மருத்துவக் கவனக்குறைவு தொடர்பான இழப்பீட்டு வழக்குகள் மருத்துவர் இறந்தவுடன் முடிந்துவிடாது: உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உணர்த்தும் செய்தி என்ன? -அமால் ஷேக்

 மருத்துவக் குறைபாடு அல்லது அலட்சியம் காரணமாக ஒரு மருத்துவர் மீது தொடரப்பட்ட வழக்குகள், அந்த மருத்துவர் இறந்துவிட்ட காரணத்தினாலேயே தானாகவே முடிவுக்கு வந்துவிடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் கோரும் நஷ்டஈடு தொகையை, மறைந்த மருத்துவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் அவரது சொத்துக்களின் மூலம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் இறந்துவிடுவதால் மட்டும் ஒரு மருத்துவ அலட்சியம் தொடர்பான வழக்கு தானாகவே முடிவுக்கு வந்துவிடாது. அந்த மருத்துவரின் சட்டப்பூர்வ வாரிசுகளை வழக்கில் ஒரு தரப்பினராகச் சேர்க்க முடியும். இருப்பினும், உயிரிழந்த மருத்துவரின் சொத்துக்கள் மூலம் ஈடுசெய்யக்கூடிய நிதிஇழப்பு தொடர்பான கோரிக்கைகளுக்காக மட்டுமே அவர்கள்மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் அடங்கிய அமர்வு மே மாதம் 4-ஆம் தேதியன்று ஒரு முக்கிய விளக்கத்தை அளித்தது. அதன்படி, ஒரு மருத்துவர் இறந்துவிட்டால், அவர் மீதான வலி, மன உளைச்சல் அல்லது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது போன்ற தனிப்பட்ட இழப்பீட்டு கோரிக்கைகள் அத்தோடு முடிவுக்கு வந்துவிடும்; ஆனால் நிதியிழப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அந்த மருத்துவரின் சட்டப்பூர்வ வாரிசுகளை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள முடியும் என்றும், அவர்களின் பொறுப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் அளவு என்பது நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள் மற்றும் ஆதாரங்களைப் பொறுத்தே அமையும் என்றும் அந்த அமர்வு கூறியுள்ளது.


வழக்கின் பின்னணித் தகவல்கள்


இந்த வழக்கு 1990-ஆம் ஆண்டு பீகாரில் நடந்த ஒரு கண் அறுவை சிகிச்சை தொடர்பானது. சுரேஷ் சந்திர ராய் என்பவரின் மனைவிக்கு வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டதால், அவர் பீகார் மாநிலம் முங்கரில் உள்ள டாக்டர் பி.பி. லால் என்பவரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்ற பல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றனர். அப்போது, வலது கண்ணின் பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடது கண்ணிற்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, 1994-ஆம் ஆண்டில் அவரது இடது கண்ணிற்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்கீழ் (Consumer Protection Act, 1986) தாக்கல் செய்யப்பட்ட ஒரு புகாரில், சிகிச்சைக்கான செலவுகள், கண்பார்வை இழப்பு, பயணச் செலவுகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்காக மொத்தம் 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது. இது தொடர்பாக 2003-ஆம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மருத்துவர் லால் அவர்களின் கவனக்குறைவே பாதிப்பிற்கு காரணம் எனத் தீர்மானித்து, புகார்தாரர்களுக்கு 2.6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இருப்பினும், பின்னாளில் பீகார் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (Bihar State Consumer Disputes Redressal Commission) இந்த உத்தரவைத் ரத்து செய்தது. கண்பார்வை இழப்பிற்கு குளுக்கோமா (Glaucoma) நோயே காரணம் என்றும், மருத்துவரின் கவனக்குறைவை நிரூபிக்கத் தேவையான மருத்துவ நிபுணர்களின் சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்றும் கூறி அந்த ஆணையம் இந்தத் தீர்ப்பை மாற்றியமைத்தது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Disputes Redressal Commission (NCDRC)) அமைப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த காலத்திலேயே, 2009-ஆம் ஆண்டில் டாக்டர் லால் காலமானார். அதைத்தொடர்ந்து அவருடைய மனைவியும் மகனும் இந்த வழக்கின் சட்டப்பூர்வ வாரிசுகளாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள், "மருத்துவ அலட்சியம் தொடர்பான புகார்கள் என்பது தனிநபர் சார்ந்த சட்டநடவடிக்கை என்பதால், சம்பந்தப்பட்ட நபர் இறந்தவுடன் அந்தப் புகாரும் முடிவுக்கு வந்துவிடும்; எனவே இந்த வழக்கைத் தங்களுக்கு எதிராகத் தொடர முடியாது என்று வாதிட்டனர். இவர்களது வாதத்தை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது.





சட்டம்


உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை ‘தனிநபர் சார்ந்த வழக்கு, அந்த நபரின் மரணத்துடன் இறந்துவிடும்’ என்ற பொருள்படும்படியான "actio personalis moritur cum persona" என்ற பொதுச்சட்டக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தது. இதன் பொருள், ஒரு தனிநபரின் வழக்குத் தொடரும் உரிமை அந்த நபரின் இறப்போடு முடிவுக்கு வந்துவிடும் என்பதாகும். பாரம்பரியமாக, இந்த விதிமுறை உடல் காயம் அல்லது தனிப்பட்ட பாதிப்புகள் தொடர்பான இழப்பீட்டுக் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட நபர் இறந்த பிறகு தொடரமுடியாது என்பதைக் குறிக்கிறது.


இந்தியச் சட்டம் எவ்வாறு மாறியது என்பதையும், பல்வேறு சட்டங்களின் மூலம் இந்தக் கோட்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் நீதிமன்றம் விளக்கியது. வாரிசுதாரர்கள் வழக்குச் சட்டம், 1855 (Legal Representatives Suits Act, 1855) என்பது, இறந்துபோன ஒரு நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பாகவோ அல்லது அவர்களுக்கு எதிராகவோ வழக்குத் தொடர அனுமதி அளித்தது. இருப்பினும், இந்த அனுமதி அந்த நபர் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு நடந்த செயல்களால் ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.


1855-ஆம் ஆண்டின் மரண விபத்துக்கள் சட்டம் (The Fatal Accidents Act), ஒருவரின் தவறான அல்லது சட்டவிரோதமான செயலால் மரணம் ஏற்படும்போது, அதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் உரிமையை உருவாக்கியது. பின்னர், இந்தச் சட்ட விதிகள் 1925-ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் (Indian Succession Act) பிரிவு 306-உடன் இணைக்கப்பட்டன. தற்போது நாம் விவாதிக்கும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவு இதுவே ஆகும்.


இந்திய வாரிசுரிமைச் சட்டப்பிரிவு 306-ன்படி (Section 306), ஒரு நபர் இறக்கும் போது அவர் சார்பாகவோ அல்லது அவருக்கு எதிராகவோ நிலுவையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் (வழக்குகளை) தொடரும் உரிமை, அந்த நபரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சொத்து நிர்வாகிகளுக்கே மாற்றப்படும். இருப்பினும், அவதூறு வழக்குகள், தாக்குதல் அல்லது மரணத்தை ஏற்படுத்தாத தனிப்பட்ட உடல் காயங்கள் தொடர்பான வழக்குகளுக்கு இந்த விதி பொருந்தாது; அதாவது இத்தகைய தனிப்பட்ட பாதிப்புகள் தொடர்பான வழக்குகள் அந்த நபரின் மரணத்துடன் முடிவுக்கு வந்துவிடும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (Civil Procedure Code) ஆணை 22-ஐ (Order XXII) ஆய்வு செய்தது. இது ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அதில் தொடர்புடைய நபர் இறந்துவிட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவரைச் சேர்ப்பது பற்றிய நடைமுறைகளைக் கூறுகிறது. குறிப்பாக, வழக்கின் ஒரே ஒரு பிரதிவாதி (எதிர்த்தரப்பினர்) இறந்த பின்பும், அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமை இருக்கும்போதும், விதி 4 (Rule 4) பொருந்தும். இத்தகைய சூழலில், இறந்துபோன பிரதிவாதியின் சட்டப்பூர்வ வாரிசுகளை அல்லது பிரதிநிதிகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த இறந்துபோன நபருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. 


