சில நாட்களுக்கு முன்னர், ஆறு பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான 'கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதை' (Goldman Environmental Award) பெற்றனர். உலகம் முழுவதிலும், குறிப்பாக நமது நாட்டில் நடைபெறும் அடித்தள அளவிலான சுற்றுச்சூழல் இயக்கங்களில் பெண்களின் பங்கை இது எவ்வாறு முன்னிலைப்படுத்துகிறது?
இங்கிலாந்தில் எண்ணெய் துளையிடுதலுக்கு எதிரான பிரச்சாரம், நைஜீரியாவில் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து அழிவு நிலையில் உள்ள வௌவால்களை பாதுகாக்கும் முயற்சிகள், இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சுற்றுச்சூழல் போராட்டங்கள் ஆகியவை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அதை மீண்டும் உருவாக்குவதிலும் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
சில நாட்களுக்கு முன்னர், ஆறு பெண் ஆர்வலர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றனர். 1989-ல் உருவாக்கப்பட்ட, பசுமை நோபல் பரிசு என்றும் அழைக்கப்படும் இந்த விருதை வென்ற ஆறு பேரும், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, பல்வேறு வகையான பிரச்சாரங்களை மேற்கொண்டு, காலநிலை செயல்பாட்டில் தங்குளுக்கான ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் பெண்கள் முன்னணியில் இருந்து வந்திருந்தாலும், இதற்குப் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவுகள் குறித்த புரிதலும் முக்கியமானதாகிறது.
ஆறு பெண்களுக்கு 'பசுமை நோபல்' (Green Nobel) விருது
'பசுமை நோபல்' பரிசு வென்ற ஆறு வெற்றியாளர்கள்:
1. நைஜீரியாவின் வெப்பமண்டல சூழலியல் நிபுணரும், இயற்கை பாதுகாவலருமான இரோரோ தான்ஷி.
2. தென் கொரியாவைச் சேர்ந்த காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் போரிம் கிம்.
3. பிரிட்டிஷ் காலநிலைச் செயற்பாட்டாளர் சாரா ஃபின்ச்,
4. அமெரிக்கப் பூர்வகுடி காலநிலைச் செயற்பாட்டாளர் அலன்னா அக்காக் ஹர்லி,
5. கொலம்பிய இளைஞர் காலநிலைச் செயற்பாட்டாளர் யுவெலிஸ் மொராலஸ் பிளாங்கோ,
6. சுரங்கத் தொழிலால் ஏற்படும் பாதிப்புகளை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய பப்புவா நியூ கினிய அரசியல்வாதி தியோனிலா ரோகா மாட்போப் ஆவார்.
இந்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் காலநிலை ஆர்வலர் (climate activism) என்ற தனித்துவமான ஒரு கதை உண்டு. உதாரணமாக, பிரிட்டிஷ் காலநிலை ஆர்வலரான சாரா ஃபின்ச், இங்கிலாந்தில் எண்ணெய் துளையிடுதலுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக, துளையிடுவதாலும் எரிபொருளை எரிப்பதாலும் ஏற்படும் அனைத்து உமிழ்வுகளையும் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
நைஜீரியாவைச் சேர்ந்த வெப்பமண்டல சூழலியலாளரும் இயற்கை ஆர்வலருமான இரோரோ தன்ஷி, மனிதர்களால் ஏற்ப்படும் காட்டுத்தீயிலிருந்து அழிந்துவரும் வௌவால்களைப் பாதுகாப்பதற்காக, மக்களின் பங்களிப்புடன் (community-led campaign) ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தைத் தொடங்கினார். இருப்பினும், இந்தக் கதைகளை முக்கியமானவையாக ஆக்குவது, உள்ளூர் சுற்றுச்சூழல் கவலைகளை எவ்வாறு பரந்த உலகளாவிய விளைவுகளுடன் இணைக்கின்றன என்பதுதான்.
உள்ளூர் காலநிலை இயக்கங்கள்
உள்ளூர் காலநிலை இயக்கங்கள், சமீப காலங்களில் உலகின் வடக்கு மற்றும் தெற்கு நாடுகளிலும் அரசியல் மற்றும் வளர்ச்சி மாதிரிகளின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகின்றன. பெரிய அளவிலான உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்கங்கள் முறையான அமைப்புகள், முறைசாரா குழுக்கள் மற்றும் தனிநபர்களின் ஒரு பன்முகத்தன்மை கொண்ட வலையமைப்பாக இருக்கும் அதே வேளையில், உள்ளூர் இயக்கங்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பாதிப்பின் உடனடி நேரடி அனுபவங்களிலிருந்தே உருவாகின்றன.
உதாரணமாக, உலகின் வடக்கு பகுதியில் உள்ள இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டம், பல்வேறு கவலைகளை எழுப்பியது. குறிப்பாக, விமானப் போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகள் அதிகரித்து, அந்த விமான நிலையம் நாட்டிலேயே மிக அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் விமான நிலையமாக மாறியிருக்கும். இதன் விளைவாக, தேசிய அமைப்புகளும், உள்ளூர் சமூகக் குழுக்களும் ஒன்றிணைந்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கான அனுமதியை எதிர்த்துப் போராடின.
உலகின் தென் பகுதியில், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் இயக்கங்கள் எவ்வாறு பரந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றன என்பதற்குச் சிலி நாடு ஒரு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. நீரை ஒரு தனியார்மயமாக்கப்பட்ட பண்டமாகச் சிலியின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. ஆறுகளும் நீர்வளம் தொடர்பான உரிமைகளும் தனியார் ஏலதாரர்களுக்கு ஏலத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நீர் நெருக்கடிகள் ஏற்பட்டதுடன், மனித வாழ்வின் அடிப்படைத் தேவையான தண்ணீரின் சமமற்ற முறையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் முதன்மையான வேளாண்ப் பயிரான அவகாடோவிற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இது நீர்வளப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலியில் உள்ள விளிம்பு நிலை இயக்கங்கள் உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவின் முக்கிய அடித்தள இயக்கங்கள்
இந்தியாவில், சுற்றுச்சூழல் நலன்களுக்கான முக்கிய அடித்தள மற்றும் பிராந்திய இயக்கங்கள் பின்வருமாறு:
பிஷ்ணோய் இயக்கம் – ராஜஸ்தானில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கேஜர்லி கிராமத்தில் கேஜ்ரி மரங்களை வெட்டுவதற்கு எதிராக பிஷ்ணோய் சமூகத்தால் தலைமையேற்று நடத்தப்பட்ட இயக்கம். கேஜர்லி கிராமத்தைச் சேர்ந்த அம்ரிதா தேவி பிஷ்ணோய் மற்றும் அவரது மூன்று மகள்கள், பிஷ்ணோய் சமூகத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன், மரங்களை அணைத்தபடியே கொல்லப்பட்டனர். இந்தத் தியாகம் பின்னர் 1970களில் சிப்கோ இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது.
சிப்கோ இயக்கம் –இந்த இயக்கம் 1973-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தின் சமோலி மாவட்டத்தில் (தற்போது உத்தரகாண்ட்) மரங்களை வெட்டுவதற்கு எதிராகவும் சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், கிராம மக்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து அவற்றைச் சூழ்ந்துகொண்டதால், இந்த இயக்கத்திற்கு 'சிப்கோ' (Chipko) அல்லது 'அணைத்தல் / தழுவுதல்' (embrace) எனும் பெயர் ஏற்பட்டது.
அப்பிகோ இயக்கம் – உள்ளூர் மொழியில் ‘அணைத்தல்’ என்ற அப்பிகோ இயக்கம் என்பது, கர்நாடகாவில் நிலவிய ஒற்றைப் பயிர் சாகுபடி முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதற்காக சிப்கோ இயக்கத்தால் உத்வேகம் பெற்ற ஒரு முறையாகும். ஒரே வகை மரங்களை பெரிய பரப்பளவில் வளர்ப்பதற்கு எதிராக மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
அமைதிப் பள்ளத்தாக்கு இயக்கம் 1977-ஆம் ஆண்டு, கேரள அரசு, அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா வழியாக பாயும் குந்தி ஆற்றின்மீது நீர்மின் திட்டம் அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒரு பெரிய சமூக இயக்கத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் விளைவாக அமைதிப் பள்ளத்தாக்கின் பசுமை நிறைந்த மழைக்காடு (evergreen rainforest) பாதுகாக்கப்பட்டது.
நர்மதா பச்சாவ் அந்தோலன் (Narmada Bachao Andolan) இயக்கம்– இந்த இயக்கம் 1985-ஆம் ஆண்டு நர்மதை ஆறு மீது மிகப்பெரிய அணைகள் கட்டுவதற்கு எதிராக தொடங்கப்பட்டது. பின்னர், அணைத் திட்டங்களால் இடம்பெயர்க்கப்படும் மக்களின் மறுவாழ்வு உரிமைக்காகவும் போராடியது. வளர்ச்சி திட்டங்கள் வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்தியது.
1970-களின் பெண்கள் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பழங்குடியினர் இயக்கங்கள், உழவர்கள் இயக்கங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் நடவடிக்கைக் குழுக்கள் ஆகியவை அத்தகைய “புதிய சமூக இயக்கங்களுக்கு” எடுத்துக்காட்டுகளாகும்.
இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு இயக்கங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சிப்கோ இயக்கம் முதல் மேற்கு இமயமலைப் பகுதிகளில் பெண்கள் மேற்கொண்ட நீரூற்றுப் புனரமைப்புத் பங்கேறப்பு வரை, பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உண்டு என்பதை வலியுறுத்தும் ஒரு கதை உருவாகியுள்ளது. இதன் பின்னணியில், பெண்களும் இயற்கையும் ஒரே மாதிரியான அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றன என்ற தொடர்பை விளக்கும் சிந்தனை வடிவமாக சுற்றுச்சூழல் பெண்ணியம் (Ecofeminism) உருவெடுத்தது..
பெண்களும் இயற்கையும்
1970-களின் முற்பகுதியில், சமகாலப் பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்களில் ஏற்பட்ட ஒரு முக்கிய எழுச்சியுடன் இணைந்து தோன்றிய சூழலியல் பெண்ணியம், இயற்கை வளங்கள் மற்றும் பெண்களின் சுரண்டல் மீது தனது கவனத்தை செலுத்தியது. பெண்கள் 'இயற்கைக்கு' நெருக்கமானவர்கள் என்றும், ஆண்கள் 'பண்பாட்டிற்கு' நெருக்கமானவர்கள் என்றும் கூறுகிறது. இயற்கையின் ஆதிக்கமும் பெண்களின் ஆதிக்கமும் ஒன்றாகவே நிகழ்கின்றன.
பெண்ணிய இயக்கமும் சுற்றுச்சூழல் இயக்கமும் சமத்துவமான மற்றும் படிநிலை அற்ற அமைப்புகளின் மீதான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சூழலியல் பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர்.
இந்தியச் சூழலில், சூழலியல் பெண்ணியம் என்பது, பெண்களுக்கும் இயற்கைக்கும் எதிரான வன்முறை என்பது பொருளாதாரரீதியாகப் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறிவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவாவின் கருத்துக்களுடன் வலுவாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள், நீர், உணவு, விறகு போன்றவற்றைச் சேகரிப்பதன் மூலம் இயற்கையிலிருந்து எவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்பதை உதாரணமாகக் கொண்டு, இயற்கையின் அழிவு என்பது பெண்களின் வாழ்வாதார ஆதாரங்களின் அழிவைக் குறிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.
இருப்பினும், பெண்ணிய பொருளாதார நிபுணரான பீனா அகர்வால், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளார். சூழலியல் பெண்ணியவாதிகள் (Ecofeminists) வடமேற்கு இந்திய பெண்களின் அனுபவங்களை, வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் அனைத்து கிராமப்புற பெண்களின் அனுபவங்களாக இணைத்துப்பார்ப்பதாக அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
சாதி மற்றும் வர்க்கம் போன்ற சமூக அடையாளங்களும் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்கின்றன என்று அவர் அவர் விளக்கியுள்ளார். எனவே, சுற்றுச்சூழலுடனான மனித உறவுகள் எவ்வாறு பொருளாதாரம் தொடர்பான உண்மைகளில் வேரூன்றியுள்ளன என்பதை விளக்க, அகர்வால் அதற்கு மாற்றாக “பெண்ணியச் சூழலியல்” (feminist environmentalism) எனும் சொல்லை முன்மொழிகிறார்.
சுற்றுச்சூழல் சீரழிவின் தாக்கம்
காலநிலை மாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சினையாகக் கருதி பெண்கள் அதிக அக்கறை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு பகுதி காரணம், காலநிலை மாற்றம் பல்வேறு விளிம்புநிலை சமூகங்களைச் சமமற்ற விகிதத்தில் பாதிப்பதே ஆகும். சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களைப் பாதிக்கும் ஆறு முக்கிய வழிகளை அகர்வால் குறிப்பிட்டார்: அவை நேரம், வருமானம், ஊட்டச்சத்து, உடல்நலம், சமூக வாழ்வாதார வலைப்பின்னல்கள் மற்றும் பழங்குடி அறிவு ஆகும்.
சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் உழைப்புச் சுமையை அதிகரிக்கிறது. உதாரணமாக, வங்கதேசத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, வளப் பற்றாக்குறை மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு ஆகியவை சேர்ந்து, பெண்கள் எரிபொருள் சேகரித்தல், தண்ணீர் எடுத்தல் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது பெண்கள் வேளாண் உற்பத்தியில் குறைந்த நேரத்தைச் செலவிட வழிவகுத்து. அதன் மூலம் குடும்ப வருமானத்தைக் குறைக்கக்கூடும்.
சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. காடுகள் மற்றும் கிராமப் பொது நிலங்களின் சரிவு, ஏழைக் குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய வளங்கள் கிடைப்பதையும் குறைக்கிறது. கிராமப்புறப் பெண்களும் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, குடும்பத்திற்குள் உணவு மற்றும் பிற வளங்கள் சமமாகப் பகிரப்படாததால், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலை மோசமடைகிறது.
சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பெண்களின் பங்கை வலுப்படுத்துதல்
வளரும் நாடுகளில் கடன் சுமை அதிகரிக்கும்போது பெண்களே அதிகமாக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு ஒன்று மேலும் கண்டறிந்துள்ளது. கடன் நெருக்கடியின் விளைவாக அரசாங்கங்கள் பொதுச் செலவினங்களைக் குறைக்கும்போது, கல்வி மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்கள் வேலைகளை இழக்கிறார்கள். வளரும் நாடுகள் இன்று எதிர்கொள்ளும் காலநிலை தொடர்பான கடன் சுமைகளுக்கும் இது பொருந்தும். இந்தச்சுமைகள் பெண்களைக் கடுமையான வறுமை நிலைக்குள் தள்ளுவதுடன், அவர்களது ஊதியமற்ற பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் அளவும் அதிகரிக்க வழிவகுக்கிறது.
ஆகவே, பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவு எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பெண்கள் சமமற்ற வழிகளில் பாதிக்கப்படுவதாலும், அவர்களின் வாழ்வியல் சூழல்களும், அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் முன்னணிப் பங்களிப்பாளர்களாக உருவெடுக்கின்றனர்.
சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மையில் பெண்கள் முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர். எனவே, அவர்களின் நிலம் மற்றும் சொத்துரிமைகளை வலுப்படுத்துவதும், தூய்மையான ஆற்றல், நீர், சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வாழ்வாதாரங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதும், உள்ளூர் நிர்வாகத்தில் முடிவெடுக்கும் நிறுவனங்களில் அவர்களின் தீவிரப் பங்கேற்பை உறுதி செய்வதும் முக்கியமானதாகிறது.
Original Link: Why women are key stakeholders in environmental governance.