முக்கிய அம்சங்கள்:
• இந்த 79 சட்டங்களில், மசோதாவானது (Bill) நான்கு முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது:
குற்றமற்றதாக்குதல் (Decriminalisation): இந்த மசோதா 805 குற்றங்களுக்கான குற்றவியல் தண்டனைகளை நீக்குகிறது. சிறைத்தண்டனை அல்லது அபராதங்களுக்குப் பதிலாக, இனி இவை எச்சரிக்கைகள் மற்றும் பணரீதியான அபராதங்கள் போன்ற உரிமையியல் நடவடிக்கைகள் மூலம் கையாளப்படும். இந்த மீறல்களுக்கு இனி காவல்துறை நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் இருக்காது; இருப்பினும், பெரும்பாலான வழக்குகளில் இவை தொடர்ந்து ஒழுங்குமுறைப்படுத்தப்படும்.
நீக்கம் (Omission): இந்த மசோதாவானது 125 குற்றப்பிரிவுகளை நீக்க முன்மொழிகிறது. அவசியமற்ற குற்றங்கள் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அவை இனி குற்றங்களாகக் கருதப்படமாட்டாது. பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, ஆனால், ஏற்கனவே பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita (BNS)) என்ற பொதுச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட குற்றங்களும் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் இருந்து நீக்கப்படுகின்றன. இருப்பினும், அவை பொதுச் சட்டத்தின்கீழ் தொடர்ந்து தண்டனைக்குரிய குற்றங்களாகவே கருதப்படும்.
சமரசம்: முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, முப்பத்தைந்து வகையான குற்றங்கள் சமரசத்தீர்வு செய்யக்கூடியவையாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம், விதியை மீறியவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்தி, நீண்டகால நீதிமன்ற வழக்குகளைத் தவிர்த்துவிட்டு வழக்கை முடித்துக்கொள்ள முடியும். இருப்பினும், இந்தச் சலுகை வழங்கப்பட்டாலும், சட்டத்தின் பார்வையில் இந்தச் செயல்கள் தொடர்ந்து குற்றவியல் தன்மை கொண்டவையாகவே கருதப்படும்.
தண்டனைகளை முறைப்படுத்துதல்: இந்த மசோதாவில் 53 குற்றங்களுக்கான தண்டனைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிறைத்தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற மிகக் கடுமையான மற்றும் பொருத்தமற்ற தண்டனைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அபராதத் தொகைகள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களுக்குப் பின்னால் ஒரு முக்கியமான நோக்கம் உள்ளது. சட்ட மீறல்களை அரசு கையாளும் விதத்தை மிகவும் அறிவுப்பூர்வமாகவும், நியாயமான முறையிலும் மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
• தண்டனை விதிமுறைகளை முறைப்படுத்தும் முயற்சியாக, இந்த மசோதா பல்வேறு துறைகளைச் சார்ந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. சட்டத்தின்கீழ் குற்றங்களாகக் கருதப்படும் 1,018 செயல்கள் மற்றும் தவறுகளை, இந்தத் திருத்தங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றமற்றவையாக மாற்றி அவற்றிற்கான தண்டனைகளை முறைப்படுத்துகின்றன.
• வணிகம் மற்றும் தொழில்துறைத் துறையில், இந்த மசோதாவானது தேயிலைச் சட்டம் (Tea Act), கயிறு இழைத் தொழில்துறைச் சட்டம் (Coir Industry Act) மற்றும் சட்டபூர்வ அளவீட்டியல் சட்டம், 2009 (Legal Metrology Act, 2009) போன்ற சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. நகராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, டெல்லி மேம்பாட்டுச் சட்டம் (Delhi Development Act), டெல்லி மாநகராட்சிச் சட்டம் (Delhi Municipal Corporation Act) மற்றும் பாளையங்கள் சட்டம், 2006 (Cantonments Act, 2006) போன்ற சட்டங்களில் இந்த மசோதா மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது.
• போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், இந்த மசோதா சில முக்கியச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அவை, மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicles Act), கடலோரக் கப்பல் போக்குவரத்துச் சட்டம் (Coastal Shipping Act) மற்றும் பெட்ரோலியம் மற்றும் கனிமங்களுக்கான குழாய்கள் (நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைப் பெறுதல்) சட்டம், 1962 [Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962] ஆகியவையாகும்.
• இந்த மசோதா, சாதாரண நடைமுறை விதிகளை மீறுபவர்கள்மீது குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. முக்கியமாக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்துச் சட்டங்களான கால்நடை அத்துமீறல் சட்டம் (Cattle Trespass Act), கால்நடை இறக்குமதி சட்டம் (Live Stock Importation Act) மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் (Indian Succession Act) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்கிறது.
• இந்த மசோதா ‘நீதிமன்ற அபராதம்’ (Fine) மற்றும் 'நிர்வாக அபராதம்' (Penalty) ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தைத் தெளிவுபடுத்துகிறது. நீதிமன்ற அபராதம் என்பது நீதிமன்றத்தால் விதிக்கப்படுபவை, மிகக் குறைந்த தொகையாக இருந்தாலும், இதை விதிக்க முழுமையான குற்றவியல் நீதி நடைமுறை அவசியமாகிறது. இதற்கு நேர்மாறாக, நிர்வாக அபராதம் என்பது உரிமையியல் நடைமுறை சார்ந்த தன்மையுடையது. இவை நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நேரடியாக விதிக்கப்படுபவை. இதனால், சட்ட விதிகளை மிக வேகமாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்த முடிகிறது.
Original Link: Which constitutional article mentions the due process and procedure established by law?