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (Consumer Protection Act) பிரிவு 13(7)-ன்படி, ஒரு நுகர்வோர் வழக்கில் புகார்தாரர் அல்லது எதிர்மனுதாரர் இறந்துவிட்டால்,  உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் முதல் அட்டவணையில் உள்ள ஆணை 22-ன் விதிகள் (Order XXII) பொருந்தும். இந்த விதிகளை ஒன்றிணைத்து ஆராய்ந்த நீதிமன்றம், ஒரு நபர் இறந்தபிறகு வழக்கை மேற்கொண்டு நடத்த முடியுமா என்பது, அந்த வழக்கைத் தொடரும் உரிமை (Right to sue) சட்டப்படி நீடிக்கிறதா என்பதைப் பொறுத்தது என்று கூறியுள்ளது. ஒரு நபரின் தனிப்பட்ட கௌரவம் அல்லது தனிப்பட்ட பாதிப்பு சார்ந்த புகார்கள் அந்த நபரின் இறப்போடு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், நிதி இழப்பு அல்லது சொத்து சார்ந்த புகார்கள் இருந்தால், அந்த வழக்கினை இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு எதிராகத் தொடரலாம். இருப்பினும், வாரிசுகள் தங்களுக்குக் கிடைத்த சொத்து மதிப்பின் அளவிற்கு மட்டுமே அந்த இழப்பிற்குப் பொறுப்பாவார்கள்.


வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறை விதிகளை ஆணை-22 (Order XXII) விளக்குகிறது. ஆனால், அந்த நபர் இறந்த பிறகு அந்த வழக்கை மேற்கொண்டு தொடர சட்டப்படி முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதை வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு-306 என்ற அடிப்படைச் சட்டம் தீர்மானிக்கிறது.

2001-ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பு


உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்னதாக, பல்பீர் சிங் மகோல் vs தலைவர், சர் கங்கா ராம் மருத்துவமனை (Balbir Singh Makol vs Chairman, Sir Ganga Ram Hospital) என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பே முக்கிய வழிகாட்டுதலாக இருந்தது. அந்தத் தீர்ப்பின்படி, மருத்துவக் குறைபாடு அல்லது அலட்சியம் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்மீது தனிப்பட்ட முறையில் சுமத்தப்படுபவை.  எனவே, அந்த மருத்துவர் இறந்துவிட்டால், அவருக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு எதிராக அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது.


தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு மருத்துவர் இறந்துவிட்டால், அவருக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்கைத் தொடரவோ முடியாது. ஆனால், அந்த மருத்துவர் இறப்பதற்கு முன்பே அவருக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த வழக்கின் உரிமைகளைத் தொடர முடியும். அவதூறு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த முடிவை ஆணையம் எடுத்துள்ளது.


உச்சநீதிமன்ற அமர்வு இந்த வாதத்தை நிராகரித்தது. இந்தியச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல், நுகர்வோர் நீதிமன்றமான தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) பொதுவான சட்டக் கோட்பாட்டை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், தனிநபர் காயம் தொடர்பான உரிமைகோரல்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு பழைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) தவறாக முன்னுதாரணமாகக் கொண்டது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. உயிரிழந்த மருத்துவரின் சொத்துக்களில் இருந்து நிதிஇழப்பீடு கோரும் வழக்குகளைக்கூட, சட்டப்பிரிவு 306-ன்கீழ் முழுமையாகத் தடை செய்யப்பட்ட ஒன்றாகக் கருதியது தவறு என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.




உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


தனிப்பட்டரீதியிலான புகார்கள் அல்லது கோரிக்கைகள் ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்துவிடும் என்றும், ஆனால் அந்த நபரின் சொத்துக்களுக்கு நிதிஇழப்பு ஏற்படும் வகையிலான கோரிக்கைகள் இருந்தால், அவற்றை அந்த நபரின் வாரிசுகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் (Indian Succession Act) பிரிவு 306-ஐ விளக்கிய நீதிபதிகள் அமர்வு, "மரணம் விளைவிக்காத பிற தனிப்பட்ட காயங்கள்" தொடர்பான விதிவிலக்கை மிகவும் விரிவாகப் பொருள் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது. அதாவது, ஒரு நபர் இறந்த பிறகு அவரது தனிப்பட்ட காயம் தொடர்பான அனைத்து இழப்பீடு கோரிக்கைகளும் ரத்தாகிவிடும் என்று இதைக் கருதக்கூடாது. விதிவிலக்குகள் எப்போதுமே மிகத் துல்லியமாக விளக்கப்பட வேண்டும் என்றும், அவை சட்டத்தின் முதன்மை விதியை பலவீனப்படுத்தும் வகையில் அமையக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


இதைப் புரிந்து கொள்வதற்காக, தனிப்பட்ட உரிமைகளுக்கும் (Personal rights) சொத்து தொடர்பான உரிமைகளுக்கும் (Proprietary rights) இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியது. வலி, வேதனை அல்லது நற்பெயருக்கு ஏற்படும் இழப்பு தொடர்பான கோரிக்கைகள் தனிப்பட்ட தன்மையைக் கொண்டவை; எனவே ஒருவரது இறப்புடன் அவை முடிவுக்கு வந்துவிடுகின்றன. இத்தகைய உரிமைகளை மற்றொருவருக்கு மாற்ற முடியாது, இவை ஒரு நபரின் நல்வாழ்வோடு மட்டுமே தொடர்புடையவை. இருப்பினும், மருத்துவச் செலவுகள் அல்லது பண இழப்பு போன்ற ஒரு நபரின் சொத்து மதிப்பை பாதிக்கும் நிதி சார்ந்த இழப்பீடுகள், அந்த நபர் இறந்தபிறகும் தொடரும் என்று கூறப்படுகிறது. அத்தகைய கோரிக்கைகளை சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் அல்லது அவர்கள் பெற்ற சொத்துக்களின் வழியாகத் தொடர முடியும். இந்த உரிமைகள் மற்றவருக்கு மாற்றத்தக்கவை, பொருளாதார மதிப்புக் கொண்டவை மற்றும் ஒருவரின் செல்வத்தோடு தொடர்புடையவை ஆகும். தனிப்பட்ட உரிமைகள் ஒரு நபரின் மதிப்போடு தொடர்புடையவை என்றும், சொத்துரிமைகள் ஒரு நபரின் சொத்துக்களோடு தொடர்புடையவை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஒரு மக்கள் நலச்சட்டம் என்பதால் மட்டுமே, ஒருவரின் இறப்பிற்குப் பிறகும் அனைத்து வழக்குகளையும் தொடர முடியும் என்ற வாதத்தை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 13-7 (Section 13(7)), உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (Civil Procedure Code) ஆணை 22-ஐப் பின்பற்றினாலும், சம்பந்தப்பட்ட ஒருவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு வழக்கினைத் தொடர முடியுமா என்பது வாரிசுரிமைச் சட்டத்தின் (Succession Act) பிரிவு 306-ன்கீழ் உள்ள உரிமைச் சட்டத்தைப் பொறுத்தே அமையும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், ஒரு வழக்கை முன்னெடுத்துச் செல்லும் உரிமை அல்லது அதற்கான அடிப்படைத் தாக்கம் என்பது வெறும் நடைமுறை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது சட்டப்பூர்வமான உரிமைகள் சார்ந்தது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


இறந்துபோன ஒருவருக்கு எதிராக ஏற்கனவே ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தொகையை அவரது சொத்துக்களில் இருந்து வசூலிக்க முடியும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏனென்றால், அந்த வழக்கின் அடிப்படைத் தேவை அந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. ஆனால் டாக்டர் லால் அவர்களின் வழக்கில், அவர் இறந்த சமயத்தில் அவருக்கு எதிராக எந்தத் தீர்ப்பும் அமலில் இல்லை. ஏனெனில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை மாநில ஆணையம் ஏற்கனவே ரத்து செய்திருந்தது.


இந்த வழக்கு இப்போது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) அமைப்புக்கு மீண்டும் மாற்றப்படும். அங்கு, முதலில் டாக்டர் லால் அவர்கள் பணியில் அலட்சியமாக இருந்தாரா என்பதை அந்த ஆணையம் தீர்மானிக்க வேண்டும். அவர் அலட்சியமாக இருந்தது உறுதிசெய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர் கோரும் இழப்பீட்டுத் தொகையில் எந்தப் பகுதியை டாக்டர் லால் விட்டுச் சென்ற சொத்துக்களில் இருந்து வசூலிக்க முடியும் என்பதையும் ஆணையம் முடிவு செய்யும்.


எதிர்வினைகள்


‘Legalexcel Attorneys’ நிறுவனத்தின் நிறுவனரான பேராசிரியர் டாக்டர் எஸ்.வி. ஜோகா ராவ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பானது ஒரு மருத்துவரின் தனிப்பட்ட பொறுப்பையும், அவர் இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற சொத்துக்களின் மீதான இழப்பீட்டு கோரிக்கைகளையும் தனித்தனியாகப் பிரிக்க முயல்கிறது என்று தெரிவித்தார். ஒரு மருத்துவரின் மகன் அல்லது மகளை மருத்துவரீதியான கவனக்குறைவிற்குப் பொறுப்பானவர்களாகக் கருத முடியாது. ஆனால், மறைந்த மருத்துவரின் வாரிசுகளுக்குக் கிடைத்த சொத்துக்களில் இருந்து நிதிரீதியான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக  அவர் விளக்கமளித்துள்ளார்.


அதேசமயம், இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று பேராசிரியர் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு: வாரிசுதாரர்களுக்கு எந்தச் சொத்தும் கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருந்தால், பணப் பொறுப்பு (Liability) எவ்வாறு பிரித்தளிக்கப்படும்? அவர் தொடர்ந்து கூறுகையில், நுகர்வோர் தரப்பிலிருந்து பார்க்கும்போது இந்தத் தீர்ப்பு நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால், வாரிசுதாரர்களை நிதிரீதியான பொறுப்பை ஏற்கச் செய்வது சில நேரங்களில் அநீதியாகத் தெரியக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


டெல்லி மருத்துவக் குழுவின் (Delhi Medical Council (DMC)) முன்னாள் பதிவாளர் டாக்டர் கிரிஷ் தியாகி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பு ஏற்கனவே மருத்துவத் தொழில் மற்றும் சட்டரீதியான வழக்குகளால் அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். முதலில், நோயாளிகளின் உறவினர்களிடமிருந்து மருத்துவர்கள் உடல்ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அதன்பிறகு சட்டப் போராட்டங்கள் (வழக்குகள்) வருகின்றன.  இப்போது, ஒரு மருத்துவர் இறந்த பிறகும்கூட, அவரது குடும்பத்தினர் இழப்பீடு தொடர்பான வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார் .


நீண்டகால சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்த பயம், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தியாகி தெரிவித்தார். சட்டரீதியான சிக்கல்களைக் கையாளுவதற்குத் தேவையான சட்ட வல்லுநர்கள் குழு இருக்கும் பெரிய மருத்துவமனைகளுக்கு, இத்தகைய தீவிரமான வழக்குகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க நேரிடலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Original article : Medical negligence claims don’t die with the doctor: What SC’s latest ruling means for patients, families. -Amaal Sheikh

Share:

ஹன்டாவைரஸ் முதல் கோவிட்-19 வரை -ரோஷ்னி யாதவ்

 ஒரு சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட ஹன்டாவைரஸ் (Hantavirus) பாதிப்பு, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களை மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளது. ஹன்டாவைரஸ் மற்றும் நிபா (Nipah) முதல் எம்பாக்ஸ் (Mpox), எபோலா (Ebola), ஜிகா (Zika) மற்றும் கோவிட்-19 (COVID-19) வரை — இந்த நோய் பரவல்கள் ஏன் முக்கியமானவை? 


அர்ஜென்டினாவிலிருந்து ஸ்பெயினுக்கு ஒரு டச்சு (Dutch) சொகுசுக் கப்பலில் பயணம் செய்த குழுவினருக்கு, இந்த வார தொடக்கத்தில் உயிருக்கு ஆபத்தான ஹன்டாவைரஸ் (Hantavirus) தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த 147 பயணிகள் மற்றும் ஊழியர்களில், குறைந்தது ஏழு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் இரண்டு பேருக்கு ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேருக்குத் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) தகவல்படி, பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார், மற்ற மூன்று பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்தச் சூழலில், சமீபத்தில் செய்திகளில் அடிக்கடி கூறப்படும் ஹன்டாவைரஸ் (Hantavirus) மற்றும் பிற வைரஸ் நோய்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. தென்கொரியாவில் உள்ள ஹன்டான் (Hantan) நதியின் பெயரால் அழைக்கப்படும் ஹன்டாவைரஸ் (Hantavirus) என்பது எலிகள் மற்றும் பிற கொறித்துண்ணிகள் (Rodents) மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் குழுவாகும். இது மனிதர்களுக்குக் கடுமையான உடல்நலக் குறைபாட்டையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான எலிகள் அல்லது பிற கொறித்துண்ணிகள் நோய்வாய்ப்படுவதில்லை; அவை இந்த வைரஸைச் சுமந்து செல்லும் கடத்திகளாக மட்டுமே செயல்படுகின்றன.


2. மனிதர்கள் பொதுவாகப் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், மலம் அல்லது உமிழ்நீர் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும்போதோ, அல்லது அவை படிந்துள்ள அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடும்போதோ இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention (CDC)) கூற்றுப்படி, எலிகளின் கழிவுகள் கிடக்கும் இடத்தைக் கிளறும்போது காற்றில் பரவும் வைரஸ் துகள்களைச் சுவாசிப்பதன் மூலமாகவும் இந்தத் தொற்று ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. இந்த வைரஸ்கள் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவுவதாக அறியப்படவில்லை. இருப்பினும், அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளில் கண்டறியப்பட்ட 'ஆண்டீஸ்' (Andes strain) வகை வைரஸ் பாதிப்பில், மனிதர்களிடையே இந்தத் தொற்று பரவியது சில இடங்களில் பதிவாகியுள்ளது. தற்போது கப்பலில் இருப்பவர்களுக்கு இந்த 'ஆண்டீஸ் ஹன்டாவைரஸ்' (Andes hantavirus) தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.



— அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தகவல்படி, இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படுகின்றன. தீவிரமான பாதிப்பு ஏற்படும்போது, நோயாளிகளுக்குக் குழப்பமான மனநிலை, அதிகப்படியான தூக்கமின்மை அல்லது மயக்க நிலை, வலிப்பு மற்றும் மூளை வீக்கம் (Encephalitis) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கோமா நிலைக்கும் பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்பிற்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, இதற்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் (Antiviral medicines) எதுவும் இல்லை. எனவே, நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் மட்டுமே தற்போது வழங்கப்படுகின்றன.


2. எம்பாக்ஸ் (Mpox): முன்னதாக குரங்கம்மை என்று அழைக்கப்பட்ட எம்பாக்ஸ், எம்பாக்ஸ் வைரஸால் (Monkeypox virus (Mpox Virus)) ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பொதுவாக தானாகவே குணமாகக்கூடியது. இதன் பொதுவான அறிகுறிகளாகக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, உடல் சோர்வு, நிணநீர் சுரப்பிகள் வீக்கம் (Swollen lymph nodes) மற்றும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் அம்மை போன்ற கொப்புளங்கள் ஆகியவை காணப்படுகின்றன. இது பொதுவாகத் தானாகவே சரியாகக்கூடிய ஒரு நோய் என்றாலும், சில நேரங்களில், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


— உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, எம்பாக்ஸ் (Mpox) வைரஸில் 'Clade I' மற்றும் 'Clade II' என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. இந்த நோய் பரவலாக இருக்கும் பகுதிகளில், Clade II வகையைவிட ‘Clade I’ வகை வைரஸ் மிகவும் கடுமையான உடல்நல பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.


— எம்பாக்ஸ் (Mpox) பாதிப்பு என்பது முக்கியமாக அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் பரவுகிறது. மேலும், இந்த வைரஸைக் கொண்டுள்ள விலங்குகளுடன், உதாரணமாக சில வகையான குரங்குகள் அல்லது மர அணில் போன்ற கொறிக்கும் விலங்குகளுடன் உடல்ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமும் ஒருவருக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.


3. எபோலா (Ebola): இது மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும்.  மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகளாகக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் சில நேரங்களில் உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படக்கூடும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட 2 முதல் 21 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தெரியத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.


— முக்கியமாக இந்த வைரஸ், நோய்த்தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தென்படும் நபர்களின் உடல் திரவங்கள் (Bodily fluids) வழியாகவும், அவர்கள் பயன்படுத்திய படுக்கை விரிப்புகள் போன்ற அசுத்தமான பொருட்களின் மூலமாகவும் நெருக்கமான தொடர்பின் மூலம் பரவுகிறது.


4. சீகா வைரஸ் (Zika virus) என்பது முக்கியமாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் போன்ற வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் கொசுக்களால் பரவக்கூடிய ஒரு நோயாகும்.


இது டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சலை பரப்பும் அதே ஏடிஸ் (Aedes) கொசுக்கள் மூலமாகவே பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில்தான் கடிக்கின்றன. இந்த வைரஸ் முக்கியமாக கொசுக்கடி, உடலுறவு மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.



5. கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2) எனும் வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். காய்ச்சல், உடல் நடுக்கம் (குளிர் காய்ச்சல்) மற்றும் தொண்டை வலி ஆகியவை இந்த நோயின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.


‘ஒரே ஆரோக்கியம்’ அணுகுமுறை என்றால் என்ன?


1. உலக சுகாதார அமைப்பின் (WHO) இணையதளத் தகவலின்படி, 'ஒரே ஆரோக்கியம்' (One Health) என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஆரோக்கியத்தை நிலையான முறையில் சமநிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றிணைந்த அணுகுமுறையாகும்.


2. மனிதர்கள், வளர்ப்பு மற்றும் வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுப்புறச் சூழலின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நெருங்கியத் தொடர்புடையவை என்பதையும், அவை ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன என்பதையும் இந்த அணுகுமுறை அங்கீகரிக்கிறது. ஆரோக்கியமான சூழல் என்பது இவை அனைத்தும் சமநிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை இந்த அணுகுமுறை வலியுறுத்துகிறது.


3. சுகாதாரம், உணவு, நீர், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை தமக்கெனத் தனித்தனி கவலைகளையும் சவால்களையும் கொண்ட விரிவான தலைப்புகளாகும். இருப்பினும், இந்த வெவ்வேறு துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தொற்று நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகின்றன. மேலும், இத்தகைய கூட்டுமுயற்சிகள் நமது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் சமநிலையையும் மேம்படுத்த உதவுகின்றன.


4. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்றையும் ஒன்றிணைப்பதன் மூலம், 'ஒரே ஆரோக்கியம்' (One Health) என்கிற அணுகுமுறையானது நோய்க் கட்டுப்பாட்டின் அனைத்து நிலைகளையும் கையாள உதவுகிறது. அதாவது, நோய் வராமல் தடுத்தல், முன்கூட்டியே கண்டறிதல், தயார் நிலையில் இருத்தல், நோய்க்குப் பதிலளித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் என முழுமையான தீர்வை இது வழங்குகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடுகள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பெரிதும் பங்களிக்கின்றன.


5. இந்த அணுகுமுறையைச் சமூகம், மாநிலம், தேசம், பிராந்தியம் மற்றும் உலகளாவிய நிலைகளில் பயன்படுத்த முடியும். இது ஒருங்கிணைந்த மற்றும் திறமையான நிர்வாகம், தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. 'ஒரே ஆரோக்கியம்' என்ற இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், நியாயமான மற்றும் முழுமையான தீர்வுகளுக்கான நன்மைகள், அபாயங்கள், சாதக பாதகங்கள் மற்றும் வாய்ப்புகளை மக்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது.


Original article : From Hantavirus to COVID-19: Understanding viral diseases in news. -Roshni Yadav

Share:

முக்கியத்துவம் வாய்ந்த சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் 22 பேரின் விடுதலையை பம்பாய் உயர்நீதிமன்றம் ஏன் உறுதி செய்தது? -ஓம்கார் கோகலே

 சோராபுதீன் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு: சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பை, ஷேக்கின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்ததன் மூலம் பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.



சோராபுதீன் என்கவுன்டர் வழக்கின் தீர்ப்பு: 2005-06-ஆம் ஆண்டுகளில் சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி என்கவுன்டர் மற்றும் ஷேக்கின் மனைவி கௌசர் பீயின் கொலை தொடர்பான வழக்கில், 21 காவல்துறை அதிகாரிகள் உட்பட 22 பேர் விடுவிக்கப்பட்டதை பம்பாய் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.


2018-ஆம் ஆண்டு டிசம்பரில் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 காவல்துறைப் பணியாளர்கள் உட்பட 22 பேரையும் விடுவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில், சோராபுதீனின் இரண்டு சகோதரர்கள் விடுவிப்புகளை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் மேல்முறையீடு மனுக்களை நிராகரித்தது.


இந்தியாவின் என்கவுன்டர் அரசியலில் நீண்டகாலமாக ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வரும் இந்த வழக்கு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த விதம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.


வழக்குத் தொடுத்த தரப்பின் வாதம்


ஆரம்பத்தில், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவும் (Anti-Terrorism Squad (ATS)) மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையும் (CID-Crime) இந்த வழக்கை விசாரித்து வந்தன. பின்னர், 2010-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI)) மாற்றியதோடு,  விசாரணையை மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டது.


குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சோராபுதீன் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன என்றும், அவர் ஒரு "மிகவும்  கொடூரமான குற்றவாளி" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.


2005-ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று, ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சாங்லிக்கு சொகுசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​இறந்த மூவரும் கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது. மேலும், சோராபுதீன் மற்றும் கௌசர் பீ ஆகியோர் குஜராத்தில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துளசிராம் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டது.


ஷேக்கைக் கொலை செய்வதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் குற்றச் சதியில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சோராபுதீனைக் கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் அவரது கூட்டாளியான பிரஜாபதியைத் தவறாக வழிநடத்தி அவர்கள் உதவி கோரியதாகவும் அரசுத் தரப்பு கூறியது.


2005-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அகமதாபாத்தில் சோராபுதீன் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. இருப்பினும், அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், சோராபுதீனுக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஒரு பிரபல அரசியல் தலைவரைக் கொல்வதற்காக அவர் அந்த நகரத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.


கௌசர் பீ அதே மாதம் கொல்லப்பட்டார். மேலும், அவரது உடல் அந்த ஆண்டு நவம்பர் 29 அன்று அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, குஜராத்தில் நடந்த மற்றொரு 'திட்டமிட்ட' மோதலில் பிரஜாபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 பேரில் 16 பேரை நீதிமன்றங்கள் விடுவித்தன. அவர்களில் தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்போதைய மூத்த இந்தியா ஆட்சி பணியில் இருந்த அதிகாரிகளான தினேஷ் எம்.என், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி. வன்சாரா, மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோரும் அடங்குவர்.


2018-ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது 


2018-ஆம் ஆண்டில், மத்திய புலனாய்வுப் அமைப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், நீதிபதி எஸ்.ஜே. சர்மா தலைமையில், தனது 358 பக்க தீர்ப்பில், கூறப்படும் சதியை நிலைநாட்டுவதற்கு மத்திய புலனாய்வுப் அமைப்பு எந்தவொரு "ஆவண மற்றும் உறுதியான ஆதாரங்களையும்" (documentary and substantive evidence) சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தது.


சோராபுதீன் மற்றும் பிரஜாபதி ஆகியோரின் ‘கொலை' மரணங்களில் 'கொலை' குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code (CrPC)) பிரிவு 197-ன் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெற புலனாய்வு அமைப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் 'விடுதலைக்குத் தகுதியானவர்' (entitled to acquittal) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


சிறப்பு நீதிபதி, சாட்சிகள் மத்திய புலனாய்வுப் அமைப்பு தனது விசாரணையின்போது பதிவு செய்த வாக்குமூலங்களின்படி சாட்சியம் அளிக்காததால் பிறழ் சாட்சிகளாக மாறியதாகவும், நீதிமன்றத்தின் முன் சாட்சிக் கூண்டில் நின்றபோது, ​​அவர்கள் "அச்சமின்றி" உண்மையைப் பேசியதன் மூலம், மத்திய புலனாய்வுப் அமைப்பில் "தங்களது வாக்குமூலங்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.


ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், விசாரணையின் போது நீதிபதி, “மத்திய புலனாய்வு அமைப்பு குற்றங்களின் உண்மையை அறிவதற்குப் பதிலாக வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தது” என்றும், “உண்மையைக் கண்டறிவதைவிட, ஒரு குறிப்பிட்ட, முன்யோசனையுடன் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை நிறுவுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தது” என்றும் குறிப்பிட்டார்.


மத்திய புலனாய்வு அமைப்பானது, அரசியல் தலைவர்களை எப்படியாவது சிக்க வைப்பதற்காக, ஒரு முன் திட்டமிடப்பட்ட கோட்பாட்டையும் ஒரு செயல்திட்டத்தையும் தன்வசம் கொண்டிருந்தது என்றும், அந்த அமைப்பானது, சட்டப்படி விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக, அந்த இலக்கை அடைவதற்குத் தேவையானதை மட்டும் செய்தது என்றும் நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.


