கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், திறமையான நீர்ப்பாசன முறைகளைக் கையாளுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகளாவிய சிறந்த நடைமுறைகள் வலியுறுத்துகின்றன.
இந்தியாவின் நீர் நெருக்கடி பெரும்பாலும் தண்ணீர் பற்றாக்குறையாகவே விவரிக்கப்படுகிறது. இருப்பினும், அதன் வலுவான யதார்த்தம் மிகவும் சிக்கலானது. இந்தியா ஆண்டுதோறும் ஏறக்குறைய 4,000 பில்லியன் கன மீட்டர் மழையைப் பெறுகிறது. ஆனாலும், இந்த நீரில் ஒரு சிறுபகுதி மட்டுமே முறையாகச் சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு திறம்படப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வலுவான நிர்வாக ரீதியான சவாலைச் சுட்டிக்காட்டுகிறது. கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்ளும் கேள்வியானது, இந்தியாவிடம் எவ்வளவு நீர் உள்ளது என்பது மட்டுமல்ல, அதன் நீர் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? என்பது பற்றியும் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்கு 6-ன்கீழ் நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய உறுதிமொழிகளை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பதற்கும், நீர் மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக அவசியமாகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனை நிலைநிறுத்த இதுவே மிக முக்கியமான காரணியாக அமையும் என்கின்றனர்.
நீடிக்கும் முரண்பாடு
இந்தியாவின் நீர் நிலைமை வியக்கத்தக்க முறையில் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், இந்தியாவானது உலகின் மக்கள்தொகையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கிற்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. ஆனால், உலகளாவிய நன்னீர் வளங்களில் சுமார் 4% மட்டுமே இந்தியாவிற்கு கிடைக்கிறது. நிதி ஆயோக்கின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீட்டின்படி (Composite Water Management Index), சுமார் 60 கோடி மக்கள், அதிக அளவிலிருந்து மிகத் தீவிரமான நிலை வரையிலான நீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கணிசமான மழைப்பொழிவைப் பெறுகிறது. நீர்நிலை மதிப்பீடுகளின்படி, மொத்த நீர் இருப்பு அதிகமாக இருந்தாலும், சேமிப்புக் கட்டமைப்புகளில் உள்ள வரம்புகள், சீரற்ற மழைப்பொழிவுப் பரவல் மற்றும் சுற்றுச்சூழல் தடைகள் காரணமாக, சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் அளவிலான நீரை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.
தனிநபர் நீர் இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, நீர் வளங்கள் மீது அதிகரித்து வரும் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 5,000 கன மீட்டருக்கும் அதிகமான நீர் இருப்பு இருந்தது. இன்று சுமார் 1,400 கன மீட்டராகக் குறைந்துள்ளது. இந்த நீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான முதன்மையான வழியாக நிலத்தடி நீரை எடுப்பதற்கான வழியாக மாறியுள்ளது. தற்போது, உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் நிலத்தடி நீரில் ஏறக்குறைய கால் பகுதியை இந்தியாவே பயன்படுத்துகிறது. நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கும் இந்த நிலை, வேளாண்மை வளர்ச்சிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உறுதுணையாக இருந்துள்ளது. இருப்பினும், பல பிராந்தியங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது. இந்தச் சூழல்கள் ஒரு முக்கியமான முடிவை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இந்தியாவின் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வெறும் இயற்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது நீர் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சனையாகும்.
நீர் நிர்வாகம் குறித்து
இந்தியாவின் நீர் நிர்வாகம், ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான, பல நிறுவனக் கட்டமைப்பின் மூலம் செயல்படுகிறது. தேசிய அளவில், ஜல் சக்தி அமைச்சகம் நீர் வளங்கள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பு அதிகார அமைப்பாகச் செயல்படுகிறது. மேலும், மத்திய நீர் ஆணையம் முதன்மையாக மேற்பரப்பு நீர் திட்டமிடல், நதிப் படுகை மேம்பாடு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அதேநேரத்தில், நிலத்தடி நீர் வளங்களை ஆய்வு செய்து, அவற்றை நிலையான முறையில் மேலாண்மை செய்வதற்கான அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்களை மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board) வழங்குகிறது.
கூடுதலாக, நிதி ஆயோக், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீடு (Composite Water Management Index) போன்ற குறிகாட்டிகள் மூலம் மாநிலங்கள் முழுவதும் நீர் நிர்வாகச் செயல்திறனை மதிப்பீடு செய்கிறது. இந்த ஒப்பீட்டு முறை, நீர் துறையில் பொறுப்புணர்வையும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தையும் அறிமுகப்படுத்த உதவியுள்ளது. இருப்பினும், இந்தியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பு அமைப்பு, நீர் தொடர்பான பெரும்பாலான பொறுப்புகளை மாநிலங்களுக்கே வழங்குகிறது. நீர்ப்பாசனம், நீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் ஒழுங்குமுறை ஆகியவை முதன்மையாக மாநில அதிகார வரம்பிற்குள் வருகின்றன. இதன் விளைவாக, மாநில நீர்ப்பாசனத் துறைகள், நகர்ப்புற நீர் வாரியங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நீர் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த பல அடுக்கு அமைப்பு இந்தியாவின் கூட்டாட்சி வடிவமைப்பைப் பிரதிபலித்தாலும், பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புச் சிக்கல்களையும் உருவாக்குகிறது.
நிறுவன ரீதியான பிரிவினைகளைச் சமாளிக்க, ஒன்றிய அரசு, மத்திய நிதியுதவியை மாநில அளவிலான செயலாக்கத்துடன் ஒருங்கிணைக்கும் தேசியத் திட்டங்களை அதிகளவில் நம்பியுள்ளது. இது கிராமப்புற வீடுகளுக்குச் செயல்படும் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய முன்முயற்சிகளில் ஒன்றாகும். இந்தப் பணியின் பிரம்மாண்டமான அளவைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்களும் தங்களது இலக்கை முழுமையாக அடைவதற்கு ஏதுவாக, இத்திட்டம் தற்போது 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பங்கேற்பு அடிப்படையிலான நீர்நிலை மேலாண்மையை ஊக்குவிக்கும் அடல் புஜல் யோஜனா (Atal Bhujal Yojana) மூலம் நிலத்தடி நீர் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்த நிலத்தடி நீர் பயன்பாட்டை திட்டமிடவும் மற்றும் கண்காணிப்பை ஊக்குவிப்பதன் மூலம், நிலத்தடி நீர் ஒழுங்குமுறையில் உள்ள நீண்டகால இடைவெளியைச் சரிசெய்ய இத்திட்டம் முயல்கிறது. பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana), நுண் நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்களையும் (micro-irrigation technologies) மேம்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது. இந்தியாவின் நன்னீர் வளங்களில் பெரும்பகுதியை வேளாண் சாகுபடிக்குப் பயன்படுத்துவதால், நீர்ப்பாசனத் திறனை மேம்படுத்துவது அவசியமாகும்.
அடல் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தின் ((Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) மூலம், நகரங்களில் நீர் விநியோகக் கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் போன்ற வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், நதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 'நமாமி கங்கே' (Namami Gange) போன்ற திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்திட்டம் கங்கை நதிப் படுகையில் நீர் மாசைக் கட்டுப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலம் நதியின் தூய்மையையும் நீரோட்டத்தையும் உறுதி செய்கிறது.
சுழற்சிமுறை நீர் மேலாண்மைப் பொருளாதாரம்
இந்தியாவின் நீர் மேலாண்மை தற்போது மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான ஒரு அணுகுமுறையை நோக்கி நகர்ந்து வருகிறது. கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், திறமையான நீர்ப்பாசன முறைகளைக் கையாளுதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகளாவிய சிறந்த நடைமுறைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை அதிகரிப்பதன் மூலம் நன்னீர் ஆதாரங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதேநேரத்தில், விவசாயத்தில் சரியான பயிர் தேர்வு மற்றும் மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள் நீர்ப் பயன்பாட்டை மேம்படுத்தும். இந்தியாவின் வருங்கால நீர் இருப்பு என்பது பெய்யும் மழையை மட்டும் பொறுத்தது அல்ல, மாறாக நீர் எவ்வளவு பயனுள்ள முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்பதில்தான் உள்ளது. சிறந்த நிர்வாகம், அறிவியல் அறிவு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இந்தியா தனது நீர் அமைப்பை பற்றாக்குறையிலிருந்து நிலைத்தன்மையை நோக்கி மாற்ற முடியும்.
பிரியங்கா வத்ரேவு, நீர் வள மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைஆகியவற்றில் ஒரு சுதந்திரமான ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின்கீழ் (WICCI) இயங்கும் சூழலியல் மற்றும் பொருளாதார மீள்திறன் மன்றத்தின் தேசியத் தலைவராகவும் உள்ளார்.
Original Link: How India is governing its water resources?