காட்டுத் தீயைக் கண்காணித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான புவிசார் செயற்கைக்கோளை விரைந்து விண்ணில் செலுத்துவது உட்பட பல்வேறு முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட ‘Forest fires in the Himalayan Region, its adverse effects and mitigation measures’ என்ற புதிய அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சூழலில், காட்டுத் தீ பற்றிய விரிவான தகவல்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. காலநிலை மாற்றத்திற்கும் காட்டுத்தீயின் தீவிரத்திற்கும் இடையே ஏதேனும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை அறிய, பகுதிவாரியாக ஆய்வு நடத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதில் வெப்பநிலை மாறுபாடுகள், மழைப்பொழிவு மற்றும் வறண்ட காலங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2. இமயமலைப் பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை எதிர்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (National Disaster Response Force (NDRF)) குறைந்தது இரண்டு மண்டல மையங்களையாவது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என்று இக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், உலர்ந்த பைன் மர ஊசி இலைகளைச் சேகரிப்பதை ஊக்குவிக்கவும், அதற்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் நிதிச் சலுகைகளை வழங்கவும் தேசிய பைன்-ஊசி இலை பயன்பாட்டுக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
3. இந்தக் குழு, மேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீக்கான காரணங்கள், அதன் தாக்கங்கள், கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தது. இந்தப் பகுதிகள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 17 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த காட்டுத் தீ சம்பவங்களில் 57 சதவீதத்திற்கு இவையே காரணமாக இருக்கின்றன.
காட்டுத் தீ என்றால் என்ன, அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
4. இந்தியாவில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management (NIDM)), காட்டுத் தீ என்பதை — கட்டுப்படுத்தப்படாமல், இயற்கை எரிபொருட்களான மரங்கள், தாவரங்கள், காய்ந்த இலைச் சருகுகள் மற்றும் மக்கிய கரிமப் பொருட்களை எரித்துக் கொண்டு சுயமாகப் பரவும் தீ என வரையறுக்கிறது. இந்தத் தீ முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி எரியும்போது, அவை ‘காட்டுத்தீ' (wildfires) என்று அழைக்கப்படுகின்றன.
5. காட்டுத் தீ பரவும் தன்மையைப் பொறுத்து பரவலாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது – தரைத்தளத் தீ (Ground fire), மேற்பரப்புத் தீ (Surface fire) மற்றும் மரஉச்சித் தீ (Crown fire).
(i) மண்ணில் உள்ள மக்கிய கரிமப் பொருட்களை எரிக்கும் தீ தரைத்தளத் தீ எனப்படும். இவை தாவரங்களுக்கு அடியில் மிகவும் மெதுவாக எரியக்கூடியவை.
(ii) நிலத்தில் கிடக்கும் காய்ந்த இலைகள், மரக்கிளைகள் மற்றும் பிற பொருட்கள் எரிவதால் பெரும்பாலும் மேற்பரப்புத் தீ ஏற்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்படும் காட்டுத் தீ போல, இவ்வகைத் தீ மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவும்.
(iii) மரஉச்சித் தீ, ஒரு மரத்தின் உச்சியிலிருந்து மற்றொரு மரத்தின் உச்சிக்கு மிக வேகமாகப் பரவி, கடுமையான வெப்பத்துடனும் எரியக்கூடியவை. இவ்வகைத் தீ இந்தியாவில் ஏற்படுவது மிகவும் அரிது.
இந்தியாவின் காடுகள் எந்த அளவிற்கு காட்டுத்தீயால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளன?
6. 2023-ஆம் ஆண்டின் இந்திய வன நிலை அறிக்கையின்படி (Indian State of Forest Report (ISFR)), இந்தியாவின் மொத்த காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 8,27,356.95 சதுர கிலோமீட்டராகும். இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் சுமார் 24 சதவீதம் ஆகும்.
7. இந்திய வன ஆய்வுத் துறையின் வலைத்தளத் தகவலின்படி, இந்தியாவின் வனப்பகுதிகளில் சுமார் 54.40 சதவீதப் பகுதி எப்போதாவது காட்டுத்தீயால் பாதிக்கப்படுகிறது. 7.49 சதவீத வனப்பகுதி மிதமான அடிக்கடி ஏற்படும் தீயையும், 2.40 சதவீதப் பகுதி அதிகப்படியான தீ விபத்துகளையும் எதிர்கொள்கின்றன. அதேவேளையில், சுமார் 35.71 சதவீத வனப்பகுதி காட்டுத்தீயால் பெரியளவில் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக உள்ளது.
