இந்தத் தீவிரமான சவால்களை எதிர்கொள்ள, அதிக அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசு, விரிவான கலந்தாலோசனை, ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) குறித்த விவாதங்களைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது முதலாவது கட்டுரையாகும். இது எங்களின் சமீபத்திய புத்தகமான 'A Sixth of Humanity: Independent India’s Development Odyssey' (குறிப்பாக அத்தியாயங்கள் 14 மற்றும் 15) என்பதை அடிப்படையாகக் கொண்டது.
சமீபத்தில் தோற்கடிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா (Constitutional Amendment Bill) பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சுதந்திரம் பெற்றது முதலே கூட்டாட்சித் தத்துவத்தின் வளர்ச்சியில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் எப்போதும் ஒரு பகுதியாகவே இருந்துள்ளன. ஏனெனில், கூட்டாட்சி என்பது தேசக் கட்டமைப்பிற்கான ஒரு முக்கியக் கருவியாக இருந்து வருகிறது. தேசப் பிரிவினையின் பெரும் பாதிப்பிற்குப் பிறகு அரசியலமைப்பில் மத்திய அதிகாரக் குவிப்பை நோக்கி நகர்ந்தது, நிதி ஆதாரங்களை செங்குத்தாகவும் (Vertical) கிடைமட்டமாகவும் (Horizontal) பகிர்வது குறித்த தொடர்ச்சியான விவாதங்கள், திட்டக் குழுவின் மத்திய அதிகாரக் குவிப்புத் தாக்கம், மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த அரசியலமைப்புப் பிரிவு-356 (Article 356)-ஐத் தவறாகப் பயன்படுத்தியது, ஆளுநர்களின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள், மொழி சர்ச்சைகள், தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பகிர்ந்தளிப்பது போன்ற பல சிக்கல்கள் இதில் அடங்கும். எனவே, இந்தியாவில் கூட்டாட்சி என்பது எப்போதும் ஒரு நிலையானதாக இல்லாமல், தொடர்ந்து மாறிவரும் ஒரு செயல்முறையாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தைப் பிரதிபலிக்கும் எங்களின் சமீபத்திய புத்தகமான 'A Sixth of Humanity: Independent India’s Development Odyssey', இந்தச் சிக்கல்களில் சிலவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. இது தற்போதைய இரண்டு உடனடி சவால்களை விளக்குகிறது, அதற்கான இரண்டு ஆழமான காரணங்களைக் கண்டறிகிறது. மேலும், இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு உண்மையை வெளிப்படுத்தும் வகையிலும் படிப்பினையாகவும் இருக்கும் ஒரு சுவாரசியமான நிகழ்வோடு நிறைவடைகிறது.
அடுத்தடுத்த சவால்கள் 1. அதிகரித்து வரும் ஜனநாயக 'பற்றாக்குறை'
ஜனநாயக நாடுகளில், சமமான குடியுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் வாக்கிற்கும் சமமான மதிப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மக்கள்தொகை அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது, அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்ய, மாநிலங்களுக்கு இடையேயும் மற்றும் மாநிலங்களுக்குள்ளும் தொகுதி இடங்களின் ஒதுக்கீடு வழக்கமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்கள்தொகை மெதுவாக வளரும் மாநிலங்கள், வேகமாக வளரும் மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு விகிதங்களில் வளரும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே சமநிலையைப் பேணுவது இதில் அடங்கும். இருப்பினும், இந்த கோட்பாடுகளைச் செயல்படுத்த நடைமுறை அரசியல் விவேகமும் அவசியமாகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மூலம் 1976 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி பிரதிநிதித்துவம், 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை மாற்றக்கூடாது என முடக்கப்பட்டது. இதன் காரணமாக, "ஜனநாயகக் குறைபாடு" (Democratic deficit) அதாவது ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை பங்கிற்கும், அதற்கான நாடாளுமன்ற தொகுதி இடங்களின் பங்கிற்கும் இடையே உள்ள இடைவெளி — காலப்போக்கில் அதிகரித்துள்ளது. வரைபடம்-1 (Figure 1) காட்டுவது போல, 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, புதிய மக்கள்தொகை மதிப்பீடுகளின் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தால், நான்கு தென்மாநிலங்கள் (ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா) 23 இடங்களை இழந்திருக்கும். அதேநேரத்தில் நான்கு வடமாநிலங்கள் (பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்) கூடுதலாக 31 இடங்களைப் பெற்றிருக்கும்.
வரைபடம் 1 (Figure 1) காட்டுவது என்னவென்றால், தென் மாநிலங்களுக்கும் (மற்றும் ஓரளவிற்கு கிழக்கு மாநிலங்களுக்கும்) மற்றும் இந்தி பேசும் வடமாநிலங்களின் மையப்பகுதிக்கும் இடையேயான பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது. ஏனெனில், இந்தப் பிராந்தியங்களில் பிறப்பு விகிதம் (Fertility rates) முற்றிலும் மாறுபட்ட நிலைகளில் மாறியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களும் மேற்குவங்க மாநிலமும் தங்களின் பிறப்பு விகிதத்தை "மாற்று நிலை அளவிற்கும்" அல்லது அதற்குக் கீழும் கொண்டு வந்து நிலைநிறுத்தியுள்ளன. இதன் காரணமாக, மேற்கு மற்றும் வடஇந்தியப் பகுதிகளின் மக்கள்தொகை பங்கு நிலையாக உள்ளது. ஆனால், தென் மாநிலங்களின் மக்கள்தொகை பங்கு குறைந்துள்ளது மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள்தொகை பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்த சவால்கள் 2. அதிகரித்து வரும் நிதிப் பகிர்வு
ஒரு கூட்டாட்சி முறையில், வரி வருவாயானது மாநிலங்களின் பொருளாதார அளவு மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு அவற்றுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில், இதை முழுமையாகச் செய்ய முடியாது என்பதால், சில மறுபகிர்வு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குவது, அனைத்து குடிமக்களுக்கும் பொதுச் சேவைகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதோடு, தேசிய ஒற்றுமையையும் பலப்படுத்துகிறது. இருப்பினும், இந்த மறுபகிர்வு வரம்பில்லாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனால், அது நிதி வழங்கும் மாநிலங்களிடையே அதிருப்தியையும் மனக்கசப்பையும் உருவாக்கக்கூடும் என்கின்றனர்.
வரைபடம் 2 (Figure 2), ஒரு மாநிலம் வரியாக எவ்வளவு பங்களிக்கிறது மற்றும் நிதி ஆணையப் பகிர்வு மூலம் அதற்கு எவ்வளவு நிதி திரும்பக் கிடைக்கிறது என்பதற்கு இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது. இந்த அளவீடு (Index) 1-க்கு மேல் இருந்தால், அந்த மாநிலம் தனது பங்களிப்பைவிட அதிக நிதியைப் பெறுகிறது என்றும், 1-க்குக் குறைவாக இருந்தால், அது வழங்கும் பங்களிப்பைவிடக் குறைவான நிதியையே பெறுகிறது என்று கணக்கிடப்படும். 1960-களின் தொடக்கத்தில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகவே இருந்தது. உதாரணமாக, இந்தி பேசும் மாநிலங்கள் தங்கள் பொருளாதார பங்களிப்பைவிட சுமார் 20% கூடுதல் வளங்களைப் பெற்றன. அதேநேரத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் தங்களின் பங்களிப்பைவிட சுமார் 20% குறைவாகவே பெற்றன.
ஆனால், மாநிலங்களுக்கு இடையே உள்ள சமமற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏழை மாநிலங்களுக்கு ஆதரவான தீவிர மறுபகிர்வுக் கொள்கைகள் காரணமாக, 2023-ஆம் ஆண்டிற்குள் இந்தி பேசும் மாநிலங்கள் தங்கள் பொருளாதார பங்களிப்போடு ஒப்பிடும்போது 90% கூடுதல் நிதியைப் பெற்றன. இதற்கு நேர்மாறாக, தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் முறையே தங்களது வரிப் பங்களிப்பைவிட 44% மற்றும் 58% குறைவான நிதியையே பெற்றன. நிதி வழங்கும் கொடையாளி மாநிலங்களுக்கும் (Donor states), நிதியைப் பெறும் பயனாளி மாநிலங்களுக்கும் (Beneficiary states) இடையிலான இந்த இடைவெளி கடந்த அறுபது ஆண்டுகளில், குறிப்பாக 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.
ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தற்போது மிக அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்கள் அல்ல, மாறாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஆகும். அதே நேரத்தில், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த நிதிப் பகிர்வின் மூலம் அதிகப் பலன்களைப் பெறும் முக்கியப் பயனாளி மாநிலங்களாக உள்ளன.
அதிகரித்து வரும் ஜனநாயக சமநிலையின்மை மற்றும் உயர்ந்து வரும் நிதிப்பகிர்வுகள் ஆகியவை ஆழமான சில பிரச்சனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே ஆகும். இதற்குப் பின்னணியில் இரண்டு முக்கிய அடிப்படைக் காரணங்கள் உள்ளன.
ஆழ்ந்த காரணம் 1. மாறுபட்ட செயல்திறன்
கூட்டாட்சி முறை குறித்த விவாதங்களில் நீண்டகாலமாகப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், மாநிலங்களின் பிறப்பு விகிதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் காணப்படக்கூடிய வேறுபாடுகள் ஆகும் (பொருளாதார வேறுபாடுகள் வரைபடம் 3-ல் காட்டப்பட்டுள்ளன).
1980-ஆம் ஆண்டு முதல், தெற்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்கள் மற்றும் ஹரியானாவில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது (Per capita GDP - இது மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு குறியீடாகும்) சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிகராக மிக வேகமாக வளர்ந்து வந்துள்ளது. இதன் மூலம் இந்த மாநிலங்கள், இந்தி பேசும் வடமாநிலங்கள் மற்றும் மேற்குவங்கத்தைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளன. இத்தகைய பொருளாதார மற்றும் மக்கள்தொகை இடைவெளிகளைச் கையாள்வது எந்தவொரு கூட்டாட்சி முறைக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கலாகும். ஏனெனில், இதில் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார மறுபகிர்வு போன்ற முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன, இவற்றை எளிதில் சமரசம் செய்துவிட முடியாது. மேலும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் தங்களின் அதிகப்படியான பங்களிப்பிற்காகத் (மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில்) தண்டிக்கப்படுவதாகவும், அதே வேளையில் சரியாகச் செயல்படாத மாநிலங்கள் தங்களின் குறைவான செயல்பாட்டிற்காகப் பரிசளிக்கப்படுவதாகவும் (வரைபடம் 2-ல் காட்டப்பட்டுள்ளது போல) ஒரு கருத்து நிலவுவது இந்தச் சிக்கலை இன்னும் அதிகப்படுத்துகிறது.
ஆழ்ந்த காரணம் 2. ஜனநாயக உணர்வு சீர்குலைதல்
நிதிசார் கூட்டாட்சியை மேலும் மோசமாக்கும் முக்கியப் பிரச்சனை, இந்திய அரசியலில் அதிகரித்துவரும் பிளவுகள் ஆகும். பணமதிப்பிழப்பு, வேளாண் சட்டங்கள் (Farm laws), மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act -2019) ஆகியவற்றில் தொடங்கி, இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (Indian Penal Code (IPC)) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) கொண்டு வரப்பட்டது வரை, மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR))) தேர்தல் மாற்றங்கள், சமீபத்திய அரசியலமைப்பு திருத்த மசோதா (Constitutional Amendment Bill) என அனைத்திலும் ஆளும் கட்சி பெரும்பாலும் தன்னிச்சையாகவே செயல்பட்டுள்ளது. பரந்த அளவிலான விவாதங்கள், சமரசம், அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல் மற்றும் சுயகட்டுப்பாடு போன்ற ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகக் குறைந்த அளவே மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
அரசியலை வெறும் தேர்தல் போட்டியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, எதிரிகளை வீழ்த்துவதற்கான ஒரு போராகக் கருதும் போக்கு தற்போது பெருகி வருகிறது. தேசக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்கும் 'கூட்டுறவு கூட்டாட்சி' (Cooperative federalism), தற்போது மோதல்களும் எதிர்ப்புகளும் நிறைந்த ஒரு 'முரண்பாட்டு கூட்டாட்சியாக' மாறி வருகிறது. இது காஷ்மீர், லடாக், மணிப்பூர், தென்னிந்தியா மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு என்னவென்றால், தேசக் கட்டமைப்பிற்கு மிகவும் அவசியமான ஒரு சக்தியாக விளங்கும் 'நம்பிக்கை' பலவீனமடைந்துள்ளதுதான். இந்த நம்பிக்கை இழப்பு குடிமக்களுக்கு இடையேயும், குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும்கூட ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக உணர்வு என்றால் என்ன? கடந்த 2018-ஆம் ஆண்டு, கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் அவர்கள், சூதாட்ட வரி விதிப்பு குறித்த பொதுவான முடிவிற்கு தான் ஒருவரே எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (Goods and Services Tax Council (GST Council)) கூட்டத்திலிருந்து நாகரீகமாக வெளியேற முன்வந்தார். ஒன்றிய அரசும் 28 மாநிலங்களும் அந்த முடிவை ஆதரித்ததாலும், எதிர்க்கட்சி ஆளும் ஒரே ஒரு மாநிலம் (கேரளா) மட்டுமே அதை எதிர்த்ததாலும், அந்தக் குழு கூட்டத்தைத் தடையின்றி எளிதாகத் தொடர்ந்திருக்க முடியும். (இருப்பினும், ஒரு தனி மாநிலத்தின் குரலையும் மதிக்க வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பின் காரணமாக அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது).
மாறாக, அப்போதைய ஒன்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், கேரள நிதியமைச்சர் மீண்டும் வருவதற்குப் பல சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு, மற்ற 28 மாநில நிதி அமைச்சர்களுக்கு இடையே ஒரு சமநிலையை மிகவும் கவனமாகக் கையாண்டு, அவரது நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகக் கேரளா இந்தத் திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டது. இதன் மூலம் அனைவரின் ஒருமித்த கருத்து நிலைநாட்டப்பட்டது, இந்தியாவும் இந்த முயற்சியில் வெற்றியடைந்தது.
இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தில் எழுந்துள்ள கடுமையான சிக்கல்களை எதிர்கொள்வதற்காக - புதிய ஒப்பந்தங்கள், பெரிய அளவிலான சமரசங்கள், சிக்கலான வாக்குப்பதிவு முறைகள் மற்றும் திருத்தப்பட்ட நிதிப் பகிர்வு ஏற்பாடுகள் போன்ற பல தீர்வுகள் சமீபகாலங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே செயல்பாட்டுத் திறனில் வேறுபாடுகள் நீடிக்கும் பட்சத்தில், கூடுதல் அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து ஒரு அடிப்படையான ஜனநாயக அணுகுமுறை ஏற்படாதவரை எந்தவொரு தீர்வும் பலன் தராது. இத்தகைய ஜனநாயக அணுகுமுறை இருந்தால் மட்டுமே எவ்வளவு பெரிய சிக்கல்களையும் தீர்க்க முடியும். அது இல்லையென்றால், சிறிய பிரச்சனைகள்கூட பெரிய நெருக்கடிகளாக உருவெடுக்கக்கூடும் என்கின்றனர். ஒரு ஜனநாயக அணுகுமுறை மட்டுமே, அதிகாரம் படைத்த ஒரு அரசாங்கம் தன்னிச்சையாகவும் அடக்குமுறையுடனும் நடந்துகொள்வதைத் தடுக்கிறது.
தேவேஷ் கபூர், ஒரு அரசியல் விஞ்ஞானி ஆவார். இவர் Washington DC (District of Columbia) நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வுகள் பள்ளியில், தெற்காசிய ஆய்வுகளுக்கான ‘Starr Foundation’ பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
அரவிந்த் சுப்ரமணியன், ஒரு இந்தியப் பொருளாதார அறிஞர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (2014-18) ஆவார். இவர் தற்போது வாஷிங்டன் டிசி-யில் உள்ள பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.
Original Link: India’s federalism challenges, and how consensus building is the way forward.