நோய்களின் தன்மைகள் மாறிவரும் நிலையில், உயிரி மருந்துகள் (biologics), நிகர் உயிரிமருந்துகள் (biosimilars) மற்றும் ஒழுங்குமுறைத் தரங்களை மேம்படுத்துவதில் இந்த புதிய திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் நாள்பட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அரசாங்கம் உயிரி மருந்துகளின் மேம்பாட்டில் தனது அதிக கவனத்தைத் திருப்பி வருகிறது. சமீபத்தில் நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் 'உயிரிமருந்து சக்தி திட்டம்' (Biopharma Shakthi) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்தியாவை ஒரு உலகளாவிய உயிரிமருந்து உற்பத்தி மையமாக உருவாக்குவதே இதன் நோக்கம் என்று நிதியமைச்சர் கூறினார்.
"இந்தியாவின் நோய்த் தாக்கமானது நீரிழிவு (diabetes), புற்றுநோய் (cancer) மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் (autoimmune disorders) போன்ற தொற்றா நோய்களை நோக்கி மாறி வருவதாகக் காணப்படுகிறது. மலிவு விலையில் நீண்ட ஆயுளுக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் உயிரி மருந்துகள் முக்கியம்," என்று நிதியமைச்சர் அறிவித்தார். மேலும், இந்த புதிய திட்டம் உயிரி மருந்துகளின் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
உயிரிமருந்து சக்தி திட்டம் (Biopharma Shakthi) என்றால் என்ன?
நிதியமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் உயிரிமருந்து சக்தி (Biopharma Shakthi) திட்டமானது அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மூலம் சுகாதார மேம்பாட்டிற்கான உத்தியான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் அம்சங்கள் என்ன?
உயிரிமருந்து சக்தி திட்டமானது உயிரி மருந்துகள் மற்றும் நிகர் உயிரிமருந்துகளின் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்மொழிவில், மூன்று புதிய தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை (National Institutes of Pharmaceutical Education and Research (NIPER)) உருவாக்குதல் மற்றும் தற்போதுள்ள 7 நிறுவனங்களை மேம்படுத்துதல் மூலம் உயிரி மருந்து சார்ந்த வலையமைப்பை உருவாக்குவதும் அடங்கும். இது இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பரிசோதனை மையங்களின் வலையமைப்பை உருவாக்கும். இந்த முன்மொழிவில், பிரத்யேக அறிவியல் ஆய்வுக் குழு மற்றும் நிபுணர்கள் மூலம் உலகத் தரநிலைகள் மற்றும் ஒப்புதல் காலக்கெடுவை பூர்த்தி செய்ய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை (Central Drugs Standard Control Organisation (CDSCO)) வலுப்படுத்துவதும் அடங்கும்.
உயிரிமருந்து சக்தி என்றால் என்ன?
உயிரிமருந்து அல்லது உயிரி மருந்துகள் (biopharmaceuticals) என்பது, மருந்துகளை வேதியியல் முறையில் தயாரிப்பதற்குப் பதிலாக, நுண்ணுயிரிகள் அல்லது பிற உயிருள்ள உயிரியல் அமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மருந்துகளைக் குறிக்கிறது. இவை மனித அல்லது விலங்கு செல்கள், பாக்டீரியா, பூஞ்சைகள் அல்லது சிகிச்சை அளிக்கும் பொருட்களை வளர்க்க அல்லது உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ஒத்த உயிரியல் தளங்களில் இருந்து பெறப்படலாம். இவை உயிரியல் செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த மருந்துகள் பெரும்பாலும் மிகவும் சிக்கலானவை மற்றும் வழக்கமான மருந்துப் பொருட்களைவிட நோய்களை மிகவும் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் திறன் கொண்டவை.
தடுப்பூசிகள், எதிர்ப்பணு சிகிச்சைகள், இன்சுலின், மரபணு மற்றும் செல் சிகிச்சைகள், நிகர் உயிரிமருந்துகள் ஆகியவை உயிரி மருந்துகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். தடுப்பூசிகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் முதல் நாள்பட்ட மற்றும் அரியவகை நோய்களுக்கான சிகிச்சைகள் வரை, உயிரிமருந்துப் பொருட்கள் நவீன சுகாதாரப் பராமரிப்பில் இன்றியமையாதவையாக மாறியுள்ளன.
உயிரிமருந்துத் துறையில் உள்ள மற்ற இதே போன்ற அரசு முன்முயற்சிகள் யாவை?
இந்தியா தனது உயிரிமருந்துச் சூழல் அமைப்பை வலுப்படுத்த கடந்த பத்தாண்டுகளில் பல முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 2017-ல் ₹1,500 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட தேசிய உயிரிமருந்துத் திட்டம் (National Biopharma Mission (NBM)), தடுப்பூசிகள், உயிரிசிகிச்சைகள், நோயறிதல் கருவிகள் மற்றும் மருத்துவ சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதேநேரத்தில், தொழில்-கல்வி நிறுவன ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் மலிவுத்தன்மையை மேம்படுத்துவது ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு உலக வங்கி நிதியுதவி அளித்ததுடன், உயிரிதொழில்நுட்பத் துறையின் (Department of Biotechnology (DBT)) கீழ் உள்ள உயிரிதொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றத்தால் (Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) இது செயல்படுத்தப்பட்டது.
உயிரிதொழில்நுட்பத் துறையின் கீழ் 2012-ல் நிறுவப்பட்ட உயிரிதொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC), புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மானியங்கள், அடைகாப்பு மையங்கள் (incubation centres) மற்றும் வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. முக்கியத் திட்டங்களில் உயிரிதொழில்நுட்பத் தொடக்கநிலை மானியம் (ஆரம்பக்கட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க 18 மாதங்களுக்கு ₹50 லட்சம் வரை), SEED நிதி (கருத்துச் சான்று நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு ₹30 லட்சம் பங்கு மூலதன ஆதரவு), LEAP நிதி (வணிகமயமாக்கலுக்குத் தயாராக உள்ள கண்டுபிடிப்புகளுக்கு ₹100 லட்சம் பங்கு மூலதன ஆதரவு), அம்ரித் பெரும் சவால் (இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தொலைமருத்துவம் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களில் மின்னணு சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளித்தல்) ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த, மருந்துப் பொருட்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)), மருந்துத் தொழிலை வலுப்படுத்தும் திட்டம் (Strengthening of Pharmaceutical Industry (SPI)) மற்றும் மொத்த மருந்துப் பூங்காக்கள் (Bulk Drug Parks) போன்ற திட்டங்கள் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதிலும் உற்பத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.
சமீபத்திய முன்முயற்சிகளில், மருந்து கண்டுபிடிப்பு, நிகர் உயிரிமருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு ஆதரவளிக்கும் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட PRIP திட்டம், மற்றும் உயிரி உற்பத்தி, தொழில்முனைவு மற்றும் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் BioE3 கொள்கையுடன் கூடிய Bio-RIDE திட்டம் ஆகியவை அடங்கும்.
Original article : Biopharma Shakti explained: What the Budget’s ₹10,000-crore bio bet means -J Mangaiyarkarasi