பார்வையாளர்களின் அளவீட்டு முறைகளை மறுசீரமைப்பதை கட்டுப்பாட்டாளர் சரியாக வலியுறுத்தியிருந்தாலும், ஊடக ஒருங்கிணைப்பின் அளவை மதிப்பிட வேண்டிய அவசியத்தை அது புறக்கணிக்கிறது.
தேசிய ஒளிபரப்புக் கொள்கையை உருவாக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India’s (TRAI)) பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகள் இந்தியாவை ஒளிபரப்பில் உலகளாவிய தலைவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல்வேறு தளங்களில் உயர்தர உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதே இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முக்கிய குறிக்கோள். இந்த தளங்களில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையவழி ஒளிபரப்பு சேவைகள் (OTT) ஆகியவை அடங்கும். இன்றைய உலகில், டிஜிட்டல் திருட்டு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே, பதிப்புரிமையைப் பாதுகாப்பது இந்தக் கொள்கையின் முக்கிய மையமாகும்.
அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரும்புகிறது. உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் பணிக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த இது உதவும். இத்தகைய நடவடிக்கைகள் ஒரு போட்டிச் சந்தையை உருவாக்குவது மட்டுமல்லாமல், உள்ளடக்க உருவாக்கத்தில் தொடர்ந்து புதுமைகளை ஊக்குவிக்கும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்மொழிவுகள் இத்துறைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் அதே வேளையில், முழுமையான கொள்கை கட்டமைப்பிற்கு தேவையான சில முக்கியமான அம்சங்களை அவை தவறவிடுகின்றன.
பாரம்பரிய ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் கலவை ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த கட்டமைப்பு சேவை வழங்குநர்களிடையே நியாயமான போட்டியை உறுதி செய்யும். பாரம்பரிய ஒளிபரப்பாளர்களுக்கும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கும் இடையிலான விதிமுறைகளில் உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்வது முக்கியம். இது ஒரு சமமான போட்டி தளத்தை உருவாக்க உதவும். ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கான விதிமுறைகள் ஒன்றிணைக்கப்படலாம் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ள போதிலும், இந்த சமநிலையை எவ்வாறு அடைவது என்பது குறித்த குறிப்பிட்ட பரிந்துரைகளை அது வழங்கவில்லை.
கட்டண உயர்வுக்கான முக்கிய தொழில்துறை கோரிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிவர்த்தி செய்யவில்லை. இந்த பிரச்சினை முக்கியமானது, ஏனெனில் ஒரு பயனருக்கு சராசரி வருவாய் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. மற்றொரு முக்கியமான பிரச்சினை உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பதற்கும் இடையே சரியான சமநிலையைக் கண்டறிவது. உள்ளடக்கத்தை பொறுப்புடன் பகிர வேண்டியதன் அவசியத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கிறது. இருப்பினும், விதிகள் குறித்து தெளிவாக இருப்பது முக்கியம், குறிப்பாக தணிக்கை அதிகாரங்கள் தொடர்பாக. இந்த அதிகாரங்கள் உத்தேச ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவில் விவாதிக்கப்படுகின்றன.
நெறிமுறை தரங்களை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் படைப்பு சுதந்திரத்தை பராமரிப்பது முக்கியம். அதிகப்படியான தணிக்கையைத் தடுக்க இந்த சமநிலை அவசியம். அதிகப்படியான தணிக்கை புதுமை மற்றும் கண்ணோட்டங்களின் பன்முகத்தன்மையை மட்டுப்படுத்தும்.
பல்வகை ஊடக உடமை (Cross-Media Ownership) பிரச்சினை குறித்து பேசவில்லை. பார்வையாளர்களின் அளவீட்டு முறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கட்டுப்பாட்டாளர் வலியுறுத்தினாலும், ஊடக ஒருங்கிணைப்பை மதிப்பிடுவதன் முக்கியத்துவத்தை அது கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க பல்வகை ஊடக உடமை சிக்கல்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்பு சுட்டிக்காட்டியுள்ளது. சில நிறுவனங்கள் உள்ளடக்கம் மற்றும் அதை விநியோகிக்கும் மற்றும் ஒளிபரப்பும் சேனல்கள் இரண்டையும் சொந்தமாக்குகின்றன. இது ஊடகங்களின் பன்முகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகிறது - இது ஒரு வலுவான ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த சிக்கலான உரிமையாளர் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு வலுவான கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய கொள்கை ஊடகத் துறையில் ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்யும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வறிக்கை இந்தியாவின் ஒளிபரப்புத் துறைக்கு ஒரு நேர்மறையான திசையை அமைக்கிறது. எவ்வாறாயினும், வளர்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுடன் மத்திய அரசு முன்னேறும்போது, இந்த சிக்கல்களை அது தீர்க்க வேண்டும். உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலமும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான விதிமுறைகளைப் பராமரிப்பதன் மூலமும், இந்தியா ஒளிபரப்பில் உலகளாவிய தலைவராக மாற முடியும்.