அரசியல் கட்சியின் தலைவர்களை எப்படியாவது சிக்க வைக்கும்  முனைப்பில், மத்திய புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை உருவாக்கி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது.


முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட விசாரணையின் நகலைப் பயன்படுத்தி, விசாரணையை அவசரமாக முடித்ததில் மத்திய புலனாய்வு அமைப்பு அலட்சியம் காட்டியதாகவும், எந்தச் சதித்திட்டம் குறித்தும் அறியாத காவல்துறையினரைக் குற்றவாளியாக்கியதாகவும், மாறாக அவர்கள் நிரபராதிகள் போல் தோன்றியதாகவும் நீதிமன்றம்  கூறியது.


உயர் நீதிமன்றத்தின் முன் உள்ள சவால்


சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட சோஹ்ராபுதீனின் சகோதரர்களான ரூபாபுதீன் மற்றும் நயாபுதீன், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களாக மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிபதியின் கண்டுபிடிப்புகள் "சாட்சியங்களுக்கு முரணானவை" (contradictory to the evidence) என்று அவர்கள் வாதிட்டனர்.


அரசுத் தரப்பால் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், ஒரு நீதிபதிக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்ட அல்லது புலனாய்வு அதிகாரிகளால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள், விசாரணை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டப்படவோ அல்லது சமர்ப்பிக்கப்படவோ இல்லை என்று  மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பயிருந்தது. மேலும், பிறழ் சாட்சிகளாக இல்லாத ஏறத்தாழ 118 சாட்சிகளின் சாட்சியங்கள் "நம்பகத்தன்மையற்றவை" எனக் கூறித் தவறாகப் புறக்கணிக்கப்பட்டன என்று அந்த மேல்முறையீட்டு மனுவில்  குறிப்பிடப்பயிருந்தன.


பம்பாய் உயர்நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளித்தது


உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று மேல்முறையீட்டு  மனுக்களை ஏற்றுக்கொண்டு, விடுவிக்கப்பட்ட நபர்களுக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கும் அறிவிப்பாணையை அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சாட்சியான மகேந்திரசிங் ஜாலா தான் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கூறி, விடுவிப்புகளை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


2019-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், சோராபுதீனின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள், தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் தலைமையிலான அமர்வின் முன் 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இறுதி விசாரணைகள் வரை விசாரிக்கப்படாமல் இருந்தன. அந்த விசாரணைகள் ஜனவரி 16 அன்று நிறைவடைந்தன.


2025-ஆம் ஆண்டு அக்டோபரில், சிறப்பு நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது.


உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளபட்ட வாதங்கள்


2018-ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீட்டாளர்கள் — மற்ற ஆதாரங்களுடன் தகுந்த அதிகார அமைப்பின் ஒப்புதல்கள் தேவையில்லை என்றும், பிரஜாபதியின் சக கைதி "தன் உயிருக்கு அஞ்சினார்" என்பதைக் காட்டிய "ஏற்கத்தக்க" சாட்சியங்களை நீதிபதி நம்பத் தவறிவிட்டார் என்றும் வாதிட்டனர்.


தற்போதைய மேல்முறையீடுகளில் பிரதிவாதிகளாக உள்ள, விடுவிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை நிலைநாட்ட நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்றும், தங்களை விடுவிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற உத்தரவு நியாயமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


Original article : Why Bombay HC upheld acquittal of 22 in the landmark Sohrabuddin encounter case. -Omkar Gokhale

Share:

இந்தியா மற்றும் உலகளவில் சமத்துவமின்மை, சமீப ஆண்டுகளில் ஏன் மிகக் குறைந்த மாற்றத்தையே காட்டுகிறது? - ரித்விகா பட்கிரி

 2026-ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. இருப்பினும், இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்றத்தாழ்வு அதிகமாகவே நீடிக்கிறது. இதற்குப் பின்னாலுள்ள முக்கியக் காரணிகள் யாவை?


உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் இதுவரை இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளபோதிலும், ஏற்றத்தாழ்வு இன்றும்அதிகமாகவே நீடிக்கிறது. உலக மக்கள் தொகையில் மிகவும் செல்வந்தர்களான 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் ஏறக்குறைய முக்கால் பங்கையும், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பாதிப் பேர் 2 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளனர் என்று '2026 உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை' தெரிவிக்கிறது.


குறிப்பாக, இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மை உலகிலேயே அதிகமான ஒன்றாகத் தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சமத்துவமின்மை அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதிக வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 58 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதே, வேளையில் கீழ்மட்ட 50 சதவீதத்தினர் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.


தொடர்ந்து நிலவும் சமத்துவமின்மைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள் யாவை? செல்வத்தைத் தாண்டி, பாலினம், வாய்ப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றில் சமத்துவமின்மை எவ்வாறு வெளிப்படுகிறது?


2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை: யாருக்கு என்ன கிடைக்கும்?


பொருளாதாரம் - உலகளாவிய சமத்துவமின்மை


உலக வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 1820-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், செல்வந்தர்களான 10% பேர் அதில் பாதிக்கும் மேற்பட்டதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கை இதையே காட்டுகிறது.


இரண்டு நூற்றாண்டுகளின் சீரற்ற விநியோகம்


1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் மேல்தட்டு மக்கள் 10% பேர் உலகளாவிய வருமானத்தில் 50%-க்கும் குறைவாக ஒருபோதும் பெற்றதில்லை. கீழ்தட்டு மக்கள் 50% பேர் 15%-க்கும் அதிகமாக ஒருபோதும் பெற்றதில்லை. ஒட்டுமொத்த செல்வம் அதிகரித்து வந்தபோதிலும், இந்தக் கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வில் பெரிய அளவில் மாறம் ஏற்படவில்லை.


சமத்துவமின்மை குறைந்து வருவதாகக் கூறப்படும் கூற்றுகள் குறித்து அறிக்கை வெளிப்படுத்தும் தகவல்கள் என்ன


'2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை' இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துகிறது. முதலாவதாக, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் ஆகியவை வரலாற்றியிலே இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, மக்கள் தொகை வளர்ச்சியைவிடத் தனிநபர் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது.


1800 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் மக்கள்தொகை ஆண்டுக்குச் சராசரியாக 0.9 சதவீதம் அதிகரித்தபோதிலும், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்தது. கோட்பாட்டளவில், இது இன்றைய உலகம் செல்வம் மிக்கதாக மாறியுள்ளது என்றும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு ரூ. 1.32 லட்சம் அல்லது €1,200 வழங்க முடியும் என்றும் கூறுகிறது. இருப்பினும், யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.


அறிக்கையின் இரண்டாவது முக்கியக் கண்டுபிடிப்பு, பொருளாதார வளங்கள் தொடர்ந்து சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்பதை காட்டுகிறது. இது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. உதாரணமாக, உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர்  56 கோடி மக்கள் மொத்த உலக வருமானத்தில் 53 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதேசமயம், கடைசி 50 சதவீதத்தினர் (280 கோடி மக்கள்) வெறும் 8 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.


இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேல்தட்டு மக்கள் 1 சதவீதத்தினர், கீழ்தட்டு மக்கள் 50 சதவீதத்தினரை விட 2.5 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர். அதே சமயம், மேல்தட்டு மக்கள் 0.1 சதவீதத்தினர், உலக மக்கள்தொகையின் கீழ்தட்டுப் பாதி மக்கள் சம்பாதிக்கும் அளவுக்குச் சமமாக சம்பாதிக்கின்றனர்.


1980-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய வருமானம் ஆண்டுக்கு 1.1 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தபோதிலும், சமத்துவமின்மை குறைந்துவிட்டது என்ற கூற்றுகளுக்குச் சவால் விடும் வகையில், மிகவும் செல்வந்தர்களான 0.1 சதவிகிதத்தினர் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட அதிக வருமான வளர்ச்சி விகிதங்களைக் கண்டுள்ளனர் என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவிகிதத்தினர் வருமான வளர்ச்சியில் தேக்கநிலையைச் சந்தித்தனர்.


நடுத்தர வருமானக் குழுக்களுக்கு ஏன் அதிக கவனம் தேவைப்படுகிறது?


செல்வப் பகிர்விலும் (wealth distribution) இதே போன்ற ஒரு போக்கு காணப்படுகிறது. உலகின் மொத்த செல்வத்தில் 37 சதவீதத்தை மேல்தட்டு மக்கள் 1 சதவீதம் பேர் கொண்டுள்ளனர். அதே, சமயம் கீழ்தட்டு மக்கள் 50 சதவீதம் பேருக்கு  2 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.


வருமான ஏற்றத்தாழ்வுக்கும் செல்வ ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம். வருமான ஏற்றத்தாழ்வு (income inequality) என்பது ஒரு நாட்டின் மக்களிடையே குடும்ப அல்லது தனிநபர் வருமானத்தின் (சம்பாத்தியம், ஊதியம், முதலீடுகள்) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. அதே, சமயம் செல்வ ஏற்றத்தாழ்வு (wealth inequality) என்பது திரட்டப்பட்ட சொத்துக்களின் (நிகர மதிப்பு, சொத்து, சேமிப்பு) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. இவை இரண்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கின்றன.


இருப்பினும், அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல. 1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைத் தொடர்ந்து பெற்றுள்ளனர் என்றும், அதே சமயம் கீழ்மட்ட மக்கள் 50 சதவீதத்தினர் 15 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றதில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஆனால், நடுத்தர வருமானக் குழுக்களின் மாறிவரும் நிலை  கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நடுத்தர வருமானம்  உள்ள 40 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1920 மற்றும் 1980-க்கு இடையில் உயர்ந்தது; அதைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு வரை அந்தப் பங்கு சரிந்து. அதன் பிறகு ஒரு பகுதி சிறிதளவு அதிகரித்தது. தரவுகள் குறிப்பிடும் வருமான ஏற்றத்தாழ்வின் வரலாற்றுச் சரிவானது,   நடுத்தர வர்க்கத்தினருக்கே பயனளித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினருக்கு அது பயனளிக்கவில்லை.


ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் ஏன் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன


பிரெஞ்சுப் பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி, தனது 'சமத்துவத்தின் ஒரு சுருக்கமான வரலாறு' (2022) என்ற நூலில், நடுத்தர வருமானம்  கொண்ட மக்கள்  40 சதவீதத்தினரைக் குறிப்பிடுவதற்கு "பரம்பரை நடுத்தர வர்க்கம்" (patrimonial middle class) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். சமத்துவமின்மைக் குறைப்புகளால் இந்தக் குழுவினர் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி, முதலாம் உலகப் போருக்கு முந்தைய செல்வப் பங்கீட்டை ஆராய்வதாகும்.


1900-களின் முற்பகுதியில், முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய செல்வத்தில் 85 சதவீதத்தை வைத்திருந்தனர். தற்போது, அந்தப் பங்கு 50-60 சதவீதமாகக் குறைந்திருந்தாலும் அது இன்னும் கவலைக்குரிய வகையில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு கணிசமான குறைப்பைக் காட்டுகிறது. இது, காலப்போக்கில் செல்வத்தில் தங்கள் பங்கை அதிகரித்துக் கொண்ட, நடுதர வருமானம் உள்ள 40 சதவீதத்தினருக்கோ அல்லது ‘மேல்-நடுத்தர’ வர்க்கத்தினருக்கோ பயனளித்துள்ளது.


பிக்கெட்டியும் (Piketty) உலக சமத்துவமின்மை அறிக்கையும், ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இது எப்போதும் உண்மையாக இருந்ததில்லை. நலத்திட்டங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம், பொதுச் சேவைகள், மற்றும் தொலை நோக்க பார்வை கொண்ட வரிவிதிப்பு போன்ற அரசால் வழிநடத்தப்பட்ட கொள்கைகளின் மூலம், 20-ஆம் நூற்றாண்டில் முன்னேறிய பொருளாதாரங்களிடையே ஒப்பீட்டு சமத்துவம் குறிப்பிடத்தக்கதாக மாறியது.


மறுபங்கீட்டுக் கொள்கைகள் சமத்துவமின்மையைக் குறைக்க உதவியபோதிலும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்குக் கிடைத்த முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதே பிக்கெட்டியின்  முக்கிய வாதமாக உள்ளது.


இந்தியாவின்  ஏற்றத்தாழ்வுக்குப் பின்னால் உள்ள காரணிகள்


இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் 40 சதவீத செல்வத்தையும், முதல் 10 சதவீதம் பேர் 65 சதவீத செல்வத்தையும் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்க வைக்கிறது. மேலும், சமத்துவமின்மையில் குறைப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. வருமான சமத்துவமின்மையைப் பொறுத்தவரை, முதல் 10 சதவீதம் பேர் மொத்த வருமானத்தில்  58 சதவீதத்தையும், கடைசி 50 சதவீதம் பேர் வெறும் 15 சதவீதத்தையும் ஈட்டுகின்றனர்.


இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுக்கு, தரமான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் இல்லாமை, பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு உருவான சேவைத் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.


"செல்வத்தின் நிதியமயமாக்கல்" (financialisation of wealth) அல்லது வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற செயல்பாடுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது—மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் செல்வப் பங்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில், மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1922-ஆம் ஆண்டில்   13 சதவீதமாக இருந்தது என்று வரலாற்றுத் தரவுகள் காட்டுகின்றன. 1950-கள் முதல் 1980-களின் முற்பகுதி வரையிலான காலத்தில் இந்தப்பங்கு குறைந்திருந்தாலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்து. 2022-ஆம் ஆண்டில் 22.6 சதவீதம் என்ற இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது.


நிலம், பாலினம் மற்றும் காலநிலை


இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு  முக்கிய அம்சம் நில ஏற்றத்தாழ்வும் (land inequality) நிலப் பிரிவினையுமாகும் (land fragmentation). இந்தியாவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில்  46 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக உள்ளனர். அதே, சமயம் மேல்தட்டு மக்கள் 10 சதவீதத்தினர் மொத்த கிராமப்புற நிலத்தில் 44 சதவீதத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கிராமங்களில் நில இல்லாத மக்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதாக 2026-ஆம் ஆண்டின் சமத்துவமின்மை அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், கேரளா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் விதிவிலக்குகளாகக் கருதப்படுகின்றன. அங்கு, சமத்துவமின்மையைக் குறைப்பதில் நிலச் சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகித்தன என்று வாதிடலாம்.


பரவலான அனுமானங்களுக்கு மாறாக, சந்தைகளை எளிதில் அணுகுவது சமத்துவமின்மையைக் குறைத்துவிடாது. நகரங்கள், சாலைகள் மற்றும் பெருநகரங்களுக்கு அருகில் இருப்பது, வரலாற்றுரீதியாக வேரூன்றிய சமத்துவமின்மைகளை மாற்றுவதற்குப்  போதுமானதாக இருந்ததில்லை.


சமத்துவமின்மைக்கு பாலினம் மற்றும் சமூகப் பரிமாணங்களும் உண்டு. உதாரணமாக, இந்தியாவில் பெண்கள் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள், தொழிலாளர் வருமானம், செல்வம் மற்றும் நில உரிமையில் வரலாற்று ரீதியான சமத்துவமின்மை, மற்றும் வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளின் சமமற்ற சுமை ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இதேபோல், ஆதிக்கக் குழுக்களுடன் ஒப்பிடும்போது ​​மற்ற விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த குழுக்கள் வளங்களையும் வருமானத்தையும் சமமற்ற முறையில் அணுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


மேலும், காலநிலை மாற்றம் இந்த ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது. மிகவும் ஏழ்மையானவர்கள் பெரும்பாலும் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தண்ணீர் நெருக்கடி, வெப்ப அழுத்தம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை தொடர்பான அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


சமத்துவமின்மையை எவ்வாறு குறைப்பது (How to reduce inequality)


பயனுள்ள தலையீடுகள் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க முடியும் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது. அவற்றுள் சில:


1) கல்வி மற்றும் சுகாதாரத்தில் பொது முதலீட்டை அதிகரித்தல்.


2) பணப் பரிமாற்றம், ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை உதவித்தொகை போன்ற மறுபங்கீட்டுத் திட்டங்கள்.


3) வேலை மற்றும் வாய்ப்புகளின் சமமற்ற பங்கீட்டை உருவாக்கும் கட்டமைப்புத் தடைகளை அகற்றுதல்.


4) ஒரு நியாயமான வரி முறையை உருவாக்குதல் போன்ற பணிகளாகும்.


மேல்தட்டு வர்க் மக்கள் அதிக விகிதத்தில் வரி செலுத்தும் முற்போக்கு வரிவிதிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் காலநிலை தகவமைப்பு ஆகியவற்றில்  அதிக மாற்றங்களைக் கொண்டுவர உதவும். இருப்பினும், "செல்வந்தர்களுக்கு வரி விதிப்பது" குறித்த விவாதங்கள், அது போன்ற நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை குறைத்து, மூலதன வெளியேற்றத்தைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளாகவே  சுருக்கப்படுகின்றன.


எனவே, வெறும் சமத்துவமின்மையைக் குறைப்பதைவிட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை ஒழிப்பதே மிகவும் முக்கியமானது என்று   வாதிடப்படுகிறது. இருப்பினும், இவை இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையின் அளவை உண்மை என்று நிரூபிக்கின்றன. உதாரணமாக, சஜித் பாய் மற்றும் அமல் வாட்ஸ் ஆகியோரின் 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, “1% இந்தியர்கள் 45% விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். 2.6% இந்தியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கின்றனர், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) நடைபெறும் 44% டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 6.5% பயனர்களே காரணமாக உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.


எனவே, “பரம்பரைச் சொத்து மறுபகிர்வு” (redistribution of inheritance) போன்ற ஒரு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடுமையான சமத்துவமின்மை நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று பிக்கெட்டி வாதிட்டுள்ளார்.


Original article : Why inequality in India and the world shows little movement in recent years. -Ritwika Patgiri

Share:

மேற்கத்திய இடையூறு முதல் எல்-நினோ வரை -அனகா ஜெயகுமார்

 மேற்கத்திய இடையூறுகள் முதல் எல்-நினோ வரை, பலதரப்பட்ட காலநிலை நிகழ்வுகள், வானிலை எவ்வளவு குளிராக அல்லது வெப்பமாக இருக்கிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தச் சொற்களின் அர்த்தம் என்ன?, அவை உங்கள் சுற்றுப்புறத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான வழிகாட்டி கீழே குறிப்பிட்டுள்ளது.


வானிலை தொடர்பான விளக்கங்கள் : இந்தியா, பல தீவிர வானிலை நிகழ்வுகள் கொண்ட ஒரேநேரத்தில் நிகழும் ஒரு கோடைக்காலத்திற்குள் நுழைகிறது. ஒரு புதிய மேற்கத்தியக் காற்றழுத்தத் தாழ்வுநிலையானது, வட இந்தியாவிற்குப் பருவம் அல்லாத மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு எல்-நினோ ஆண்டு, பலவீனமான பருவமழை மற்றும் வலுவான வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கக்கூடும். அதே நேரத்தில், அதிகரித்து வரும் ஈரப்பதம், வெப்பமானியில் காட்டப்படும் உண்மையான வெப்பநிலையைவிட வானிலையை மிகவும் வெப்பமாக உணர வைக்கிறது.


இந்தக் கோடை காலத்தில் வானிலை குறித்த உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்தும் சொற்கள் மற்றும் உண்மையில் என்னவிதமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதற்கான வழிகாட்டி தொடர்ந்து குறிப்பிட்டுள்ளது.


மே 11 முதல் மே 13 வரை வட இந்தியாவில் ஒரு புதிய மேற்கத்திய இடையூறு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மேற்கத்திய இடையூறு (Western Disturbance) என்றால் என்ன?


மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அப்பால் உருவாகி, மத்திய தரைக்கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றிலிருந்து ஈரப்பதத்தைப் பெற்று, கிழக்கு நோக்கி மழையைக் கொண்டுவரும் காற்று அமைப்புகளாகும். இவை பொதுவாக, துருவ மற்றும் வெப்பமண்டலக் காற்றுகளுக்கு இடையிலான தொடர்புகளால் உருவாக்கப்படும் குறைந்த அழுத்தப் பகுதிகளின் விளைவாக ஏற்படும் வெப்பமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புயலாகும்.


மேற்கத்திய இடையூறுகள், பூமியின் வளிமண்டலத்தில் அதிக உயரங்களில் காணப்படும் ஒரு வேகமாக நகரும் காற்று நீரோட்டமான துணை வெப்பமண்டல மேற்கத்திய ஜெட் நீரோட்டத்திற்குள் (subtropical westerly jet stream) பொதிந்துள்ளன. இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. இது இமயமலை மற்றும் திபெத்திய உயர்நிலப்பகுதிகளுக்கு மேல் அமைந்துள்ளது.


இந்த இடையூறுகள் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான வட குளிர்கால மாதங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. மேலும், இவை இந்தியா, குறிப்பாக அதன் வடமேற்குப் பகுதிகள், அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் வானிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


2026-ம் ஆண்டு எல்-நினோ ஆண்டாக விவரிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன?


இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, நாம் முதலில் எல்-நினோ தெற்கு அலைவு (El Niño South Oscillation) அல்லது ENSO என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.


எல்-நினோ தெற்கு அலைவு (El Niño South Oscillation(ENSO)) என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடலுக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஒரு காலநிலை நிகழ்வாகும். இது உலகளாவிய வளிமண்டல சுழற்சியை மாற்றியமைத்து அதில் குறுக்கிடக்கூடும். இதன் விளைவாக, இது உலகம் முழுவதும் உள்ள வானிலை முறைகளைப் பாதிக்கிறது.


எல்-நினோ தெற்கு அலைவில் (ENSO) மூன்று கட்டங்கள் உள்ளன. வெப்பமான (எல்-நினோவானது ஸ்பானிய மொழியில் ’சிறுவன்’ என பொருள்படும்), குளிர்ச்சியான (லா-நினோவானது ஸ்பானிய மொழியில் ’சிறுமி’ என பொருள்படும்) மற்றும் நடுநிலையான கட்டமாகும். இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் வரையிலான ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கிறது.



நடுநிலையான கட்டத்தின் போது, பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்குக் கடற்கரைக்கு அருகில்) மேற்குப் பகுதியை (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில்) விடக் குளிர்ச்சியாக இருக்கும். இதற்குக் காரணம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் காற்றின் அமைப்புகளே ஆகும். இவை மேற்பரப்பில் உள்ள வெப்பமான நீரை இந்தோனேசியக் கடற்கரையை நோக்கி அடித்துச் செல்கின்றன. இந்த வெப்பமான நீர் விலகிச் செல்லும்போது, ​​ஆழமான அடுக்குகளிலிருந்து வரும் குளிர்ச்சியான நீர் மேற்பரப்பிற்கு உயர்கிறது. பின்னர் இந்தக் குளிர்ச்சியான நீர், இடம்பெயர்ந்த அந்த வெப்பமான நீருக்குப் பதிலாக அமைகிறது.


எல்-நினோ (El Niño) நிகழ்வின்போது, ​​பசிபிக் பெருங்கடலின் இந்தப் பகுதியின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைந்து, இந்தியாவில் ஈரப்பதமான காற்றின் ஓட்டத்தைத் தடுக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவில் பருவமழை பலவீனமாகவோ அல்லது தாமதமாகவோ பெய்கிறது. இக்காலகட்டத்தில், பல முக்கிய விவசாய மாநிலங்களும் வறண்ட காலநிலையை எதிர்கொள்கின்றன. இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகளின் அதிர்வெண்ணும் தீவிரமும் எல்-நினோ நிகழ்வுடன் தொடர்புடையவை என்பதற்கும் சான்றுகள் உள்ளன. ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் (US Climate Prediction Center), மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் எல்-நினோ நிகழ்வதற்கு 61% வாய்ப்பு இருப்பதாகக் கணித்ததுடன், அது ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.


லா-நினா (La Niña) நிகழ்வு ஏற்படும்போது இதற்கு நேர்மாறாக, கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் குளிர்ச்சியடைகிறது. இதனால், இந்தியாவில் ஈரப்பதம் நிறைந்த வலுவான காற்று வீசுவதோடு, வழக்கமாக அதன் தென்மேற்குப் பருவமழையும் அதிகரிக்கிறது. தீவிரமான சூழ்நிலைகளில், இந்த அதிகப்படியான மழைப்பொழிவானது வெள்ளப்பெருக்கத்திற்கும் மற்றும் பயிர்ச்சேதத்திற்கும் வழிவகுக்கக்கூடும்.


இந்த ஆண்டு மேலும் பல வெப்ப அலைகளை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், வெப்ப அலை (heat wave) என்றால் என்ன?


வெப்ப அலை (heat wave) என்பது இயல்பான வெப்பநிலையிலிருந்து மாறுபட்டு, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் ஒரு காலகட்டமாகும். இப்பகுதிகளில் பதிவாகும் வெப்பநிலையானது, அப்பிராந்தியத்தில் பொதுவாகப் பதிவாகும் இயல்பான வெப்பநிலையைவிட மிக அதிகமாக இருக்கும். அதிக ஈரப்பதம், காற்றின் அதிக வேகம் மற்றும் வெப்ப அலை நிகழ்வின் கால அளவு போன்ற காரணிகளால் இது மேலும் தீவிரமடையலாம்.


ஒரு வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையானது, சமவெளிப் பகுதிகளில் 40°C-ஐ எட்டினாலோ அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் 30°C-ஐ எட்டினாலோ, அது ஒரு வெப்ப அலையாகக் கருதப்படலாம். இந்த வெப்பநிலை வரம்பு எட்டப்பட்டவுடன், இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஒரு வெப்ப அலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.


வெப்பநிலையானது இயல்பான நிலையிலிருந்து எவ்வளவு விலகிச் சென்றுள்ளது என்பதையும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதாவது, ஆண்டின் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொதுவாக நிலவும் வெப்பநிலையை ஒப்பிடுகையில், தற்போதைய வானிலை எவ்வளவு அதிகமாக வெப்பமாக உள்ளது என்பதை அது ஆய்வு செய்கிறது. வெப்பநிலை இயல்பான அளவை விட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாக இருந்தால் வெப்ப அலை அறிவிக்கப்படலாம், அதே சமயம் இந்த மேல் வரம்பைத் தாண்டினால் கடுமையான வெப்ப அலையாக அறிவிக்கப்படலாம்.


உண்மையான அதிகபட்ச வெப்பநிலையின் அடிப்படையில், உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 45°C-ஐ அடைந்தாலோ அல்லது அதைத் தாண்டினாலோ வெப்ப அலை (heat wave) தானாகவே அறிவிக்கப்படுகிறது. அதேசமயம், உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 47°C-ஐ அடைந்தாலோ அல்லது அதைத் தாண்டினாலோ கடுமையான வெப்ப அலை (severe அறிவிக்கப்படுகிறது.


கடலோர நிலையங்களில் ஈரப்பதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக, அந்த முகமை சற்றே மாறுபட்ட அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இதில் அதிகபட்ச வெப்பநிலையானது குறைந்தபட்சமாக 37°C-ஐ எட்டினாலும், அது இயல்பான வெப்பநிலையிலிருந்து 4.5°C மாறுபட்டால் வெப்பஅலை என அறிவிக்கப்படலாம்.


(இந்த அளவுகோல்கள் ஒரு வானிலை ஆய்வுப் பிரிவுக்குள் உள்ள குறைந்தபட்சம் இரண்டு நிலையங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நீடிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டாம் நாளில் நிகழ்கிறது.)


ஈரப்பதத்தைப் பற்றிப் பேசுகையில், ஈரக்குமிழ் வெப்பநிலை (wet bulb temperature) என்றால் என்ன?


நாம் அறிந்தபடி மற்றும் பொதுவாக ஒரு சாதாரண உலர் வெப்பமானி மூலம் அளவிடப்படும் வெப்பநிலை, உலர் குமிழ் வெப்பநிலை (Dry Bulb Temperature) ஆகும். இந்த மதிப்பு ஈரப்பதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மறுபுறம், ஈரக் குமிழ் வெப்பநிலை (Wet Bulb Temperature) என்பது, காற்றில் நீரை ஆவியாக்குவதன் மூலம் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இதன் மூலம், ஆவியாதல் குளிர்ச்சிக்கு ஈரப்பதம் எவ்வளவு திறம்பட உதவுகிறது என்பதை அளவிட முடியும்.

மிக எளிமையாகச் சொன்னால், உங்கள் உடல் குளிர்ச்சியடையக்கூடிய அதிகபட்ச வெப்பநிலையை இது உங்களுக்குத் தெரிவிக்கிறது.


இந்த வேறுபாடு ஏன்? கடும் வெப்பத்தின் போது மனித உடல் அனுபவிக்கும் உடலியல் அழுத்தத்தில், வெப்பத்தைத் தவிர ஈரப்பதத்திற்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. ஈரப்பதம் அதிகரிக்கும்போது, தங்கள் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்கள் உருவாக்கும் வியர்வை ஆவியாவதில்லை. இதனால், ஒருவரால் தனது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வது கடினமாகிறது.


ஈர வெப்பநிலை பொதுவாக உலர் வெப்பநிலையைவிடக் குறைவாக இருக்கும். மேலும், காற்று வறண்டு போகும்போது இவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கிறது.


காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) தயாரித்த 6-வது மதிப்பீட்டு அறிக்கை (AR6),35°C-க்கு மேலான ஈர வெப்பநிலைக்கு நீண்ட நேரம் இருப்பது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதேசமயம் தீவிரமான உடல் செயல்பாடுகளின் போது 31°C-க்கு மேலான ஈர வெப்பநிலைக்கு நீண்ட நேரம் இருப்பது ஆபத்தானது என்றும் அந்தக் குழு குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஏற்கனவே இதய நோய் அல்லது நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், நீரிழப்பு காரணமாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்களும் அதிக அபாயத்தில் உள்ளனர்.


இருப்பினும், 6-வது மதிப்பீட்டு அறிக்கையின் (AR6) படி, இத்தகைய வெப்பநிலை சில மணிநேரங்களுக்கு மேல் நீடிப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு.


மேலும், “உணரப்படும் வெப்பநிலை” என்பதன் அர்த்தம் என்ன? அது ஈரக்குமிழ் வெப்பநிலை (Wet Bulb temperature) போன்றதா? இல்லை, இரண்டும் ஒன்றல்ல.


"உணரப்படும் வெப்பநிலை" (Feels like temperature) அல்லது தோற்ற வெப்பநிலை (apparent temperature) என்பது, காற்று மற்றும் ஈரப்பத நிலைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் உடல் வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் வெளிப்புறக் காற்றின் வெப்பநிலை எப்படி உணரப்படும் என்பதைத் தீர்மானிக்கிறது.


உதாரணமாக, டெல்லியில் நிலவும்வெப்பநிலையும், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள 40°C வெப்பநிலையும் ஒரே மாதிரியாக உணரப்படாது. டெல்லியில் குறைந்த ஈரப்பதம் மற்றும் வறண்ட, வெப்பமான மேற்குக் காற்றுடன் கூடிய வறண்ட, தீவிர வெப்பம் நிலவுகிறது. இதனால் இங்கு ஒருவருக்கு ஒப்பீட்டளவில் எளிதாக வியர்க்கும். இதற்கு மாறாக, பாலக்காட்டில் அதிக ஈரப்பதத்துடன் (60-70% வரை) பிசுபிசுப்பான, புழுக்கமான வெப்பம் நிலவுவதால், அங்கு வெப்பம் மிகவும் அதிகமாக உணரப்படுகிறது. அங்கு உணரப்படும் வெப்பநிலை சுமார் 45°C-ஆக இருக்கலாம். இது எளிதாக வியர்ப்பதற்கு வழிவகுக்கிறது.


இந்த வேறுபாடு வெப்பக் குறியீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது ஒரு வகையான தோற்ற வெப்பநிலையாகும் (apparent temperature). இது, ஒப்பு ஈரப்பதத்தை உண்மையான வெப்பநிலையுடன் இணைக்கும்போது, ​​மனித உடல் எவ்வளவு சூடாக உணர்கிறது என்பதை அளவிடுகிறது. இதை, வெப்பநிலை மற்றும் காற்றின் வேகத்தை இணைக்கும் மற்றொரு வகையான தோற்ற வெப்பநிலையான காற்றுக் குளிர் குறியீட்டெண்ணிலிருந்து வேறுபட்டது. உங்கள் உடல் தன்னைத் தானே காத்துக்கொள்ள இயற்கையாக உருவாக்கும் சூடான காற்றின் மெல்லிய அடுக்கை அகற்றி, திறந்த தோலில் வானிலை எவ்வளவு குளிராக உணரப்படுகிறது என்பதை இது அளவிடுகிறது.


Original article : From Western Disturbance to El Niño: The climate terms you’re hearing this summer, explained. -Anagha Jayakumar

Share: