மருத்துவக் குறைபாடு அல்லது அலட்சியம் காரணமாக ஒரு மருத்துவர் மீது தொடரப்பட்ட வழக்குகள், அந்த மருத்துவர் இறந்துவிட்ட காரணத்தினாலேயே தானாகவே முடிவுக்கு வந்துவிடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் கோரும் நஷ்டஈடு தொகையை, மறைந்த மருத்துவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் அவரது சொத்துக்களின் மூலம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் இறந்துவிடுவதால் மட்டும் ஒரு மருத்துவ அலட்சியம் தொடர்பான வழக்கு தானாகவே முடிவுக்கு வந்துவிடாது. அந்த மருத்துவரின் சட்டப்பூர்வ வாரிசுகளை வழக்கில் ஒரு தரப்பினராகச் சேர்க்க முடியும். இருப்பினும், உயிரிழந்த மருத்துவரின் சொத்துக்கள் மூலம் ஈடுசெய்யக்கூடிய நிதிஇழப்பு தொடர்பான கோரிக்கைகளுக்காக மட்டுமே அவர்கள்மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் அடங்கிய அமர்வு மே மாதம் 4-ஆம் தேதியன்று ஒரு முக்கிய விளக்கத்தை அளித்தது. அதன்படி, ஒரு மருத்துவர் இறந்துவிட்டால், அவர் மீதான வலி, மன உளைச்சல் அல்லது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது போன்ற தனிப்பட்ட இழப்பீட்டு கோரிக்கைகள் அத்தோடு முடிவுக்கு வந்துவிடும்; ஆனால் நிதியிழப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அந்த மருத்துவரின் சட்டப்பூர்வ வாரிசுகளை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள முடியும் என்றும், அவர்களின் பொறுப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் அளவு என்பது நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள் மற்றும் ஆதாரங்களைப் பொறுத்தே அமையும் என்றும் அந்த அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் பின்னணித் தகவல்கள்
இந்த வழக்கு 1990-ஆம் ஆண்டு பீகாரில் நடந்த ஒரு கண் அறுவை சிகிச்சை தொடர்பானது. சுரேஷ் சந்திர ராய் என்பவரின் மனைவிக்கு வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டதால், அவர் பீகார் மாநிலம் முங்கரில் உள்ள டாக்டர் பி.பி. லால் என்பவரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்ற பல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றனர். அப்போது, வலது கண்ணின் பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடது கண்ணிற்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, 1994-ஆம் ஆண்டில் அவரது இடது கண்ணிற்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்கீழ் (Consumer Protection Act, 1986) தாக்கல் செய்யப்பட்ட ஒரு புகாரில், சிகிச்சைக்கான செலவுகள், கண்பார்வை இழப்பு, பயணச் செலவுகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்காக மொத்தம் 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது. இது தொடர்பாக 2003-ஆம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மருத்துவர் லால் அவர்களின் கவனக்குறைவே பாதிப்பிற்கு காரணம் எனத் தீர்மானித்து, புகார்தாரர்களுக்கு 2.6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இருப்பினும், பின்னாளில் பீகார் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (Bihar State Consumer Disputes Redressal Commission) இந்த உத்தரவைத் ரத்து செய்தது. கண்பார்வை இழப்பிற்கு குளுக்கோமா (Glaucoma) நோயே காரணம் என்றும், மருத்துவரின் கவனக்குறைவை நிரூபிக்கத் தேவையான மருத்துவ நிபுணர்களின் சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்றும் கூறி அந்த ஆணையம் இந்தத் தீர்ப்பை மாற்றியமைத்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Disputes Redressal Commission (NCDRC)) அமைப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த காலத்திலேயே, 2009-ஆம் ஆண்டில் டாக்டர் லால் காலமானார். அதைத்தொடர்ந்து அவருடைய மனைவியும் மகனும் இந்த வழக்கின் சட்டப்பூர்வ வாரிசுகளாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள், "மருத்துவ அலட்சியம் தொடர்பான புகார்கள் என்பது தனிநபர் சார்ந்த சட்டநடவடிக்கை என்பதால், சம்பந்தப்பட்ட நபர் இறந்தவுடன் அந்தப் புகாரும் முடிவுக்கு வந்துவிடும்; எனவே இந்த வழக்கைத் தங்களுக்கு எதிராகத் தொடர முடியாது என்று வாதிட்டனர். இவர்களது வாதத்தை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
சட்டம்
உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை ‘தனிநபர் சார்ந்த வழக்கு, அந்த நபரின் மரணத்துடன் இறந்துவிடும்’ என்ற பொருள்படும்படியான "actio personalis moritur cum persona" என்ற பொதுச்சட்டக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தது. இதன் பொருள், ஒரு தனிநபரின் வழக்குத் தொடரும் உரிமை அந்த நபரின் இறப்போடு முடிவுக்கு வந்துவிடும் என்பதாகும். பாரம்பரியமாக, இந்த விதிமுறை உடல் காயம் அல்லது தனிப்பட்ட பாதிப்புகள் தொடர்பான இழப்பீட்டுக் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட நபர் இறந்த பிறகு தொடரமுடியாது என்பதைக் குறிக்கிறது.
இந்தியச் சட்டம் எவ்வாறு மாறியது என்பதையும், பல்வேறு சட்டங்களின் மூலம் இந்தக் கோட்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் நீதிமன்றம் விளக்கியது. வாரிசுதாரர்கள் வழக்குச் சட்டம், 1855 (Legal Representatives Suits Act, 1855) என்பது, இறந்துபோன ஒரு நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பாகவோ அல்லது அவர்களுக்கு எதிராகவோ வழக்குத் தொடர அனுமதி அளித்தது. இருப்பினும், இந்த அனுமதி அந்த நபர் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு நடந்த செயல்களால் ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
1855-ஆம் ஆண்டின் மரண விபத்துக்கள் சட்டம் (The Fatal Accidents Act), ஒருவரின் தவறான அல்லது சட்டவிரோதமான செயலால் மரணம் ஏற்படும்போது, அதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் உரிமையை உருவாக்கியது. பின்னர், இந்தச் சட்ட விதிகள் 1925-ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் (Indian Succession Act) பிரிவு 306-உடன் இணைக்கப்பட்டன. தற்போது நாம் விவாதிக்கும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவு இதுவே ஆகும்.
இந்திய வாரிசுரிமைச் சட்டப்பிரிவு 306-ன்படி (Section 306), ஒரு நபர் இறக்கும் போது அவர் சார்பாகவோ அல்லது அவருக்கு எதிராகவோ நிலுவையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் (வழக்குகளை) தொடரும் உரிமை, அந்த நபரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சொத்து நிர்வாகிகளுக்கே மாற்றப்படும். இருப்பினும், அவதூறு வழக்குகள், தாக்குதல் அல்லது மரணத்தை ஏற்படுத்தாத தனிப்பட்ட உடல் காயங்கள் தொடர்பான வழக்குகளுக்கு இந்த விதி பொருந்தாது; அதாவது இத்தகைய தனிப்பட்ட பாதிப்புகள் தொடர்பான வழக்குகள் அந்த நபரின் மரணத்துடன் முடிவுக்கு வந்துவிடும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (Civil Procedure Code) ஆணை 22-ஐ (Order XXII) ஆய்வு செய்தது. இது ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அதில் தொடர்புடைய நபர் இறந்துவிட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவரைச் சேர்ப்பது பற்றிய நடைமுறைகளைக் கூறுகிறது. குறிப்பாக, வழக்கின் ஒரே ஒரு பிரதிவாதி (எதிர்த்தரப்பினர்) இறந்த பின்பும், அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமை இருக்கும்போதும், விதி 4 (Rule 4) பொருந்தும். இத்தகைய சூழலில், இறந்துபோன பிரதிவாதியின் சட்டப்பூர்வ வாரிசுகளை அல்லது பிரதிநிதிகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த இறந்துபோன நபருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (Consumer Protection Act) பிரிவு 13(7)-ன்படி, ஒரு நுகர்வோர் வழக்கில் புகார்தாரர் அல்லது எதிர்மனுதாரர் இறந்துவிட்டால், உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் முதல் அட்டவணையில் உள்ள ஆணை 22-ன் விதிகள் (Order XXII) பொருந்தும். இந்த விதிகளை ஒன்றிணைத்து ஆராய்ந்த நீதிமன்றம், ஒரு நபர் இறந்தபிறகு வழக்கை மேற்கொண்டு நடத்த முடியுமா என்பது, அந்த வழக்கைத் தொடரும் உரிமை (Right to sue) சட்டப்படி நீடிக்கிறதா என்பதைப் பொறுத்தது என்று கூறியுள்ளது. ஒரு நபரின் தனிப்பட்ட கௌரவம் அல்லது தனிப்பட்ட பாதிப்பு சார்ந்த புகார்கள் அந்த நபரின் இறப்போடு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், நிதி இழப்பு அல்லது சொத்து சார்ந்த புகார்கள் இருந்தால், அந்த வழக்கினை இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு எதிராகத் தொடரலாம். இருப்பினும், வாரிசுகள் தங்களுக்குக் கிடைத்த சொத்து மதிப்பின் அளவிற்கு மட்டுமே அந்த இழப்பிற்குப் பொறுப்பாவார்கள்.
வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறை விதிகளை ஆணை-22 (Order XXII) விளக்குகிறது. ஆனால், அந்த நபர் இறந்த பிறகு அந்த வழக்கை மேற்கொண்டு தொடர சட்டப்படி முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதை வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு-306 என்ற அடிப்படைச் சட்டம் தீர்மானிக்கிறது.
2001-ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்னதாக, பல்பீர் சிங் மகோல் vs தலைவர், சர் கங்கா ராம் மருத்துவமனை (Balbir Singh Makol vs Chairman, Sir Ganga Ram Hospital) என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பே முக்கிய வழிகாட்டுதலாக இருந்தது. அந்தத் தீர்ப்பின்படி, மருத்துவக் குறைபாடு அல்லது அலட்சியம் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்மீது தனிப்பட்ட முறையில் சுமத்தப்படுபவை. எனவே, அந்த மருத்துவர் இறந்துவிட்டால், அவருக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு எதிராக அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு மருத்துவர் இறந்துவிட்டால், அவருக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்கைத் தொடரவோ முடியாது. ஆனால், அந்த மருத்துவர் இறப்பதற்கு முன்பே அவருக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த வழக்கின் உரிமைகளைத் தொடர முடியும். அவதூறு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த முடிவை ஆணையம் எடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற அமர்வு இந்த வாதத்தை நிராகரித்தது. இந்தியச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல், நுகர்வோர் நீதிமன்றமான தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) பொதுவான சட்டக் கோட்பாட்டை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், தனிநபர் காயம் தொடர்பான உரிமைகோரல்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு பழைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) தவறாக முன்னுதாரணமாகக் கொண்டது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. உயிரிழந்த மருத்துவரின் சொத்துக்களில் இருந்து நிதிஇழப்பீடு கோரும் வழக்குகளைக்கூட, சட்டப்பிரிவு 306-ன்கீழ் முழுமையாகத் தடை செய்யப்பட்ட ஒன்றாகக் கருதியது தவறு என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
தனிப்பட்டரீதியிலான புகார்கள் அல்லது கோரிக்கைகள் ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்துவிடும் என்றும், ஆனால் அந்த நபரின் சொத்துக்களுக்கு நிதிஇழப்பு ஏற்படும் வகையிலான கோரிக்கைகள் இருந்தால், அவற்றை அந்த நபரின் வாரிசுகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் (Indian Succession Act) பிரிவு 306-ஐ விளக்கிய நீதிபதிகள் அமர்வு, "மரணம் விளைவிக்காத பிற தனிப்பட்ட காயங்கள்" தொடர்பான விதிவிலக்கை மிகவும் விரிவாகப் பொருள் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது. அதாவது, ஒரு நபர் இறந்த பிறகு அவரது தனிப்பட்ட காயம் தொடர்பான அனைத்து இழப்பீடு கோரிக்கைகளும் ரத்தாகிவிடும் என்று இதைக் கருதக்கூடாது. விதிவிலக்குகள் எப்போதுமே மிகத் துல்லியமாக விளக்கப்பட வேண்டும் என்றும், அவை சட்டத்தின் முதன்மை விதியை பலவீனப்படுத்தும் வகையில் அமையக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதைப் புரிந்து கொள்வதற்காக, தனிப்பட்ட உரிமைகளுக்கும் (Personal rights) சொத்து தொடர்பான உரிமைகளுக்கும் (Proprietary rights) இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியது. வலி, வேதனை அல்லது நற்பெயருக்கு ஏற்படும் இழப்பு தொடர்பான கோரிக்கைகள் தனிப்பட்ட தன்மையைக் கொண்டவை; எனவே ஒருவரது இறப்புடன் அவை முடிவுக்கு வந்துவிடுகின்றன. இத்தகைய உரிமைகளை மற்றொருவருக்கு மாற்ற முடியாது, இவை ஒரு நபரின் நல்வாழ்வோடு மட்டுமே தொடர்புடையவை. இருப்பினும், மருத்துவச் செலவுகள் அல்லது பண இழப்பு போன்ற ஒரு நபரின் சொத்து மதிப்பை பாதிக்கும் நிதி சார்ந்த இழப்பீடுகள், அந்த நபர் இறந்தபிறகும் தொடரும் என்று கூறப்படுகிறது. அத்தகைய கோரிக்கைகளை சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் அல்லது அவர்கள் பெற்ற சொத்துக்களின் வழியாகத் தொடர முடியும். இந்த உரிமைகள் மற்றவருக்கு மாற்றத்தக்கவை, பொருளாதார மதிப்புக் கொண்டவை மற்றும் ஒருவரின் செல்வத்தோடு தொடர்புடையவை ஆகும். தனிப்பட்ட உரிமைகள் ஒரு நபரின் மதிப்போடு தொடர்புடையவை என்றும், சொத்துரிமைகள் ஒரு நபரின் சொத்துக்களோடு தொடர்புடையவை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஒரு மக்கள் நலச்சட்டம் என்பதால் மட்டுமே, ஒருவரின் இறப்பிற்குப் பிறகும் அனைத்து வழக்குகளையும் தொடர முடியும் என்ற வாதத்தை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 13-7 (Section 13(7)), உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (Civil Procedure Code) ஆணை 22-ஐப் பின்பற்றினாலும், சம்பந்தப்பட்ட ஒருவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு வழக்கினைத் தொடர முடியுமா என்பது வாரிசுரிமைச் சட்டத்தின் (Succession Act) பிரிவு 306-ன்கீழ் உள்ள உரிமைச் சட்டத்தைப் பொறுத்தே அமையும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், ஒரு வழக்கை முன்னெடுத்துச் செல்லும் உரிமை அல்லது அதற்கான அடிப்படைத் தாக்கம் என்பது வெறும் நடைமுறை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது சட்டப்பூர்வமான உரிமைகள் சார்ந்தது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இறந்துபோன ஒருவருக்கு எதிராக ஏற்கனவே ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தொகையை அவரது சொத்துக்களில் இருந்து வசூலிக்க முடியும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏனென்றால், அந்த வழக்கின் அடிப்படைத் தேவை அந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. ஆனால் டாக்டர் லால் அவர்களின் வழக்கில், அவர் இறந்த சமயத்தில் அவருக்கு எதிராக எந்தத் தீர்ப்பும் அமலில் இல்லை. ஏனெனில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை மாநில ஆணையம் ஏற்கனவே ரத்து செய்திருந்தது.
இந்த வழக்கு இப்போது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) அமைப்புக்கு மீண்டும் மாற்றப்படும். அங்கு, முதலில் டாக்டர் லால் அவர்கள் பணியில் அலட்சியமாக இருந்தாரா என்பதை அந்த ஆணையம் தீர்மானிக்க வேண்டும். அவர் அலட்சியமாக இருந்தது உறுதிசெய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர் கோரும் இழப்பீட்டுத் தொகையில் எந்தப் பகுதியை டாக்டர் லால் விட்டுச் சென்ற சொத்துக்களில் இருந்து வசூலிக்க முடியும் என்பதையும் ஆணையம் முடிவு செய்யும்.
எதிர்வினைகள்
‘Legalexcel Attorneys’ நிறுவனத்தின் நிறுவனரான பேராசிரியர் டாக்டர் எஸ்.வி. ஜோகா ராவ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பானது ஒரு மருத்துவரின் தனிப்பட்ட பொறுப்பையும், அவர் இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற சொத்துக்களின் மீதான இழப்பீட்டு கோரிக்கைகளையும் தனித்தனியாகப் பிரிக்க முயல்கிறது என்று தெரிவித்தார். ஒரு மருத்துவரின் மகன் அல்லது மகளை மருத்துவரீதியான கவனக்குறைவிற்குப் பொறுப்பானவர்களாகக் கருத முடியாது. ஆனால், மறைந்த மருத்துவரின் வாரிசுகளுக்குக் கிடைத்த சொத்துக்களில் இருந்து நிதிரீதியான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேசமயம், இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று பேராசிரியர் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு: வாரிசுதாரர்களுக்கு எந்தச் சொத்தும் கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருந்தால், பணப் பொறுப்பு (Liability) எவ்வாறு பிரித்தளிக்கப்படும்? அவர் தொடர்ந்து கூறுகையில், நுகர்வோர் தரப்பிலிருந்து பார்க்கும்போது இந்தத் தீர்ப்பு நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால், வாரிசுதாரர்களை நிதிரீதியான பொறுப்பை ஏற்கச் செய்வது சில நேரங்களில் அநீதியாகத் தெரியக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி மருத்துவக் குழுவின் (Delhi Medical Council (DMC)) முன்னாள் பதிவாளர் டாக்டர் கிரிஷ் தியாகி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பு ஏற்கனவே மருத்துவத் தொழில் மற்றும் சட்டரீதியான வழக்குகளால் அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். முதலில், நோயாளிகளின் உறவினர்களிடமிருந்து மருத்துவர்கள் உடல்ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அதன்பிறகு சட்டப் போராட்டங்கள் (வழக்குகள்) வருகின்றன. இப்போது, ஒரு மருத்துவர் இறந்த பிறகும்கூட, அவரது குடும்பத்தினர் இழப்பீடு தொடர்பான வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார் .
நீண்டகால சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்த பயம், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தியாகி தெரிவித்தார். சட்டரீதியான சிக்கல்களைக் கையாளுவதற்குத் தேவையான சட்ட வல்லுநர்கள் குழு இருக்கும் பெரிய மருத்துவமனைகளுக்கு, இத்தகைய தீவிரமான வழக்குகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க நேரிடலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Original article : Medical negligence claims don’t die with the doctor: What SC’s latest ruling means for patients, families. -Amaal Sheikh