சீனாவைப் போல, மூலதனச் சந்தைகளையும், விதிமுறைகளையும் புதுப்பிப்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே முன்னேறுவதற்கான வழி.
இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் (bioeconomy) கடந்த பத்தாண்டுகளில் 16 மடங்கு வளர்ந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் $10 பில்லியனாக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் $165 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சரியான கொள்கைகளுடன், இது 2047-க்குள் $1.2 டிரில்லியனைத் தாண்டி, வளர்ந்த இந்தியாவின் (விக்சித் பாரத்) ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும் என்கின்றனர். ஆனால், இதற்கு அறிவியல்திறமை மட்டும் போதாது என்றும் இதற்கு வலுவான மூலதனச் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் நவீன, அறிவியல் அடிப்படையிலான ஒழுங்குமுறை அமைப்பு தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது. இந்தப் பன்னாட்டு உயிரித்தொழில்நுட்பத் துறையில் சீனா ஒரு உறுப்பு நாடு என்கிற நிலையிலிருந்து உலகளாவிய தலைவர் என்கிற நிலைக்கு உயர உதவிய இரண்டு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிடம் அறிவியல் வலிமையும் திறமையும் இருக்கிறது, ஆனால் கண்டுபிடிப்புகள் வளர உதவும் அமைப்பு பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.
உயிரித்தொழில்நுட்பமானது மற்ற துறைகளிலிருந்து வேறுபட்டது: இதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. மேலும், ஆழமான அறிவியலை நம்பியுள்ளது. வளர்ச்சி அடைய நீண்டகாலம் ஆகும் என்று கூறப்படுகிறது. உலகளவில், உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சி நிலையிலேயே பொதுச் சந்தைகளில் நுழைகின்றன. எனவே, இது அவர்களுக்கு கடினமான காலங்களில் தாக்குப்பிடிக்க நீண்டகால மூலதனத்தை அளிக்கிறது.
இந்தியாவில், வருவாய் ஈட்டாத அல்லது ஆராய்ச்சி நிலையிலுள்ள உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், புதிய கண்டுபிடிப்பாளிகள் (innovators) பெரும்பாலும் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த முதலீடும் குறைவாகவே உள்ளது, மேலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்கிறார்கள். அவரது குறைந்த மதிப்பீடுகள் புதிய தயாரிப்பு உருவாக்கத்தைக் குறைக்கிறது, மேலும் நம்பிக்கைக்குரிய இந்திய புத்தொழில் நிறுவனங்களை (Start-Up) வெளிநாடுகளுக்குச் செல்ல வழிவகுப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில், முதலீட்டு புதுமையானது எப்படி அறிவியல் புதுமைக்கு ஊக்கமளிக்கிறது என்பதை சீனா நிரூபித்துக் காட்டியுள்ளது:
ஷாங்காயில் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட STAR சந்தை (STAR Market), இலாபம் ஈட்டாத, வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் ஆழமான தொழில்நுட்ப நிறுவனங்களை, இலாபம் தேவைப்படாமல் பட்டியலிட அனுமதிக்கிறது. இது ஏற்கனவே 130 பில்லியன் டாலருக்கும் மேல் நிதி திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாங்காங்கின் உயிரித்தொழில்நுட்பப் பிரிவு (2018) லாபமற்ற உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்களும் பங்குச் சந்தையில் நுழைய அனுமதிக்கிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு, 25 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன.
2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில், சீனாவிற்கு உயிரியல் அறிவியல் துணிகர மூலதனமாக (life-sciences venture capital) 45 பில்லியன் டாலர் கிடைத்தது—இது இந்தியாவின் அளவைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிகம்.
சீனாவின் மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான (Research and Development (R&D)) செலவு 20 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் செலவு 3 பில்லியன் டாலர்கள் அளவில் மட்டுமே உள்ளது.
இந்த முதலீட்டுப் பெருக்கமானது சீனா விரைவாக உலகளாவிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாற உதவியுள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய தயாரிப்பு திட்டங்களைக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
புதுமை மற்றும் உயிரித்தொழில்நுட்ப வாரியம் தேவை
NASDAQ, STAR மற்றும் ஹாங்காங்கைப் போலவே, தேசியப் பங்குச் சந்தை (NSE) மற்றும் பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) உள்ள ஒரு பிரத்தியேகப் பட்டியலிடும் பிரிவு (specialised listing board) வருமானம் ஈட்டாத மற்றும் ஆய்வுக் கட்டத்தில் உள்ள உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்களைப் பட்டியலிட அனுமதிக்க வேண்டும். இது, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property (IP)) சார்ந்த நிறுவனங்கள் பொறுமையுடன் முதலீடு செய்யும் (patient capital) நிதியைப் பெறவும், உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் பங்கேற்கவும், இந்திய தொடக்க நிலை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே வளரவும் உதவும் என்று வலியுறுத்துகின்றனர்.
அத்தகைய சீர்திருத்தம் உள்நாட்டு மூலதனத்தை விடுவித்து, உலகளாவிய நிறுவன முதலீட்டாளர்களை ஈர்த்து, இந்தியாவின் உயிரியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஒழுங்குமுறைச் சீர்திருத்தம்
தேவையான மூலதனம் இருந்தாலும், வேகமான மற்றும் தெளிவான விதிமுறைகள் இல்லாமல் புதிய கண்டுபிடிப்புகள் வளர முடியாது. ஆனால், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை கட்டமைப்பு இன்னும் மெதுவாகவும், பிளவுபட்டும், அதிகப்படியான அதிகாரத்துவத்துடனும் உள்ளது.
மனிதர்கள் மீதான முதல் சோதனை (FIH - First-in-Human) ஒப்புதல் பெறவே பெரும்பாலும் பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. ஒவ்வொரு கட்டத்திற்கும் (கட்டம் I, II, III) தனித்தனியான நிபுணத்துவக் குழுவின் (Subject Expert Committees (SECs)) ஆய்வு தேவைப்படுகிறது. இந்தக் குழுவின் ஒழுங்கற்ற கூட்டங்கள் அடிக்கடி தாமதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், மத்திய மருந்துகள் தர நிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பானது (Central Drugs Standard Control Organization (CDSCO)) mRNA, வட்ட வடிவ RNA (Ribonucleic Acid), CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats), CAR-T (Chimeric Antigen Receptor T-cell therapy), அல்லது AAV (Adeno-Associated Virus) மரபணு சிகிச்சைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவதற்குத் தேவையான நிபுணத்துவம் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சீனா பத்தாண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டது, ஆனால் சில சீர்திருத்தங்களால் அதை வெற்றிகரமாக சமாளித்தது. தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாக அமைப்பை (National Medical Products Administration (NMPA)) அறிவியல் அடிப்படையிலான, வலுவான ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றியது. மருத்துவ பரிசோதனை ஒப்புதல் நேரத்தை 40-60 சதவீதம் குறைத்தது, மேலும் பரிசோதனை கட்டங்களை ஒரே நேரத்தில் (இணையாக) நடத்த அனுமதி அளித்தது போன்ற மாறுதல்களைச் செய்தது. மேலும், சர்வதேச மருந்து ஒழுங்குமுறை தர நிர்ணய அமைப்பின் (International Council for Harmonisation of Technical Requirements for Pharmaceuticals for Human Use (ICH)) உறுப்பினரானது. இதனால் உலகத் தரத்தை எட்டியது மற்றும் புதிய மருந்துகளுக்கு விரைவான ஒப்புதல் முறையை அமல்படுத்தியது. இதன் பலனாக, பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்னதாகவே CAR-T (Chimeric Antigen Receptor T-cell therapy) சிகிச்சை முறைகளுக்கு மற்றும் மரபணு சிகிச்சை மருந்துகளுக்கு சீனா ஒப்புதல் அளித்தது என்கின்றனர்.
ஒழுங்குமுறைச் சுறுசுறுப்பு தெளிவான நம்பிக்கையை உருவாக்கியது. அது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்தது. இவை இரண்டும் இணைந்து உயிரித்தொழில்நுட்பத் துறையில் பெரிய ஏற்றத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கான வாய்ப்புகள்
இந்தியா இரட்டைத் தூண் அமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் வேகமாக முன்னேற முடியும்:
மருத்துவ சோதனை நெறிமுறைகளின் அறிவியல் மதிப்பாய்வுக்கு (Indian Council of Medical Research (ICMR)) அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: வலுவான ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான திறமைகளுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு (ICMR) புதிய மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் மேம்பட்ட உயிரியல் தயாரிப்புகளுக்கு, குறிப்பாக ஆரம்பக்கட்ட சோதனைகளில், முக்கிய அறிவியல் ஆய்வு அமைப்பாக மாற முடியும்.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) உரிமம் வழங்குதல் மற்றும் மேற்பார்வையிடுவதில் கவனம் செலுத்தட்டும். மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமானது இறுதி அனுமதிகள், நல்ல உற்பத்தி முறைமைகள் (Good Manufacturing Practice (GMP)) சோதனைகள், தள ஆய்வு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவற்றை கையாள வேண்டும்.
அறிவியல் ஆய்வை (ICMR) நிர்வாக உரிமம் வழங்கும் நடைமுறையிலிருந்து (CDSCO) பிரிப்பது அனுமதிகளை விரைவுபடுத்தும், அறிவியல் தரத்தை வலுப்படுத்தும், மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சுழற்சி ஆற்றல்
மூலதனச் சந்தை சீர்திருத்தம், ஒழுங்குமுறை சீர்திருத்தம் இல்லாமல், புதுமை நிகழாது. மூலதனத்தின் அணுகல் இல்லாமல் ஒழுங்குமுறை சீர்திருத்தம், வளர்ச்சி வேகத்தை உருவாக்காது. ஆனால், இவை இரண்டும் சேர்ந்துதான் உலகளாவிய உயிரித்தொழில்நுட்பத் தலைமைக்கு உந்துசக்தியாக விளங்கும் சுழல் இயக்கத்தை உருவாக்குகின்றன.
ஒரு புதுமை & உயிரித்தொழில்நுட்ப வாரியமும் (Innovation & Biotech Board), அறிவியல் அடிப்படையிலான இரட்டை ஒழுங்குமுறை அமைப்பும், வலுவான நிறுவன ஆதரவும் இருந்தால், இந்தியா ஆயிரக்கணக்கான ஆழ்தொழில்நுட்ப (deep-tech) தொடக்க நிறுவனங்களை உருவாக்கலாம், mRNA, RNAi, மரபணு சிகிச்சை, உயிர் ஒத்த மருந்துகள், உயிரியல் மருந்துகள் ஆகியவற்றில் உலகத் தலைமை பெறலாம், மருத்துவ ஆய்வு மற்றும் உயிரியல் உற்பத்தியில் உலகின் சிறந்த மையமாக உயரலாம், இலட்சக்கணக்கான உயர்மதிப்பு BioE³ வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். 2047-ஆம் ஆண்டுக்குள் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உயிரிப்பொருளாதாரம் அமைக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நம்மிடம் ஏற்கனவே அறிவியலும், திறமையும், சந்தை வாய்ப்புகளும் உள்ளன. இப்போது நமக்குத் தேவையெல்லாம் சீர்திருத்தத்திற்கான துணிச்சல் மட்டும்தான் என்கின்றனர்.
மூலதனச் சந்தை சீர்திருத்தம் மற்றும் ஒழுங்குமுறை நவீனமயமாக்கல் ஆகியவை தேசிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும். துணிச்சலான நடவடிக்கையின் மூலம், இந்தியா உலகின் மருந்துகள் விற்கப்படும் பொருளாதாரச் சந்தை என்கிற நிலையிலிருந்து, உலகின் மருந்து ஆய்வுக்கூடமாக மாறமுடியும் என்று கூறப்படுகிறது.
எழுத்தாளர், Biocon குழுமத்தின் தலைவர்.
original link:
India can build a $1.2-trillion bioeconomy by 2047.