8. இந்தியாவில் காட்டுத்தீக் காலம் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கும். வெப்பநிலை, மழைப்பொழிவு, தாவரங்களின் தன்மை மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் தீ பரவுவதையும் அதன் தீவிரத்தையும் தீர்மானிக்கின்றன. காட்டுத்தீ உருவாவதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் தேவை: எரிபொருள் (எரியும் பொருட்கள்), ஆக்ஸிஜன் வாயு மற்றும் வெப்பநிலை. காய்ந்த இலைகள் இக்காட்டுத்தீ பரவுவதற்கான முக்கிய எரிபொருளாகச் செயல்படுகின்றன.
9. பயிர்க்கழிவுகள் மற்றும் காய்ந்த தாவரங்கள் குளிர்காலத்திற்குப் பிறகும் கோடைக்காலத்திலும் அதிகரிப்பதால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காட்டுத் தீ மிகவும் பரவலாக ஏற்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக இமயமலை மாநிலங்களில், குளிர்காலத்திலும் காட்டுத் தீ அடிக்கடி ஏற்படுவதோடு அதன் தீவிரமும் அதிகரித்துள்ளது.
10. 2015-ஆம் ஆண்டு இந்திய வன ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, வறண்ட இலையுதிர் காடுகளில் (Dry deciduous forests) மிகக் கடுமையான காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமானது. ஆனால், எப்போதும் பசுமையாக இருக்கும் காடுகள், பகுதி பசுமை காடுகள் (Semi-evergreen) மற்றும் மிதமான வெப்பநிலை கொண்ட மலைக்காடுகள் ஒப்பீட்டளவில் காட்டுத்தீயால் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன.
காட்டுத் தீ ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள் யாவை?
11. வேளாண் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முறையற்ற நிலப் பயன்பாட்டினால் மனிதர்களால் தான் பெரும்பாலான காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. அரசு அறிக்கை ஒன்றின்படி, நல்ல தரமான புற்கள் வளர்வதற்காகவும், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதை மறைப்பதற்காகவும், வேட்டையாடுவதற்காகவும் உள்ளூர்வாசிகளே காடுகளுக்குத் தீ வைக்கின்றனர். மேலும், உலர்ந்த இலைகள் மின்சாரக் வடங்களுடன் உரசும்போது ஏற்படும் உரசலாலும், மின்னல் தாக்குதலாலும் கூட காட்டுத் தீ உருவாகிறது.
12. குறிப்பாக, காடுகளுக்குத் தீ வைப்பது பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும், பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
13. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) கூற்றுப்படி, காட்டுத் தீக்கான முக்கியக் காரணங்கள்:
(i) மேற்கு இமயமலைப் பகுதியில் 'பைன்' (Pine) மர ஊசி இலைகள் அதிகமாகக் குவிந்து கிடப்பது.
(ii) மத்திய-மேற்கு இந்தியாவில் 'மகுவா' இலைகள் (தெண்டு பட்டா) சேகரிக்கும்போது மூட்டப்படும் தீ.
(iii) வடகிழக்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மாற்று வேளாண் சாகுபடி முறை (Shifting cultivation).
14. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சராசரி வெப்பநிலை உயர்வு, சீரற்ற மழைப்பொழிவு, நீண்ட வறட்சி மற்றும் மின்னல் போன்றவை இதன் தீவிரத்தை மேலும் அதிகரிக்கின்றன. மேற்கு இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீக்கு முக்கியக் காரணம் பருவமழைக்கு முந்தைய அதிகப்படியான வெப்பம், உலர்ந்த பைன் மர ஊசி இலைகளின் எரிபொருள் சேர்க்கை மற்றும் மனிதர்களின் தொடர்பினால் ஏற்படும் தீ விபத்துக்களே ஆகும். ஆனால், கிழக்கு இமயமலையிலோ வளிமண்டல வறட்சி மற்றும் வேளாண் சாகுபடி சார்ந்த முறைகளுக்கு இடையிலான சிக்கலான காரணங்களால் இந்தத் தீ விபத்துகள் ஏற்படுகின்றன என்று நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டுள்ளது.
பைன் மரங்களுக்கு ஏன் காட்டுத்தீ எளிதில் பற்றிக்கொள்கிறது?
சிர் பைன் மரங்கள் (Chir pine trees) மிக எளிதில் தீப்பற்றக்கூடியவை. மேலும், இவை இமயமலைப் பகுதியில் அதிகளவில் பரவியுள்ளன. கோடைக்காலத்தில், இவற்றின் காய்ந்த ஊசி போன்ற இலைகளிலிருந்து (உள்ளூரில் 'பிரூல்' (Pirul) என்று அழைக்கப்படுகிறது) வெளிவரும் பிசின் (resin) மிக வேகமாகத் தீப்பிடிக்கும் தன்மையுடையது. மரங்களிலிருந்து பெருமளவில் உதிரும் இந்த இலைகள், காட்டின் தரைப் பகுதியை முழுமையாக மூடிவிடுகின்றன. இவ்வாறு குவிந்து கிடக்கும் இலைகளில், சிகரெட் துண்டின் சிறிய பொறிபட்டால்கூட மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுவிடும்.
இந்தியாவில் காட்டுத் தீ எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது?
1. இந்தியாவின் காட்டுத் தீ கண்காணிப்பு முறை இன்னும் வெளிநாட்டு, துருவ சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை மட்டுமே நம்பியிருப்பதால், நாடாளுமன்றக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் மிக முக்கியமான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் செயற்கைக்கோள்கள் ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே நாட்டைக் கண்காணிக்கின்றன. இதனால் பெரும் பகுதி நேரத்திற்கு எந்தத் தரவுகளும் கிடைப்பதில்லை.
2. இந்திய வன ஆய்வுத் துறை, காட்டுத் தீயைக் கண்டறியும் போதெல்லாம் அதுகுறித்த செயற்கைக்கோள் அடிப்படையிலான எச்சரிக்கைகளை மாநில வனத்துறைகளுக்கும் பதிவுசெய்த கைபேசிப் பயனர்களுக்கும் அனுப்பி வருகிறது. தற்போது இந்திய வன ஆய்வுத்துறை நிறுவனம் 'AQUA' மற்றும் 'Suomi-NPP' ஆகிய வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தியே இந்த எச்சரிக்கைகளை கண்டறிந்து வருகிறது.
காட்டுத் தீ எவ்வாறு தடுக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது?
1. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) இந்தியாவில் காட்டுத்தீ, நீர் மாசுபாடு மற்றும் அபாயகரமான பொருட்களால் ஏற்படும் பேரிடர்களை நிர்வகிப்பதற்கான முதன்மை அமைச்சகமாகும். காடுகள் மாநில வனத் துறைகளால் நிர்வகிக்கப்படுவதால், காட்டுத்தீயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முக்கியப் பொறுப்பு அந்தந்த மாநிலங்களையே சாரும் என்கின்றனர்.
2. காட்டுத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டம், வனவிலங்கு வாழிட மேம்பாடு மற்றும் ஈடுசெய்யும் வனப்பகுதி நிதிய மேலாண்மை மற்றும் திட்டமிடல் முகமை ஆகியவற்றின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்குக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் இந்த அமைச்சகம் ஆதரவளிக்கிறது.
3. காட்டுத் தீயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) பல வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது. இதில் தீயை ஆரம்பத்திலேயே கண்டறிய கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்தல், நீர் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதல், தீ தடுப்புப் பணியாளர்களை நியமித்தல், உள்ளூர் மக்களின் பங்களிப்பைப் பெறுதல் மற்றும் தீத்தடுப்புப் பாதைகளை (Fire lines) அமைத்து பராமரித்தல் ஆகியவை அடங்கும்.
4. தீவிரமாக எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயைக் கண்டறிவதற்கு தொலைவு உணர்வுத் தொழில்நுட்பத்தையும் (remote sensing technology), MODIS (Moderate Resolution Imaging Spectroradiometer) செயற்கைக்கோள் தரவுகளையும் பயன்படுத்துமாறு அமைச்சகம் பரிந்துரைக்கிறது.
5. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) இணையதளத்தின்படி, இரண்டு வகையான தீத்தடுப்புப் பாதைகள் நடைமுறையில் உள்ளன. கச்சா அல்லது மூடப்பட்ட தீத்தடுப்புப் பாதைகள் மற்றும் புக்கா அல்லது திறந்த தீத்தடுப்புப் பாதைகள். மூடப்பட்ட தீத்தடுப்புப் பாதைகள் (Kachha fire lines): இந்த முறையில், மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்படும். ஆனால், தரையில் உள்ள புதர்கள் மற்றும் அடிமரச் செடிகள் அகற்றப்பட்டு, தீப்பிடிக்கக்கூடிய எரிபொருளின் அளவு குறைக்கப்படுகிறது. திறந்த தீத்தடுப்புப் பாதைகள் (Pucca fire lines): இந்த முறையில், குறிப்பிட்ட காட்டுப் பகுதிகள் அல்லது பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கும், தீ பரவாமல் தடுப்பதற்கும் அப்பகுதியில் உள்ள தாவரங்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படுகின்றன.
6. செயற்கைக்கோள் சார்ந்த தொலைவு உணர்வுத் தொழில்நுட்பம் (Remote Sensing) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு போன்ற கருவிகள், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே எச்சரிப்பது, தீ விபத்துகளை உடனுக்குடன் கண்காணிப்பது மற்றும் தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணிப்பது ஆகியவற்றின் மூலம் காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மையில் சிறப்பாகப் பயன்படுவதாக இந்திய வன ஆய்வுத் துறை நிறுவனத்தின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின் பாதிப்புகள் என்ன?
— காட்டுத்தீ எப்போதுமே சூழலியலுக்குத் தீங்கானவை அல்ல. இயற்கை முறையில் உருவாகும், குறைந்த தீவிரத்தன்மை கொண்ட காட்டுத்தீ, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காடுகளில் சேரும் உலர்ந்த காய்ந்த கழிவுகளை அகற்றுகின்றன. இவை மண்ணில் ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுவதோடு, தீக்குத் தாக்குப் பிடித்து வளரும் சில தாவர வகைகளின் மறுவளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.
— இருப்பினும், அதிக தீவிரத்தன்மை கொண்ட காட்டுத்தீயானது பெருமளவிலான கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி, உலக வெப்பமயமாதல் மற்றும் ஓசோன் படலப் பாதிப்பிற்கு காரணமான கார்பன் மோனாக்சைடு (CO), மீத்தேன் ஹைட்ரோகார்பன்கள் (CH4), நைட்ரிக் ஆக்சைடு (NO) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) போன்ற பிற பசுமை இல்ல வாயுக்களையும் அதிகளவில் வெளியிடுகிறது.
காடுகள் தங்களுக்குள் சேமித்து வைத்துள்ள கார்பனை இழப்பதால், அவை கார்பனை உறிஞ்சும் மண்டலமாக (Carbon Sink) செயல்படும் திறனை இழந்து, கார்பனை வெளியேற்றும் மூலமாக (Carbon Source) மாறுகின்றன (இந்த நிகழ்வு 'கார்பன் மாற்றம்' (Carbon Flipping) எனப்படுகிறது). இதற்குச் சிறந்த உதாரணம் அமேசான் மழைக்காடுகள் ஆகும்.
— கடுமையான காட்டுத்தீ சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைத்து தாவரங்கள், மரங்கள் மற்றும் விலங்கினங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது. தாவரங்களும் இயற்கை சார்ந்த பொருட்களும் எரிவதால் மண்ணின் தரம் குறைந்து, குறிப்பாக இமயமலை போன்ற மலைப் பகுதிகளில் மண் அரிப்பு அதிகரிக்கிறது. காடுகளுக்கு ஏற்படும் இந்தச் சேதம் வேளாண்மை, சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
— புகையில் இருந்து வெளிவரும் நுண்துகள்கள் (Particulate Matter (PM)) மற்றும் பிற மாசுபடுத்திகள் காற்றை மாசுபடுத்தி மனித சுகாதாரத்தைப் பாதிப்பதால், மக்களுக்குச் சுவாசப் பிரச்சனைகள், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
தேசிய காட்டுத்தீ செயல் திட்டம் (National Action Plan on Forest Fire (NAPFF))
1. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) கூற்றுப்படி, காடுகளின் அருகில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவித்து, அதிகாரமளிப்பதன் மூலமும், மாநில வனத்துறைகளுடன் இணைந்து பணியாற்ற வைப்பதன் மூலமும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய காட்டுத்தீ செயல் திட்டவரைவு (NAPFF) தயாரிக்கப்பட்டுள்ளது.
2. மேலும், இந்தத் திட்டம் காடுகள் தீப்பற்றுவதைக் குறைப்பதுடன், காட்டுத் தீயை எதிர்கொள்ள வனத்துறைப் பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ள திறனை மேம்படுத்துவதையும், காட்டுத் தீ விபத்துக்குப் பிறகு காடுகள் விரைவாக பாதிப்பிலிருந்து மீட்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. காட்டுத் தீ தொடர்பான தேசிய செயல்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதைக் கண்காணிக்க, ஒன்றிய அரசு ஒரு மத்திய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது.