இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மதிப்பீட்டு முரண்பாடு. -விபின் சோந்தி மற்றும் மேகா சிங் சவுகான்

இந்தியா செயற்கை நுண்ணறிவுக்கான (Artificial Intelligence (AI)) உட்கட்டமைப்பில் ஒரு முக்கிய மையமாக மாறிவரும் அதேவேளையில், அந்த உட்கட்டமைப்பில் இயங்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது.


இந்தியாவின் வளர்ச்சி என்பது பாரம்பரியமாக நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு இணையாக ஒரு அமைதியான டிஜிட்டல் உருமாற்றம் (Digital Transformation) எவ்வித ஆரவாரமுமின்றி, ஒரு டிஜிட்டல் வழி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.


ஆயிரக்கணக்கான கணினிகளைத் தாங்கிய பிரம்மாண்டமான வசதிகள் ஒரு புதிய டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றன. தரவு மையங்கள் என்பவை டிஜிட்டல் பொருளாதாரத்தின் கண்ணுக்குத் தெரியாத நெடுஞ்சாலைகளைப் போலச் செயல்படுகின்றன. இவை தகவல்களைச் சேமித்தல், சிக்கலான கணக்கீடுகளை இயக்குதல் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் மேகக்கணிமை சேவைகளை (Cloud Services) ஆதரித்தல் போன்ற பணிகளைச் செய்கின்றன. அரசின் ஆதரவு மற்றும் அதிகரித்து வரும் தேவையால், இத்துறை பெரும் முதலீடுகளை ஈர்த்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் உலகளாவிய டிஜிட்டல் வலையமைப்பில் இந்தியா ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது.


இருப்பினும், இந்த வளர்ச்சி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) பொருளாதாரத்தின் அடித்தளத்தை மட்டுமே அமைக்கிறதா, அல்லது அதன் முழுமையான பலன்களையும் பெறுகிறதா?


உரிமை இல்லாத வன்பொருள்


குறைந்த செலவுகள், அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தை போன்ற வலுவான சாதகமான அம்சங்களால், இந்தியா டிஜிட்டல் உட்கட்டமைப்பின் முக்கிய மையமாக மாறி வருகிறது. இந்தக் காரணிகள் உலகளாவிய மேகக்கணிமை சேவை (Cloud) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகளை ஈர்க்கின்றன. இருப்பினும், இந்தியாவில் உள்நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி சற்று குறைவாகவே உள்ளது.


உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) காப்புரிமைகளில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 2–3% மட்டுமே உள்ளது. ஆனால், அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியா அதிக அளவிலான செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டாலும், அவற்றில் மிகச்சிறிய அளவே உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், ஆராய்ச்சிக்கான பொதுத்துறை செலவினம் (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.6–0.7% மட்டுமே என்றும் மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


ஸ்டான்போர்டு செயற்கை நுண்ணறிவு குறியீடு (Stanford AI Index) போன்ற உலகளாவிய தரவரிசைகள், ஆராய்ச்சி, முதலீடு மற்றும் கணினித் திறன் போன்ற துறைகளில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவைவிடப் பின்தங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இது ஒரு தெளிவான நிலையை உணர்த்துகிறது. இந்தியா தரவு பயன்பாடு மற்றும் அளவீட்டில் வலுவாக உள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் உயர்தர கண்டுபிடிப்புகளில் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.



இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பிற்கான ஒரு முக்கியமான இடமாக மாறி வருகிறது. ஆனால், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறனில் இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது. பல சேவையகங்கள் இந்தியாவில் அமைந்திருக்கலாம், ஆனால் மிகவும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் (AI Models) பொதுவாக மற்ற நாடுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. இந்தியாவிடம் ஏராளமான தரவுகள், உட்கட்டமைப்பு மற்றும் திறமையான மனிதவளம் இருந்தாலும், அதிக மதிப்புமிக்க வெளியீடுகளான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், தளங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்றவை இன்னும் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே உருவாக்கப்படுகின்றன.


இந்த இடைவெளியானது தேசிய அளவில் மட்டுமல்லாமல், நிறுவனங்களுக்குள்ளும் காணப்படுகிறது. பல நிறுவனங்கள் மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்புகளைக் கொண்டிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி உண்மையான உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திறனை அவை இன்னும் வளர்த்து வருகின்றன. உதாரணமாக, பல நிறுவனங்கள் மேகக்கணிமை (Cloud) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, தங்களுடைய பழைய வேலை முறைகளை மாற்றியமைக்காமல், அப்படியே மேகக்கணிமை முறைக்கு மாற்றுகின்றன. ஆனால், நிகழ்நேரத் தரவுகள் மற்றும் தானியங்கி முறைகளைப் பயன்படுத்தி பணிச்சூழலை மறுவடிவமைப்பு செய்தால் மட்டுமே முழுமையான பலனை அடைய முடியும் என்கின்றனர்.


பல்வேறு துறைகளிலும் இதேபோன்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது. உதாரணமாக, தனது செயல்பாடுகளை மேகக்கணிமை (Cloud) தொழில்நுட்பத்திற்கு மாற்றிய ஒரு நடுத்தர அளவிலான உற்பத்தி நிறுவனத்தில், உற்பத்திக் கண்காணிப்புத் திரைகள் (Production Dashboards) அனைத்து ஆலைகளிலும் உடனுக்குடன் தகவல்களைப் புதுப்பிக்கின்றன. இருப்பினும், பொருட்களை வாங்குவதற்கான ஒப்புதல்கள் இன்னும் பல வழிமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், முடிவுகளை எடுப்பதில் பல நாட்கள் தாமதம் ஏற்படுகிறது. அதாவது, தரவுகள், மின்னல் வேகத்தில் பரிமாறப்பட்டாலும், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு முறையில் ஏற்படும் மாற்றங்கள் மெதுவாகவே நடக்கின்றன.


இந்தக் குறைவான பயன்பாடு என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது ஒரு பெரிய தேசியப் பிரச்சினையைப் பிரதிபலிக்கிறது. இங்குள்ள சவால் என்பது உட்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவது மட்டுமல்ல; அந்த வசதிகளைத் திறம்பட பயன்படுத்துவதற்கானத் திறன்களை, நிறுவனங்கள் எவ்வளவு விரைவாக வளர்த்துக்கொள்கின்றன என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும்.


திறமை முரண்பாடு


உலகிலேயே தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தின் தேவைகள் முற்றிலும் மாறுபட்டவை. இந்தத் துறைக்கு ஆழ்ந்த ஆராய்ச்சித் திறன், மேம்பட்ட கணித அறிவு மற்றும் தொடர்ச்சியான சோதனைகள் மிகவும் அவசியம். இந்தியாவிற்குப் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவின் அதிநவீனத் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை இப்போதும் வளர்ந்துவரும் நிலையிலேயே உள்ளது. தற்போதுள்ள கல்வி மற்றும் தொழில்முறை அமைப்புகள் பெரும்பாலும் புதிய அடிப்படை கண்டுபிடிப்புகளை உருவாக்குவதைவிட, ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.


இது ஒரு திறமை முரண்பாட்டிற்கு வழிவகுக்கிறது: அதாவது, கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பதில் திறமை வாய்ந்த ஒரு பெரும் கூட்டமும், ஆனால் அதே சமயம் தொழில்நுட்பத்தின் அடிப்படை வளர்ச்சியில் ஈடுபடும் ஒரு சிறிய குழுவும் மட்டுமே இருக்கின்றனர். தற்போது நமக்குத் தேவை "T-வடிவ" (T-shaped) திறமையாளர்கள்—அதாவது, ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், அதே வேளையில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் ஆற்றலும் கொண்டவர்கள். இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர, நிறுவனங்களின் பயிற்சி முறைகளிலும் கல்வி முறைகளிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் அவசியமாகிறது.


உட்கட்டமைப்பு வசதிகள் பெருகி வந்தாலும், வணிக நிறுவனங்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சீராக இல்லை. பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரை, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே அவர்கள் இதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, பல்வேறு துறைகளில் இதைச் சோதித்தும் பார்க்கின்றனர். ஆனால், நடுத்தர நிறுவனங்கள் இதன் செலவு, தங்களின் தயார்நிலை மற்றும் லாபம் உள்ளிட்ட நிச்சயமற்ற தன்மையால் சற்று எச்சரிக்கையுடனேயே அணுகுகின்றன. பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கணக்கிட புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகின்றன, எனவே பெரிய அளவில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக சிறிய அளவிலான சோதனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


இதன் ஆழமான பிரச்சனை அதன் கட்டமைப்பில் உள்ளது. பல நிறுவனங்கள் தற்போதுள்ள வேலைமுறைகளுடன் சாதாரணமாகச் செயற்கை நுண்ணறிவை (AI) இணைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்தத் தொழில்நுட்பத்தையே மையமாக வைத்துத் தங்களது ஒட்டுமொத்தச் செயல்பாடுகளையும் மாற்றி அமைத்து வருகின்றன. இதில் ஒரு சிறிய குழுவினர் மிகப்பெரிய நன்மைகளை அடைந்து வருகின்றனர். ஆனால், மற்ற பல நிறுவனங்கள் இன்னும் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன.


புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளி


இந்தியாவின் புத்தொழில் நிறுவனச் (Startup) சூழல் தற்போது இரண்டு வெவ்வேறு பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒருபுறம், சில நிறுவனங்கள் "AI-washing" எனப்படும் போக்கில் ஈடுபடும் அபாயம் உள்ளது; அதாவது, தங்களிடம் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாதபோதும், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதாக மிகைப்படுத்திக் காட்டுகின்றன. மறுபுறம், சில நிறுவனங்கள் சொந்தமாகப் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் (Global AI models) உதவியுடன் வெறும் மேலோட்டமான இடைமுகத்தை (Interfaces) மட்டும் உருவாக்கிவிட்டு, இடைநிலை நிறுவனங்களைப் போலச் செயல்படுகின்றன.


அதேநேரத்தில், ஒரு சிறிய குழுவினர் ஆழமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணமாக, ‘Sarvam AI’  மற்றும் ‘Krutrim’ போன்ற புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு ஏற்ற மொழி மாதிரிகளை (Language Models) உருவாக்கி வருகின்றன. மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிய ‘Qure.ai’ நிறுவனம் ‘Computer Vision’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதேபோல், வேளாண் துறையை மேம்படுத்த ‘CropIn’ நிறுவனம் செயற்கை நுண்ணறிவை (AI) மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது.


இந்த உதாரணங்கள் அனைத்தும், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி என்பது உலகளாவிய தொழில்நுட்பங்களை அப்படியே பயன்படுத்துவதில் மட்டும் இல்லை என்பதை உணர்த்துகின்றன. மாறாக, உலகளாவிய தொழில்நுட்பங்களை இந்தியச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து, குறிப்பிட்ட துறைகளில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலமே இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி அடையும் என்பதையே காட்டுகிறது. 


இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மிகவும் வலிமையாக வளர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பொருளாதாரத்தில் இணைவதற்கு தரவு மையங்கள், இணைய இணைப்பு மற்றும் கணினித்திறன் ஆகியவை மிக முக்கியமானவை. அரசின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு திட்டங்களும், தனியார் நிறுவனங்களின் பெரும் முதலீடுகளுமே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் ஆகும். இது மற்ற வளர்ந்து வரும் நாடுகளிடம் இல்லாத ஒரு வலுவான அடித்தளத்தை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறன்களை வளர்ப்பதும், வணிக நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதுமே அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


செயற்கை நுண்ணறிவின் (AI) முழுமையான பலன்களைப் பெறுவது என்பது, இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை நாம் எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. கொள்கை வகுப்பாளர்கள் வெறும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும், உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற உள்ளூர் மொழி மற்றும் சூழல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கும் ஆதரவளிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் படிப்படியாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒரு சோதனையாகப் பார்ப்பதிலிருந்து மாறி, அதைத் தங்கள் அன்றாடத் தொழில் செயல்பாடுகளின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கத்துடன் ஆழமான தொழில்நுட்பத் திட்டங்களில் (Deep-technology ventures) முதலீடு செய்ய முன்வருவார்கள்.


இந்தியா ஏற்கனவே அளவு, திறமை மற்றும் தரவு ஆகிய துறைகளில் வலுவான சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பலங்களைப் பயன்படுத்தித் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளையும் நவீன மாற்றங்களையும் உருவாக்குவதுதான்.


தற்போதைய நிலை நீடித்தால், செயற்கை நுண்ணறிவுக்கான உட்கட்டமைப்பு வசதிகளில் பெரும்பகுதி இந்தியாவில் அமைய வாய்ப்புள்ளது. ஆனால், வெறும் உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்காமல், அதில் இயங்கும் அந்த அறிவார்ந்த மென்பொருட்களை உருவாக்குவதில்தான் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. வெறும் தரவு மையங்களை அமைப்பதோடு நம் பணி முடிந்துவிடவில்லை; இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அவற்றின் மூலம் மதிப்பையும் பொருளாதார பலன்களையும் ஈட்டுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதே இந்தியாவின் முன் தற்போது உள்ள உண்மையான சவாலாகும்.


கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்து கொண்டே இருந்தாலும், நிறுவனங்கள் தங்களது பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்குவது வெவ்வேறு நிலைகளில் சீரற்றதாகவே உள்ளது. இருப்பினும், ஒரு நிறுவனத்தின் உயர்மட்டக் குழு விவாதிக்கும் மிக முக்கியமான முன்னுரிமைப் பட்டியல்களில் செயற்கை நுண்ணறிவு தற்போது உறுதியான இடத்தைப் பிடித்துள்ளது.

             

           சோந்தி, Ashok Leyland மற்றும் ‘JCB India’ ஆகிய நிறுவனங்களின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஆவார். சவுகான், இந்தியத் தர நிர்ணயக் குழுவின் கொள்கைப் பிரிவில் பணியாற்றுகிறார். இங்கு அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே தவிர, அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் கருத்துக்கள் அல்ல.


Original Link: India’s AI value paradox.


Share:

அதிகாரத்தின் கருவிகளாக விலங்குகள் பயன்படுத்தப்படும்போது… -சோனாக்ஷி ஸ்ரீவஸ்தவா

இந்த விலங்குகள் எங்கிருந்து கொண்டுவரப்படும் மற்றும் இவை சுற்றுச்சூழலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) கேள்வி எழுப்பியுள்ளது.


கடந்த வாரம் வெளியான தகவலின்படி, இந்தியா–வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுக்க, பாம்புகள் மற்றும் முதலைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலிகள் அமைக்க முடியாத சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில், ஊடுருவல்காரர்களை அச்சுறுத்தித் தடுக்க இந்த ஊர்வன விலங்குகளைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. மற்றொரு முக்கியச் செய்தியாக, காடுகளில் விலங்குகளைத் திருட்டுத்தனமாக வேட்டையாடுவதைத் தடுக்க, கர்நாடகாவில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களிலும் மோப்ப நாய் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே பல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வேட்டைக்காரர்களைப் பின்தொடர்ந்து பிடிக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த இரண்டு கொள்கைகளுமே விலங்குகளை அரசின் பயன்பாட்டுப் பொருட்களாகவே கருதுகின்றன. பல வழிகளில், இந்திய அரசு இன்றும் விலங்குகளைக் ஆங்கிலேயர் ஆட்சிகால கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. அதாவது, அவை கட்டுப்படுத்தப்பட வேண்டிய அல்லது அழிக்கப்பட வேண்டிய உயிரினங்களாகவே கருதப்படுகின்றன. கடந்த 100 ஆண்டுகளில், விலங்குகளைக் கொல்வதில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மாறினாலும், அவற்றைப் பற்றிய அடிப்படை மனநிலை இன்னும் முழுமையாக மாறவில்லை.


இந்தியாவின் மிக உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்ட விலங்கான புலியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 1973-ஆம் ஆண்டில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' (Project Tiger) தொடங்கப்பட்டதில் இருந்து, புலிகளுக்கான வாழ்விடத்தை உருவாக்க காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதே அரசின் முக்கியக் கொள்கையாக இருந்து வருகிறது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வது குறித்த கருத்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், அது சாத்தியமில்லை என்றே அரசாங்கம் பெரும்பாலும் கூறி வருகிறது. நாகர்ஹோலே புலி காப்பகத்தில் (Nagarhole Tiger Reserve) உள்ள ஜென்னு குருபா (Jennu Kuruba) போன்ற ஆதிவாசி குழுக்கள், தங்களால் புலிகளுடன் இணைந்து வாழமுடியும் என்று கூறியபோதும், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.


அரசாங்கம் பல விலங்குகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய உயிரினங்களாகக் கருதுகிறது. அவை அந்தப் பகுதியை விட்டு வெளியே வரும்போது, அவை "பிரச்சனைக்குரிய விலங்குகள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மற்ற விஷயங்களைப் போலவே, விலங்குகளுக்கு இடையேயும் ஒரு அடுக்குமுறை (Hierarchy) உள்ளது. முன்பெல்லாம், புலிகள் மனிதர்களைக் காக்கும் காவலர்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால், இப்போது அவை மனிதர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. அதேவேளையில், அகழிகளில் உள்ள முதலைகள், நுழைவாயில்களில் இருக்கும் பாம்புகள் மற்றும் மனிதர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வேட்டை நாய்கள் போன்றவை மனிதர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


வனப்பகுதியை ஒரு "கோட்டை" போலக் கருதி, விலங்குகள் அந்த எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்கள், "புலிகளுக்காகவே இந்த இடம் ஒதுக்கப்பட்ட பிறகு, அவை ஏன் இன்னும் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன?" என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்த எல்லைகள் முழுமையான பாதுகாப்பு கொண்டவை அல்ல; செல்வாக்கு மிக்கவர்கள் பணத்தைப் பயன்படுத்தி இந்த எல்லைகளுக்குள் நுழைய இன்னும் வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.






நமீபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் (Kuno National Park) விடப்பட்ட சிறுத்தைகள், அந்தப் பூங்காவை விட்டு வெளியேறும் போதெல்லாம் மீண்டும் பிடிக்கப்பட்டு உள்ளேயே கொண்டு வரப்படுகின்றன. சிறுத்தைகள் இயல்பாகவே நீண்ட தூரம் பயணம் செய்யும் குணம் கொண்டவை என்றாலும், அவை இந்த ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது போன்ற இன்னும் பல பூங்காக்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன). இந்தச் சிறுத்தைகள் காட்டில் விரிவடைந்து செல்லும்போது ஏற்படும் சவால்களைச் சமாளிக்க, அரசாங்கம் முழுமையான திட்டங்களை இன்னும் வகுக்கவில்லை என்பது போலத் தெரிகிறது.


இந்த விலங்குகள் எங்கிருந்து கொண்டுவரப்படும் என்பது குறித்தும், அவை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் எல்லைப் பாதுகாப்புப் படை கவலை தெரிவிவித்துள்ளது. மேலும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மற்றும் நடமாடும் மக்களைப் பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன. வழக்கம்போல, அவர்களே இதற்கான மிகப்பெரிய பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


இந்த மிருகங்களை தொடர்ந்து சிறைப்படுத்துவதையும், பின்னர் தேவைப்படும்போது கட்டவிழ்த்து விடுவதையும் அரசாங்கம் வழக்கமாகக் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது.


ஸ்ரீவாஸ்தவா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மனித-விலங்கு உறவு குறித்து எழுதுகிறார்.


Original Link: When animals become instruments of power.


Share:

சட்டத்தால் நிறுவப்பட்ட உரிய செயல்முறை மற்றும் நடைமுறையை எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவு குறிப்பிடுகிறது? - பிரியா குமாரி சுக்லா


முக்கிய அம்சங்கள்:


• இந்த 79 சட்டங்களில், மசோதாவானது (Bill) நான்கு முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது:


குற்றமற்றதாக்குதல் (Decriminalisation): இந்த மசோதா 805 குற்றங்களுக்கான குற்றவியல் தண்டனைகளை நீக்குகிறது. சிறைத்தண்டனை அல்லது அபராதங்களுக்குப் பதிலாக, இனி இவை எச்சரிக்கைகள் மற்றும் பணரீதியான அபராதங்கள் போன்ற உரிமையியல் நடவடிக்கைகள் மூலம் கையாளப்படும். இந்த மீறல்களுக்கு இனி காவல்துறை நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் இருக்காது; இருப்பினும், பெரும்பாலான வழக்குகளில் இவை தொடர்ந்து ஒழுங்குமுறைப்படுத்தப்படும்.


நீக்கம் (Omission): இந்த மசோதாவானது 125 குற்றப்பிரிவுகளை நீக்க முன்மொழிகிறது. அவசியமற்ற குற்றங்கள் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அவை இனி குற்றங்களாகக் கருதப்படமாட்டாது. பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, ஆனால், ஏற்கனவே பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita (BNS)) என்ற பொதுச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட குற்றங்களும் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் இருந்து நீக்கப்படுகின்றன. இருப்பினும், அவை பொதுச் சட்டத்தின்கீழ் தொடர்ந்து தண்டனைக்குரிய குற்றங்களாகவே கருதப்படும்.


சமரசம்: முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, முப்பத்தைந்து வகையான குற்றங்கள் சமரசத்தீர்வு செய்யக்கூடியவையாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம், விதியை மீறியவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்தி, நீண்டகால நீதிமன்ற வழக்குகளைத் தவிர்த்துவிட்டு வழக்கை முடித்துக்கொள்ள முடியும். இருப்பினும், இந்தச் சலுகை வழங்கப்பட்டாலும், சட்டத்தின் பார்வையில் இந்தச் செயல்கள் தொடர்ந்து குற்றவியல் தன்மை கொண்டவையாகவே கருதப்படும்.


தண்டனைகளை முறைப்படுத்துதல்: இந்த மசோதாவில் 53 குற்றங்களுக்கான தண்டனைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிறைத்தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற மிகக் கடுமையான மற்றும் பொருத்தமற்ற தண்டனைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அபராதத் தொகைகள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


இந்தத் திருத்தங்களுக்குப் பின்னால் ஒரு முக்கியமான நோக்கம் உள்ளது. சட்ட மீறல்களை அரசு கையாளும் விதத்தை மிகவும் அறிவுப்பூர்வமாகவும், நியாயமான முறையிலும் மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி ஆகும். 




உங்களுக்குத் தெரியுமா?


• தண்டனை விதிமுறைகளை முறைப்படுத்தும் முயற்சியாக, இந்த மசோதா பல்வேறு துறைகளைச் சார்ந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. சட்டத்தின்கீழ் குற்றங்களாகக் கருதப்படும் 1,018 செயல்கள் மற்றும் தவறுகளை, இந்தத் திருத்தங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றமற்றவையாக மாற்றி அவற்றிற்கான தண்டனைகளை முறைப்படுத்துகின்றன.


• வணிகம் மற்றும் தொழில்துறைத் துறையில், இந்த மசோதாவானது தேயிலைச் சட்டம் (Tea Act), கயிறு இழைத் தொழில்துறைச் சட்டம் (Coir Industry Act) மற்றும் சட்டபூர்வ அளவீட்டியல் சட்டம், 2009 (Legal Metrology Act, 2009) போன்ற சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. நகராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, டெல்லி மேம்பாட்டுச் சட்டம் (Delhi Development Act), டெல்லி மாநகராட்சிச் சட்டம் (Delhi Municipal Corporation Act) மற்றும் பாளையங்கள் சட்டம், 2006 (Cantonments Act, 2006) போன்ற சட்டங்களில் இந்த மசோதா மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது.


• போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், இந்த மசோதா சில முக்கியச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அவை, மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicles Act), கடலோரக் கப்பல் போக்குவரத்துச் சட்டம் (Coastal Shipping Act) மற்றும் பெட்ரோலியம் மற்றும் கனிமங்களுக்கான குழாய்கள் (நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைப் பெறுதல்) சட்டம், 1962 [Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962] ஆகியவையாகும்.


• இந்த மசோதா, சாதாரண நடைமுறை விதிகளை மீறுபவர்கள்மீது குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. முக்கியமாக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்துச் சட்டங்களான கால்நடை அத்துமீறல் சட்டம் (Cattle Trespass Act), கால்நடை இறக்குமதி சட்டம் (Live Stock Importation Act) மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் (Indian Succession Act) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்கிறது.


• இந்த மசோதா  ‘நீதிமன்ற அபராதம்’  (Fine) மற்றும் 'நிர்வாக அபராதம்' (Penalty) ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தைத் தெளிவுபடுத்துகிறது. நீதிமன்ற அபராதம் என்பது நீதிமன்றத்தால் விதிக்கப்படுபவை, மிகக் குறைந்த தொகையாக இருந்தாலும், இதை விதிக்க முழுமையான குற்றவியல் நீதி நடைமுறை அவசியமாகிறது. இதற்கு நேர்மாறாக, நிர்வாக அபராதம் என்பது உரிமையியல் நடைமுறை சார்ந்த தன்மையுடையது. இவை நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நேரடியாக விதிக்கப்படுபவை. இதனால், சட்ட விதிகளை மிக வேகமாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்த முடிகிறது.


Original Link: Which constitutional article mentions the due process and procedure established by law? 


Share:

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அரசியல் நிர்ணய சபையிலேயே இதனை எதிர்த்த பெண்களை நினைவுகூர்தல் - சித்தி தேஷ்முக்

அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களுக்கு ஹன்சா மேத்தாவும் ரேணுகா ரேயும் தலைமை தாங்கினர். இதற்கு ஆதரவாக இருந்த ஒரேநபர், ஒரு ஆண் ஆர். கே. சௌத்ரி ஆவார்.


இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான சட்ட வரலாறு மிகவும் சிக்கலானதாக இருந்து வருகிறது. இன்று இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், அதன் தொடக்கம் 1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அரசியலமைப்பு சபை விவாதங்களிலேயே தொடங்கியது.


இந்த விவாதங்களில், சபையின் ஒரு பகுதியாக இருந்த 15 பெண்களில் இருவர், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராகத் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் ஒரு ஆண்  ஆர். கே. சௌத்ரி ஆவார்.


மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கோரும் அரசியலமைப்புத் திருத்த மசோதா (Women’s Reservation Bill, 2023) 2008-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டபோது, இந்த விவாதம் மீண்டும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இருப்பினும், இந்தச் சட்டம் நிறைவேற மேலும் 15 ஆண்டுகள் ஆனது. 023-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, 2023 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இது அரசியலமைப்பின் 106-வது திருத்தச் சட்டமாக மாறியது.

தற்போது, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பிறகே இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரிய மற்றொரு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தக் கருத்தை எதிர்த்த பெண்கள்


அரசியலமைப்பு நிர்ணயசபை விவாதங்களின்போது, ​​பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான முக்கிய நபர்களாக ஹன்சா மேத்தா மற்றும் ரேணுகா ரே ஆகியோர் இருந்தனர். இந்த இரண்டு நபர்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய செயற்பாட்டாளர்கள் ஆவர். ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சுதேசி இயக்கங்களில் பங்கேற்றதுடன், பெண்களின் நலனை மேம்படுத்துவதற்காகச் செயல்படும் 'அகில இந்தியப் பெண்கள் மாநாடு' (All India Women’s Conference) எனப்படும் ஒரு அரசு சாரா அமைப்பிலும் பணியாற்றியுள்ளனர்.


பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவில் (United Nations subcommittee on the Status of Women) உறுப்பினராக இருந்ததன் காரணமாக மேத்தா முக்கியத்துவம் பெற்றார். அதேவேளையில், ரே 1949-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர்.


1946-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, ​​சுதந்திரப் போராட்டத்தின் எல்லைகளைப் பெண்கள் மத்தியில் விரிவுபடுத்தியதற்காக மகாத்மா காந்திக்கு மேத்தா தனது நன்றியைத் தெரிவித்தார். 1937-ஆம் ஆண்டு பம்பாய் சட்டமன்றப் பேரவையில் பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளராகப் போட்டியிட்ட மேத்தா, பெண்கள் ஒருபோதும் சிறப்புச் சலுகைகளைக் கோரியதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.


"நாங்கள் கேட்டதெல்லாம் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி மட்டுமே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமமான மதிக்கத்தக்க உறவு மேம்பட வேண்டுமானால், அதற்கு அடிப்படையான 'சமத்துவத்தை' தான் நாங்கள் கோருகிறோம். அது இல்லாமல், இருபாலினருக்கும் இடையே உண்மையான ஒத்துழைப்பு சாத்தியமில்லை," என்றும் அவர் கூறினார்.


தனித் தொகுதிகள் அல்லது இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் மீது மேத்தாவுக்கு இருந்த தயக்கமானது, அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த பெண்களை ஒன்றிணைத்த ஒற்றுமை உணர்விலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.


1947-ஆம் ஆண்டு, ரே மேத்தாவின் கருத்தை வலுவாக ஆதரித்தார். 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் (Government of India Act) பெண்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை, தான் எதிர்த்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


பெண்களுக்கு எனத் தனி இடஒதுக்கீடு இருக்கும்போது, ​​அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், பொதுப் பிரிவின்கீழ் வரும் இடங்களுக்கு அவர்களைப் பரிசீலிக்கும் கேள்வி வழக்கமாக எழுப்பப்படாது என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில்  அல்லது அவர் குறிப்பிட்டது போல, ‘திறமையின்’ அடிப்படையில் மட்டுமே முன்னேற வேண்டும். மேலும், இடஒதுக்கீடு என்பது பெண்களின் வளர்ச்சிக்கு ஒரு தடையாகவும், எங்கள் அறிவுத்திறன் மற்றும் ஆற்றலுக்கே இழைக்கப்படும் அவமதிப்பாகவும் அமையும் என்றும்  குறிப்பிட்டார்.


அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக மட்டுமல்லாமல், இந்தியத் தூதராகவும் பணியாற்றிய விஜயலட்சுமி பண்டிட்டை அவர் சுட்டிக்காட்டினார். பண்டித் அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது அவர் ஒரு பெண் என்பதற்காக அல்ல, மாறாக அவரது “நிரூபிக்கப்பட்ட தகுதியின்” காரணமாகவே என்று ரே குறிப்பிட்டார்.


மாற்றுக் கருத்து


நவம்பர் மாதம் 9-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டுநடைபெற்ற விவாதத்தில், ஆர். கே. சௌத்ரி ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை முன்வைத்தார். அதாவது, ஒரு பெண் நம்மிடம் ஏதாவது கேட்கும்போது, அதை எளிதாகப் பெற்று அவருக்குக் கொடுத்துவிடலாம் என்பது நமக்குத் தெரியும் என்று அவர் கூறினார். ஆனால், அவர் எதையும் குறிப்பாகக் கேட்காதபோது, அந்தப் பெண் என்ன விரும்புகிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது என்று தெரிவித்தார். 


ஒரு "நாடாளுமன்ற உறுப்பினராகவும், உலகியல் அனுபவம் வாய்ந்த மனிதராகவும்" தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பேசுவதாக அவர் கூறினார். ஆண்களிடம் அன்றாட வாழ்வில் காணப்படும் ஒருவித அக்கறையின்மையே பெண்களுக்கு எதிரான கட்டமைப்புரீதியான பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.  அதன் அடிப்படையிலேயே அவரது வாதம் அமைந்திருந்தது. அந்தக்குழுவில் இருந்தவர்கள் "பெண்களுடன் குடும்ப உறவு இல்லாதவர்கள்" என்றும், அதன் காரணமாகவே பெண்களுக்குச் சாதகமான சட்டங்களைக் கொண்டுவர அவர்கள் தயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அவைக்கு வெளியேயும் இந்தியாவின் வீதிகளிலும் ஆண்களிடம் இருந்த 'பெண்களை மதிக்கும் பண்பு' மறைந்துவிட்டதாக அவர் வருத்தப்பட்டார்.  பெண்கள் பொதுவாக ஆண்களின் கண்ணியத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும்  இன்றைய இளைஞர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட பெண்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை  என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.


சௌத்ரியின் வாதத்தை ரே அவர்கள் உடனடியாக மறுத்தார். அதே நேரத்தில், அவரை கிண்டலாக "பெண்களின் ஆதரவாளர் மற்றும் பாதுகாவலர்" என்று அழைத்த அவர், தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.


சௌத்ரி அவர்கள் முன்வைத்த வாதம், சட்டமன்றமானது கோட்பாட்டுரீதியான சமத்துவத்திற்கும் நடைமுறை சமத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தவறியதைச் சுட்டிக்காட்டியது. இந்த இடைவெளியை அவர் ஒரு வகை "அமைப்புரீதியான புறக்கணிப்பு" என்று கருதினார். இடஒதுக்கீடு இந்த இடைவெளியைக் குறைக்க உதவும் என்பதே அவரது பார்வையாக இருந்தது.


இந்தியப் பெண்களை ஒரு குறிப்பிட்ட சமூகமாகப் பிரித்து, அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒரு குழுவாகச் சித்தரிப்பதாக சௌத்ரியின் வாதம் அமைந்தது. மேலும், பெண்களுக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கினால், அவர்கள் பொதுத் தொகுதிகளுக்குள் வராமல், தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளட்டும். இல்லையெனில், நாம் அவ்வப்போது பலவீனமடைந்து, அவர்களுக்குத் தகுதியற்ற இடங்களை விட்டுக்கொடுத்துவிடுவோம் என்றும் கூறினார். 


அன்றைய நிலை vs  இன்றைய நிலை


1949-ஆம் ஆண்டில், அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்கள், 'திறமை' மற்றும் 'சம உரிமை' ஆகியவற்றின் து மிகுந்த நம்பிக்கை வைத்தனர். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை போன்ற திட்டங்கள் மூலம் இந்தச் சமத்துவத்தை அடைந்துவிடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.


ஆனால், புள்ளிவிவரங்கள் காலப்போக்கில் வேறுபட்ட உதாரணத்தை காட்டுகின்றன. இன்று, மக்களவையில் பெண் உறுப்பினர்கள்  13.6%-ஆக உள்ளனர். இது 1951–52-ஆம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலில் இருந்த 4.9% உறுப்பினர்களைவிட ஒரு தெளிவான முன்னேற்றம் என்றாலும், சமமான பிரதிநிதித்துவத்தை அடைய இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.


இந்தக்கட்டுரையின் ஆசிரியர், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'  இதழில் ஒரு பயிற்சிப் பணியாளராகப் பணியாற்றுகிறார்.


Original Link: As Bill on women’s reservation in Houses is defeated, remembering the women who opposed it in Constituent Assembly,


Share:

இந்தியாவில் உள்ள வௌவால்களும் அவற்றின் பாதுகாப்பு நிலையும். -குஷ்பூ குமாரி

2024–25-ஆம் ஆண்டு இந்திய வௌவால்களின் நிலை அறிக்கையானது, ஆராய்ச்சியின் பற்றாக்குறையினால் இந்தியாவில் உள்ள வௌவால் இனங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை  காட்டுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள 16 உயிரி வகையைச் சேர்ந்த வவ்வால் இனங்கள் உள்ள இடங்கள் எவை? இந்த பாலூட்டியுடன் தொடர்புடைய முக்கிய நோய்கள் எவை?


தற்போதைய செய்தி :


இந்தியாவில் 135 வௌவால் இனங்கள் உள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய பாலூட்டி வரிசையாக வௌவால்கள் விளங்கினாலும், ஆராய்ச்சி மையங்களில்   பற்றாக்குறை நிலவுகிறது என்று, இந்தியாவின் வௌவால்களின் நிலை (SoIbats), 2024-25 என்ற முதல் தேசிய மதிப்பீடு கூறுகிறது. இந்த SoIbats மதிப்பீடானது, இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation (NCF)) மற்றும் வௌவால் பாதுகாப்பு சர்வதேச அமைப்பு (Bat Conservation International (BCI)) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.





முக்கிய அம்சங்கள்:


1. வௌவால்கள் தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்வதிலும், பழங்களின் விதைகளை பரப்புவதிலும், பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும், தங்கள் எச்சங்கள் மூலம் மண்ணுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், வௌவால்கள் குறித்த தரவுப் பற்றாக்குறை கவலைக்குரியது என்று   அறிக்கை சுட்டிக்காட்டியது.


இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு மன்றத்தின் சிவப்புப் பட்டியல் மதிப்பீடு


இனங்கள்

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை 

கோலார் இலைமூக்கு வௌவால் (Hipposideros hypophyllus)




ஆபத்தான நிலையில் உள்ளவை

நிகோபார் இலைமூக்கு வௌவால் (Hipposideros nicobarulae),

போமோனா இலைமூக்கு வௌவால் (Hipposideros pomona),

சலீம் அலியின் பழ வௌவால் (Latidens salimalii),

நிகோபார் பறக்கும் நரி வௌவால் (Pteropus faunulus),

அந்தமான் குதிரைப்பாதை வௌவால் (Rhinolophus cognatus)

பாதிக்கும் நிலையில் உள்ளவை

துர்கா தாஸின் இலை மூக்கு வௌவால் (Hipposideros durgadasi)




2. 135 வவ்வால் இனங்களில், 16 இனங்கள் (மொத்த வவ்வால் இனங்களில் சுமார் 12 சதவீதம்) இந்தியாவின் மட்டுமே காணப்படும் அழிவு நிலையில் உள்ள இனங்களாகும். இவற்றில் 7 இனங்கள், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அச்சறுத்தல்களை எதிர்கொண்டவை என்ற பிரிவின் கீழ் உள்ளன.


3. தரவுகளின் பற்றாக்குறை வௌவால் இனங்களின் நிலை குறித்த உண்மையான  தகவலை வழங்கவில்லை என்று  அறிக்கை கண்டறிந்துள்ளது. மதிப்பீடு செய்யப்படாத அல்லது தரவுகள் பற்றாக்குறையாக உள்ள 35 இனங்கள் உள்ளன.


4. உதாரணமாக, மேகாலயாவில் சுரங்கத் தொழில் மற்றும் துன்புறுத்தல் காரணமாக நடைபெறும் வேட்டையால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள காசியன் இலைமூக்கு வௌவால் (Khasian Leaf-nosed bat), பாதுகாப்பு நிலை பட்டியலை தயாரிக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு மன்றத்தினால் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.


5. வௌவால் இனங்களின் பரவலில் வேறுபாடுகள் இருப்பதை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மேற்குவங்கம்  68 வௌவால் இனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மேகாலயாவில் 66, உத்தரகாண்டில் 52, கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா 41, சிக்கிமில் 43 என அடுத்தடுத்த இடங்களில் உள்ள இனங்கள் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன.



6. நகரமயமாக்கலின் தாக்கங்கள் இருந்தபோதிலும், டெல்லியில் 15 வௌவால் இனங்கள் காணப்பட்டன. குறைந்த வனப்பகுதி மற்றும் வேளாண் விரிவாக்கம் காரணமாக ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 5 இனங்கள் மட்டுமே காணப்பட்டன.


7. இந்த அறிக்கையில், வௌவால்கள் இயற்கை வாழ்விடங்களிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளிலும் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. குகைகளும் மரங்களும் அவை தங்கும் மிகவும் பொதுவான இரண்டு இடங்களாக இருந்தன. சிறகுகள் கொண்ட பாலூட்டிகள், குகைகளில் நிலவும் நிலையான குறுகிய-காலநிலையின் காரணமாகவும், சுற்றுச்சூழல் மாறுபாடுகளிலிருந்தும் வேட்டையாடும் விலங்குகளிலிருந்தும் அவை அளிக்கும் பாதுகாப்பின் காரணமாகவும் குகைகளிலேயே தங்கி வாழ்கின்றன.


8. மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வரில் உள்ள ராபர்ஸ் கேவ், பிலிப்ஸ் லாங்-ஃபிங்கர்டு வௌவால்களின் மிகப்பெரிய தங்குமிடமாக இருக்கலாம். இங்கு இனப்பெருக்க காலத்தில்  1 லட்சம் வௌவால்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில், பாதிப்படைந்த கட்டிடங்களின் இடுக்குகள், மரக் கட்டைகள் முதல் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னங்கள் வரை வௌவால்கள் தங்குவது கண்டறியப்பட்டுள்ளது.


9. அச்சுறுத்தலுக்கு ஆளான மற்றும் குறிப்பிட்ட இடத்தில் வாழும் பல உயிரினங்கள், ஏறக்குறைய முழுமையாகக் குகைகளிலேயே தங்குவதாக அறியப்படுகின்றன. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கோலார் இலைமூக்கு வௌவால் (IUCN சிவப்பு பட்டியல் வகைப்படுத்தலின்படி) கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிரானைட் மலை அடிவாரத்தில் இருக்கும்  ஒரு குகையில் மட்டுமே வாழ்ந்து வருகிறது.


வௌவால்களைப் பற்றி:


1. வௌவால்கள் உலகின் மிகச்சிறிய பாலூட்டிகள் ஆகும். வௌவால் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, வௌவால்கள் சிறிய நாயின் அளவிற்கு பெரியதாகவும் அல்லது பெரிய தேனீ (bumblebee) அளவிற்கு மிகவும் சிறியதாகவும் இருக்கலாம்.

2. மிகப்பெரிய வௌவால்கள் பறக்கும் நரிகள் ஆகும். இவற்றின் இறக்கைகளின் நீளம் 2 மீட்டர் வரையிலும், உடல் எடை 1.5 கிலோகிராம் வரையிலும் இருக்கும். மறுமுனையில் தேனீ வௌவால் உள்ளது. இது 2 கிராம் எடை கொண்டது. இதுவே உலகின் மிகச்சிறிய பாலூட்டியாகும்.


3. பெரும்பாலான மைக்ரோபேட்கள், உயிரியல் ஒலித் திசைமாற்று அமைப்பு மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமான எதிரொலி இடமறிதல் முறையைப் பயன்படுத்துகின்றன. வௌவால்கள் தங்கள் குரல்வளை (larynx) மூலம் அதிக அதிர்வெண் கொண்ட அல்ட்ராசோனிக் ஒலிகளை (சாதாரணமாக 20–200 kHz) உருவாக்கி, அவற்றை வாய் அல்லது மூக்கின் வழியாக வெளியிடுகின்றன. இந்த ஒலி அலைகள் பொருட்களில் மோதிப் பின்னெதிரொலியாக (echo) திரும்புகின்றன. இந்தத் துடிப்புகள் பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும்போது, ​​அவற்றின் மூளை உடனடியாகப் புரிந்துகொண்டு தங்கள் சுற்றுப்புறத்தை வரைபடமாக்குகிறது.


4. வௌவால்கள் குருடானவை அல்ல. அவற்றின் கேட்கும் திறனைப் போலவே, பார்க்கும் திறனும் இனத்திற்கு இனம் மாறுபடும். பறக்கும் சிறகுகளின் அசைவு போன்ற காட்சி சைகைகள் வேட்டையாடும் வௌவால்களுக்கு திசையை கண்டறிய உதவுகின்றன. மேலும், வெளிச்சம் போன்ற சைகைகள், இரவில் தங்கும் இடத்திலிருந்து (roost) வெளியே வரவேண்டிய நேரத்தை அறிய வௌவால்களுக்கு உதவுகின்றன என்று வௌவால் பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


5. வௌவால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகள் ஆகும். வௌவால்கள் பெரும்பாலும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அசையாமல் நின்ற நிலையிலிருந்து மேலே எழும்புவதற்குத் தேவையான சக்தியை அவற்றின் இறக்கைகள் உருவாக்குவதில்லை. மேலும், மேலே எழும்புவதற்குத் தேவையான வேகத்தை அடைவதற்காக அவற்றால் ஓடமுடியாத அளவுக்குப் பின்னங்கால்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. தேவைப்படும்போது மேலே பறப்பதற்கு, தொங்கிக்கொண்டிருப்பது அவற்றுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.





16  உள்ளூர் வௌவால் இனங்கள்

இடங்கள்

(i) சோம்ப்ரே வௌவால்

(ii) மேகாலயா தடித்த கட்டைவிரல் வௌவால் (கிளிஷ்ரோபஸ் மேகாலயானஸ்)

(iii) மழைக்காடு குழாய் மூக்கு வௌவால் (முரினா ப்ளூவியாலிஸ்) .

(iv) பீட்டரின் குழாய் மூக்கு கொண்ட வெளவால் (ஹார்பியோலா கிரிசியா) .

அழிவு நிலையில் உள்ள 16 இனங்களில், இந்த 4 இனங்கள் இமயமலை மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் காணப்படுகின்றன.



(v) சலீம் அலியின் பழ வெளவால் (Latidens salimalii)

(vi) பொமோனா இலைமூக்கு வௌவால் (Hipposideros pomona)

(vii) பெய்டனின் மீசை மயோடிஸ் (Myotis peytoni)

(viii) ஸ்ரீனியின் நீண்ட விரல் வௌவால் (Miniopterus srinii)

மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(ix) நிக்கோபார் பறக்கும் நரி (Pteropus faunulus)

(x) ஹோம்ஃப்ரேயின் குதிரைவாலி வெளவால் (ரைனோலோபஸ் அண்டமனென்சிஸ்)

(xi) அந்தமான் குதிரைவாலி வெளவால் (Rhinolophus cognatus)

(xii) நிக்கோபார் இலை மூக்கு வௌவால் (Hipposideros nicobarulae)

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(xiii) கோலார் இலை மூக்கு வௌவால் (ஹிப்போசிடெரோஸ்)

ஹைப்போஃபில்லஸ்)

(xiv) மறைவான கம்பளி வௌவால் (கெரிவூலா கிரிப்டா)

தீபகற்ப இந்திய பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(xv) துர்கா தாசரின் இலை மூக்கு வௌவால்துர்கா தாஸ் இலைமூக்கு வௌவால்

கங்கைச் சமவெளி பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.


(xvi) மிட்ரெட் ஹார்ஸ்ஷூ பேட் (ரைனோலோபஸ் மிட்ராடஸ்)

சோட்டாநாக்பூர் பீடபூமி பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.



வௌவால்களும் அவற்றுடன் தொடர்புடைய நோய்களும்


1. வௌவால்கள் மகரந்தச் சேர்க்கை, விதை பரவல், பூச்சிக் கட்டுப்பாடு போன்ற சூழல் மண்டல சேவைகளை வழங்குவதன் மூலம் முக்கிய சூழலியல் பணிகளைச் செய்கின்றன. அதே நேரத்தில், சில வௌவால் இனங்கள் ஹெண்ட்ரா வைரஸ், நிபா வைரஸ் மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி (Severe acute respiratory syndrome (SARS)) போன்ற கொரோனா வைரஸ்கள் (CoVs) உள்ளிட்ட, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்க்கிருமிகளின் இருப்பிடங்களாகவும்  இனங்கள் அறியப்படுகின்றன.


2. உலக வெப்பநிலையில் ஏற்பட்ட  முக்கிய மாற்றம்  மற்றும் நிபா, ஹென்ட்ரா வைரஸ் போன்ற ஹெனிபா வைரஸ்கள், ரேபிஸ் நோயை உண்டாக்கும் லைசா வைரஸ்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களின் வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், வௌவால்கள் ஏறக்குறைய 52-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இது, ஓம்புயிரிக்கும் வைரஸுக்கும் இடையிலான இணை-சிற்றின உருவாக்கத்தின்  நீண்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டுகிறது.


3. வௌவால்களின் பருவகால அல்லது பகுதி இடம்பெயர்வு, பல இனங்கள் ஒன்றாக தங்கும் பழக்கம் (mixed-species roosting), பெரிய கூட்டமாக வாழ்தல், சிறிய பாலூட்டிகளுடன் ஒப்பிடும்போது அசாதாரணமாக நீண்ட ஆயுட்காலம் போன்ற சுற்றுச்சூழல் பண்புகள், வைரஸ்கள் மக்கள்தொகைகளின் உள்ளும் இடையிலும் நீடித்து பரவ உதவுகின்றன. மேலும், கருப்பையில் தாயிலிருந்து குட்டிகளுக்கு வைரஸ்கள் பரவுவதால், குட்டிகளும் வைரஸ் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.


4. நிபா வைரஸ்: இது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது முக்கியமாக வௌவால்கள், பன்றிகள், நாய்கள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளைப் பாதிக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் பரவி, கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும். பாதிக்கப்பட்ட வௌவால்களின் உமிழ்நீர் அல்லது சிறுநீரால் அசுத்தமடைந்த பச்சை பேரீச்சைப் பழச்சாறு அல்லது பழத்தை உட்கொள்வதன் மூலம் இந்தத் தொற்று பரவலாம். மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிற பகுதிகளில் ஆண்டுதோறும் நோய்ப்பரவல்களை ஏற்படுத்தும் நிபா வைரஸின் முக்கியத் தேக்கங்களாக, பறக்கும் நரி (Pteropus) இனத்தைச் சேர்ந்த பழ வௌவால்கள் கண்டறியப்பட்டுள்ளன.

5. மார்பர்க் வைரஸ் (Marburg Virus): வௌவால்கள் ஃபிலோவைரஸ்கள்  எனப்படும் RNA வைரஸ் குழுவின் முக்கிய இனங்களாகக் கருதப்படுகின்றன. இதில் மார்பர்க் வைரஸ் அடங்குகிறது. மார்பர்க் வைரஸ் நோய் (Marburg virus disease (MVD),), முன்பு மார்பர்க் இரத்தக் காய்ச்சல் (Marburg haemorrhagic fever) என்று அழைக்கப்பட்டது. மிகவும் கடுமையான பல சமயங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இரத்தக் காய்ச்சல் நோயாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ரௌசெட்டஸ் பழ வௌவால்கள் மார்பர்க் வைரஸின் இயற்கையான இனங்களாகக் கருதப்படுகின்றன.


6.கொரோனா வைரஸ்கள்: இவை பாலூட்டிகள் மற்றும் பறவைகள் ஆகிய இரண்டிலும் காணப்படும், மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த வைரஸ் குழுக்களில் ஒன்றாகும். இந்த வைரஸ்கள் சுவாச நோய்களை ஏற்படுத்துவதோடு, சுவாசத் துளிகள் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் பரவுகின்றன. இது, பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது மிதமான வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் சில குதிரைக்குளம்பு வௌவால்களில் (ஒரு வகை பூச்சி உண்ணும் வௌவால்கள்) காணப்படும் வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.


Original Link: Bats in India and their conservation status.

Share:

மத்திய அரசு நீதித்துறை வரம்புமீறல் என்று கூறுவது, உண்மையில் நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் செயலாகும். -அபிக் சிம்னி மற்றும் மோக்ஷா ஷர்மா

ஒரு அடிப்படை உரிமையின் மீதான கட்டுப்பாடாக அறநெறி ‘நெறிமுறை’ (morality) என்றால் என்ன என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்போது, அவை சமூகம் எதை அங்கீகரிக்கிறது என்பதைப் பார்க்காமல், அரசியலமைப்புச் சட்டம் எதைக் கோருகிறது என்பதையே பார்க்கின்றன. அந்தக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.


சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் வைக்கப்பட்ட வாதங்கள், ஒரு வித்தியாசமான உச்ச நீதிமன்றத்திற்கான வழக்காகவே அமைகின்றன. அந்த வாதம் இதுதான்: பல ஆண்டுகளாக, நீதிமன்றங்கள், மத மற்றும் கலாச்சார நடைமுறைகளை அரசியலமைப்புத் தரங்களுக்கு உட்படுத்தும் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளன. ஆனால் இது நீதித்துறையின் வரம்புமீறலாகும். அத்தகைய நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் சமூகங்களே அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் விட்டுவிட வேண்டும்.


அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் மையத்தில், இரண்டு முதன்மையான வாதங்கள் அமைந்துள்ளன.


முதலாவது, மத நடைமுறைகளை நீதிமன்றங்களால் மறுஆய்வு செய்ய முடியாது என்று கூறுகிறது. ஒரு மத நடைமுறை சட்டமாக்கப்படும்போது மட்டுமே அதை ஆராய நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஒரு மத நிறுவனம், சட்டப்பூர்வ விதி ஏதுமின்றி ஒரு நடைமுறையைக் கட்டாயப்படுத்தினால், சட்டம் இல்லாத நிலையில், நீதிமன்றம் ஒரு சட்ட சவாலை ஏற்கக்கூடாது. ஒரு நடைமுறைக்குச் சட்டம் இருந்தாலும் கூட, அந்த விதிமுறை அரசியலமைப்பின் சொந்த விழுமியங்களுடன் ஒத்துப்போகிறதா என்ற பரந்த கேள்வி, அனுமதிக்கப்பட்ட விசாரணைக்கு அப்பாற்பட்டது.


இதன் விளைவாக, நீதிமன்றம், பாராளுமன்றத்திற்குச் செயல்பட அதிகாரம் இருந்ததா என்று மட்டும் கேட்பதோடு தன்னை வரையறுக்கப்படுத்திக் கொள்கிறது. அந்த நடைமுறை, அரசியலமைப்பு கோருவதோடு ஒத்துப்போகிறதா என்றோ, அரசியலமைப்பு எதன் மீது நிலைபெற்றுள்ளதோ அந்த நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களுக்கு அது பதிலளிக்கிறதா என்றோ அதனால் கேட்க முடியாது. அந்தக் கேள்வியைத் தடுப்பதற்காகவே இரண்டாவது வாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது வாதம், இந்த சிக்கலைத் தீர்க்கக்கூடிய ஒரே நிலையை நீக்கிவிடுகிறது. உதாரணமாக, அரசியலமைப்பு ஒழுக்கநெறிக் கோட்பாடு என்பது, மத நடைமுறைகளை மறுஆய்வு செய்வதில் இடமில்லாத ஒரு தெளிவற்ற நீதித்துறை கண்டுபிடிப்பு என்று கூறுகிறது. அந்தக் கொள்கையே நேரடியானது: ஒரு அடிப்படை உரிமையின் மீதான கட்டுப்பாடாக ஒழுக்கநெறி என்றால் என்ன என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்போது, சமூகம் எதை அங்கீகரிக்கிறது என்பதைப் பார்க்காமல், அரசியலமைப்பு எதைக் கோருகிறது என்பதையே அவை பார்க்கின்றன.


மத்திய அரசு அந்தக் கொள்கை நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. அதற்குப் பதிலாக: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சமூகத்தின் மேலாதிக்க மனசாட்சியான சமூக ஒழுக்கநெறி இருக்க வேண்டும். அரசியலமைப்பின் 25-வது விதி, மத நடைமுறைக்கான உரிமையை ஒழுக்கநெறிக்கு உட்படுத்துகிறது. மத்திய அரசின் பார்வையில், அந்த ஒழுக்கநெறி என்பது மேலாதிக்க சமூகம் எதை நம்புகிறதோ அதுவே ஆகும். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு நடைமுறை, அந்தத் தரத்தை தானாகவே பூர்த்தி செய்கிறது.


திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் இதே நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. மத்திய அரசு இதைச் சட்டமியற்றும் முதன்மை என்று கட்டமைத்த இடத்தில், வாரியம் அதை அரசியலமைப்புச் சட்டத்தில் கட்டமைத்துள்ளது. 25-வது விதியில் உள்ள "ஒழுக்கநெறி" என்ற வார்த்தை, சட்டத்தை உருவாக்கியவர்களால் எந்தவித தகுதியுமின்றி வைக்கப்பட்டது என்றும், அந்தத் தேர்வை நீதிமன்றங்கள் மாற்றியமைக்க முடியாது என்றும் அது வாதிடுகிறது. விளைவு ஒன்றுதான்: ஆதிக்கம் செலுத்தும் அமைப்பு எது அறம் எனத் தீர்மானிக்கிறதோ, அதுவே அறமாகிறது. ஆனால், அதிகாரக் கட்டமைப்புகளுக்குள் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் நீதித்துறை சவாலுக்கு அப்பாற்பட்டது அல்ல. அதனால்தான் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன.


“அரசியலமைப்பு அறநெறி” என்ற சொற்றொடர் சமீபத்திய நீதிபதிகளால் உருவானதல்ல: அம்பேத்கர் அதை 1948-ல் அரசியலமைப்புச் சபையில் பயன்படுத்தினார். ஆனால், நீதித்துறை மறுஆய்வின் ஒரு சாராம்சமான அளவுகோலாக அதன் பயன்பாடு சமீபகாலத்தில்தான் உள்ளது. மேலும் அந்தப் பயன்பாட்டைத்தான் மத்திய அரசும் வாரியமும் எதிர்க்கின்றன. வாரியம் இன்னும் ஒரு படி மேலே சென்றது. அம்பேத்கர் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தியது ஒரு நடைமுறை சார்ந்ததே என்றும், அது புதிதாக உருவாகும் குடியரசில் நிறுவனங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே அவர் அதைப் பயன்படுத்தினார். வாரியத்தின்படி, மத நடைமுறைகளை மறுஆய்வு செய்வதற்கான ஒரு அடிப்படையாக அதைப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை.


படிநிலை அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூகம், ஜனநாயக வழிமுறைகள் மூலம் அந்தப் படிநிலை அமைப்பை காலவரையின்றி மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர முடியும் என்பதை அம்பேத்கர் புரிந்துகொண்டிருந்தார். ஜனநாயகப் பெரும்பான்மையினர் தங்களுக்குப் பயனளிக்கும் படிநிலை அமைப்புகளைக் கலைத்துவிடுவார்கள் என்று அரசியலமைப்பால் சாதாரணமாகக் கருதிக்கொள்ள முடியாது. அதை எதிர்ப்பதற்காகவே அரசியலமைப்பு அறம் கட்டமைக்கப்பட்ட ஒரு சயல்முறையாக இருந்தது. இதற்கு மாறாக, சமூக அறநெறி இந்தப் போக்கை எதிர்ப்பதில்லை. அது பெரும்பாலும் ஏற்கனவே உள்ள சமூகப் பாரபட்சங்களைப் பிரதிபலிக்கிறது.


மத்திய அரசின் கட்டமைப்பின்படி, நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்த கோட்பாடுகள் தொடக்கத்திலிருந்தே சட்டப்பூர்வமானவை அல்ல. பொதுநல வழக்குகள், தாங்கள் எதிர்க்கும் நடைமுறைகளில் தனிப்பட்ட அக்கறை இல்லாத தரப்பினரால் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், குரலற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்வை சித்தாந்த வழக்குகளுக்கான கருவியாக மாற்றுகின்றன என்றும் அது வாதிடுகிறது. அரசியலமைப்பு அறநெறியானது, தனிப்பட்ட நீதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் உரையில் எந்த ஆதாரமும் இல்லாத, தன்னிச்சையாக மிதக்கும் ஒரு தரத்தை வழங்குகிறது. இவை நீதித்துறை மறுஆய்வுக்கான கருவிகள் அல்ல என்று மத்திய அரசு கூறுகிறது. அவை சமூகம் மற்றும் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நீதித்துறை வரம்பு மீறுவதற்கான கருவிகளாகும்.


மத்திய அரசு நீதித்துறை வரம்பு மீறல் என்று அழைப்பது, நடைமுறையில், , பின்தங்கிய மக்களைப் பாதுகாக்கும் நீதிமன்றங்களின் நீண்டகால வரலாறாகும். பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கில், கொத்தடிமைகள் ஒரு கடிதத்தின் மூலம் நீதிமன்றத்தை அணுகினர். ஹுசைனாரா கத்தூன் வழக்கில், தங்களுக்கு விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனைக் காலத்தைவிட நீண்டகாலம் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, பணியிடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விசாகா வழிகாட்டுதல்கள் (Vishakha Guidelines) வெளியிடப்பட்டன. நவதேஜ் சிங் ஜோஹர் வழக்கில், பரஸ்பர சம்மதத்துடன் கூடிய ஓரினச்சேர்க்கை உறவுகள் குற்றமற்றதாக்கப்படுவதற்கு அரசியலமைப்பு அறநெறியே அடிப்படையாக இருந்தது. மத நடைமுறைகளை மறுஆய்வு செய்வதிலிருந்து இந்தக் கருவிகளை நீக்கினால், பெரும்பான்மையினர் ஒப்புக்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்தே நீதிமன்றத்தின் வாக்குறுதி அமையும்.

மசூதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண், அக்யாரிக்குள் (நெருப்புக் கோயில்) நுழையத் தடை செய்யப்பட்ட பார்சி பெண், பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்ட தாவூதி போஹ்ரா பெண் தொடர்பானது. இந்த மூன்று வழக்குகளும் தற்போது இந்த அமர்வின் முன் உள்ளன. ஒவ்வொன்றும், ஆதிக்க சமூகம் உண்மையாக நம்பும் ஒரு நடைமுறையை உள்ளடக்கியது. மத்திய அரசின் கட்டமைப்பின்கீழ், இந்த சமூகங்களின் சமூக ஒழுக்கமே இங்கு பொருந்தும் அளவுகோலாகும். இந்த ஒவ்வொரு வழக்கிலும், வரலாற்றுரீதியாகத் தீர்வுகளை உருவாக்கியுள்ள அரசியலமைப்பு வாதங்களைப் பயன்படுத்த முடியாது. அதாவது சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றில் வேரூன்றிய வாதங்கள் இனி முன்வைக்கப்பட முடியாது.


மத நிறுவனங்களும் நிர்வாக முடிவுகளும் தங்களின் சொந்த ஆய்வுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், நீதிமன்றங்கள் ஏன் பெரும்பான்மையினரின் விருப்பப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதற்கான கவனமாக கட்டமைக்கப்பட்ட ஒரு வாதம்தான் இந்த நீதிமன்றத்தின் முன் வாதிடப்படுகிறது. இந்தக் கோரிக்கை நீதித்துறை கட்டுப்பாடாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், இது குரலற்றவர்களைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் பயன்படுத்தும் ஒரே கருவிகளை அகற்றுகிறது.


நீதிமன்ற அமர்வு இறுதி முடிவை எடுக்கும். ஆனால் நீதிமன்றத்தின்முன் இருக்கும் முஸ்லிம் பெண், பார்சி பெண், தாவூதி போஹ்ரா பெண் ஆகியோருக்கு, இந்தப் பிரச்சினை ஒருபோதும் கருத்தியல்ரீதியானதாக இருந்ததில்லை.


கட்டுரையாளர்கள் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.



Original Link: What Centre calls judicial excess is actually the courts protecting those left behind


Share: