறு நடுத்தர நிறுவனங்களில் (MSME) 95 சதவீதத்திற்கும் அதிகமான குறு நிறுவனங்களைப் போலவே மொத்த உற்பத்தியையும் உருவாக்குகின்றன.


சிறிய நகரங்கள் பொதுவாக சில சிறு மற்றும் பெரும்பாலும் குறு நிறுவனங்களைக் கொண்டுள்ளன. மேலும், எதிர்கால வளர்ச்சி அதிக உந்துதல் கொண்ட சிறு மற்றும் குறு நிறுவனங்களைப் பொறுத்து அமைய வேண்டும். அவர்களுக்கு ஓரளவு தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவு தேவைப்படும். இதை அரசாங்கத் திட்டங்கள் பெரும்பாலும் வழங்கத் தவறிவிடுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் திறனைத் திறக்க அரசு மற்றும் இலாப நோக்கற்ற ஆதரவின் சில சாத்தியமான கலவை தேவைப்படுகிறது.


இது பரவலான நகரமயமாக்கலுக்கு வழிவகுக்கும். பெரிய நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சியடையும் அதே வேளையில், சிறிய நகரங்களும் குறைந்த தளத்திலிருந்து தொடங்கி வேகமாக விரிவடையும். பொருளாதார மாதிரியில் ஏற்படும் இந்த மாற்றம் தற்போதைய மாதிரியின் சில சிக்கல்களைத் தணிக்கும். தனிமை மற்றும் உடல் பருமன் போன்ற பொது சுகாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க கூடுதல் கொள்கைகளும் தேவைப்படும். மேலும், சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மேலும் கொள்கைகள் தேவைப்படும்.


இந்த அணுகுமுறையின் மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் தொடர முடியும்.


எழுத்தாளர், பரந்த அளவிலான நடைமுறை பொது கொள்கை அனுபவத்துடன் கூடிய ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share:

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியின் அதிகரிப்பு மற்றும் போதுமான காலநிலை நிதியின்மை : உலகளாவிய வடக்கு நாடுகள் எவ்வாறு காலநிலை இலக்குகளை தடம் புரளச் செய்கிறது? -அலிந்த் சௌஹான்

 ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனல் என்ற கொள்கை அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வு, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகியவை 2015 மற்றும் 2024-க்கு இடையில் ஒரு நாளைக்கு 14 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் சமமான (barrels of oil equivalent per day(BOE/d)) தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கூட்டாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.


கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டிற்கு முன்பு பாரிஸ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, ​​இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த நாடுகள் உறுதியளித்திருந்தன. இருப்பினும், புவி வெப்பமடைதலுக்கு முதன்மையான காரணியான வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு (CO2) வளர்ச்சி விகிதம், 1990-களில் ஆண்டுக்கு 1.5 ppm ஆக இருந்த நிலையில், 2015 மற்றும் 2024-க்கு இடையில் ஆண்டுக்கு 2.6 ppm அதிகரித்துள்ளது.


இந்த உமிழ்வு அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம், உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை இடைவிடாமல் பிரித்தெடுத்து பயன்படுத்துவதே ஆகும். 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கிட்டத்தட்ட 40% அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.


அதே நேரத்தில், உலகளாவிய வடக்கில் 2015 முதல் உலகின் பிற பகுதிகளுக்கு காலநிலை நிதியாக வெறும் 280 பில்லியன் டாலர்களை மட்டுமே செலுத்தியுள்ளது. இந்தத் தொகை தேவையானதைவிட மிகக் குறைவு. இது, ஆண்டுதோறும் $1 டிரில்லியன் முதல் $5 டிரில்லியன் வரை, ‘பூமி அழிப்பவர்கள்: பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு தீயை மூட்டி வரும் உலகளாவிய வடக்கு நாடுகள் (Planet Wreckers: Global North Countries Fueling the Fire Since the Paris Agreement) என்ற அறிக்கை கூறியது.


'பூமியை அழிப்பவர்கள்’ யார்?


ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனல் என்ற கொள்கை அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வு, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகியவை 2015 மற்றும் 2024-க்கு இடையில் தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஒரு நாளைக்கு 14 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்கு சமமான (BOE/d) அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. அதே காலகட்டத்தில், உலகின் பிற உற்பத்தியில் பிரித்தெடுத்தல் ஒட்டுமொத்தமாக 2% குறைந்துள்ளது.


2024-ம் ஆண்டு வரை நிகர உலகளாவிய சுரங்க அதிகரிப்பில் அமெரிக்கா மட்டும் 90%-க்கும் அதிகமாக உள்ளது. இது அதன் உற்பத்தியை கிட்டத்தட்ட 11 மில்லியன் (BOE/d) அதிகரித்துள்ளது. இது வேறு எந்த நாட்டையும்விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து உற்பத்தி அதிகரிப்பு விகிதத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அனைத்து முதல் 15 உற்பத்தியாளர்களிலும் முன்னணியில் உள்ளது. 2015 முதல் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி 77% அதிகரித்துள்ளது.


மூலம்: ‘‘பூமி அழிப்பவர்கள்: பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு தீயை மூட்டி வரும் உலகளாவிய வடக்கு நாடுகள்” அறிக்கை


துபாயில் நடந்த COP28 மாநாட்டில், உலக வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் வைத்திருக்க, 2030-ம் ஆண்டின் இறுதிக்குள் புதைபடிவ எரிபொருள் காலகட்டத்திலிருந்து விலகிச் செல்ல நாடுகள் ஒப்புக்கொண்டபோதிலும் இது நடந்துள்ளது.


சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெனிசுலா போன்ற பெட்ரோஸ்டேட்கள் (petrostates) தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைக் குறைக்காததற்காக பலமுறை விமர்சித்து வரும் உலகளாவிய வடக்கின் "இரட்டைத் தரங்களையும்" (double standards) இந்த அறிக்கை எடுத்துக்காட்டியது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த பெட்ரோஸ்டேட்கள் தங்கள் உற்பத்தி அளவை சீராக வைத்திருந்தன அல்லது குறைத்துள்ளன என்று பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.


பெட்ரோஸ்டேட்கள் (petrostates) : பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பிரதான பொருளாதார அடிப்படையாகக் கொண்ட நாடுகள்.



ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனலின் உலகளாவிய கொள்கைத் தலைவரான ரோமெய்ன் ஐயோலாலன், அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய வடக்கின் சில பணக்கார நாடுகள் தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதற்கிடையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். 


இது நீதி மற்றும் நியாயத்தின் தெளிவான கேலிக்கூத்து என்று அவர் கூறினார். புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக அகற்றுவதில் முன்னிலை வகிக்க இந்த நாடுகள் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். அவர்கள் உலகளாவிய தெற்கிற்கு நியாயமான அடிப்படையில் டிரில்லியன் கணக்கான டாலர்களை காலநிலை நிதியில் வழங்க வேண்டும். குறைவானது, அறிவியல் சான்றுகளுக்கு எதிரானது மற்றும் பொறுப்பின் முழுமையான தோல்வியைக் காட்டும் என்று அவர் கூறினார்.


காலநிலை நிதிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள்


பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், உலகளாவிய வடக்கு, காலநிலை நிதியில் அதன் நியாயமான பங்கை உலகளாவிய தெற்குப் பிராந்தியத்திற்கு செலுத்தவேண்டிய சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது. இந்தத் தொகை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களை ஆதரிக்கும் திட்டங்கள் உட்பட, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து நியாயமான மற்றும் சமமான மாற்றத்திற்கு உதவும் என்று கருதப்படுகிறது.


இருப்பினும், பாரிஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், உலகளாவிய வடக்கு தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. அதற்கு பதிலாக, அது "பொது நிதிநிலை அறிக்கைகளை மேலும் சுருக்கி, புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் கைகளில் செல்வத்தைக் குவிக்கும் கொள்கை செயல்திட்டங்களைப் பின்பற்றியுள்ளது" என்று அறிக்கை கூறியுள்ளது.


உதாரணமாக, உலகாவிய வடக்கு நாடுகள் 2015 முதல் புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மற்றும் குழாய் இணைப்புகள் போன்ற விநியோக உள்கட்டமைப்புக்காக 465 பில்லியன் டாலர்களை ஒட்டுமொத்த மானியங்களாக வழங்கியுள்ளன. இந்தத் தொகையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காலநிலை நடவடிக்கைக்காக செலுத்தியிருக்கலாம்.


உலகளாவிய வடக்கை முக்கியத் தளமாகக் கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் லாபம், 2015 முதல் உலகின் பிற பகுதிகளுக்கு உலகளாவிய வடக்கு செலுத்திய காலநிலை நிதியின் அளவைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.


மூலம்: ப்ளூம்பெர்க் டெர்மினல் தரவு (லாபங்கள்) மற்றும் ஆக்ஸ்பாம் பகுப்பாய்வு (காலநிலை நிதி) ஆகியவற்றின் OCI பகுப்பாய்வு.


அறிக்கையின்படி, ஆறு பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான்மொபில் (ExxonMobil), செவ்ரான் (Chevron), ஷெல் (Shell), மொத்த ஆற்றல்கள் (TotalEnergies), பிபி (BP) மற்றும் எனி (Eni) இணைந்து $580 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டின. இது உலகளாவிய வடக்கு நாடுகள் காலநிலை நிதியில் செலுத்திய மொத்தத் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம்.


விளைவுகள்


உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் செயல்களால், உலகின் மீதமுள்ள கார்பன் பட்ஜெட் வெகுவாகக் குறைத்துள்ளன. தற்போதைய உமிழ்வு விகிதத்தில் 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைவதற்கான பட்ஜெட்டிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன என்று அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.


காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) இந்த வரம்பைத் தாண்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. பல பிராந்தியங்களில், கனமழை அடிக்கடி, தீவிரமாக அல்லது பெரிய அளவில் அதிகரிக்கும். வேறு சில பிராந்தியங்களில், வறட்சி அடிக்கடி ஏற்படும் அல்லது மிகவும் கடுமையானதாக மாறும்.


உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​கடல்கள் வெப்பமடையும். இது கடற்கரைகளை நோக்கி நகரும்போது விரைவாக வலுப்பெறக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த புயல்களுக்கு வழிவகுக்கும். காட்டுத்தீ மிகவும் தீவிரமாக வளர்ந்து நீண்டகாலம் நீடிக்கும். கடல் பனி வேகமாக உருகும், இது கடல் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும்.


இவற்றில் பெரும்பாலான விளைவுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளன. வரம்பு மீறப்பட்டால், அவை இன்னும் மோசமாகப் போகும்.


காலநிலை நிதியில் உலகளாவிய வடக்கு நாடுகள் செலுத்தும் குறைந்த தொகை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறும் அபாயத்தையும் கொண்டுள்ளது. குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு உலகளாவிய தெற்கு நாடுகளை நியாயமாகவும் சீரான முறையில் ஆதரிக்கும் என்பதால் இந்தப் பணம் மிக முக்கியமானது. மேலும், போதுமான நிதி இல்லாமல், காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய உலகளாவிய தெற்கு, தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தின் செலவுகளை ஈடுகட்ட முடியாது.



Original article:

Share:

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு என்பது என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


– வெளியுறவு அமைச்சகம் (MEA) கூற்றுப்படி, அக்டோபர் 25 அன்று சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் 23-வது சுற்று படைப்பிரிவு தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.


– ஆகஸ்ட் 19 அன்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சந்திப்பு முதல் உயர்மட்ட விவாதமாகும். 22வது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் இரு தரப்பினரும் இந்தப் புள்ளிகளிலிருந்து விலகி ஒரு வருடம் கழித்து இது நடந்தது.


– கடந்த அக்டோபரில் ஒப்பந்தம் எட்டப்பட்டபிறகு, இரு நாடுகளும் தங்கள் படைகளுக்கு இடையே மோதல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த சுற்றுக்கு காவல் (ரோந்து) பணிகளை மேற்கொண்டு வருகின்றன.


– 2020ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் இராணுவ மோதலின் போது தொடங்கிய அதிகரித்த பாதுகாப்பு படைகளின் வருகைக்குப் பிறகு இரு தரப்பினரும் அங்கு அமைதியைப் பேண முயற்சிக்கும்போது சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.


— படை விலகல் செயல்முறைக்குப் பிறகும், முழுமையான பதற்றம் தணிப்பு இன்னும் நடக்கவில்லை. சீனா சில பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற்றிருந்தாலும், பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சுமார் 50,000 முதல் 60,000 வீரர்கள் இன்னும் உள்ளனர்.


— மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் எந்த எல்லைப் பகுதிகளை கவனிக்க வேண்டும் என்பதை அடையாளம் காண இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.


— நான்கு ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ மோதலுக்குப் பிறகு, 2024 அக்டோபரில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில்  உள்ள இரண்டு முக்கிய பிரச்சனை புள்ளிகளான டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக்கில் ரோந்து ஏற்பாடுகளை ஒப்புக்கொண்டபோது முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 23, 2024 அன்று ரஷ்யாவின் கசானில் நடந்த BRICS உச்சி மாநாட்டில் மோடிக்கும் ஷிக்கும் இடையிலான சந்திப்பிற்கு வழி வகுத்தது. அங்கு இரு தரப்பினரும் இந்த புள்ளிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர்.


— உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.


— களத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இன்னும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் விழிப்புடன் உள்ளனர். ஆனால், இரு நாடுகளும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேலை செய்கின்றன.


— இந்தியாவைப் பொறுத்தவரை, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட அதன் தொழில்நுட்பக் கண்காணிப்பு அமைப்புகளை சார்ந்திருப்பதை அதிகரிப்பதையும் குறிக்கிறது. நீண்டகாலத்திற்கு கூடுதல் சுற்றுக்காவல் தேவையைக் குறைக்க இந்த அமைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா ?:


— இந்தியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரிக்கும் எல்லையே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) ஆகும். LAC சுமார் 3,488 கி.மீ நீளம் கொண்டது என்று இந்தியா கூறுகிறது. ஆனால் சீனா இது சுமார் 2,000 கி.மீ நீளம் மட்டுமே என்று கூறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமை உள்ளடக்கிய கிழக்குப் பகுதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடுத்தரப் பகுதி மற்றும் லடாக்கில் மேற்குப் பகுதி போன்ற  மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.



Original article:

Share:

இந்திய கடல்சார் வாரம் (2025) -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று மும்பைக்கு வருகை தந்து, நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்திய கடல்சார் வாரம் (MW) 2025 நிகழ்வின்போது, ​​கடல்சார் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும், உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தை வழிநடத்தவும் வருகை தந்தார். தனது உரையின்போது, ​​உலகிற்கு ஒரு நிலையான கலங்கரை விளக்கமாக செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்றும், உலகளாவிய நிறுவனங்கள் நாட்டின் கடல்சார் துறையில் விரிவடைந்து முதலீடு செய்ய பல வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.


முக்கிய  அம்சங்கள்:


1. இந்திய கடல்சார் வாரம் 2025 அக்டோபர் 27 முதல் 31 வரை மும்பையில் உள்ள NESCO மைதானத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் (MoPSW) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல்சார் துறையில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்க உலகளாவிய பங்கேற்பாளர்கள் ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


2. இந்திய கடல்சார் வாரம் (2025) கருப்பொருள் "பெருங்கடல்களை ஒன்றிணைத்தல், ஒரு கடல்சார் பார்வை" (“Uniting Oceans, One Maritime Vision.”) என்பதாகும். இது இந்தியாவின் பாரம்பரிய யோசனையான "ஒரு உலகம் ஒரு குடும்பம்" (vasudhaiva Kutumbakam”) என்பதை பிரதிபலிக்கிறது. 11,000 கிலோமீட்டர் கடற்கரை மற்றும் 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், இந்தியாவின் இருப்பிடம் அதற்கு ஒரு வலுவான இராஜதந்திர நன்மையை அளிக்கிறது. மேலும், கடல்சார் துறையில் வாய்ப்புகளை ஆராய உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. உள்நாட்டு திறனை அதிகரிக்கவும் புதிய (பசுமை) மற்றும் ஏற்கனவே உள்ள (பழுப்பு) கப்பல் கட்டும் தளங்களை உருவாக்கவும் கடல்சார் துறையில் ரூ.70,000 கோடியை முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.


4. இந்திய கடல்சார் துறையின் சாதனைகளை எடுத்துரைத்த மோடி, இந்தியாவின் முதல் ஆழ்கடல் சர்வதேச கப்பல் போக்குவரத்து மையமான விழிஞம் துறைமுகம் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறினார். இந்தியாவின் உலகளாவிய திறன்களை வெளிப்படுத்தும் வகையில், இந்த துறைமுகம் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான MSC IRINA-வை நடத்தியது. நாட்டின் முதல் மெகாவாட் அளவிலான உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் கண்ட்லா துறைமுகமும் வரலாறு படைத்தது.


கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச கடல் துறைமுகம்


கேரளாவை உலக கடல்சார் வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான ஒரு முக்கியப் படியாக, மே 2, 2025 அன்று, பிரதமர் மோடி கேரளாவில் உள்ள விழிஞம் சர்வதேச கடல் துறைமுகத்தைத் திறந்து வைத்தார்.


தற்போது, ​​இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும், 217 பெரிய அல்லாத துறைமுகங்களும் உள்ளன. அவற்றில் அதானியின் முந்த்ரா துறைமுகம் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகம் போன்ற தனியார் துறைமுகங்களும் அடங்கும். நவி மும்பையின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் முந்த்ரா துறைமுகம் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களாகும். ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 7 மில்லியன் கொள்கலன்களுக்கு மேல் கையாளுகின்றன.


5. பசுமை கடல்சார் தின அமர்வில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்தியாவின் கடல்சார் துறை அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகிறது என்றும், நாட்டின் 95%க்கும் அதிகமான வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார்.


6. 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உறுதிப்பாட்டின்கீழ், இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டன் சரக்குக்கு கார்பன் வெளியேற்றத்தை 30% ஆகவும், 2047ஆம் ஆண்டுக்குள் 70% ஆகவும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தத் துறையை காலநிலை நடவடிக்கையின் முக்கிய இயக்கியாக மாற்றுகிறது.


6. மும்பையில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் இரண்டாவது நாளில், குஜராத்தின் லோதலில் முன்மொழியப்பட்ட தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (National Maritime Heritage Complex (NMHC)) இலச்சினை (logo) சோனோவால் வெளியிட்டார்.

கடல்சார் துறையில் அரசாங்க முயற்சிகள்


85க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்ற இந்திய கடல்சார் வாரம் 2025-ல் உரையாற்றிய மோடி, கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினார். இந்தத் துறையில் அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகள் பின்வருமாறு


(i) கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030: 


2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடல்சார் இந்தியா தொலைநோக்கு (MIV) 2030, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகளை உள்ளடக்கிய இந்தியாவின் கடல்சார் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. இது இந்தியாவை உலகளாவிய கடல்சார் தலைமைத்துவத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட 150-க்கும் மேற்பட்ட முயற்சிகளை கோடிட்டுக் காட்டுகிறது.


(ii) கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்கு 2047: 


கிட்டத்தட்ட ₹80 லட்சம் கோடி முதலீட்டு செலவில், கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்கு 2047, துறைமுகங்கள், கடலோர கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள், கப்பல் கட்டுதல் மற்றும் பசுமை கப்பல் போக்குவரத்து முயற்சிகளுக்கான இந்தியாவின் கடல்சார் மறுமலர்ச்சிக்கான நீண்டகால திட்டத்தை வழங்குகிறது. பசுமை கப்பல் போக்குவரத்து முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரசாங்கம் பசுமை வழித்தடங்களை அமைத்து, முக்கிய துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் பங்கரிங்கை அறிமுகப்படுத்தி, மெத்தனால் எரிபொருளால் இயங்கும் கப்பல்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.


(iii) சாகர்மாலா திட்டம்: 


2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாகர்மாலா திட்டம், கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 மற்றும் கடல்சார் அமிர்த கால் தொலைநோக்கு 2047 ஆகியவற்றின் முக்கியத் தூணாக அமைகிறது. இது பாரம்பரிய, உள்கட்டமைப்பு-கனரக போக்குவரத்திலிருந்து திறமையான கடலோர மற்றும் நீர்வழி வலையமைப்புகளுக்கு மாறுவதன் மூலம் தளவாடங்களை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் சர்வதேச வர்த்தக போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் துறைமுக நவீனமயமாக்கல், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நிலையான கடலோர மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, குறைந்தபட்ச உள்கட்டமைப்பு முதலீட்டை உறுதிசெய்து பொருளாதாரத் தாக்கத்தை அதிகரிக்கிறது.


(iv) ஜல்வாகக் திட்டம்: 


கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜல்வாகக் திட்டம், தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி) மற்றும் தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி) மற்றும் தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்டதூர சரக்கு இயக்கத்தை ஊக்குவிக்கும் சரக்கு ஊக்குவிப்புக்கான ஒரு முக்கியக் கொள்கையாகும். இது தளவாடச் செலவுகளைக் குறைத்தல், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிலையான போக்குவரத்து முறைக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


(v) தேசிய கடல்சார் தளவாட தளம்: 


இது மார்ச் 27, 2023 அன்று தொடங்கப்பட்டது. இது தளவாடங்களின் அனைத்து பங்குதாரர் அடையாள எண்ணை பயன்படுத்தி இணைக்க ஒரே இடத்தில் ஒரு தளத்தை வழங்குகிறது. செலவுகள் மற்றும் நேர தாமதங்களைக் குறைப்பதன் மூலமும், எளிதான, வேகமான மற்றும் அதிக போட்டித்தன்மை வாய்ந்த சேவைகளை அடைவதன் மூலமும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும், ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


(vi) கப்பல் போக்குவரத்திற்கான இந்திய திட்டம்: 


மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மூலம் கப்பல் துறையை மேம்படுத்துவதற்காக இது செப்டம்பர் 30, 2024 அன்று தொடங்கப்பட்டது. நதி கப்பல் சுற்றுலா வரைவு (2047), 2047-ஆம் ஆண்டுக்குள் கப்பல் சுற்றுலாவில் உலகளாவிய தரத்தை அடைவது, பசுமையான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலக வங்கியின் தளவாட செயல்திறன் குறியீடு


1. இந்திய துறைமுகங்கள் இப்போது வளர்ந்த நாடுகளுக்குச் சமமாகவோ அல்லது அதை விடவோ சிறப்பாகவோ உள்ளன என்று பிரதமர் கூறினார். உலக வங்கியின் சரக்கு கையாளுதல் செயல்திறன் குறியீடு (Logistic Performance Index (LPI)) இந்தியாவின் கடல்சார் துறையில் முக்கிய முன்னேற்றங்களை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


2. உலக வங்கியின் சமீபத்திய LPI (2023) அறிக்கையின்படி, இந்தியா ஆறு இடங்கள் முன்னேறி 139 நாடுகளில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், இந்தியா 44-வது இடத்தைப் பிடித்தது, 2014-ல் 54-வது இடத்தைப் பிடித்தது. இது பல ஆண்டுகளாக இந்தியாவின் சரக்கு கையாளுதல் செயல்திறனில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது.


3. LPI 139 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலி இணைப்புகளை எவ்வளவு எளிதாக உருவாக்க முடியும் என்பதை அளவிடுகிறது. இது சரக்கு கையாளுதல் சேவைகளின் தரம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற காரணிகளையும் பார்க்கிறது.



Original article:

Share:

மாதிரி இளைஞர் கிராம சபை : இது ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 சமீபத்தில், கீழ்மட்ட நிலை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக அரசாங்கத்தால் இளைஞர் கிராம சபை மாதிரி (Model Youth Gram Sabha (MYGS)) முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால், MYGS என்றால் என்ன? பஞ்சாயத்து முன்னேற்ற குறியீட்டின் (Panchayat Advancement Index (PAI)) தொடக்கநிலைப் பதிப்பைப் பற்றியும் அறிக.


தற்போதைய நிகழ்வு : 


பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, கல்வி அமைச்சகம் (பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, 2025 அக்டோபர் 30 அன்று புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், இளைஞர் கிராம சபை மாதிரி முயற்சியைத் தொடங்கியது.


இளைஞர் கிராம சபை மாதிரி அல்லது MYGS தரவுத்தளம் குறித்த பயிற்சி தொகுப்பும் வெளியிடப்பட்டது. இது இளைஞர்களை கீழ்மட்ட ஜனநாயகத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


முக்கிய அம்சங்கள் :


1. இளைஞர் கிராம சபை மாதிரி (Model Youth Gram Sabha (MYGS)) பிரபலமான மாதிரி ஐக்கிய நாடுகளுடன் (UN) ஒத்துப்போகிறது. மாதிரி ஐக்கிய நாடுகளுடன், ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் உருவகப்படுத்துதல்களில் பங்கேற்கின்றனர். இதன்மூலம், அவர்கள் ஐ.நா-வின் கொள்கைகள் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள். மாணவர்கள் வெவ்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்டின் கொள்கைகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பயன்படுத்தி உண்மையான உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறார்கள்.


Sarpanch :  கிராமப்புற இந்தியாவில் கிராம சபையான கிராம பஞ்சாயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒரு சர்பஞ்ச் ஆவார் . 


2. இளைஞர் கிராம சபை மாதிரி (Model Youth Gram Sabha (MYGS)) முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் ஒரு போலி கிராம சபை நடத்தப்படும். இதில் 9-12 வகுப்பு மாணவர்கள் சர்பஞ்ச் (sarpanch), வார்டு உறுப்பினர்கள் (ward members) மற்றும் கிராம அளவிலான அதிகாரிகளாக (village-level officials), கிராம செயலாளர் (village secretary), அங்கன்வாடி பணியாளர் (Anganwadi worker), துணை செவிலியர் தாதிக்கள்  (auxiliary nurse midwife (ANM)) மற்றும் இளநிலை பொறியாளர்கள் (junior engineers) உள்ளிட்டவர்களாக செயல்படுவார்கள்.


3. மாணவர்கள் போலி கிராம சபைக் கூட்டங்களை நடத்துவார்கள். அவர்கள் பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பார்கள், கிராம நிதிநிலை அறிக்கை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பார்கள். கிராம சபைகள் என்பது கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பெரியவர்களையும் உள்ளடக்கிய உள்ளூர் கூட்டங்கள் ஆகும்.


4. கீழ்மட்ட நிலை ஜனநாயகத்தில் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்குவதே முக்கிய குறிக்கோள் ஆகும். இது அவர்களுக்கு தலைமைத்துவ குணங்களை வளர்க்கவும் குடிமை ஈடுபாட்டைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. இந்தத் திட்டம் மாணவர்கள் பஞ்சாயத்துராஜ் நிறுவனங்கள் (Panchayati Raj Institutions) எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இது உள்ளூர் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது.


5. இந்த முயற்சி மாணவர்களிடையே அரசியலமைப்பு நெறிமுறைகள், சமூகப் பொறுப்பு மற்றும் குடிமை உணர்வை வளர்த்து, அவர்களை தீவிர குடியுரிமைக்குத் தயார்படுத்துவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை-2020 (National Education Policy (NEP)) உடன் ஒத்துப்போகிறது.


6. இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (Jawahar Navodaya Vidyalayas (JNV)) மற்றும் 200 ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (Eklavya Model Residential Schools (EMRS)) அக்டோபர் 2025 முதல் முதல்கட்டமாகத் தொடங்கப்படுகிறது. போலி கிராம சபையை நடத்தும் பயிற்சியைத் தொடர்ந்து ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளுக்கான இரண்டு தனித்தனி பிராந்திய மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.


7. இரண்டு பள்ளிப் பிரிவுகளிலும், வெற்றி பெறும் பள்ளிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறும் பள்ளிகளுக்கு ரூ.75 லட்சமும், மூன்றாம் இடம்பெறும் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். பரிசுத் தொகைக்கு கூடுதலாக, பங்கேற்கும் பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். போலி கிராம சபையை நடத்துவதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.20,000 நிதியுதவி வழங்கும்.


பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்


இந்தியாவின் கிராமப்புறங்களில், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நிர்வாகத்தை கீழ்மட்ட நிலைக்கு கொண்டு வருவதில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உள்ளூர் அமைப்புகளுக்கு தங்களைத் தாங்களே ஆள அதிகாரம் அளிப்பதன் மூலம், இந்த அமைப்பு பங்கேற்பு ஜனநாயகத்தை (participatory democracy) ஊக்குவிக்கிறது. இதன்பொருள் மக்கள் தங்கள் சமூகங்களை நேரடியாக பாதிக்கும் முடிவுகளை எடுப்பதில் பங்கேற்க முடியும்.


1993-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நடைமுறைக்கு வந்த 1992-ம் ஆண்டின் 73-வது திருத்தச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு (Panchayati Raj Institutions (PRIs)) அரசியலமைப்பு தரநிலையை வழங்கியது. இது அரசியல் அதிகாரத்தை கீழ்மட்ட நிலைக்கு பரவலாக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், ஏப்ரல் 24 பஞ்சாயத்துராஜ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


சமீப காலங்களில், இந்தியா உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவும், காலநிலை மாற்றம் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் பயனுள்ள உள்ளூர் நிர்வாகம் அவசியமாக இருப்பதால், பஞ்சாயத்து ராஜ்-இன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.


பஞ்சாயத்து முன்னேற்ற குறியீடு (Panchayat Advancement Index (PAI))


1. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDG)) அடைவதற்கான செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் 2.16 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை தரவரிசைப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தொடக்க பஞ்சாயத்து முன்னேற்ற குறியீடு (Panchayat Advancement Index (PAI)) தொடங்கப்பட்டது.


2. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் (Ministry of Panchayati Raj (MoPR)) கூற்றுப்படி, இது ஒன்பது பரந்த கருப்பொருள்களில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் (Localization of Sustainable Development Goals (LSDG)) செயல்படுத்தலை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பல பரிமாண குறியீடாகும்.


3. ஒன்பது SDG கருப்பொருள்கள் : பஞ்சாயத்தில் வறுமை இல்லாத மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம், ஆரோக்கியமான பஞ்சாயத்து, குழந்தைகளுக்கு உகந்த பஞ்சாயத்து, போதுமான நீர்வசதி கொண்ட பஞ்சாயத்து, சுத்தமான மற்றும் பசுமையான பஞ்சாயத்து, தன்னிறைவு பெற்ற உள்கட்டமைப்பு கொண்ட பஞ்சாயத்து, சமூகநீதி மற்றும் சமூக ரீதியாக பாதுகாப்பான பஞ்சாயத்து, நல்லாட்சி கொண்ட பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு உகந்த பஞ்சாயத்து போன்றவை முக்கியவையாகப் பார்க்கப்படுகிறது. இந்த கருப்பொருள்களின்கீழ், 144 குறிப்பிட்ட இலக்குகளில் செயல்திறன் அளவிடப்பட்டது.


4. இந்த குறிகாட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் 0 முதல் 100 வரை என்ற அளவில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும், பின்னர் அவர்கள் ஐந்து பிரிவுகளில் ஒன்றில் தரவரிசைப்படுத்தப்பட்டனர். அவை, சாதனையாளர் (90-100), முன்னணியில் இருப்பவர் (75-90), செயல்திறன் மிக்கவர் (60-75), ஆர்வலர் (40-60) மற்றும் தொடக்கநிலையாளர் (40 வயதுக்குக் கீழே) ஆகியோர் அடங்குவர்.


5. 2.16 லட்சம் பஞ்சாயத்துகளில், 699 பஞ்சாயத்துகள் முன்னணியில் உள்ளன. இதில், 77,298 செயல்திறன் கொண்டவை, 1,32,392 ஆர்வலர்கள் மற்றும் 5,896 தொடக்கநிலை பஞ்சாயத்துகள் என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. முன்னணியில் உள்ள 699 பஞ்சாயத்துகளில், 346 குஜராத்திலிருந்தும், அதைத் தொடர்ந்து தெலுங்கானா (270) மற்றும் திரிபுரா (42) ஆகியவற்றிலிருந்தும் வந்துள்ளன.



Original article:

Share:

கேரள மாநிலம் எப்படி அதீத வறுமையை ஒழித்தது? -எஸ்.ஆர். பிரவீன்

 நான்கு ஆண்டுகால கடுமையான முயற்சியின் வெற்றியாக, நவம்பர் 1-ஆம் தேதி, கேரள அரசு முற்றிலும் வறுமை இல்லாத மாநிலமாகத் தன்னை அறிவிக்க உள்ளது. மாநிலம் முழுவதும் நான்கு லட்சம் கணக்கெடுப்பாளர்கள் தொடர்ந்து பணியாற்றி, மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களை அடையாளம் கண்டனர். பின்னர், உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்றவாறு பல நலத்திட்டங்களை வகுத்தனர். இந்தத் திட்டம் 1,03,099 எண்ணிக்கையிலான மக்களை அதீத வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாக அரசாங்கம் கூறுகிறது. எஸ்.ஆர். பிரவீன் சில பயனாளிகளுடன் கலந்தலோசித்து இது சார்ந்த எதிர்ப்புக் குரல்களையும் கேட்டறிகிறார்.

திருவனந்தபுரத்தில் உள்ள செல்லமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகா தேவியின் வீட்டில் ஒரு மளிகைக் கடை அமைக்கப்பட்டுள்ளது. 57 வயதான அந்தக் கைம்பெண்ணின் உடல்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரத்திற்குத்  தேவையான வகையில் இந்தக் கடைக்குத் தேவையான நிதி, கேரள அரசின் அதீத வறுமை ஒழிப்புத் திட்டத்தின் (Extreme Poverty Eradication Programme (EPEP)) மூலம் வழங்கப்பட்டுள்ளது.


"ஏழு வருடங்களுக்கு முன்பு என் கணவர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பிறகு, நான் எங்கள் பாழடைந்த வீட்டில் வசித்து வந்தேன். ஆனால், அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தவுடன், நான் என் சகோதரியுடன் வசிக்கத் தொடங்கினேன். அங்கு நான் இரண்டு ஆண்டுகள் தங்கினேன். கடந்த செப்டம்பரில்,  கேரள அரசின் அதீத வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் இந்த வீட்டைப் பெற்றேன்," என்று அம்பிகா தெரிவித்தார்.


"டிசம்பர் மாதத்தில், என் மளிகைக் கடையைத் தொடங்குவதற்காக கேரள அரசின் திட்டத்திலிருந்து ஆரம்ப நிதியாக ரூபாய் 50,000 வழங்கப்பட்டது," என்றார். "என்னால் அதிகமாக நடக்கவோ அல்லது கடுமையான வேலை செய்யவோ முடியாது என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் இந்த  வாய்ப்பைப் பரிந்துரைத்தனர். இப்போது, அண்டை வீட்டிலிருந்து வரும் வழக்கமான வாடிக்கையாளர்களால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு சம்பாதிக்க முடிகிறது." என்றார்.


நவம்பர் 1 ஆம் தேதி, கேரள அரசு வறுமையிலிருந்து முற்றிலும் விடுபட்ட மாநிலமாக அறிவிக்க உள்ளது. அத்தகைய அறிவிப்பை வெளியிடும் முதல் மாநிலம் கேரளாதான். வறுமையிலிருந்து மீட்கப்படவுள்ள 59,277 எண்ணிக்கையிலான  குடும்பங்களில் அம்பிகாவும் ஒருவராக இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (NITI Aayog) நடத்திய ஆய்வில், கேரளாவின் வறுமை விகிதம் 0.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. இது நாட்டிலேயே மிகக் குறைவான விகிதமாகும். 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்த 59.8 சதவீதம் இருந்த வறுமை விகிதத்தை அடுத்தடுத்து வந்த அரசுகள், தாங்கள் செயல்படுத்திய நலத்திட்டக் கொள்கைகளின் மூலம் இந்த வெற்றியைக்  கண்டுள்ளனர்.


பயன்படுத்தப்பட்ட நான்கு அளவுகோல்கள்


கேரள உள்ளாட்சி நிர்வாகத்தால் வழிநடத்தப்பட்ட பங்கேற்பு மற்றும் அடிப்படையான நடவடிக்கையின் மூலம், மிகவும் விளிம்புநிலை மக்களை அடையாளம் காண்பதற்காக மாநிலம் முழுவதும் சுமார் நான்கு இலட்சம் கணக்கெடுப்பாளர்கள் அனுப்பப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ப, உணவு, ஆரோக்கியம், வருமானம் மற்றும் வீட்டுவசதி ஆகிய நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் மக்கள் அடையாளம் காணப்பட்டனர்.


சமூகத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டு, ஆதரவு அமைப்புகளின் பயன்கள் கிடைப்பது குறித்து அறியாமல் வாழும் பலரைக் கணக்கெடுப்பாளர்கள் கண்டனர். அவர்களில் ஒருவர் திருவனந்தபுரத்தில் உள்ள அஞ்சுதெங்குவில் ஒரு நாட்டுப் படகில் தனியாக வசித்து வந்தார். இன்னும் சிலர் தெருக்களில் வசித்து வந்தனர். பலகட்ட நடவடிக்கைக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் 1,03,099 நபர்களைக் கொண்ட 64,006 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில், 43,850 தனி நபர்கள், அவர்களில் சிலர் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக உள்ளாட்சி அரசாங்கம் (Local Self-Governments department (LSGD)) அளித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


அரசு தலைமையிலான பெரும்பாலான திட்டங்கள் தீர்மானிக்கப்பட்ட கண்டிப்பான, சீரான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், அதீத வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் 64,006 குடும்பங்களின் நலன்சார்ந்து (இறுதி எண்ணிக்கை 59,277 ஆகும், ஏனெனில் இதில் இறப்புகள், கண்டறியப்படாமை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டன) நுண் திட்டங்கள் (micro-plans) தயாரிக்கப்பட்டன. சிலருக்கு இது நல்லதொரு வாழ்வாதாரத் திட்டங்களாக இருக்கின்றன. மற்றவர்களுக்குத் தொடர்ந்து மருந்துகள் விநியோகம் தேவைப்படலாம் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்கூடத் தேவைப்படலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் ஏழு பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.


இடுக்கியில் உள்ள மாங்குளம் கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த 67 வயதான தாஸ் ராஜ், தனது மனைவி மற்றும் மகன் இருவருக்கும் மனநல உதவி தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். கூடுதலாக ஒரு வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வழியும் தேவைப்பட்டது என்றும் கேட்டிருக்கிறார். “எனக்கு இதய பிரச்சினைகள் இருப்பதால், நானும் வேலைக்கு வெளியே செல்ல முடியாது. எனவே, குடும்பஸ்ரீ (Kudumbashree) திட்டத்தின்கீழ், ஒரு வீட்டையும், மூன்று ஆடுகளை வாங்க ரூபாய் 50,000-ஐயும் பெற்றோம். அதைப் பயன்படுத்தி நாங்கள் வருமானம் ஈட்ட முடியும்” என்று தாஸ் கூறுகிறார்.


வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, குடும்ப அடையாள அட்டை  அல்லது ஆதார் அடையாள அட்டை இல்லாத பல ஒதுக்கப்பட்ட மக்களும் இந்தப் பட்டியலில் இருந்தனர். அவர்களையும் சேர்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி, தற்காலிக மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.


உள்ளூர் அரசாங்கம் (Local Self-Governments department (LSGD)) அளித்த தரவுகளின்படி, 21,263 நபர்களுக்கு அத்தியாவசிய ஆவணங்களும், 3,913 குடும்பங்களுக்கு வீடுகளும், 1,338 குடும்பங்களுக்கு நிலமும் வீடும் வழங்கப்பட்டன. 5,651 குடும்பங்களுக்கு வீடு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உணவுப் பொட்டலங்கள் முதல் சமைத்த உணவு வரை தடையற்ற உணவுப் பொருட்கள் மற்றும் 5,777 நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு சிகிச்சையும் மருந்துகளும்  வழங்கப்பட்டன. 4,394 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியும் வழங்கப்பட்டது.


இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பஞ்சாயத்தில் ஒரு அறை கொண்ட கொட்டகையில் வசித்துவந்த ஷாய் வர்கீஸ் (51), அவரது மனைவி சுனிதா இருவரும் பார்வைக் குறைபாடு (visually challenged) உள்ளவர்கள் மற்றும் அவர்களது மகள் ஆகியோரும் கணக்கெடுப்புகளில் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். வீதிகளில் பாடி பிழைப்பு நடத்தி வந்த தம்பதியினர், ஷாய்க்குச் சொந்தமான மூதாதையர் நிலத்தில், வாழ்வாதார உள்ளடக்கம் மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் திட்டத்தின் (Livelihood Inclusion and Financial Empowerment (LIFE))கீழ் அவரது சொந்த நிலத்தில் வீடு கட்டி வழங்கப்பட திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், 27 ஆண்டுகளாக காணாமல்போன ஷாயின் சகோதரர் தாங்காச்சான் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாலும் பூர்வீக நிலம் பாகப்பிரிவினை செய்யப்படாததாலும், அத்திட்டத்தை நிறைவுசெய்ய உள்ளூர் பஞ்சாயத்தால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.


சில துப்பறியும் வேலைகளும் நடந்தன 


27 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் காவல்நிலையத்தில் ஒருவரைக் காணவில்லை என்று பதிவுசெய்யப்பட்ட புகாரைக் கண்டுபிடித்தனர். மூன்றுமாத காலத் தேடலுக்குப் பிறகு, தங்கச்சன் வேளாங்கண்ணியில் கண்டுபிடிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது. சொத்து பாகப் பிரிவினைக்காக வீடு திரும்பும்படி அதிகாரிகள் அவரைக் கேட்டுக் கொண்டனர். பின்னர் ஷாய் மற்றும் குடும்பத்தினர் LIFE திட்டத்தின்கீழ் ஒரு வீட்டையும்,  குடும்பஸ்ரீ திட்டம் மூலம் அவர்களுக்கு வாழ்வாதார நலனுக்காக ஒரு இசைப்பெட்டி மற்றும் ஒலிவாங்கிகளும் (mic) வழங்கப்பட்டது என்கிறார் கிராம விரிவாக்க அலுவலர் லசீலா.


வாழ்வாதார உள்ளடக்கம்  மற்றும் நிதி அதிகாரம் அளித்தல் திட்டத்திலிருந்து (Livelihood Inclusion and Financial Empowerment (LIFE)) 4 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) மூலம் ₹30,000 மதிப்புள்ள ஒரு வீட்டை முடிக்க தேவையான சிமென்ட், மின் இணைப்பு மற்றும் குழாய்ப் பணிக்கான பொருட்களையும் வழங்கினார். இத்தகைய சமூகப் பங்களிப்பானது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் சிறப்பாக இருந்து வருகிறது.


குடும்பங்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்படாமல் இருக்க அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் அதீத வறுமை ஒழிப்புத் திட்டம் (Extreme Poverty Eradication Programme (EPEP)) கவனம் செலுத்துகிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா பஞ்சாயத்தைச் சேர்ந்த 28 வயதான ரெம்யா என்பவரின் கணவர் பிரசாந் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த பிறகு, ரெம்யாவும்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் உதவியுடன் சிகிச்சை பெற முடிந்தது என்றாலும், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு கடினமாகவே இருந்தது.


LIFE திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒரு வீடு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து அதிகாரிகள் ஜன சேவன கேந்திரா உதவி மையத்தில் (Jana Sevana Kendra help desk) ஒரு வேலையையும் ரெம்யாவுக்கு வழங்கினர். இது அவர் குழந்தைகளையும்  கணவரின் பெற்றோரையும் கவனித்துக் கொள்ள போதுமான பணம் சம்பாதிக்க உதவுகிறது என்கிறார் ரெம்யா.


மாநிலத்திலேயே முதன்முதலில் முற்றிலும் வறுமையிலிருந்து விடுபட்ட பஞ்சாயத்தாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குட்டியத்தூர் பஞ்சாயத்து மாறியது. அதன் தலைவர் பி.பி. ரெஜி கூறுகையில், மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 16 குடும்பங்களில் ஒவ்வொன்றையும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு அவர்களின் அனைத்து தேவைகளையும் புரிந்துகொண்டனர். "வருடாந்திர திட்டம் அல்லது திட்டங்களுக்கு வெளியே ஆவணங்கள் அல்லது வீடுகளை வழங்குவது போன்ற பல நடவடிக்கைகள் திட்டத்தின் காரணமாக மட்டுமே சாத்தியமானது என்று அவர் கூறுகிறார்.


கூட்டு முயற்சி தரும் பலன்


கேரளத்தின் வலுவான, பரவலாக்கப்பட்ட, உள்ளூர் நிர்வாக அமைப்பு இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமில்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கருதுகிறார். ஏனெனில், ஆரம்பக் கணக்கெடுப்பு, நுண் திட்டங்களை (micro-plans) உருவாக்குதல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகித்தன.


அரசு அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்ததாக கூறுகிறார். உதாரணமாக, குடிமைப் பொருள் வழங்கல் துறை (Civil Supplies department) முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அடையாள அட்டைகளை வழங்கியது. வருவாய்த் துறை (Revenue department) வீடுகள் கட்டுவதற்கான நிலங்களை அடையாளம் கண்டு அளித்தது. சுகாதாரத் துறை (Health department) சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கியது. பொதுக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் (General Education and Higher Education departments) இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கின. போக்குவரத்துத் துறை (Transport department) அவர்களுக்கு இலவசப் பயணத்திற்கான அட்டைகளை வழங்கியது. LIFE திட்டத்தின்கீழ் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்தரவையும் அரசாங்கம் பிறப்பித்தது. ஏனெனில், இவர்கள் திட்டத்தின் பயன்களை இதுவரையிலும் பெறாமல் வறுமையில் வாழந்த மக்களின் முன்னேற்றத்தை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர்  ராஜேஷ் கூறுகிறார். 


நிலத்தை அடையாளம் கண்டு வீடுகள் கட்டுவது ஒரு சவாலாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் முண்டக்காய் (Mundakkai) மற்றும் சூரல்மலை (Chooralmala) நிலச்சரிவுகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, நுண் திட்ட அணுகுமுறையின் (micro-plan approach) செயல்திறன் அரசாங்கத்தை வழிநடத்தியது என்றும் அவர் கூறுகிறார்.


விமர்சனக் குரல்கள்


கேரள அரசின் அதீத வறுமை ஒழிப்புத் திட்டம் (Extreme Poverty Eradication Programme (EPEP)) விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டங்களால் மாநிலத்தில் வறுமை ஒழிப்பு சாத்தியமானது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை மாநில அரசு தனது அரசியல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். 2014ஆம் ஆண்டில் 1.24 சதவீதமாக இருந்த அதீத வறுமையைக் படிப்படியாகக் குறைக்க மாநில அரசு அதிகக் காலம் எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார்.


மத்திய அரசின் எந்தெந்த திட்டங்கள் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டன என்பதை சந்திரசேகர் குறிப்பிட வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அவரின் விமர்சனத்திற்கு  பதிலளித்தார்.


மாநிலத்தில் அதீத வறுமையில் வாடுவதாக அடையாளம் காணப்பட்ட 64,006 குடும்பங்களில் 5 சதவீதம் மட்டுமே பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்றும், வயநாட்டில் உள்ள பணியா (Paniya), அடியா (Adiya), காட்டுநாயக்கர் (Kattunaikkar) மற்றும் வெட்டகுருமான் (Vettakuruman) சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள்  இன்னும் நிலமற்றவர்களாகவும்,  வீடற்றவர்களாகவும் மற்றும் வேலையில்லாதவர்களாகவும் உள்ளனர் என்று  ஆதிவாசி கோத்ர மகாசபா (Adivasi Gothra Mahasabha) குற்றம் சாட்டியுள்ளது.


பழங்குடி மக்களுக்கென்று சிறப்பு கவனம் செலுத்தப்படாததால், ஆரம்ப கணக்கெடுப்பின் முறையே சரியாக இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. வயநாடு மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்புகள் முடங்கியுள்ளன. மேலும், பல குடும்பங்கள் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இது நபர்கள் அதிகம் உள்ள  பெரிய குடும்பங்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றும் விமர்சிக்கின்றனர். வயநாட்டில் உள்ள பல பழங்குடியினர் நிலமற்றவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் அட்டப்பாடியில் நிலம் வைத்திருக்கும் பழங்குடியினரும் ஏழைகளாகவே உள்ளனர் என்று ஆதிவாசி கோத்ர மகா சபையின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். கீதானந்தன் கூறுகிறார்.


இந்திய சோசலிச ஒற்றுமை மையத்துடன் (Socialist Unity Centre of India (SUCI)) இணைந்த அங்கீகாரம்பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களின் (Accredited Social Health Activists (ASHA)) ஒரு பிரிவு, அரசாங்கத்தின் கூற்றுகள் பொய்யானது என்று விமர்சித்துள்ளனர். நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் முற்றிலும் வறுமை இல்லாத மாநிலம் என்கிற அறிவிப்பை வெளியிடும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


கேரள ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் (Kerala ASHA Health Workers’ Association (KAHWA)) மாநில துணைத் தலைவர் எஸ். மினி இந்தத் திட்டம் குறித்து கூறுகையில், எங்கள் உயர்ந்த மதிப்பூதியத்தை அதிகரிக்கக் கோரி நாங்கள் போராட்டம் தொடங்கி 262 நாட்கள் ஆகின்றன என்றும் எங்களுக்கு ஒரு நாளைக்கு ₹223 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.


 குறிப்பாக இந்தப் பெண்களில் பலர் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான வருமானம் ஈட்டுபவர்கள் என்றும் வறுமையை வரையறுப்பதற்கான அரசாங்கத்தின் அளவுகோல் தவறானது என்றும் விமர்சித்துள்ளார். அதீத வறுமை இல்லாத மாநில அறிவிப்புக்கு முன்னதாக, வருகிற புதன்கிழமை மாதாந்திர உயர்ந்த மதிப்பூதியத்தை ரூபாய் 1,000 அதிகரிப்பதாக கேரளா அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதற்கிடையில், இந்தத் திட்டத்தின் சாதனை தொடர்ந்து நீடிப்பதையும், குடும்பங்கள் மீண்டும் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதிசெய்யும் வகையில் உள்ளூர் அரசாங்கமானது இப்போது திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



Original article:

Share: