சிந்து நதிநீர் ஒப்பந்தம்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முட்டுக்கட்டைகளை எவ்வாறு கையாண்டன? - அமிதாப் சின்ஹா

பாகிஸ்தான் "நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவைக் கைவிடும் வரை", இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச மயமாக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.


கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty (IWT)) நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.  முடிவின்படி, இரு நாடுகளின் வழியாகப் பாயும் சிந்து, ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் மற்றும் பியாஸ் ஆகிய 6 முக்கிய எல்லை தாண்டிய நதிகளின் நீரைப் பகிர்வதை இதுவரை நிர்வகித்து வந்த 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு, தற்போதைக்கு தான் கட்டுப்பட்டதாக இந்தியா கருதவில்லை என்பதாகும்.


இந்தியாவின் முடிவால் பாகிஸ்தானுக்குச் செல்லும் வழக்கமான நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இருநாட்டு உறவுகளுக்கு இடையே, கடந்த ஓராண்டில் இதுவே மிகவும் கடினமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக ஒரு சர்வதேச சட்ட ரீதியான வழக்கை உருவாக்குவதற்கும், ஐக்கிய நாடுகள் சபை (United Nations (UN)), சர்வதேச நீதிமன்றம், உலக வங்கி மற்றும் பிற மூன்றாம் தரப்பு அமைப்புகளின் தலையீட்டைக் கோருவதற்கும் பாகிஸ்தான் கடந்த ஓராண்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐ.நா. பாதுகாப்பு சபையின் (UN Security Council (UNSC)) தற்காலிக உறுப்பினராகப் பணியாற்றி வரும் பாகிஸ்தான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறது.


மறுபுறம், இந்தியா இந்த நதிகளில் நீண்டகாலமாகத் தள்ளிப்போன திட்டங்களை முடிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தியா தனது பகுதியில் எதைக் கட்ட முயன்றாலும், அதற்கு பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்த விதிகளைத் தவறாகப் பயன்படுத்தித் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 


இந்தப் பிரச்சினை தொடர்ந்து   அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் அச்சுறுத்தியது போல, இது ஒரு கட்டத்தில் ஒரு பெரிய சட்ட அல்லது தூதரக மோதலாகவோ அல்லது ஆயுத மோதலுக்கான காரணமாகவோ தீவிரமடைய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமையன்று, பாகிஸ்தான் "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நம்பகத்தன்மையுடனும் மாற்றமுடியாத வகையிலும் கைவிடும் வரை" சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) நிறுத்தி வைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்தப் பிரச்சினையை சர்வதேசமயமாக்குவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள்


சிந்து நதி நீர் அமைப்பின் கீழ்மட்டப் பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால், இந்த ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவால் பாகிஸ்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் விவசாயத் தேவைகளில் பெரும் பகுதி — அதாவது 70 சதவீதத்திற்கும் மேல், சிந்து நதி அமைப்பின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. தண்ணீர் தொடர்ந்து பாய்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி நீர் ஆணையர்களின் வழக்கமான கூட்டங்களும், தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளும் தடைபட்டுள்ளன. இது பாகிஸ்தானுக்குள் பாயும் நீரின் அளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீர்ப் பயன்பாட்டைத் திட்டமிடுவதிலும், வெள்ளம் அல்லது வறட்சி அபாயங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் பாகிஸ்தானின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.


நிலைமையை மாற்றத் தானாக எதையும் செய்ய முடியாத சூழலில், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகப் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. உடன்படிக்கையின்படி, எந்தவொரு நாடும் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி இல்லை என்பதுதான் அவர்களின் முக்கியமான சட்டப்பூர்வ வாதம் ஆகும். அதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று பாகிஸ்தான் கூறுகிறது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) கடந்த ஆண்டு தொடங்கிய பாகிஸ்தானின் தற்காலிக உறுப்பினர் பதவி, தற்போது அவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்பு சபையில் அவர்கள் பலமுறை மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும், சம்பந்தமே இல்லாத தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும் போதுகூட இந்த விவகாரத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.


உதாரணமாக, ஐ.நா. பாதுகாப்பு சபை கடந்த மாதம் எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் விவாதங்களை நடத்தியது. இயற்கை வளங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுவான செழுமைக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, மிரட்டலுக்கோ அல்லது மோதலுக்கோ பயன்படக்கூடாது என்று கூறியது. மேலும், இதே கொள்கை நீர் வளங்களுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டதோடு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்தும் பேசியது.


இதை ஒரு பாதுகாப்புப் பிரச்சினையாகக் கட்டமைத்தல்


பாகிஸ்தான் சிந்து நதி நீர் விவகாரத்தை பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஒரு பிரச்சினையாகச் சித்தரித்து வருகிறது. இது ஐநா பாதுகாப்பு சபையின் நேரடி கவனத்திற்குரிய விஷயம் என்பது அவர்களின் வாதம். மேலும், இதனை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவும் உருவகப்படுத்தி, ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) மனு அளிக்குமாறு தனது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் ஆதரவு அமைப்புகளையும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐநா மனித உரிமைகள் பேரவையின்கீழ் செயல்படும் சிறப்பு அறிக்கையாளர்கள், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவைப் பற்றி விளக்கம் கேட்டு இந்தியாவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தானின் முயற்சிக்கு ஓரளவிற்குப் பலன் கிடைத்துள்ளது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது அடிப்படையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு இருதரப்பு ஒப்பந்தம் என்றும், இதில் உலக வங்கி வெறும் உதவியாளராகவும் நடைமுறைச் சிக்கல்களைக் கவனிக்கும் ஒரு மூன்றாம் தரப்பாகவும் மட்டுமே செயல்படுகிறது என்பது இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாகும். எனவே, இந்த ஒப்பந்த விவகாரத்தில் உலக வங்கியின் வரம்பிற்கு அப்பாற்பட்டு வந்த தொடர்பையோ அல்லது கடிதத்தையோ இந்தியா முற்றிலுமாகப் புறக்கணித்தது.


பாகிஸ்தான் எழுப்பிய சில சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்த (IWT) நடைமுறையின்கீழ் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் கடந்த ஆண்டு ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவு, ஏற்கனவே மன்றத்தின் பரிசீலனையில் உள்ள விவகாரங்களை விசாரிக்கும் அதிகாரத்தை அந்த மன்றத்திடம் இருந்து பறிக்காது என்று கூறியது. இதைத் தனக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகக் கருதிய பாகிஸ்தான், இந்தியாவின் முடிவு சர்வதேச சட்டத்தின்படி தவறானது என்பதற்கு இதுவே சான்று என்று கூறியது.

இருப்பினும், இந்தியா இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதையே ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது. உலக வங்கியால் நியமிக்கப்பட்ட ஒரு நடுநிலை நிபுணர் மூலம் ஏற்கனவே ஒரு மாற்றுத் தீர்வு முறை செயல்பாட்டில் இருக்கும்போது, இது போன்ற மற்றொரு இணையான அமைப்பை உருவாக்குவது தேவையற்றது என்று இந்தியா வாதிட்டது. இதனால், இந்த மன்றத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பதோடு, அதன் தீர்ப்புகளையும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.


பாகிஸ்தானின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்புக் குழுவின் (UNSC) ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது அல்லது இது தொடர்பாக ஏதேனும் ஒரு கருத்தைப் பதிவு செய்ய வைப்பதுதான். இல்லையெனில், எப்படியாவது இந்தச் சிக்கலை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் முயல்கிறது. இதில் எதுவும் நடப்பதற்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், ஐநா ஆவணங்களில் இந்த விவகாரம் தொடர்பானப் பதிவுகளைத் தொடர்ந்து அதிகப்படுத்துவதே பாகிஸ்தானின் முயற்சியாக இருந்து வருகிறது.


உள்கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் அதன் அவசியம்.


சர்வதேச அரங்குகளில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த பாகிஸ்தானின் வாதங்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வந்தாலும், அந்த ஒப்பந்த விதிகளின்படி தனக்கு உரிமையுள்ள நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலேயே இந்தியா முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது.


இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரைக்கூட, இந்தியா குறிப்பிட்ட அளவிலும், நீரை முழுமையாகப் பயன்படுத்தாத முறையிலும் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேசமயம், கிழக்கு நதிகளான ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் ஆகியவற்றின் நீரை இந்தியா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் (IWT) வழிவகை செய்கிறது.


ஆனால், இந்த விதிமுறைகளை இந்தியா திறம்பட பயன்படுத்திக்கொள்ளவில்லை. தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் எப்போதும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டங்களைத் தாமதப்படுத்துவதும், அவற்றின் செலவை அதிகரிப்பதுமே பாகிஸ்தானின் முதன்மையான நோக்கமாக இருந்துள்ளது.


கடந்த ஆண்டு எடுத்த தனது முடிவினால் ஏற்படக்கூடிய எதிர்பாராத சட்டரீதியான  பின்விளைவுகளைச் சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருகிறது. பஹல்காம் உடனடித் தூண்டுதலாக இருந்தபோதிலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அதேசமயம், இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்று வாதிடுவதற்கு இந்தியாவிடம் வேறு சில காரணங்களும் உள்ளன.


இந்தியாவின் கருத்தின்படி, கடந்த 65 ஆண்டுகளில் கள நிலவரம் கணிசமாக மாறியுள்ளது. எனவே, தற்போதுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் புதிய சூழலுக்குப் பொருந்தாத ஒன்றாக உள்ளது. இந்தியப் பகுதியில் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது, காலநிலை மாற்றம் நீர் இருப்பு மற்றும் நதி நீர் ஓட்டத்தில் புதிய நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கியுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் வளர்ச்சி மற்றும் எரிசக்தி தேவைகள் இப்போது முற்றிலும் மாறுபட்டுள்ளன. அதோடு, புதிய தொழில்நுட்பங்கள் இந்த ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளைத் தேவையற்றதாக ஆக்கியுள்ளன. இந்தியாவின் இந்தத் தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான வாதத்தைப் புதிய தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் வலுப்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைதியாகப் பணியாற்றி வருகிறது.



Original Link: Indus Waters Treaty: One year since Operation Sindoor, how India and Pakistan have approached deadlock.


Share:

தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதியை தமிழ்நாட்டின் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் ஏன் தடை விதித்தது? -அமால் ஷேக்

சேதுபதியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யவோ அல்லது வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்ய உத்தரவிடவோ போவதில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான இந்தப் பிரச்சினை முறையாகப் பரிசீலிக்கப்படும் வரை, தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதே  இடைக்கால உத்தரவின் நோக்கம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.  


திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி எண் 185-ல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக  சட்டமன்ற உறுப்பினர் R. சீனிவாச சேதுபதி, புதன்கிழமை நடைபெறவிருந்த தமிழ்நாட்டின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை   உச்சநீதிமன்றத்தை நாடினார். மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த விவகாரத்தை  தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்களிடம் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு (floor test) முன்பு, புதன்கிழமையன்று இந்த வழக்கை அவசரமாகப் பட்டியலிட ஒப்புக்கொண்டார்.



நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் N. செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, "மறு உத்தரவு வரும் வரை, தமிழக சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லாத் தீர்மானம்,   அல்லது வேறு எந்த வாக்கெடுப்பு நடவடிக்கை உட்பட, எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வாக்களிப்பதற்கோ அல்லது வேறுவிதமாகப் பங்கேற்பதற்கோ" சேதுபதிக்குத் தடை விதித்திருந்தது.


தேர்தல் தொடர்பான சர்ச்சைகள், தேர்தல் மனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டை, ‘சர்ச்சைக்குரிய விவகாரம் என்பது   தேர்தலின் செல்லுபடித்தன்மை பற்றியது மட்டுமல்லாமல், ஒரு அரசாங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய தேர்தல் ஆணையைம்  நடவடிக்கையாகப் பயன்படுத்துவது பற்றியதாகவும் இருக்கும்போது,  நீதிமன்றங்கள் அமைதியாக இருக்க முடியாது’ என்ற கோட்பாடாக மாற்றியமைத்துவிட முடியாது என்று நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


சர்ச்சைக்கான காரணம் என்ன


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 185-வது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரான சேதுபதி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் K.R. பெரியகருப்பனைவிட  ஒரே ஒரு வாக்கு அதிகம் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.


இரண்டு அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் 18-மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (electronic voting machine (EVM)) வாக்குகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். மனுவின்படி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எண் 185-க்குச் சொந்தமான தபால் வாக்குச்சீட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே பெயர் இருந்ததால், அந்த வாக்குச்சீட்டு தவறான தேர்தல் அதிகாரியைச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரி, அதைச் சரியான தொகுதிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, அந்த வாக்குச்சீட்டை நிராகரித்துள்ளார்.


தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின்கீழ், தவறாக அனுப்பப்பட்ட தபால் வாக்கை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றுவதற்கு சட்டப்பூர்வமான வழிமுறை எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டது. விதி 54A(2)-ன்கீழ் உள்ள நேரத்திற்குப் பிறகு பெறப்பட்ட வாக்குகளை மட்டுமே இந்த விதிகள் கையாளுகின்றன. ஒரு தபால் வாக்கை ஒரு தேர்தல் அதிகாரியிடமிருந்து மற்றொரு தேர்தல் அதிகாரிக்கு மாற்றுவதற்கு வழிவகை செய்யும் எந்த விதியும் இல்லை.


சென்னை உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது


சேதுபதியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யவோ அல்லது மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடவோ இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இந்தச் சிக்கல் முறையாக ஆராயப்படும் வரை, தேர்தல் செயல்முறையின் நேர்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே தனது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.


ஒரு வாக்கு வித்தியாசம், கூறப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முரண்பாடு மற்றும் சர்ச்சைக்குரிய தபால் வாக்குச்சீட்டு ஆகிய மூன்று காரணிகளை நீதிமன்றம் முக்கியமானவையாகக் கண்டறிந்தது.


ஒரு வாக்கால் தீர்மானிக்கப்படும் தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல; அது முடிவைத் தீர்மானிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்று நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.


தபால் வாக்குகள் கையாளப்பட்ட விதத்தை நீதிமன்றம் விமர்சித்தது. ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு தபால் வாக்குகள் தவறுதலாக அனுப்பப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, தேர்தல் கட்டமைப்பில் ஒரு இடைவெளி நிலவுவதை அதிகாரப்பூர்வ பிரதிவாதிகளின் நிலைப்பாடே வெளிப்படுத்துகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


மேலும், நீதிமன்றம் தேர்தல் அதிகாரியை நேரடியாக விமர்சித்தது. வாக்குச்சீட்டு எண் 50-க்கு உரியதல்ல என்பதை அவர் கவனித்தவுடன், "தேர்தல் கட்டமைப்பில்  உள்ள  கோட்பாட்டிற்கு ஏற்ப, அந்த அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச செயல், அந்த வாக்குச்சீட்டை நிராகரிப்பதற்குப் பதிலாக, உடனடியாகத் திருத்த நடவடிக்கைகளை எடுத்து, அதை மீட்டெடுத்து, எண் 185-திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தகுதிவாய்ந்த தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பதே ஆகும்.


தேர்தல் அதிகாரிகள் என்பவர்கள், படிவங்களையும் நடைமுறைகளையும் செயலற்ற முறையில் பாதுகாப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் ஒரு குடிமகனால் அளிக்கப்படும் ஒவ்வொரு செல்லுபடியான வாக்கும் அதன் சட்டப்பூர்வமான இலக்கைச் சென்றடைவதை உறுதிசெய்யக் கடமைப்பட்ட அரசியலமைப்புப் பணியாளர்கள் ஆவர்" என்று நீதிபதி அமர்வு கூறியது.


பிரிவு 329(b)-ஐ நீதிமன்றம் எவ்வாறு கையாண்டது


இந்த வழக்கின் முக்கிய அம்சம் அரசியலமைப்பின் பிரிவு-329(b) ஆகும். இதன்படி, தேர்தல் தொடர்பான புகார்களை 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் முறையான 'தேர்தல் மனு' தாக்கல் செய்வதன் மூலமாக மட்டுமே அணுக முடியும். மற்றபடி நீதிமன்றங்கள் இதில் தலையிடவோ அல்லது வழக்குகளை விசாரிக்கவோ முடியாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக, அரசியல் சாசனப் பிரிவு 226-ன்கீழ் உள்ள பேராணை (Writ) அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை.


சென்னை உயர் நீதிமன்றம் இந்த வரம்பை ஏற்றுக்கொண்டது. சட்டத்தின் 80 மற்றும் 100-வது பிரிவுகளின்கீழ் தேர்தல் மனு தாக்கல் செய்வதன் மூலம் மட்டுமே பெரியகருப்பனுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று சேதுபதி வாதிட்டார்.


இருப்பினும், உயர்நீதிமன்றம், 2000-ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் vs  அசோக் குமார் (Election Commission of India v. Ashok Kumar (2000)) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியது. அந்தத் தீர்ப்பின்படி, தேர்தல் நடைமுறையை பாதிக்கும் தடைகளை நீக்கவோ அல்லது ஆதாரங்களைப் பாதுகாக்கவோ தேவைப்படும்பட்சத்தில், நீதிமன்றங்கள் தலையிடலாம் என்ற ஒரு விதிவிலக்கை நீதிமன்றம் அங்கீகரித்தது.


அந்த வாதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாக்கல் செய்யப்பட்ட மனுவானது தேர்தல் முடிவையே சவால் செய்யும் ஒரு வழக்கமான மனு அல்ல என்றும், மாறாக, தேர்தல் ஆவணங்களைப் பாதுகாப்பது மற்றும் தவறாக அனுப்பப்பட்ட தபால் வாக்குகள் தொடர்பான நடைமுறை வெற்றிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு "அசாதாரணமான உண்மைச் சூழ்நிலையிலிருந்து" (extraordinary factual situation) எழும் ஒரு கோரிக்கை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது..


தேர்தல் தொடர்பான விசாரணை தொடங்கும் முன்பே, அதற்கு அடிப்படையான தேர்தல் ஆவணங்கள் அழிந்துவிட்டால், தேர்தல் மனுவின் மூலம் கிடைக்கும் தீர்வே பயனற்றதாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியது.


மக்களாட்சியானது வாக்குச்சீட்டின் வாயிலாகவே சுவாசிக்கிறது. தேர்தல்கள் தொடர்பான விவகாரங்களில், இந்திய அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தும்போது, ​​நீதிமன்றமானது அரசியலமைப்பு  விதிகள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படக் கடமைப்பட்டுள்ளது. இடைக்காலப் பாதுகாப்பு என்ற பெயரில், தேர்தல் மனுவுக்காக ஒதுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட எல்லைக்குள் நீதிமன்றம் நுழைய முடியாது. அதே நேரத்தில், காலப்போக்கில் உண்மை மறைந்துவிடக்கூடாது என்பதற்காக, முக்கியமான தேர்தல் ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு குறுகிய மற்றும் விதிவிலக்கான கோரிக்கை வைக்கப்படும்போது, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாக முடங்கிப் போய்விட முடியாது.


நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன் நிலைமையை மாற்றுகிறது?


முன்மொழியப்பட்ட அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, சாதாரணமாக இருந்திருக்க வேண்டிய ஒரு தேர்தல் சர்ச்சையை முக்கியமான ஒன்றாக மாற்றிவிட்டது. வழக்கமாக, தேர்தல் தொடர்பான மனுக்கள் முடிவுக்கு வர மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகும். ஆனால், உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய காரணத்தை முன்வைத்தது: ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் சேதுபதியின் வாக்கு தீர்மானமிக்கதாக இருந்து, அதன் பிறகு அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அரசியல் விளைவுகளை நடைமுறையில் சரிசெய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.


ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட தேர்தல் முடிவில் உள்ள கடுமையான தேர்தல் முறைகேடுகள் குறித்த முதற்கட்ட ஆய்வு நிலுவையில் இருக்கும் நிலையில், அவையின் அதிகாரச் சமநிலையை மாற்றக்கூடிய ஒரு நடவடிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை மட்டுமே நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்று நீதிமன்றம் கூறியது. சேதுபதி பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, அவரது வாக்கு தீர்க்கமானதாக அமைந்தால், மனுதாரருக்கும் தேர்தல் செயல்முறையின் தூய்மைக்கும் ஏற்பட்ட பாதிப்பை    சரிசெய்ய இயலாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 


எனவே, ஒரு தேர்தலின் முடிவை எதிர்ப்பதற்கும், அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் விவகாரங்களில் சர்ச்சைக்குரிய அந்த தேர்தல் வெற்றியை உடனடியாகப் பயன்படுத்துவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதோடு, நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை, சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் அவர் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.


Original Link: Why Madras HC barred TVK MLA Seenivasa Sethupathi from Tamil Nadu Assembly floor test.


Share:

ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை அறிவித்துள்ளது. -குஷ்பூ குமாரி

ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை அறிவித்துள்ளது. இந்தச் சட்டங்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்கியவை?


தற்போதைய செய்தி?


ஒன்றிய அரசு இறுதியாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை, 2026-ஆம் ஆண்டு மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பல அரசாணைகள் வாயிலாக அறிவித்துள்ளது. ஊதியச் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் ஆகிய இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும், முந்தைய 29 மத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. தொழிலாளர் சட்டம் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்தத் தொழிலாளர் சட்ட வீதிகளுக்கு ஏற்ப விதிகளை இறுதி செய்ய வேண்டும். இந்தச் சட்ட விதிகள், முதலாளிகளுக்கான ஒழுங்குமுறை மற்றும் விதிமுறை இணக்கத் தேவைகளை எளிதாக்குவதையும், தொழிலாளர்களுக்கான ஊதியக் கட்டமைப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்புகளில் சீரான தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


2. ஊதியச் சட்டம் (Code on Wages): அறிவிக்கப்பட்ட இறுதி விதிகளில், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான அளவுகோல்களை, ‘ஊதியக் குறியீடு (மத்திய) விதிகள், 2025’-ன் இறுதி வடிவத்திலிருந்து ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இந்த அளவுகோல்கள் “ஒன்றிய அரசால் சிறப்பு அல்லது பொது ஆணை மூலம் தனியாகக் குறிப்பிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை ஊதியம்: புதிய ஊதிய விதிகளின்படி, “குறைந்தபட்ச வாழ்க்கைத்தரம், உடை, வீட்டுவசதி மற்றும் ஒன்றிய அரசால் அவ்வப்போது பொருத்தமானதாகக் கருதப்படும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் ஒரு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அடிப்படை ஊதியம் (floor wage) என்பது ஒரு குறைந்தபட்ச வரம்பாகச் செயல்படும். இந்த வரம்பிற்குக் கீழே மாநிலங்கள் தங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க இயலாது. நாட்டின் பல்வேறு தொழில் மையங்களில்  கடந்த சில ஆண்டு  காலமாகத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விதிமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு சாதாரண வேலை நாள் என்பது எட்டு மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற முறைகளில் (மாதாந்திர அல்லது வாராந்திர ஊதியம்) பணியாற்றுபவர்களுக்கு, அவர்களின் வாராந்திர மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாத வகையில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்படும். இது தவிர, ஊழியர்களுக்கான ஓய்வு இடைவேளை நேரங்கள் 'தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020'-ன்கீழ் தனியாக நிர்ணயிக்கப்படும்.









அம்சம்

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு முன்

தொழிலாளர் சட்ட

சீர்திருத்தங்களுக்குப்  பின் 

வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல்

கட்டாய நியமனக் கடிதங்கள் இல்லை

அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள் வழங்குவது வெளிப்படைத்தன்மை, வேலைப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தலை உறுதி செய்கிறது.

சமூகப் பாதுகாப்பு காப்பீடு

வரையறுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு 

சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம்களில் பணி செய்யும் பணியாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பு கிடைக்கும்.

குறைந்தபட்ச ஊதியம்

பட்டியலிடப்பட்ட தொழில்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதியம்; தொழிலாளர்களின் பெரும் பிரிவினர் இதன்கீழ் வரவில்லை.

ஊதியச் சட்டம் குறைந்தபட்ச ஊதியம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியதுடன், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையையும் வழங்குகிறது.

தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு

பணி வழங்குபவர்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற சட்டவிதிகள்  ஏதுமில்லை.

பணி வழங்குபவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனையை வழங்க வேண்டும்.

சரியான நேரத்தில் ஊதியம்

சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாததற்கான காரணம்

பணி வழங்குபவர்கள் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிதி நிலைத்தன்மையை அளிக்கிறது. பணி அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த மன உறுதியை அதிகரிக்கிறது.

பெண்களின் பணியிடப் பங்கேற்பு

இரவு நேரப் பணிகளிலும் குறிப்பிட்ட சில தொழில்களிலும் பெண்களின் வேலைவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

அனுமதி மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பெண்கள் அனைத்து நிறுவனங்களிலும் இரவிலும் அனைத்து வகையான பணிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

இணக்கச் சுமை

பல்வேறு தொழிலாளர் சட்டங்களின்கீழ் பல பதிவுகள், உரிமங்கள் மற்றும் வருவாய் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒற்றைப் பதிவு, அகில இந்திய ஒற்றை உரிமம் மற்றும் ஒற்றை வருமான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.


3. சமூகப் பாதுகாப்புச் சட்டம்: ஒன்றிய அரசின் சமூகப் பாதுகாப்பு விதிகள், 2025-ன்கீழ், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமைப்புசாராத் தொழிலாளியும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பதிவை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


புதிய கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரும், அத்தகைய பணியாளரை ஒன்றிய அரசின் குறிப்பிட்ட இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அந்தத் தொழிலாளர்கள் பணியிலிருந்து விலகும் விவரங்களையும் அந்த இணையதளத்தில் அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.


கிக் பணியாளர்கள் (Gig workers)


சமூகப் பாதுகாப்புச் சட்டம் முதன்முறையாக கிக் பணியாளர்களை அங்கீகரித்தது. கிக் பணியாளர்கள் என்பவர்கள், வழக்கமான முதலாளி-பணியாளர் உறவுகளுக்கு வெளியே பணிபுரிந்து அல்லது ஒரு பணி ஏற்பாட்டில் பங்கேற்று, அதன் மூலம் வருமானம் ஈட்டும் "சுயதொழில் செய்பவர்கள்" (self-employed) என வரையறுக்கப்படுகிறார்கள்.


கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களுக்காக ஒரு தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியமும் அமைக்கப்படவுள்ளது. அதில் மக்களவை, மாநிலங்களவை, அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள், மாநிலங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.


4. தொழிலாளர் உறவுகள் சட்டம்: ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் உறவுகள் விதிகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழில் நிறுவனங்கள், சமமான முதலாளி-தொழிலாளர் பிரதிநிதித்துவம், அதிகபட்சம் 10 உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றுடன் ஒரு குறைதீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும்.


— 300 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்கள், தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு (ஆட்குறைப்பு/தற்காலிகப் பணிநீக்கம்) இனி அரசாங்க அனுமதி தேவையில்லை. இதற்கு முன்பு இந்த வரம்பு 100 பணியாளர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


— வேலைநிறுத்தம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்போ அல்லது அறிவிப்பு கொடுத்த 14 நாட்களுக்குள்ளோ அறிவிப்பு கொடுக்காமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்று சட்ட விதி கூறுகிறது.


— வேலைநிறுத்தம் என்பதற்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்செயல் விடுப்பு (Casual Leave) எடுத்தால், அதுவும் வேலைநிறுத்தமாகவே கருதப்படும். திடீர் வேலைநிறுத்தங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


5. தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (Occupational Safety, Health and Working Conditions (OSH)) விதிமுறை: ஒன்றிய அரசின் 2026-ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிகளின்படி, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிமுறையின்கீழ் இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 6 மணிக்கு முன்பும் இரவுப் பணியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் அந்தப் பெண் ஊழியரிடமிருந்து முறையான எழுத்துப்பூர்வமான சம்மதத்தைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.


— பெண் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வெளிச்சம் நிறைந்த பணியிடத்தை வழங்குவதுடன், அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அலுவலகத்திற்கு வந்து செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகளையும் நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும்.


— ஒவ்வொரு ஊழியருக்கும் நிறுவனங்கள் கட்டாயமாகப் பணி நியமனக் கடிதத்தை வழங்க வேண்டும். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இலவச உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும், வெவ்வேறு பணி நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்குச் சமமான ஊதியம், வேலை மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.


— புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விவரங்களை, முதலாளிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.


— 500 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு தொழிற்சாலையும் அல்லது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட பிற வகை தொழிற்சாலைகளும், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும்.


பல்வேறு வகையான ஊதியங்கள்


1. அடிப்படை ஊதியம் என்பது, ஒரு முதலாளி சட்டப்படி ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய மிகக்  குறைவான தொகையாகும். ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைவு விதிகளில், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான முந்தைய அளவுகோல்கள் சேர்க்கப்பட்டிருந்தன, அவை இதனுடன் இணைக்கப்பட்டிருந்தன.

(i) ஒரு நபருக்கு ஒரு நாளைக்குச் நிகர அளவில் 2,700 கலோரிகள் உணவு கிடைக்க வேண்டும்.


(ii) தொழிலாளி, துணவி/துணைவர் மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு சாதாரண தொழிலாளர் குடும்பத்திற்கு, ஒரு ஆண்டிற்கு 66 மீட்டர் துணி வழங்கப்பட வேண்டும்.


(iii) உணவு மற்றும் உடைக்காகச் செய்யப்படும் செலவில் 10% தொகையை வீட்டு வாடகையாகக் கொள்ள வேண்டும். இது தவிர, எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர செலவுகளைக் குறைந்தபட்ச ஊதியத்தில் 20%-ஆகக் கருத வேண்டும்.


(iv) குழந்தைகளின் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் எதிர்பாராத அவசரச் செலவுகளுக்காக, குறைந்தபட்ச ஊதியத்தில் 25% தொகையை ஒதுக்க வேண்டும்.


இந்தச் சூத்திரம், 1991-ஆம் ஆண்டின் ரெப்டகோஸ் பிரெட் (Reptakos Brett) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புக்கும், 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற 15-வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் (Indian Labour Conference (ILC)) பரிந்துரைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. 


2. வாழ்வாதார ஊதியம்: ஒரு தொழிலாளி தனது அடிப்படைத் தேவைகளான இருப்பிடம், உடை, உணவு மற்றும் போக்குவரத்து போன்றவற்றை நிறைவு செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியமே இதுவாகும். கல்வி, மருத்துவம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது அவர்களுக்கு வழிவகை செய்கிறது. இது பொதுவாக அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக இருக்கும்.


3. நியாயமான ஊதியம்: தொழில்துறையின் லாபம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, முதலாளி மற்றும் தொழிலாளி ஆகிய இருவருக்கும் நியாயமாக இருக்கும் ஊதியமே இதுவாகும். பொதுவாக, இது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மற்றும் வாழ்வாதார ஊதியத்திற்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும்.


Original Link: Centre notifies rules for all 4 labour codes.


Share:

விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (ஊரகம்) இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? - பிரியா குமாரி சுக்லா

தற்போதைய நிகழ்வு என்ன? 


விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம், (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) எனும் இத்திட்டம், கிராமப்புறக் குடும்பங்களுக்கான வேலை நாட்களை 125-ஆக உயர்த்தும். மேலும், இத்திட்டத்திற்கான செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.


முக்கிய அம்சங்கள் :


• விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB—G RAM G) சட்டம் 2025 : 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்-2005'-ஐ (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ரத்து செய்துவிட்டு, ஒரு புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இச்சட்டம், ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.





• மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. இதன் மூலம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 'நூறு நாள் வேலைத் திட்டம்' ஜூலை மாதம் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.


• விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB-G RAM G) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பிரிவு 22-ன்கீழ் உள்ள நிதிப்பகிர்வு முறை, பிரிவு 4-ன் துணைப்பிரிவு 5-ன்கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு முறை, மற்றும் மேலும், பிரிவு 6-ன்கீழ், தீவிர விவசாயம் மும்முரமாக நடைபெறும் காலங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை நிறுத்தி வைப்பது (பிரிவு 6) ஆகியவற்றை எதிர்க்கின்றனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்களுக்கு, இந்த அம்சங்கள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்கின்றனர். 


உங்களுக்குத் தெரியுமா?


• கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB-G RAM G) சட்டம் 2025'-ஐ இயற்றியது. இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒரு நிதியாண்டில் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதாகும். இதில் உடலுழைப்பு சார்ந்த பணிகளைச் செய்ய முன்வரும் அக்குடும்பத்தின் பெரியவர்களுக்கு வேலை வழங்கப்படும். 'வளமான மற்றும் மீள்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்க, வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


• ஊதியச் செலவு முழுவதையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்-2005 திட்டத்தைப் போலன்றி, விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB-G RAM G) என்பது ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வு விகிதம் 60:40-ஆகவும், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களுக்கு 90:10-ஆகவும், சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களுக்கு 100-சதவீத ஒன்றிய அரசின் பங்காகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட (MGNREGA) திட்டத்திலிருந்து மாறுபட்டு, இந்த கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியளிப்பதில் மாநிலங்களின் பங்கை அதிகரிக்குமாறு விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் (கிராமப்புறம்) இயக்கம் (VB—G RAM G) சட்டம் முன்மொழிகிறது. அச்சட்டத்தின் பிரிவு 22(1)-ன்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வு முறை, 11 குறிப்பிட்ட மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் 60:40 என்ற விகிதத்திலும் இருக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட (MGNREGA) திட்டத்தின்கீழ், ஊதியச் செலவு முழுவதையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்டதுடன், இந்தத் திட்டத்திற்கான பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான தொகையில் 75 சதவீதத்தையும் ஒன்றிய அரசே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Original Link: How Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) is different from Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 2005?


Share:

குழந்தைப் பருவ வளர்ச்சியானது, மனித மூலதன உருவாக்கத்தை எவ்வாறு வடிவமைக்கிறது? — அர்ச்சனா சிங் மற்றும் புஷ்பேந்திர சிங்

சிறு வயதிலேயே ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் கற்றல் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள், ஒரு குழந்தையின் பள்ளிப் படிப்பிற்கான தயார் நிலை மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால உற்பத்தித் திறனையும் தீர்மானிக்கின்றன. POSHAN Abhiyaan போன்ற திட்டங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கி, ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் மனித மூலதன மேம்பாட்டையும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்ய முயல்கின்றன.


தெலங்கானாவின் கிராமப்புறத்தில் உள்ள ஒரு சிறிய அங்கன்வாடி மையத்தில், நான்கு வயது சிறுமி வெறுங்காலுடன், தலைமுடிக்கு எண்ணெய் பூசி, நிறம் மங்கிய ஆனால் சுத்தமான உடையுடன், ஒரு கிண்ணம் தண்ணீரில் ஒரு சிறிய குவளையை முக்கி அந்த சிறுமி எடுக்கிறாள். அந்தக் கிண்ணத்தில் ஒரு உலர்ந்த துணி திணிக்கப்பட்டிருந்தது. அந்த சிறுமி அதை வெளியே எடுக்கும்போது, அந்தத் துணி உலர்ந்தே இருக்கிறது. அந்த சிறுமி நிமிர்ந்து பார்த்து, தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல, ‘இது மாயாஜாலம் அல்ல... இது காற்று’ என்று கூறிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்கிறாள்.


அந்தக் குறிப்பிட்ட தருணத்தில், அந்த சிறுமி மனப்பாடம் செய்யவில்லை. அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். இப்போது, அந்த சிறுமிக்கு அந்தத் தருணம் கிடைக்கவே இல்லை என்று கற்பனை செய்து பாருங்கள். யாரும் அந்த சிறுமியிடம் கேள்விகள் கேட்கவில்லை. எப்படிப் பதிலளிப்பது என்று யாரும் அவளுக்கு சொல்லிகொடுக்கவில்லை. யாரும் அந்த சிறுமியின் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. அந்த சிறுமி வார்த்தைகளுக்குப் பதிலாக மௌனத்தைச் சுமந்துகொண்டு ஒன்றாம் வகுப்புக்குள் நுழைகிறாள். மூன்றாம் வகுப்பிலேயே, அந்த கல்வி நிறுவனம் அவளை 'படிக்கத் தெரியாத' குழந்தை என்று முத்திரை குத்துகிறது.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, எழுத்துக்கள் இன்னும் அர்த்தம் தர மறுக்கும்போது, அந்த கல்வி நிறுவனம் அவளை ஒரு தோல்வியாளர் என்று அழைக்கிறது. ஆனால் அவள் தோல்வியடையவில்லை. உண்மையான தோல்வி பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது. அவளுடைய கற்றலுக்கான அடித்தளத்தை அமைக்க யாரும் உதவாதபோது அது நிகழ்ந்தது. அங்கு கற்றல் என்பதே தொடங்கவில்லை. ஆனால், நிலைமை கைமீறிப் போகும் வரை இந்த கல்வி முறை அதைக் கவனிக்கவே இல்லை.


2024-ம் ஆண்டின் வருடாந்திர கல்வி நிலை அறிக்கையில் (Annual Status of Education Report (ASER)) இது தெளிவாகிறது. அந்த அறிக்கையின்படி, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 76 சதவீதத்தினரும், 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 55.2 சதவீதத்தினரும், 8-ஆம் வகுப்பு மாணவர்களில் 32.5 சதவீதத்தினரும், 2-ஆம் வகுப்புக்குரிய பாடப்புத்தகங்களைக்கூட வாசிக்கத் தெரியாத நிலையில் உள்ளனர்.



ஆரம்பகால குழந்தை வளர்ச்சியில் முதலீடு செய்தல்


கடந்த இருபதாண்டுகளாக, வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER) அதே தீர்வுகளையே அளித்து வருகிறது. இந்தியாவின் 5-ம் வகுப்பு குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் 2-ம் வகுப்பு பாடத்தைப் படிக்க முடியவில்லை. மோசமான கற்றலுக்கான இந்தியாவின் பதில் பெரும்பாலும் பள்ளிகள், ஆசிரியர்கள், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடுகள் மீது கவனம் செலுத்துகிறது. ஆனால், இந்த அணுகுமுறை, குழந்தைகள் அனைவரும் அடிப்படைத் தயார்நிலையுடன் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கருதுகிறது. ஆனால் பல குழந்தைகள் அவ்வாறு வருவதில்லை.

குழந்தைகள் மிகவும் மாறுபட்ட ஆரம்பகால அனுபவங்களுடன் வளர்கிறார்கள். சில குழந்தைகளுக்கு மொழி, விளையாட்டு மற்றும் பராமரிப்புக்கான அணுகல் உள்ளது. மற்றவர்கள் மோசமான ஊட்டச்சத்து, நோய் மற்றும் குறைந்த அளவிலான தொடர்புகளை எதிர்கொள்கின்றனர். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஆரம்ப ஆண்டுகள் கடந்த பிறகுதான் அவர்கள் பள்ளியில் சேர்கிறார்கள். இந்த ஆரம்பகால அனுபவ மாற்றங்கள், பள்ளியின் முதல் நாளிலிருந்தே கற்றல் இடைவெளியாக உருவெடுக்கின்றன.


பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், மனித மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் நிபுணருமான ஜேம்ஸ் ஹெக்மேன், குழந்தைப் பருவ வளர்ச்சியில் மிக உயர்ந்த பலன்கள், முடிந்தவரை சீக்கிரமாக முதலீடு செய்வதன் மூலமே கிடைக்கும் என்று வாதிட்டார். ஆறு வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை மொழித்திறன், ஆர்வம் மற்றும் ஒருமித்த கவனம் செலுத்தும் திறனை ஒரு பெரியவரைவிட மிக வேகமாக வளர்த்துக்கொள்கிறது. இந்த அடிப்படை வசதிகளை அவர்களுக்கு மறுப்பது என்பது, அடித்தளம் அமைக்காமல் ஒரு வீட்டைக் கட்டச் சொல்வதற்குச் சமம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 


ஆனால், அமர்த்தியா சென் இதனை வெறும் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கருதினார். ஒரு மனிதன் சுதந்திரத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்குத் தேவையான அவனது உள்ளார்ந்தத் திறன்களை மேம்படுத்துவதே வளர்ச்சியின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்று அமர்த்தியா சென் தனது 'திறன் அணுகுமுறை' மூலம் வாதிட்டார். இந்த அணுகுமுறைதான் ஐக்கிய நாடுகளின் 'மனித மேம்பாடு' என்ற கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது.


மேகாலயாவின் குழந்தைப்பருவ வளர்ச்சி மாதிரி


இந்த விரிவான சூழலில், மேகாலயாவின் குழந்தைப்பருவ வளர்ச்சி (Early Childhood Development (ECD)) மாதிரி ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. அதிக மகப்பேறு இறப்பு விகிதம், பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இரத்தசோகை, மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பில் உள்ள இடைவெளிகள் உள்ளிட்ட பல குறைபாடுகளை இந்த மாநிலம் எதிர்கொள்கிறது. வறுமை, தொலைதூரப் பகுதிகள், மற்றும் சுகாதார அமைப்பின் மீதான குறைந்த நம்பிக்கை ஆகியவற்றால் பெரும்பாலும் மேலும் தீவிரமடையும் இந்தப் பிரச்சினைகள், குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.


முறையான மருத்துவ வசதி இல்லாத ஒரு தொலைதூரக் கிராமத்தில், இரத்தசோகை உள்ள ஒரு தாய்க்குப் பிறக்கும் குழந்தை, ஆரம்பத்திலிருந்தே பல பின்னடைவுகளுடன் தன் வாழ்க்கையைத் தொடங்குகிறது. போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலும், ஆரம்பக்கால வளர்ச்சித் தாமதங்களைக் கண்டறியத் தவறும்போதும், அந்த இடைவெளி குறைவதில்லை; மாறாக, அது இன்னும் அதிகமாகிறது.


ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் தாமதங்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை மேகாலயா மாநிலம் உணர்ந்ததுடன் மற்றும் துறைகள் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பு சார்ந்த குழந்தைப்பருவ வளர்ச்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இது குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, ஒருங்கிணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்துகிறது. இதன் நோக்கம் மிக எளிமையானது: ஒரு குழந்தையின் வளர்ச்சியைத் துண்டு துண்டாகப் பார்க்க முடியாது. ஊட்டச்சத்து, கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய அனைத்தும் கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஒன்றிணைந்தே வழங்கப்பட வேண்டும்.


கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி


இந்தியாவில் குழந்தைப்பருவ வளர்ச்சிக்கான கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி தானாகவே நிகழ்ந்துவிடவில்லை. முறையான பள்ளிப்படிப்பு தொடங்குவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே அறிவாற்றல் வளர்ச்சி தொடங்குகிறது என்பதை அங்கீகரித்து, தேசியக் கல்விக் கொள்கை-2020 (National Education Policy(NEP)), குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வியை (Early Childhood Care and Education (ECCE)) அடித்தளக் கற்றலின் மையத்தில் வைக்கிறது.


போஷன் அபியான் (முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் விரிவான திட்டம்) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனெனில், அது ஊட்டச்சத்தை முதன்மையாக ஒரு நலன் சார்ந்த விஷயமாகக் கருதுவதிலிருந்து, மனிதவள மேம்பாடு, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) மற்றும் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்துள்ளது.


மிஷன் போஷன்-2.0 (மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0) பின்வரும் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் ஊட்டச்சத்து முயற்சிகளை வலுப்படுத்தியது. அவை,


  • அங்கன்வாடி சேவைகள் (Anganwadi Services)


  • பருவ வயதுப் பெண்களுக்கான திட்டம் (Scheme for Adolescent Girls)


  • போஷன் அபியான் (POSHAN Abhiyaan)


ஊட்டச்சத்து மற்றும் சுகாதார ஆதரவுடன், அங்கன்வாடி மையங்கள் குழந்தைப் பருவக் கல்வியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2013-ம் ஆண்டின் ஆரம்பகால குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early Childhood Care and Education (ECCE)) கொள்கையானது, "நாடு முழுவதும் ஆறு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை" வலியுறுத்துகிறது.


குழந்தைப்பருவ நலன், ஊட்டச்சத்து மற்றும் கல்வி


பல மாநிலங்கள் இந்தக் கொள்கையில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் 20,000 பால்வதிகா ஆசிரியர்களைப் (Balvatika educators) பணியமர்த்தி, ஆரம்பகால குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) ஆசிரியர்களை நியமிப்பதற்காக சமக்ரா சிக்ஷா நிதியிலிருந்து ரூ. 260 கோடியை முதலீடு செய்கிறது. ஒடிசா, 45,000-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிகளில் பாலர் வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், வகுப்பறைக்குச் செயல்பாடுகளுக்குத் திறம்பட ஆதரவளிப்பதை உறுதி செய்வதற்காக அதே எண்ணிக்கையிலான உதவியாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. ஹரியானாவும் 8,000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு பாலர் கல்வியை விரிவுபடுத்தியுள்ளது.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆரம்பக் காலக்கட்டத்தில், அடிப்படை படிப்பறிவு, எண்ணறிவு, தகவல் தொடர்பு மற்றும் சமூக-உணர்வுத் திறன்களை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். இருப்பினும், இதனைச் செயல்படுத்துவது எல்லா இடங்களிலும் சீரற்றதாகவே உள்ளது.


உதாரணமாக, தற்போதுள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், 12 லட்சம் மையங்களுக்குக் கூடுதலாக ஒரு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். பல குழந்தைகள் ஐந்து வயதை நெருங்கும் போது அங்கன்வாடிகளை விட்டு வெளியேறுகின்றனர். இதன் விளைவாக, 5 வயதுக் குழந்தைகளில் 37 சதவீதத்தினரும், 6 வயதுக் குழந்தைகளில் 11 சதவீதத்தினரும் மட்டுமே தொடர்ந்து அங்கன்வாடிகளில் பயின்று வருகின்றனர்.


இருப்பினும், ஆரம்பகால ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள் மனித வளத்தில் செய்யப்படும் முதலீடுகள் என்ற உண்மை தற்போது வலுப்பெற்று வருகிறது. இத்தகைய முதலீடுகள், குழந்தைகளின் பள்ளிக்குச் செல்வதற்கான தயார்நிலை மற்றும் கற்றல் விளைவுகளை மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால உற்பத்தித்திறனையும் தீர்மானிக்கின்றன.


நிர்வாகம் சார்ந்த ஒரு பிரச்சினையாக எழுத்தறிவு


ஒரு குழந்தை வாசிக்கக் கற்றுக்கொள்கிறதா என்பதை வகுப்பறையால் மட்டுமே தீர்மானிக்க முடியாது. அது, அக்குழந்தையின் தாய் மகப்பேறுக்கு முந்தைய கவனிப்பையும் ஊட்டச்சத்துப் பொருட்களையும் பெற்றாரா என்பதையும், உள்ளூர் அங்கன்வாடி சரியாகச் செயல்பட்டதா மற்றும் போதுமான பணியாளர்களைக் கொண்டிருந்ததா என்பதையும் சார்ந்துள்ளது. எனவே, அடிப்படை எழுத்தறிவு என்பது கல்விக்கு மட்டும் உரியதல்ல, அது நிர்வாகம் சார்ந்த ஒரு பிரச்சினையும் ஆகும்.





இது இந்தியாவின் மக்கள்தொகை எதிர்காலத்திற்கு முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. 2055-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய உழைக்கும் வயது மக்கள்தொகையை இந்தியா எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மக்கள்தொகைப் பலன் (Demographic dividend) என்பது தானாகக் கிடைத்துவிடுவதில்லை. அது மனிதத் திறன்களில் செய்யப்படும் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம் உருவாக்கப்படுகிறது.


வேலைவாய்ப்பில் நுழையும் லட்சக்கணக்கானோர் ஆரோக்கியமாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும், பொருளாதாரத்தில் பங்கேற்கும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் ஜோஷ் ஃபெல்மன் போன்ற பொருளாதார வல்லுநர்கள் வாதிடுவது போல, போதுமான மனித மூலதனம் இல்லாத ஒரு பெரிய மக்கள்தொகை, ஒரு நன்மையாக அமையாமல், வளர்ச்சிக்கு ஒரு பெரும் சுமையாகவே அமையும்.


இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களின் யுகத்தில் அடிப்படை எழுத்தறிவு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய குழந்தைகள் நெறிமுறைகள் (algorithms), தானியங்கி அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் முறையில் தொகுக்கப்பட்ட தகவல்களால் வழிநடத்தப்படும் ஒரு உலகில் வளர்ந்து வருகிறார்கள். புரிதலுடன் படிக்க முடியாத ஒரு குழந்தையால், இணையத் தகவல்களைத் திறம்பட மதிப்பிடவோ, சுகாதார ஆலோசனைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது தவறான தகவல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் சிரமப்படக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், செயற்கை நுண்ணறிவு புரிதல்


கற்றல் நெருக்கடி அனைத்துக் குழந்தைகளையும் சமமாகப் பாதிக்கிறது. இது குறிப்பாகத் தொலைதூர மாவட்டங்களில் உள்ள, ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகளை பெரிதும் பாதிக்கிறது. பள்ளியில் சேருவது ஒரு பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், வீட்டு வேலைகள் மற்றும் குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகளுக்கு இழுக்கப்படும் பெண் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு, அவர்கள் பருவ வயதை அடையும்போது பாதியிலேயே நிற்கும் விகிதம் அதிகமாகவே உள்ளது.

இத்தகைய கல்விப் புறக்கணிப்புகளைப் பிற்காலத் தலையீடுகளால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது. இது பெண் கல்வியைத் தக்கவைப்பதில் உள்ள ஒரு  முறைசார்ந்தத் தோல்வியைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மனிதவள உருவாக்கத்தில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். 


எஸ்தர் டுஃப்லோவின் ஆய்வுகள், தலைமுறை தலைமுறையாக நிகழும் மனித மேம்பாட்டிற்குப் பெண்களின் கல்வியே மிகவும் சக்திவாய்ந்த உந்துசக்தி என்பதை நிரூபிக்கிறது. கல்வி கற்ற பெண்கள், குறைந்த குழந்தை இறப்பு விகிதம், மேம்பட்ட குடும்ப ஊட்டச்சத்து மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான சிறந்த கற்றல் விளைவுகளுக்கும் பெரும் பங்காற்றுகின்றனர்.


அதேநேரத்தில், இருபத்தியோராம் நூற்றாண்டில் கல்வியறிவுக்கான தேவைகள் மாறி வருகின்றன. தகவல், வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரச் சேவைகளை பெறுவதற்கான ஒரு அடிப்படை உள்கட்டமைப்பாக செயற்கை நுண்ணறிவு உருவெடுத்து வருகிறது.


மனித மூலதன மேம்பாட்டிற்காக ஆரம்பக்கால குழந்தை வளர்ச்சியில் இந்தியாவின் முயற்சி.


புரிந்துணர்வோடு கூடிய வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறனுக்கான தேசிய முன்முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN)), மிஷன் சக்ஷம் அங்கன்வாடி (Mission Saksham Anganwadi), மேகாலயாவின் ஒருங்கிணைந்த ஆரம்பகால குழந்தை வளர்ச்சி கட்டமைப்பு (Meghalaya Integrated ECD Framework) மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early Childhood Care and Education (ECCE)) மீதான கவனம் போன்ற இந்தியாவின் சமீபத்திய முயற்சிகள், நாட்டின் கற்றல் மற்றும் மனித மூலதன மேம்பாட்டுப் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்களைக் கையாள்வதற்கான ஒரு உண்மையான முயற்சியாகத் திகழ்கின்றன.





ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் மனித மூலதன உருவாக்கம் தொடங்குகிறது என்பதை இந்த முயற்சிகள் அங்கீகரிக்கின்றன. குழந்தைகள் பெறும் ஊட்டச்சத்து, அவர்கள் பெறும் கவனிப்பு மற்றும் அவர்கள் வளரும் கற்றல் சூழல் ஆகியவற்றால் இது வடிவமைக்கப்படுகிறது. மனித மூலதனம் என்பது நிலையான வளர்ச்சிக்கும், வெறும் புள்ளிவிவர ரீதியிலான வளர்ச்சி என்பதைத் தாண்டி, நீடித்த மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக உள்ளது. அடிப்படைத் திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியும் அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியப் படியாக அமைகிறது.


அர்ச்சனா சிங், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தில் (IIPS) பாலினம் மற்றும் பொருளாதாரம் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். புஷ்பேந்திர சிங், மும்பையில் உள்ள சோமையா வித்யாவிகார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.


Original Link: How early childhood development shapes human capital formation?


Share: