சிறிய மதிப்புள்ள மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு ஒரு வழக்கிற்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) பரிந்துரைத்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— சுமார் 65 சதவீத மோசடிகள் 50,000 ரூபாய்க்கும் குறைவான தொகையிலேயே நடக்கின்றன. வாடிக்கையாளர்கள் தவறுதலாகத் தங்கள் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (One-Time Password (OTP)) பகிர்ந்திருந்தாலும்கூட, மோசடி வழக்குகளில் அவர்களுக்கான பணத்தைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
— சிறு மதிப்புள்ள மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புக்கு வாடிக்கையாளர்களுக்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
— இத்தகைய மோசடிகளால் ஏற்படும் பண இழப்பிற்கு, ஒரு வாடிக்கையாளர் தனது வாழ்நாளில் ஒருமுறை இந்த சலுகையைப் பயன்படுத்த முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) பகிர்ந்திருந்தாலும் இழப்பீட்டைப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற ஒரு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று ஆளுநர் கூறினார்.
— மோசடி வழக்குகளில் ஒரு வாடிக்கையாளர் பணத்தைப் பெற தகுதியுடையவர் ஆவார் என்றும் இழப்புத் தொகையில் 70 சதவீதத்தை ரிசர்வ் வங்கி ஈடுசெய்யும் என்றும், மீதமுள்ள 30 சதவீதம் வாடிக்கையாளர் மற்றும் வங்கிக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
— வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியிலிருந்து (Deposit Education and Awareness Fund (DEAF)) கிடைக்கும் உபரி வருமானத்தில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி (Deposit Education and Awareness Fund) உள்ளதாகவும், இதில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளும் அடங்கும் என்கின்றனர். எனவே, குறிப்பிட்ட காலத்தில் போதுமான உபரி வருமானம் (Surplus Income) சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதை ரிசர்வ் வங்கியால் இந்த இழப்பீடு தொகையை வழங்குவதற்கு பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜே தெரிவித்தார்.
— வாடிக்கையாளர்களின் நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் ஆலோசனைக்காக மூன்று தனித்தனி வரைவு வழிகாட்டுதல்களை வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதில் முதல் வழிகாட்டுதல், நிதிச் சேவைகள் மற்றும் திட்டங்களைத் தவறான முறையில் விற்பனை செய்வதைத் (Mis-selling) தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்னும் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் நடந்துகொள்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகக் கருதப்படுகிறது.
— இரண்டாவது அம்சம், கடன் வசூலிக்கும் முறைகளில் கவனம் செலுத்தும். குறிப்பாக, கடன் வாங்கியவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும், நியாயமற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கவும், கடன் வசூல் முகவர்களின் (Recovery Agents) நடத்தை மற்றும் செயல்பாடுகள் குறித்து இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது அம்சம், வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் நடக்கும் அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப் பரிமாற்றங்களின்போது (Unauthorized Electronic Transactions), அந்த இழப்பிற்கு வாடிக்கையாளர் எந்த அளவிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான வரம்புகளைக் குறித்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
— டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் அறிக்கையை மத்திய வங்கி வெளியிட உள்ளது. இதில், பணத்தை அனுப்பியவுடன் உடனடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், சரிபார்ப்பிற்காகச் சிறிது நேரம் கழித்து வரவு வைக்கும் முறை (Lagged Credits) மற்றும் டிஜிட்டல் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மூத்த குடிமக்கள் போன்ற குறிப்பிட்ட பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அங்கீகார முறைகளைக் கொண்டு வருவது போன்ற திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— அனைத்து இணையவழி குற்றப் புகார்களுக்குமான ஒரு விரிவான தேசிய அளவிலான நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின்கீழ் (Ministry of Home Affairs) ஒரு இணைக்கப்பட்ட அலுவலகமாக இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) நிறுவப்பட்டுள்ளது. டிஜிட்டல் கைது புகார்கள் தொடர்பாக, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிக்கள் (Skype IDs), 59,000 வாட்ஸ்அப் கணக்குகள், 6.69 லட்சம் சிம் (Subscriber Identity Module (SIM)) கார்டுகள் மற்றும் 1,32,000 மொபைல் அடையாள எண்களை (IMEIs) இந்தப் பாதுகாப்பு மையம் முடக்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
— இந்திய மொபைல் எண்களைக் காட்டும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் கண்டு தடுப்பதற்கான அமைப்புகளை மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் உருவாக்கியுள்ளனர். குடிமக்கள் நிதி இணையவழி மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting and Management System) மோசடி முயற்சிகளில் இருந்து ₹3,431 கோடிக்கும் அதிகமான மோசடிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
— இருப்பினும், இந்தியாவின் வேகமான டிஜிட்டல் வளர்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவைகளை எளிதாகக் கிடைக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், 'இணையவழி மோசடி பரவல்' (cyber fraud epidemic) உருவாவதற்கும் காரணமாகியுள்ளது. இது டிஜிட்டல் முறைகளின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குறைத்துள்ளது. குறிப்பாக, 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) போன்ற மோசடிகள் உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், காலப்போக்கில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மீதான நம்பிக்கையையும் மெல்ல மெல்லச் சிதைக்கின்றன.
— பாதிக்கப்பட்டவர்கள் திடீரென கடுமையான நிதி இழப்புகளுக்கு ஆளாகிறார்கள். இது சில குடும்பங்களைக் கடனில் தள்ளுவதுடன், பயம், அவமானம் மற்றும் குழப்பம் போன்ற நீடித்த உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்ட பலர் இந்தக் குற்றத்தைப் புகாரளிக்கத் தாமதிக்கின்றனர் அல்லது தவிர்க்கின்றனர், இது மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட பணத்தைப் பல வங்கிக் கணக்குகளின் வழியாக விரைவாக மாற்ற வழிவகுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
— மேலும், இந்த மோசடிகள், குறிப்பாக புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் அறிவு மிகவும் குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. வேகமான டிஜிட்டல் மாற்றத்திற்கு நம் சமூகம் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது. அரசின் உண்மையான அறிவிப்புகள் எவை, போலி உத்தரவுகள் எவை என்பதைப் பிரித்தறிய முடியாமல், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத மக்களிடையே இது போன்ற சம்பவங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Original article : What are the various consumer protection reforms introduced by the RBI? -Khushboo Kumari